சனி, 17 ஜூலை, 2021

மரணங்களை வேட்டையாடிய புடு சிறைச்சாலை

 

இலக்கு இல்லாத பயணத்தின் போது ஓர் நாள் 'மோனோ' மின்ரயில் வண்டியில் ஏறினேன். உட்கார இருக்கை இருந்தும், அமர மனம் இல்லை. சிந்தனைகள் எங்கோ இருக்க, நின்றபடியும் வானத்தை வெறித்துப் பார்த்தபடியும் நின்றுகொண்டிருந்தேன். 'இம்பி' ஸ்டேஷனை தாண்டியதும் சிந்தனை சிதறும் விதத்தில் கலைத்துபோட்டது 'புடு' சிறைச்சாலையின் இன்றையை நிலை

'சிறைச்சாலை' ஒன்றும் பெருமை தரக்கூடிய இடமில்லை. குற்றவாளி என நிறுபிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்ற கொண்டுச் சென்று, அங்கு தங்கவைக்கும் இடத்தைக்குறித்த  பெருமைகளை சேகரிக்க என்ன இருக்கிறது? 1895-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அந்தச் சிறைசாலையில்தான் மலேசியாவின் முதல் நிலை குற்றவாளி என கருதப்படும் போத்தா சின் என்பவரை 1981-ஆம் ஆண்டு தூக்கிலிட்டார்கள். அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்க சம்மேளனத் தலைவரும் தொழிற்சங்க போராளியுமான தியாகி 'மலாயா கணபதி' அவர்களை 4.5.1949 -ஆம் ஆண்டு பிரிட்சிஷ் ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்டதும் இதே புடு சிறையில்தான்.

பலபேருக்கு தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை, இன்னும் என்னென்னவோ தண்டனைகள்  நிறைவேற்றப்பட்ட சிறைச்சாலை இன்று, முன் வாசலின் முகப்பை மட்டும் விட்டுவிட்டு,   முழுகட்டிடமும்  தரைமட்டமாக்கப்பட்டு ஏதோ சொகுசு கட்டிடத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொரானா காலத்திலும் கட்டுமான வேலைகள் துரிதமாகவே செயற்பட்டுக்கொண்டிருப்பதை பார்க்கும்போதே கட்டுமானத்தின் மென்னேற்றம் நமக்கு கூறிவிடும்.

என்னுடைய நிருபர் பணியில் நிறைவேறாத ஆசையாக புடு சிறைச்சாலைக்கு ஒரு முறைகூட   போகாததைதான்  சொல்வேன்.  சிறைச்சாலையை முழுவதும் காலி செய்து, அக்கட்டிடம் நிர்கதியாக விடப்பட்டக் காலங்களில் அங்கிருந்து அமானுஷ்யமாக மனித ஓலங்கள் கேட்பதாக பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். சிறைச்சாலை அறைகளில் கைதிகளின் கிறுக்கல்களை இணையத்தில் காணும்போதெல்லாம் சிறைச்சாலையின் உள்பகுதியை ஒரு முறையாவது பார்க்க போயிருக்கலாமே என்ற என் நிறைவேற ஆசை மறுபடியும் விழித்துக்கொள்கிறது.


இதுப்பற்றி நினைத்துக்கொண்டிருந்த ஒருநாளில், என் கைத்தொலைபேசிக்கு இணைய செய்தியிலிருந்து புதிய செய்தி வந்ததற்கான notification வந்தது. அது கபாலி திரைபடத்தைக்  குறித்த செய்தி. பெந்தோங் காளியின் கதை தழுவல்தான் கபாலி திரைப்படம் பேசுகிறது என்றது அச்செய்தி. பெந்தோங் காளி மலேசியாவின் இரண்டாம் நிலை பயங்கர குற்றவாளி என்று ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.  கபாலி திரைப்படம் திரைக்கண்டபோது மலாயா கணதியின் கதை தழுவல் என்ற சலசலப்பும் இங்கு இருந்தது. இருந்தபோதும் யாருடைய சுயசரிதையை தழுவியது கபாலி திரைப்படம்? என்பதற்கு உறுதியான காட்சிகள் இல்லை. அதை திரைப்படக் குழுவினரும் சொல்லவில்லை.

'புடு' சிறைச்சாலை சிலரை மனிதர்களாக மாற்றிய புனிதமான இடமாகவும் சிலருக்கு நரகமாகவும் இருந்திருக்கிறது.  புடு சிறைச்சாலையை இடிக்கப்போகும் தகவலை வெளியிட்டதும் அதை மறுத்து கண்டனம் தெரிவித்து கிட்டதட்ட ஆயிரம் பேர் அங்கு ஒன்று கூடினர்.  சிலர் அதை இடிக்கப்படுவதை  ஆதரிக்கவும் செய்தனர் என்பது வேறுக்கதை.  இதை வாசிக்கும் எத்தனைப் பேருக்கு தெரியும் இரண்டு கின்னஸ் உலக சாதனை விருதுகளை கொண்டிருக்கிறது புடுச் சிறைச்சாலை என்று. உலகின் மிக நீளமான சுவரோவியத்திற்காக ஒரு உலகசாதனை விருதும்,  அந்த ஓவியத்தை வரைந்த சிறைக்கைதி கோங் யென் சோங் என்பவருக்கும் Guinness Stout Effort Award என்ற விருதும் வழங்கப்பட்டது.  


பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் ’X’ வடிவ அமைப்போடு வடிவமைக்கப்பட்டு1891 ஆம் ஆண்டில் அதன் கட்டுமானப் பணி தொடங்கியது. முன்னதாக அந்த நிலப்பரப்பு சீனர்களின் சடலங்களை புதைக்கும் சுடுகாடாகவும், புலிகளும் காட்டு விலங்குகளும் நடமாடும் வனமாகவும் இருந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளில் சிறைக்கைதிகளின் உதவியோடுதான் சிறைச்சாலை கட்டி முடித்திருக்கிறது பிரிட்டிஷ் அரசு.

தொடக்கத்தில் 600 கைதிகளுக்கு தண்டனைச் சாலையாக இருந்தது பின்னாளில் 6500 கைதிகள் வரை தண்டனை பெறுவதற்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்றால் சிறைச்சாலையின் மொத்த பரப்பளவு குறைத்த கேள்வியும் ஒரு அறையில் எத்தனை கைதிகள் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள் என்ற கேள்வியும் எனக்கும் எழவே செய்கிறது. 600 கைதிகள் அறைகளைக் கொண்டிருந்தது புடு சிறைச்சாலை.

காலை 7 மணியளவில் சிறைக்கதவுகளின் பூட்டு நீக்கப்பட்டு திரும்ப மாலையில் பூட்டு மாட்டும் வரை சிறைக்கைதிகளில் வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், அங்கும் குண்டல் கும்பல் சண்டைகள், பலிவாங்கும் நடவடிகைகள், தற்கொலைகள் ஆகியவை நடக்கும் என்பதை முன்னால் கைதியும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவருமான தான் ஆக் லேக்  ஒரு வரலாறு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி பதிவில் கூறியிருந்தார். அவரேக்கூட தற்கொலைக்கு முயற்சித்து அதில் தோல்வி அடைந்ததையும் பதிவு செய்திருந்தார். கேங் கே.எல் மற்றும் கேங் கிள்ளான் ஆகிய குழுக்களுக்கிடையே நடந்த சண்டையை இப்படி அவர் விவரித்தார்.

‘’இம்மாதிரியான குழு சண்டை மாலையில் நடக்கும். அப்படி நடக்கும்போது நிச்சயமாக யாருக்காவது மரணம் ஏற்படும். அதை தவிர்க்க முடியாது. கைதிகள் சிறையில் வேலை செய்யும் இடங்களில் ஆதாவது ஆயுத்ததை தயார் செய்துக்கொள்வார்கள். பல் துலக்கும் தூரிகைகூட ஆயுதமாக மாறும்” என்கிறார். இந்தக் கூற்றை மற்றொரு கைதியான ஊஜாங் உறுதி செய்திருக்கிறார்.

