சனி, 5 நவம்பர், 2016

சிபில் கார்த்திகேசு


சிபில் கார்த்திகேசு  மலேசியாவில் சீனர்கள் மத்தியில்  மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரபெண்ணாவார்.  இந்தோனேசியா,  சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899-ஆம் ஆண்டு  பிறந்தார்.  5 உடன் பிறப்புகளில் இவர் ஒருவரே பெண்.  சிபிலின் வாழ்க்கை வரலாறு மலேசியாவில் தொடங்கி  இங்கிலாந்தில் முடிந்ததாகும். அவர் மலேசியராகவே கருதப்படுகிறார்.

பல நூறு சீனர்களின் உயிர்களை ஜப்பானியர்களிடமிருந்து காப்பாற்றியவர். அவரை ஒரு வீர மங்கையாக மலேசிய சீன சமுதாயம் கருதுகிறது.  சிபில் கார்த்திகேசுவின் இயற்பெயர் சிபில் டெலி.  இவருடைய தந்தை ஓர் ஆங்கிலேயர். மலேசியாவில் தோட்ட நிர்வாகியாக இருந்தவர்.  சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு தாதியாக இருந்தார்.  மேலும் சீன மொழியில் சரளமாக பேசக்கூடியவராகவும் சிபில் இருந்தார்.

1919-ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவரைக் காதலித்துத் ஜனவரி 7-ஆம் தேதி 1919 ஆண்டு  திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் கோலாலம்பூர், புக்கிட் நானாஸ், செயின் ஜோன் தேவாலயத்தில் நடந்தது.  பிறகு இருவரும் இணைந்து ஈப்போவில்  ஒரு சிறிய மருத்துவ விடுதியை  தொடங்கி நடத்தி வந்தனர். 

இவர்களுக்கு முதல் ஆண் குழந்தை 26 ஆகஸ்ட் 1919 பிறந்த  மிகக் கடுமையான  ஆரோக்கிய பிரச்னையால் 19 மணி நேரத்தில்  இறந்துவிட்டது. அந்தக் குழந்தைக்கு மைக்கல் என பெயர் வைத்தனர்.  12 நவம்பர் 1892 –இல் தைப்பிங்கில்  பிறந்த சிபில் கார்த்திகேசுவின் சகோதரருடைய பெயரும் மைக்கல்தான். அவர் பிரிட்டிஸ் ராணுவத்தில் இருந்த சமயத்தில் 1915-ஆம் ஆண்டு கபிப்பொலியில் கொல்லப்பட்டார். 

1941- ஆம் ஆண்டில்  மலாயாவில் ஜப்பான்  ஆட்சி நடந்துகொண்டிருந்தது.  லட்சக் கணக்கான மக்கள் ஜப்பானியர்களின் சித்திரவதைக்கு  ஆளானார்கள்.  இதனால், ஜப்பானிய ஆதிக்க  எதிர்ப்புப் போராளிகள்  மறைந்திருந்து  ஜப்பானியர்களை  தாக்கினர்.

அத்தாக்குதலில்  போராளிகளும் காயமடைந்தனர். அவர்களுக்கு ரகசியமான முறையில்  டாக்டர் கார்த்திகேசுவும், சிபில் கார்த்திகேசுவும் மருத்துவம் பார்த்தனர். ஜப்பானியர்களுக்கு இவ்விவகாரம் தெரிய வந்தால், இருவரையும் கைது செய்து சித்ரவதை செய்யத் தொடங்கினர்.  மேலும் விசாரணை என்ற பெரில் சிபில் கார்த்திகேசுவை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு  துளைத்து எடுத்தனர்.  “போராளிகள் பெயரைச் சொன்னால்  போதும்” என்றும்  விட்டு விடுகிறோம் என்றும்  மன்னித்து விடுகிறோம் என்றும் ஜப்பானியர்கள் ஆசை காட்டினர். 

ஆனால், அஞ்சா நெஞ்சம் கொண்ட  அப்பெண்ணின் முன் எதுவும் எடுபடவில்லை.  உண்மையைச் சொன்னால் அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எத்தனை எத்தனை என்று  அந்த சரித்திர நாயகி உணராமல் இல்லை.  தனக்கு தெரிந்த உண்மையைச் சொல்லாமல் எல்லா வகை சித்ரவதைகளையும்  தாங்கிக் கொண்டார்.  அவர் இருந்த ஈப்போ பத்துகாஜா சிறையில் நடந்த சித்ரவதைகளை குறித்து சிபில் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பானியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.  1945-ஆம் ஆண்டு ஜப்பானியர்கள்  மலாயாவில் இருந்து வெளியேறினர். ஆங்கிலேயர்கள் மலாயாவில் ஆட்சி அமைத்தனர்.  கேப்டன்  டேவிட் மெக்பர்லேன் என்பவர்  சிபில் கார்த்திகேசுவை  தேடும் முயற்சியில் இறங்கினார்.  பத்துகாஜா சிறையில் கண்டுபிடிக்கப்பட்ட  சிபில் கார்த்திகேசுவின்  நிலை  மிகவும் மோசமாக இருந்தது.  அவரை உடனடியாக  இங்கிலாந்திற்கு  விமானம் வழியாக கொண்டு சென்று வாழ்நாள் மருத்துவம் வழங்கப்பட்டது.

