ஞாயிறு, 21 ஜூன், 2015

‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’

நாட்குறிப்புப் படிப்பது என்பது பொதுவாகவே நிறையப் பேருக்குப் பிடித்த விஷயமாகவே இருக்கிறது. அதுவும் அடுத்தவரின் நாட்குறிப்பு என்றால், அதில் இருக்கும் அந்தரங்கத்தைப் படிக்க ஆர்வப்படுவது ஒரு போதையைப் போன்றது. கிட்டதட்ட நிர்வாணத்தை எட்டிப்பார்க்கும் ஒப்பீடுதான். பதின்ம வயதில் டைரி எழுதும் பழக்கம் கொண்டிருந்த நான், பலமுறை அது ரகசியமாகத் திருடப்பட்டு, வாசிக்கப்பட்டுப், பின் விமர்சீக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். என் நிர்வாணம் பல வேளைகளில் குடும்பச் சட்டசபையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறுவெறுப்பின் காரணமாகவே நான் டைரி எழுதும் பழக்கத்தை விட்டொழித்தேன். களவாடப்பட்ட என் டைரிகள் எங்கு இருக்கிறது என்பது எனக்கும் தெரியாத ஒரு புதிர். அது இப்போதும் இருக்கும் என்றே நம்பிக்கையெல்லாம் அறுந்துபோய் வெகு காலமும் ஆகிவிட்டது.

அண்மையில் மேற்கொண்ட இந்தியப் பயணத்தில் எனக்குக் கிடைத்த புத்தகம் ‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’.  ஜூன் 12 1942 முதல் 1 ஆகஸ்ட் 1944 வரை தனது 13-வது வயதில் ஆன் என்ற சிறுமி எழுத தொடங்கிய டைரிக் குறிப்புகள்தான் புத்தக வடிவமாகக் கிடைத்தது. யூதச் சிறுமியான ஆனி இரண்டாம் உலகப்போரின் போது தனது ரகசிய மறைவிடத்திலிருந்து அதை எழுதியுள்ளார். சுமார் 70 மொழிகளில் இந்த நாட்குறிப்பு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த நாட்குறிப்பைத் தமிழில் உஷாதரன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். ‘எதிர் பதிப்பகம் அதை 2011 ஆம் ஆண்டு வெளியிட்டது.

ஓர் இளம்பெண்ணின் நாட்குறிப்பு என்றதைப் பார்த்தவுடன் அதை வாசிக்க அப்பவே மனம் விரும்பத்தொடங்கியது. மேலும், ‘70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட என்பதோடு ‘இரண்டாம் உலகப்போரின் குறிப்புகள் உள்ளடங்கிய போன்ற வரிகள் எனக்கு புத்தகத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. 328 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் பயணத்தின் ஊடே படிக்கத்தொடங்கி மலேசியாவில்தான்  முடித்தேன். ஆனின் சிரித்த முகம் கொண்ட அட்டைப் படமும், அவள் கையப்பமும் கையெழுத்தும் கொண்ட பின்னட்டையும் இந்தப் புத்தகத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறது.

1942 ஜூன் 12-ஆம் தேதி தனது 13-வது வயதில் ஆனிற்குப் புதிய நாட்குறிப்புப் பரிசாகக் கிடைக்கிறது. அன்று இரவே அவள் அதில் ஒரு குறிப்பை எழுதி வைக்கிறாள்.
அதைனைத்தொடர்ந்து அவள் அதனுடன் தொடர்ந்து உறவாடத் தொடங்குகிறாள். தனது டைரிக்கு ‘கிட்டி எனப் பெயரிடுகிறாள். அவளின் நாட்குறிப்பு இவ்வாறு தொடங்குகிறது

இதுநாள்வரை நீ என் உண்மையான நண்பனாக இருந்து எனக்குப் பெரும் ஆறுதலாக விளங்குகிறாய். நான் உன்னைக் கிட்டி என்று பெயரிட்டு அழைக்க விரும்புகிறேன். இதுபோன்ற நாட்குறிப்புகளை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கும் என்பதை உனக்குக் கூற விரும்புகிறேன். நான் தொடர்ந்து என் நினைவுகளை உன்னிடம் பதிவு செய்கின்ற மகிழ்ச்சிகரமான நேரத்திற்காகக் காத்திருக்கிறேன். நீ என்னிடம் உள்ளதே எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது..’
-ஆன்
நெருங்கிய தோழமையோடு ஒரு நாட்குறிப்பை அனுகும் பாங்கு, உண்மையில் மேற்கத்திய கலாச்சாரத்திலேயே சாத்தியப்படுகிறது அல்லது தொடங்குகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்த வரிகளே எந்த ஓர் இடையூறும் இல்லாமல் நம்மை வாசிப்புத் தலத்திற்குள் புத்தகம் கொண்டு செல்கிறது.
ஆனின் அப்பா முன்னாள் ராணுவ அதிகாரியாவார். ஒரு காலக்கட்டத்தில் அவர் ஜெர்மனியிலிருந்து நெதர்லாந்துக்கு (ஹொலந்து) தப்பிச்செல்கிறார். ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியேறுகிறது 4 பேர் கொண்ட அவர்களின் குடும்பம். அங்குதான் ஆன் தனது 13-வது வயது நிறைவுப் பிறந்தநாளைக் கொண்டாடுகிறாள் ஆன். பிறந்தநாள் பரிசுகளில் அவளுக்கு ஒரு டைரியும் கிடைக்கிறது.
ஆன்னுக்கு டைரி கிடைத்த ஒரு மாதம் மட்டுமே அவள் வெளியுலகோடு தொடர்புடையவளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு, நெதர்லாந்தும் நாஜிகளின் வசம் விழ, தான் தங்கியிருந்த வீட்டின் புத்தக அலமாரிக்குப் பின் இரகசிய அறையை அமைத்து அங்கேயே நிரந்தரமாகத் தங்குவிடுகின்றனர் ஆனின் குடும்பத்தினர். பின்னர் அவளின் அத்தைக் குடும்பமும் அவர்களோடு தஞ்சம் அடைகிறது.

இவர்களோடு ஆனின் டைரிக் குறிப்பும் வளர்கிறது. கிட்டதட்ட 70 சதவிகிதம் ஆன், தனது சொந்த விருப்பு வெறுப்புகளையே அதில் பதிவு செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அவர்களின் உணவுப் பற்றாக்குறை, பிறந்தநாள் கொண்டாட்டம், தனது அத்தை மகனின் மீது கொண்ட ஈர்ப்பு, அப்பாவிடம் உள்ள நெருக்கம், அம்மாவிடம் உள்ள வெறுப்பு ஆகியவையே தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது.

திருடர்களின் அட்டகாசம் குறித்தும், அதனால் ஏற்படும் சங்கடங்கள் குறித்தும் அவ்வப்போது டைரிகுறிப்புகளில் ஆன் குறிப்பிடும்போது, நாமும் சங்கடத்தில் ஆட்கொள்ளப்படுவதை உணர நேரிடுகிறது. குறிப்பாக ஆள் நடமாட்டத்தை உணரும்போதெல்லாம் அவர்கள் குறிப்பிட்ட மணிநேரத்திற்குக் கழிப்பறையைப் பயன் படுத்துவது உள்ளிட்ட சில விஷயங்களில் ஈடுபடுவது கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள்.
புத்தகத்தின் 300-வது பக்கத்திற்கு மேல், சில பக்கங்களில் போர் பற்றிய தீவிரத்தை ஆன் கொஞ்சம் பதிவு செய்திருக்கிறாள். மற்றபடி ஒரே இடத்தில் ஹிட்லரின் நண்பரான முசோலினி ராஜினாமா செய்ததைத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஹிட்லரைப்பற்றியும், நாஜிகளைப் பற்றியும் ஆன் அவ்வளவாகக் குறிப்பிடவில்லை.

அதற்கு, ஆன்னின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். 13 வயது நிரம்பிய ஒரு சிறுமியிடமிருந்து இந்த அளவுக்குப் பதிவு இருப்பதே பெரிய விஷயம் என்றே தோன்றுகிறது. தான் ஒரு எழுத்தாளர் ஆகனும் என்ற ஆன்னின் எதிர்கால ஆசை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
சில இடங்களில் இரண்டாம் உலகப் போர் பற்றிய வரிகளில் நமக்கு நடந்துமுடிந்த இனஅழிப்பின் கொடூரத்தை ஞாபகப்படுத்துகிறது. ‘ஆம்ஸ்டர்டாமின் பல பகுதிகள் முழுக்கக் குண்டு வீசி அழிக்கப்பட்டுவிட்டது. பிணங்களை முழுக்க வெளியே இழுத்துப் போடவே பல நாட்கள் தேவைப்படும்.’

இப்படியான மனதை ஸ்தம்பிக்கும் வரிகள் பல இடங்களில் வந்தாலும் கூட இந்தப் புத்தகம் என்னை அந்த அளவுக்குத் திருப்தி படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. தட்டையான மொழிபெயர்ப்பு, சில இடங்களில் குழப்ப நிலையில் இருக்கும் வாக்கிய அமைப்பு, அங்காங்கு கண்ணில் படும் எழுத்துப்பிழை போன்றவற்றோடு, எனக்கு இந்தப் புத்தகத்தில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு விஷயம் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது.
ஆனாலும், சில வாக்கியங்கள் மனதில் நிற்கும்படியாக இருக்கின்றன.
‘சிந்தை மிக உயர்ந்ததெனில், மனிதர்தம் செயல்களோ மிக அற்பம்
இப்படியான சிந்திக்கக்கூடிய சில நல்ல வரிகளை இந்தப் புத்தகம் கொண்டிருந்தது என்னைத் தொடர்ந்து வாசித்து முடிக்கும் நிலை வரையில் கொண்டு சென்றது.

ஆன்னின் குடும்பமும் அவளின் அத்தை குடும்பமும் அவர்களோடு ஆனின் வீட்டில் வேலை செய்த மையீப் என்ற டச்சு பெண்மணி உட்பட 8 பேர் அந்த ரகசிய மறைவிடத்தில் வாழ்ந்தனர். நாஜி ராணுவம் 1944 ஆகஸ்ட் 4-ஆம் தேதி அந்த ரகசிய வீட்டை கண்டுபிடித்து மையீப்பை மட்டும் விட்டுவிட்டு மீதி அனைவரையும் பிடித்துச் சென்றது. அவர்கள் அனைவரையும் சித்திரவதை முகாமில் அடைத்துவைத்து நச்சுவாயு கூடத்திற்குப் பலியாக்கினார்கள் நாஜி அதிகாரிகள். சிறுமிகளான ஆன்னையும் அவளின் சகோதரியான மார்கரெட்டையும் தனிகூடத்தில் அடைத்து வைத்து அவர்களின் தலையை மொட்டையடித்து, நிர்வாணப்படுத்திச் சுமார் 8 மாதங்களாக வைத்திருந்தனர். பெர்ஜன் – பெல்சன் நகர முகாமில் 1945-ஆம் ஆண்டுப் பரவிய உயிர்கொல்லி நோயில் மார்கரெட் பலியாகச், சில நாட்களிலே ஆன்னும் டைபஸ் பசிக்கு பலியானாள்.
ஆன்னின் குடும்பத்தில் அவளின் தந்தை மட்டுமே உயிர் தப்பினர். இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு, விடுவிக்கப்பட்ட அவர் தனது இருப்பிடத்திற்குத் திரும்பும்போது ஆன்னின் டைரி மட்டுமே அவரை வரவேற்றது. (மையீப்தான் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்) தனது மகளின் உணர்வுபூர்வமான எழுத்து வடிவத்தைப் படித்து மனமுறுகினார் அந்தத் தந்தை. எழுத்தாளராக வேண்டும் என்ற தனது மகளின் கனவை நிறைவேற்ற முடிவு செய்ததின் முயற்சி ‘The Diary Of A Young Girl’ என்ற புத்தகமாக உயிர் பெற்றது.


செவ்வாய், 9 ஜூன், 2015

மௌனம் உறைந்த தேசம் 22

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 21

இப்படியான அனுபவங்களோடு நாங்கள் கொழும்பு வந்து சேர்ந்தோம். நீண்டப் பயணம். நாங்கள் ரொம்பவும் களைத்துப் போயிருந்தோம். விடிந்தால் கொழும்பில் கொஞ்சம் நினைவுப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் எனத் திட்டமிருந்தது.

எனக்கு உறக்கம் கொள்ளவில்லை. சுமார் 6 நாட்கள் தோழிகளுடனான நட்பு, சந்திப்புகள், பயணங்கள், அனுபவங்கள் என எல்லாம் ஒரு காட்சிபோல் ஒன்றன்பின் ஒன்றாக ஓடத்தொடங்கியது. அப்படியே உறங்கியும் போனேன்.
இலங்கைப் பயணத்தில் 7-வது நாளாக விடிந்திருக்கும் எனது காலை, எவ்வித அந்நிய உணர்வையும் கொடுக்கவில்லை எனக்கு. பயணத்தின் முதல் நாள், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அத்தனை குழப்பத்தோடு வந்திறங்கினேன். எனக்குத் தெரியாத முகங்களையும், அவர்களின் மொழியையும், பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையையும் எப்படி நான் எதிர்கொள்ளப் போகிறேன் என்ற குழப்பம் அது. ஆனால், இன்று என்னைச் சுற்றிலும் இருக்கும் இலங்கைத் தமிழர்களும், அம்மண்ணும் அந்நியம் என நினைக்க முடியவில்லை.

நாங்கள் திட்டமிட்டதுபோலவே பொருள்களை வாங்கக் கொழும்புப் பட்டணத்திற்குப் போனோம். மலேசியாவில் பெருநகரங்களில் இருக்கும் ‘Black Market’ மாதிரியான வணிகச் சந்தை நடக்கும் இடத்திற்கு றஞ்சி அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் இதுபோல ஒரு Market இருக்கும்தான் போலிருக்கிறது. மலேசியா உட்படத் தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளிலுள்ள இதுபோன்ற Market-களுக்குப் போயிருக்கிறேன். பேரம் பேசுதல் கலாச்சாரம் மட்டும் எல்லா நாடுகளிலும் ஒரே வர்ணத்தைக் கொண்டிருக்கிறது.

பேச்சுத் திறமையுள்ள மற்றும் பொருள்களின் தரம் பிரித்துப் பார்க்கத்தெரிந்த நபர்களுக்கு இதுபோன்ற சந்தைகள் லாபகரமாக அமைகிறது. எங்களுக்கு வழக்கம்போல்தான். நாங்கள் அரைச் சதம் நேரம், பேரம் பேசி, விலைக் குறைத்து, மலிவு என்று டசன் கணக்கில் வாங்கிய பொருள், புன்னகை மாறுவதற்குள் வேறொரு இடத்தில் இன்னும் மலிவாக விற்பனைக்கு இருந்தது. நான் றஞ்சியைப் பார்க்க றஞ்சி என்னைப்பார்க்க வியாபாரி எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார்.

இலங்கை வியாபாரிகள் சிங்களவர்களாக இருந்தாலும் அவர்களுக்குத் தமிழ் தெரிகிறது. ஓரளவுக்குக் கதைக்கவும் செய்கிறார்கள். அதுபோலத் தமிழ் வியாபாரிகளுக்கும் சிங்களம் தெரிகிறது. இது ஒரு வியாபார யுத்திதான் என்றாலும், யார் சிங்களவர் என்று பேதம் பார்க்கச் சற்றுச் சிரமமாகவே இருந்தது.

நாங்கள் இலங்கை வந்ததிலிருந்து தமிழ் உணவு வகைகளைதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். சிங்கள உணவு எப்படிதான் இருக்கும் என்ற எண்ணம் வரவே ஒரு சிங்கள உணவுக் கடைக்குப் போனோம். பெரிய வேறுபாடு இல்லை. பருப்பு, பலாக்காய்ப் பிரட்டல், காரம் எனத் தமிழ் உணவுக்கு மிக அருகில்தான் அதன் சுவை இருந்தது.
அன்றைய இரவு, புதிய மாதவிக்கு விமானம் என்ற படியால் நேரத்தோடு திரும்பலாம் என்று முடிவெடுத்த வேளையில் தோழர் முஸ்டின் - ஷாமிளாத் தம்பதியிடமிருந்து இரவு விருந்துக்கு அழைப்பு வந்தது. அவர்கள் கொழும்பில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தனர். அங்கே இரவு செல்லலாம் என றஞ்சிச் சொன்னார்.

றஞ்சியின் மாமாதான் எங்களைத் தோழர் முஸ்டின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் அழைத்துச் சென்ற அந்த மாலை நேரம், மஞ்சள் பூசிக் குளித்தமாதிரி நிறம் மாறியிருந்தது கடற்கரையை ஒட்டிய சாலையில் எங்களின் வாகனம் போய்க்கொண்டிருந்தது. சூரியன் வீரியமிழந்து சிவந்திருந்தது. ஆனால், அதனிடமிருந்து வெளிபட்ட மிச்ச ஒளிக் கடல்நீரில் பட்டுத் தெரித்துக்கொண்டிருந்தது. அங்கே ரயில் போக்குவரத்தும் இருந்தது. அந்த அழகை எப்படி வர்ணிக்க? மனம் இயற்கையோடு காதலில் விழுந்த நேரம். மாமா சொன்னார், இந்தக் கடற்கரையின் ஒரு பகுதியைத்தான் சீனா வாங்கி, நகரம் எழுப்பிக்கொண்டிருந்தது என்று.

அப்போதுதான் செய்தியில் எப்பவோ படித்த ஞாபகம் மெல்ல நினைவுக்கு வந்தது. கடலையே கூறுபோட்டு விற்க முடியுமா என மனதில் பேசியது என்னையும் அறியாமல் வெளியில் கேட்டுவிட்டது. மாமா சொன்னார், என்ன முடியுமா? அதோ பார் என அவர்கள் போட்டு வைத்திருக்கும் அஸ்திவாரத்தை மாமா காட்டினார். இலங்கைக்கும் ராமேஸ்வரத்துக்கும் வானரங்கள் போட்டதாகச் சொல்லப்படும் பாலம் மாதிரி இல்லை. இது கடலுக்கடியில் மண்ணையும் கல்லையும் பாறைகளையும் போட்டு அஸ்திவாரத்தையும், அந்தக் கனவுக் கட்டிடத்தையும் அசைக்க முடியாதவாறு சீனாப் போட்டுவைத்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தற்போது இருக்கும் புதிய அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சீனா, அமைக்கத் திட்டமிட்ட இந்தச் செயற்கைத் தீவு, ‘கொழும்பு போர்ட் சிட்டி'  எனும் பெயரில் பலகோடி ரூபாச் செலவில் போடப்பட்ட மாபெரும் திட்டமாகும். சீனாக்காரனை எப்படிதான் இந்தச் சிங்கள அரசு கண்மூடித்தனமாக நம்புகிறது? இது அறியாமையா அல்லது முட்டாள் தனமா? இந்த அரசியலுக்குள் நுழையாமலும் அதற்கு மேலும் இயற்கையை ரசிக்க முடியாமலும் தோழர் முஸ்டின் வீட்டை அடைந்தோம்.

தோழர் முஸ்டின் – தோழி ஷாமிளா ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தீவிரத் தமிழ் இஸ்லாமியப் பாரம்பரியப் பின்னணியைக் கொண்டவர்கள். அதனாலேயே அவர்களால் மனிதர்களோடும் மனிதத்தோடும் இணைந்துச் செயல்படவும் செயலாற்றவும் முடிகிறது. தமிழ் மற்றும் ஹூடூட் சட்டத்தைப் பின்பற்றும் சில இஸ்லாமியப் பிரிவினர் பெண்களின் சுதந்திரத்தையும், அவர்களின் திறமைகளையும் அவர்கள் அணியும் ஃபர்தாவில் மறைத்து வைக்க நினைக்கின்றனர். ஆனால், தோழர் முஸ்டினின் புரிந்துணர்வு, தோழி ஷாமிளாவை மென்மேலும் பரந்த பார்வைக்கு இட்டுச் செல்கிறது. எனது இந்தக் கூற்றுக்கு ஷாமிளாவின் கவிதைகளும் பெண்கள் சந்திப்பில் அவர் படைத்த கட்டுரையும் போதுமானது எனத் தோற்றுகிறது.

அன்றைய இரவு சுவையான விருந்தைத் தோழர் முஸ்டின் – தோழி ஷாமிளாவும் ஏற்பாடுச் செய்திருந்தனர். இருவரும் சேர்ந்தே சமைத்திருந்தனர் என்பது கூடுதல் தகவல். அதன் பிறகு, முஸ்டின் புதிய மாதவியை ஏர்போர்ட்டிற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் அடுக்கு மாடியின் மொட்டை மாடியில் அரட்டை மாநாடுப் போட்டோம். குறிப்பாக இந்தப் பயணம் என்ன நன்மையைச் செய்தது என்ற கேள்வியை முன்வைத்து எங்களின் அரட்டைப் போய்க்கொண்டிருந்தது. வானத்தில் பிறை மெல்லிய ஒளியோடு எங்களின் அரட்டையைக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த மொட்டை மாடியிலிருந்து முழுக் கொழும்பு நகரத்தையும் பார்க்கலாம் போல இருந்தது.
அது அழகான அமைதியான இரவு. அதோடு,இலங்கை மண்ணின் எனது கடைசி இரவு. இதற்குப் பிறகு நான் இலங்கைக்கு வரலாம் அல்லது வராமலே போகலாம். ஆனால், இந்த இரவு எனக்கு மிக முக்கியமானதாக இருந்தது. நான் வரும்போது என் பயணப் பெட்டியையும் அசட்டு நம்பிக்கையையும் தவிர வேறெதையும் கொண்டு வரவில்லை. இப்போது, நான் நிறையச் சம்பாதித்துவிட்டேன். தோழிகளின் அன்பைச் சம்பாதித்தேன். பல நல்ல உள்ளங்களைச் சம்பாதித்தேன். எனக்கான இருப்பைச் சம்பாதித்தேன். இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். என்னை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆச்சரியம் நிம்மதியான நித்திரையைக் கொடுத்தது. நித்திரை என்னைப் புத்துணர்ச்சியாகக் காலையில் விழிக்கவும் செய்தது.
எனது மலேசியாப் போகிறேன்…

இதோ எனது எட்டாவது நாள். விடிந்துவிட்டது. நான் கொழும்பு அனைத்துலக விமான நிலையத்திற்குக் கிளம்பியும் விட்டேன். என்னுடன் விஜயா அம்மாவும் கிளம்பினார். எனக்கும் அவருக்கும் விமானத்திற்கு இரண்டு மணிநேர வித்தியாசம்தான். நாங்கள் ஒன்றாகவே கிளம்பினோம். றஞ்சி உடன் வந்தார். ரஜனி ஒரு விஷயமாக வெளியில் போயிருந்தார். மாமாதான் எங்களை ஏர்போட்டுக்கு அழைத்துப் போனார். மலேசியாக் கிளம்பிவிட்டால் வீடே அமைதியாகிவிடுமே என்று மாமா கூறினார். நான் சிரித்தேன்.
ஏர்போர்ட்டில் போர்டரைக் கடக்கும் வரையில் எனது மனநிலையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் வாழ்ந்த அந்தக் கணத்தை எந்த வார்த்தைகளாலும் பேசிட முடியாது. விஜயா(அம்மா)வும் றஞ்சி(மா)யும், நானும் திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையைதான் சொல்லிக்கொண்டோம். “போயிட்டு வருகிறேன்”, “பார்த்துப் போயிட்டு வா”.. ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தைகள் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டதாக ஒலித்துக்கொண்டிருந்தன. இந்தப் பிரிவில் கலந்த எங்களின் அன்பின் ஈரம் இன்னும் காயாமலே இருக்கிறது. இதோ தொட்டுப் பார்க்கிறேன். என்விரல் நனைந்திருப்பதை நிரூபிக்க எனக்கு ஆட்கள் தேவையில்லை.
நன்றி
(முற்றும்)

திங்கள், 8 ஜூன், 2015

புத்தக விமர்சனம் – இமையம்.

துடைக்கப்படாத இரத்தக் கறைகள் – யோகி


       இந்திய மொழிகளில் தன் வரலாற்றுக் கதைகள் அதிகம் எழுதப்பட்டது மராத்தியில்தான். அதற்கடுத்த நிலையில் இருப்பது மலையாளம். தமிழ் மொழியில் தன் வரலாற்றுக் கதைகளின் எண்ணிக்கை சற்றுக் குறைவுதான். தன் வரலாற்றுக் கதைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பொது வாழ்வில் ஈடுபட்டவர்களுடைய கதை. மற்றொன்று பொது வாழ்வில் ஈடுபடாத – தனி மனிதர்களுடைய கதைகள்.

       1985க்குப் பிறகு தமிழ் மொழியில் எழுதப்பட்ட தன் வரலாற்றுக் கதைகள் சாதியக் கொடுமைகளை, இழிவுகளை, பிறப்பின் வழி ஏற்பட்ட சங்கடங்களைப் பேசியவை. அதுவும் தன்னைப்பற்றியும், தன்னுடைய தனிப்பட்ட துயரங்கள், இழப்புகள், வலிகள், காயங்களை கண்ணீரின் மொழியில் எழுதப்பட்டவை. வாசகரின், சமூகத்தின் இரக்கத்தை, அனுதாபத்தை கோரியவை. திட்டமிட்டு எழுதப்பட்டவை. இதற்கு நேர் எதிரான குணத்தை கொண்டிருப்பவை ஆ.ரங்கசாமி எழுதிய – சிவகங்கையிலிருந்து சீசாங் வரை என்ற தன் வரலாற்றுக் கதையும், யோகி எழுதிய துடைக்கப்படாத இரத்தக் கறைகள் என்ற தன் வரலாற்றுக் கதையும்,. இந்த இரண்டு தன் வரலாற்றுக் கதைகளும் தமிழ்மொழியில் எழுதப்பட்டவை. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து அல்ல. மலேசியாவிலிருந்து.

       யோகியின் துடைக்கப்படாத இரத்தக் கறைகள் – என்ற தன் வரலற்றுக் கதை பதினோரு தலைப்புகளில் பதினாறு ஆண்டுகால வாழ்வை மட்டுமே பேசுகிறது. பொதுவாக சொன்னால் ஒரு இளம்பெண் பதினாறு ஆண்டுகள் வேலை தேடி அலைந்த கதை, வேலை செய்த கதை. சிறிய மருத்துவமனையில் தாதியாக, கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் பார்த்த வேலை, மருத்துவமனை காவலர், சமையல் உதவியாளர், தங்கும் விடுதியின் கணக்கர், பத்திரிக்கை செய்தியாளர் என்று பல வேலை. புதியபுதிய வேலைகள், புதியபுதிய இடங்கள், புதியபுதிய மனிதர்கள். புதியபுதிய நடைமுறைகள், சட்டதிட்டங்கள், ஒவ்வொரு வேலையும், ஒவ்வொரு இடமும் புதிதுபுதிதாக கற்றுத்தருகின்றன. ‘திருடி’ என்று பழி சுமப்பது, ‘அதான் நீ வந்திட்டியே’ என்றும், ‘கூலி’ என்றும் பட்டம் சுமக்கிற இடம். ‘இப்பவே ஆம்பள கேக்குதா?’ என்று கேலி செய்கிற இடம், இருபது கோழிகளை வெட்ட சொல்கிற இடம், காதல் செய்வதால் வேலை இல்லை என்கிற இடம், அனைத்தையும் ஒளிவு மறைவின்றி நேர்மையாகவும் நல்ல தமிழிலும் யோகி எழுதியிருக்கிறார்.

       தந்தையின் மரணத்தால் வேலை தேடிப் போகிற இளம்பெண். பதினாறு ஆண்டுகள் துரத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறாள். அவளும் சலிக்காமல் ஓடிக்கொண்டேயிருக்கிறாள். வேறு வழியில்லை. ஓடித்தான் ஆக வேண்டும். அன்றாட நெருக்கடிகள், தேவைகள் ஓட வைக்கிறது. வாழ்க்கை என்பது ஓடித்தீர்க்க வேண்டிய ஒன்றுதானே. யோகி ஓடுகிறார். தனக்கான ஓட்டம் விதியால் ஏற்பட்டது, சாபத்தால், சதியால் ஏற்பட்டது என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. முக்கியமாக அழவில்லை. அழுது இரக்கத்தை கோரவில்லை. ‘இதென்ன பிரமாதம்? இன்னும் இருக்கிறது பார்” என்று யோகி ஓடுகிறார். அவருடைய ஓட்டத்தின் வேகத்தை வரைகிறது – சொற்கள்.

       குழந்தையின் மனதில் ‘சாதி’ என்கிற விதை எப்படி தூவப்படுகிறது? சாதி என்னென்ன விதமாக, எந்தெந்த இடங்களில் எப்படி வெளிப்படுத்தப்படுகிறது என்பதை போகிற போக்கில், ஓரிரு வார்த்தைகளில் சொல்கிறார். சாதி இல்லை. சாதி அடையாளம் வேண்டாம் என்று சொல்கிற மனிதர்கள் சந்திக்கக்கூடிய அக, புற நெருக்கடிகள் எவைஎவை? கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்களும், அவர்களுக்கு பிறக்கிற குழந்தைகளும் சந்திக்கிற பிரச்சினைகள் என்னென்ன என்பதை ஆச்சரியப்படும் விதத்தில் நாசுக்காக பொருள் நிறைந்த சொற்களில் சொல்கிறார். குழந்தைகளுக்கு நம்முடைய குடும்பங்களும், சமூகமும் எதை கற்றுத் தருகின்றன என்ற யோகியின் கேள்வி முக்கியமானது.

       யோகி இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றி இருக்கிறார். ஒரு இடத்தில் தாதியாக, ஒரு இடத்தில் காவலராக. இரண்டு இடத்திலும் அவர் நிலைத்திருக்கவில்லை. தானாக வெளியேறுகிறார். அவருடைய கருணை மனம் இரண்டு இடத்திலிருந்தும் அவரைத் துரத்துகிறது. தாதியாக இருக்கும்போது விபத்துக்குள்ளான மனிதர்களிடம் மருத்துவர் நடந்துகொள்ளும் முறை துரத்துகிறது. காவலராக இருக்கும்போது வங்காள தேசத்துக்காரன் அப்துலின் மரணம் துரத்துகிறது. சாகக்கிடக்கிற மனிதன் ஒரு இளம் பெண்ணின் கையைப் பிடித்துக்கொள்ள கேட்கிறான். அதிசயம்தான். இளம் பெண்ணும் தருகிறாள்.. மறுநாள் அப்துல் இறந்து விடுகிறான். இளம்பெண் அப்துலின் மறைவால் வேலையை விட்டுவிடுகிறாள். இதற்கு பெயர் காதல் அல்ல. அன்பு. மனிதர்களை கருணையற்றவர்களாக எது மாற்றுகிறது? பணமா? ஆமாம் என்கிறார் யோகி. மருத்துவர்களை எது கருணையற்றவர்களாக மாற்றுகிறது என்ற கேள்விக்கு பதிலில்லை. மனித உடலில் தேவையற்றது என்று அகற்றுகிற பொறுப்பிலிருக்கிற கடைநிலை ஊழியர் எப்படி கருணையோடு இருக்கிறார்? இதுதான் அதிசயம். இப்படி பல அதிசயங்களை தன் சொற்களின் வழியே உருவாக்கிக் காட்டுகிறார் யோகி. எதையும் வலிந்து, தூக்கிப் பிடித்து எழுதவில்லை. தன்னுடைய அப்பா இறந்த செய்தியைக்கூட போகிற போக்கில்தான் சொல்கிறார். எதற்குமே கூடுதல் அழுத்தம் தரவில்லை. அழுத்தம் தரவில்லை என்பதால் அது முக்கியமற்றது என்று பொருள் அல்ல. எப்படிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் அதை கண்ணீரால் கடக்க விரும்பாதவர். கண்ணீரை மூலதனமாக்கி எதையும் கோராத, எந்த சலுகையையும் பெற விரும்பாத ஜாலமற்ற எழுத்து. இழப்பு, வலி, மரணம், மனஸ்தாபங்கள், துரோகம், நோய் என்று அனைத்தையும் கண்ணீரின் வழியே கடக்க முயல்கிறார்கள். அழுவது என்பது ஒரு போதை. அந்த போதை யோகியிடம் குறைவாக இருக்கிறது. மனிதர்கள் அழுகிறார்கள். அழ வைக்கிறார்கள். மனிதர்களுடைய அழுகை விசித்திரமானது.

       இந்த நூலில் யோகி திரும்பத்திரும்ப பேசுகிறார் ஒரு மரணத்தைப்பற்றி மட்டும். சிலருக்கு சில மரணங்கள் பரிசாகவும், விடுதலையாகவும் இருக்கின்றன. யோகியின் தந்தையின் மரணம் அவருக்கு விடுதலையாக இல்லை, பரிசாக இல்லை. சுமக்க முடியாத பெரும் பாரம். ஓயாமல் சட்டம் பேசுகிற, ஒழுங்கு, கௌரவம்பற்றி  பேசுகிற மனிதர். தன்னுடயை எல்லா நீதி நியாயங்களையும் எல்லாரும் கடைபிடிக்கவேண்டும் என்று விரும்புகிற மனிதர். மீறினால் இடுப்பு வாரை கழற்றி விளாசிவிடுகிற மனிதர். தன்னுடைய அண்ணனின் சொல்லுக்கு மட்டும் கையைக்கட்டி நிற்கிற மனிதர். ஒரு குழந்தை விரும்பாத அப்பா அவர். ஆனால் அவர்தான் இந்த நூலில் எங்கும் நிறைந்திருக்கிறார். பிரதானமான கதாபாத்திரம் அவர்தான். அவருடைய பெயர் என்ன என்பதுகூட நூலில் இல்லை. ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும், வாக்கியத்திற்கும் பின்னால் அவர்தான் நிழல் மாதிரி ஒளிந்திருக்கிறார். யோகியின் ஒவ்வொரு செயலிலும், நடவடிக்கைகளிலும், அவர்தான் ஓயாமல் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.  தன்னுடைய மரணத்தால் யோகியை ஒரு இடத்திலும் நிலைக்க விடாமல் துரத்திக்கொண்டே இருப்பவர். உண்மையைச் சொன்னால் இது யோகியினுடைய கதை அல்ல. அவருடைய அப்பாவினுடைய கதை.

       துடைக்கப்படாத இரத்தக் கறைகள் - யோகி தன்னுடைய கதையின் வழியே மலேசியாவின் கதையையும் சொல்கிறார். கம்பத்து வாழ்க்கை, நகர வாழ்க்கை, கூலி வாழ்க்கை, தோட்டத்து வாழ்க்கை, கால மாற்றம் நிகழ்த்தும் – நல்லதும் கெட்டதும் என்று அனைத்தையும் சேர்த்து சொல்கிறர். தன்னுடைய பாட்டி தோட்டத்தில் வேலை செய்துவிட்டு எப்படி வருவார்? தன்னுடைய வாரிசுகள் ‘கூலி’ என்ற அடையாளத்துடன் வாழக்கூடாது என்று முடிவெடுத்து அதற்காக போராடி தோற்ற அப்பா, அப்பாவினுடைய மறைவுக்குப்பிறகு அம்மா எப்படி – அப்பாவினுடைய சிந்தனையோடு மறு உருவாக செயல்பட்டாள் என்பதையும் சொல்லியிருக்கிறார். சுருக்கமாக, ஆனால் அழுத்தமாக.

       இந்த நூல் யோகியினுடைய கதையை, அவருடைய குடும்பக் கதையை மட்டும் பேசவில்லை. மலேசியாவில் வசிக்கக்கூடிய சீனர்களுடய, வங்காள தேசத்தவர்களுடைய, தமிழர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்றும் சொல்கிறது. ஒவ்வொரு இனத்தவரின் மன இயல்புகள் என்ன? மூவரும் ஒன்றுபடும் இடங்கள், வேறுபடும் இடங்கள் எதுஎது? கலாச்சார, பண்பாட்டு வேறுபாடுகள் என்று அனைத்தையும் ஒரு சில சொற்களில் சொல்கிறார். துல்லியமாக. யோகியினுடைய வார்த்தைகள் வேகத்துடன் வெளிப்படுகின்றன. அவருடைய கோபம் தனிமனித காழ்ப்பல்ல. மனிதர்கள் செய்கிற இழிவான காரியங்கள் மீது, அவர்கள் பின்பற்றுகிற போலியான மதிப்பீடுகளின் மீதுதான் கோபம். அறச் சீற்றம் என்பது இதுதான்.
       தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வசித்தாலும் அவர்களுடயை மன இயல்புகள் மட்டும் மாறுவதே இல்லை. பெண்கள் சார்ந்த விசயத்தில் அவர்கள் ஒருபோதும் மாறுவதில்லை. பெண்களுக்கு அவர்கள் எந்த உதவியும் செய்வதில்லை. ஆனால் பெண்களுடைய கற்பை காப்பதில் மட்டும் அவர்களுடைய ஆர்வம், ஈடுபாடு வியப்பளிக்கக்கூடியது. குறிப்பாக வங்காள தேசத்தவர்களுடன் தமிழ்பெண்கள் சேர்ந்துவிடக் கூடாது – கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள்? தமிழ் ஆண்கள் பாதுகாக்க விரும்புவது பெண்களின் உடலையா, அவர்கள் நம்புகிற புனித பண்பாட்டையா என்று யோகி கேள்வி கேட்கிறார். இது கேள்வி அல்ல. தமிழ் பண்பாட்டின், கலாச்சாரத்தின் முகத்தில் விழுந்த பலமான குத்து.

       மலேசியாவில் தமிழர்களைக்காட்டிலும் வங்காள தேசத்தவர்கள் பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். கூடுதலான உழைப்பிற்கும், கூடுதலான அடிமைத்தனத்திற்கும் உள்ளாகிறார்கள். சீனர்களிடம் மட்டுமல்ல, தமிழர்களிடமும் அவர்கள் பணிந்து, பயந்துதான் நடக்கிறார்கள். தமிழ் பெண்களை கண்டாலே நெருப்பைக் கண்ட மாதிரி பயந்து ஓடுகிறார்கள். இல்லையென்றால் தமிழ் பண்பாட்டுக் கலாச்சாரக் காவலர்களிடம் அவர்கள் அடியும் உதையும் வாங்க வேண்டும். இதே தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் தமிழ் பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது விநோதம். அதிலும் அறிவுத் துறை என்று அறியப்படுகிற பத்திரிக்கைத் துறை எப்படி இருக்கிறது, அதனுடைய ஆசிரியர்களின் மாண்பு எப்படி இருக்கிறது என்று கேட்டு யோகி ஒரு விளாசு விளாசுகிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனி மனித, சமூக இழிவுகளின் மீது ஓங்கி ஒரு குத்து. குறிப்பாக ஆண்களின் மீதும், அவர்களுடைய திமிர்த்தனத்தின் மீதும் வலுவாகவே குத்துகள் விழுகின்றன. குத்துகள் சரியான இடத்தில் விழுகின்றன. கோபத்தையும், இழப்பையும், வலியையும்கூட யோகி கண்ணீரின் மொழியில் எழுதவில்லை. துணிச்சலாக எள்ளல் மொழியில் எழுதியிருக்கிறார். அதோடு எந்த வயதிலும் தன்வரலாற்றுக் கதையை எழுதலாம் என்பதையும் நிரூபித்திருக்கிறார். மிக அழகாக. மிக இயல்பாக.

       துடைக்கப்படாத இரத்தக் கறைகள் – யோகியினுடைய தனிப்பட்ட வாழ்க்கை கதை என்பதைவிடவும், மலேசிய சமூக வாழ்வின் நடப்பியல் சிக்கல்கள் என்று சொல்லலாம். யோகியின் தன் வரலாற்றுக் கதை நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்ல மாட்டேன். சக மனிதனுடைய வலி, இழப்பு, துயரம், காயம், கண்ணீர், ஓலம், பரிதவிப்பு, தத்தளிப்பு, விரட்டப்படடுக்கொண்டே இருப்பது, அவமானப்படுத்தப்பட்டுக்கொண்டே இருப்பது நன்றாக இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? இதுபோன்ற துயர்கள் யாருக்கும் வரக்கூடாது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஒருவர் அழுவதைப் பார்ப்பதைவிட கொடுமையானது வேறென்ன இருக்க முடியும்?

       யோகி எல்லாவற்றையும் – புனிதக் கோட்பாடுகளையும்தான் ‘பட் – பட்’ என்று போட்டு உடைக்கிறார். அதற்கு அவருடைய மொழி உதவியாக இருக்கிறது. அலட்டலும், கூச்சலும் இல்லாத கூர்மையான சமூக விமர்சனம் இந்நூல். தன்னுடைய வலிமையால் தமிழ் இலக்கியத்தில் ‘துடைக்கப்படாத இரத்தக் கறைகள்’ தனக்கான இடத்தை உறுதி செய்துக்கொள்ளும்.

குறிப்பு:
கணையாழியில் இந்த மாதம் இமையம் சார் எழுதிய எனது புத்தகத்தின் விமர்சனம் இது. 2012-ஆம் ஆண்டு வல்லினம் வெளியீடாக வெளியீடு கண்டது. எனது அனுபவங்களின்  தொகுப்பான இப்புத்தகத்தை  நல்ல வரவேற்ப்பு பெற்றிருந்தாலும் இதுவரை  இந்த அளவுக்கு  யாரும் விமர்சிக்கவில்லை. இமையம் சாருக்கு  இவ்வேளையில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கணையாழிக்கும் எனது நன்றி. இந்த கட்டுரையை http://imayamannamalai.blogspot.com/ என்ற அகப்பக்கத்திலும் படிக்கலாம்.




ஞாயிறு, 7 ஜூன், 2015

மௌனம் உறைந்த தேசம் 21


சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 21

நாங்கள் அங்கிருந்துக் கிளம்பினோம். ஒரு நீண்டப் பயணத்திற்குப் பிறகு, எங்களின் வண்டி வட்டுவாகல் பாலத்தைக் கடந்தது. பாலத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் கடலில் எம்மக்களின் ஆத்மா இன்னும் மிதந்துக் கொண்டுதான் இருக்கும் என என் உள்மனம் கூறத் தொடங்கியது.

ஆம். நான் 2009-ஆம் ஆண்டின் போரின் இறுதிகாலங்களில் பத்திரிகைகளில் பரபரப்புச் செய்திகள் வந்துக்கொண்டிருந்தன. கிட்டதட்ட எல்லா நாடுகளிலும் யாழ்ப்பாணப் போர் பற்றிய செய்திகளைக் கண்முன் கொண்டு வர உலக ஊடகங்கள் தனது தளத்தில் முழு உழைப்பையும் போட்டுக்கொண்டிருந்தன.
வவுனியா வனத்தோடு சேர்கிறது வட்டுவாகல் கடல் நிலப்பகுதி.

சிங்கள இராணுவத்தால் அறிவிக்கப்பட்டிருந்த ‘save zone’  பாதுகாப்பு இல்லாதது என்றும் அது ஒருதந்திரப்பகுதி என்றும் என உணர்ந்தத் தமிழர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நடந்தே சென்று ராமேஸ்வர மண்ணில் தஞ்சம் அடையளாம் எனும் நோக்கில் இரவோடு இரவாகஅவர்கள் வட்டுவாகல் கடல்பகுதியில் இறங்கி நடந்த சில காட்சிகளும், பின் சிங்கள இராணுவத்தினரால்,  சுடப்பட்டுக் கரை ஒதுங்கப்பட்ட உயிரற்றவர்களின் உடல்களின் காட்சிகளும் இணையச் செய்திகள் மூலம் கிடைக்க, அதையும் நாங்கள் எங்கள் பத்திரிகையில் பிரசுரித்தோம்.
இப்படியாகத்தான் வட்டுவாகல் கடற்பகுதியைப் பற்றி எனக்குப் பரீட்சயம் இருந்தது. செய்தியிலும் இணையத்திலும் படித்த அந்தப் பகுதியை நேரில் பார்க்கும்போது, ஒருவிதத் தவிப்பு ஏற்படத்தான் செய்தது. எனக்கும் இந்த மண்ணுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எந்தச் சம்பந்தமும் இல்லாமலா  எனக்குத் தவிப்பு ஏற்படுகிறது? அப்பகுதியைக் கோபி ஒரு வட்டமடித்து, கடற்பகுதியைப் படம் எடுக்க ஏதுவாக வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தார். மூடுந்திலிருந்து இறங்காமலே எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
வட்டுவாகல் கடற்பகுதியின் இன்னொரு சோகம் சுனாமியின் போது ஏற்பட்டச் சேதமாகும். அதன் விழிப்புணர்வு வரைப்படத்தை அங்கு வைத்திருந்தனர். முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, மாங்குளம், புளியங்குளம் என நாங்கள் பயணித்து வருகையில் நன்றாக இருட்டத் தொடங்கியிருந்தது. வவுனியா வனத்தைக் கடந்து போய்க்கொண்டிருக்கையில் சாலையில் வாகனங்கள் மிகக்குறைவாகத்தான் இருந்தன. ஆனால், சாலை நன்றாகவும் சீராகவும் அமைக்கப்பட்டிருந்தது. அடர்ந்த வனத்தின் காரணமாகக் கும்மிருட்டாக இருந்தது.  சாலையில் யானையின் எச்சம் கிடக்கிறது. அதன் நடமாட்டம் மிக அருகில் இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது எனக் கோபிச்சொன்னார்.

அவர் சொன்னதைப் போன்றே 3 யானைகள் சாலைக்கு மிக அருகில் இருந்தன. அதில் குட்டியானையும் இருந்தது. காட்டுயானைகள்.  அந்த இருட்டிலும் எப்படிக் கோபி யானையைப் பார்த்தார் என்பது தெரியவில்லை. நாங்கள் யாரும் மிகச்சரியாகப் பார்க்கவில்லை. வேனை வளைத்தார் கோபி. எங்களுக்குத் தைரியம் கொடுத்தவர் நன்றாகப் பாருங்கள் என்று வேனின் விளக்கை அணைத்தார். வேகத்தைக் குறைத்து மீண்டும் யானை நின்ற இடத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தினார். காட்டு யானைகள். முறம் மாதிரியான காதுகளை அசைத்தபடி நின்றன. அவை மிகுந்த கோபத்தில் இருந்திருக்க வேண்டும். காடே அதிரும் படியான பிளிறலோடு சாலையை நோக்கி ஓடி வந்தது ஒரு யானை.  அது தாய் யானையாகத்தான் இருக்கக்கூடும். வேகத்தைக் கூட்டி வண்டியைச் செலுத்தினார்க் கோபி. அது ஒரு துணிகரச்செயல்தான். வண்டி வெகுதூரம் போயும்கூட அந்த யானையின் பிளிறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏன்? இப்போதும்கூடக் கண்களை மூடி அந்தக் கணத்தை நினைக்கும் போது  யானைப் பிளிருவது என்னால் கேட்க முடியும்.

எங்களின் இந்தப் பயணத்தில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதப் படி எப்படிச் சூசகமாக நடந்துக்கொள்ள வேண்டுமோ அவ்வாறு தனது அனுபவத் திறமையால் கோபி நடந்துக்கொண்டார். (அவரின் நன்மைக் கருதி அவை என்னென்ன என்பதை நான் இங்கே எழுதுவதைத் தவிர்க்கிறேன்.)

நான் மலையகத்தில் பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டது தொடர்பாகவும், இலங்கைப் பயணத் தொடர்பாகவும் தோழி ஒருவர் நேர்காணல் செய்வதற்குக் கேள்விகள் அனுப்பி வைத்திருந்தார். (என்னால் அந்த நேர்காணலுக்கு ஒத்துழைக்க முடியவில்லை. அது வேறு விஷயம்) அவர் போர்ச் சூழல் குறித்தான 7 கேள்விகளை முன் வைத்திருந்தார். அதில் இரு கேள்விகள் இப்படி இருந்தது..

கேள்வி 1: ஈழ மக்களைச் சந்தித்தீர்களா?  போர்ப் பூமிக்குச் சென்றீர்களா?
பாதிக்கப்பட்ட பெண்கள் , குழந்தைகள், ஆண்கள் யாரையாவது சந்தித்தீர்களா? அவர்களுடன் கலந்துரையாடினீர்களா?

கேள்வி 2: இன்றைய அவதானிப்பின் படி ஈழத்து இளம் ஆண்கள் பெண்கள் பற்றி என்ன நினைகின்றீர்கள்?

இந்த இரண்டும் கேள்விகளுக்கும் ஒரே மாதிரியான பதிலைதான் கொடுக்க முடியும். நான் இங்கே இந்தக் கேள்வியைக் கொண்டு வருவதற்கு ஒரு காரணம்தான் இருக்கிறது. வேறு எந்த உள் நோக்கமும் இல்லை.


1. மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அதுவும் போர்ப் பூமிக்குப் போய்வந்திருக்கும் நான், அங்கிருந்த ஈழமக்களிடமிருந்து என்ன செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்?
2. யாரை எல்லாம் சந்தித்தேன்?
3. புலிகளின் இயக்கத்திலிருந்த யாரையாவது சந்தித்தேனா?
4. தலைவர் பிரபாகரன் குறித்த ஏதும் தகவல் தெரிந்ததா?
5.அல்லது தலைவரைக் குறித்து யாழ்ப்பாணத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? அதாவது அவர் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா?


இப்படியான தகவலை அறிய விரும்புவதுதான் (மலேசியாவிலும்கூட) பலரின் நோக்கமாக இருக்கிறது. இது ஓர் அரசியல் அல்லது வியாபார யுத்தி என்றுகூடச் சொல்லலாம். இந்தக் கேள்விகளுக்கு மிகவும் கவனமாகப் பதில் சொல்லவும் வேண்டியிருக்கிறது. ஆனால், அதைவிடவும் பாதிக்கப்பட்ட மக்களை இதைவிட வேறு எப்படித் துன்பப்படுத்திப் பார்க்கமுடியும்? மீண்டும் அவர்களை அழ வைத்து அந்தக் கொடூரத்தைக் கண்முன் கொண்டு வந்து மீண்டும் ஒரு போரை நடத்திப் பார்க்கும் எண்ணம், எந்த மனிதாபிமானத்தைப் பேசப்போகிறது?

இணையமும் சேனல் 4-வும் நமக்குச் சொல்லாத தகவல்களா? இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளையும், பின் அவர்களின்சடலங்களையும் பார்த்தவர்கள்தானே நாம். பாதுகாப்பு வளையத்தில் எம் மக்கள் பசியோடும், துயரத்தோடும் தஞ்சம் புகுந்திருக்க, ஈவு இரக்கமின்றிக் குண்டு மழைப் பொழிந்து அவர்களின் உயிரோடு விளையாடிய விளையாட்டை, இதயத்தைக் கிழற்றி வைத்துப் பார்த்தவர்களில் நானும் ஒருத்தி

தானே. உண்மையில் நாம் அனைவருமே எல்லாவற்றையும் பார்த்தச்சாட்சிகள் தானே? பிறகு என்ன? அவர்களிடத்தில் கேள்விக் கேட்பது? நீ என்ன செய்தாய் அவர்களுக்கு? என நமக்கு நாமே முதலில் கேள்விக் கேட்டுக்கொள்வதுதான் உத்தமம்.

இப்படியான அனுபவங்களோடு நாங்கள் கொழும்பு வந்து சேர்ந்தோம். நீண்டப் பயணம். நாங்கள் ரொம்பவும் களைத்துப் போயிருந்தோம். விடிந்தால் கொழும்பில் கொஞ்சம் நினைவுப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் எனத் திட்டமிருந்தது.

எனக்கு உறக்கம் கொள்ளவில்லை. சுமார் 6 நாட்கள் தோழிகளுடனான நட்பு, சந்திப்புகள், பயணங்கள், அனுபவங்கள் என எல்லாம் ஒரு காட்சிபோல் ஒன்றன்பின் ஒன்றாக ஓடத்தொடங்கியது. அப்படியே உறங்கியும் போனேன்…

(தொடரும்)

வியாழன், 4 ஜூன், 2015

மௌனம் உறைந்த தேசம் 20

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 20
நாங்கள் முரசுக் மோட்டை, விசுவமடுத் தாண்டிப் புதுகுடியிருப்பு போகும் வழியில் புலிகளை வெற்றிகொண்டதன் நினைவு சின்னமாக, சிங்கள அரசு அமைந்திருக்கும் தளத்திற்கு முன் கோபி வண்டியை நிறுத்தினார். ஒற்றைச் சிலை, அதன் அருகில் புலிகள் பயன்படுத்திய போர் வாகனம். அருகில் போய் நாங்கள் பார்க்கவில்லை. சாலையின் எதிர்புறத்தில் இருந்தவாறே பார்வையிட்டோம். நான் புகைப்படம் எடுத்தேன். அருகில் இருக்கும் அறிவிப்புப் பலகையில் எம்மாதிரியான தகவல் இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது.

 வரலாறுத் தெரிந்தவர்களால் சகித்துக்கொள்ளமுடியாத எழுத்துகள் அவை. அங்கிருந்து மிக அருகில்தான் ஆனையிறவு என்ற இடமிருக்கிறது. அந்த இடத்தை மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை ஆவணப்படுத்தியிருக்கிறது சிங்கள அரசு. நான்கு கைகள் சேர்த்து இலங்கை வரைபடத்தைக் கையில் ஏந்தியிருப்பது போன்று ஒரு நினைவுத் தூபியை எழுப்பியுள்ளார்கள். அதில் இலங்கையின் தேசிய மலரான மலர்ந்த நீலோற்பவ மலரையும் செதுக்கியுள்ளார்கள்.

அத்தனை கசப்பாகவும், அத்தனை போலியாகவும் இருந்தது அந்த நினைவுத் தூபி. எங்கள் யாருக்கும் அந்த இடத்தில் கொஞ்ச நேரமும் நிற்கப் பிடிக்கவில்லை. மனம் அத்தனை இறுக்கமாக இருந்தது. அந்த நினைவுத் தூபியை சுற்றிலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் குறிப்புகளில் எந்த நேர்மையையும் பார்க்க முடியவில்லை. நாங்கள் 10 நிமிடங்கள் கூட அங்கு நிற்கவில்லை. எங்கள் இறுக்கமான நிலையைக் கோபி அறிந்துகொண்டவார ஒரு தகவலைச் சொன்னார்.
“இலங்கை கடல்களால் ஆனது. இப்போ அதைக் கையில் ஏந்திவிட்டார்கள். ஏற்கெனவே சீனாவிற்கு விற்றுவிட்டார்கள். இன்னும் வெளிநாட்டவர்களுக்கு ஏலம் விடப் போகிறார்கள். அதைத்தான் மறைமுகமாக இந்தத் தூபிச் சொல்கிறது.”

கோபித் தனது நகைச்சுவை பாணியில் இவ்வாறு கூறிவிட்டு நகர்ந்து போய்க்கொண்டே இருந்தார். எங்களுக்குச் சிரிப்பு வந்தது. இறுக்கம் கொஞ்சம் தகர்ந்தாலும் அவர் சொல்வதை ஆழ்ந்து யோசித்தால் அதிலிருக்கும் அரசியல் புரியும். நாங்கள் அந்த இடத்திலிருந்து கிளம்பும் நேரம் சில சிங்களப் புத்த துறவிகள் பயணிகளுடன் அங்கு நுழைந்தார்கள். எங்களை மருந்துக்கும் அவர்கள் ஏறிட்டுப் பார்க்கவில்லை. அதைப்பற்றி எங்களுக்கும் எந்தக் கவலையும் இல்லை. வரலாறுகள் சுத்தமாகத் துடைத்தொழித்து, தங்கள் வசதிக்கு ஏற்றவாறு மாற்றியெழுதியிருக்கும் அந்தத் தூபியில் உவப்பாக எது இருந்திடப் போகிறது ? மனசாட்சியுள்ளவர்கள் உண்மையை அறிவார்கள்தானே . அவர்கள் சிங்களவர்களாக இருந்தால் என்ன? தமிழர்களாக இருந்தால் என்ன?

 தொடர்ந்து நாங்கள், புதுகுடியிருப்பில் இருக்கும் போர்த் தொல்பொருள்காட்சியகத்திற்குச் சென்றோம். சாலையிலிருந்து பார்க்கும் போதே ஒருவகை அச்சமூட்டுபவையாக அது இருந்தது. கோபி மிகமிக மெதுவாகத் தனது வாகனத்தைச் செலுத்தினார். நான் வெளியிலிருந்தே அந்த மியூசியத்தைப் படம் எடுத்தேன். அதற்கு எதிர்புறம் ராணுவப் பதிவுக் கூடம் இருந்தது. அது குளிர்பானம் அருந்தும் கடையும்கூட. கோபி, மிக இயல்பாக ராணுவ அதிகாரியைப் பார்த்துச் சிங்களத்தில் எதையோ கேட்டார்.
 பிறகு, அந்த மியூசியத்தைப் பார்க்க அனுமதி இருக்கிறது.. கட்டணம் எதுவும் இல்லை.. பார்த்து முடித்த பிறகு, இங்கே ஏதாவது குளிர்பானம் அருந்தலாம் எனக்கேட்டுக்கொண்டார்.

 நாங்கள் புலிகள் போருக்காகப் பயன்படுத்திய சில ஆயுதங்களையும், நீர்முழ்கிக் கப்பல்களையும் பார்த்தோம். அதைப்பற்றி என்னால் வார்த்தையில் சொல்லமுடியவில்லை. எப்படி, அத்தனை அதிநவீன நீர்முழ்கி வாகனங்களைச் சிங்கள அரசின் கழுகுப்பார்வையை மீறிக் கொண்டு வந்திருப்பார்கள். பீரங்கிகள், கடல் குண்டுகள், விமான இயந்திரங்கள் எனப் பறுமுதல் செய்யப்பட்ட சில பொருள்கள் அங்குக் காட்சியாக வைத்திருந்தனர். மிகவும் வெறுமை நிறைந்ததாக இருந்தது அந்தப் போர் மியூசியம்.
 அதன் அருகில் புலிகளை வெற்றிக்கொண்ட கொண்டாட்டத்தைக் குறிக்கும் முகமாகச் சிங்கள இராணுவன் ஒருவன் கையில் துப்பாக்கி ஏந்தி, இலங்கைக் கொடியை நாட்டியிருக்கும் படியாகச் சிலையையும் அமைத்திருக்கிறார்கள். சகிக்க முடியாத காட்சி அது.

 போர் ஒரு நாட்டின் வரலாற்றைப் பேசக்கூடியது. பெறப்படும் ஆவணங்களே அதற்குச் சாட்சியானவை. அந்த ஆவணங்களை எப்படி வைத்திருக்க வேண்டும்? இன்னும் 100 ஆண்டுகள் கழித்து இந்த நாட்டின் வரலாற்றைப் பேசும்போது நடந்துமுடிந்திருக்கும் போர் அதனால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளும், காயங்களும், வடுக்களும், மரண ஓலங்களும் சொந்த நாட்டு மக்களுக்கே தெரிய வேண்டும் இல்லையா? அதற்கு இந்தச் சிங்கள அரசு என்ன செய்திருக்கிறது?

 நான் இங்கே சொல்வது கொஞ்சம் அதிகபிரசங்கித் தனம் என்றே நினைக்கிறேன். காரணம், மாவீரர்கள் கல்லறையைப் பார்க்க முடியாமல் இடித்த அரசுதானே அது? புலிகளின் தலைவன் வாழ்ந்த வீடுகூடப் போர்க் குணத்தைத் தூண்டிவிடும் எனப் பயந்துதானே அதையும் இடித்துத் தரைமட்டமாக்கியது. இந்த அரசிடமிருந்து எந்த வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்கவோ சொல்லவோ முடியும். அபத்தம் அல்லவா அது?

 நாங்கள் அங்கிருந்துக் கிளம்பினோம். ஒரு நீண்டப் பயணத்திற்குப் பிறகு, எங்களின் வண்டி வட்டுவாகல் பாலத்தைக் கடந்தது. பாலத்தை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் கடலில் எம் மக்களின் ஆத்மா இன்னும் மிதந்துக் கொண்டுதான் இருக்கும் என என் உள்மனம் கூறத் தொடங்கியது.

 (தொடரும்)

செவ்வாய், 2 ஜூன், 2015

மௌனம் உறைந்த தேசம் 19

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 19

ஜன்னல் ஓரம் காற்று என் முகத்தில் அறைந்து கொண்டே வந்தது. ஜன்னலுக்கு வெளியே நெல்வயல், தென்னை மரங்கள், மலைகள் இவற்றுக்கு மத்தியில் போரில் பாதிக்கப்பட்ட வீடுகள், கடைகள் என என்னைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது.
நாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் ஓட்டுநர் இறக்கி விட்டார். அது புலோலி பருத்திதுறை. ரவியின் (றஞ்சியின் துணைவர்) மாமா எங்களுக்காகக் காத்துக்கொன்டிருந்தார்.
அவர் அங்கிருக்கும் தனது வண்டியில் அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அழகான வீடு. வீட்டைச்சுற்றிலும் தோட்டம் கிணறு என யாழ்ப்பாண மண்வாசனை மாறாத வீடு. போர்ச் சூழலுக்குப் பிறகு எதார்த்த வாழ்கைக்குத் திரும்பியிருந்தாலும் தினமும் முனுமுனுப்பதற்குப் போர்க் குறித்த ஏதாவது விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கவே செய்கிறது. ரவியின் சகோதரிகளில் ஒருவர் போர்க் காலக்கட்டத்தில் பாதுகாப்பு வளையம் என்று சொல்லக்கூடிய, சிங்கள அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருந்த save zone- னில் இருந்தவர் என்பது கூடுதல் தகவலாகும்.
நாங்கள் அவரிடம் அந்தச் சூழல் குறித்து அதிகம் கேட்டுக்கொள்ளவில்லை. வெந்தப் புண்ணில் எத்தனை முறைதான் ஈட்டியைப் பாச்சுவது. அந்த வலியை எத்தனைமுறைதான் கீறிவிட்டு கேட்டு மகிழ்வது. எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. தொலைகாட்சிகளும், வானொலிகளும், முகநூல் பதிவுகளும், செய்தி ஊடகங்களும், சேனல் 4-வும் இதற்கு மேல் பார்ப்பதற்கு நெஞ்சில் திராணி இல்லை என்ற அளவுக்குப் போர்ச் சூழலையும், அப்பாவி மக்களையும் காட்டிவிட்டனர். இன்னும் எதைப் புதிதாகக் கேட்டுத் துன்பப்பட. அல்லது துன்பம் படுவதுபோல் பாசாங்கு செய்ய. போதும், அந்த மனங்கள் சாந்திப் பெறட்டும். அந்த ரணங்கள் அப்படியே உறங்கட்டும். எழுப்ப வேண்டாம்.
ரவியின் சகோதரியும் எதையும் பெரிதாக விவரிக்கவில்லை. அவர் சிரித்த முகத்தோடு எங்கள் வருகையை ரசித்துகொண்டிருந்தார். குறிப்பாக றஞ்சியையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பரிபாஷைக்குப் பல அர்த்தங்கள் இருக்கலாம். நான் அர்த்தப் படுத்திக்கொண்டது ஒன்றுதான். ரவியை றஞ்சியிடத்தில் அவர் தேடிக்கொண்டிருக்கலாம். ஒரே சகோதரனைக்கொண்டிருக்கும் நானும் அப்படிதானே.
ரவியின் மாமா புலோலி பருத்திதுறையில் இருக்கும் ஒரு கல்விச்சாலையில் ஆசிரியராக இருக்கிறார். போர்ச் சூழலின் போது அரசுப் பள்ளிகள் எதிர்கொண்ட சவால்கள், ராணுவமும் புலிகளும் பள்ளிக்கூடங்களை எப்படிப் பயன்படுத்திக்கொண்டன, புலிகள் காலக்கட்டத்தில் இருந்த கல்வி முறை, அதன் பிறகு வந்த சிங்கள அரசின் கல்விமுறை மாற்றம் என அவர் விவரிக்கத் தொடங்கிய வேளையில் நாங்கள் கொழும்புப் போவதற்கான வாகனம் வந்து சேர்ந்தது. புலோலி பருத்திதுறையை ஒட்டியிருக்கும்  தொண்டமான் ஆற்றிலிருந்து பயணித்தால் 45 நிமிடங்களில் ராமேஸ்வரத்தில் இருக்கலாம் என அவர் கூறிய வேளையில், யாழ்பாணத்தவர்கள் தங்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இந்த நதிவழியே கடந்து ராமேஸ்வரம் போனதையும், அப்படிப் போகும்போது, சிங்கள அரசின் கழுகுப் பார்வையில் சிக்கி உயிரைவிட்டவர்களை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

நாங்கள் கொழும்பு செல்வதற்கு நேரத்தை விரயமாக்காமல் கிளம்பவேண்டியிருந்தது. ஆதலால் புலோலி பருத்திதுறையில் அதிக நேரம் இருக்கவில்லை. மதிய உணவுச் சாப்பிட்டச் சிலநிமிடங்களில் கிளம்பினோம். றஞ்சி, முன்கூட்டியே நாங்கள் போர் நடந்த முக்கிய இடங்களைக் காண வேண்டும் என்பதையும், விஷயம் தெரிந்த ஆள் ஓட்டுநராக இருந்தால் நல்லது என்ற விவரத்தையும் முன்கூட்டியே சொல்லியபடியால் ரவியின் மாமா அப்படியொரு ஆளையே எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார்.
புலிகள் பயன்படுத்திய போர் வாகனம்
அவர் பெயர்க் கோபி. முழு நேரமாக இந்தப் பயண வழிகாட்டியாகவும் வாகனச் சேவையும் வழங்குகிறார். புலோலி பருத்திதுறையிலிருந்து, பரந்தன், ஆனையிறவு, முரசு மோட்டை, விசுவமடு, புதுகுடியிருப்பு, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, போன்ற இடங்களை எங்களைக் காணச்செய்து, பின் கொழும்பில் பத்திரமாகச் சேர்க்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பை அவர் ஏற்றியிருந்தார்.

நான் இங்குக் கோபியைப் பற்றிக் கொஞ்சம் விவரித்துதான் ஆகவேண்டும். காரணம் கோபியில்லாமல் வேறுயாரும் அந்தப் போர்ப் பூமியை அத்தனை தெளிவாகக் காட்டியிருக்க முடியுமா எனத் தெரியவில்லை. கோபிக்குச் சிங்களம் தெரிந்திருந்தது. சந்தேகத்துடன் கேள்விகேட்கும் யாருக்கும் கொடுப்பதற்காகச் சரியான பதிலைக் கோபிக் கொண்டிருந்தார். அவரின் பேச்சுத்திறமையின் வழி எல்லா இடங்களிலும் நட்பையும் வளர்த்து வைத்திருந்தார். காட்டு மிருகங்கள் நடமாட்டம் குறித்த விவரங்களையும் அவர் அறிந்துவைத்திருந்தார். அனைத்தையும் 100 சதவிகிதம் அறிந்திருந்தாரா என்பது தெரியாது. ஆனால், அடிப்படை அவருக்குத் தெரிந்திருந்தது. நகைச்சுவை உணர்வோடு பேசக்கூடியவர். அந்த நகைச்சுவையில் நாட்டின் அரசியல் இருந்தது, கோபம் இருந்தது, வலி இருந்தது. தனக்கான பாணியில் சிரிக்க வைத்து நகர்ந்துக்கொண்டே போகிறார் கோபி.

ரவியின் சகோதரிகளுடன் நாங்கள்
எனது முதல் பார்வையில் ஒரு கோமாளிபோல் ரம்பம் போடும் பேர்வழியாகத் தெரிந்தவர், நேரம் ஆக ஆகத்தான் அவரின் ஆற்றலை அறிய முடிந்தது. போகும் பாதைப் பொல்லாத பாதை என எங்களுக்குத் தெரியும். அதை அவ்வளவு சுலபமாக்கிய பெருமை நிச்சயமாகக் கோபியைச் சேரும். எங்களின் இந்த நீண்டப் பயணத்தில் எல்லா இடத்திலும் இறங்கிப் பார்ப்பதற்கான சூழல் அமையவில்லை. சில இடங்களில் கோபி வாகனத்தை மெதுவாகச் செலுத்த வெளியிலிருந்தே பார்வையிட்டுக்கொண்டோம். விஜியா எல்லாத்தையும் தனது வீடியோ கேமராவில் பதிவு செய்துக்கொண்டிருந்தார். நான் புகைப்படக் கருவியில் படம் எடுத்துக்கொண்டே வந்தேன். றஞ்சி அந்த இடங்களைக் குறித்து விளக்கிக்கொண்டு வந்தார். இடையிடையே கோபியும் விளக்கம் கொடுத்தார். அதிகமாகக் காடுகளே இருந்தன.  ஆமாம், அதுதானேபுலிகளின் அரண்மனைஎன்று யாழினிச் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது.

நாங்கள் முரசுக் மோட்டை, விசுவமடுத் தாண்டி புதுகுடியிருப்பு போகும் வழியில் புலிகளை வெற்றிகொண்டதன் நினைவு சின்னமாக, சிங்கள அரசு அமைந்திருக்கும் தளத்திற்கு முன் கோபி வண்டியை நிறுத்தினார். ஒற்றைச் சிலை, அதன் அருகில் புலிகள் பயன்படுத்திய போர் வாகனம். அதை அருகில் போய் நாங்கள் பார்க்கவில்லை. சாலையின் எதிர்புறத்தில் இருந்தவாறே பார்வையிட்டோம். நான் புகைப்படம் எடுத்தேன். அருகில் இருக்கும் அறிவிப்புப் பலகையில் எம்மாதிரியான தகவல் இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது.
வரலாறுத் தெரிந்தவர்களால் சகித்துக்கொள்ளமுடியாத எழுத்துகள் அவை.

(தொடரும்)