இப்படி ஏதாவது அசம்பாவிதம் நேரும்போது, வாடன் சம்பந்தப்பட்ட கைதியை தனிமைப்படுத்தும் நோக்கில் தனிச்சிறையில் அடைத்துவிடுவார். வெறும் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே அவருக்கு உணவாக வழங்கப்படும். அந்த அறை சிறியதாகவும் இருட்டாகவும் ஒரு வகை நாற்றம் வீசியபடியே இருக்குமாம்.  அங்கு 14 நாட்கள் இருக்க வேண்டும். எத்தனை மன உறுதி கொண்டவராக இருந்தாலும் அந்த அறை தரும் அனுபவம் அவரை ஒன்றுமில்லாமல் துவம்சம் செய்துவிடும் என்கிறார்கள். 

புடுச் சிறைச்சாலையில் நிறைய மறக்க, மறுக்க, மறைக்க முடியாத கருப்பு வரலாறுகள் இருக்கின்றன. அதில் முக்கியமாக சொல்லக்கூடியது சிறைச்சாலை கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஆண்டான 1895-லேயே நடந்தது. சுடுகாடு இருந்தபோது பயன்பாட்டில் இருந்த கிணற்று நீர்தான் சிறைக்கைதிகளின் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலிருந்த விஷக்கிருமிகளால் சிறைச்சாலையில் பரவிய  காலரா நோய் நூற்றுக்கணக்கான கைதிகளின் உயிரை குடித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

மலேசிய சிறைச்சாலை வரலாற்றில் பேசக்கூடிய இன்னொரு கருப்பு தினத்திற்கு சொந்தக்காரர் ஜிம்மி சுவா. சிறைச்சாலை மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஒருவர் என இருவரை சுமார் 6 நாட்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு நெருக்கடி கொடுத்தவர்தான் ஜிம்மி சுவா. சிங்கப்பூர் நாட்டுக்காரரான அவர் குண்டல் கும்பல், பயங்கரவாத நடவடிக்கைகள், துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கான்ஸ்டபிள் மொஹட் யாசின் என்ற போலீஸ்காரரை சுட்டுக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் புடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 1986 அக்டோபர் 17 அன்று, சிறையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் ஜிம்மி சுவா தலைமையிலான ஆறு கைதிகள் ஈடுபடுத்திய பணயக்கடத்தலில் அவ்விருவரும் சிக்கிக்கொண்டனர். ஆறு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 22 தேதியன்று மலேசிய காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை பிரிவு குழுவினரால் எந்த ஒரு அசம்பாவிதமும் நேராமல் அவர்கள் மீட்கப்பட்டு பணயக்கடத்தல் ஒரு முடிவுக்கு வந்தது. மலேசிய சிறைச்சாலை வரலாற்றில் அதற்கு முன்னும் அதன் பின்னும் இம்மாதிரியான ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது குறைப்பிடத்தக்கது. அதன் பின் சில நாட்களிலேயே ஜிம்மி சுவா தூக்கிலிடப்பட்டார்.   

புடு சிறைச்சாலை பிரம்படி தண்டனைக்கும் தூக்கு தண்டனைக்கும் பெயர்போன சிறைச்சாலையாகும். அதனாலேயே மலேசியாவின்மீது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்கூட விமர்சனங்கள் இருக்கின்றன.  புடு சிறைச்சாலையில் வியாழக்கிழமைதான் யாரை தூக்கில் போடப்போகிறார்கள் என்பதை அறிவிக்கும் நாள். அதனால் புதன்கிழமையே கைதிகள் ஒருவகை மிரட்சியில் இருப்பார்களாம். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். அதிகப்பட்சமாக மூன்று பேருக்கும், சில வேளை இருவர் என ஒருவருடமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.  தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.



