வியாழன், 5 ஆகஸ்ட், 2021

“கற்பழிப்பு” என்று எழுதுவதையும் கூறுவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள்!


“கற்பழிப்பு” என்று எழுதுவதையும் கூறுவதையும் மலேசிய ஊடகங்கள் முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். மிகவும் அருவருப்பாகவும் சகித்துக்கொள்ளமுடியாத நிலையிலும்தான் இதை நான் கூற வேண்டியிருக்கிறது. இலங்கை மற்றும் தமிழ்நாட்டு ஊடகங்கள் கிட்டதட்ட அப்படி எழுதுவதை நிறுத்திகொண்டு வருவதோடு ‘கற்பழிப்பு’ என்று எழுதும் பட்சத்தில் மிக கடுமையான விமர்சனத்தையும் கண்டனத்தையும் அவை எதிர்நோக்குகின்றன. குறிப்பாக பெண்ணியவாதிகளும் இடதுசாரி சிந்தனைக் கொண்ட தோழர்களும் மிக காந்திரமாகவே அவ்வார்த்தைக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கின்றனர். ஆனால், நமது நாட்டில் அந்த வார்த்தை மிகச் சாதாரணமாக பயன்பாட்டில் இருக்கிறது. அந்த வார்த்தையை உச்சரிக்கும் யாருக்கும் நா கூசவில்லை. அதில் இருக்கும் ஒடுக்கும்முறை மற்றும் முரண்பாட்டை உணரவும் இல்லை. 



கற்பு + அழிப்பு= கற்பழிப்பு. ஒரு பெண்ணின் கற்பு அழிக்ககூடியதா? அல்லது அழிக்கத்தான் முடியுமா? முதலில் கற்பு என்பது ஒரு பெண்ணின் உடலில் எங்கு இருக்கிறது? அவளது உடலிலா, மனதிலா அல்லது அவளின் பாலுறுப்பிலா? பெண்ணின் மீது தூக்கி கட்டி வைத்திருக்கும் கற்பு எனும் மூட்டையை இந்த சமுதாயம் எப்படி முடிச்சிப்போட்டு அவிழ்க்க முனைகிறது?  

 கற்பு நிலை என்று வைத்தால் அது பெண்ணை மட்டுமே சார்ந்தது இல்லை என்றும் கற்பு நிலையை ஆண்-பெண் இருவருக்கும் பொதுவில் வைப்போம் என்றும் ஆண் இனத்துக்கு அறிவூட்டினார் பாரதி. ஆனால், பாலியல் பலாத்காரம் நடக்கும்போது பெண்ணின் கற்பு அழிந்துவிட்டதாக இந்த ஊடகங்கள் செய்திவெளியிடுவது முரண்பாடாக இல்லையா? ஒரு பெண்ணின் சம்பதமில்லாமல், வன்முறையாக நடக்கும் பாலியல் அத்துமீரலை, பாலியல் பலாத்காரத்தை, பாலியல் வல்லுறவை, பாலியல் வன்புணர்வை, கற்பழிப்பு என்று அப்பெண்ணை கொச்சைப்படுத்தும் விதமாகவே ஊடகங்கள் எழுதுகின்றன. ஊடகங்கள் அவ்வாறு எழுதுகிறது என்றால் காட்சி ஊடகத்தில் அவ்வாறு ஒரு நிருபர் செய்தி வாசிக்கிறார் என்றால் அவ்வார்த்தையை ஊடகங்கள் ஏற்றுக்கொள்கின்றன என்றுதானே பொருளாகிறது. 


சிலர் Rape என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் மொழிபெயர்பாக கற்பழிப்பு என்றச் சொல்லை சொல்கின்றனர். திருத்தப்பட்ட கிரியா தமிழ் அகராதியில்கூட அந்த வார்த்தை திருத்தப்பட்டு விட்டாலும், பெண்களுக்கு ஆதரவான போராட்டங்களின் ஏற்படும் மாற்றங்களும் திருத்தங்களும் ஏனோ பலரின் கவனத்தை ஈர்க்காமலே இருக்கிறது. அது ஈர்க்காமல் இருக்கிறதா அல்லது திட்டமிட்டே இந்தச் சமூகம் மாற்றத்தை காண மறுக்கிறதா என்பது அவரவர்களுக்குதான் வெளிச்சம். 

கற்பழிப்பு என்ற வார்த்தைக்கு எதிராக 1997-ல் இலங்கையில் பெரிய போராட்டமே நடந்தது. உள்நாட்டுப் போரில் கோணேஸ்வரி என்ற பெண் போராளி பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு கொடூரமாக கொலைசெய்யப்பட்டார். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கோணேஸ்வரி, போலீஸ்க்காரர்களால் அவர் குடும்பத்தினர் முன்னிலையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அந்தத் தடையத்தை அழிக்கும் நோக்கில் அவரின் பெண்ணுறுப்பில் வெடிகுண்டு வைத்து சிங்கள போலீஸ்காரர்கள் படுகொலை செய்தார்கள். 

ஊடகங்கள் கொணேஸ்வரி கற்பழித்து கொலைசெய்யப்பட்டார் என்று எழுதியபோது சமூக செயற்பட்டாளர்களும் பெண்நிலை சிந்தனையாளர்களும் அந்த இக்கட்டான நிலையிலும் இடைவிடாத போராட்டத்தை நடத்தினர். பெண்கள் மீது திணிக்கப்படும் வன்முறையாகத்தான் அந்த வார்த்தை இருக்கிறது என்றும் கற்பு என்ற ஒற்றைச்சொல்லில் பெண்களை ஒடுக்கிவிடும் கேடுகெட்ட செயலை இனியும் தொடராமல் நிறுத்திக்கொள்ளுங்கள் என்று பெண்ணியவாதிகளின் வாதம் பெரியதொரு தாக்கத்தினை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இலங்கையில் கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துவதை ஊடகங்களும், எழுத்தாளர்களும் தவித்து வருகின்றனர். இன்று வரை அந்த வார்த்தைக்கு எதிரான எதிர்ப்பு அப்படியேதான் இருக்கிறது. 

இலங்கை போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டிலும் கற்பழிப்பு என்ற வார்த்தையை தவிர்க்க வேண்டும் என்றும் தவிர்த்தும் வருகிறார்கள். குறிப்பாக பெண்ணிய செயற்பாட்டாளார்கள் கற்பழித்தல் என்ற சொல் வழக்கொழிந்து போக வேண்டும் என்று மிகக் கடுமையாகவே அதை வழியுறுத்தி வருகின்றனர். 

பெண் கற்புள்ளவள், அவளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினால் பலாத்காரம் செய்தவனுக்கே அவளை கல்யாணாம் செய்துவைத்துவிட்டால் அவளின் கற்பு காப்பாற்றப்படும் என்ற சிந்தனையெல்லாம் அப்பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய வன்முறையாகும். மாறாக அவனுக்கு சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை கொடுப்பது மட்டும்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களை தடுக்கும் ஒரே வழி. அதை விடுத்து அவள் கற்பு உள்ளவளா அல்லது கற்பழிக்கப்பட்டவளா என்று சான்றிதழ் வழங்குவதல்ல. இது ஒரு கொரூர புத்தியின் வெளிப்பாடாகும்.

பெண்ணுக்கு, ஆணுக்கு, குழந்தைகளுக்கு, வளர்ப்பு பிராணிகள், உள்ளிட்ட யாருக்கு பாலியல் தொந்தரவுகள் அல்லது அத்துமீரல்கள் நடந்தாலும் அதை கற்பழிப்பு என்று சொல்வது நிச்சயமாக தவறுதான். “கற்பழிப்பு’’ என்று சொன்னால்தான் அந்த வலி நேரடியாக மக்களை தாக்கும் என்பதெல்லாம் அறிவீனத்தின் உச்சம். தயவு செய்து நிறுத்துங்கள். கற்புள்ளவர்களா அல்லது கற்பிழந்தவர்களா என்ற ஆராய்ச்சியினை ஊடகங்கள் செய்திவெளியிடுவதை நிறுத்திக்கொண்டு தயவு செய்து அந்த வார்த்தையை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். 

பாலியல் வன்புணர்வுக்கும் பாலியல் வன்முறைக்கும் அர்த்தம் புரிந்துகொண்டு தயவு செய்து செய்தி வெளியிடவும். பொத்தாம் பொதுவாக கற்பழிப்பு என்ற தடைசெய்யப்பட வேண்டிய வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.

நன்றி தமிழ்மலர் 8/8/2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக