வியாழன், 23 ஏப்ரல், 2020

சூளுந்தீ- நாவல் விமர்சனம் ( புத்தகவிமர்சனம் )



கத்னா குறித்த விவரங்களைத் தெரிந்துக்கொள்வதற்காக தொடங்கப்பட்ட ஒரு நண்பருடனான உரையாடல் மெல்ல மடைமாறி நாவிதர்கள் பக்கம் சென்றது. இஸ்லாமிய நண்பரான அவர்,  அவர்கள் நாட்டில் இஸ்லாமிய சமூகத்திடம் இப்போதும் நடைமுறையில் இருக்கும் நாவிதர் பணிகள் குறித்து விவரிக்கும்போது  அந்நிய நாட்டில் வசிக்கும் எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது..

நாவிதர்கள் முகச்சவரம் மற்றும் சிகை அலங்காரங்கள் செய்பவர்கள் என்பதைத் தாண்டி, அந்தரங்க உறுப்புகளில் வளரும் உரோமங்களையும் அவர்கள் சவரம் செய்வார்கள். அதற்குத் தனித்தனியே கூலி கொடுத்துவிடுவோம்;  அவர்களுக்கு அது கூடுதல் வருமானம்தானே  என்ற நண்பர், தற்போதைய இளைய தலைமுறையினர் யாரும் அக்காலத்து ஆட்களைப் போல நாவிதம் செய்வதில்லை என்றும்,  இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பழைய மனிதர்களே திருமணம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் வீட்டிற்கே வந்து நாவிதம் செய்கிறார்கள் என்றும்  கூறினார். மிகச் சாதாரணமாக அவர் இதைச் சொன்னாலும், சங்கடம் மற்றும் ஒரு வகை தடுமாற்றம் அவர்  சொல்லும்போது உணரமுடிந்தது.


"நாவித வம்சாவழிதானே வழிவழியாக அத்தொழிலைச் செய்கிறார்கள் " என்று நான் கேட்டதற்கு, ஆம் என்றார்

"அவர்களோடு சமூக உறவு எப்படி இருக்கிறது? சமமாக நடத்தப்படாததும்  தாழ்த்தப்பட்ட சமூகமாகத்தானே  அவர்கள் பொதுபுத்தியில்  பார்க்கப்படுகிறார்கள்?  பொதுவெளியில் எவ்வாறு நாவிதர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்பது என்வரையில் இரண்டாவது விவாதமாகவே வைக்கிறேன். முதலாவதாக அடுத்தவரின் அந்தரங்க உறுப்பு மற்றும் அக்குள்களில் சுவரம் செய்யும்போது  ஏற்படும் ஒவ்வாமை, கூச்சம் அருவருப்பு அவருக்கு  இல்லாமல் போகுமா? அதை எப்படி நாவிதர்கள் எதிர்கொள்கிறர்கள்? இதைக் கேட்கும் எனக்கே முகச்சுழிப்பு ஏற்படும்போது இந்தக் காலத்திலும் அதை தொழிலாக நாவிதர்கள் செய்கிறார்கள்?" என்ற நிதர்சன உண்மை எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று நண்பரிடம் கேட்டேன்

அருவருப்பு இருக்கலாம்தான். நானும் அதை மறுக்கவில்லை. ஆனாலும்,  தொழிலாக செய்பவர்களின் வயிற்றுப்பிழைப்பையும் நினைத்துப்பாருங்கள்;  இதெல்லாம் உங்களுக்கு புரியாது" என்றார்


என் நண்பருக்கு அது தொடர்பாக,  என் உணர்வுகளை விளக்குவதற்கு, வார்த்தைகள் கை கொடுக்கவில்லை.  வார்த்தைகளில் வழுவில்லாததால் நான் அந்த விவாதத்தைத் தொடரவில்லை. ஆனால்,  அன்று வசப்படாமல் போன  வார்த்தைகள்சுளுந்தீநாவலை வாசிக்கும்போது எனக்கு கிடைத்தது. மிக எளிமையாகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும், வலி நிறைந்த  வார்த்தைகளால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறன


 சுளுந்தீ’ 


இரா.முத்துநாகு எழுதி ஆதி பதிப்பகம் 2018-ஆம் ஆண்டு வெளியீடு செய்திருக்கிறார்கள்.  மொத்தம்  472 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை முதல் 150 பக்கங்களை கடக்க எனக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஓரிரு வரிகளில் பல வரலாற்றுத் தகவல் குறிப்புகள் அதிகப்படியாக இருந்ததோ என்னவோ அல்லது என் ரசனையில்தான் பிரச்னையா என்று என்னால் அறிய முடியவில்லை. இருந்தபோதும்  குறிப்புகளாக அதில் குவிந்திருக்கும் தகவல்களும் எனக்கு தேவையாக இருந்தபடியால் நாவலை வாசித்து முடித்துவிட தீர்மானித்தேன். ஆனால், 150 பக்கங்களை கடந்தப் பிறகு தங்குத் தடையின்றி நாவல் நேரடியாகவே கதைக்குள் நுழைகிறது. அல்லது நான் கதைக்குள் நுழைந்தேன் என சொல்லலாம். முதலில் எனக்கு இந்த நாவலில் இரண்டு முக்கியமான அம்சங்கள் கவர்ந்ததாக இருக்கிறது


முதலாவதாக 


நிறைய வரலாற்றுத் தகவல்கள் தொடத்திலிருந்தே அடுக்கடுக்காக வாசிக்க நேர்ந்ததால், நாவல் எதைப்பற்றி பேச வருகிறது என்பதைத்தாண்டி அதைத் தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் குறைவது மாதிரியான எண்ணம் எழத்தொடங்கியது. இது ஒரு குறையாக எனக்குள் தோன்றிய விஷயம் என்றாலும் தகவல்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளை சேகரிப்பவளாக எனக்கு அவை முக்கியமாகவும் வேண்டியதாகவும் இருக்கின்றன. எனவே அந்நாவலை வாசிப்பிலிருந்து ஓரங்கட்டக்கூடாது என்பதில் தீவிரம் எனக்குள் ஏற்பட்டது. வட்டாரச்சொற்களும் சிலேடை பேச்சுகளும் தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர். நாவலின்  பல தகவல்களை ரொம்ப முக்கியமாக பார்க்கிறேன். அதில் சிலவற்றை குறிப்பிடுவது வாசகர்கள்  இந்த நாவலை வாசிப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தலாம். 


மாற்று பாலினத்தவர்களை பல பெயர்களில் நாம் அழைக்கிறோம். இந்தப் புத்தகத்தில் இருபிவிகள் என்று அழைத்திருக்கிறார்கள். மன்னர் மற்றும் அரண்மனை காலத்துக் கதையை பேசும் இந்தப் புத்தகத்தில் இருப்பிறவிகளின் பணி எத்தனை அவசியமாக இருந்திருக்கிறது என்றும் எதனால் அவர்கள் அவசியமாகக் கருதப்பட்டார்கள் என்றும் இன்னொரு கோணத்தில் இதுவும் அடிமைத்தனம்தானே என்றும் நம்மை கேள்வி கேட்க வைக்கிறது. பழங்குடி சமூகத்தினர், குலநீக்கம் செய்யப்பட்ட ஜனங்கள், அதிகார வர்கத்தைச் சேர்ந்த ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள், கோயில் பூசாரி என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் இந்த நாவல் சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் ஒருசில வரிகளிலும் பேசிச்செல்கிறது. 

சலவைக்கு எடுக்கும் துணிகளை ரகசியக்குறிகளை வண்ணார்  இடுவதும் அத்துணிகளை வெள்ளாவியில் அடுக்கும் முறையில் இருக்கும் ஜாதிய அடுக்குகளும் அதன் காரணங்களும் போகிற போக்கில் சொல்லப்பட்ட தகவல்கள்தான் என்றாலும் அவை நம் தேடலுக்கான இன்னொரு கதவை திறந்துவிடுகின்றன.  பண்டுவர்களின் தொழிற் பத்தியும், பின் அந்த ரகசியத்தின் குட்டு உடைப்படுகின்ற இடமும்  சுவாரஸ்யமாக கூறப்பட்டிருக்கிறது.  பண்டுவம் குறித்துப் சித்தரும் சித்தரின் சீடரும் நாவிதருமான ராமனும் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.  

மலேசிய சித்த வைத்தியரிடம் ஓர் அனுபவத்திற்காக நான் கிட்டதட்ட  5 மாதங்கள் வேலை செய்தேன். அனுபவம் எனக்கு கிடைத்ததா என்றால் சித்த மருத்துவரின் குடும்ப ரகசியத்திற்குள் பண்டுவமும் அடைக்காக்கப்பட்டது. அதை வைத்துக்கொண்டு என்னால் ஒரு பதிவுகூட எழுத முடியாது. ஆனால், சில கேள்விகளில் எனக்கு கிடைத்த பதில்கள் மற்றும் அங்கிருந்த சித்தவைத்திய  புத்தகங்களில் வாசித்த கிடைத்த அனுபவங்கள் சில இந்த வாசிப்புக்கு எனக்கு கைகொடுத்தன. மிகச் சரியாக பதிவுச் செய்யபடிருக்கும் சில மருத்துவக் குறிப்புகளின் பின்னனியில் இருக்கும் நாவலாசிரியரின் குறிப்பை வாசிக்கும்போது அவர் பாரம்பரியப் பண்டுவக் குடும்ப பிண்ணனியில் வந்தவர் என தகவல் கிடைக்கிறது. அது வாசிப்புச்   சுவாரஸ்யத்தை நமக்கு மேலும் கூட்டுகிறது.  

சித்தர் ஏன் நாவிதன் ஒருவனுக்கு பண்டுவம் (வைத்தியம்) குறித்து சொல்லிக்கொடுக்கிறார்? சித்தர் காற்றோடு கலந்துதான்  ஜீவ சமாதி அடைகிறாரா? அல்லது அதிலும் ஏதாவது மர்மம் இருக்கிறதா என்பதை வாசகர்கள்தான்  தேட வேண்டும். சில இடங்களில் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு வரத்தான் செய்கிறது. அது எந்த இடங்கள்? அதையும் நான் வாசகர்களின் வாசிப்புக்கே விட்டு விடுகிறேன். 


புளியமர நடவு, புளியங்கொட்டைகளை பஞ்சத்தில் எப்படி ஓர் உணவாக ஏழைகள் பசியாற்றிக்கொண்டார்கள், அதையும் பிடிங்கிக்கொண்டு போகும் ஆதிக்க வர்கத்தினர் என பஞ்ச காலத்துச் சரித்திரத்தையும் நமக்கு அறிய தந்திருக்கிறார் நாவலாசிரியர்.   தவிர சமண கழுவேற்றப் பதிவும் ஒரு குறிப்பாக பேசிச் செல்கிறது நாவல். 


2015 ஆம் ஆண்டு பிணம் தழுவுதல் குறித்து எழுதிய கட்டுரை, என்னுடைய அகப்பக்கத்தில் அதிகமானவர்கள் வாசித்த கட்டுரைகளில் ஒன்று. பிணம் தழுவுதல் குறித்த அந்தக் கட்டுரை இன்னும் முழுமை பெறாமலே இருக்கிறது. அதற்குக் காரணம் அதுதொடர்பாக கிடைத்திருக்கும் தகவல்கள் போதாமை மற்றும் தன்னை முடித்துக்கொள்ள அந்தக் கட்டுரை விரும்பவில்லை என்றும் சொல்லலாம்.  சுளுந்தீ நாவலில் பிணம் தழுபவரின் பிரத்தியேக பெயர் பதிவு செய்யப்படிருக்கிறது. அது என்ன பெயர் என்பதை நாவலை வாசித்தால் தெரிந்துக்கொள்ளலாம். 


(பிணம் தழுவுதல் குறித்தான என் கட்டுரையை வாசிக்க https://yogiperiyasamy.blogspot.com/2016/05/blog-post_18.html சொடுக்கவும்.)


இரண்டாவது...


ஒரு நாவிதனின் வாழ்க்கை குறித்த நமது புரிதல் இதுவரை என்னவாக இருந்திருக்கிறது என்பதை கேள்வி கேட்கிறது இந்த நாவல்.  நாவிதனாகவும் பின் பண்டுவனாகவும் அவதாரம் எடுக்கும் ராமனை பண்டுவனாக அவனைச் சுற்றியிருக்கும் சமூகம் ஏற்றுக்கொள்கிறதா? குதிரையில் ஏறிப்போகும் அளவுக்கு ராமன் தன்னை படிப்படியாக வளர்த்துக்கொண்டாலும், ஆதிக்க சாதியினர் மத்தியில், சிரம் தாழ்த்தி, கைக்கட்டி,  சாமி என கும்பிட்டே நாவிதமும் மற்ற வேலைகளும் அவர் செய்கிறார். அது  தன்னடக்கத்தால் மட்டுமல்ல அல்ல என்பது இந்தக் கதையை உள்வாங்கியவர்களால் அறிய முடியும்.

நாவிதனின் பெண் பாலரை மருத்துவச்சி என்று அழைக்கிறார்கள். மருத்துவச்சி பெண்களுக்காக செய்யும் மயிர் நீக்கம் குறித்தும், பிரசவம் பார்ப்பதைக் குறித்தும் இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது. நாவிதர்கள் வெறும் நாவிதர் தொழில் செய்பவர்களாக இல்லாமல் வண்ணானாகவும், பண்டுவனாகவும், ராஜ விசுவாசியாகவும் பலதொழிகள் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். 

அந்த விசுவாசத்தில் அரண்மனையார் மீது நம்பிக்கை வைத்து வீரனாக வளர்கப்பட்ட தனது மகன் மாடனை, பரம்பரை தொழிலுக்கு அனுப்பாமல் அரண்மனை போர் வீரராக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிபடுத்துகிறார். அது தாழ்த்தப்பட்டவனுக்கு மீறிய ஆசை அரண்மைனையார் சொல்லிவிட மனம் உடைந்த ராமன் தொடர்ந்து எப்படி கதையை நகர்த்திக்கொண்டு போகிறார் என்பதை வாசகர்கள் வாசித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். 


நாவல் ராமனிடம் ஆரம்பித்து அவர் மகன் மாடனோடு முடிவடைகிறது. இதற்கிடையில் மாடன்மீது ஒருதலையாக காதலிக்கும்  அனந்தவல்லியின் காதல் அழகாகவே இருக்கிறது. மாடனா – ராமனா என கேட்டால் எனக்கு ராமனே பிடித்தமானவனாக இருக்கிறார்.  தனது மனைவி வல்லத்தாரையை அவர் குதிரையில் அமர்த்தி, வெகுநாட்களாக காட்ட வேண்டும் என்று நினைத்திருந்த   இடத்திற்கு அழைத்துப்போய் அவளுக்குக் காட்டும்போதும், அவளுக்கு ஆசையாக சுங்குடிச் சேலையை வாங்கிக்கொடுப்பதும், அதை அவள் பேரானந்தத்துடன் கையில் வைத்திருக்கும்போதுகூட பெரிய இடத்துப் பெண்கள் கட்டும் சேலையை எப்படி தான் கட்டிக்கொள்வது என்று  ராமனிடம் கேட்பதும் மிக அழகான காட்சியாக நம் மனக்கண்ணில் ஓட்டிப்பார்க்க முடிகிறது. 

ஆதிக்கப்பெண்கள் கட்டும் சேலையை கட்டினால் பிரச்னை வருமே என பயமிருந்தாலும், தன்னிடம் இப்படி ஒரு சேலை இப்போது இருக்கிறதே என்று மெலிதாக அவளிடம் எட்டிப்பார்த்த கர்வமும் மிக எதார்த்த அழகு.  அந்தச் சுங்குடிச் சேலையை அவளால் கட்டிப்பார்க்க முடியாமல் போவது மட்டுமல்ல அன்றைய தினமே கண் பார்வையையும் இழந்து, தனது கணவனையும் இழக்கிறாள் வல்லத்தாரை. அப்போதிலிருந்து மருத்துவச்சியான அவள்  நமது பரிதாபத்தை முழுமையாக பெற்றுவிடுகிறாள். ஆனால், யாருக்கும் அடங்காத மாடன், பல இடங்களில் நமது பொருமையை சொதித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். 


இறுதியாக...

கடந்த மார்ச் மாதம் நான் வால்பாறையொட்டிய ஒரு வனத்திற்கு போயிருந்தேன். அங்கே வசிக்கும் பழங்குடி ஒருவர்  குங்குலிய மரத்தைக் காட்டி இதுதான் சாம்பிராணி செய்யக்கூடிய குங்குலியம் என்று மரத்தில் கெட்டியாக இறுகிப்போயிருந்த பிசின்மாதிரியான ஒன்றை பிடுங்கிக் கொடுத்தார். இதுதான் அசல் குங்குலியம். கடையில் கிடைப்பது ரசாயனம் மற்றும் மணம் கலந்து உங்களுக்கு கிடைக்கிறது.  இது உங்களுக்காக என்று என்னிடம் கொடுத்தார். முகரும்போது எந்த மணமும் இல்லை.  என்றாலும், அதன் தேவை வனத்திலுள்ளவர்களுக்கு எத்தனை தேவையென அனுமானிக்க முடிந்தது. கிணறு வெட்டவும், பாறைகளை தகர்க்கவும் தேவையென்றால் மனிதர்களைப் போட்டுத்தள்ளவும் வெடிமருத்துக்கு குங்குலியத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நமக்கு ஏதோ ஓர் இடத்தில் பரீச்சியமாக இருக்கிற வார்த்தைகளும் பொருள்களும் நாவலாக அவதாரம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கு சுளுந்தீ ஒரு எடுத்துக்காட்டு. 

சுளுந்தீ என்றால் என்ன  என்று கேட்கிறீர்களா? அதுவும் நமக்கு பரீட்சயமான ஒன்றுதான். நாவலை வாசித்தால் அதுவும் தெரிந்துவிடும். 



சனி, 11 ஏப்ரல், 2020

யசோதாபுரம் கண்ட யட்சி (பயணக்கட்டுரை) 4



5 தலையோடு படமெடுத்திருக்கும் வாசுகிப்பாம்பை பூத கணங்கள் இழுக்கும் பிரமாண்ட வாயிலுக்கு  இடதுப் பக்கத்தில் மரங்களும் புதர்களும் மறைத்திருக்க  செங்கட்டடம் ஒன்று மக்களின் பார்வையிலிருந்து மறைந்திருக்கிறது.


                                                                  Baksei Chamkrong


சூரியனின் வெண் கதிர்கள் அச்செங்கட்டிடம் மேல் விழ, அது யட்சியின் பார்வையிலும் விழுந்து தொலைத்தது. அடங்காத என்கால்களும் எப்போதும் காணக்கிடைக்காததையே தேடும் என் கண்களும் புதிய உற்சாகத்துடன் அத்திசையை நோக்கி ஓட வைத்தன. சாரதி சொன்னார், உங்களின் பட்டியலில் இந்தக் கோயில் இல்லை. குறிப்பிட்ட நேரத்தில் எல்லாக் கோயில்களையும் காண வேண்டும் என்றால், நேரத்தை விரையமாக்கக்கூடாது. அங்கே போவது நேர விரயம் என்றார்.




நேரத்தை விரையமாக்கவில்லை. நான் தேடும் ஏதோ ஒன்று அங்கு இருக்கலாம். அதிக நேரத்தை எடுக்க மாட்டேன். வந்துவிடுகிறேன் என விரைந்தேன். அது அழகிய  Baksei Chamkrong கோயில்.  ‘இறக்கைகளின் கீழ் தங்கும் பறவை’  ( The Bird Who Shelters Under Its Wings") என்று அர்த்தம் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு சுட்டுவதற்கான சரியான காரணத்தை என்னால் இப்போதும்கூட கண்டுக்கொள்ள முடியவில்லை. 




அழிக்கும் கடவுளான சிவனுக்கு கட்டப்பட்டது இக்கோயில் என சொல்கிறார்கள். மன்னர் முதலாம் ஹர்ஷவர்மன் தன் மகன் யசோவர்மனுக்கு கட்டி முடிக்காத இக்கோயிலை அர்ப்பணித்தார் என்றும் அதன்பிறகு வந்த  இரண்டாம் ராஜேந்திரவர்மன்தான்  கட்டுமானத்தை நிறைவு செய்தார் என்றும் கூறுகிறார்கள். தற்போது புத்தக் கோயிலாக Baksei Chamkrong மாறி  இருக்கிறது.  நான்கு திசைகளில் நான்கு வாயில்கள் மிகவும் உயரமாகவும் குறுகிய  படிகளை அமைத்து கட்டப்பட்டிருக்கிறது. படிகள் பாதுக்காப்பில்லாத அளவுக்கு மிகவும் சிறியதாகவும் சுவரை ஒட்டினாற்போலும் ஏறுவதற்கு முழுகவனமுடன் இருக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் சறுக்கினால் அவ்வளவுதான்.  கிடைக்கப்போகும் அடியிலிருந்து தப்ப வழியில்லை.



படிகள் எதற்காக இப்படி பாதுகாப்பில்லாமல் கட்டப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு நான் தேடியதில் கிடைத்த பதில் கொஞ்சம் பயங்கரமாகத்தான் இருந்தது. என்னதான் நாம் இந்தக் கட்டிட கட்டுமானங்களை இறைவனை வணங்கும் இடம் எனக் கூறினாலும் அவை சம்மந்தப்பட்ட மன்னர்களுக்காக அவர்கள் கட்டிக்கொண்ட கோயில்கள் எனவும், அந்தக் காலக்கட்டத்தில் நாட்டு மக்களிடம் மன்னர்கள், அவர்கள் கடவுளின் அவதாரம் என்றும் அவர்களைத்தான் வணக்க வேண்டும் என்றும் சர்வதிகாரம் நடத்தியிருக்கின்றனர் என்றும் பல இடங்களில் குறிப்புகள் இருக்கின்றன. இத்தனை உயரத்தில் அவர்கள் கர்பக்கிரகத்தை அமைத்ததற்கும் பாதுகாப்பில்லாத படியை அமைத்ததற்கும் தன்னை நாடி வரும் மக்கள் மிக எளிமையாக தன்னை வந்தடைய கூடாது என்பதற்காகவும் அதோடு அவர்கள் இத்தனை சிரமத்தை தாண்டி வரும்போது நிச்சயமாக சோர்ந்து தலைகவிழ்ந்த நிலையில்தான் தம்மை தரிசிப்பர் என்றும் இதனால் தம்முன் ஒருவரும் தலைரிமிர்ந்து நிற்க வழியில்லை என்பதற்காகவும், பக்காவாக பிளான் செய்து இந்த மன்னர்கள் கட்டிடங்களையும் கோபுரங்களையும் கட்டியிருக்கின்றனர். சில கோயில்களில்  குனிந்து உள்செல்லக்கூடிய வாசல் இருப்பதற்கு காரணமும் மேற்கூறிய காரணங்களில் ஒன்றுதான்.



சிவந்த செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டிருக்கும் அக்கோயிலில் புடைப்போவியங்கள் என்று சொல்வதற்கு ஏதுமில்லை. என்றாலும் ஒரு பெண்ணைப்போன்று காட்சியளிக்கும் தோற்றம்கொண்ட சுவர்ச் சித்திரம் நாற்புறமும் இருக்கிறது. அக்கோயிலுக்கு ஆட்கள் வருவது குறைவுதான் என்றாலும்,அதன் சுற்றுப்புறம் மிக நேர்த்தியாக பராமறிக்கப்பட்டிருக்கிறது. நுழைவாயிலில்  நின்றிருக்கும்  ஒற்றைச் சிங்கமும் அதனை அடுத்து இருக்கும் லிங்கத்தின் ஆவுடையும் பாதுகாப்பற்ற நிலையில் மழையிலும்  வெயிலிலும்  வாசம் செய்கின்றன.  என்றாலும் நம் கவனத்தை அவை ஈர்க்காமல் இல்லை.

குறிப்பாக கேமர் கலைச்சிற்பத்தில் இருக்கிற சிங்கம் சீன வடிவமைப்பில் இருக்கிறது. அங்கோர் திறந்த வெளி அருங்காட்சியகத்தில் இருக்கும் அனைத்து கோயில்களும் சூரியனோடு ஒப்பிடுகையில் மிகவும் விஷேசமாகவும் அர்ப்புதமாகவும் இருக்கிறது. சூரியன் உதிக்கும் நேரத்தில் இந்தக் கோயிலை காணும்போது மின்னுகிறது. ஆதனால்தான் தங்கச் சிவன் கோயில் என அதற்கு மற்றுமொரு பெயர் வந்ததோ என தெரியவில்லை. 

முதன்மை வாயிலின் முகப்பில்  இந்திரன் அவனின் வாகனமான ஐராவதம் (வெள்ளையானை) மீது ஏறி வரும் காட்சியை வைத்திருக்கிறார்கள். மூன்று தலை யானைமீது சவாரி வருவதைப் போன்ற காட்சியா அல்லது ஒற்றையானை சவாரியில் பக்கவாட்டில் அலங்காரத்திற்காக அந்த இருயானைகள் செதுக்கப்பட்டிருக்கிறதா? என்ற குழப்பம் இருக்கிறது. மேலும்,  சிவன் கோயிலாக இருந்தால் இந்திரனை அங்கு வைக்க வேண்டிய சிந்தனை ஏன் என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக விக்கிப்பீடியாவில் எனக்கு கிடைத்த தகவல் இது. 


ஐராவதத்தில் இந்திரன்

இந்து மதத்தில் வெள்ளை யானை இந்திரனின் வாகனமாக கருதப்படுகிறது. இந்திரனின் வெள்ளை யானையை ஐராவதம் என அழைப்பர் .பௌத்த மதத்தில் கூட கௌதம புத்தர் வெள்ளை யானையின் முதுகில் ஏறி மாயாதேவியின் கருவில் சென்றதாக ஒரு நம்பிக்கை உண்டு. எனவே புத்த மதத்தினர் வெள்ளை யானையை கடவுளாக கருதுகின்றனர். 

நான் மிகவும் சிரமத்திற்கிடையில் படிகளில் ஏறி முதற் அடுக்கை அடைந்தேன். தொடர்ந்து இரண்டாவது அடுக்கை தொடங்குவதற்கு எந்த பிடிமானமும் இல்லை. தவிரவும் ஒருவரும் வராத அந்தக் கோயிலில் தடுக்கி விழுந்தால்கூட உதவி செய்வதற்கு ஆள் இல்லை. தேவையில்லாத சாகசத்தை மேற்கொள்ள என் மனம் துணியவில்லை. இன்னும் சில தூரம்தான். ஏறிவிட்டால் மேற் கர்பக்கிரகத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்துவிடலாம். ஒற்றைச் சிலைக்காக 4 வாசல்களில் மூன்று பூங்கதவுகளின் தாழிடப்பட்டிருந்தன. ஒன்றைக் கதவு மட்டுமே திறந்திருந்திருந்தது.  ஆனால், நான்கு வாயில்களுமே கர்ப்பக்கிரகத்தை அடையக்கூடிய திறவுகளாக இருந்தன.  ஒரு வாயிலாவது எனக்கு சாதகமாக அமையாதா என்ற ஆவலில் இருமுறை சுற்றி வந்தேன்.  


செக்குத்தான மலைகள் ஏறிய அனுபவம் இருந்தாலும் ஏனோ மனம் தடுத்துக்கொண்டே இருந்தது. இப்படி இரண்டாங்கெட்ட  நிலையில் அடுத்தடுத்து சில படிகளை ஏறியிருந்தேன். கண்டு விட்டேன்.  சைந்த நிலையில் ஒரு புத்தசிலை. யாரோ விளக்கேற்றி வைத்திருந்தனர்.  தவிர வேறு எதுவும் அங்கில்லை. ஒருவகை என்னவென்று சொல்லத்தெரியாத படபடப்பு  அச்சம் ஏற்பட இறங்க முயற்சி செய்தேன். அது சாதாரண காரியமாக தெரியவில்லை. சந்துருவை தேடினேன். அவர் எனக்காக கீழேயே காத்திருந்தார். நேரம் போகிறது; சீக்கிரம் இறங்கு என்று அவர் சொன்னபோதுதான் அவசரப்பட்டுவிட்டேன் என தெரிந்தது.  எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டேன் என தெரியவில்லை. சில சிராய்ப்புகளோடு  வேர்த்து விருவிருத்து இறங்கி வந்தேன்.

-தொடரும்
தாழிட்டிருக்கும் வாயில்

அழகிய தோற்றம்

படி ஏற முயற்சிக்கும் ஓவியர் சந்துரு

வியாழன், 9 ஏப்ரல், 2020

யசோதாபுரம் கண்ட யட்சி (பயணக்கட்டுரை) 3


அங்கோர் பேயோன் மற்றும் அங்கோர்  தோம்


பேயோன் கோயிலின் சிரித்த முகம்
'அங்கோர் வாட்' தவிர்த்து உலகம் பிரமிக்கும் கம்போடியாவின் மற்றுமொரு பிரமாண்டம்  ‘அங்கோர் தோம்’ மற்றும் 'அங்கோர் பேயோன்' . பிரம்மாவுக்கு மூன்று தலைகள் என்றால் இவ்விரு கோயில்களில் யார் என்று உறுதி படுத்தமுடியாதருக்கு  நான்கு முகங்கள். அனைத்தும் எந்த வேறுபாடும் இல்லாத ஒரே முகவடிவமைப்பு. அழகிய சிரித்த முகம். எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும்  ஓர் முகம் மறைந்து, மூன்று முகங்கள் மட்டுமே தெளிவாக தன்னை வெளிப்படுத்தும் நேர்த்தி என இக்கோயில்களின் கலைஅம்சத்தை கூறிக்கொண்டே போகலாம். சிலர் அவரை புத்தர் என்றும் சிலர் பிரம்மன் என்றும் அது  அந்தக் கோயிலை கட்டிய ஜயவர்மந்தான் என்றும் கூறுகின்றனர். ஆனால், அது யாரின் குறியீடு என இன்றுவரை உறுதிபடுத்த முடியவில்லை.

பயணம் போவோம்!

அங்கோர் தோம் நுழைவாயில்

அங்கோர் வாட்டிலிருந்து கொஞ்ச நேரத்திலேயே 'அங்கோர் பேயோன்' வந்தடையலாம். உண்மையில் அங்கோர் கோட்டையில் இருக்கும் ஒரு கோயிலிருந்து மற்றொரு கோயிலுக்கு செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள தேவையில்லை.  வனம் சார்ந்து போகும் பாதையில் புதர்களும் ராட்சச மரங்களுக்கும் இடையில் சாலையை அமைத்திருக்கிறார்கள். இதில் எனக்கு சொல்லக்கூடியதாக இருப்பது தேவையில்லாமல் ஒரு மரத்தைக் கூட கம்போடிய அரசு அழிப்பதில்லை என்பதுதான்.  சாலையைக் குறிக்கிடும் மரத்திற்கு இடம்விட்டு சாலையை அமைத்திருப்பது மனதிற்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.

அங்கோர் தோம் கோபுரம்
ஏழாம் ஜெயவர்ம பேரரசின் தலைநகரம் என்றுக்  கூறப்படும்  அங்கோர் நகரத்தின்  'பேயோன்'   நுழைவாயில் இரு புறமும் மிக அழகான விஷேச அமைப்புடன் இருக்கிறது. அது இந்துக்கோயில்தான் என்று மறுக்கமுடியாத ஆதரத்துடன்  இரு பக்கவாட்டிலும் படமெடுத்து நிற்கிறது வாசுகிப் பாம்பு. 12-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில்  இந்தக் கோயில்கள் கட்டப்பட்டிருக்களாம் என்று நம்பப்படுகிறது.  
மாபெரும் பூதங்கள் வாசகிப் பாப்பை பிடித்து இழுக்கும் காட்சி நமக்கு பாற்கடலை கடையும் காட்சியை நினைவுக்கூறும்.  தமிழ்நாட்டில்கூட காணக்கிடைக்காத பிரமாண்ட காட்சி அது.  

வாசுகிப் பாம்பை பிடித்திருக்கும் பூதங்கள்
அசுரர்கள் ஒரு புறமும் தேவர்கள் ஒரு புறமும் நின்று பாற்கடலை கடைந்தெடுக்கும் காட்சியை இங்கே பூதகணங்கள் அல்லது போர்வீரர்கள் கடைகிறார்கள். நன்றாகப் பார்த்தால் பூதங்களின் தலை பகுதி மட்டும் சம்பந்தமில்லாமல் வெட்டப்பட்டு வேறொரு தலையை ஒட்டவைத்த மாதிரி இருக்கும். குறிப்பாக அவை புத்த வடிவமைப்புக் கொண்ட தலைகளின் சாயலில் இருக்கும். இந்துசமும் புத்திசமும் தங்கள் ஆதிகத்தை நிலைநிறுத்திகொள்ள பெரும்சேதங்களை ஏற்படுத்தியது இம்மாதிரியான கலைபொக்கிஷங்களின் மீதுதான். 

சேதமடைந்திருக்கும் சிலைகள்
இந்த இடத்தில் நான் இன்னொரு வரலாற்றையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான் சம்பா ராஜ்யதின் படையெடுப்பு. கெமர் சாம்ராஜியத்தை போரில் வென்று கிட்டதட்ட 4 ஆண்டுகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது சம்பா பேரரசு.  தனது சாம்ராஜியத்தை மீண்டும் கைப்பற்ற தொடர் போர் செய்திருக்கிறார்  ஜெயவர்மன்.  இந்தக் காலக்கட்டத்திலும் நிறைய சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
வாசுகி பாம்போடு பூதங்கள் இருக்கும் இந்தப் பகுதிதான் அங்கோர் பேயோன். மேலும் அங்கோர் தோம் செல்லும் நுழைவாயிலும் இதுதான்.  

பின் இருக்கும் அழகிய அகழி..
அங்கிருந்து  கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டர் உள்நோக்கிச் செல்ல வேண்டும்.  நமது சாரதி நம்மை அழைத்துச் செல்வார். தவிரவும் யானைகள் மீதும் நாம் சவாரி செய்துப் போகலாம். சுற்றுலாத்துறை அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டால் போதும்.  'பேயோன்' தொடங்கி 'தோம்' வரை, பாரம்பரிய உடை அணிந்த பாகனோடு  பட்டாடை போர்த்திய யானைகள் , சுற்றுப்பயணிகளை சுமந்துக்கொண்டு  வளம் வருகின்றன.

இந்திரன் என்று நம்பப்படும் சித்திரமும் மற்ற தேவர்களும்


அங்கோர் பேயோனில் இருக்கும் முகங்களுக்கு இடையில் வேறு சில உருவங்களும் இருக்கின்றன. இந்திரன் உருவச் சிலையையும் அதில் இருப்பதாக எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால், என்னால் அதை தேடி கண்டுக்கொள்ள முடியவில்லை. ஒரு வேளை, மேற்பதியப்பட்டிருக்கும் புகைப்படத்தில் உள்ளது இந்திரனாக இருக்கலாம். 

அங்கோர் தோம் செல்வதற்கு  நான்கு கோட்டை வாயில்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் கோபுரம் மற்றும் நான்கு தலைகள்  (முகங்கள்) கொண்டிருக்கின்றன. ஒரு வாசலை கடந்துவிட்டால் வெளியேறும் வழி வேறொரு வாசலாகத்தான் இருக்கும். அங்கோர் வாட் தவிர மற்ற எல்லா கோயில்களும் இந்த முறையில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. வாலுக்கும் முதன்மை கோயிலுக்கும் இடையில் குறைந்தது 1 கிலோ மீட்டராவது இடைவெளி இருக்கிறது.  அதோடு அந்த இடைவெளியை நாம் நடந்துதான் கடக்க வேண்டும்.
தொலைவிலிருந்து ஒரு கிளிக்


பேயோன் எனும் முகக்கோபுரங்கள் கொண்ட கோயிலுக்குச் செல்வோம்

கங்கோர் பேயோனில் 
அங்கோர் காலத்து கடைசி தலைநகரம் என்று குறிப்பிடும் பேயோன் எங்கு திரும்பினாலும் முகங்கள் முகங்கள் முகங்கள்தான்.  கண்கள் கீழ் நோக்கியபடியும், கண்கள் மூடியபடியும், கண்கள  திறந்தபடியும் அம்முகங்கள் இருக்கின்றன.  அங்கோர் வாட் நகர் நிர்மாணித்து கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அடையாளமாக இந்த 'அங்கோர் தோம்' நகரமும் இந்தப் 'பேயோன்' புத்தக் கோயிலையும் நிறுவியதாக கூறப்படுகிறது.

சேதமடைந்து தனித்திருக்கும் புத்தர்சிலை

ஏழாம் ஜெயவர்மன் காலத்தில்   4 ஆண்டுகள் சம்பா கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது அந்நகரம் என முன்பே கூறியிருந்தேன் இல்லையா?  அவர்களை வெற்றிகண்ட பிறகு (1181-ஆம் ஆண்டு) கிட்டதட்ட 400 ஆண்டுகளாக   இருந்த கம்போடிய பாரம்பரியத்தை கட்டுடைத்து புதுப்பித்தான் அந்த அரசன். கட்டும் கோயில்கள் மற்றும் கோட்டைகளில் புதுமை செய்தது மட்டுமல்ல மஹாயான பௌத்தமும் அறிமுகப்படுத்தப்பட்டது. பௌத்தமும் செழிக்கத் தொடங்கியது.(தற்போது பெருவாரியான கம்போடிய மக்கள் தேரவாத பௌத்தம் மதத்தை பின்பற்றுகின்றனர்.)  கிட்டதட்ட 40 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கோயில்கள் அதன் பிறகு  கட்டப்பட்டிருக்கின்றன.

பாதமும் அணிகலனும்
ஏழாம் ஜெயவர்மனுக்கு பின் வந்த எட்டாம் ஜெயவர்மன் இந்துச் சமயத்தை தழுவியர் என்றும் கோயிலில் இருந்த பௌத்த சின்னங்களை அழித்து சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் அதன்பிறகுதான் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் நமக்கு வரலாற்றுச் சான்றுகள் சொல்கிறது. மீண்டும் அடுத்தடுத்த மன்னர்களின் வருகையில் லிங்கங்கள் தும்சம் செய்யப்பட்டன. சுவர் புடைப்பு ஓவியங்களில் ஓரிடத்தில் லிங்கமும் அதற்கு கீழே புத்தர்கள் வரிசையும் இருக்கும். ரொம்ப வித்தியாசமான இந்த காட்சியை நீங்கள் கண்டுவிட்டீர்கள் என்றால் புகைப்படம் எடுக்க மறவாதீர்கள்.

ஓவியர் சந்துருவும் ஜெயவர்மனும்


மொத்தம் 49 கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் தற்போது அதிகமாக பழுதாகாத நிலையில் இருப்பது 37 கோபுரங்கள் மட்டும்தான். 200-க்கும் அதிகமான முகங்கள். Puzzles போல் ஒன்றன்மீது ஒன்று அடுக்கப்பட்டிருக்கும் பாறைகளில் இத்தனை அழகு பொருந்திய முகங்களை எவ்வாறு சேர்க்க முடிந்தது என எனக்கு மலைப்பாக இருந்தது. இந்த முகங்களை ஒன்றைக்கல்லில் செய்ய முடியாததற்கு என்னக் காரணங்கள் இருந்திருக்கும்? அல்லது இந்தோனேசிய இந்தியப் புராதன கோயில்களில் இருப்பதைப்போன்ற puzzles முறை இங்கேயும் கையாண்டிருப்பதற்கு ஏதாவது காரணம் அல்லது ஒற்றுமை இருக்குமா? தனித்தனியே பாறைகளில் முகங்களை செதுக்கியப்பிறகு அதை அடுக்கியிருந்தால் அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் என்ன? இத்தனை நேர்த்தியும் நுணுக்கமான வேலையும் செய்திருக்கும் கேமர் மக்கள் அல்லது அடிமைகள் நிச்சயமாக போற்றக்கூடிய திறமைசாளிகள்தான். அதில் ஐயமில்லை.



பெயோன் சிலைகள் முற்றாக கட்டி முடிக்கப்படாத சிலைகள் என்று ஆராச்சியாளர்கள் சொல்கிறார்கள். மூன்று அடுக்குகளில் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயிலினுள் பிரவேசிக்கிறபோது முகங்கள் நம்மை பின்தொடர்வதையும்  கண்காணிக்கப்பதையும் தடுக்க முடியாது.  இந்துசம் புத்திசம் என்று நாம் அக்கோயிலை வர்ணித்துக் கொண்டிருக்கும்போது புடைப்போவியங்களில் சீனர்கள், மேற்கத்திய போர் வீரர்கள் ஆயுதங்களோடும் யானைகள்-பரிகள் மீதேறியும் போர்க்களம் நோக்கிச் செல்லும் காட்சிகள் நம்மை வரலாற்றை புரட்டிப் பார்க்க வைக்கின்றன. அதோடு பறவைகள், மீன், பன்றி உள்ளிட்ட சிற்பங்கள் மக்களின் வாழ்வியலைப் பேசும் விதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அழகான வித்தியாசமான புகைப்படங்கள்  எடுப்பதற்கு ஏற்ற கோயில் இது. தவிர புகைப்படங்களின் சட்டகம்மாதிரியான அடுக்கடுக்கான வாசற்படிகள் வித்தியாசமான மனநிலைக்கு கொண்டுச் செல்லும். 



சிதறிக்கிடக்கும் பாறைகளில் மீந்திருக்கும் உருவங்கள், தனக்கான இடத்தை கண்டுப் பிடிக்க முடியாமல் தனக்கான முறைக்காக பல ஆண்டுகளாக காத்துக்கொண்டே இருக்கின்றன. 


இவ்விரு கோயில்களுக்கு போகும் முன்னதாக புதர்களின் மறைவிடத்திலிருந்து தெரிந்த ஒரு காட்சியை நான் கண்டேன். ஆர்வம் பல்மடங்கு பெருக யாரும் கவனிக்காத அந்த இடத்திற்கு என் கால்கள் தாமாகச் சென்றன...



குறிப்பு: அங்கோர் பேயோன் கோயிலை புணரமைக்கும் மாபெரும் பொறுப்பை ஜப்பான் ஏற்றிருக்கிறது.
-
(பயணம் தொடரும்)



திங்கள், 6 ஏப்ரல், 2020

யசோதாபுரம் கண்ட யட்சி (பயணக்கட்டுரை) 2


சூரியவர்மன் சோழனின் வம்சாவழியைச் சேர்ந்தவரா? 





சூரியவர்மன் கட்டியதாக நம்பப்படும் அங்கோர் வாட், நிச்சயமாக உலகின் வரலாற்று பொக்கிஷம்தான்.  ஒருமுறை நேரில் காண்பவர்களால் அதன் பிரமாண்டத்திலிருந்து மீளவே முடியாது.  வாட் என்றால் கோயில் என்று அர்த்தம். இந்திய மரபுகளை உள்ளடக்கியதாக கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது அங்கோர் வாட். இடையில் மன்னனின் புத்தமத தழுவலால் மற்றும் அடுத்தடுத்து வந்த மன்னர்களின் ஆதிக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்களில் பேரழிவுகளும் அங்கு நடந்திருக்கின்றன.   அதில் மிஞ்சியவை இன்று நமக்கு வரலாற்றின் எச்சமாக காணக்கிடக்கிறது.



விரிவாக பார்க்கலாம்..

நான் முதல்நாளே அங்கோர் வாட்-டுக்குப் போக வேண்டும் என்றதும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக என் தங்கும் விடுதி ஊழியர் உறுதியளித்தார். நான் கம்போடியாவில் வந்திறங்கிய இரண்டு மணி நேரத்தில் அங்கோர் வாட்,  புராதன கோயில் நிலைநிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தேன். முன்னதாக விமானத்தில் சியாம் ரீப்-பை நெருங்கும்போது ஆகாயத்திலிருந்தே அங்கோர் வாட் எங்காவது தென்படுகிறதா என தேடினேன். பொட்டளவிலும் எதுவும் கண்ணுக்கு எட்டவில்லை. விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு வரும் வழியில் எங்கேயாவது அதன் முகப்பாவது தெரியுமா என இரு வழி சாலைகளையே நோக்கிக்கொண்டிருந்தேன். ஒன்றும் கண்ணுக்கு அகப்படவில்லை.


என் தங்கும் விடுதி ஊழியர் சொன்னார். அங்கோர் வாட் மற்றும் பிற கோயில்களுக்கு போவதற்காக பிரத்தியேக அனுமதி சீட்டு வாங்க வேண்டும் என்று. ஒரு நாளைக்கு சுற்றிப்பார்ப்பதாக இருந்தால் அதன் கட்டணம் கொஞ்சம் மலிவாக இருக்கும்; தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கோர் வாட் பார்க்க வேண்டும் என்று சொல்லியதால் அதன் கட்டணம் சற்று அதிகமாக வரும் என்றார்.  அனைத்தும் அங்கு டாலர் பட்டுவாடாதான். கம்போடிய பணத்தை 'ரியல்' என்று அழைப்பார்கள். ஆனால் ரியலின் மதிப்பு அங்கு மதிப்பிழந்து இருப்பதால் அனைத்து கொடுத்தல் வாங்களும் அமெரிக்க டாலரையே சார்ந்து இருக்கிறது.

நாங்கள் சிறப்பு அனுமதிச்சீட்டு பெறும் நிலையத்திற்கு போனோம்.  எங்கள் முகம் பதித்த அனுமதி சீட்டு காலத்தாமதம் இல்லாமல் ரெடியானது.  அதைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து  கிட்டதட்ட 40 நிமிடங்களுக்கு மேலாக பயணம் செய்தோம். 


கட்டிடங்கள் அதிகம் இல்லாத நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த சாலையில் போய்க்கொண்டிருந்தோம்.  ஆங்காங்கே சிறிய அளவிலான சாப்பாட்டு கடைகள் மட்டும் இருந்தன. ஓர் எல்லைப்பகுதியிலிருந்து வண்டி இடம்மாறி பயணித்தது. பெரிய அகழியை தாண்டி வண்டி போய்க்கொண்டிருந்தது. கம்போடிய மக்களின் சிரித்த முகங்களை எங்கும் காண முடிந்தது. சிலர் மரங்களில் தூளிக்கட்டி இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.  நிறைய சுற்றுப்பயணிகளையும் காண முடிந்தது.  என் கண்களும் மனமும் மட்டும் எங்கே அங்கோர் வாட் என தேடியபடியே இருந்தன. 

அங்கோர் வாட் மற்றும் அதை சுற்றியிருக்கும் அத்தனை புராதன கோயில்களுக்கும் நாங்கள் போய்க்கொண்டிருந்த சாலைதான் ஒரே வழி. அந்த எல்லையைக் கடந்தால்தான் சூரியவர்மன் முதற்கொண்டு ஜெயவர்மன்வரை நமக்காக விட்டுச் சென்றிருக்கும் கலைகளைக் காணமுடியும். முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டுடன் அந்த வழிப்பாதைச் செயற்படுகிறது. கம்போடிய சுற்றுலாத்துறைக்கு இங்கிருந்துதான் பெரிய வருமானம் போகிறது. போகிற போக்கில் யாரும் செல்பி எடுத்துக்கொள்ளலாம் என்று கனவில்கூட நினைக்கமுடியாது. அதற்கான விலையைக் கொடுத்தால்தான் நாம் பலனை அனுபவிக்க முடியும். 

அங்கோர் வாட் கோப்புப் படம்

''அதோ தெரிகிறதே அதுதான் அங்கோர் வாட்''  என்று எங்களின் சாரதி தொலைதூரத்தில் கையை  நீட்டினார். அதன் பிரமாண்டம் என் கண்களில் அகப்படவில்லை.  கோயிலை நெருங்க- நெருங்க, சாலைகளில் அலங்கார வேலைகள் நடந்துக்கொண்டிருப்பது தெரிந்தது. ஏப்ரல் மாத வசந்த விழாவுக்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கின்றன என்று எங்கள் சாரதி சொன்னார். கெமர் மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகிக்கொண்டிருந்தார்கள். புத்தம் சம்பந்தப்பட்ட விழாக்களில் கட்டப்படும் வண்ண ரிப்பன்கள் எங்கும் தென்பட்டன.



கோயிலை மாலை  6 மணிக்கு அடைத்துவிடுவார்கள். அங்கு மின்சாரம் எதுவும் இல்லாததால் அதன் பிறகு மக்களுக்கு சுற்றிப்பார்க்க அனுமதியில்லை. மேலும், மின்சாரம்  புராதன தன்மைக்கு கேடு விளைவிக்கும் என்பதால் மின்சாரம் கொண்டு வருவதற்கான எந்த திட்டத்தையும் அரசு எடுக்கவில்லை. இதே நிலைப்பாட்டைதான் இந்தோனேசிய புராதன கோயில்களிலும் கையாளப்படுகின்றன.    

1296-ஆம் ஆண்டிலிருந்து 1297 ஆம் ஆண்டுவரை யசோதப்புரமாக இருந்த அங்கோர் நகரம், உலகின் 8-வது அதிசயம் என யுனேஸ்கோ  அறிவித்திருப்பதில் நமக்கு மாற்றுகருத்து இருக்க முடியாது. இதோ  200 சதுர கி.மீ. பரப்பில் பிரமாண்டமான அங்கோர் கோட்டையில் யட்சி கால்பதித்துவிட்டாள். 

விஷ்ணு கோயிலாக இருந்த அங்கோர் வாட் பின் புத்த வழிபாட்டுத் தலமாக மாறி, இன்றும் புத்த வழிபாடு கொண்டதாகவே செயற்பட்டு வருவதை அங்கு கண்கூடாக பார்க்கமுடிந்தது.



சூரியவர்மன் சோழனின் வம்சாவழியைச் சேர்ந்தவர் என்றும் இந்திய மரபணுவில் வந்தவர் என்றும் தமிழர் என்றும் ஆதரமற்ற ஏகப்பட்ட உணர்சிமிக்கப்பதிவுகள் இணையத்தில் நமக்கு கிடைக்கின்றன. சூரியவர்மன் கெமர் இனத்து அதாவது கம்போடிய நாட்டு அரசனாவார். ஆனால், அவரும் அந்நாட்டு கெமர் மக்களும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். சூரியவர்மனுக்கு
தமிழ் தெரியும் என்று கூறுவதெல்லாம் உண்மையில் நகைப்புக்குறிய விஷயமாகும். இந்து மதம் அங்குப் பரவியதற்கு வணிகம் ஒரு காரணமாக இருக்கிறது. கம்போடியாவின் கடற்கரை சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வரும் வணிகர்கள் தங்கிச் செல்கிற இடமாக இருந்திருக்கிறது. 

பல லட்சம் அடிமைகளைக்கொண்டு கற்பனைக்கு எட்டாத பிரமாண்டத்தோடு கட்டி எழுப்பப்பட்டிருக்கும் அங்கோர் வாட், அங்கோரியன் தலைநகரங்களின் எச்சங்களாகவும்,  பண்டைய கெமர் சாம்ராஜியத்தின் கட்டிடக்கலை கலை மற்றும் நாகரிகத்தின் உச்சத்தையும் பேசிக்கொண்டிருக்கின்றன. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் வைத்திருந்திருக்கிறது கெமர் பேரரசுவ்

 சூரிய வர்மனுக்குப் பிறகு வந்த ஜெயவர்மன் (இவர் மருமகனாவார்) புத்தமத்தை தழுவியதால் அங்கோர் கோயில்கள் அனைத்தும் புத்த கோயிலாக மாற்றியமைக்கப்பட்டன. அதில் கோயில் சிலைகள் பெருமளவு சேதமடைந்தன. உதாரணத்திற்கு சிலையின்  தலைகள் கொய்யப்பட்டு புத்தச் சிரசுகள் பொறுத்தப்பட்டன.  ஏனையவை தலைகள் இல்லாமலேயே விடப்பட்டன. அல்லது பொறுத்தப்பட்ட தலைகள் இயற்கை பேரிடர்கள் மற்றும் போர்களினால் காணாமல் ஆக்கப்பட்டன. அதோடு சிலை திருட்டுகளும் நடந்துள்ளதும் ஒரு காரணமாகும்.


54 கோபுரங்கள், மூன்று மண்டபங்கள், மத்தியில் ஐந்து கோவில்கள், நான்கு திசைகள், வாயில்கள், சூரியனுக்கும் சந்திரனுக்கும் தனி தனி மண்டபங்கள் என காண காண நீண்டு போய்க்கொண்டே இருக்கிறது அங்கோர் வாட் அமைப்பு.  அங்குலம் அங்குலமாக ரசிப்பதற்கு எக்கசக்க வேலைபாடுகள் உண்டு. வரலாற்று விரும்பிகளுக்கு  ஒரு பொழுது நிச்சயமாக  போதாது. பாற்கடல் கடைந்து அமிர்தம் எடுக்கும் காட்சி கெமர் கலையில் வடித்திருப்பதைக் காண வேண்டும். அத்தனை நேர்த்தி. இன்னும் மஹாபாரதம் சம்பந்தப்பட்ட புடைப்பு ஓவியங்களும் கேமர் பெண்களின் சிகை மற்றும் உடை அலங்காரங்களும் இவர்களோடு  அப்ஸரா பெண்களும், விலங்குகளும்  என அனைத்தையும் தனி தனியே விவாதிக்கலாம்.



நூற்றுக்கும் மேற்பட்ட கோயிகள் சில தூர இடைவெளியில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதரமாக அங்காங்கு உடைந்த கோயில் எச்சங்கள் காட்டிக்கொடுக்கின்றன . சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கட்டப்பட்ட மொத்த கோயிகளும் வைணவமும் சைவமும் பரப்ப தமிழ்நாட்டில் நடந்த உயிர்பலிகளை நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதை தடுக்க முடியாது.  


அங்கோர் கோயில்கள் அனைத்துமே கற்பனைக்கு எட்டாத  வடிவமைபில் இருக்கின்றன. 

கி.பி 800 ஆண்டு தொடங்கி  கி.பி 900 ஆண்டுகள் வரை 
 நிலைநிறுத்தப்பட்ட கம்போடிய மன்னர்களான  இரண்டாம் சூர்யவர்மன், மூன்றாம் ஜெயவர்மன், முதலாம் இந்திரவர்மன், யசோவர்மன், முதலாம் ஹர்ஷவர்மன், நான்காம்  ஜெயவர்மன் ஆகியோரின் ஆட்சிகாலத்தில் இந்து மதம் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. 

 கி.பி 950 ஆண்டு தொடங்கி  கி.பி 1050 ஆண்டுகள் வரை
ஐந்தாம் ஜெயவர்மன், முதலாம் சூரியவர்மன், இரண்டாம் உதயடித்யவர்மன், மூன்றாம் ஹர்ஷவர்மன் ஆகியோரின் ஆட்சிகாலத்தில் இந்து மதம் ஆதிக்கம் மற்றும் இறுதி ஆண்டுகளில் சைவமும் ஆதிக்கம் தொடங்கியிருக்கிறது. 

 கி.பி 1100 ஆண்டு தொடங்கி  கி.பி 1200 ஆண்டுகள் வரை
இரண்டாம் சூர்யவர்மன், ஏழாம் ஜெயவர்மன், மூன்றாம் இந்திரவர்மன் ஆட்சிகாலமாகும். இதுதான் அங்கோர் ஆட்சிகாலம் என வர்ணிக்கப்படுவதோடு இந்து மதம் ஆதிக்கம் புத்தமத ஆதிக்கமும், இந்து எழுச்சியும் தீவிரமாக நடந்தது இந்தக் காலக்கட்டத்தில்தான். மேலும் சப்பா  சாம்ராஜியம்  போர் தொடுத்ததும் (1150-ஆம் ஆண்டு), பின் அவர்களிடம் போர் செய்து மீண்டும் கெமர் சாம்ராஜ்யத்தை திரும்ப பெற்றது(1177) எல்லாம் இந்தக்காலக்கட்டத்தில்தான் நடந்தது. மிக முக்கியமாக கெமர் கட்டிடக்கலைகளின் கட்டுமானங்கள் செழித்ததும், கட்டுவது முடிவுக்கு வந்ததும்கூட இந்தக்காலக்கட்டம்தான். 

என்னதான் நாம் சிவனுக்கு விஷ்ணுவுக்கும் கட்டப்பட்ட கோயில்கள் என்று சொன்னாலும் மன்னர்கள் தங்களுக்காகவே கட்டிக்கொண்ட கோயில்கள்தான் அவை என்று சொல்லப்படுவதும் உண்டு. அங்கோர் வாட்டில் மூன்றாம் வரிசையில் இருக்கும் கர்பக்கிரகம்மாதிரியான மண்டபம் மிக முக்கியமானது மற்றும் விசாலமானதுமாகும். மிக உயர்ந்த மண்டபம் அது. நான் படிவழியே ஏறி அதன் உச்சிக்கு சென்றேன். மொத்த அங்கோர் வாட்டையும் பார்க்க முடிந்தது. ஆனால், எந்தச் சிலைகளும் அங்கில்லை.

புத்த பிக்குகள் சிலர் பூஜைகளை மேற்கொண்டிருந்தனர். இளம் வயது புத்தபிக்குகள் கூட அங்கிருந்தனர்.  



நான் இறுதி கட்டடத்திற்கு சென்றேன்.   கட்டத்திலிருந்து  படியொன்று கீழே இறங்கியது. நான் அதில் இறங்கி போனேன். உடைந்த கற்சிலைகள் சில குவியலாக கிடந்தன. ஏதேதோ எண்ணங்கள் மனதில் தோன்றியபடியே இருந்தது என்ன என்று சொல்லமுடியாத ஓர் உணர்வு. பார்வையாளர்கள் ஒருவரும்  அங்குவரவில்லை. அமைதியாக இருந்தது. சூரியன் மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது.  தரையில் கொஞ்ச நேரம் அமர்ந்துக்கொண்டேன். நேர் எதிர் பெரிய வனம் கோபுரத்தை பார்த்தபடி இருந்தது.  உடைந்த யாழி ஒன்று கவனிப்பாற் அற்று கிடந்தது.



எனக்கு அங்கோர் வாட் அரண்மனையாக இருக்குமோ என்ற சந்தேகம் அங்கு போனப்பிறகுதான் வந்தது. சில அமைப்புகள் அரண்மனைக்குண்டான இலக்கணத்தோடு இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்களால் அதை மறுக்க முடியாது என்று எனக்கு தோன்றுகிறது. எத்தனை எத்தனை அறைகள், அடுக்குள் அதன் பிரமாண்டத்தை மனக்கண்ணில் மீண்டும் ஓட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன். யட்சி ஒவ்வொரு இடமாக உலாவிக்கொண்டிருந்தால். அவளின் ஊதா நிற புடவை ஆத்மாவின் கண்ணாடியாக அலசியபடியே இருந்தது. 

"நேரமாகிக்கொண்டிருக்கிறது" என்ற வார்த்தை என் சிந்தனையை கலைக்க எங்கிருந்தோ மேலிருந்தபடி சந்துரு அழைத்தார்.

என்னை அங்கிருந்தே ஒரு புகைப்படம் எடுக்க கேட்டுக்கொண்டேன். மனது அங்கோர் வாட் எனும் யசோதபுரத்திடம் முழுமையாக சரணடைந்திருந்தது. சிலைகள் இல்லாத அந்த இடத்தில் நான் முதன் முதலாக சிலையாகிப்போனது அப்போதுதான்.

பொழுது சாய்ந்த அங்கோர் வளாகம்

-பயணம் தொடரும்

 குறிப்பு: அனுமதி சீட்டை எங்காரணம் கொண்டும் தொலைத்துவிடவே பழுதாகிவிடவோக் கூடாது. அவ்வாறு நடந்தால்   அனுமதி சீட்டை எடுப்பது தவிர வேறு உபகாரம் இல்லை.