மலேசியாவில்
முக்கிய விவசாயமாக ரப்பர்
இருந்தது உலக மக்கள் பலருக்கு தெரிந்த ஒன்றுதான். மலேசியாவில் ரப்பர் மரம் என்றதும் அகிலன் எழுதிய ‘பால்மரக் காட்டினிலே’என்ற
நாவல் நினைவில் வருவதையும் பலரால் தவிர்க்க முடியாது. பால்மரக் காடுகளாக இருந்து, இந்தியர்களின் பல கதைகளைச் சுமந்திருந்த
பேராக் மாநிலத்தின் பெரும் நிலப் பகுதி தொழிற்சாலைகளாக மாறிய பின்பும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ரப்பர் தோட்டங்கள் இன்னும் பழைய சரித்திரத்தை ஞாபகப் படுத்துபவையாகவே இருக்கின்றன.
இந்நிலையில் மலேசியாவில் ரப்பர் வரலாறு 1877 ஆம் ஆண்டுத் தொடங்குகிறது. பிரேசிலிருந்து லண்டனுக்கு அருகிலுள்ள கியூ எனுமிடத்தின் தாவர ஆராய்ச்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின் அங்கிருந்து இலங்கையிலுள்ள பெரடின்னியாத் தாவர ஆராய்ச்சி தோட்டத்திற்கும், 1877-ல் அங்கிருந்து சிங்கப்பூர் தாவர ஆராய்ச்சி தோட்டத்திற்கும் ரப்பர் செடிகள் இடம் மாறின. மலேசியாவிற்கு சிங்கப்பூரிலிருந்து தான் ரப்பர் மரக் கன்றுகள் கொண்டுவரப்பட்டு பேராக் ஆராய்ச்சி தோட்டத்தில் நடப்பட்டன. அன்று தொடக்கம் மலேசியாவில் முக்கிய உற்பத்தி பொருளாக ஆனது ரப்பர் மரம். தொடக்கத்தில் 345 ஏக்கரில்தான் முதல் ரப்பர் தோட்டம் உருவாகியிருக்கிறது.
ரப்பரின்
ஆரம்பக் கதை
‘ரப்பரின் ஆரம்பக் கதை 1870-ல் தொடங்கியது.
ஹென்ரி விக்ஹெம் என்பவர் 70,000 ஹெவியா பிரேசிலியேன்சிஸ் ( ) என்ற தாவரத்தின் விதைகளை
இங்கிலாந்தில் உள்ள கியூ கார்டன்ஸ்சில் பயிர் செய்தார். இதிலிருந்து 1876-ல் கணிசமான
விதைகள் சிலோன் பொட்டனிக்கல் கார்டனுக்கு அனுப்பப்பட்டது.
1878-ல், 22 ரப்பர் மரக் கன்றுகள் சிங்கப்பூருக்கும்
பேராவிலுள்ள கோலகங்சாருக்கும் அனுப்பப்பட்டன. 1880-ல் கோலகங்சாரில் பயிரிடப்பட்ட ரப்பர்
மரங்கள் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்கின. இவற்றின் விதைகாள் 1883-ல் இங்கிலாந்துக்கு
அனுப்பப்பட்டன. 1888-ல் சிங்கப்பூர் வந்த ஹென்றி ரிட்லி என்பவரால் ரப்பர் ஒரு வியாபாரப்
பயிராகியது. ரிட்லி ரப்பர் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் மரம் வெட்டும் முறைகளைச்
சீர்ப்படுத்தினார்.
1890-ல் காப்பி விலை வீழ்ச்சியும் ரப்பர்
விலைகளின் அதிகரிப்பும் ஐரோப்பியர்களை ரப்பரினால் ஈர்த்தது. 1899-ல் லண்டன் சந்தையில்
மலாயாவின் ரப்பர் ஒரு பவுண்டு 46 பென்ஸ் விலையைப்பெற்றது. இவற்றின் முதலாளிகளாக ஐரோப்பியர்களும்
சீனர்களும் மற்றும் சிறுதோட்ட உரிமையாளர்களும் இருந்தனர். 1921ல் ஒன்றில் ஐந்து பங்கு
தோட்டங்கள் சீனர்கள் கைவசம் இருந்தன. ஒரு சராசரி தோட்டத்தின் அளவு 400-முதல் 500 ஏக்கர்வரை
இருக்கும்.
இருபதாம் நூற்றாண்டின் ரப்பர் சம்பந்தப்பட்ட
கண்டு பிடிப்புகளால் ரப்பரின் பயன் மிகுந்தது.
காற்றடைக்கப்பட்ட டயர் இதில் முக்கியமானது. ரப்பரின் தேவையினால் உந்தப்பட்ட பிரிட்டிஷ்
அரசாங்கம் தனது கவனத்தை மலாயாவின் மீது செலுத்தியது. 1918-ல் மலாயாவிலிருந்து ஏற்றுமதி
செய்யப்பட்ட ரப்பர் உலகத் தேவையின் 50 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்தது.
இந்த ஞாபகத்தைப்
பதிவு
செய்யும்
வகையில்
நூற்றாண்டுகளைக்
கடந்து
இன்னும்
உயிர்
வாழ்ந்துக்கொண்டிருக்கும்
ஒரு
ரப்பர்
மரம் கோலகங்சாரில் இருக்கிறது.
பால்
கிண்ணம்,
உறைந்த
ரப்பர்
பாலை,
சீட்டாகக்
கொண்டு
வரும்
இரண்டு
இயந்திரங்களோடு
ரப்பர்
விதைகள்
சிதறிகிடக்கக்
கம்பீரத்துடன்
நிற்கிறது
அந்தத்
தாய்
மரம்.’
மேற்குறிப்பிட்டிருக்கும்
இந்தத் தகவல்கள் மலேசியத் தோட்டத் தொழிலாளர் வாழ்வும் போராட்டங்களும் என்ற புத்தகத்தில்
பேராசிரியர் பி.ராமசாமி ஆய்வு செய்து பதிவு செய்திருப்பதாகும்.
HN Ridley and Henry Wickham |
1877-ஆம்
ஆண்டு 345 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட ரப்பர் மரங்கள் 1940-ஆம் ஆண்டு 3,464,000 ஏக்கர்
வரை பயிர்செய்யப்பட்டு பெருந்தோட்டமாக உருவாகியது. ரப்பரின் ஆதிக்கம் மலேசிய மண்ணில்
வேரூன்றி செழிப்பதற்கு முன்பு 1800-களில் மிளகு மற்றும் வாசனைத்திரவியங்களும்,
1840-களில் மிளகு மற்றும் காப்பி, 1845-களில் அன்னாசி, 1876-களில் காப்பி மற்றும் கரும்புத்
தோட்டமும் இதற்கிடையில் நெல் விவசாயமும் முதன்மை
விவசாயமாகவும் பெரிய அளவில் வருமானம் ஈட்டக்கூடிய உற்பத்தியாகவும் இருந்திருக்கிறது.
என்றாலும் ஒரு காலக்கட்டத்தில் அதன் தேவை- ஆதிக்கம்-விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால்
உலக சந்தையில் அதன் மதிப்பு சரிந்தது.
19 மற்றும்
20-ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில்தான் மலாயா என்கிற நாட்டை ரப்பர் தோட்டங்களால் உலக நாடுகள் அறிந்துகொண்டதோடு, அந்நாடுகளின் ரப்பர் பயன்பாட்டுத் தேவையின் 50 சதவிகிதத்தைப்
பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தியிலும்
தீவிரமடைந்திருக்கிறது.
இந்தியர்கள்
வசிக்கும் தோட்டங்களில்தான் ரப்பர் மர நடவு பெரிய அளவில் நடந்திருக்கிறது. அதன் காரணத்தினாலேயே
இந்தியர்களையும் ரப்பர் மரங்களையும் தவிர்த்துவிட்டு மலேசிய இந்திய வரலாற்றை பேச முடியாது.
‘’சிங்கப்பூர் தாவர ஆராய்ச்சித் தோட்ட
அதிபராகப் பதவியேற்ற ஹென்றி ரிட்லி தம்முடைய
ரப்பர் மரங்களில் அதிக சிரத்தை உடையவராய் இருந்தார். காப்பித் தோட்டக்காரர்கள் தங்கள்
கவனத்தை ரப்பரில் திருப்ப வேண்டுமென்று சில வருடடங்களாக ஆலோசனை கூறிவந்தார். அவர் தம்
சட்டை நிறைய ரப்பர் வித்துக்களை வைத்துக்கொண்டு நாட்டைச் சுற்றித்திரிந்து வித்துகளை
பெற விரும்புவோருக்கெல்லாம் வினியோகித்து வந்தார். அவரும் அவருடைய சிப்பந்திகளும் பால்
வெட்டுவதிலும் ரப்பர் பாலைப் பக்குவப்படுத்துவதிலும் மரங்களைப் பரிசோதனை செய்வதிலும்,
தயாரிக்கப்பட்ட ரப்பரை எல்லா வருடாந்திர விவசாயப் பொருட்காட்சியிலும் வைத்துப் பிரச்சாரம்
செய்வதிலும் ஈடுபட்டு வந்தார்கள். என்றாலும் 1896-ஆம் ஆண்டு வரையில் தோட்டக்காரர்களை
ரப்பரில் கவனம் செலுத்தும்படி தூண்ட முடியாத நிலையில் இருந்தது’’ என்று பதிவு செய்திருக்கிறார் தோழர்
சுரதாதாசன்.
1899-க்குப்
பிறகு மோட்டர் வண்டிகளின் அதிவேக உற்பத்திக்குப் பிறகுதான் புறக்கணிக்கப்பட்டு வந்த ஹென்றி ரிட்லியின் ஆலோசனை திரும்பிப்பார்க்கப்பட்டது.
ஆனாலும், மரம் வளர்ந்து பால் சீவுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் ஒரு சிக்கலாக இருந்திருக்கிறது.
வருமானம் இல்லாத 5 ஆண்டுகளுக்குப் பிறகு அறுவடை காலம் வந்ததும் அதற்கான உபகரணப்பொருட்கள் வாங்க வழியில்லாமல்
கையாண்ட விதத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார். காலி பாட்டில்களும் , சமையல் அறையில் பயன்படுத்தும்
உருளையும் ரப்பர் சீட்டுகளைப் பக்குவப்படுத்தும் உருளைகளாகவும், இரண்டாக வெட்டிய மண்ணெண்ணெய்த்
தகரங்கள் பால்வாளியாகவும், காலி பால்டின் குவளைகள் பால் கிண்ணங்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதோடு வீடுகளுக்கு அடியில் அகன்ற சட்டிகளில் கரியைப்போட்டு எரித்து உலர்த்திப் புகையிட்டு
ரப்பர் சீட்டுகள் தயாரிக்கப்பட்ட ஆரம்பகாலக் கதையை மிக தெளிவாகவே தோழர் சுரதாதாசன் பதிவு செய்திருக்கிறார்.
நாடு சுதந்திரத்திரம்
அடைந்த பிறகுதான் ரப்பர் மர காடுகளில் வேலை செய்யும் தோட்ட மக்களுக்கு ஒரு ஒழுங்கு
நிலை ஏற்பட்டது. காலை 4.30 மணியிலிருந்து 5.00 மணிக்குள் அவர்கள் மரம் சீவ சென்று விடுவார்கள். தோட்டத்து கங்காணி காலை 6.00 மணியளவில் வேலைக்கு வந்தவர்களின் பெயர்களை கணக்கெடுத்துச் செல்வார். காலை 9.00-10.00 க்கெல்லாம் மரம் சீவி முடிக்கப்பட்டவுடன் தொழிலாளர்கள் சிறிது ஓய்வு எடுப்பார்கள். காலை 10 மணிக்கு பிறகு ரப்பர் பால் சேகரித்து சேகரத்தில் (store) சேர்த்து விடுவார்கள்.
காண்டா வாளிகளில் பால் சேகரிக்கப்பட்டு மிக
பாதுகாப்பாக கொண்டு வரவேண்டும். கீழே தடுக்கி விழுந்து பால் விரையமானால், அன்றைய
சம்பளத்தில் கை வைக்கப்படும். இதற்கிடையில் ஒட்டுப்பாலும் சேகரிக்கப்பட்டு கொண்டுவரப்படும். இதுவும் சந்தையில் நல்ல விலைபோகிற ஒரு பொருள்தான்.
மரத்திற்கு
உரம் போடுதல், பொட்டு வைத்தல் போன்ற வேலைகளும் தொழிலாளர்கள் மேற்கொள்வார்கள்.
தோட்டத்திற்கு
வேலைக்கு செல்பவர்களின் உடை அதுவும் இந்தியப் பெண்களின் உடை, இன்றும் தோட்ட தொழிலாளர்களின்
அடையாளம் என சொல்லலாம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு நேரடியாக கூலி வேலைக்காக
இந்தியாவிலிருந்து வந்தவர்கள், ஆண்கள் மடித்துக்கட்டிய வேட்டியுடனும் பெண்கள் புடவையுடனுமே ரப்பர் மர ‘’தீம்பாருகளில்” வேலை செய்தனர்.
அவர்களின் வாரிசுகள் அடுத்த தலைமுறை கூலி தொழிலாளர்களாக
வந்தபோது மலேசிய சூழலுக்கு வாழ்க்கை மாறியிருந்தது. பெண்கள் கைலி- சட்டை அணிந்து தலையிலிருந்து முகத்தோடு சேர்த்துக் கட்டிய துணியோடு வேலைக்கு செல்வார்கள். அவர்களுக்குப் பிறகு வந்த வந்தவர்கள்
முழுக்க தோட்ட வேலைக்கு ஏற்ற உடைக்கு மாறியிருந்தனர்.
அப்போது தோட்ட வேலைக்குச் சென்ற பெண்கள் சட்டை, அதன் மீது ஒரு முழுக்கை சட்டை, காற்சட்டை, அதன் மீது பாவாடை, நீண்ட காலுரை (காற்சட்டையின் உறுதி பகுதி காலுரையின் உள்ளே விட்டு அதற்கு மீது இருக்கமான ‘கித்தா’ போட்டிருப்பார்கள். அட்டை கடியிலிருந்த தடுக்க இந்த வழி) ஒரு கொண்டை போட்டு அதில் ஏதாவது பூவையும் சொருகி வெயில் வந்தால் போடுவதற்கு சீனத் தொப்பியும் வைத்திருப்பார்கள். என் பாட்டியையும் அம்மாவையும் நான் இப்படித்தான் தோட்ட வேலைக்கு போகும்போது பார்த்திருக்கிறேன். மண் வெட்டியை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மறுகையில் சாப்பாட்டு கூடையுடன் அவர்கள் வேலைக்குச் சென்று வந்தார்கள்.
"அன்னை வளர்த்தது ரப்பரை!-எங்கள்
அப்பன் வளர்த்தது கொப்பரை!
அண்ணன் வளர்த்தது செம்பனை-எங்கள்
ஆயிரம் சோதரிமார்கள் குருதியில்
ஆனது தானடா தேயிலை!
என்ற கவிஞர் சங்கு சண்முகத்தின் கவிதை வரிகள் நம்மவர்களின் உழைப்பை பறைச்சாற்றும் படி இன்றும் உரைக்கிறது.
தற்போது ரப்பர்
மரங்கள் நம் நாட்டில் அதன் மதிப்பை இழந்திருக்கலாம். ஆனால் நம்மவர்களுக்கும் ரப்பர்
மரங்களுக்குமான உறவு என்றும் பிரிக்க முடியாதது.
கொடிய மிருகங்களுக்கும், நச்சு உயிர்களுக்கும் பலியானவர்களின் கதைகள் ரப்பர்
காடுகளில் ஏராளம். யாராவது ‘கித்தா மரம்’ என்றால் அந்தக் காலத்து ஆளா நீங்கள் என கதைக்கேட்க
அமர்ந்துவிடுகிறேன். இன்னும் பதிவு செய்யாத தோட்டக் கதைகள் மிச்சம் இருக்கவே செய்கின்றன.
நன்றி: தமிழ்மலர் 1/8/2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக