வியாழன், 8 ஜூலை, 2021

தாமரைக் கொக்கி பாதத்தில் நுனிக்கால் நடனம்

''கால்களுக்கு பொய் பேச தெரியாது'' என்று சொல்பவள் நான்.  உண்மையாக வாழ்வதென்றால் கால்களாக வாழ்ந்துவிடலாம் என்ற வரியை நான் எழுதுகிறேன் என்றால் அந்த உணர்வு என்னவாக இருக்கும் என்று  சிந்திக்க தொடங்கினால் அச்சிந்தனையை நிறுத்துவது உங்களுக்கு கடினமாகும்.  வளர விடாமல் பல ஆண்டுகளாக இறுக கட்டிக்கொண்ட காரணத்தினால்  ஊனமடைந்த கால்களில் காமயுணர்ச்சியை ஒரு சமூகம் கண்டிருக்கிறது என்றால் அந்த மனநிலையை யோசித்துப் பாருங்கள்?  இதைப் பற்றி பேசுவதற்கு முன்னதாக…   

பல இன மக்கள் வாழும் மலேசியாவில், அவர்களின் கலாச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் பிற இனத்தவர்கள் தெரிந்துகொள்கிறார்களா? அப்படியே இருந்தாலும் அவர்களின் புரிதல் சரியாகத்தான் இருக்கிறதா? என் கேள்விக்கான காரணம், பள்ளி பாடப்புத்தகங்களிலும் பிற இனத்தவர்கள் குறித்த வரலாறு என்பது மேலோட்டமாகத்தான் இருக்கிறதே தவிர 50 சதவிகிதம்கூட  அதிகப்படியான தகவல்கள் இல்லை. உதாரணத்திற்கு  நம் நாட்டில் வாழும்பாபா ஞோஞா’ சமூகம் குறித்தும்  மலாக்கா செட்டி’ சமூகம் குறித்தும்  எழுதச்  சொன்னால் சிறு குறிப்பாவது மலேசியர்களால் எழுத முடியுமா என்பது  தெரியவில்லை.  

நாட்டில் இரண்டாவது பெரிய சமூகம்,  சீனச் சமூகம்தான். மூட நம்பிகைக்கும், கடவுள் நம்பிகைக்கும் கலை-கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்திய பாரம்பரியத்தை காட்டிலும் எவ்வகையிலும் குறைந்தது இல்லை சீனர்களின் கலாச்சாரமும் பண்பாடும். கூடவே மூட நம்பிக்கைகளும் சடங்குகளும்.  அதே போல பெண்களை ஒடுக்குவதிலும், பாலியல் ரீதியில் சுரண்டுவதிலும் அடிமைப்படுத்துவதிலும் சற்றும் சலைத்தவர்கள் இல்லை இவர்கள். இந்தியர்களிடையே தேவதாசி முறை இருந்தது போன்று இவர்களிடத்திலும் இருந்திருக்கிறது. உடன்கட்டை ஏறுவதற்கு பதிலாக இறந்த கணவனோடு (அரசனை) பல மனைவிகளை ஒரே குழியில் உயிரோடு புதைக்கும் பழக்கம்  இருந்திருக்கிறது.


கற்பனைக்கு எட்டாத எத்தனையோ எத்தனையோ ஒடுக்குமுறைகளோடு வாழ்ந்து அதை உடைத்து, போராடி வெளியில் வந்திருக்கும் பெண்கள் குறித்த நிறைய சம்பவங்களும் ஆவணங்களும்  நம்மிடையே இருக்கின்றனவிண்ணுலக கதைகளிலிருந்து மண்ணுலக கதைகள்  வரை இந்த  உலகம்  பெண்களுக்கு கொடுத்திருக்கும் அடிமை முறை வழக்கத்தில் மாறுபட்டிருந்தாலும் வலி ஒன்றுதான்.  அந்த வரிசையில் சீன சமூகத்தில் பிரபலமாக இருந்த கால்கட்டும் கலாச்சாரம் சம்பந்தமான ஒரு பார்வைதான் இந்தக் கட்டுரை.  ஊனமடையும் இந்தக் கால்களுக்கு  தாமரைப் பாதங்கள் அல்லது தாமரைக் கொக்கிப் பாதங்கள் (lotus hooks)  என்று பெயர்.

மேலை நாட்டுப் பெண்கள்  தங்களின் உடையை அணிவதற்கு முன்பு தங்களின் உடலை இறுக்கி கட்டுவார்கள். உடல் எடை கூடாமல் இருப்பதற்காகவும் சின்ன இடைக்காகவும் அப்படி கட்டுவார்கள். அப்படி கட்டும்போது அவர்களால் ஓர் அளவுக்கு மேல் உண்ணவும் முடியாது. உடல் எடை சிறுத்துப்போய் இருக்கும். பழைய ஆங்கிலப் படங்களில் உடலை  இறுக்கி கட்டும் காட்சிகளை காண முடியும். அது வலி நிறைந்த ஒன்று மட்டுமல்ல அதற்கு பின்னாலும்கூட அடிமைத்தனமும் பெண் உடல் சுரண்டலும் இருக்கிறது. 

அதுபோலவே சீனாவில் பெண்கள் தங்கள் கால்களை வளர விடாமல் கட்டிப்போடும் பழக்கம் கலாச்சாரமாக இருந்திருக்கிறது. அதை ஒரு சடங்காகவே பெண்களுக்கு வைத்திருந்திருக்கிறார்கள்.  அந்தப் பழக்கத்தை  மலேசியாவுக்கு வரும்போதும் கூடவே கொண்டும் வந்திருக்கிறார்கள் சிலப் பெண்கள்.  சில காலம்வரை இங்கு வாழ்ந்த சீன பெண்களிடத்தில் அந்தக் கலாச்சாரம்  இருந்திருக்கிறது. கால்களை கட்டுவதென்பது பெண்களின் பாதங்களை மடித்து கட்டுவதாகும்.  தன் இயல்புக்கு வளரவிடாமல் தடுக்கும் போன்சாய் மரங்களைப்போல,  கால்களை வளரவிடாமல் பெண்கள் தங்கள் கால்களை குழந்தை கால்களைப் போல  வைத்துக்கொள்வார்கள். இப்படி கட்டும்போது அவர்களால் இயல்பாக நடக்கவோ, வேலை செய்யவோ முடியாது.      

பெண்களுக்கு கால்களைக் கட்டும் சீன கலாச்சாரம் பழங்காலத்திலிருந்தே சீனாவில் பரவலாக நடைமுறையில்  இருந்திருக்கிறது.   சியா வம்ச ஆட்சியில் இந்த நடைமுறை தொடங்கியதாக நம்பப்படுகிறது.  அதே வேளையில் பத்தாம் நூற்றாண்டில் ‘தாங்க்’  ஆட்சியிலும் இந்தக் கலாச்சாரம் இருந்திருக்கிறதாக விக்கிபீடியா தகவலில் சொல்லப்பட்டிருக்கிறது.  இந்தக் கலாச்சாரம் தொடர்பாக விக்கிபீடியாவில் சொல்லப்பட்டிருக்கும் பல தகவல்களில் அதிர்சியான தகவல் ஒன்று இருக்கிறது.  ‘சோங்’  பேரரசின் இறுதி காலக்கட்டத்தில் ஆண்கள்,   தாமரை பாதங்கள் கொண்டிருந்த பெண்களின் ஊனமடைந்த கால்களுக்கு அணியும் சிறப்பு காலணியில் நேரடியாகவே மது ஊற்றி அருந்துவார்களாம்.

 சீனர்களைப் பொறுத்தவரை, பண்டைய சீன ஆண்கள் சிறிய கால்களைக் கொண்ட பெண்களைத்தான் அதிகம்  விரும்புவதாக  கூறப்படுகிறது, ஏனெனில் அவை பெண்ணின் அழகையும் வளத்தையும் அடையாளப்படுத்துகிறதாம்.  மிக நேரடியாக அவை காமத்தில் திறப்புக்கோலாக இருக்கிறது. சீனப் பெண்கள் சமுதாயத்தில் தங்கள் நிலையை நிலைநிறுத்திக்கொள்ள கால்களைக் கட்ட வேண்டும்.  அதுவும்  இந்தக் கலாச்சாரமானது  உயர்குடி மக்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தது.  மேட்டுக்குடிகளின் சடங்காக இருந்த இந்தக்  கலாச்சாரம் பின் அனைத்து  சீன பெண்களிடத்திலும் அழகுக்குரிய அடையாளமாக  ஏற்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கால்களுக்கான தயாரிப்பை பெண்கள்  4 வயது  தொடங்குவதற்கு முன்பே ஆயுத்தப்படுத்த வேண்டும்.  அதுவரைதான் பெண்களுக்கு சுதந்திரமாக தங்கள் பாதங்களை பூமியில் பதிக்க அவர்களின் சமூகம்  அனுமதித்திருக்கிறது.  இயல்பு நிலையில் நடமாடிக்கொண்டிருந்த பிஞ்சுக் கால்கள்  மிகவும் நேர்த்தியாக மூடப்படும். வசதி படைத்த மேட்டுகுடி பெண்களின் பாதங்கள் பட்டுத்துணியாலும், வசதியற்றவர்கள் சாதாரண துணியாலும், கட்டைவரலை மட்டும் விட்டுவிட்டு மற்ற  விரல்களை  வளைத்து பாதத்தோடு சேர்த்து கட்டப்படுகிறது.  அதற்கு முன்பு அந்தச் சின்னக் கால்களை  மூலிகை, சிறுநீர் அல்லது  மாமிச ரத்தங்களால் நிரம்பிய குடுவையில் ஊறவைத்து   சிறுமியின்  கால்விரல் எலும்புகள் உடைக்கப்படும்.  சரியாக உடையாத எழும்புகள்  மடித்து நடக்கும்போது மெல்ல மெல்ல தானாக உடைபடும். இச்சடங்கிற்கு அவர்கள் குளிர் காலத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.  உடைத்த பாதங்கள் துணியால் இழுத்து இறுக்கி மூடி கட்டப்படும்.   

இவர்களுக்காக பிரத்தியேக காலணிகள் தைக்கப்படும். அவை துணியால் ஆனவையாகவும் வேளைபாடு கொண்டவையாகவும் இருக்கும். மூன்று அங்குல கால்கள் சாத்தியப்பட்டால் அதுதான் முதல் தர தாமரைக் கால்களாக அந்தப் பெண் “டிமாண்ட்”  செய்யப்படுவாள்.  நடக்கவே சிரமமாக இருக்கும் இந்தக் கால்களால் ஒரு பெண் நடனமாடுவது யோசித்து பார்க்க முடியாத ஒன்று. ஆனாலும், இந்தக் கால்களில் ஆடும் நுனிக்கால் நடனம் சீன வம்சத்தில் பிரபலமாக இருந்திருக்கிறது. அப்படி ஆடும் பெண்ணும் உயர்ந்த அந்தஸ்துக் கொண்டவளாக  அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறாள்.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றுமொரு விடயம் என்னவென்றால் பெண்களுக்கு  பாத எழும்புகள் உடைக்கப்பட்டு மடித்து கட்டியிருந்தாலும் கூட சிறிய இடைவெளிவிட்டு இரு கால்களையும் துணியில் கட்டிவிடுவார்கள். இதன் காரணத்தினால் தரையை தேய்த்த படிதான்  அவர்களால் நடக்க முடியும்.  வேகமாக அடியெடுத்து வைக்க முடியாது.  இதற்கெல்லாம்  மூலகாரணத்தை ஆராய்ந்தால் பெண்களின் கன்னித்தன்மையில் வந்து நிற்கிறது. சீனப் பெண்களின் கன்னித்தன்மை  கிழியக்கூடாது என்பதற்கான காப்பு அது. மேலும் அவர்களின் அந்தரங்க உறுப்பு  சுறுங்கி இறுக்கமாக இருக்கவும் இந்த முறை பின்பற்றப்பட்டிருக்கிறது.  இந்த அனைத்துச் சடங்குகளும் தேவையும் ஆண்களின் பாலியல் தேவைக்காக மட்டுமே தயார் படுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு அவர்களிடத்தில் காமசூத்திரத்திற்கு  முன்னுரிமை இருந்திருக்கிறது. தீராத நோயையும் பாலியல் உறவைக்கொண்டு தீர்க்க முடியும் என்று சீன சாஸ்திரம் சொல்கிறது.

சாகும்வரையும் தங்கள் கால்களைக் கட்டிகொண்டு வாழும் பெண்கள் தன்னோடு இணையும் ஆணுக்கு மட்டுமே அந்தக் கால்களை திறந்து காட்டுகின்றனர்.  தனக்கு மட்டுமே திறக்கப்படும் அந்த ஊனமான குட்டையான  கால்களை காணும் ஒரு ஆணுக்கு  காமவுணர்வு உச்சத்தை தொடும் அதே வேளையில் அக்கால்கள் அதிர்ஷ்டத்தின்  வாசல் கதவாகவும் அவர்களுக்கு இருப்பதாக நம்பப்பட்டிருக்கிறது.   

மிக எளிதான நடமுறையில்லை இந்தப் பாதம் கட்டுதல், கால் அழுகி போகுதல், தொடர்ந்து கால்களில் ரத்தம் வெளியேறுதல் காரணமாக மரணம் கூட நிகழும். வலி என்பது மூச்சு இழுத்து விடுவதுபோல நிரந்தரமான ஒன்றாகிவிடுகிறது.    

இந்தக் கற்பனைக்கு எட்டாத கலாச்சாரமானது 20 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளின் ஆதிக்கம் தொடங்கியபோது  படிப்படியாக மறைய தொடங்கியிருக்கிறது.  1911- ஆம் ஆண்டில் சீனக் குடியரசு உண்டானப் பிறகு பல பெண்கள் இந்த பண்டைய பாரம்பரியத்தை படிப்படியாக கைவிடத் தொடங்கியிருக்கின்றனர்.  ஆனாலும் ஒரு சாரார் அதை பின்பற்றிதான் கொண்டிருந்திருக்கின்றனர்.  இந்தக் கால்கட்டும் சடங்கின் ஈடுபாடு மற்றும் எதிர்ப்புக்கு பின்னால்  தாவோ மற்றும் கன்ப்ஃயூஷியஸ் மத தலையீடுகளும் இருக்கிறது.   மலேசியாவில் இந்த மாதிரியான குட்டை கால்கள் கொண்ட பெண்களை கண்டிருப்பதாக பலர் கூறி நான் கேட்டதுண்டு.  

என்னுடைய பெரியப்பா ஒரு சீனர்.  பெரியப்பாவின் அம்மாவின் கால்கள்  குட்டி கால்களாக இருப்பதைப் பார்த்து பெரியம்மா  அவரிடம் விசாரித்ததற்கு குழந்தையிலிருந்து கால்களை கட்டி இப்படி ஆக்கி கொண்டதாக அவர் சொல்லியிருக்கிறார். இது 1985-ஆம் ஆண்டு நடந்த உரையாடலாகும். பெரியம்மா அவரைக் காணும்போது கால்கள் குழந்தை கால்களைக் போல இருந்ததே தவிர, கால்களை கட்டுவதையும் அடுத்த தலைமுறைக்கு  அதை கொண்டுச் செல்வதையும் அவர்கள் நிறுத்தியிருந்தனர்.

1947 ஆண்டு எழுதப்பட்ட ‘கடல் கடந்த தமிழன்’ என்ற புத்தகத்தில் சீனப் பெண்கள் கால்களில் இரும்பு கவசம் போட்டும், கால் வளராமல் செய்து குறுகிய கால்களுடனும் இருந்தனர் (ப.107) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடதக்கது.  

நாட்டிற்குள் வணிகம் செய்ய சீனர்கள் வந்திறங்கிய மலாக்கா மாநிலத்திலிருந்து இந்த தாமரைக் கொக்கி பாத கலாச்சாரத்தையும் பெண்கள் கொண்டு வந்ததோடு சில காலங்கள் வரை இங்கே பின்பற்றி வந்ததற்கான தரவுகள் இருக்கின்றன. குறிப்பாக மலாக்கா மாநிலத்தின் பட்டணத்தில் தாமரைக் கொக்கி பாதங்களுக்கு காலணி தைத்து விற்பனை செய்யும் காலணி கடை இன்னும் செயற்பாட்டில் இருக்கிறது.  தாமரை பாதத்தின் காலணிகள் தற்போது நினைவுச்சின்னங்களாக விற்கப்படுவதோடு அந்தக் கடை  சுற்றுப்பயணிகளுக்கு  அருங்காட்சியகமாகவும் இருக்கிறது. 


2010-ஆம் ஆண்டு இணைய செய்தி நிறுவனம் செகின்ச்சான் எனும் வட்டாரத்தில் வசித்து வந்த 93 வயது தாமரைக் கொக்கி பாதம் கொண்ட சீனப்பெண்ணை சந்தித்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். லிம் குவான் சியூ என்ற பெயர் கொண்ட அந்த முதிய பெண்மணி அதுகுறித்து பேசுகையில்  தாமரை கொக்கி பாதம் உயர்தர அழகுக்கொண்டது என்று சீனாவில் கூறுவார்கள், உண்மையில் அது தவிர்க்க வேண்டிய தலைவிதி என்கிறார் குவான் சியூ. அதோடு தனக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படுவதாக இருந்தால் இந்தக் கால் கட்டும் சடங்கை நான் நிராகரிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மரண தண்டனைக்கும் இணையான ஒரு தண்டனையாகத்தான் இந்தப் பாதம் கட்டும் சடங்கு எனக்கு தெரிகிறது. ஒரு இஞ்ச் அளவு சிறிய காலணியை அணிந்தாலே கால்வலி உயிரை எடுத்துவிடும். எப்போது அதை கிளட்டி எறிவோம் என்று மனம் அலைக்கழிக்கும்போது  இந்தப் பெண்கள் வாழ்நாள் முழுவதும்  வலியை அனுபவிக்க தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் புரையோடிப்போன அடிமைத்தனத்திற்கு வேறு என்னதான் சாட்சி.        

-யோகி

 நன்றி உயிர் எழுத்து இதழ் (ஜூலை 2021)

1 கருத்து:

  1. ஆய்வுகளோடு தரப்பட்டுள்ள மிகச்சிறந்த கட்டுரை. தமிழில் இது தொடர்பான முதல் கட்டுரையும்கூட. ஒரு மர்ம நாவலைப் படித்து முடிப்பது போல சுவைபடவும் வலியுடனும் எழுதியுள்ள யோகிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு