ஞாயிறு, 26 ஜனவரி, 2020

தோழர்களின் காதல்…


பொதுவுடமையை பின்பற்றும் சித்தாந்தவாதிகளால் காதலிக்க முடியுமா? அவர்களின் மாபெரும் மக்கள் புரட்சிக்கு காதல் என்ன பங்காற்றுகிறது? காதல் தோல்வியினால் மூளையும் மனமும் சிந்திப்பதை இழந்து தன்னையே மாய்த்துக்கொள்கிறவர்கள் மத்தியில்  தோழர்களின் வாழ்க்கையில் காதல் முக்கியப் பங்காற்றுகிறதே அது எப்படி?

பிப்ரவரி 14 காதலர் தினம். உலகம் முழுவதும் இந்த நாளை காதலர்கள் கொண்டாடுகிறார்கள். சிலர் இந்த நாள் தேவைதானா என்று பட்டிமன்றம் வைக்கின்றனர்.  நான் இந்த நாளுக்காக ஜெனி, கார்ல் மார்க்ஸ்  தோழர்களின் காதல் கதையையும், உலகருந்த அறிஞர்கள் காதலைப் பற்றி கொண்டிருக்கும் நிலைப்பாட்டு வரிகளையும் பகிர்ந்துக்கொள்ள வந்திருக்கிறேன்.  


  ஜெனி, கார்ல் மார்க்ஸின் காதலி

மனித வாழ்க்கைக்கு புதிய சித்தாங்களை தந்த காரல்மார்க்ஸின் காதல் கதை மிக சுவாரஸ்யமானது. ஆரம்ப பள்ளியில் படிக்கும்போதே  காதல் வசம் விழுந்தவர் இவர். தன் காதலிக்காக காதல் கடிதங்கள் அப்போதே எழுத தொடங்கிவிட்டார்.  ஜெனி மார்க்ஸின் காதலி.  அவளைப்போல காதலை ஒருவரால் காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை. மிக பெரிய செல்வந்தரின் மகளான ஜெனி, மார்க்ஸின் காதலை நிராகரித்துச் செல்வதற்கான பல காரணங்கள் ஏற்பட்டும் அதை ஒரு காரணமாகவே அவர் கொள்ளவில்லை.  மார்க்ஸின் அம்மா "ஒரு யூதன், ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்வதை  ஒப்புக்கொள்ளவே மாட்டேன்" என சொல்லிவிட்டார்தன் சுய சம்பாத்தியத்திற்காக ஜெனியை தனக்காக காத்திருக்க சொல்லிவிட்டு வெளிநாடு செல்கிறார் மார்க்ஸ்.  ஏழு ஆண்டுகள் காத்திருக்கிறாள் ஜெனி.  பின் நண்பர்கள் உதவியுடன் பாரிஸில் மார்க்ஸுக்கு  வேலை கிடைகிறது. மிக சாதாரணமாக  5 பேர் முன்னிலையில் ஒரு தேவாலயத்தில்  ஜெனியை பதிவு  திருமணம் செய்து செய்துகொள்கிறார் மார்க்ஸ்.

தேன் நிலவுக்காக கொஞ்சம் பணமும்  பத்து பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் மார்க்ஸ். அதற்கு ஜெனி நாம் இருவரும் சேர்ந்தே படிப்போம் என்று கூறியுள்ளார்.  தேன் நிலவு காலத்தில், வீட்டை பூட்டமறந்துவிட்டு இயற்கையை ரசிக்க சென்றுவிட்டார் மார்க்ஸ். திருடன் வீட்டில் இருக்கும் அத்தனை பணத்தையும் திருடிவிடுகிறான். இதை ஜெனியிடம் அவர் சொல்ல, ஜெனி சிரித்துக்கொண்டே, " நாமும் இனி உழைக்கும் வர்க்கம் ஆகிவிட்டோம் என்கிறார். 

அவர்களுக்கு பிறந்த 4 குழந்தைகளும் வறுமையின் பசிக்கு இரையாகிறார்கள். இறுதியில் நோய் வாய்பட்டு ஜெனியும் இறந்துபோகிறார்.  மார்க்ஸும் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கிறார்.  ஜெனியின் இறுதி அஞ்சலிக்கு கடிதம் எழுதி அனுப்பினார் மார்க்ஸ்
"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்" என்று அதில் எழுதியிருந்தார். ஜெனியும் அவரின் காதலும் இல்லாமல் இருந்திருந்தால் உலக மாமேதையான காரல்மார்க்ஸ் அவரின்  மாபெரும் சித்தாந்தத்தை படைத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. காதல் கடிதங்களில் ஆரம்பித்த ஓர் அழகான காதல், கடிதத்திலேயே முடிந்தது. 

காதல் குறித்து அறிஞர்கள் சொன்னதில் எனக்கு பிடித்த வரிகள்...



வாழ்க்கையில் கிடைத்திருக்கும் ஒரே வண்ணம் அது. கலைகளின் வாழ்க்கையின் அர்த்தங்களை அது தருகிறது. அந்த வண்ணத்தின் நிறமே காதல்.
-ஓவியர் மார்க் சர்கல்

வாழ்க்கை எனும் மலரின் தேன் துளிகளே காதல்...
    -விக்டர் ஹியுகோ 

         காதலற்ற வாழ்க்கை, வசத்தங்களற்ற, கனிகளற்ற மரத்தினைப் போன்றது...    
                                                                         -கலீல் ஜிப்ரான்


ஓர் ஆண், தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான். பெண்ணோ ஓர் ஆணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.       
-ஆஸ்கர் ஒயில்டு  


                           
காதலே என் மதம். அதற்காக இறப்பேன்…
-ஜான் கீரிஸ்



நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர். ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றனர்...   -பாரதி



இனிமையான சந்தோஷமும் வலிமிகுந்த காயமுமே காதல்..

  -பேர்ல் பேர்லி



பழைய காலத்திலிருந்தே ஆண் பெண்ணை நேசித்து வருகிறான். பெண் ஆணை நேசித்து வருகிறாள். எல்லா உயிரினங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஈர்ப்பு உண்டு. இனச் சேருதல், இனப்பெருக்கம் இதர்கான வழியே காதல்.கொஞ்சம் மணம் வீசுகிற  அற்புதமான ஏமாற்று..   -வைக்கம் முகமது பஷீர்



காட்டுத் தீ  போல தேகத் தொடர்பு என்ற அடிப்படையில் பிறந்த காதலை புத்தி தெளிவு என்ற அங்குசம் கொண்டு கட்டுப்படுத்தி பணிய வைத்தால்தான் அன்பு என்னும் விளக்கு வாடாமல் எரியும். இதுதான் என் ஆத்ம சோதனையின் முடிவு…  
-புதுமைப்பித்தன்



காதல் என்பது நெருப்பு. உன்  இதயம் குளிர்காயப்போகிறதா? அல்லது உன் வீடு தீப்பற்ற போகிறதா? என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது.             
-ஜோன் கிராபோர்ட்



கட்டுப்படுத்த முடியாத ஆசையின் மீது கட்டுப்படுத்த முடியாத ஆசையை வைப்பதே காதல்..   -மார்க் ட்வைன்

ஒரு பெண்ணை காதலிப்பதென்றால் அவளைக் கல்லினுள்ளிருந்து உயிர்ப்பிப்பது என்று பொருள். அடிமுதல் முடிவை காதலால் நீவி சாபமேற்றுவது. உறைந்துபோன ரத்தத்தில்கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்..   -சச்சிதானந்தன்

காதலுக்காக திருமணம் செய்து கொள்வது சவாலானது. கடவுளால் உதவிக்கு வர முடியாமல் புன்னகைக்க மட்டுமே முடிகிறது. 
-ஜோஷ் பில்லிங்ஸ்

காதல் என்பது கற்பனை. திருமணம் என்பது நிஜம். கற்பனைக்கும் நிஜத்துக்குமான முரண்பாட்டின் தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது..
-கோயத்
நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது. சூரியன் குளிர்ந்து போகும்வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னைக் காதலிப்பேன்...  -ஷேக்ஸ்பியர்

காதலென்பது நமது கதைகளைப் பொறுத்த வரையில் இருவர் செய்துக்கொள்ளும் நிச்சயதார்த்தம். உன்னை நான் காதலிக்கிறேன் என்று சொன்ன பாவத்திற்காக அவன் அவளையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது செத்துப்போக வேண்டும். விவாகரத்தைக் கூட அனுமதிப்பார்கள் போலிருக்கிறது.இந்தக் காதல் ரத்தை ஒருத்தி பிரயோகித்தால் நமது பண்பாடு கெட்டுப் போகுமென்று சொகிறார்கள்..
-ஜெயகாந்தன்…
தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது என்பது என் கருத்து.
                                     -கவிஞர் கண்ணதாசன்


2 கருத்துகள்:

  1. காதலர் தின நாளில் காதல் குறித்த பலரின் கருத்தைப் படிக்கவும் அசைபோடவும் இந்தப் பதிவு உதவுகிறது. நம் பங்குக்கு ஏதேனும் சொல்ல வேண்டுமே என உந்துதல் தருகிறது. வாழ்த்துகள் யோகி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார். நிச்சயமாக ஒரு சமயம் நாம் சொன்னதும் தொகுக்கப்படும் என்று நம்புவோம்...

      நீக்கு