ஞாயிறு, 17 ஜனவரி, 2016

வனம் தேடும் சாம்பல் பறவை ! 2

பகுதி 2













நான் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் சந்தோஷ மூட்லயே இருந்தேன். எந்த டென்ஷனையும் யாரும் எனக்குக் கொடுக்கவில்லை. எனது ஒரே டென்ஷன் என் அலைபேசி வேலைச் செய்யவில்லை என்பது மட்டும்தான். நேசமணி அம்மா என்னை அவரது காரில் ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். நான் காரைவிட்டு இறங்கிய மறுகணம் பேருந்து நடத்துனர் எந்த நிபந்தனையுமின்றி என்னைப் பேருந்தில் அள்ளிபோட்டுக் கொண்டு கிளப்பினார். 


நல்ல வசதியான பேருந்து. கால் நீட்டிப் போட்டு உறங்கிக்கொண்டே போகும் வசதி. அப்போதுதான் கைத்தொலைபேசி ஞாபகம் வந்தது எனக்கு. ஜெயராம் அண்ணா பஸ் ஏறியதும் தெரியபடுத்தும்படி எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் மீண்டும் மீண்டும் அவரை அழைத்துக்கொண்டிருந்தேன். ஜெயராம் அண்ணாவுக்கு அழைப்பு இணையவே இல்லை. பேருந்து நிறுத்தி ஆட்களை இறக்கிய இடங்களைக் குறிப்பிட்டு அவருக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். அது அவருக்குச் சேர்கிறதா இல்லையா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. காரணம் அண்ணாவிடமிருந்து எனக்கு எந்தப் பதிலும் எனக்கு வரவில்லை. மீண்டும் ஒரு முறை அண்ணாவுக்கு அழைத்தேன். இம்முறை அலைப்பேசி இணைப்புக் கிடைத்தது. அவர் பதிலுக்கு அனுப்பும் எந்தக் குறுஞ்செய்தியும் டெலிவர் ஆகமறுக்கிறது என்றும் கோவைப் போப்ஸ் கல்லூரி என்று ஜெயராம் அண்ணா கூறிக்கொண்டிருந்தபோதே அலைபேசி நின்று போனது.

காலை 7 மணிக்கு எல்லாம் நான் கோவையில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், காலை 8.30 மணிவரைப் பஸ்சில்தான் இருந்தேன். இறுதியாகப் போப்ஸ் கல்லூரியிடத்தில் காத்திருப்பதாக ஜெயராம் அண்ணாவுக்குத் தகவல் கூறும்படி சாகுலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டுக் காலை நேரக் கோவையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். கோலம் போடும் பெண்கள், டீக் கடையில் ஆண்கள், பேருந்துக்குக் காத்திருப்பவர்கள், குப்பையை மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகள் இப்படிக் கோவை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. 
பஸ் நடத்துநர் அந்தக் கல்லூரி நிறுத்தத்தில் நிறுத்தினார். ஆனால் கல்லூரி இருப்பதற்கான அறிகுறித் தெரியவில்லை. சரியான நிறுத்தம் தானா என்பதை அறியப் பேருந்து நிறுத்தத்தின் ஓரத்தில் பூ வியாபாரம் செய்துக்கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டேன். அவர் சரியான இடம்தான் இங்கேயே உட்காருங்க என்றார். பூ வேணுமா என்றார். என்னிடம் 10 ரூபாய்கூட இந்தியப் பணமில்லை. வேணாம் என்று மீண்டும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். என்னையும் சிலபேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள். அதற்குள் ஜெயராம் அண்ணா என்னை அடையாளம் கண்டு வந்துவிட்டார். வெகுநேரம் அவர் எனக்காகக் காத்திருபதும் வேறொரு பேருந்தை விரட்டிப் பிடித்துத் திரும்பி வந்ததும் பின்னர்த் தெரிந்துக்கொண்டேன். 
ஜெயராம் அண்ணா மிகவும் அன்பானவர். அவருடைய சிரித்த முகம் கொஞ்சம்கூட மாறவில்லை. அவருடைய வீட்டிற்கு அழைத்துப்போனார். அவருடைய மனைவியை (அண்ணியை) அறிமுகம் செய்துவைத்தார். சம்பரதாய அறிமுகம்தான். பின் பேசப் பேச அந்தச் சம்பரதாயம் மாறியது. மிக இயல்பாக அந்த உரையாடல் மாதிரி மலேசிய வாழ்வியல் முறை, இஸ்லாமிய ஆட்சிமுறை, மலேசிய கல்விமுறை, வேலைக்காக வரும் தமிழ்நாட்டவர்கள் என ஒரு சங்கிலித் தொடர்மாதிரி மேலோட்டமாகப் பேசிக்கொண்டே போனோம். 
அண்ணிக் காலை உணவைத் தயார் செய்திருந்தார். இட்டிலி, தோசை, பொங்கல் எனக் களைகட்டியிருந்தது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிட்டேன். சுவையான காலை உணவு மட்டுமல்ல, டீயும். 
பேச்சின் போது அண்ணி எனது பூர்வீகம் குறித்துக் கேட்டார். தஞ்சாவூர் என்றேன். ஆனால், இன்றுவரை அங்கு இன்னும்போகவில்லை எனவும் கூறினேன். ஜெயராம் அண்ணா அவர் துணைவியார் இருவரும் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் என்று பின்னர்தான் தெரிந்துக்கொண்டேன். 

அன்பான புரிந்துணர்வு கொண்ட குடும்பம். நான் ரொம்ப வசதியாகத் தரையில் உட்கார்ந்துக் கதை அளந்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த இடத்தில் மட்டுமே நான் அப்படி  சௌகரியங்களுடன் இருப்பேன். திடீரென வந்த ஓர் அந்நிய நிலத்துப் பெண் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் அத்தனை இயல்பாக நடமாடிக்கொண்டிருப்பது எந்தப் பெண்ணுக்குப் பிடிக்கும். அண்ணியை முதலில் அணைக்கும்போது அவர் அதை விரும்பாதது எனக்குத் தெரிந்தது. 

நண்பர் சாகுல் வந்த பிறகு, மீண்டும் ஓர் அறிமுக உரையாடல், இன்னும் பிற. அதன் பிறகு அந்தச் சந்திப்பின் ஞாபகமாகப்  ஜெயராமன் அண்ணன் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துகொண்டு விடைபெற்றேன். சுமார் 4 மணி நேரம் அண்ணன் வீட்டில் இருந்தேன். விடைபெறும் முன் அண்ணியை மீண்டும் அணைத்தேன். இம்முறை அதில் ஓர் இறுக்கம் இருந்தது. 

நானும் சாகுலும் முதுமலை வனபயணத்தைத் தொடங்கினோம். இடையில் ஒரு நாள் ஊட்டியைச் சந்தித்துவிட்டு, மறுநாள் காலையில் முதுமலை வன அதிகாரியையும் சந்தித்துவிட்டு, வனத்தையும் அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளையும் சந்திக்கலாம் எனத் திட்டம். ஊட்டியை நோக்கிய பயணமும் அதைக்கடந்த தூரமும், "வா என்றும் என்னைக் காண் என்றும் அழைத்துக்கொண்டிருந்தாள்  வனதேவதை.


முன்னதாக சாகுலை குறித்து சொல்ல வேண்டும். நிறைய பேர் சாகுலை குறித்து சொல்லியிருக்கலாம். நான் பார்த்த சாகுலும் நீங்கள் பார்த்திருக்கும் சாகுலும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.
எனக்கு நெருங்கிய நண்பண்கள் என சொல்ல இதுவரை யாரும் இருந்ததில்லை. முகநூல் வழியாக மட்டும் அறிமுகமாகியிருந்த சாகுல், இனி நான் செய்யப்போகும் இந்திய பயணங்களில் எல்லாம் அவரின்றி அமையுமா எனும் அளவுக்கு எங்களின் நட்பு மாறியிருந்தது. அதை பயணதின் அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.  
(தொடரும்)


புதன், 13 ஜனவரி, 2016

அவள்





அவள் 1
மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது
முன்பொருமுறை 
அவளோடு விளையாடி
சினேகம் வளர்த்து
பின் பிரிந்து
வானம் சென்ற 
அதே மழை..
இப்போது
முட்டி மோதி
ஆயிரமாயிரம் துளிகள் என
அவள் மீது விழுகிறது
ஒவ்வொரு துளியும்
மீதமிருக்கும் 
அவளின் மிச்ச வாழ்கையை
பேசுகிறது
ஒவ்வொரு
துளியிலும்
பல்லாயிரம் தடவை

அடைமழை பொழிந்துகொண்டிருக்கிறது…


அவள் 2

நான் இறுதியாக சந்தித்த
அந்த இரவு
மிக அர்ப்புதமானது
அவள்!
ஆம் அவளேதான்
தேவனுக்கு நிகரான
அழகி அவள்
அவளின் கனவுக்குள்
என்னை அழைத்திருந்தாள்
போயிருந்தேன் 
அவளின் கனவால் ஆன
அந்த உலகத்தில்
ஆதியும் அந்தமுமாக அவளே இருந்தாள்
அவளின் மது கோப்பையில்
நிலா செத்துக்கிடந்தது
எங்கோ ஒர் ஆணியில்
சூரியனை கட்டி தொங்க விட்டிருந்தாள்
சில ஆண்களை
கொன்று
அவளின் கனவுக்கு
வர்ணம் வார்த்தும் வைத்திருந்தாள்
அவளின் கனவில்
கறுப்பு வெள்ளையாக
நுழைந்த என்னை
வர்ணங்களால் ஆளிங்கனம்
செய்தாள்
அடிக்குரலெடுத்து
கத்திய
எனது மௌனம்
அவளின்
பசியை தின்று தீர்த்துக்கொண்டிருந்தது
அந்த அர்ப்புத இரவிலிருந்து
வெளிவந்த நான்
என் முகத்தில்
பழுத்திருந்த பருவை
கிள்ளி வீசிக்கொண்டிருந்தேன்



அவள் 3

திரைச்சீலை அணியாத
ஜன்னலின் வழியே வந்தது
அந்தச் சாம்பல் பறவை
அதன் காலில் சிக்கிவந்த
ஒற்றை நட்சத்திரம்
யட்சியின் 
தனிமை நதியில் விழுந்து
யாதவ ஒளியை எரிந்துகொண்டிருக்கிறது
அவளின் தவம்
இரவோடு அல்ல…

 ( ஜனவரி 2016)

நன்றி ஊடறு
http://www.oodaru.com/?p=9493#more-9493

தந்திரம்

யட்சியின் கனவு
பச்சை நிறத்திலானது
அவளின் இருண்மை
இரவில் வரும்
கானகங்களும் 
கரும்பச்சையாகவே
விரிந்திருதன
யட்சியின் அழகிய
கனவுகளில்
எப்போதும்
வரும் யட்சன்
இம்முறையும் வந்தான்
நாவினால்
அவளை ருசித்தவன்
முதலில்
அவளின் நெஞ்சை
பிளந்தான்
அவளின்
இதயத்தை அறுத்து
அவனின்
பெயரைச்சொல்லி
வீசி எறிந்தான்
அவளின் வயிற்றை
கிழித்து
கடைசியாய் அவள் தின்ற
அவனின் முத்தத்தை
எடுத்துகொண்டான்
இதுவே
எனக்கூறியவன்
வானகம் அதிர சிரித்து பறந்தான்...
யட்ச தந்திரம்
அவளின்
பச்சை கனவு
வானகம்
முழுவதும்
ரத்த வேட்டையாடியிருந்தது...

வனம் தேடும் சாம்பல் பறவை !

பகுதி 1

பயணங்கள் எப்போதும் என்னைப் புதுப்பித்தே கொண்டிருக்கின்றன. மலர்ந்து உதிர்ந்து மீண்டும் மலரும் ஒரு மலரைப்போல, வறண்ட  பூமி  மீண்டும் மழைப் பெய்து குளிர வைப்பதுபோல, ஏழைக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் போல,  மனம் சோர்ந்து தடுமாறும்போது பயணங்கள் என்னை புதுப்பித்துப் புதியதாக்குகின்றன.

என் பேட்டரியைச் சார்ஜ் செய்வது பயணங்கள்தான் என என் நண்பர்களிடம் நான்  எப்பவும் கூறுவது உண்டு. என் வரையில் அது உண்மையும்கூட. நான் பயணங்களை முடித்து வரும் ஒவ்வொரு தடவையும் என்னைக் காண்பவர்கள் புதுசா இருக்கியே என்றுதான் கேட்கிறார்கள். அது பயணத்தின் ரகசியம் என நான் சொல்லும்வரை பலருக்குத் தெரியாது.
இம்முறை 10 நாட்களுக்குத் திட்டமிட்டிருந்த இந்தியப் பயணம் இன்னும் இன்னும் என்னைப் புதியவளாகவும் இளையவளாகவும் மாற்றியிருந்தது. சில இடங்களுக்கு செல்ல நான் மலேசியாவில் இருக்கும்போதே திட்டமிட்டிருந்தேன். குறிப்பாக முதுமலை வனப் பயணத்தை நான் ரொம்பவும் ஆவலாகத் திட்டமிட்டிருந்தேன். அதற்கான அனுமதியை அங்கிருக்கும் வனவிலங்கு அதிகாரிகளிடம் பசுமை அங்காடி நடத்திவரும் நண்பர் சாகுல் பெற்றுதர உதவியிருந்தார்.

அடுத்துத் திருநெல்வெலியில் நடக்கவிருந்த கவிதைக்காட்சி ரூபம் என்ற நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் லஷ்மி மணிவண்ணன் சார் அழைப்பு விடுத்திருந்தார். அதை முன்னிட்டு அந்த நிகழ்சியில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன்.
உண்மையில் ஜனவரியில் நடக்கவிருந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் உயிர்மை வெளியீடாக வெளிவரவிருந்த எனது கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவே நான் எனது தமிழ்நாட்டுப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தேன். திடீர் வெள்ளம் காரணத்தால் சென்னையே நிலைகுலைந்து போகச் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டது. ஆனால், ஏர் ஆசியாவில் புக் செய்திருந்த எனது விமான டிக்கெட் ஏப்ரலுக்கு மாற்ற முடியாத காரணத்தினால் திட்டமிட்டபடியே நான் பயணத்திற்கே தயாரானேன்.

டிசம்பர் 21-ஆம் தேதி இரவு 9 மணிக்கு விமானம். அங்கே தரையிரங்கும்போது இந்திய நேரப்படி இரவு 10.30 மணியாகும். பின் 11.30 மணிக்கு நான் கோயம்பத்தூர் செல்வதற்கான பயண ஏற்பாட்டைத் தோழி நேசமணி அம்மா ஏற்பாடு செய்திருந்தார். அவரே என்னைச் சென்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லவும் அங்குக் காத்துக்கொண்டிருந்தார்.
குறிப்பிட்டபடி 9 மணிக்கு எல்லாம் நான் கேஎல்ஐஏ விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய விமானத்தில் இருந்தேன். ஆனால், புறப்படவிருந்த விமானம் கிட்டதட்ட முக்கால்மணி நேரத்திற்குத் தரையிலேயே வட்டமிட்டபடி இருந்தது. எனக்கு அதற்குமேல் பொறுமையில்லை. உறங்குவதைத் தவிர வேறு உபாயம் இருக்கப்போவதில்லை. கண்களை மூடி திறந்தேன். விமானம் மேலே பறந்துக்கொண்டிருந்தது.

தரையிறங்கியவுடன் நான் கையில் கொண்டு போயிருந்த இரண்டு அலைபேசிகளில் ஒன்று நேசமணி அம்மாவின் அலைபேசிக்குத் தொடர்பை இணைக்கவில்லை. மற்றொரு அலைபேசியில் பணம் குறைவாக இருந்தது. என்ன செய்யலாம் என நினைத்திருந்த நேரத்தில் நேசமணி அம்மாவே என்னை அழைத்தார். நான் காத்திருக்கிறேன் வாங்க என்றார். நான் முதன் முதலில் அவரைப் பார்க்கப்போகிறேன் என்ற பிரஞ்ஞையே இல்லாமல் பலநாள் பழகியவள் போல அவர் என்னை வரவேற்க காத்துக்கொண்டிருந்தார். நான் அவரைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் யோகி என்ற குரல் வாஞ்சையோடு அழைத்தது. திரும்பிப் பார்த்தக் கணம் அவர் மலர்ந்தப் புன்னகையோடு என்னைப் பார்த்துக் கையசைத்தார்.
நான் அவரின் கைக்குள் என் கையைச் சேர்க்கும் முன்பே அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது அதுவரை அறிந்திருக்கவில்லை. என் அன்புக்குரிய விஜயலட்சுமி அம்மா எனக்குப் பிடித்த காப்பியைக் கையில் ஏந்தியவாறு எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார். இப்படி ஒரு இனிப்பான வரவேற்பும் காத்திருப்பும் யோகிக்குத் தவிர வேறு யாருக்கும் நிகழ்ந்திருக்காது.

அம்மாவை பார்த்த மாத்திரத்தில் அவரைக் கட்டிக்கொண்டேன். எனக்காக அம்மா வந்திருக்கிறார் என்பதே எனக்குப் பெரிய ஆனந்தம். உடன் ஹேமாவும் இருந்தார். ஹேமாவை நான் அப்போதுதான் முதன்முதலில் பார்த்தேன். அழகான கம்பீரம் அவரிடம் இருந்தது. கோவைக்குச் செல்வதற்கான பேருந்து நேரம் ஆகிவிட்டபடியால் நேசமணி அம்மா தொடர்ந்து பேருந்து நடத்துனரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் சந்தோஷ மூட்லயே இருந்தேன். எந்த டென்ஷனையும் யாரும் எனக்குக் கொடுக்கவில்லை. எனது ஒரே டென்ஷன் என் அலைபேசி வேலைச் செய்யவில்லை என்பது மட்டும்தான். நேசமணி அம்மா என்னை அவரது காரில் ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். நான் காரைவிட்டு இறங்கிய மறுகணம் பேருந்து நடத்துனர் எந்த நிபந்தனையுமின்றி என்னைப் பேருந்தில் அள்ளிபோட்டுக் கொண்டு கிளப்பினார்.

(தொடரும்)

சனி, 9 ஜனவரி, 2016

'படிகம்' நாடு கடந்தும் அறியப்பட வேண்டும்…


'படிகம்' என்ற பெயரில் ஒரு நவீனக் கவிதைக்கான இதழ் வருவதாக அதுவரை ஒரு தகவலைக்கூட நான் அறிந்திருக்கவில்லை. ஒளவை முளரியில் 'கவிதைக் காட்சி ரூபம்' என்ற நிகழ்ச்சிக்குச் சென்றதில் அடைந்த நன்மைகளில் இதுவும் ஒன்று எனத் தாராளமாகக் கூறலாம். தமிழ்நாட்டில் சிற்றுதழ்களும் தற்போது வெகுஜனப் பத்திரிகைகளைப் போலப் பெருகிக்கொண்டு வருவதில் 'படிகம்' மாதிரியான குறைந்த முதலீட்டில் வெளிவரும் இதழ்கள் இலை மறைக்கும் காயாக இருப்பதில் ஆச்சரியமில்லைதான். 

'படிகம்' இதழின் ஆசிரியர் ரோஸ் ஆன்றா ஜனவரி மாதத்திற்கான இதழை என் கையில் கொடுக்கும்போது ஒரு தரமான கவிதைச் சிற்றிதழ் என் கையில் இருப்பதை உணர்ந்தேன். இதுவரை வந்த படிகம் இதழ்களில் இதுவே ஆகச்சிறந்த பிரதி என ஆன்றா சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமும் அதன் அர்த்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ஆவலும் ஏற்பட, பழைய புத்தகங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டேன். அடுத்தச் சில நிமிடங்களில் 3 பழைய பிரதிகளைத் தேடிக்கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார் ஆன்றா. இதுவரை வந்த 5 படிகம் பிரதிகளில் ஒன்றுமட்டுமே கைவசமில்லை. 

படைப்புகளின் எண்ணிக்கை, புத்தகத்தின் அச்சுத் தரம் எனும் பிரிக்கும் போது ஆன்றா சொன்னதுபோல இந்த 5-வது இதழ்தான் ஆகச் சிறந்த பிரதி. புத்தகத்தின் அட்டையில் உள்ள படைப்புகளோடு சேர்த்து மொத்தம் 84 பக்கங்கள். ஜெயமோகன், விக்ரமாதித்யன், கருணாகரன், கே.ராஜதுரை, போகன் சங்கர், தேவதச்சன், லஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட ஆளுமைகளின் படைப்புகளும், செந்தூரன் ஈஸ்வரநாதன், கார்த்திக் நேத்தா, ஆகாச முத்து, ஜீனத் நசீபா, அனிதா, ர.தங்கபாலு, ஆறுமுகம் முருகேசன் உள்ளிட்டப் புதிய எழுத்தாளர்கள் (சரியாகச் சொல்லப்போனால் என் வரையில் அப்போதுதான் அறிமுகமான படைப்பாளர்கள்) ஆகியவர்களோடு தற்போது இலக்கியத்தில் இயங்கி வரும் மேலும் சில எழுத்தாளர்களின் படைப்புகளும் தாங்கிப் புதிய வருடத்தில் புதிய நம்பிகையோடு வெளிவந்திருந்தது 'படிகம்'  ஐந்தாவது இதழ். 


படிகம் சிற்றிதழைப் பார்த்த மாத்திரத்தில் மனதில் தோன்றிய மலேசியாவில் நவீனக் கவிதை இதழாகச் சில காலம் வெளிவந்த 'மௌனம்' சிற்றிதழ்தான். நினைத்த நேரம் வெளிவரும் இதழ் எனக் கிட்டதட்ட 20 இதழ்கள் வெளிவந்திருக்கும் என நினைக்கிறேன். பின் அதனூடான அரசியல், தரம், பொருளாதாரம் என ஏற்பட்ட சில பிரச்னையில் அந்த இதழ் நின்று போனது. ஆனால், கவிதைக்காக வெளிவந்த அந்த இதழ் மிக முக்கியமான முயற்சி என்பதிலும் பல இலக்கிய ஆளுமைகளின் ஆதரவு பெற்றது என்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. படிகம் இதழைப் பார்த்த உடன் 'மௌனம்' இதழ் நியாபகம் வந்ததற்கு மேலும் ஒரு காரணம் அதன் வடிவமைப்புதான். 

படிகத்தின் தொடக்க இதழ் மார்ச் மாதம் 2015-ஆம் ஆண்டு, 23 பக்கங்கள் மட்டுமே கொண்டு, 10 ரூபாய்க்கு வெளிவந்துள்ளது. முதல் புத்தகம் வரலாற்றுப் பூர்வமானது என்ற பொருப்பை உணர்ந்து அட்டைப்படத்தில் பிக்காஸோ ஓவியத்தைப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடதக்கது. 12 கலைஞர்கள் அதில் தங்களின் படைப்பை வழங்கியிருந்தனர். ஆசிரியர் ஆன்றா புத்தகத்தின் அறிமுக உரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.. 


"கவிதைக்கான தனி இதழ் அரிதாகிப் போனது வருத்தமளிக்கிறது. கவிஞர்களின் மனதை உடைத்து வெளியேறும் கவிதைகள் சிறகு விரிக்கட்டும்" 
-ரோஸ் ஆன்றா 

கவிஞர்களின் மனதை உடைத்து வெளியேறும் கவிதைகள் என்ற வரி மிக முக்கியமான விஷயமாகும். கவிதைகளை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளாகத்தான் தற்போது கவிதை மனங்கள் மாறி வருகின்றன. கேட்ட மாத்திரத்திலேயே கவிதைகளைப் புனையும் டிசைன்களுக்கு மனம் மாற்றப் பட்டோ அல்லது மாறியோ வருகிறது. அம்மாதிரியான கவிதைகள் சில சமயம் அழகாக அமைந்து விடுவதும் மறுப்பதற்கு இல்லை. எனினும் கவிதைக்கான உயிர்ப்பை இழந்தக் கவிதைகள் பெருகி வருவதும் விவாதத்தில் வைக்க வேண்டிய விடயமாகும். 

மே மாதத்திற்கான படிகம் இதழும் பொருளாதாரத்திற்கு உட்பட்ட நிலையில்தான் வெளிவந்திருக்கிறது. ஆனால், 4 பக்கங்கள் அதிகமாகவும் அட்டைப்படத்தை ஓவியர் ஞானப்பிரகாசம் கைவண்ணத்திலும் அச்சாகியிருக்கிறது. நகல் எடுத்து அதைப் புத்தகமாக்கிய பாணியில் அம்மாத படிகம் மலர்ந்திருக்கிறது என்றாலும் முந்தியத் தொகுப்பைக் காட்டிலும் இந்த இதழில் முக்கிய ஆலுமைகளின் கவிதைகள் வெளிவந்து தீவிரப் பார்வையைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக விக்ரமாதித்தன் நம்பி, யவனிகா ஶ்ரீராம், பா.தேவேந்திரபூபதி ஆகியவர்களின் கவிதையும் லஷ்மி மணிவண்ணன் எழுதிய குமரகுரு அன்புவின் 'மணல் மீது வாழும் கடல்', சுஜாதாச் செல்வராஜின் 'காலங்களைக் கடந்து வருபவன்' ந.பெரியசாமியின் 'தோட்டாக்கள் பாயும் வெளி' ஆகிய கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு விமர்சனமும் கவனத்தைப் பெற்றிருந்தன. 

இந்தத் தொகுப்பில் விக்ரமாதித்தன் நம்பியின் 

பெரிய இடத்திலிருந்து பேசுகிறார்கள் 
பெரியவர்கள் 
ஒன்றுமே சொவதில்லை 
உலகம் 
என்ற கவிதைக் கவனத்தைப் பெறும் கவிதைதாய் இருக்கிறது. 

'பாரதியையே 
இன்னும் 
கண்டெடுத்துக்கொண்டிருக்கிறோம் 
நகுலனுக்கென்ன அவசரம் 
நியாயத் தீர்ப்புக்கு...' 


என்ற இந்தக் கவிதை உள்ளார்ந்த அரசியலைப் பேசக்கூடியதாக இருக்கிறது. வெளிபடையான ஒரு நையாண்டிதனம் அதில் உள்ளது. அவரோடு உரையாடும் அனுபவம் வாய்த்திருந்தால் அவரின் இயல்பு நிலையைத் தெரிந்துக்கொண்டிருக்கலாம். காரணம் வாழ்வின் மீதானக் கோபத்தை, கோபத்தைக் காட்டாமல் நகைச்சுவையாகக் கடந்து செல்பவர்களால் 
மட்டுமே இது மாதிரியான கவிதைகளை 'Just Like That' பாணியில் சொல்லிவிட்டுப் போக முடியும். 


இந்தத் தொகுப்பில் 'காவல்' என்ற தலைப்பில் பா.தேவேந்திரபூபதி எழுதியிருக்கும் கவிதைச் சிந்திக்ககூடிய வகையில் அமைந்துள்ளது. முதலாளித்துவத்தை அவருக்கே உரிய பாணியில் சாடியிருக்கிறார். நேரடியாகப் புரிந்துக்கொண்டாலும் இது நல்லக்கவிதைக்கானக் கூறுகொண்டிருக்கிறது. அவர் இந்தப் பிரதியில் எழுதியிருக்கும் 3 கவிதைகளுமே நாயையே புனைவாகப் பயன்படுத்தியுள்ளார். அதனாலேயே அந்தக் கவிதைகள் கவனத்தைப் பெறக்கூடியதாக உள்ளன. 

லாவண்யா சுந்தரராஜன் என்பவரை இந்தத் தொகுப்பின் வழியே நான் காண்கிறேன். அவருடைய 'தனிமை' என்ற கவிதையைவிட 'அவமானத்தின் அழகு' என்ற கவிதை அழகாக அமைந்திருக்கிறது. மற்ற இரு கவிதைகள் சொல்வதற்கு எதுவும் இல்லை. 

யவனிகா ஶ்ரீராம் இந்தப் பிரதியில் 3 கவிதைகளை எழுதியுள்ளார். யவனிக்கா, அவரின் கவிதைகளில் நாம் சிந்திப்பதற்கான இடைவெளியை விட்டு வைத்திருப்பார். இதைதான் அவரின் கவிதைப் பேசுகிறது என்று ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. வாசகர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதத்தில் அதில் அர்த்தம் சொல்ல முடியும். யவனிக்காக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவர், அவரின் அந்தக் கவிதை கலையை உணரக்கூடியவராக ஆகிறார். 


'உடலின் ஒரு நடன விசை' என்ற கவிதையில் 
ஒரு நீர்ப்பாலம் அடியோடு சரிந்து மூழ்குகிறது 
என்று தொடங்கி 
நமது வீடு வெட்ட வெளியாகி விட்டாலும் கூட 
உண்மையில் இந்த அழகான முன்விளையாட்டை 
நாம் ஏன் தவற விட வேண்டும் 

என்று முடிக்கிறார். இடையில் கூறியிருக்கும் வரிகள் அனைத்தும் இந்த 4 வரிகளுக்கு வழுசேர்க்கும் சொற்கள்தான். 
படிகம் நவீனக் கவிதைகான இதழ் என்று கூறும் போது, யவனிக்காவின் 
கவிதைகள் அதற்கு ஏகப் பொருத்தமாகப் பலம் சேர்த்திருக்கிறது என்றுதான் சொல்வேன். 

மேலும், கவிதைகானப் புதிய முகங்களைப் படிகம் இதழ் அடையாளம் காட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக ஜெ.பிரான்சிஸ் கிருபா, காவனூர் ந.சீனிவாசன், வைகறை உள்ளிட்டவர்களைச் சொல்லலாம். 

படிகத்தின் மூன்றாவது இதழ் என் கைவசம் இல்லை என்றாலும் அதன் pdf கோப்பைப் 'படிகத்தின்' ஆசிரியர் ஆன்றா எனக்கு மின்னஞ்சல் செய்து உதவியிருந்தார். அவருக்கு இந்த வேளையில் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன். இவ்விதழில் கவிஞர் தேவதச்சனின் நேர்காணலும் ரெஜினா பானுவின் கவிதைகளும் மிக முக்கியமானதாக இருக்கிறது. 

ரெஜினா பானுவின் 'நீலப்பட்டு' என்ற கவிதையில் 
தங்கையின் பட்டுப்பாவாடையைச் சுற்றிக் கிறங்கி ஆடியத் தருணத்தில் 
நான் கண்டடைந்தவை எனக்கான ஆடைகள்' என்று தொடங்குகிறார். ரெஜினா பானு அனுபவித்து, வாழ்ந்து கடந்த அந்த வரிகளை  எதைகொண்டு  நாம் விமர்சனம் செய்திட முடியும். 

வார்த்தை என்ற கவிதையில் 

உடல் ஒன்றாய் 
மனம் வேறாய் 
இயற்கை எழுதிய கவிதை நான் 

ஆதியின்றி, அந்தமின்றி 
அன்றும் இருந்திருக்கிறேன், இன்றும் இருக்கிறேன் 
என்றும் இருப்பேன்.. 

என்று ரெஜினா பானு தொடங்கியிருக்கும் கவிதையில் 

எங்களை ஏளனப்படுத்தும் போது 
எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது 
நீங்கள் கைகழுவ முயற்சிப்பது 
கடவுளின் பிரச்னையை என்று 
முடித்திருக்கிறார். 

ரெஜினா பானு தான் சந்தித்த, தனக்கு நேர்ந்த அனைத்தையும் கவிதை மொழியில் சிறப்பாகவே கூறியிருக்கிறார். திருநங்கைகளின் பருவகால மாற்றங்களை முன்வைத்து 'ஒட்டுறுப்பு' எனும் நாவலை ரெஜினா பானு எழுதி வருவதாக ஒரு தகவல் இந்தப் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பிக்கைக்குறிய மேலும் எதிர்பார்ப்புக் குறியப் படைப்பாளராக ரெஜினா பானு நம்முன்னே வளர்ந்துவருகிறார். அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலையும் அவரின் கவிதைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. 


நிழல், ந.நாகராஜன், ஆகாசமுத்து ஆகியோரின் கவிதைகள் குறிப்பிட வேண்டியக் கவிதைகளாகும். 
மேலும் பல புதிய எழுத்தாளர்களுக்குப் 'படிகம்' களம் அமைத்துக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதன் வழியே எது கவிதை, எதுவெல்லாம் கவிதை என்ற வேறுபாட்டைப் பிரித்தரியக்கூடிய அல்லது உணர்த்தக்கூடிய பொறுப்பு அல்லது கடமைப் 'படிகம் இலக்கியக் குழுவிற்கு உள்ளது எனத் தோன்றுகிறது. 

கவிஞர் தேவதச்சனின் நேர்காணல் ஆரோக்கியமாக அமைந்திருக்கிறது. தேவதச்சனின் கவிதைகளில் நம்பிக்கைக் கொண்டிருப்பவர்களுக்கு அவரின் நேர்காணலில் புதிய விவரங்கள் கிடைக்கின்றன. அதைச் சொல்வதைக்காட்டிலும் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டும். 
"உலக நெருக்கடிகளில் கவிஞனின் பங்கு என்னவாக இருக்கும்"? என்ற கேள்விக்கு 
"ஒரே சமயத்தில் நாம் நினைவுக்குள் உள்ளேயும் வெளியேயும் இருக்கிறோம்.. நினைவுக்குள் உள்ள மனிதன் ஒரு வரலாற்று மனிதனாகவும், மிகப்பெரிய மனிதனாகவும் மிகப்பெரிய மனிதனாகவும் இருக்கிறான்.நினைவுக்கு வெளியில் உள்ள மனிதந்தான் சிருஷ்டி. கவிதையின் வேர்கள் அறியாதவற்றின் சிருஷ்டியில்தான் இருக்கிறது" 

என்கிறார் தேவதச்சன். மேலும் பல சிந்திக்ககூடிய பதில்களை அவர் தந்திருக்கிறார் என்றாலும் கேள்விகளைச் சரியாகப் பட்டியலிட்டுக் கேட்டிருக்கும் விதம் முக்கியமானதாக இருக்கிறது. 

படிகத்தின் 4-வது இதழ் உண்மையில் மிக முக்கியமான இதழாகவும் முன் குறிப்பிட்ட இரு இதழ்களைவிடப் பார்வைக்கும் உள்ளடக்கத்திற்கும் நிறைவாக வந்திருந்தது. 

அட்டைப்படம் விக்ரமாதித்தன் மற்றும் ஜெயமோகன் ஆகியோர்ச் செய்திருக்கும் கவிதை விமர்சனத்தைப் பிரதி உள்ளடங்கியிருப்பதைக் காட்டியது. பிரதியின் ஆசிரியர் ஆன்றா, தலையங்கத்தில் 'காற்றுத் தனக்கான பாதையில் பயணித்துக் கொண்டேயிருக்கும். வாசம் எதைப்பற்றியும் கவலைக் கொள்வதில்லை' என்று எழுதியிருக்கிறார். படிகம் அப்படியான பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டதை இதைவிட அழகாகச் சொல்ல முடியாது. 

லஷ்மி மணிவண்ணனின் கவிதைப் பெண்கள் என்ற தலைப்பில் விக்ரமாதித்யன் எழுதியிருக்கும் கவிதைப் பார்வை மிகவும் விசாலமானது. அது கவிதையை விளக்குவதற்காகப் பிரித்து மேயும் ரகம் கொண்டது. ஆய்வு என்று அதைக் கூறமுடியாது. 

லஷ்மி மணிவண்ணனின் கவிதைகளில் புனைவுக் கூட்டி, புரியாமை, மயக்கமான சொல்முறை இருண்மையைத் தோற்றுவிக்கிறது என்று ஓரிடத்தில் விக்ரமாதித்யன் குறிப்பிடுகிறார். அப்ப்படியே சொல்வதில் சாரம் இராது என்ற விளக்க்கத்தையும் அவரே நமக்குத் தந்தும் விடுகிறார். மேலும், எதார்த்தமான ஒன்றை எதார்த்தமாகச் சொல்வதில் ஒன்றுமில்லை என்று நினைக்கும் கவிஞர்கள் இதுபோலப் பேசுகிறார்கள் என்றும் கூறுகிறார். அது அப்படியா என்ற விளக்கத்தை லஷ்மி மணிவண்ணனே கொடுத்தால் சரியாக இருக்கும் என்றுதான் எனக்குத் தோன்றியது. 
லஷ்மி மணிவண்ணன் பெண்களை முன்னிருத்தி எழுதியிருக்கும் 5 கவிதைகளை அவர் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

'பட்டணத்து ரயிலை மட்டும் கிராமத்தை நோக்கிக் கொண்டு வந்து சேர்த்தாள்' என்ற எஸ்.சுந்திரவல்லியின் கவிதைத் தொகுப்பை ந.பெரியசாமி விமர்சனம் செய்திருக்கிறார். வீட்டில் வளர்க்கும் கால்நடைகளைத் தமது கவிதையில் சுந்திரவல்லிப் பதிவுச் செய்திருப்பதை ந.பெரியசாமி வாழ்வியலோடு ஒப்பிட்டு எழுதியிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. மண் வாசனைக்குறியக் கவிதைகளாக இருக்குமோ என்ற ஆவல் ஏற்படவும் செய்கிறது. 

கவிஞர் பெருந்தேவியின் கவிதைகள் எப்பவும் எனக்குப் பிடித்தமானவையாக இருக்கின்றன. அதிலும் இந்தப் பிரதியில் நச்சென்று 3 கவிதைகளைத் தந்திருக்கிறார். 

நினைப்புக்குப் பத்துத் தலை 
இதமாகப்பதமாக 
ஒவ்வொன்றாகக் 
கொய்யவேண்டும் 
மெல்ல எடுத்து 
(காற்றும் காணாத) 
பிளாஸ்டிக் உறையில் 
வைத்துச் சுற்றி 
இறுகக்கட்டி 
தூர எறிய வேண்டும் 
வேண்டுமென்கிற 
தலையும் சேர்த்துதான்... 

'யோசனை' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் இந்தக் கவிதை வாசகனுக்கு மிக அருகில் வந்து அமர்ந்துகொள்ளும் ரகம் கொண்டது.

இந்தப் பிரதியில் கே.ராஜதுரை அவர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளது கவிதை ரசிகர்களுக்கு விருந்து என்றுதான் சொல்ல வேண்டும். 4 கவிதைகளை அவர் தந்துள்ளார். 

'விடியலுக்காக' என்ற கவிதையில் 

ஓர் இரவைக் கடக்க 
பல இரவுகள் சாய்ந்து கொண்டிருக்கின்றன... 
///// 
பல நாள் இரவுகளை 
ஒரே நாள் இரவில் 
சுமந்து செல்கிறேன் 
விடியலுக்காக' 

என்ற கவிதை மிக அழகாகவும் எளிமையாகவும் விடியலைப் பேசுகிறது. 'விருட்சம்' என்ற கவிதையும் 'அச்சு அசல்' என்ற கவிதையும் விடியலையே பேசினாலும் 
'கட்டி முடிக்கப்பட்ட மணல் வீடுகள் 
அலைகளுக்குத் தீனியாகிக் கொண்டிருக்கின்றன' என்ற வரி விடியலுக்குள் இருக்கும் இருண்மையைப் பேசிச்செல்கிறது. 

அனார் எழுதியிருக்கும் ஒற்றைக்கவிதை இந்தப் பிரதியில் கடைசிப் பக்கத்தை அலங்கரிக்கிறது. தன்னைச் சுட்டுக்கொள்ளும் தீ என்ற அந்தக் கவிதை, தன்னைத் தானே சுட்டுத் தீய்கிறது என்பது உண்மைதான். 

எஸ்.சுதந்திரவல்லி, நட்சத்திரன்,பைசல் ஆகியோரின் கவிதையும் நன்றாகவே வந்திருக்கிறது. 
இந்தப் பிரதியில் லஷ்மி மணிவண்ணன் 5 கவிதைப் புத்தகங்களின் விமர்சனங்களைச் செய்திருக்கிறார். அதில் லீனாவின் அந்தரக்கன்னி, தேவிந்திரப் பூபதியின் நடுக்கடல் மௌனம் ஆகிய கவிதைத் தொகுதிகளுக்கு விமர்சனம் அவசியமில்லை. அவர்களின் கவிதைகள் பலரால் பலமுறை விமர்சனம் செய்யப்பட்டதுதான். ஆனால், கண்டராதித்தன், லாவண்யா சுந்தரராஜன், தி.பரமேசுவரி, ஆகியவர்களின் கவிதைப் புத்தகங்கள் விமர்சனத்துக்கு மிகத் தேவையான ஒன்று. 

பத்து வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்திய கவிதைப் புரட்சியில் அடையாளம் கண்ட அதே கலைஞர்களைதான் இன்னும் கவிதைப் புரட்சிச் செய்பவர்களாக அடையாளம் கூறுகிறோம். தற்போது எழுதிவரும் புதியவர்களை அடையாளம் காணுதல் என்பது வெளிநாட்டில் வசிக்கும் என்னைப்போல உள்ளவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. 
இன்னும் சொல்லப்போனால் அங்கே இருப்பவர்களுக்கும் இந்த கலைஞர்களை தெரிகிறதா என்றும் தெரியவில்லை. அந்த வகையில் லஷ்மி மணிவண்ணன் அடையாளம் கண்டு பதிவு செய்திருக்கும் கலைஞர்கள் மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். 

படிகத்தின் அக்டோபர் மாத இதழில் நான் மிக முக்கியமாகவும் தேவையாகவும் உணர்வது ஜெயமோகன் எழுதிய திருமாவளவன் கவிதைகள் குறித்தான விமர்சனத்தைதான். திருமாவின் படைப்புகளையும் அவரின் கவிதைகளையும் மதிக்கும் அதே வேளையில் ரசிக்கும் ஒரு வாசகி என்ற முறையில் ஜெ.மோ எழுதிய இந்த விமர்சனம் எனக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. திருமாவின் கருப்புப் பூனை உலாவும் அவரின் கவிதைகளை ஜெ.மோவும் கோடிக் காட்டியிருக்கிறார். திருமாவின் 'பசி' என்ற கவிதையில் வரும் சாம்பல் பறவையும் கருப்புப் பூனையும் எதன் குறியீடு என்பது அவரோடு நெருங்கிப் பழகியவருக்குத் தெரியும். ஆனால், ஒரு கவிதை வாசிப்பாளனுக்கு அந்தக் கவிதையில் ஏற்படும் உள்ளுணர்வு வேறுமாதிரியாக இருக்கலாம். ஜெ.மோ  கவிதையைக் குறித்தும் திருமாவைக்க்குறித்து எழுதியிருந்தது  'படிகம்' மாதிரியான நவீன இழக்கிய இதழ்க் கலைஞர்களுக்குச் செய்யும் மரியாதையாகவே நினைக்கிறேன். 


ஜனவரித் தொடக்கத்தில் படிகம் 5-வது இதழ் அழகிய புத்தக வடிவிலேயே வந்திருக்கிறது. படிகம் வாசகர்களுக்கு இதுவே சிறந்த புத்தாண்டு பரிசு என்பதில் சந்தேகமில்லை. அதுவரை 10 ரூபாய், 20 ரூபாய் என்று இருந்த இதழ் 50 ரூபாய்க்குத் தரத்திலும் படைப்பிலும் பலம் பொருந்தி வந்திருக்கிறது. 

இதற்கு முன்பு வந்த 4 இதழ்களின் குறைநிறைகளைப் பரீசிலித்து மிக நேர்த்தியாக வந்திருக்கிறது படிகம் 5-வது இதழ். அட்டையோடு சேர்த்து 86 பக்கங்கள். ஒவ்வோருப் பக்கமும் மிக முக்கியமானதாக இருக்கிறது. சிவசங்கர் எழுதியிருக்கும் சமகாலச் சீனக் கவிதைகள், நவீனப் பெண்கவிஞர்கள் குறித்துக் காஞ்சனா எழுதியிருப்பது ஷங்கர் ராமசுப்ர மணியன் கவிதைகளைக் குறித்து விக்ரமாதித்யன் எழுதியிருப்பது, தேவதச்சன் கவிதைகள் பற்றி ஜெ,மோகன் எழுதியிருப்பது, விக்ரமாதித்யன் கவிதைத் தொகுப்புக் குறித்துக் கே.ராஜதுறை எழுதியிருப்பது என அனைத்தும் மிக முக்கியமான பதிவுகள். 

போகன் சங்கர்க் கவிதைகள், ஜீனத் நசீபாக் கவிதைகள், லஷ்மி மணிவண்ணன் கவிதைகள் கவனத்தை மற்றும் விமர்சனத்திற்குத் தகுந்த கவிதைகளாக உயிர் பெற்றிருக்கின்றன. தேவதச்சன் கவிதைகள் இந்த இதழுக்கே அழகைச் சேர்க்கும் விதமாக இருக்கிறது. நான் அவரின் ரசிகை. அதற்கு எந்தக் குறையும் அவர் வைக்கவில்லை. புதிய படைப்பாளர்கள் அல்லது எனக்கு அறிமுகம் இல்லாத படைப்பாளர்களின் கவிதைகளும் உள்ளன. சில கவிதைகள் இன்னும் செறிவுப் படுத்தியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஆனால், படைப்புச் சுதந்திரம் அந்தக் கலைஞருக்கே உரியது என்பதையும் மறுக்கவில்லை. 

இதுவரை வந்த இதழ்களைக்காட்டிலும் இதுவே அதிகப் பக்கங்கள் கொண்டது. மேலும் புத்தக வடிவிலும் அது மாற்றத்தைக் கொண்டுள்ளது என நான் தொடக்கமே கூறியிருக்கிறேன். இந்த வடிவம் 'படிகம்' இதழுக்குப் பொறுத்தமான வடிவமாக இருக்கிறது. பல முக்கியப் படைப்பாளர்களின் விமர்சனம் படைப்புகள் கொண்டிருக்கும் 'படிகம்' இதழ்க் குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள்ளாகவே இயங்காமல் பரவலாக நாடு கடந்தும் அறியப்பட வேண்டும் என ஆவல் கொள்வதுடன் படிகம் குழுவிற்கு இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். 

நன்றி 
ஜனவரி 2016 



திங்கள், 4 ஜனவரி, 2016

இந்திய குடிசை – (குறு நாவல்) பெர்னார்தன் தெ சேன்பியர்.
விமர்சனம் – யோகி


'இந்திய குடிசை' என்ற குறுநாவல் வாசிக்கும் முன்பு அது பார்ப்பனிய சமூகத்தின் ஆதிக்கத்தை  பேசும் நாவல் என்று மட்டுமே நினைத்திருந்தேன். ஆனால், நாவலை வாசித்து முடிக்கும் போது அது பெண்ணிய நாவலாகவும் அடையாளப்படுத்தக்கூடியது என்பதையும் நான் உணர்ந்தேன்.

நாவலின் 62-வது பக்கத்தில் ஒரு பார்ப்பனிய விதவை பெண்ணுக்கும், பறையன் ஒருவனுக்கும் நடக்கும் உரையாடல் இது.

"துயருள்ள மனிதனே! நீ என்னிடம் காதலைப் பற்றி கூறுகிறாய். இன்னும் சற்று நேரத்தில் நான் உயிரோடு இருக்க மாட்டேன். இப்பொழுதான் இறந்துவிட்ட என் கணவருடன் என் தாயைப் போல நான் சிதைக்குச் செல்ல வேண்டும். அவர் வயது  முதிர்ந்தவர். நான் குழந்தைப் பருவத்தில் அவரை மணந்து கொண்டேன். விடைபெற்றுக் கொள். விலகிப் போய்விடு. இன்னும் மூன்று நாட்களில் நான் ஒரு பிடி சாம்பலாய் விடுவேன்.!"

"ஏழைப் பார்ப்பனப் பெண்ணே! சமூகம் உனக்குத் தந்த தளைகளை இயற்கை உடைத்தெறிந்து விட்டது. மூடக் கொள்கையின் கட்டுகளை நீ முறித்தழித்துவிடு. என்னைக் கணவனாகக் கொண்டு நீ அங்ஙனம் செய்யலாம்."

அப்பொழுது அவள் பெருமூச்செறிந்து, தன் தாயின் சாம்பல் குழியை உற்று நோக்கினாள்; பின் வானத்தைப் பார்த்தாள்;  அதன் பிறகு தன் கைகளுள் ஒன்றை அவன் கையின் அமர்த்தினாள்.

இப்படியாக கதையின் இறுதி கணங்கள் நகரும் போது, 1737-1814 காலக்கட்டத்தில்  ஆன்றி பெர்னார் தந்தெசேன்பியரின் நேரடி பார்வையில் பதிவு செய்த இந்திய பார்ப்பனிய ஆதிக்கத்தையும் தாண்டி, சாதாரண மக்களின் கணமான வலி நிறைந்த வாழ்வியலையும் காட்சி படுத்துகிறது.

பிரிட்டிஷ் நிர்வாகத்தினால் 3 கேள்விகளுக்கு விடை அறிந்துவர இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறார் ஒரு பண்டிதர். மூன்றாண்டுக்குப் பிறகு தமக்கான கேள்விக்கு பதில் அறியும் பொருட்டு இந்தியாவில் மிகவும் புகழ் மற்றும் செல்வாக்கு மிக்க ஜெகந்நாதத்து அந்தணர்  என்பவரை சந்திக்கச் செல்கிறார்.  அங்கே அவர் சந்தித்த பல கசப்பான சம்பவங்களையும் பார்ப்பன ஆதிக்க செயல்பாட்டையும் மிக தெளிவாக பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர்.

கதை பேசும் அந்தக் காலக்கட்டத்தில் பிராமணர்கள் எத்தனை செல்வாக்குடன் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் காட்டப்படுகிறது. பிரிட்டிஷ் பண்டிதர் ஜெகந்நாதத்து அந்தணரை பார்க்க அவரின் இடத்திற்கு சென்று காத்திருக்கிறார். ஆங்கிலேய பண்டிதர் தனது பாராட்டை தெரிவிக்க அந்தணர் அருகில் செல்ல நினைக்கும்போது 9 பாய்களுக்கு அப்பாலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்.

உமாராக்கள் என்னும் இந்தியப் பெருந்தகைகள் அவற்றைக் கடந்து போவதில்லையென்றும், இந்திய அரசர்கள் ஆறு பாய் அளவு செல்லலாம் என்றும், முகலாய  இளவரசர்கள் மூன்று பாய் அளவுக்கும், முகலாய மன்னன் மாத்திரம் அந்தணத் தலைவர் அருகில் சென்று அவர் கால்களை முத்தமிட உரிமை பெற்றிருக்கிறார் என்று அவருக்கு விளக்கமளிக்கப்படுகிறது.

இந்த விளக்கத்தால் ஆங்கில பண்டிதருக்கு பெருத்த ஏமாற்றமும் சங்கடமும் ஏற்பட்டாலும் தமது கேள்விகளுக்கு பதில அறிய வேண்டிய அமைதியாக இருக்கிறார்.

பண்டிதர்   : “உண்மையை எவ்வழியாக கண்டறியலாம்?”
தலைமை அந்தணர் : “ அதன் நுட்பம் அந்தணர்களுக்குதான் தெரியும்.”

பண்டிதர்  : “உண்மையை எங்குப் போய்த் தேட வேண்டும்?”
தலைமை அந்தணர்  :  "அது அந்தணர்களுக்கு மட்டும்தான் தெரியும்.”

 பண்டிதர்  : “உண்மையை மக்கட்குத் தெரிவிக்க வேண்டுமா?”
தலைமை அந்தணர்  : “அந்தணர்களுக்கு மட்டுமே உண்மையை அறிவிப்பது கடமையாகும்.”

ஆங்கில பண்டிதருக்கு சினம் ஏற்பட்டு, கடவுள் நேர்மையற்றவன் என்றும் உண்மையில் அந்தணர்கள் நேர்மையற்றவர்கள் என்கிறார். பின் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆங்கில பண்டிதர்  அங்கிருந்து கிளம்புகிறார். அவருக்கு கிடைக்ககூடிய பரிசு பொருள்கள் அனைத்தும் மறுக்கப்பட்ட வேளையில் அது தமக்கு தேவையில்லை என கூறுகிறார். அவர்  தண்ணீர் அருந்திய  மண்பாண்ட குவலை  உடைக்கப்படுகிறது.

தன் பயணத்தை தொடரும்போது இரவை கழிக்க வேண்டிய சூழலிலும் மோசமான காலநிலையிலும் பயணம் செய்கிறார் ஆங்கில பண்டிதர். இந்நிலையில் மறைவான ஓர் இடத்தில் குடிசை ஒன்றை காண்கிறார். உடன் வந்த கூலியால் அங்கு போகாதே "பறையன், பறையன்"  என ஆங்கில பண்டிதரை எச்சரிக்கிறான்.

ஏதோ காட்டு விலங்காக இருக்குமோ என்ற அச்சத்தில் ஆங்கில பண்டிதர் கைத்துப்பாக்கியை எடுக்கிறார். பின் பறையன் என்பதற்கு பொருள் என்ன என்ன? என வினவுகிறார்.
நம்பிக்கையும் சட்டமும் இல்லாதவன் என்றும் அவன் மிக இழிவான குலத்தைச் சேர்ந்தவன் என்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

ஆங்கில பண்டிதனை மட்டுமல்ல  நாவலை வாசிக்கும் நம்மையும் புருவத்தை சுறுங்கச்செய்கிறது இந்த வரிகள். அதன் பிறகு,  பறையனுக்கு இழைக்கப்படும் அநீதிகள் யாவும், பிராமணர்களுக்கு நீதியாக வரையருக்கக்கூடிய சட்டங்கள் பட்டியலிடப்படுகிறது.
குறிப்பாக பறையனால் தீண்டப்பட்ட மாத்திரத்திலேயே அவனைக் கொன்று விடுவதற்கு பிராமணர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது எத்தகைய தீவிரவாதம் என்பதை எனக்கு சொல்லத் தெரியவில்லை.

ஆனால், ஆங்கில பண்டிதர் பறையன் வீட்டிற்குள் சென்று இரவு முழுவதும் தங்கி, அவனின் விருந்தோம்பலை ஏற்று அவர்களுக்குள் நடக்கும் உரையாடலே மிச்சக் கதை.
அதுவே இந்தக் நாவலின் முக்கிய அம்சமாகவும் சாரமாகவும்  இருக்கிறது.

ஒருக்கட்டத்தில் நீங்கள் இந்தியர் இல்லை என்பதால் எனது விருந்தோம்பலை வெறுக்க மாட்டீர்கள் என பறையன் சொல்வது இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

தொடர்ந்து, தாம் கொண்டு வந்த கேள்விகளுக்கு பறையனிடம் பதில்கள் இருக்கும் என்ற நம்பிகை பண்டிதருக்கு ஏற்படுகிறது. ஏன் அப்படியான நம்பிக்கை ஏற்பட வேண்டும்? உண்மையில் அந்த ஆங்கில பண்டிதருக்கு தேவையான பதில் கிடைத்ததா?
பறையன் அந்தக் கேள்விகளுக்கான பதிலை வைத்திருந்தாரா? வேறு அங்கு என்னவெல்லால் நடந்தது?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் சில ஏடுகளிலேயே நாம் தெரிந்துக்கொள்ளலாம். அதற்கு 'இந்தியக் குடிசை' குறுந்நாவலை வாசிக்க வேண்டும்.
இது ஒரு தீவிரமான நாவலாக இருந்தாலும் பல இடங்களில் கிண்டல் மேலிடுகிறது. அதை வாசிக்கும்போதுதான் உணர முடியும்.


இந்தப் புத்தகத்தை மிகவும் பொறுமையாக வாசிக்க வேண்டியது முக்கியமாக இருக்கிறது. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி அவ்வாறனது. மொழி ஆலுமைகளுக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் இருக்கலாம். 1790-ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் எழுதிய புத்தகத்தை 1967 ஆம் ஆண்டு இரா.தேசிகப் பிள்ளை மொழி பெயர்த்துளார். இந்த நாவலை தமிழாக்கம்  செய்திருக்கும் இரா.தேசிகப்பிள்ளை உண்மையில் போற்றுதலுக்கு உரியவர்தான்.

பறையனும் பண்டிதரும் பேசிக்கொண்டிருக்கும்போது ஓரிடத்தில்  “உண்மை என்பதை ஒவ்வொரு மனிதனும் தேடி கண்டடைய வேண்டும். அவ்வாறு அறியப்படுவதுதான் அறிவு” என்று விளக்கமளிக்கிறார் பறையன். உண்மை என்பதை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதற்கான பதில் அறிவுடன்
 இன்னும் மண்டி போட்டு கிடக்கிறது.

தலைப்பு: இந்திய குடிசை (குறுநாவல்)
பிரெஞ்சு மூலம்: பெர்னார்தன் தெ சேன்பியர்,
தமிழாக்கம் – இரா.தேசிகப்பிள்ளை,
வெளியீடு – திராவிடர் கழகம்,



புதன், 16 டிசம்பர், 2015

என்ன சு..னிக்கு என்று ஏன் பாடலை எழுதவில்லை சிம்பு.... ??


இந்த வாரத்தில் மிக அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தைப் பீப் மற்றும் பு..டை என்றுதான் நினைக்கிறேன். எங்குப் பார்த்தாலும் அந்தக் காவிய வார்த்தைகள் காற்றில்கூடக் கலந்து வரமாதியே இருக்கு. சட்டெனச் சொல்லக் கூசும், வசையின் போது மட்டுமே பேசப்படும் அந்த வார்த்தை இன்று எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆண்-பெண் என இரு பாலரும் பேசுவதற்குச் சிம்பு - அனிரூத் கூட்டணிப் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள்.

எனது தனிப்பட்ட கவலை, இவர்களின் கழிப்பட்ட இந்தப் பொறுக்கிச் தனத்திற்கு அவர்களின் வீட்டுப் பெண்களைச் சந்திக்கு இழுத்ததுதான். சிம்புவின் அம்மாவான உஷா, திருமணத்திற்கு முன்பான வாழ்கையைப் பற்றி ஒரு செய்தி நிறுவனம் எழுதியிருக்கிறது. பீப் பாடலுக்கு அபிநயம் பிடித்து அனுப்புமாறுச் சிம்பு-அனிருத் அம்மாக்களுக்குக் கோரிக்கை வைக்கப்படுகிறது. இன்னும் என்னென்ன இருக்கு என்று தேடிப்பார்க்க, பு..டையுள்ள எனக்கு மனம்- உடல் இரண்டும் கூசவே செய்கிறது.

இந்தப் பிரச்னைத் தொடர்பாகப் பல எதிர்வினைகள் எழுதப்பட்டு விட்டன. அனைத்திலும் கொற்றவை எழுதிய பதிவு அல்லது எதிர்வினை அதில் மிகவும் முக்கியமானது. ஆனால், அறத்தை முன்வைத்து, அந்தக் குடும்பத்துப் பெண்களை வசைப்பாடியிருப்பது (என் வரையில்) என்னமோ வேதனையளிக்கிறது. இந்தப் பொறம்போக்குகள் செய்யும் வசைகளுக்குகூட அந்தக் குடும்பத்துப் பெண்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

இம்மாதிரியான பீப் பாடல்கள் தொடக்கத்தில் வெளியாவதற்கான வழியினைத் திறக்கும் போது, மூடுவதற்கான குரல்கள் அப்போதே காந்திரமாக ஒலிக்காமல் போனது ஏன்? ஒலித்த ஓர் இரு குரல்களும், அனிருத் போட்ட டப்பா இசையில் டான்ஸ் ஆடிவிட்டதும் மறுப்பதற்கில்லை.


வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா... ஒரு கல் ஒரு கண்ணாடிப் படத்தில் வந்த இந்தப் பாடலிருந்துதான், பெண்களை வெளிப்படையாகத் திட்டக்கூடிய பாடல்கள் அதிகம் வர ஆரம்பித்தன என நினைக்கிறேன்.

பிறகு, தனுஷ்
அடி டா அவள,
விடு டா அவள,
வெட்ரா அவள,
தேவையே இல்லை- னு

எழுதிய பாடல் சூப்பர் ஹிட். இந்த மாதிரியான கொலை வெறிப் பாடல்களைப் பொது நிகழ்சிகளிலும், ரியால்டி ஷோக்களிலும் பாடும்போதும் ஆடும்போதும் ரசித்தவர்களில் பெண்களும் இருக்கிறார்கள். ‘எவண்டி ஒன்னை பெத்தான், அப்பன் கையில கிடைத்தால் செத்தான்’ என்ற பாடல் வரிகளைக் கண்டித்து ஏன் அப்பாக்கள் பொங்கி எழவில்லை. பெண்களை (மகள்களையே) ரசிக்கும்படி செய்யும் சிம்புவும் வக்கரப் புத்தி அங்கு வெற்றி பெற்றுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்தப் பாடலையும் ஹிட்டாக்கிவிட்ட பெருமையில் நமது பெண்களுக்கும் நிறையப் பங்கு இருக்கிறது. இளம் வயது பெண்களுக்கு இந்தப் பாடல்களில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை போல.
உண்மையில் இப்படிப்பட்ட கழிச்சடைகளைப் பெற்றதற்கு அந்த வீட்டுப் பெண்களைவிட, ஆண்களைக் கேள்வி கேட்பதுதான் சரியாக இருக்கும். சிம்புவின் அப்பா பெண்களைத் தொடவே மாட்டார். ஆனால், அவர் படத்தில் ஒரு கலவி பாடல் இல்லாமல் இருந்ததில்லையே. அவர் செய்ய நினைப்பதை, சக நடிகர்களை வைத்துச் செய்து காண்பதில் வெற்றி பெற்றவர்தானே டி.ஆர்

ஹேய்ப் பொண்டாட்டி, எனக்குத் தேவையில்லை வைப்பாட்டி என மனநோயாளியான சிம்புவுக்கு அப்பவே டி.ஆர் சிகிச்சை எடுத்திருந்தால் ஏன் பு..டை பாடல்கள் வருகிறது? அனிருத் போன்ற நேற்று முளைத்த காளான்கள், இசை என்ற போர்வையில் ஏன் ஆபாச இசையை இசைக்கப் போகிறார்கள்?

அந்த வீட்டுப் பெண்களிடம் அனுமதிக் கேட்டு இந்தத் தருதலைகள் 150 பாடலை வடிவமைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்தப் பொறுக்கிகள் செய்யும் பொறுக்கித் தனத்திற்குகூட அந்த வீட்டுப் பெண்களைதான் சந்தியில் நிற்க வச்சுக் கேள்வி கேட்கிறோம்.

சிம்புவின் அப்பா சென்னைப் போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாகச் செய்தி அறிந்தேன். இது முழுமையாகாத டம்மிச் சொல் கொண்டு எழுத்தப்பட்ட பாடல் என்று அந்தத் தாயுமானத் தந்தை சொல்லியிருக்கிறார். முழுமையாகாதப் பாடலே இந்த லட்சணம் என்றால்,முழுமையான பாடல் என்னமாதிரியான வரியில் இருக்கும். தப்புச் செய்ததை விட அதைத் தூண்டனவனுக்குதான் தண்டனை அதிகம்னுச் சொல்லுவாங்க. இப்போது அதற்கு ஆதரவாகத் திருவாய் மலர்ந்த டி.ஆரை என்ன செய்யலாம்.
நியாயப்படி அந்தப் பாடலுக்கான முத்திரைகளை இந்தப் பண்ணாடைகளை பெற்ற தகப்பன் சாமிகள்தான் பிடிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பீப் பாடலில் ‘உன்னை டார் டாராக் கிழிச்சு ஓத்துட்டுப் போனவள’ என்ற வரியும் இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம்தான் சிம்புவிடம் கேட்கத் தோணுது. என்ன பு..டைக்கு லவ் பண்ற என்பதற்குப் பதில் என்ன சு..னிக்கு லவ் பண்றோம்? என்று எழுதியிருந்தால் அந்தப் பாடல் எப்படி வந்திருக்கும்? அதற்கான எதிர்வினைகள் எப்படி எழுதப்பட்டிருக்கும்? சொல்லப்போனால், மார்கழி மாதத்திற்குப் பொறுத்தமான வரியும் அதுதானே சிம்பு..