ஞாயிறு, 25 நவம்பர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 10


அன்றைய இரவில் நாங்கள் அனைவரும் பேருந்து எடுத்து கொழும்பு கிளம்பினோம். மறுநாள் அதிகாலையில் நாங்கள் கொழும்பை சென்றடைந்தோம். ரஞ்சி மாவின் உறவினர் வீட்டில்தான் நாங்கள் தங்கினோம். அந்த வீட்டு அம்மா அவ்வளவு அன்பானவர். எங்களுக்கு வேண்டிய அனைத்தையுமே நொடியில் தயார் செய்தார். நேரம் காலம் பார்க்காமல் அறிமுகமில்லாத எங்களை யாரோ என நினைக்காமல் எல்லாத்தையுமே பார்த்து பார்த்து செய்தார்.







மகா லட்சுமி எனச் சினிமாவில் சொல்வார்களே , அவரை நேரில் பார்க்க விரும்பினால் நிச்சயமாக அந்த அம்மாதான் மகா லட்சுமி. நாங்கள் எங்களின் வீடுபோல அங்கே இருந்தோம். நண்பர்களை வரச்சொல்லிச் சந்தித்தோம். அவர் அனைவரையுமே அன்பாகக் கவனித்தார்.


அன்றைய நாளில் நாங்கள் கொழும்பு நகரை சுற்றிப் பார்த்தோம். கொழும்பு எனும் சிங்கள நகரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சீனா நகரமாக மாறிக் கொண்டிருப்பதை நேற்று வந்த எங்களாலேயே உணர முடிந்தது. மழைமேகம் மழையைத் தாங்கிக்கொண்டு எங்களிடம் கண்ணாமூச்சி விளையாடத் தொடங்கியிருந்தது. சில பொருள்களையும், ஒரு உணவகத்தில் மத்திய உணவையும் முடித்துக்கொண்டு கடற்கரை பக்கம் வந்து சேர்ந்தோம். தூரத்தில் மழை பெய்துகொண்டிருப்பதை மேகம் எங்களுக்குக் காட்டி கொடுத்தது. 






அது ஒரு வித்தியாசமான காட்சியாகவும் அழகாகவும்  இருந்தது. சற்று நேரத்தில் கடுமையான மழை பிடிக்க, அனைத்து தோழிகளுமே ஒரு துப்புட்டாவை குடையாக விரித்து அதன் கீழ் நின்று கொண்டோம். அது ஒரு அழகான தருணம். அந்த தருணத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கொழும்பு நகரம் மழை நீரில் நிறைந்து சில இடங்களில் குப்பை கூழங்களும் சாக்கடைகளுமாக ஸ்தம்பித்து நின்றன. வாகனங்கள் கடுமையான சாலை நெரிசலில் சிக்கிக் கொண்டிருந்தன.

மாலையில், கல்பான  மற்றும் மாலதி ஆகியோர் சென்னைக்கு புறப்பட விமானநிலையம் கிளம்பிச்சென்றனர். எங்களின் தோழியர்களை இணையும்போது ஏற்படும் மகிழ்ச்சியைவிட, அவர்களைப் பிரியும்போது ஏற்படும் கவலையும் தவிப்பும் இனம்புரியாத உணர்வாகும். அவர்கள் விடைபெற்றுச் சென்ற வெற்றிடம் நிரப்ப வழியில்லாமல் வெறித்துக் கிடந்தது.


அன்றைய நாள் எங்களுக்குக் கொழும்பு நகரில், சந்திப்பு ஒன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1.9.18 hamden lane 121 இல் நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் காத்திரமான உரையாடலாகவும் தமிழ் சிங்கள ஆர்வலர்கள் ஆர்வத்துடனும் உரையாடியது நிறைவாக இருந்தது. குறுகிய நேரத்தில் சந்திப்பை ஒழுங்படுத்திய தோழர் மயூரன் , தோழர்  நிலா ஆகியோருக்கு நன்றி.  

ஒன்றுகூடலின்போது கொழும்பைச் சேர்ந்த  இலக்கியவாதிகள் செயற்பாட்டாளர்கள் என எங்களைச் சந்திக்க வந்திருந்தனர். களப்பணியில் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிங்கள வழங்கறிஞர் தோழி ஒருவர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதுடன் நிறையே கேள்விகளை கேட்டு விவரங்கள் தெரிந்துகொண்டார். அது மட்டுமல்லாமல் நாங்கள் கேட்டா பல கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். பதிவு செய்யப்பட வேண்டிய சந்திப்பு அது.  அவர்களுடனான சந்திப்பு முடிய இரவாகியிருந்தது. ஒரு நிறைவான பெண்கள் சந்திப்பில் கலந்து முடித்திருந்த திருப்தி எனக்கு இருந்தது. அந்த நம்பிக்கையோடு இலங்கைக்கு விடைகொடுத்துக் கிளம்பினேன்.

முற்றும்

சனி, 24 நவம்பர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 9


 மறுநாள் விடியலில்  தோழி  சுரேகா பணிபுரியும் அரசுநிறுவனத்தின் மேயருடனான சந்திப்பும், மகளிர் மேம்பாட்டுக்குப் பொறுப்பானவருடனான சந்திப்பும் இடம் பெற்றது. தகுந்த மரியாதையோடு எங்களிடம் அவர்கள் கலந்தாலோசித்தனர். குறிப்பாக மேயர் மிக எதார்த்தமாக, எங்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார். அப்போதுதான் எங்களுக்குத் தெரிந்தது, அரசியல் வட்டாரங்களில் அவரின் கட்சி பெரிய விமர்சனத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்று. இலங்கை தோழியருக்கு இவ்விவகாரம் தெரிந்திருந்தபடியால் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்யும்போது கவனமாக இருங்கள் என எச்சரித்தனர். சட்ட சபையில் அமர்ந்து மகளிர் மேம்பாட்டுக்குப் பொறுப்பானவருடனான அதிகாரி ஒருவரோடு யாழ்ப்பாண  பெண்கள் குறித்த நிலைப்பாட்டை கேட்டறிந்தோம். அந்தச் சந்திப்பின் முக்கியமான அங்கம் அது.


நான் பார்த்த வரையில் யாழ்ப்பாண வட்டார அரசு நிறுவனங்கள், தற்போதிருக்கும்  கணினி யுகத்திற்கு இன்னும் மாற வில்லையோ என்றுதான் தோன்றியது. சில நவீன வசதிகள், தரமான  கதிரைகள் இருந்தாலும்,அதன் மொத்த தோற்றம்  அரசு அலுவலகங்கள் மேம்படுத்தப்படாதவையாகத் தெரிந்தன. நான் சொல்வது அரசு அலுவலக கட்டடம் மற்றும் அதன் வசதிகள் குறித்துத்தான். அரசு சேவையை அல்ல. அது குறித்து நான் சரியாக அறியவும் இல்லை. இந்நிலைக்குப் போரை ஒரு காரணமாக சொன்னாலும், அதை முழுசாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. சீனா தேசமாக மாறிக்கொண்டிருக்கும் கொழும்பை பார்க்கும்போது ஆதங்கமாக இருக்கிறது. அந்த நிலத்தை வேறொரு நாடக மாற்றிக்கொண்டிருக்கும்  நவீனத்துவம் கொஞ்சமாவது தமிழ் அரசு அதிகாரிகள் பணியாற்றும் கட்டிடங்கள் மற்றும் நவீன வசதிகளைப் பயன்படுத்த செய்துகொடுக்கலாம். இது எனது பார்வை மட்டுமே.

பின்னர் பருத்தித்துறையில் ரவி பாவின் சகோதரி  வீட்டில் மத்திய உணவு  விருந்து கொடுத்தனர். அங்கும் நான் இரண்டாவது முறையாகச் செல்வதால் அவர்களுக்கு என்னைத் தெரிந்திருந்தது. விருந்திற்குப் பின் அவர்களிடமிருந்து விடைபெற்று வல்வெட்டித்துறையை  நோக்கிப் பயணித்தோம். தேசியத்தலைவரின் இல்லத்தைப் பார்க்க வேண்டும் என்ற எங்களின் ஏக்கம், கனத்த வலியாக மாறியிருந்தது. எங்கள் வாகனம் வல்வெட்டித்துறை மண் நோக்கிச்சென்றுகொண்டிருக்க, பேசுவதற்கான  சொற்களில்லாத எங்கள் வாகனம் வல்வெட்டித்துறை மண் நோக்கிச்சென்று கொண்டிருக்க, பேசுவதற்கான  சொற்களில்லாதவர்களாக மௌனித்துக் கிடந்தோம். சாலை ஓரத்தில்  பச்சை ஓலைக் கட்டிய ஆலமரத்தை ஒட்டி வண்டி நுழைந்தது. ஓலையின் பக்கத்திலேயே எம் ஜி ஆர் போஸ்ட்டர் தொங்கிக் கொண்டிருந்தது. சிலர் ஆலமர திண்ணையில் அமர்ந்திருந்தனர். மதில் மட்டுமே இருந்த நிலத்தைக்  கடந்த சற்று ஒதுக்குப்புறமாக வாகனம் நிறுத்தப்பட்டது.


ரவி பா சகோதரிகளோடும் அவர்கள் குடும்பத்தோடும்
 இதுதான் தலைவரின் வீடு என வெற்று மதிலைக் காட்டி  கூறினார்கள். . அதை உறுதி செய்வதாக மதில் மேல் 'தமிழ் ஈழ தேசியத்  தலைவர் வேலுபிரபாகரன் இல்லம்' என எழுதப்பட்டிருந்தது. மதிலைத் தாண்டி அங்கு ஒரு வீடு இருந்ததிற்கான அடையாளமே இருக்கவில்லை. வெற்று நிலத்தில் புற்கள்  மண்டி கிடந்தன. ஈழப் போர் முடிவுக்கு வந்தபோது தலைவரின் வீடு உடைக்கப்பட்டதாகவும், பின் சிங்கள மக்கள் உட்பட நிறையப் பேர், நம் நாட்டில் வாழ்ந்த தன்னிகரற்ற ஒரு வீரன் வாழ்ந்த வீடு என  அந்த வீட்டின் மண்ணை எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர் என்றும் சொல்லப்பட்டது. இதை அனுமானித்த இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயம் மக்கள்  உணர்ச்சிவசப்பட வைக்கும் எனப் பயந்து தலைவரின் வீட்டையே இல்லாமல் செய்து விட்டதாக சொன்னார்கள்.


