ஞாயிறு, 19 அக்டோபர், 2014

கடாரம் ராஜேந்திர சோழனுடையதா? 4

‘எது மறைக்கப்படுகிறதோ அது பாவம், வெளிப்படுவதே புண்ணியம்'





(சென்ற வாரத் தேடலில்)

கூடாரத்திற்குக் கீழ் இருக்கும் அந்த வரலாற்றுப் பெட்டகங்கள் அனைத்தும்,  அகழ்வாராய்ச்சி  செய்தும், செய்துமுடிக்காத நிலையிலும் இருந்தன. பலத்த பாதுகாப்புடன் பாதுகாவலர்கள் இருந்தார்கள். பார்வையாளர்கள் வந்தால் விளக்கம் கொடுக்க நமது நாட்டைச் சேர்ந்த ஓர் அலுவலக அகழ்வாராய்ச்சியாளர் மாணவர் இருந்தார். நான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.  எனக்கு வேண்டிய தகவல்களை அவர் தந்தார். அனைத்தும் அதிர்ச்சிதரும் தகவல்கள்தான். ஒரு வரலாற்றுப் பொக்கிஷத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு என்ன என்ற கேள்வியே என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது. (இனி)

எனக்குக் குறிப்புகளை வழங்கிய அந்த அலுவலக அகழ்வாராய்ச்சியாளர் மாணவியின் பெயர் ஷேஹா. தற்போது அகழ்வாராய்வு நடந்துகொண்டிருக்கும் இந்த 43 சண்டிகளான பொக்கிஷங்களை பாதுகாத்து, குறிப்பு எடுத்து வைப்பதற்கான அலுவலகம் ஒரு பலகை கொட்டகையாக இருந்ததே எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த சங்கடம் அந்த மாணவிக்கு இருந்ததா என்று தெரியவில்லை.  மலேசியாவின் மிகப்பெரிய அகழ்வாராய்வுப் புதையலாக அறியப்படும் இந்த சண்டிகளின் நிலையை எண்ணிவாறு  நான் ஷேஹாவிடம் கேள்விகளை கேட்கத்தொடங்கினேன்.

யோகி:இங்கு எத்தனை சண்டிகள் தற்போது அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன?

ஷேஹா: 43 சண்டிகள். இன்னும் 90-க்கும் அதிகமான சண்டிகள் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தாமல் இருக்கின்றன.

யோகி: இந்த சண்டிகள் பூஜாங் சமவெளியோடு தொடர்பு கொண்டிருக்கிறதா?

ஷேஹா: ஆமாம். இங்கு கிடைத்திருக்கும் அதற்கான ஆதாரங்கள்  இந்த கூற்றுக்கு வலுசேர்க்கின்றன. மேலும் இந்த பூஜாங் பள்ளத்தாக்கு பலநூற்றாண்டுகள் மாபெரும் வர்த்தக சந்தையாக புகழ்பெற்று இருந்திருக்கிறது. அதோடு இங்கு கிடைத்திருக்கும் சில பொருள்கள் கி.பி.670-களில் வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. 

யோகி: இந்த நிலப்பகுதியில் என்னென்ன பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன?

ஷேஹா: மணிகள், மண்பாண்டங்கள், செராமிக் பொருள்கள் என 4-ஆம் அல்லது 5-ஆம் நூற்றாண்டு காலத்து பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவை ஆராய்ச்சிக்கூடத்தில் வைக்கப்படுள்ளன.

யோகி: எப்போது இங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது?

ஷேஹா: தற்போது இருக்கும் அதிநுட்ப நவீன கருவிகளால் இது பண்டைய காலத்து பொருள்கள்தான் என்று  உறுதியாக கூறும் அளவுக்கு அகழ்வாராய்வு துறை வளர்ச்சியடைந்து உள்ளது. அதுபோன்ற நவீனக் கருவிகள் மூலமே இங்கு இருக்கும் சண்டிகள் அகழ்வாராய்வு பொக்கிஷங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு இதுபோன்ற கருவிகள் சுற்றியிருக்கும் பொக்கிஷங்களையும் அடையாளம் காணவல்லது. இப்படி 2007-ஆம் ஆண்டுக்கு முன்பே இங்கு வரலாற்றுப்புதையல் இருப்பது அடையாளம் காணப்பட்டு,  முறையாக திட்டம் வரையப்பட்டது.  அதன்பிறகு 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழ்வாராய்வு 2009-ஆம் ஆண்டு வரை நடந்தது. இப்போது அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மீண்டும் தொடரலாம். 

யோகி: இதற்கு யார் யார் ஆதரவு அளிக்கிறார்கள்?

ஷேஹா: மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவனராக இருந்து செயல்படுவதோடு, தேசியப் பாரம்பரிய  இலாகா ஆதரவளிக்கிறது. 

யோகி:ஏன் 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு அகழ்வாராய்வு நிறுத்தப்பட்டது?

ஷேஹா: காரணம் அகழ்வாராய்வு செய்வதற்கு மாணவர்கள் தற்போது  இல்லை. மாணவர்கள் வரும் பொழுது மீண்டும் அகழ்வாராய்வு தொடங்கும். 

அகழ்வாராய்ச்சி மாணவியும் தற்போது இந்த சண்டிகளின் பொறுப்பாளினியுமான ஷேஹா சொன்னது உண்மையில்  அதிர்ச்சியான ஏற்றுக்கொள்ள மறுக்கும் தகவல்கள்தான். 4-ஆம், 5-ஆம் நூற்றாண்டு பொக்கிஷங்கள் என்றுக்கூறப்படும் இந்த  அரிய சண்டிகளை அகழ்வாராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்வது எவ்வாறான எதிர்வினையைக்  கொண்டுவரும் என்பதை கணிக்க முடியவில்லை. அதோடு, அகழ்வாராய்ச்சி மாணவர்கள் வரும்வரை காத்திருக்கும் சண்டிகளின் எதிர்காலம் குறித்து நிறையக் கேள்விகளும், அதுகுறித்த கவலையும் எழவே செய்கின்றன. என்னைப்போன்ற வரலாற்றுத் தேடல் கொண்டவர்களுக்கு புதைகுழியிலிருந்து வெளிவராத பொக்கிஷங்கள் இன்னும் அகாலக் குழிக்குப் போய்விடுமோ என்ற அச்சமே மேலெம்புகிறது.
வெண்கலத்தால் ஆன புத்தர் சிலை
சோழன் வென்றதாகக் கூறும் கடாரத்தில் வங்காளத்தின் தாக்கம் நிறைய  இருப்பதாகக் கூறுகிறார்கள். அதற்கு சான்றாக வெண்கலத்தால் ஆன புத்தர் சிலை ஒன்றும் மியூசியத்தில் உள்ளது. சோழன் சண்டிகள் என்று சொல்லக்கூடிய கோயில்களை நிருவினான் என்றால் புத்தர் சிலைகள் அங்கு இருப்பதற்கான  காரணம் என்ன?  இங்கே நான் குறிப்பிடவிரும்பும்  மற்றொரு தகவல் என்னவென்றால் சோழன் கட்டியதாக நம்பப்படும் சண்டிகள் புத்த வழிப்பாட்டு தளங்களாகவும் இருக்கலாம் என நம்பப்படுவதும்தான். இதனால்,ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இனத்தின் தாக்கமும் செல்வாக்கும் கடாரத்தை ஆட்டிப்படைத்திருக்கும் என்ற சந்தேகம் இங்கு வலுப்பெறுகிறது.
கடாரத்தை சுற்றியிருக்கும் சண்டிகளைக் காட்டிலும், நமக்கு அதிகம் கேள்விகள் எழும் பகுதியாக ஜெராய் மலை இருக்கிறது. கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் அந்த மலை 1,230 மீட்டர் உயரம் கொண்டது. அதனுள் புதைந்திருக்கும் ரகசியமோ பலகோடியை தாண்டுகிறது. அந்த மலையினுள் பலசிவன் கோயில்களும், அம்மன், விநாயகர் கோயில்களும்  நூற்றுக்கணக்கில் உள்ளதாக நிறைய கதைகள் உள்ளன. அந்த மலையின் ரகசியத்தை பூதம் காப்பதுபோல் அரசாங்கம் காத்துவருவதாக ஒரு குற்றச்சாட்டும் பலகாலமாக  வைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் ‘Deprecated area'-என அரசு அந்த மலையை அறிவித்துள்ளதோடு பலத்த பாதுக்காப்புக்கு உட்படுத்தியுள்ளதுதான்.
தேடலின் போது உடன் வந்த நண்பர்கள்
தொடக்ககாலத்தின் அந்த மலையிலிருந்து கிடைக்கப்பட்ட சில கோயில் சிதைவுகளைத்தான் மறு உருவம் கொடுத்து மியூசியத்தில் கட்டியிருக்கிறார்கள். ஆனால், அதற்குக் கொடுத்திருக்கும் குறிப்புகள் எதுவும் முழுமையானதாக மற்றும் ஆதாரமற்றவையாக இருக்கிறது. ஒரு வேளை, வரலாற்றுத் தேடலைக்கொண்ட ஆர்வலர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் அந்த மலையினுள் செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தால் வெளிப்படும் ரகசியங்கள் குறித்து அறிய மனம் இப்போதே ஏக்கப்படுகிறது.
சோழ மன்னர்கள் கடாரத்தையும், சயாமையும் ஆண்டதாகக் கூறப்படுவதையும், முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்டதாகவும், கரிகாலச் சோழன் இலங்கையைக் கைப்பற்றியதாகவும் கல்வெட்டுகளிலும், இலக்கியக் குறிப்புகளிலும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு  நிகரான முரணான செய்திகளும் இருக்கவே செய்கின்றன.
‘மாறன் மகா வம்சம்' என்றொரு செய்தியை இணையத்தில்  வாசிக்க நேர்ந்தது.  ‘மாறன் மகா வம்சம்' என்பது பண்டைய கடாரத்தின் சரித்திர நூல் என்று சொல்லப்படுகிறது. மாறன் மகா வம்சம் கடாரத்தின் முதல் மன்னன் என்றும் இவன் பாண்டிய மன்னனின் வம்சாவளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷேஹா
கருட இனத்தவரின் தாக்குதலை முறியடித்து கடாரத்தில் இந்திய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய  முதல் மன்னன் என்று அந்த நூல் கூறுகிறது. ஆனால், அதற்கான எந்தச் சான்றும் நிரூபிக்கப்படவில்லை. செவ்வண்ணம் கொண்ட அந்த சண்டிகள் எதுவும் இந்திய மரபையோ அல்லது  எந்தளவுக்கு சிறப்பாக விளங்கியது? வழிபாட்டுத் தலங்களா? அல்லது பிரமிட்கள் மாதிரியான கல்லறைகளா? எந்தளவுக்கு அது புகழ்பெற்றிருந்தன போன்ற எந்தத் தகவலும் செய்தியும் ஏன் கட்டுக்கதைகள்கூட இல்லை.

என்னுடைய தேடலில் நான் கண்டுகொண்டது இதுதான்...

‘எது மறைக்கப்படுகிறதோ அது பாவம், வெளிப்படுவதே புண்ணியம்' என்கிறது பகவத்கீதை.
சோழனின் அடையாளங்கள் இங்கு மறைக்கப்பட்டுள்ளதோ அல்லது அழிக்கப்பட்டுள்ளதோ  சோழனுக்கே தெரிந்த ரகசியம் அது.
சோழன் இங்கு வாழ்ந்திருப்பான் என்பதை  மனம் ஏற்றுக்கொண்டாலும், கடாரத்தில் எந்தளவுக்கு அவன் புகழ்பெற்றான் என்பதற்கு சான்றுகள் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.  ஆனால்,  இந்தியர்களின்  அடையாளங்களை  நிறையவே கடாரத்தில் காணமுடிகிறது. குறிப்பாக கெடாவின்  விவசாய முறையைக் கொள்ளலாம். இன்னொரு சிறப்பம்சமாக கெடா மலாய் பெண்கள் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்கள். காதோரத்தில் ஒற்றை  செம்பருத்திப் பூவையோ அல்லது  சரத்தையோ அவர்கள் பாரம்பரிய உடையணியும் போது வைத்துக்கொள்கிறார்கள்.  அதே வேளையில்,  வியாபார தொடர்பால் இங்கு ஆதியில் வாழ்ந்திருந்த மலாய்க்காரர்களின் வாழ்வுமுறை இந்தியமயமாகிவிட்டதாகவும், அவர்களின் இயற்கையான கலாச்சாரம் மாறிவிட்டதாகவும் வரலாற்றுக்குறிப்பில் எங்கோ படித்த ஞாபகம். ஆதலால், கடாரம் ராஜேந்திர சோழனுடையதா என்ற கேள்விக்கான பதிலை நான் வாசகரிடமே விட்டுவிடுகிறேன்.

குறிப்பு

1970-ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு மறுசீரமைப்புச் செய்யப்பட்ட இந்த சண்டிகள் பல ஆண்டுகளாக செம்பனை பயிரிடும் தனியார் நிலத்தில் இருந்துவந்துள்ளது. இது புராதன பொக்கிஷங்கள் என்று தெரிந்ததும் அரசாங்கம் அதைப் பறிமுதல் செய்து, பாதுகாத்துவருகிறது. இதற்கிடையில்தான்  கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கெடா மாநில நில அலுவலகம் கொடுத்த அனுமதியின் பேரில் சௌஜானா செண்ட்.பெர்ஹாட் எனும் வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனம் சண்டி இருப்பது தெரியாமல் இடித்துத்தள்ளினர். இதனால் அங்கு சர்ச்சை எழுந்தது. பின்பு சர்ச்சையும் கண்டனமும் காணாமல் போனது.  இன்று அனைத்து சண்டிகளும் பார்ப்பார் அற்றும் கேட்பார் அற்றும்  இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கப் போகின்றன. அதை நினைக்கும்போதுதான்... (தேடல் தீர்ந்தது)
யோகி





சனி, 18 அக்டோபர், 2014

நான் என்ற யோகி

நான் என்ற யோகி 

நான் என்ற என்னை 
பல வாறாகக் கிழித்துப் போடுகிறேன் 
சில்லு சில்லாகக் கிழித்து நொறுக்குகிறேன் 

என் எவ்வொரு துண்டும் 
ஒவ்வொரு யோகியாக உருவெடுக்கின்றன 
ஒவ்வொரு யோகியும் 
நான் என்ற நானாகவே மாறுகின்றன 

நான் என்ற என்னால் 
சுயமாக இயங்க முடியவில்லை 
நான் என்ற என்னால் 
எதையும் தீர்மானிக்க முடியவில்லை 

நான் என்ற என்னை இயக்குபவர்கள் 
எல்லாம் தெரிந்தவராக இருக்கின்றனர் 
கிழிக்கப்பட்ட என்னை 
நானே அறிந்திடாத அளவுக்குப் பதப்படுத்துகின்றனர் 
ஒரு புன்னகையினூடே 
எல்லாத்தையும் சாதிக்கின்றனர் 

நான் என்ற என்னை ஆள்பவர்களுக்கு 
ஒன்று மட்டும் தெரியவில்லை 
அவர்களுக்கு யோகியை 

தெரிந்திருக்கவில்லை


-யோகி 

வியாழன், 16 அக்டோபர், 2014

உலக வரைபடத்தில் ஒரு கண்ணீர்த்துளி



சாத்தான்
ஆசிர்வதித்து அனுப்பிய பெட்டியில்
ஒரு நாட்குறிப்பு இருந்தது

நாள் குறிப்பின்
ஒரு பக்கத்தில்
தேவதைகளில் அழிவைப்பற்றி குறிப்பிட்டிருந்தது

அடுத்த சில பக்கத்தில்
கடவுள்களின் துர்மரணங்களை சித்தரித்திருந்தது

அடுத்தடுத்த பக்கங்களிலும்
சாத்தான் அழிவுகளையே கோடிகாட்டியிருந்தது

அழிவுகளின் ஓலங்களை தாளமுடியாமல்
நாட்குறிப்பை மூடும்போது
மனிதமும் அழிந்திருந்தது
நாட்குறிப்போடு சாத்தான்
பிணங்களையும் பெட்டிக்குள் கிடத்தி
போதி மரத்தின் கீழ் புதைத்தது

பிறகு சிரித்து
எது நடந்ததோ
அது சரியாகத்தான் நடந்தது என்றது.

-யோகி

புதன், 15 அக்டோபர், 2014

அந்த முகம்

அந்த முகம்

உனக்கே தெரியாத உன்
முகத்தை
ஒரு முறை நீ என்னிடம் காட்டினாய்
மனப்பூட்டுகளை உடைத்துக்கொண்டு
நீ என்னுள் நுழைந்ததும் அப்போதுதான்

பயமும் அமைதியும் அலங்காரங்களன்றி
என்னை உனக்கு
அறிமுகம் செய்துவைத்ததை
நீ மறந்திருக்க மாட்டாய்

இனிப்பு நிறைந்து
கசப்பு கொட்டிய நாள்களும்
சிரிப்புத் தீர்ந்து
கண்ணீர் வெடித்த பொழுதுகளும்
தெளிவாகவே இருக்கின்றன
நம்மைப்போல்

இது சாத்தானை மிஞ்சிய காதல் என்றாய்
கடவுள் ஆசிர்வதித்த கலவி என்றாய்

அதன் பிறகு
உனக்கே நீ காட்டிக்கொள்ளாத
அந்த முகத்தை
மீண்டும் நான் காணவே இல்லை

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கண்களால் கைது செய்தவன் வில் ஸ்மித்


நான் ஒரு தமிழ் திரைப்பட ரசிகைதான். இடைநிலைப்பள்ளி  மாணவியாக இருக்கும்  போது சூப்பர் ஸ்டாருக்கும் சங்கம் வைப்பதற்கு ஆலோசித்த காலங்களும் எனக்கு உண்டு.

ஆனால், 2010-ஆம் ஆண்டு நான்  பிரபல 4 நட்சத்திர தங்கும் விடுதியில் கணக்காய்வாளராக வேலையில் அமர்ந்த போது, என் முன்னே இருக்கும்  தொலைக்காட்சியில் ஆங்கில படங்கள் , மட்டுமே ஒளிபரப்பாக  விதி அமைக்கப்பட்டிருந்தது.
எனக்கு ஆங்கிலப் படங்களே அவ்வளவாக பிடிக்காது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.  நவீன இலக்கிய பாணிக்கு வந்தப்பிறகு சில உலக சினிமாக்களை பார்த்திருக்கிறேன். உண்மையில் உலகச் சினிமாவின் தரத்தை மற்ற வெகுஜன சினிமாவோடு ஒப்பிடுவது  நேர்மையற்றது என்ற கருத்தோடு உடன்படுபவள் நான்.

தனியார் தொலைக்காட்சியின் ஆங்கில பட அலைவரிசைகளை மாற்றி மாற்றி வைத்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். காலக்கொடுமை என்னவென்றால் ஒளிபரப்பிய படமே மீண்டும் மீண்டும் ஒரு வாரத்திற்கு ஒளிப்பரப்பாவதுதான். ஒரு  படத்தை எத்தனை முறைதான் பார்ப்பது?
அந்தக் காலக்கட்டத்தில் ஆங்கில திரைப்பட நடிகர்களின் பெயர்கூட எனக்கு அவ்வளவாக தெரியாது. அந்தக் காலக்கட்டத்தில்தான் நடிகர் வில் ஸ்மித்தின் ‘Pursuit Of Happiness என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்.

ஒரு படத்தின் நாயகன் தொடக்கத்திலே என்னை ஈர்த்தான் என்றால் அது வில் ஸ்மித்தான்.  சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பேரழகன் இல்லை வில் ஸ்மித். ஆனால், நான் ஆங்கிலப் படம் பார்க்கும் மோகத்தை அதிகப்படுத்தியவன் அவனே.
நல்ல சிவப்பான அழகான ஆங்கில நடிகர்களும்  குறிப்பாக டோம் குரூஸ்,  போன்றவர்களின் மீது  உலக பெண்கள் ஆர்வம் கொண்டிருக்க அவனின் படத்தை நான் தேடி தேடி பார்த்துக் கொண்டிருந்தேன்.  அவனின் அழகில் மயங்கி அல்ல. அவனின் நடிப்பில், அவனின் திரைப்பட கதை தேர்வில், அவனின் குரலில், அவனினின்  நகைச்சுவை உணர்வில்  அனுஅனுவாக என்னை  அவன் ரசிக்க வைத்தான்.
சட்டென மாறும் அவனின் உடல்மொழி எல்லா நடிகர்களிடமும் பார்க்க முடியாது.  ரோபின்ஸ் வில்லியம்ஸ்  போன்ற குறிப்பிட்ட சில நடிகர்களிடமே அந்தக் கலை குடிக்கொண்டிருக்கிறது. pursuit of happiness திரைப்படத்தில் என்னை பாதித்த சில காட்சிகளை  இங்கு சொல்ல விரும்புகிறேன்.  ஒரு தந்தையாக தன் மகனிடம் அவர் கொண்டிருக்கும் தவிப்பும்,  தங்குவதற்காக ஒரு இடத்தை தேடி செல்வதும், பொருளாதார சூல்நிலையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகளும்  ஒரு சராசரியான தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லை. அது  உண்மை.  தமிழ் சினிமாவில் சில சமயம் எடுக்கபடும் ஓவர் சீன்களில் என் வீட்டில் உள்ளவர்கள்  கண்களில் கண்ணீர் வழிய  பார்த்து உருகிய காட்சிகளில் இது எல்லாம் அதிகமாக தெரியவில்லையா என்று  அவர்களின் கண்ணீருக்கு அர்த்தமில்லாமல் செய்துவிடுவேன்.  உண்மையில் இப்படி நடக்குமா? என்றே தொடங்கும் என் வசனங்கள்.  ஏன் தமிழ் சினிமாவில் எதார்த்த வாழ்வை  படமாக்க மறுக்கிறார்கள் என்ற கேள்வியை பல நாள்களாக நான் கேட்டிருக்கிறேன். (இப்போது தமிழ் சினிமாவின் தரம் மாறியிருப்பதையும் ஒப்புக்கொள்கிறேன்)
ஆனால், செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில், தான் ஒரு முதல்தர மேல்தட்டு நாடு என்று கூறிக்கொள்ளும் அந்த நாட்டின் கீழ்தட்டு மக்களின் தின வாழ்கையை  அந்தப் படத்தில் பார்த்தேன். ஒரு வேளை  உணவுக்கும்  தடுமாறுகிற  ஒரு தந்தையின் இயலாமையை வாழ்ந்து காட்டிருப்பார் வில் ஸ்மிட்.
ஒரு காட்சியில், வேலைக்காக ஒருவரை பலமுறை சந்திக்க முயற்சி செய்து கொண்டிருப்பார்  வில் ஸ்மித். ஒரு முறை, சம்பந்தப்பட்டவருடன் டெக்சி பயணத்தில்  10 நிமிடம் உரையாடுவதற்கான சந்தர்பம் வாய்த்தபோது,  ஒரே வரிசை வர்ணத்தை சேர்க்கும் விளையாட்டை  அந்நபர் விளையாடிக் கொண்டிருப்பார். வில் ஸ்மித்திடம்  “இந்த விளையாட்டை பல ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். வெற்றிபெற முடியவில்லை”  என்று கூறிக்கொண்டிப்பார். வில் ஸ்மித்திற்கோ தனது நோக்கம் குறித்த கவலையே  மோலோங்கியிருக்கும். நான் முயற்சிக்கிறேன் என்று கூறி,  அதி விரைவாக  வர்ணக் வரிசையை செய்து முடிப்பார். இதை  அனைத்தையும் டெக்சி ஓட்டுநர் அவதானித்தபடியே இருப்பார்.   அந்தக் காட்சி மிக சாதாரணக் காட்சியாகதான் தெரியும்.  ஆனால் அவை சாதாரணக் காட்சிகள் அல்ல என்பது அந்த திரைக்கதையை முழுதாக உணர்ந்தவனே அறிவான்.
 தன்னை நிறுப்பிக்கப் போராடும்  ஒரு தந்தையுன் உள்ளத்தை  அதன் இயக்குனர் மட்டுமல்ல ஒளிபதிவாளரும் மிகத்துள்ளியமாக பதிவு செய்திருப்பார். ஆனால், அந்நபர் வேலை குறித்த  அந்த பதிலையும் சொல்லாமல், டெக்சிக்கும் பணம் கொடுக்காமல்  இறங்கி போய்விடுவார்.  பணம் இல்லாததால் டெக்சி ஓட்டுனரிடமிருந்து தப்பி ஓடும் காட்சியில் உண்மையில் நாமே ஓடிக்கொண்டிருப்போம். அந்த அளவுக்கு மனதை  பாதிக்கும் காட்சிகளாக அவை அமைந்திருக்கும்.
நான் வில் ஸ்மித் எனும் நடிகனின் ரசிகையான கணம் அது. அடுத்ததாக நான் பார்த்த படம்தான் ‘I Am Legend'. இந்தப்படத்தைக்குறித்து பல புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்கள் விமர்சம் எழுதியிருக்கின்றனர்.  அந்த அளவுக்கு ஹோலிவுட் வட்டார சினிமாவிலேயே முக்கியமான திரைப்படம் என்ற பெயர் I Am Legend-னுக்கு உண்டு. அந்தப் படத்தை நான் பார்த்த தருணம் அது அவ்வளவு முக்கியமான படம் என்பது எனக்கு தெரியாது. ஆனால், கண் இமைக்கும் நேரத்திலும் காட்சிகள் போய்விடுமோ என ஒவ்வொரு காட்சியும் மிக முக்கியமானதாக பட்டது.
தனிமையின் கொடூரம், நோயின் தீவிரம், மனித உளவியல் என காட்சிக்கு காட்சி வில் ஸ்மித்தின் நடிப்பை மட்டுமே மூலதனமாக வைத்து படமாக்கப்பட்டிப்பதை உணர முடியும். இந்த படத்தின் ஒரு காட்சி மட்டும் இன்றும் என் மனதை விட்டு அகலாத காட்சியாக இருக்கிறது. அந்தப் படத்தைப் பற்றி பேசும்போதெல்லால் இந்தக் காட்சி குறித்து ஒரு வரியாவது கூறிவிடுவேன்.
தனிமையின் தோழனாகவும் தனக்கு ஒரே நண்பனாகவும் இருக்கும் ஷேம் என்ற தனது நாயிக்கும் கிருமி தொற்று ஏற்பட்டுவிடும்.  அந்த நாய் zombie-யைப்போல் மாறும் அந்தத் தருணத்தில் சிகிச்சை பலனளிக்காது என தெரிந்து தன் கையாலேயே அதைக்கொள்ளும் காட்சி, மனித உளவியளின் உட்சம் என தோன்றியது.
சுமார் 22 படங்களில் நடித்திருக்கும் வில் ஸ்மித், எல்லா படங்களும் முக்கியமான படங்கள் என்றும், அனைத்து படங்களும் எனக்கு பிடித்த படங்கள் என்றும் கூற மாட்டேன். ஆனால்  Seven Pounds,  Independence Day, போன்ற படங்கள் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு நீண்ட நாள்கள் ஆனது.

-யோகி

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

கடாரம் ராஜேந்திர சோழனுடையதா? 3


வரலாற்றுப் பொக்கிஷத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு என்ன?



(சென்ற வாரத் தேடலில்)

 ‘Deprecated area'-என அரசு அறிவித்துள்ள ஜெராய் மலைப் பகுதிகளில்  இன்னும் எம் சோழனின் அடையாளங்கள் புதைந்துகிடக்குமா? சுமார் 40-க்கும் அதிகமான சண்டிகள் பூஜாங் பள்ளத்தாக்கு சுற்றிலும்  அகழ்வாராய்வு செய்யப்பட்டு கண்டெடுக்கப்பட்ட மாபெரும் புதையலாக உள்ளது.  எனது தேடலுக்கான பதில் அங்கு கிடைக்குமா? (இனி)

அகழ்வாராய்வு செய்யப்பட்டு, கேப்பாரற்று இருக்கும் பொக்கிஷம்

பொதுவாகவே  வரலாற்றுத்தேடலில்  நம்மவர்களிடம் நிதானம் என்பது துளிகூட இல்லாதது எமது வருத்தம். ஆரம்பகாலத்தில் மலாய் தீவு மற்றும் தீபகற்ப்பம் தனக்கே உண்டான கலாச்சார நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது யாரும் மறுக்க இயலாது.  மலாய்க்காரர்கள் நாகரிகமடைந்ததற்கு  கடல் கடந்து வந்த இந்து-பௌத்த மதம் மட்டுமே முழுக்காரணம் எனக் கூறினால் அதனை நான் மறுக்க வேண்டியிருக்கும்.

ராஜேந்திர சோழனுடைய படையெடுப்பிற்கு முன்பதாகவே பார்பனியம் (இந்து)- பௌத்தம் இம்மண்ணில் விரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்து மற்றும் பௌத்தத்தை அக்காலத்தில் இவர்கள் ஏற்றியிருந்தாலும், இம்மதங்களில் அனைத்துக் கூறுகளையும் இவர்கள் ஏற்கவில்லையென்பதே உண்மை. இதற்குச் சான்றாக பாலித் தீவினரை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை
 கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை
மேலும், ராஜேந்திர சோழன் படையெடுத்து வந்ததாகக் கூறினாலும், அவரே படைக்குத் தலைமை தாங்கி வரவில்லையென்பது பலரது கருத்து. அவர் வந்தார் என்பதற்கான எவ்விதச் சான்றும் இங்கு கிடையாது. தஞ்சாவூர் கல்வெட்டில் இருப்பதை வைத்து அவரே படையெடுத்து வந்தார் எனும் முடிவுக்கு வருவது சரியானதன்று என பல ஆய்வாளர்களும் கூறிவிட்டனர். 

மலாக்காவின் சுல்தான் மன்சூர் ஷா தென்னிந்தியாவுடன் (14-ஆம் நூற்றாண்டு தொடங்கி மற்றும் 17-ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்த விஜயநகர அரசாட்சி) சகோதர உறவு கொண்டிருந்ததாக ஹிகாயாட் ஹங் துவா சொல்லும். ஆயினும், கிருஷ்ண தேவ ராயனை, கடல் கடந்து சென்று உறவினை மிளிர வைத்தது சுல்தான் அல்ல என்பதே உண்மை.

அலுவலகம்
மலாக்காவின் தூதுவனாக ஹங் துவா கடல் கடந்து சென்று தென்னிந்தாவுடனான சகோதர உறவினை வலுவுறச் செய்தார். இந்நிகழ்வினை பெரும்பாலும் வரலாற்றுக் குறிப்புகள் மலாக்கா சுல்தான் தென்னிந்தியாவுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறும். இதே பாணியில்தான் ராஜேந்திரனின் படையெடுப்பைக் கருதலாம்.
 
புஜாங் பள்ளத்தாக்கில் எனக்கான தேடல் முழுமை பெறாதது  வருத்தத்தை கொடுத்தாலும்,  சுங்கைக் பட்டாணி நகரை சுற்றிலும் 40-க்கும் அதிகமான சண்டிகள் அகழ்வாராய்வு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற செய்தி எனக்கு புத்துணர்ச்சியை வழங்கியது. அந்த இடத்தைத் தேடி நானும் நண்பர்களும் பயணிக்கத் தொடங்கினோம். புதிய இடம் என்பதால் இடத்தைக் கண்டு பிடிப்பதற்கு சற்று சிரமம் இருக்கவே செய்தது.

ஆனால், கெடா வாழ் மக்கள் இயற்கையிலேயே  மனிதாபிமானமும் நேசமும் கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்கள் முகத்தில் புன்னகை குறையவில்லை. இடத்தைக் கண்டறிவதற்கு போலீஸ் நிலையம், மோட்டார் பட்டறை என பலமலாய்க்காரர்களைச் சந்தித்தேன். புன்னகை மாறாத அவர்களின் முகத்தில் போலியை பார்க்கமுடியவில்லை. தலைநகரைச் சேர்ந்த மலாய்க்காரர்களுக்கும் அவர்களுக்கும் நிறைய வித்தியாசங்களைப் பார்க்க முடிந்தது. ‘சோழன் கால் பதித்த மண்ணல்லவா' என்கிறீர்களா?  உண்மைதான் அந்தக் குணம் அந்த மண்ணுக்கே உண்டான சிறப்புதான்.
இறுதியில் நாங்கள் தேடிய அந்த வரலாற்றுப் புதையல் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தோம். ஆனால், அங்கு எனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தது,  அதுவரை எனக்குத் தெரியவில்லை.

குறிப்புகளை கொண்டிருக்கும் பொக்கிஷங்கள்














கூடாரத்திற்குக் கீழ் இருக்கும் அந்த வரலாற்றுப் பெட்டகங்கள் அனைத்தும்,  அகழ்வாராய்ச்சி  செய்தும், செய்துமுடிக்காத நிலையிலும் இருந்தன. பலத்த பாதுகாப்புடன் பாதுகாவலர்கள் இருந்தார்கள். பார்வையாளர்கள் வந்தால் விளக்கம் கொடுக்க நமது நாட்டைச் சேர்ந்த ஓர் அலுவலக அகழ்வாராய்ச்சியாளர் இருந்தார்.

கூடாரத்தின் கீழ் மௌனம் காக்கும் பொக்கிஷங்கள்














நான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.  எனக்கு வேண்டிய தகவல்களை அவர் தந்தார். அனைத்தும் அதிர்ச்சிதரும் தகவல்கள்தான். ஒரு வரலாற்றுப் பொக்கிஷத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு என்ன என்ற கேள்வியே என்னுள் எழுந்த வண்ணம் இருந்தது.

(தேடல் தொடரும்)




சனி, 11 அக்டோபர், 2014


உவப்பற்று இருக்கிற
இருப்பை
எடுத்துக்கொண்டு
திரிகிற காமத்திற்கு
அறியப்படுத்துவது என்னவென்றால்
பற்றற்று இருக்கும்
யோனிகளுக்கு
உவப்பற்றுதான் போகும்
எல்லா ஆண்குறிகளும்
-யோகி