அந்தச் சமயத்தில்தான்  சிபில் கார்த்திகேசு  ‘No Dram Of Mercy’ எனும் தனது சுயசரிதை புத்தகத்தை  உதவியாளர் ஒருவரின் துணைகொண்டு எழுதினார். அந்த சமயத்தில்தான் இந்த வீர பெண்மணியை ஆறாம் ஜார்ஜ் மன்னன் சந்திக்க ஆசைப்பட்டார்.  சிபில் கார்த்திகேசுவின் புத்தகம் 1954-ஆம் ஆண்டு  வெளியிடப்பட்டது.  அதன் மறுபதிப்பு 1983-ஆம் ஆண்டு  Oxford University  கொண்டு வந்தது.

சிபில் கார்த்திகேசுவின் வீரத்தையும் தியாகத்தையும் மதிப்பளிக்கும் வகையில்  பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்தின் ஆக உயரிய விருதான ‘கிங் ஜார்ஜ்’ என்ற வீர விருது ஜார்ஜ் மன்னரால்  சிபிலுக்கு வழங்கப்பட்டது.  மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் இந்த  விருதைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் உயர்ரக  மருத்துவம் சிபிலுக்கு வழங்கப்பட்டாலும், ஜப்பானியர்களின் சித்ரவதையால் ஏற்பட்ட உள்காயத்தை  சரி செய்ய முடியவில்லை.  இதன் காரணமாக 1948-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தனது 49-வது வயதில் அவர் காலமானார்.

அவருடைய நல்லுடல் ஸ்காட்லாந்தில்  புதைக்கப்பட்டது. பின்னர் அவரின் பூதவுடல் சமாதியிலிருந்து 20.3.1949-ல் தோண்டி எடுக்கப்பட்டு, கப்பல் வழியாக பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு ஈப்போவில் அடக்கம் செய்யப்பட்டது. வரலாற்றில் அழுத்தமான கால் பதித்த இந்தத் தாரகையை குறித்த தொலைக்காட்சித் தொடர்நாடகத்தை 1997-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொலைக்காட்சி  நிறுவனம் தயாரித்தது.  தொடர்ந்து மலேசியாவில் ஆஸ்ட்ரோ நிறுவனம் ‘Apa Dosaku?’  எனும்  தலைப்பில்10 வாரங்களுக்கு அவர் தொடர்பான தொடர் நாடகத்தை தயாரித்து ஒளிபரப்புச் செய்தது. ஈப்போவில் அவர் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியமாக உள்ளது.

சிபிலின் மீது நான் கொண்டிருக்கும் ஈடுபாட்டை தெரிந்துகொண்ட தோழர் நாகேந்திரன், சிபில் கார்த்திகேசு துயில் கொள்ளும் கல்லரைக்கு அழைத்து செல்வதாக கூறினார். ஈப்போவில் , சீனர்கள் தேவாலயத்தில் அவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. காய்ந்த ஒரு மலர் வளையம் அவரின் கல்லரை மீது இருந்தது. அது மிக அண்மையில் நினைவுகூறப்பட்ட அவரின் நினைவுநாளுக்காக வைத்திருக்கலாம்.

சிபிலை பார்த்து வந்துவிட்டேன். மனதினில் ஏதோ ஒரு நிம்மதி இருக்கிறது. நான் முதன்முதலாக சிபிலை அடையாளம் கண்டபோது தமிழில் ஒரு செய்திகூட எங்கும் பெற முடியவில்லை. சீனர்கள் ஆங்கிலத்தில் நிறைய பதிவு செய்து வைத்திருந்தார்கள். அதில் சில குறிப்புகளை எடுத்து மொழிபெயர்த்து பத்திரிகையில் வெளியிட்டேன். தற்போது மீண்டும் ஒரு கட்டுரை இணையத்தில் இடம்பெற போகிறது. இனி சிபிலை தேடுபவர்களுக்கு அவர் எளிதாக அடையாளம் காணப்படுவார்.  

நன்றி: மலேசிய சோசலிஸ்ட் நவம்பர் மாத இதழ்


4 கருத்துகள்:

  1. நெஞ்சுரமிக்க பெண்மணி ஜப்பானியரின் கொடுரங்களிடையில் உண்மையை வெளியிடாத பெருந் தியாகமும் திட உள்ளமும் அவரைப் பற்றி மேலும் படிக்கத் தூண்டுகிறது

    பதிலளிநீக்கு
  2. சிபிலை பார்த்து வந்துவிட்டேன். மனதினில் ஏதோ ஒரு நிம்மதி இருக்கிறது. நான் முதன்முதலாக சிபிலை அடையாளம் கண்டபோது தமிழில் ஒரு செய்திகூட எங்கும் பெற முடியவில்லை. சீனர்கள் ஆங்கிலத்தில் நிறைய பதிவு செய்து வைத்திருந்தார்கள். அதில் சில குறிப்புகளை எடுத்து மொழிபெயர்த்து பத்திரிகையில் வெளியிட்டேன். தற்போது மீண்டும் ஒரு கட்டுரை இணையத்தில் இடம்பெற போகிறது. இனி சிபிலை தேடுபவர்களுக்கு அவர் எளிதாக அடையாளம் காணப்படுவார்.

    பதிலளிநீக்கு