 தலைவரின் பெயர் எழுதியிருந்த மதில் மீது சாயம்போல ஏதோ ஊற்றப்பட்டிருந்தது. பாதி எழுத்து காணாமல் போயிருந்தன. காணாமலும் மீதி எழுத்து மங்கிய நிலையிலும் இன்னும் சில நாட்களில் அடையாளமற்று நினைவில் மட்டுமே வாழக்கூடிய வகையில் தலைவரின் இல்லம் மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. முறையாகப் பராமரிக்கப்பட்டு, அதைத் தலைவரின் நினைவு இல்லமாக மாற்றியிருக்கக் கூடாதா? என மனம் கவலையடைந்தது. இனி அதற்கான சாத்தியங்கள் வாய்க்கும் என்பதும் சந்தேகம்தான். 



எனது நண்பர் சிவா லெனின் தலைவர் வேலுபிரபாகரன் மீது மிகுந்த பற்று கொண்டவர். அவருக்காக ஒரு பிடி மண்ணை எடுத்து வைத்துக்கொண்டேன். எனக்குத் தெரிந்த வரையில்  அந்த மண்ணின் மதிப்பும்  அருமையும் பெருமையையும் உணர்ந்து பாதுகாக்கக்கூடியவர் என் நட்பு வடத்தில் சிவா மட்டும்தான். இதற்கிடையில் ஒரு போலீஸ் வாகனம் எங்களை நோட்டமிட்டபடியே கடந்து சென்றது. ஆலமர திண்ணையில் அமர்ந்திருப்பவர்களிடம் பேசலாம் எனப் போனோம். ஏன் இங்குப் பச்சை ஓலை கட்டப்பட்டிருக்கிறது என கேட்டேன். முதல் வீட்டில் மரணம் நடந்திருக்கிறது. அதை அறிவிக்கும் முகமாக இந்தப் பச்சை ஓலை இப்படி கட்டப்பட்டிருக்கிறது என்றார்கள். தலைவரைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டேன். பார்த்திருக்கிறோம் என்றார்கள். அடுத்த கேள்வியை கேட்பதற்குள் இரண்டாவது முறையாக போலீஸ் வாகனம் எங்களை நோட்டமிட்டு சென்றது. ரஞ்சி மா அனைவரையும் வண்டியில் ஏறச் சொன்னார். எனக்கும் இனம்புரியாத ஒரு படபடப்பு ஏற்பட்டது. ஆலமர வளைவை அடுத்திருந்த தெருவில் புரட்சி தலைவர் எம்.ஐி.ஆர் சிலையையும் 4 அடி தள்ளி அமைத்திருக்கும் மாவீரர்  திலீபன் நினைவூட்டக் கூடாரத்தையும் ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் எங்களுக்கு எந்தப் பிரச்சனையையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாகவே ரஞ்சி மா இருந்தார்.

தலைவரின் இல்லம் இருக்கும் தற்போதைய தோற்றத்தை வீடியோ எடுத்திருந்தேன். அதை இந்த https://www.youtube.com/watch?v=OopoVP2dEvE லிங்க்கை சொடுக்கி பார்க்கலாம்.

 
இது இன்னுமொரு வீடியோ பதிவு.
தொடரும்..




பத்தாம் பாகம்  வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/11/10.html

        





செவ்வாய், 20 நவம்பர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 8




நல்லூர் கோட்டையை சேர்ந்தபோது உச்சி வெயில் மண்டையைப் பிளந்துகொண்டிருந்தது. நான் கோட்டையையும் முன்பே பார்த்துவிட்டபடியாலும் உடல்நிலை கொஞ்சம் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் இருந்ததாலும் நான் கோட்டையினுள் செல்லவில்லை. கொஞ்சம் ஆதரவாக வெளியிலேயே உலாத்திக்கொண்டிருந்தேன். கடற்கரையை ஒட்டி நின்ற தென்னை மரத்தில் சில காக்கைகள் கரைந்துகொண்டிருந்தன. கோட்டைக்கு முதன்முதலாகச் சென்றிருந்த தோழிகள் சற்று நேரத்தில் திரும்பி வந்தனர்.

நாங்கள் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்றோம். கோயில் நடை சாத்தியிருந்தது. ஆனாலும் , கோயிலுக்கு சாமிக்கூம்பிட பக்தர்கள் வந்துகொண்டுதான் இருந்தனர். சிலர் சிதறு தேங்காய்களை உடைக்க ரஞ்சி மா, அதை பொறுக்கி சாப்பிட எங்களுக்குத் தந்தார். எப்போதோ சிதறு தேங்காய்களை சாப்பிட்ட ஞாபகம் எனக்கு. கோயிலின் வெளி வளாகத்தில் பெரியவர் ஒருவர் மரம் வைக்கக் குழி தோண்டிக்கொண்டிருந்தார். நாங்கள் கிளம்பும்போது அவர் மரத்தை நட்டு முடித்திருந்தார். 

எங்களுக்கு மாலையில் யாழ்ப்பாண தோழர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக நாங்கள் கோயிலுக்கு  அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றோம். "அங்கு ஐஸ்கிரீம் குடிக்க போகலாம்" என யாழினி தான் ஏற்பாடு செய்தாள். ஐஸ்கிரீம் குடிக்க போகலாம் என்ற வார்த்தையை முதன்முதலாக கேட்டதிலிருந்து எனக்கு வார்த்தைகளின் உபயோகங்களில் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. சாதாரணமாக ஐஸ்கிரீம் சாப்பிட போகலாம் என்ற வார்த்தையை, இலங்கைத் தமிழர்கள் ஐஸ்கிரீம் குடிக்க  போகலாம் என்று பயன்படுத்திக்கின்றனர். குளிப்பதை மேலே கழுவுதல் என்று சொல்வதைப் போலவும் கொசுக்கு நுளம்பு எனப் பெயர் இருப்பதுபோலவும்.   இப்படி நிறைய வார்த்தைகளைப் பட்டியலிடலாம். அது அழகாகவும் இருக்கிறது.


ஐஸ்கிரீம் கடைக்கு வெளியே மாவீரர் திலீபன் நினைவாலயம் இருந்தது. என்னைத்தவிர எல்லாருமே ஐஸ்க்ரீம் சாப்பிடப் போயிருந்தனர்.
ஐஸ்கிரீம் கடைக்கு போவதற்கு முன்பு நான் நினைவாலயம் முன்பு நின்றுகொண்டிருந்தேன். ஒரு கல்லூரி மாணவனின் தியாகம், விடுதலைக் கனவு இன்னும் இன்னும் எத்தனையோ இருந்தது தியாகி திலீபனுக்குள். இதை இன்று இலங்கை மக்களைத் தவிர அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எத்தனைப் பேர் அறிவார்கள்? கொழும்பிலிருந்து வந்து
மலேசியாவில்  வேலைசெய்துகொண்டிருக்கும் சகோதரரிடம் இன்று திலீபனின் நினைவுநாள் என்று சொன்னேன். அவருக்கு திலீபன் யார் என்றே தெரியவில்லை. இத்தனை நாள் அவரைத் தெரிந்துகொள்ளாமல் இருந்துவிடடோமே என அவர் வருத்தப்பட்டுக் கொண்டது வேறு கதை. நிஜ ஹீரோக்களை தவிர்த்து சினிமா பிரபலங்களைப் போராளிகளாக கொண்டாடுபவர்கள்தானே நாம். வேறென்ன சொல்ல முடியும்?  பின் தோழிகள் அனைவருமே ஐஸ்க்ரீம் கடையை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு மாவீரர்  திலீபனுக்கு வணக்கம் செலுத்தினர்.சிலர் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டனர்.




 தோழர்கள்  எமில் மற்றும் கிரிசாந் யதார்த்தன் ஆகியோர் முன்னெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடறு பெண்களுடனான  கலந்துரையாடலுக்கு அடுத்துச் சென்றோம். கலைத்தூது அழகியல் கல்லுரியில் நீ.மரியா சேவியர் அடிகள் என்ற பாதிரியார் ஆதரவுடன் நடந்தது.  சந்திப்பு  நல்ல காரசாரமாகவே சென்றது. கவிதைகள், செயற்பாடுகள், அரசியல், களப்பணி எனப் பெண்கள் இயங்கும் எல்லா நிலைகளிலிருந்து விவாதம் செய்யப்பட்டது. பாதிரியார் நீ.மரியா சேவியர் அடிகள் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். இலக்கிய செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டவர். 'கலைமுகம்' என்ற கலை இலக்கிய சமூக இதழை நடத்தி வருகிறார். இலங்கையின் முக்கிய ஆளுமைகள் அந்த இதழில் எழுதிவருகிறார்கள்.  தோழர்களும் ஊடறு தோழியரும் விவாதத்தில் ஈடுபட்டிருக்க அனைத்தையும் அமைதியாக உள்வாங்கியபடியே இருந்தார்.


 
சந்திப்பு முடிய இரவாகியிருந்தது. நாங்கள் பொது பேருந்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தோம். இரண்டு பேருந்துகளை மாறிச் சென்றால்தான் யாழினி வீட்டை அடைய முடியும். முதலாவது பேருந்து எடுத்து பெரிய பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்துதான் சண்டிலிப்பாய்க்கு  பேருந்தை மாற வேண்டும். விடிய மறுநாள் நாங்கள் திரும்ப கொழும்பு போகவேண்டியிருந்ததால் யாழ்ப்பாண சந்தையில் சில பொருள்களை இரவே வாங்கிக்கொள்ளலாம் என முடிவு எடுத்தோம். சாம்பால், மாசி, பெரிய பெரிய கருவாடுகள், வடகம் என யாழ்ப்பாண பிரசித்தி பெற்ற பொருள்களை தேடி வாங்கத் தொடங்கினோம். தாழம்பூ பாயை மாலதி மைத்திரி வாங்கினார். யாழ்ப்பாண சந்தையின் SPECIAL கருவாடுகள்தானா என்று தோன்றியது. ராட்சச வகையிலான கருவாடுகளை, புடவைகளைத் தொங்க விடுவது போன்றும் புடவைகளைப் பேழைகளில் அடுக்கி வைத்திருப்பது போன்றும் அடுக்கி வைத்திருந்தார்கள். கருவாட்டின் நெடிய வாசனை நாங்கள் வீடு வந்து சேர்ந்தபின்பும் எங்களில்  நிறைந்திருந்தது. 



 
தொடரும்.. ஒன்பதாம் பாகம்  வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/11/9.html
 

ஞாயிறு, 18 நவம்பர், 2018

'பெண் எப்பொழுதும் பெண்ணாகத்தான் இருக்கிறாள்' 7


சண்டிலிப்பாய் வடலியடைப்பில்   இரண்டு நாட்கள் நாங்கள்  தங்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதற்கான பொறுப்பினை தோழி  யாழினி ஏற்றிருந்தாள். அவளின் வீட்டில்  ஒடியல் கூழோடும் இடியப்பம், மீன் வறுவலோடும், கூடவே வாழைப்பழமும் என இரவு உணவை அமர்க்களப்படுத்தியிருந்தனர். நான் இரண்டாவது முறையாக யாழினி வீட்டிற்குச் செல்கிறேன். அப்பா - அம்மாவைப் பார்த்து இரண்டு ஆண்டுகளாவது இருக்கும். அது எனது வீடு என்ற உணர்வையே தந்தது. இருந்தபோதும் 2015-ல் குறைவான தோழிகளோடு சென்ற ஊடறு தோழியினர்  இம்முறை 9 பேரோடு சென்றிந்தோம். வீட்டுக் கிணறு, அதை ஒட்டினாற்போல கதவில்லாத குளியலறை, அதை மறைக்க பனை மர ஓலை பின்னல், திரையாக பழைய சேலை,  சுற்றிலும் பனை மற்றும் தென்னை மரங்கள், அதில் கதை பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருக்கும் அணில் மற்றும் காக்கைகள் எனப் பழைய சூழல் மாறாமல் எல்லாம் அப்படியே இருந்தன.   



அங்குத் தங்கிய இரு நாட்களில் சில முக்கிய இடங்களைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதன்மையாக
 சண்டிலிப்பாயில் உள்ள  கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்றோம். அங்குதான் யாழினி பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். அந்த வட்டாரத்திற்கு பொறுப்பான கலெக்டர் உடனான சந்திப்பு எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகவும் எளிமையான, அன்பாகவும் மரியாதையாகவும் பேசக்கூடிய பெண் கலெக்டர் அவர். பெண்களுக்காக ஏற்படுத்தியிருக்கும் சலுகைகள், தீர்மானங்கள், அடுத்தகட்ட திட்டங்கள் என சில விஷயங்களை மனம் திறந்து பகிந்துகொண்டார். மேலும் பல நாடுகளிலிருந்து வந்திருந்த எங்களிடமும் அந்நாட்டு அரசியல் குறித்த சில விவரங்களையும் பரஸ்பரம் பகிர்ந்து கொண்டோம். எந்தப் பகட்டும் பந்தாவும் இன்னும் சொல்லப்போனால் மிகையான அலங்காரம்கூட அவர் செய்துகொள்ள வில்லை. அவர் பேச பேச ஆச்சரியமுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைக் கவனித்தனர் மலேசியாவுக்கு மிகச் சமீபத்தில்தான் போயிருந்தேன். அழகான ஊர்  என்றார். எங்கள் ஊரில் அரசுத் துறையில் வேலை செய்பவர்கள்கூட நிரம்ப அலங்காரத்தோடுதான் இருப்பார்கள். 


தலையில் போடும் துணியிலிருந்து காலில் மாட்டும் செருப்புவரை ஒரே வர்ணத்தில் இருக்கும். அவர் போனாலும் வாசனை திரவியத்தின் மணம் அவ்விடத்தை விட்டுப் போகாது. நீங்க இவ்வளவு சிம்பலா இருக்கீங்க. கிரேட் என்றேன். மக்களோடு மக்களாக இருந்து செய்வதுதான் இந்தப் பணி. அலங்காரத்தை நான் பெரிதாக விரும்புவதில்லை என்றார். நாங்கள் அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் நூலகம் பார்க்க கிளம்பினோம்.    

கடந்த முறை (2015) யாழ் நூலகம் சென்ற போது, பார்வையாளர்கள் செல்லும் நேரத்தைக் கவனிக்காமல் போனதால் உள்ளே சென்று பார்க்க முடியாமல் போனது. அந்த அனுபவத்தையும் நான் எழுதியிருந்தேன்.  இந்த முறை சென்ற போதும் போனமுறை செய்துவிட்ட அதே தவற்றை செய்துவிட்டு வாசலிலே நின்று கொண்டிருந்தோம் . 
மூன்று நாய்க்குட்டிகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் யாழ் நுலகத்தினுள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தன. தோல் வியாதிக் கண்ட தெருநாய் ஒன்று அப்பக்கம் வரவே அனைத்துக் குட்டிகளும் துள்ளிக்கொண்டு ஓடிவந்து குவிந்தன. 

சொறி - சிரங்குகண்ட நாய்க்குட்டிகளாக இருந்தாலும் அவற்றைப் பார்க்க ஆசையாக இருந்தது. குட்டிகளை  மறைத்து மறைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.

நூலகத்தைவிட்டு வெளியேறிய எங்களில் சிலருக்கு  நன்கு அறிமுகமான  தோழர் கிறிஸ்டினா அவருடைய நூலக உறுப்பினர் அட்டையை பயன்படுத்தி வந்திருக்கும் முன்னணி எழுத்தாளர்கள் விவரத்தையும் சொல்லி பிரத்தியேக அனுமதியை வாங்கி அவரே எங்களை நூலகத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். யாழ் நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கும் சில  அறிய வகை  ஓலைச்சுவடிகள் இருக்கும் அறைக்குத் தோழர் அனுமதி பெற்றுவந்த அழைத்துச் சென்றார். சாதாரணமாக யாரையும் காண அனுமதிக்கும் அறை அல்ல அது. மிகுந்த பாதுகாப்புக்கிடையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓலைச் சுவடிகளை தொடுவதற்குக்கூட அனுமதியில்லை. அதிகாரிகளின் உதவியோடு வேண்டும் என்றால் காணலாம். சில எழுத்துக்கள் எழுத்து வடிவமே இல்லாதமாதிரி இருந்தது. சில வாக்கியங்கள் என்ன என்றே புரியவில்லை. அதுகுறித்து அதிகாரிகளிடம் வினவியபோது, இது குறித்து ஆராய்ச்சி செய்பவர்களால்தான் சரியாகச் சொல்ல முடியும் என்றார். கை பட்டாலே உதிர்ந்து போய் விடும் நிலையில் உள்ள சில  ஓலைச் சுவடிகளையும் உதிர்ந்துவிடட ஓலைச்சுவடிகளை  தகுந்த பாதுகாப்புடன் மறு உருவாக்கம் செய்து வைத்திருந்தனர். 



உண்மையில் அதைப் பார்த்ததும் ஒரு கொடுப்பினைதான். அழிந்துவிட்ட ஓலைச்சுவடிகளின் நகல்களை ஒளிவடிவமாகப் பாதுகாத்து வைத்திருப்பதும் மற்றுமொரு சிறப்பு. சேகரித்துவைத்திருக்கும் பல ஆண்டுகளுக்குப் பிந்திய செய்தித்தாள்களிலிருந்து உலக தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்கள்வரைக்கும் குறுகிய நேரத்தில் முக்கியமான பல ஆவணங்களையும் கண்டோம். அவற்றைப் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை எனும்படியால் நான் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்து விட்டேன்.
நாங்கள் நூலகத்தை விட்டு வெளியேறும்போது நாய்க்குட்டிகளும் அதன் தாயும் சரஸ்வதி சிலைக்கு கீழிருந்த மண்தரையில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தன. நாங்கள் நல்லூர் கோட்டையை நோக்கிக்  கிளம்பினோம்.


2015-ஆம் ஆண்டு பயணத்தில் எழுதப்பட்ட நூல்நிலையம் மற்றும் கோட்டை பற்றிய பதிவுகள் பதிவுகள் ...

https://yogiperiyasamy.blogspot.com/2015/05/12_22.html 13
http://yogiperiyasamy.blogspot.com/2015/05/14.html 14

தொடரும்..
எட்டாம் பாகம்  வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2018/11/8.html

சனி, 17 நவம்பர், 2018

கூகை பெண்கள் சந்திப்பு 1



மலேசிய பெண்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள கூகை இணைய இதழ் வெளிவருவதற்கு முன்னதாகவே, நாடு தழுவிய நிலையில்  பெண்களை சந்திப்பதற்காகச் சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதல் சந்திப்பு நகரத்திலிருந்து பறந்துசென்று சுங்கை எனும் சின்ன கிராமத்தில் அமர்ந்தது கூகை. கிராமத்துப் பெண்களிலிருந்து தொடங்குவது மட்டுமல்ல கிராமத்து பெண்களுக்கு எங்களின் நோக்கத்தையும் இன்றைய தேவையையும் எங்களால் கொண்டு சேர்க்க முடியுமா என்று எங்களையே நாங்கள் பரிசோதித்து கொள்ளும் முயற்சியும் கூட. மேலும், இதில் ஏதும் தவறோ அல்லது தவறான புரிதலோ வந்துவிட்டாலும்  நகரத்து  வாசிகளைப்போல எங்கள் மேல் உடனே சேற்றை வாரி இரைக்கவோ முகநூலில் பதிவேற்றி அவமானப்படுத்தவோ இவர்களுக்கு தெரியாது. உடனுக்குடனேயே அதைக் கேள்வி கேட்டு பதில் தெரிந்துகொள்ளக்கூடிய அல்லது அப்போதே   சண்டைப் போட்டு எழுந்துசெல்லக்கூடிய வெளிப்படையான குணம் மட்டுமே  அவர்களுக்கு இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் திட்டமிட்டபடியே எந்த மாற்றமும் இல்லாமல் இந்தச் சந்திப்பு நடந்தது. தீபாவளி முடிந்து ஒரு வாரத்தில் இன்னும் அதன் கொண்டாட்டங்கள் மிச்சமிருக்கும் வேளையில், இம்மாதிரியான முதல்  சந்திப்புக்கு பெண்கள் வருவது சாத்தியப்படுமா என்ற சந்தேகங்கள் இருந்தாலும், துணிந்து காரியத்தில் இறங்கியது கூகை. இதற்கான அறிவிப்பாக 100-க்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்கள் முதல் நாலே வீடு வீடாகச் சென்று கிராமத்துப் பெண்களுக்கு வழங்கப்பட்டது. சந்திப்பன்று (17.11.18) மாலை 6 மணிக்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சுங்கைப் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் கூடினர். தோழி சகிலா மற்றும் தோழி கௌசல்யா சந்திப்பை நெறிப்படுத்தியிருந்தனர். 
தோழி சகிலா

 கூகை பெண்கள் சந்திப்பு நடத்துநர்களாக எங்களை எளிய முறையில் அறிமுகப்படுத்தி வைத்தார் தோழி சகிலா. 'பெண்களும் பொது அறிவும்' என்ற தலைப்பில் எனது கலந்துரையாடல் தொடங்கியது. முன்னதாக கூகை என்றால்  என்ன? எதற்காக மலேசியப் பெண்கள் இணைய தளத்திற்கு கூகை எனப் பெயர் வைக்க வேண்டும் என்ற குழப்பமான நிலையில் இருந்தவர்களுக்கு அதற்கான விளக்கத்தைச் சொல்லிய பிறகே சந்திப்பை தொடர்வது சரியாக இருக்கும் எனத் தோன்றியது . எல்லாப் பறவைகளையும் எனக்குப் பிடிக்கும் என்றாலும், சாம்பல் நிற பறவையான  மடையான் எனக்கு நெருக்கமான ஒரு பறவையாகும். அதேபோல வழி தவறி  வெளிச்சத்தில் குருட்டு நிலையில்   அமர்ந்திருந்த  ஆந்தையை, 10 வயதில் முதன்முதலாக  நேரில் பார்த்தலிருந்தே அதன் மீது தனியொரு  பிரியம் இருக்கிறது.

"பெண்களைத் திட்டுவதற்காக ஆக்கங் கெட்ட கூவை என தமிழ்நாட்டில் பயன்படுத்துவார்கள். தற்போது ஆண்-பெண் இருவரையுமே அந்த வார்த்தையைச்  சொல்லி திட்டினாலும் அதைப் பெண்களை மட்டம்  தட்டவே பயன்படுத்தியது. நிச்சயமாகப் பெண்கள் இணைய இதழுக்கு இந்தப் பெயரை வைக்க வேண்டாம்" என என் நண்பர் என்னை எச்சரித்தபோது, முன்பைவிட இன்னும் தீர்க்கமாக அந்தப் பெயரை வைப்பதற்கு முடிவு செய்தேன். பெண்களைத் திட்டுவதற்கு பயன்படுத்தப்படும் எல்லா வார்த்தைகளையுமே பட்டியலிட்டு இனி அதையே மற்ற மற்ற அமர்வுகளுக்குப் பயன்படுத்தலாம் என முடிவு செய்திருக்கிறேன் . எங்களைப் பலவீனமாக்கும் வார்த்தைகளைக் கொண்டே எங்களைப் பலப்படுத்திக்கொள்கிறோம் என நண்பருக்குப் பதில் சொன்னேன்.  அவர் என் வார்த்தைகளில் உள்ள நம்பிக்கையை கண்டு உற்சாகமாகிவிட்டார்.

தோழர் சிவரஞ்சனி
பெண்களும் பொது அறிவும் என்ற தலைப்பில் நான் பெண்களிடம் உரையாடலை நடத்தினேன். மலேசியாவில் நடந்த அரசியல் மாற்றம், குறைந்த பட்ச சம்பள பிரச்னை, 11 மாத குழந்தை சாரா பாலியல் பலாத்கார கொலை, கேரளாவின் ஐயப்பா கோயிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி உள்ளிட்ட விஷயங்களிலிருந்து  எவ்வாறு இவர்கள் விஷயங்களைப்  புரிந்துகொண்டுள்ளனர் என்ற கலந்துரையாடல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விவாதமாகவும் கருத்துகளுமாக முன்னெடுத்துச் சென்றேன் . முன்பெல்லாம்  தோட்டத்தில் மாலை வேளைகளில் பெண்களுக்குள் நடக்கும் 'வெட்டிப் பேச்சு' என விமர்சிக்கப்பட்ட திண்ணை உரையாடல்கள் இன்று முற்றிலும் வேரறுப்பட்டிருக்கும் நிலையில் பொது விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்காக திரும்பவும் பெண்கள் இந்தத் திண்ணை பேச்சுகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். 'பொது  தகவல்' அறிந்திருக்கும் பெண்களாக உருமாறப் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தகவல்களை பகிந்துகொள்வதும் கலந்துரையாடுவதும் கேள்விகளை கேட்பதும் பெண்களை தகவல் அறிந்தவர்களாக மாற்றக்கூடிய சாத்தியம் இருக்கிறது.  உரையாடுவதற்கான தளமாக திண்ணை பேச்சுகளை அமைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியவுடன் பெண்கள் எழுப்பிய கரவோசை புதிய நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
 
தொடர்ந்து சிறிய தேநீர் இடைவெளிக்குப்பிறகு தோழர் சிவரஞ்சனியின் ஆண்-பெண் சரிசம நிகர் என்ற தலைப்பில் தனது உரையாடலைத் தொடங்கினார். முன்னதாக பெண்களை மையப்படுத்தி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர்களைப் பலவீனமானவர்களாக காட்டபடும் சொல்லாடல்களையும் துண்டு காகிதங்களில் பிரிண்ட் செய்து வருகையளித்திருந்த பெண்களுக்கு ஆளுக்கொன்றாக கொடுத்து அது 'சரியா தவறா'?  உங்கள் கருத்து என்ன? என்று வந்திருந்த அத்தனை பேரையுமே உரையாடுவதற்கு வழி செய்தார். குறிப்பாக
இரவில் பெண்கள் ஆண் துணையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது.
பெண்கள் சத்தமாக சிரிக்கக்கூடாது.

பெண்கள் அடக்கமாகப் பேச வேண்டும். உள்ளிட்ட 30 வாக்கியங்களை வந்திருந்த அனைத்துப் பெண்களும் சரியா தவறா என்ற ரீதியில் விவாதித்தனர். சில பெண்களுக்கு இதெல்லாம் சரிதானே இன்று குழம்பிப்போன நேரத்தில் அது எவ்வாறு சரியாகும் அல்லது ஏன் தவறில்லை? எதற்காக அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம் என மிக எளிய மொழியில் பேசி வந்திருந்த அனைவரையுமே சிந்திக்க வைத்தார் சிவரஞ்சனி. 

தோழி கௌசல்யா
இறுதியாகத் தோழி கௌசல்யா நன்றியுரையாற்றினார். பின்னர் எங்கள் இருவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

"இம்மாதிரியான உரையாடல்கள் எங்களுக்கு அவசியமானதாகவும் தேவையாகவும் இருக்கிறது. எங்களை நாங்கள் மீட்டெடுக்க இம்மாதிரியான சந்திப்புகள் தேவை என்பதை உணர்கிறோம். அடுத்த சந்திப்புக்கு ஆவலாக இருக்கிறோம்" எனக் கூகை ஆதரவுப்  பெண்கள் எங்களுக்கு  வாழ்த்துக்களைச் சொல்லி வழியனுப்பி வைத்தனர்.


இந்தச் சந்திப்புக்கு எல்லா வகையிலும் காரணமாக இருந்த தோழர் சிவா லெனினுக்கு நன்றி.  கூகை தான் அமரப்போகும் அடுத்த கிளையை விரைவில் அறிவிக்கும் .
 

வெள்ளி, 9 நவம்பர், 2018

கடல்

இன்றுதான் மரிப்பதற்கு
சரியான நாள்
வலியில்லாமல் 
தற்கொலை செய்துக்கொள்ள 
விருப்பமுள்ள யாரும்
என்னோடு வரலாம்
நாம் கடலுக்கடியில்
கல்லறை அமைக்கலாம்...


0000
அலைகளோடு சேர்த்து
கடலை
உன் பேனா புட்டிக்குள்
ஊற்றி வைத்திருக்கிறேன் 
அலைகள்
எழுத்துகளை அழித்து
கரையை தேடிக்கொண்டிருக்கின்றன...

நான் உன்னை தேடிக்கொண்டிருப்பது போல
 

வெள்ளி, 26 அக்டோபர், 2018

முதுமலை முதல் மசினகுடி வரை 2018


 முதுமலை வனத்திலிருந்து, மசினகுடி மற்றும் கர்நாடகா எல்லைப்பகுதியில் தொடரும் வனங்களில் அதிகாலை வேளையில் Animal Watch போனால் , பனி பெய்துகொண்டிருக்கும் வனமே பிறந்த குழந்தையைப்போல புதுசாக இருக்கிறது. இங்கே வருவது எனக்கு இரண்டாவது பயணமாக இருந்தாலும், இந்த முறை அதிக நெருக்கமான வனமாக இருந்தது முதுமலை. 

அங்கே எடுத்த சில புகைப்படங்கள் இவை...



அதிகாலை மசினகுடி
 
















 























Add caption





புள்ளி மான்/ spotted deer



 










கொண்டைக்குருவி/ Red-vented Bulbul


மயில்


சிவப்பு மூக்கு ஆள்காட்டிக் குருவி /
Red wattled lapwing


கருங்கொண்டை நாகணவாய்
Brahminy Starling






கௌதாரி/  Partridge





















 Oriental Magpie Robin/
கொண்டுகரிச்சான்






புள்ளி மூக்கு வாத்து
 









மாயத்தோற்றம் 




 
 






சாம்பல் மந்தி/ Gray Langur


நான்