பேராக் மாநில போலீஸ் அதிகாரியை கொலை செய்த குற்றத்தின் பேரில் இருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவர்களை தூக்கில் போட கொண்டுச் செல்லும்போது பாடிக்கொண்டே சென்றார்களாம். அவர்கள் பாடிய அந்தப் பாடல் பிற கைதிகளுக்கும் தெரியும் என்பதால் அவர்களும் சிறைக்கதவுக்குப் பின்னே அந்தப்பாடலை பாடினார்களாம். கைதியின் கழுத்தில் கையிரை மாட்டும்போதும், தொங்கவிடும்போதும்கூட அந்தப் பாடலை பாடுவதை கைதி நிறுத்தவில்லையாம். பாடல் அவர்களுக்கு மரணத்திற்கான தைரியத்தை கொடுத்திருக்கலாம் என்கிறார் புடு சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர்.  

1986-இல் போதைப்பொருள் குற்றத்திற்காகக் கெவின் பார்லோ, பிரியான் சேம்பர்ஸ் எனும் இரு ஆஸ்திரேலியர்களை புடு சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றியது இரு நாடுகளுக்குமான நட்புறவில் கிட்டதட்ட 10 ஆண்டுகள் சுனக்கம் ஏற்பட்டிருந்தது.

மலேசியாவில் 33 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மிக அதிகமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது  போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்குதான். இத்தனைக்கும் 1976-இல் தான்  மலேசியாவில் போதைப்பொருள் சட்டம் அமலுக்கு வந்தது.

அக்டோபர் 2019  Amnesty International’s அறிக்கை என்ன சொல்கிறது என்றால்  2018 பிப்ரவரி நிலவரப்படி 1,281 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர் என்றும், அவர்களில் 73% பேர் போதை மருந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என்றும் கூறுகிறது. தண்டனை பெறப்பட்டிருக்கும் 89% ஆண் கைதிகளில் 568 பேர் வெளிநாட்டினர். நைஜீரியா (21%), இந்தோனேசியா (16%), ஈரானியர்கள் (15%), இந்தியா (10%), பிலிப்பைன்ஸ் (8%) மற்றும் தாய்லாந்து (6%).  

மரண தண்டனையை ஒழிப்பதற்கு உலகப் போக்கைப் பின்பற்றுவதற்காக பல ஆண்டுகளாக அழுத்தங்களுக்கு உள்ளாகிய மலேசிய அரசாங்கம், 11 குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதாக 2018 இல் அறிவித்தது இங்கு குறிப்பிடதக்கது. இருப்பினும், மலேசியர்கள் மரண தண்டனையை தக்கவைக்க ஆதரவாக உள்ளனர் என்பதும் குறிப்பிடவேண்டிய விஷயமாகும்.


தலைநகரின் மிக முக்கியமானா மையத்தில் அமைந்திருந்த புடு சிறைச்சாலை  1996ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. அங்கிருந்த  கைதிகள் சுங்கை பூலோகாஜாங் சிறைச்சாலைகளுக்கு இடம் மாற்றப்பட்டனர். அதன் பின்னர் புடு சிறைச்சாலை ஓர் ஆண்டு காலத்திற்கு மட்டும் பொதுமக்களின் பார்வைக்கு அருங்காட்சியகமாகச் திறந்து விடப்பட்டது.  2010 ஜூன் மாதம் 22ஆம் தேதி புடு சிறைச்சாலையின் சுவர்கள் தகர்க்கப்பட்டன. அந்தக் கட்டிடத்தை உடைக்க வேண்டாம் என்று குரல் எழுப்பியவர்களுக்கு பல ஆயிரம் உயிர்களைக் காவு கொண்ட ஒரு சிறைச்சாலை வரலாற்றுச் சின்னமாக மாற முடியாது என்றும் சிறைச்சாலை  பெருமைப்படக்கூடிய இடமல்ல என்றும் அரசு பதில் அளித்தது.

மரணங்கள் ஆரம்பத்தில் இருந்தே அந்த இடத்தை வேட்டையாடிவருகிறது. கின்னஸ் சாதனை பெற்ற ஓவியச் சுவர்கள் இப்படிதான் இடிந்து வேட்டையாடப்பட்டு மண்ணாகி காற்றில் கலந்தன.

நன்றி: தமிழ்மலர் நாளிதழ் (18/7/2021)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக