வியாழன், 5 ஆகஸ்ட், 2021

செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 1

பல தலைமுறைகளுக்கு முன்பு, நடந்த சம்பவம் என்றுசெமாய்பூர்வக்குடி இனக்குழுக்கிடையே நம்பப்படும் ஒரு கதை .

 பழங்குடி கிராமத்தின்தோக் ஹாலா’, அதாவது வைத்தியர். வைத்தியர் சாமியாடியாகவும் இருப்பார்.  பூர்வக்குடி மக்களிடத்தில் நினைத்தவரெல்லாம் வைத்தியர் ஆகிவிட முடியாது. அதற்கு முன்னோர்களின் உத்தரவு, மிக முக்கியம். அது கிடைத்தால் மட்டுமே, பூர்வக்குடி சமூகத்தில் ஒருவர் வைத்தியராக முடியும். தவிர, ஒரு சமூகத்தில் ஒரு வைத்தியர்தான் இருப்பார். அதனால் வைத்தியருக்கு பெரிய பொறுப்பும் முக்கிய அந்தஸ்தும் எப்போதுமே பூர்வகுடி சமூகத்தில் அதிகமாக இருக்கிறது.  செமாய் மக்களை பொறுத்தவரை பரம்பரை பரம்பரையாக  ‘தோக் ஹாலாஆவதில்லை. அந்த சக்தியானது அவர்களுக்கு இயற்கையாகவே இருக்க வேண்டும்.  சில சோதனைகள் அடிப்படையில்  ஒருவர் ‘தோக் ஹாலாஆவார்.  ஒருவேளை அந்தச் சக்திவாய்ந்தவர்  கிடைக்கவில்லை என்றால் யாருமே ‘தோக் ஹாலாஆவதில்லை.  ஒரு கிராமத்து ‘தோக் ஹாலாவேறு கிராமத்து ‘எல்லையை’ தாண்டி வைத்தியம் பார்க்க அனுமதியில்லை.

கதைக்கு வருகிறேன்.  சில தலைமுறைகளுக்கு முன் நடந்தது.

தோக் ஹாலா’-வுக்கு ஒரே கனவு, தொடர்ந்து தினமும் வந்துக்கொண்டே இருந்தது. ஒரு பெண், தினமும் அவரை நாடி வருவதுபோலவும், அவருடன் இணைந்து இருப்பது போலவும்.  அந்தக் கனவு அவரின் தூக்கத்தை தொந்தரவுச் செய்தது. அந்தப் பெண் யார் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் அந்தப் பெண் நிஜத்தில் தோன்றினாள்.  அந்தப் பெண்ணை தோக் ஹாலாதிருமணமும் செய்துக்கொண்டார். திருமண வாழ்கை சந்தோஷமாகப் போய்கொண்டிருந்தது.



ஒரு நாள், செமாய் சமூக மக்கள், ஆற்றில் மீன் பிடிக்க புதிய வழியை மேற்கொள்ளப்போவதாகதோக் ஹாலாவிடம் கூறியிருக்கின்றனர்.  அதாவது விஷம் வைத்து, அதை உண்ணும் மீன்கள் செத்து மிதக்கும்போது சேகரிக்க வேண்டியது. இந்த விவரத்தை தன் அன்பு மனைவியிடம்தோக் ஹாலாபகிர்ந்துக்கொள்ள, அதை செவிமடுத்த அந்தப் பெண் மிகவும் கோவமடைந்து, நிச்சயமாக அப்படி செய்யக்கூடாது என்றும் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்கிறாள். இந்த விவரத்தைதோக் ஹாலாதன் சமூக மக்களிடத்தில் தெரிவித்தார். ஆனால், எங்கிருந்தோ வந்த ஒரு பெண்ணின் வார்த்தையை ஏன் கேட்க வேண்டும் என்று உதாசீனம்  செய்த செமாய் சமூக மக்கள், அவர்கள் பேசியபடியே மீன்களுக்கு விஷம் வைத்தனர். இதை அறிந்த அந்தப் பெண், கனத்த கோபத்துடன் அனைவருக்கும் சாபம் கொடுத்தாள்.

அதன் காரணமாக விஷம் வைத்து சாகடித்த மீன்களை உண்டவர்கள்;  உறவினர்களிடம், நண்பர்களிடம் மீன்களை வாங்கிச் சென்றவர்கள்;  அனைவரின் வீடுகளும் மண்ணுக்குள் புதைந்து போயின. மண் விழுங்கிய அவர்களை, மீட்டுக் கொண்ட வர எந்தச் சக்தியாலும் முடியவில்லை. அந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த சக்திவாய்ந்தப் பெண்ணை செமாய் சமூகம் நாக தேவதையாக வழிபட்டு வருகின்றனர்.    

பஹாங் மாநிலசுஙாய் சுவாஎன்ற  நதிக்கரையில் நடந்த இந்தக் கதையை வழிவழியாக தங்கள் சந்ததியினருக்கு சொல்லி வருகின்றனர் இந்தச் சமூகத்தினர். இதைக் கற்பனைக் கதை என்று சொன்னால்,  அவர்கள் மிகுந்த சினம் கொள்கின்றனர்.  இக்கதை மட்டுமல்ல அவர்களின் சமூகத்தில் நடந்ததாக நம்பும் எந்தக் கதைக்கும் நாம் ஆதாரம் அல்லது அதன் நம்பகத் தன்மையை கேள்வி எழுப்பினால் அவர்கள் கோவமடைகிறார்கள்.

மலேசியாவில் மூன்று பிரிவுகளில் 18 சமூக பூர்வக்குடிகள் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். அந்த 18 சமூகத்திற்கும் தனித்த வரலாறும், பாரம்பரியமும், மொழியும் உண்டு. நாடு முழுக்க இருக்கும் 869 பூர்வக்குடி கிராமங்களில் 2% கிராமங்கள் வனத்தை விட்டு பட்டணங்களுக்கு அருகில் அல்லது பட்டணங்களில் வசிக்கிறார்கள். இந்த இடமாற்றத்திற்கு பின்னாள் பூர்வக்குடிகள் இழந்ததும் இன்னும் இழந்துக்கொண்டிருப்பதும் கொஞ்ச நஞ்சமல்ல.  


கம்போங் திஜா, கம்போங் டேபில் உள்ளிட்ட 10 கிராமங்களை உள்ளடக்கியதுதான் போஸ் லானாய் குடியிருப்பு. சுமார் 14,418 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவர்கள் அனைவருமே, செமாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஒரு காலத்தில் சுமார் 10,000 பேர் இருந்திருக்கிறார்கள்.

தெலோம் நதியை ஒட்டி அமைந்திருக்கும் செமாய் பூர்வக்குடிகளின் குடியிருப்புகளில் ஒன்று கம்போங் பன்தோஸ். இது மிக சமீபத்தில் உருவான குடியிருப்பாகும். காட்டின் உள் பகுதியில் வாழ்ந்துவந்த 800-க்கும் அதிகமான ஆதிவாசிகளை, மின்சார வாரியம் ‘TNB’ மேம்பாட்டுக்காக வெளியேற்றி அவர்கள் தங்குவதற்கு கட்டிகொடுக்கப்பட்ட செட்டல்மெண்ட் கிராமம்தான் கம்போங் பன்தோஸ். இந்த மேம்பாட்டில் அதிருப்தியடைந்த சில பூர்வீகவாசிகள் தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, போராடி நிலத்தை மீட்டனர்.

சுமார் 100 ஆதிவாசிகள் மீண்டும் தங்கள் சொந்த வனத்தில்  வீடுகட்டிக்கொண்டு வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.  அந்தப் பூர்வீக வாழ்விடத்தில்  இருநாள்கள் தங்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அவர்களின் வாழ்க்கை முறை, உணவு, வீடு, நடவடிக்கைகள் என சிலவற்றை உடனிருந்து காணக்கூடிய வாய்ப்பை நான் எனதாக்கிக்கொண்டேன். 

தொடரும்...

1 கருத்து: