திங்கள், 23 பிப்ரவரி, 2015

மலாக்கா செட்டி எனும் சமூகம் (தேடல் 3)


சென்ற தேடலில்...

மலாக்கா செட்டிகள் கனிவாகப் பேசுவது மட்டுமல்ல, அன்பாகப் பழகக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். காலத்திற்குத் தகுந்த மாதிரி முழுவதுமாக தங்களை நவீனத்திற்கு ஒப்புக்கொடுக்காமல் பாரம்பரியத்தையும் வழிவழிவந்த மலாக்கா செட்டி மரபையும் காப்பாற்றுகிறார்கள். குறிப்பாக அவர்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் பெயர்களை நவீனப்படுத்தி
கொள்ளவே இல்லை. வள்ளி, கந்தன், முத்து, மாரி போன்ற பெயர்களைத்தான் இப்போதும் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.

இனி யோகியின் தேடல்...

அவர்களின் வீடுகளுக்குச் சென்று வந்ததில், முன்னோர்களுக்கு அவர்கள் அதிகம் மதிப்பளிப்பது கண்கூடாகத் தெரிகிறது. எல்லாருடைய வீடுகளிலும் இறந்தவர்களுக்காக ஒரு பூஜைமேடை இருக்கிறது. அதில் அவர்களுடைய முன்னோர்களின் கருப்பு-வெள்ளைப் படங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் என்று தங்கள் பிள்ளைகளுக்குக் கோயில்களில் வகுப்பு நடத்துகிறார்கள். தங்களின் முன்னோர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு விட்டுச் சென்ற இந்து மதப்பண்பாட்டை விடாமல் காப்பதில், அவர்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளத் தயாராய் இல்லை. ஆனால், உணவு விஷயத்தில் மட்டும் மலாய் உணவு வகைகளைத்தான் அதிகமாகக் கடைப்பிடிக்கிறார்கள். இங்கே இந்தியர்களை அவமானப்படுத்த வேண்டும் என்றால், அவர்களை நோக்கி எறியப்படும் ஒரே வார்த்தை ‘கெலிங்'. 
கெலிங் என்றால் நம்மவருக்கு எங்கு இருந்தாலும், பொத்துக்கொண்டு அந்த இடத்திற்கு வந்து நிற்கும் கோபம். உண்மையில் இப்படி உணர்ச்சி வசப்பட்டுத்தான் ‘கெலிங்' என்ற வார்த்தை கொச்சை வார்த்தை அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. எப்படி ‘பெளாச்சான்; என்றால் மற்றவருக்குக் காரணமே இல்லாமல் பிடிக்காதோ அப்படித்தான் இதுவும். இதுகுறித்து மேற்கொண்டு பேசினால், தேடல் வேறொரு தளத்தை நோக்கிப் போகும் எனும்படியால் தொடங்கிய இடத்திற்கே வந்துவிடுகிறேன். 
செட்டிக் கிராமத்தின் அசல் பெயர் ‘கம்போங் கிலீங்' என்று அங்கு மேற்கொண்ட உரையாடலில் தெரியவந்தது. ஆனால், ‘கெலீங்' என்ற வார்த்தை சர்ச்சைக்குரியதாக இருப்பதால், தற்போது அவர்களின் புழக்கத்திலிருந்து அந்தப் பெயர் மறைக்கப்பட்டுவருவதாகவும், வயதானவர்கள் நினைவில் மட்டுமே அந்த பெயர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம்  அடைந்த பிறகு மலாக்கா செட்டிகள் மலேசிய இந்தியக் கட்சிகளோடு இணையாமல் அல்லது கட்சிகள் அவர்களைக் கவனிக்கப்படாமல் இருந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்துவிட்ட அந்தக் கம்பத்தில், திருவிழாவையும், பொங்கலையும், தீபாவளியையும் கொண்டாடிக்கொண்டு அவர்கள் தனித்து இருக்கிறார்கள். வரலாற்றுப் பின்னணியைக் கொண்டிருக்கும் மலாக்கா செட்டிகள் கம்பத்தை, அரசாங்கம் சுற்றுலாத்தளமாக்கியிருக்கிறது. 

நான் போன நேரத்தில் இரு வெள்ளையர்கள் சைக்கிளில் மலாக்கா செட்டி கம்பத்தினுள் வலம் வந்தார்கள். பூட்டிய வீடுகள், வெறிச்சோடி இருக்கும் தெருவைத்தான் என்று அந்தச் சுற்றுலாப்பயணிகளும் குழப்பத்துடன் பார்த்துச் சென்றனர். சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அல்லது கலை அம்சங்களும் கம்போங் செட்டியில் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம்தான். அப்படியில்லை என்றால் அதைச் சுற்றுலாத்தளமாக அறிவித்ததற்கு என்னதான் காரணம்? மலாக்கா செட்டி எனும் மனிதர்கள் காட்சிப் பொருள் என்ற எண்ணம்மா? காட்சிப் பொருளாக அவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் அவர்களுக்கென்ன லாபம்? இங்கு எனக்கு எழும் கேள்வி என்னவென்றால், ஏமாறுவது, ஏமாந்துகொண்டிருப்பது , யார்? யார்? என்பதே?
ஏமாற்றுவது யார் என்று சிறுபிள்ளை கேள்வி எல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது.
நான் கம்போங் செட்டியின் தலைவர் சுப்ரமணியத்திடம் கேட்டேன்...

* அரசு  இந்த இடத்தை சுற்றுலாத்தளமாக அறிவித்திருக்கிறது என்றால் உங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படுகிறதா?
- இல்லை

* மனிதர்களையும் இந்தக் கம்பத்தையும் தவிர, சுற்றுலாப்பயணிகள் பார்ப்பதற்கு இங்கு வேறு ஏதும் சிறப்பு அம்சம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதா?
- இன்னும் இல்லை

இவர்கள் வாழும் பகுதியின் நுழைவாயில், இந்து மதக் கலாச்சார முறைப்படி நம்மை வரவேற்கிறது. இவர்களைப் பற்றிய ஒரு குறிப்பையும் அங்கே அறிமுகக் கல்லாக வைத்துள்ளார்கள். இவர்களின் அடையாளங்களைத் தெரிந்துகொள்ள சிறிய மியூசியமும் உள்ளது. இதுவே அவர்களுக்கு சிறப்பம்சமாகவும் சுற்றுப்பயணிகளுக்குக் காட்சி விஷயமாகவும் உள்ளன. செட்டிப் பெண்கள், வீடுகளில் சாதாரணமாக ‘Baju Kebaya'-வைத்தான் பெண்கள் அணிகிறார்கள். இளம் பெண்களும் அப்படித்தான். மலாக்கா செட்டிகளின் அடையாளமாக அங்கு 11 கோயில்கள் இருக்கின்றன.
அந்தக் கோயில்களில் குறிப்பிட வேண்டியதாக, சிலைகள் நிறுவப்படாத காலகட்டத்தில் கற்களை நிறுத்தி வணங்கிவந்த பழங்காலக் கோயிலை மலாக்கா செட்டிகள் இன்றும் வணங்கி வருகின்றனர். அங்காள பரமேஸ்வரி என்ற அந்த சுண்ணாம்புக் கோயில் பார்ப்பதற்கு கல்லறை போன்று தோற்றம் கொடுக்கிறது. சிலைகள் ‘கோன்' வடிவத்தில் உள்ளன.

மலாக்கா செட்டிகளிடத்தில் என்னைக் கவர்ந்த மற்றொரு விஷயம் அவர்களிடத்தில் கலாச்சார சீரழிவுகள் இல்லை. அதாவது நவீன காலத்தில் பிறப்பு-இறப்பு, பரிசம்-திருமணம், நன்னீறாட்டு விழா என எல்லாம் பணத்திற்கு தகுந்த மாதிரி ஆடம்பரமாகிவிட்டன. சினிமா மோகத்தில் கலாச்சாரமும் பண்பாடும் ‘மார்டர்ன்' என்ற பெயரில் அழகாய்ச் சிரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், மலாக்கா செட்டிகள் பழைய அந்தப் பாரம்பரியத்தை இன்னும் அதன் நிறம் மாறாமல் பின்பற்றுகின்றனர்.

மொழி தொலைத்த அவர்கள், அதை மீட்டெடுக்க மெனக்கெடும் அதே நேரம் மற்ற எந்த விஷயத்திலும் தன்னை சமரசம் செய்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை. மலாக்கா செட்டி எனும் உலகம், அழகாக வடிவமைக்கப்பட்டு தன் இயல்பு வாழ்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்மீது கல்லெறிபவர்களை கம்பமே ஒன்றிணைந்து கேள்வி கேட்கிறது. அதற்கு உதாரணம்தான் மலாக்கா செட்டி கிராமம் அருகே 22 மாடிக் கட்டிடம் கட்டவிருந்த விவகாரமாகும்.

நான் கம்போங் செட்டி கம்பத்தை விட்டு வெளியேறுகையில், இரவு தொடங்கி இருந்தது. ஆனால், மலாக்கா செட்டியைப் பற்றிய ஒரு தெளிவு என்னில் ஏற்பட்டிருந்தது. நமது உறவுகள் வேறொரு அடையாளத்துடன் இருந்தால் என்ன? நான் புறப்படும் வேளையில், கையசைத்து, பத்திரமாய் போய்வாருங்கள் என்று வழியனுப்பினர். அதில் எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை.

- தேடல் முடிந்தது...










1 கருத்து: