வியாழன், 11 ஆகஸ்ட், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 2 Prambanan Temple

பிரம்பனான் கோயில் 




தென்கிழக்காசியாவிலேயே பெரிய கோயில் என வர்ணிக்கப்படுகிறது பிராம்பனான் என்று சொல்லக்கூடிய மும்மூர்த்திகள் கோயில். அந்தக் கோயிலை கட்டியது யார் என்ற உறுதிபூர்வமான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. ஆனால், ஜாவா தீவின் மற்ற பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகளில் உள்ள குறிப்புகள் அக்கோயில் கி.பி. எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் ஆண்ட மாத்தாராம் (Mataram) பேரரசை சேர்ந்த இந்து மன்னன் ராக்கை பிகாதன் என்பவரால் அல்லது சஞ்சய பேரரசை ஆண்ட இந்து மன்னன் பாலிதுங் மகா சம்பு என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என ஆரூடம் கூறப்படுகிறது.
ஜாவா தீவில் கிடைத்திருக்கும் பல கல்வெட்டுகளில் பிராம்பனான் கோயில் குறித்துப் பேசப்பட்டுள்ளன. கிடைக்கப்பட்டிருக்கும் தகவலின் படி இந்தக் கோயில் கட்டப்பட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தப் பேரரசுகள் வீழ்ச்சியைக் கண்டு விட்டன என்பதைத் தெரிவிக்கிறது. பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு அக்கோயிலைச்சுற்றி வாழ்ந்த மக்கள் மற்ற இடங்களுக்குப் புலம் பெயர்ந்திருக்கின்றனர்.

அங்கு ஏற்பட்ட அடுத்தடுத்த இயற்கை பேரழிவுகள் கூட மக்களின் இடமாற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அறியப்படுகிறது. அதன் பிறகு பல நூற்றாண்டுகள் இக்கோயில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்குள் மறைந்திருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் அதாவது 1733-ஆம் ஆண்டு டச்சுக்காரர்களின் ஆட்சி காலத்தில் இப்பகுதியை ஆராய்ச்சி செய்து வந்த ஏ லோன்ஸ் என்ற டச்சுக்காரர் முற்றிலும் சிதைவடைந்து புதர் மண்டியிருந்த திருமூர்த்திக் கோயிலை (பிராம்பனான்) கண்டு பிடித்து உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார். அதன் பிறகு, 1885-ஆம் ஆண்டு இந்தக் கோயிலை சீரமைக்கும் வேலையில் லைசர்மேன் என்பவர் ஈடுபட்டார்.



1902-ஆம் ஆண்டு மறுசீரமைப்பு வேலைகள் வேன் எர்ட் என்பவரின் தலைமையில் தொடங்கியது. இதற்கிடையில் இயற்கை பேரிடரால் கோயிலின் பல பாகங்கள் சிதறிப் போயின. மீதமிருந்த எச்சங்களைப் பெரும் உழைப்புக்கிடையில் சீர்படுத்திக் கோயிலின் முக்கியப் பகுதிகளை மீட்டு அடுத்தத் தலைமுறையிடம் சேர்த்திருக்கிறது இந்தோனேசிய அரசு. கோயில் கட்டுமானம் ஒரு puzzle போல் உதிர்ந்தபோதிலும் இந்தோனேசிய அரசுடன் யுனேஸ்கோவும் இணைந்து அயராத முயற்சியினால் உருவம் கொடுத்து, சீரமைக்கப்பட்ட கோயிலின் முதல் பகுதியை 1953-ஆம் ஆண்டும் அடுத்தப்பகுதியை 1991-ஆம் ஆண்டும் திறந்துவைத்தது.

உலக மக்களின் வரவேற்பை பெற்றுவந்த அந்தக் சண்டிகளை (கோயில்களை) 2004 ஆம் ஆண்டும் 2006 ஆம் ஆண்டும் சக்தி மிகு பூகம்பங்கள் உலுக்கின. அதில் கோயில் அடையாளம் தெரியாத அளவுக்கு உதிர்ந்து போனது. அதன் பிறகு கோயிலை சீரமைக்கத் தொடங்கிய பணி இன்றுமுதல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. பற்பலமுறை கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாக இருந்தாலும் பார்வைக்கு அவ்வாறு தெரியவில்லை. 75% எஞ்சிய பாகங்களைச் சேர்த்து கோயிலுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்கள்.

கற்பாறைகளை அடுக்கும்போது அவை உறுதியாக இருக்க இந்தோனேசியர்கள் பயன்படுத்தும் யுக்தி விஷேசமானது. களிமண்ணோடு முட்டையில் வெள்ளைக் கருவை சேர்த்து பசைபோலச் செய்து ஒட்டுகிறார்கள். முழுவதும் கிடைக்காத கோயிலின் எஞ்சிய பகுதிகள் அல்லது puzzle-லில் சேராத பாகங்கள், கோயில் முன் குவிந்திருக்கின்றன. மீந்திருக்கும் கோயிலின் மிச்சமே இவ்வளவு பிரமாண்டத்தைக் கொடுக்கிறது என்றால் கோயிலின் அசல் உருவம் கற்பனைக்கூடச் செய்து பார்க்க முடியவில்லை எனக்கு.



இந்தப் பிராம்பனான் கோயிலின் தினிச்சிறப்பு என்று சில விஷயங்களைச் சொல்கின்றனர்.
-முக்கடவுளர்களுக்கும் தனித்தனி சன்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
-சிவபெருமான் சன்நிதியில் சிவனுக்கு மனித உருவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று அடுக்குகள் கொண்டதாகப் பிராம்பனான் கோயில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கோயிலின் வரைபடம் கூறுகிறது. முதல் அடுக்கு முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் வெறும் கருங்கற்கள் குவியலாகவே உள்ளன. இரண்டாம் அடுக்கில் மொத்தம் 246 சிறிய அளவிலான கோயில்கள் இருந்திருக்கின்றன. இதில் பெரும்பகுதி அழிந்துவிட்ட நிலையில் சில கோயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
மூன்றாவது அடுக்குதான் கோயிலின் மையப் பகுதி. இந்தப் பகுதியில்தான் இப்போது பார்க்கும் 8 கோயில்கள் இருக்கின்றன. சிவன் சன்நிதி வடக்கு திசையிலும், பெருமாள் சன்நிதி தெற்கு திசையிலும், பிரம்மாவின் சன்நிதி மேற்கு திசையிலும் அமைந்துள்ளது. அச்சன்நிதிகளில் மும்மூர்த்திகளுக்குப் பிரமாண்ட அளவில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மும்மூர்த்திகளின் சன்நிதிகளின் வாயில்களை நோக்கியபடி இவர்களின் வாகனங்களுக்கான கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இறைவன்களின் வாகனத்திற்குத் தனிக் கோயில்கள் வேறு எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிவன் கோயிலை நோக்கியபடி நந்திக்கும் , பெருமாளை நோக்கியபடி கருடனுக்கும், பிரம்மா கோயிலை நோக்கியபடி அன்னத்திற்கும் கோயில்கள் உள்ளன. ஆனால், நந்தியுடைய சிலை மட்டுமே கொஞ்சம் சேதமடைந்து இருக்கிறது. மற்ற இரண்டு வாகனங்களின் உருவச் சிலைகள் இல்லை. வெறும் கோயிலில் பெயர் மட்டுமே இருக்கின்றன.
மூலவரான சிவன் சின்நிதியை ஒட்டி, வலதுபுறம் அகத்திய மாமுனிக்கும் இடதுபுறம் மகிஷாசுரமர்த்தினிக்கும் பின்புறம் வினாயகருக்கும் சன்நிதிகள் உள்ளன.

நான் 2013-ஆம் ஆண்டுச் சென்றபோது சிவன் சன்நிதியை மூடி நிர்மாணிப்பு பணியைச் செய்துக்கொண்டிருந்தார்கள். பூட்டிய கதவின் இடுக்கின் வழி புகைப்படம் எடுத்தேன். அதிர்ஷ்டவசமாக ஒரு படம் மட்டுமே தெளிவாகக் கிடைத்தது. ஆனால், நான் 2014-ஆம் ஆண்டு சென்றபோது மூலவர்களின் அனைத்து சன்நிதிகளும் மேம்பாட்டுக்காக மூடியிருந்தன.
கோயிலை அதன் இயற்கை தன்மை மாறாமல் இருக்க, மின்சார வசதியைக் கூட அரசு ஏற்படுத்தவில்லை. மேலும் மாலை 6 மணியளவில் கோயில் வளாகத்தை அடைக்கத் தொடங்குகிறார்கள். சிறப்பாகப் பராமரிக்கப்பட்டாலும் சன்நிதிகளில் வழிபாடுகளை நடத்துவதில்லை.

அன்றைய சூரிய அஸ்தமனத்தில் நான் அங்கு இருந்தேன். அந்த அழகை எப்படிச் சொல்வது?  எத்தனை எத்தனையோ சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்த்துவிட்டேன். கதிரவன்  பூமிக்கு ஒன்றுதான் என்றாலும் அது இடத்திற்கு இடம் மாறுபட்ட அழகை காட்டி கொண்டிருக்கிறது.

பிரம்பனான் கோயிலின் சூரிய அஸ்தமனக் காட்சியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. பார்த்தவர்களின் வாழ்க்கையில் அது என்றும் மறையாத காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.
ஒருபுறம்  இக்கோயிலின் பிரமாண்டமும் கலை நுணுக்கங்களும் வியப்பை அளிக்கிறது. மறுபுறம் அற்புதமான இந்தக் கோயில் சீரழிந்துவிட்டபோதும் அதை மீண்டும் மீண்டும் சீரமைப்புச் செய்து நம் பார்வைக்கு நிறுத்தியுள்ள மனித உழைப்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு கழித்த பிறகு, இறுதியாக விஷ்ணுவின் சன்னதியில் ஏறினேன். உடன் யாரும் இல்லை. ஒரு சிலர் மட்டும் தூரத்தில் அமர்ந்திருந்தனர். படி ஏற ஏற ஒரு வகையான அமானுஷ்ய பயம் எழுந்தது. ஆனால், அதையும் தாண்டி அந்தச் சன்னதியை பார்க்க ஆசை உந்தி தள்ளியது. இருண்ட மூலஸ்தானத்தில் என் கண்களால் எதையும் காண முடியவில்லை. என் கேமராவில் Flash வைத்துப் புகைப்படமெடுத்தேன். மஹா விஸ்ணுவின் ஆள் உயர சிலை, புகைப்படமாகக் கேமரா கண்களுக்குச் சிக்கியது. உட்புறத்தில் காற்றுபோன்றதொரு சத்தம் சுழன்று வந்து என்னிடம் ஏதோ பேசுவதைப் போன்ற பிரம்மையை ஏற்படுத்தத் தொடங்கியது. மனதிற்கு ஒருமாதிரி இருந்தது. அடுத்தக் கணம் “ விஷ்ணுவே ஆளை விடு” என இறங்கி வந்துவிட்டேன்.



இந்துக்கோயிலாக இருந்தாலும் கோயிலின் அமைப்பு பௌத்த சாயலை கொண்டிருப்பது குறித்தும் விவாதிக்க வேண்டியிருக்கிறது.
இந்தக் கோயிலையும் பாரம்பரிய நினைவு சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. கோயிலுக்குச் செல்லும் முன் இடுப்பில் கட்டிக்கொள்ள ‘பாத்தேக்’ துணி கொடுக்கிறார்கள். முட்டிக்கு மேல் உடை உடுத்தியிருப்பவர்கள் உட்பட அனைவருக்கும் கொடுக்கப்பட்டது என்றாலும் ‘பாத்தேக்’ துணியை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் வழங்கப்படுவதாகத் திதின் (கைட்) தெரிவித்தாள்.

கடந்த வருடத்திலிருந்து மலேசியாவின் பத்துமலையிலும் இடுப்பில் கட்ட துணி கொடுக்கிறார்கள். அது முற்றிலும் வியாபாரம் நோக்கம் கொண்டது. பணத்தைப் பெற்றுக்கொண்டு துணி கொடுக்கிறார்கள். பின் துணியைத் திரும்பப் பெறுகிறார்கள். பிராம்பனான் கோயிலின் வளாகத்தில் சைக்கிள்களை வாடகைக்கு விடுகிறார்கள். கோயிலைச் சைக்கிளில் சுற்றிவருவது புதிய அனுபவத்தையும் கோயிலின் வேறொரு தோற்றத்தையும் நமக்குக் காட்டுகிறது. இரண்டு பெரிய பூதங்கள் கொண்ட சிலைகள் அமைப்புடன் மற்றுமொரு வாயிலையும் காணலாம். ஆனால், அதை மூடி வைத்திருக்கிறார்கள்.

இந்தோனேசியாவில் கி.பி. 358 ஆண்டுத் தொடங்கிக் கி.பி 1527 வரை பல இந்திய சாம்ராஜ அரசுகளின் ஆட்சி நடந்திருந்தாலும் சைலேந்திரப் பேரரசு, சஞ்சாயா மற்றும் ஶ்ரீ விஜய அரசுகள் மிகவும் புகழ்பெற்றதாகவும் தொடர்ந்து ஜோக் ஜகார்த்தா பாலி உள்ளிட்ட இடங்களில் இந்திய கோயிகளின் வரலாற்றில் இவர்களின் பெயர்கள் தொடர்ந்து வரக்கூடியதாக இருக்கிறது. அதிலும் ஶ்ரீ விஜய பேரரசு ராஜ்ஜியம் 500 ஆண்டுகள் மாபெரும் ராஜ்ஜியத்தைப் புரிந்ததாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.



4 கருத்துகள்:

  1. களிமண்னில் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலவை உருவாக்குதல் என்பது இங்கு பாளையக்காரர்கள் கட்டடக்கலையிலும் இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. Rajaraja cholan period was a golden period..He &his descendants built many temples in SE.Asia including vietnam,Indonesia,cambodia,Thailand!

    பதிலளிநீக்கு
  3. Rajaraja cholan period was a golden period..He &his descendants built many temples in SE.Asia including vietnam,Indonesia,cambodia,Thailand!

    பதிலளிநீக்கு