ஞாயிறு, 7 மார்ச், 2021

நாடு கடத்தப்பட்ட மியன்மார் அகதிகளுக்காக காலணி அறப்போராட்டம்


நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த 1,200 மியன்மார் அகதிகளில் 1,086 அகதிகளை திரும்ப மியன்மார் நாட்டிற்கே நாடு கடத்திய விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர் மனித உரிமை சார்ந்த சில தன்னார்வ அமைப்புகள்.

மியன்மார் உள்நாட்டு அரசியலின் உட்பூசல் காரணமாக அங்கு போராட்டம் வெடித்திருக்கும் வேளையில், மக்கள் பாதுகாப்பில்லாத சூழலில் இருக்கிறார்கள். இந்நிலையில் மலேசியாவில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 1,086 அகதிகளை மியன்மார் ராணுவத்திடம் ஒப்படிக்கும் பொருட்டு மலேசிய குடிநுழைவுத்துறை திருப்பி அனுப்பியது. பேராக் லுமூட்டில் உள்ள ராயல் மலேசிய கடற்படை தளத்திலிருந்து மியான்மார் கடற்படையின் மூன்று கப்பல்களில் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.   


முன்னதாக கடந்த ஆண்டு முதல் அகதிகள் முகாமில் இருக்கும் மியான்மார் அகதிகள் 1200 பேரை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப் போவதாக மலேசிய குடிநுழைவு இலாகா அறிவித்திருந்த வேளையில், அதனை எதிர்த்து எம்னஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா (Amnesty International Malaysia) மற்றும் அசைலம் அக்சஸ் மலேசியா (Asylum Access Malaysia) எனும் இரு மனித உரிமை குழுக்கள் வழக்கு தொடுத்தனர். மியான்மார் அகதிகளை நாடு கடத்தும் குடிநுழைவு துறையின் எண்ணத்திற்கு உயர்நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்தது. ஆனால், அன்றைய தினமே (பிப்ரவரி 23-ம் தேதி) அகதிகளின் 1,086 பேரை நாடு கடத்தியது மலேசிய அரசு.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு ஆட்சேபத்தினை தெரிவிக்கவும் நாடு கடத்தப்பட்ட 1.086 அகதிகளுக்கு ஆதரவாகவும், வித்தியாசமான முறையில் அறப்போராட்டத்தை மென்னெடுத்தன மனித உரிமை குழுக்கள். முகம் தெரியாத அகதிகளுக்காக 1,086 காலணிகளை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு ஜோடி காலணியும் ஒவ்வொரு அகதிகளுக்கானது என்ற அடைப்படையில் 1,086 காலணிகள் கொண்ட போராட்டம் அமைதியான முறையில் செய்யப்பட்டது.

பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி.) அரசாங்கத்திடமிருந்து, மியன்மார் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனால் அங்கு கிளர்ச்சி வெடித்து மக்கள் போராடத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50க்கும் அதிகமான உயிர்கள் பலியாகியிருக்கின்றன.


சரியான அரசியல் சூழல் இல்லாத இந்நிலையில் அகதியாக தஞ்சமடைந்திருக்கும் மக்களை நாடு கடத்தியது எந்த வகையில் ஞாயம் என்றும் இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றும் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் விசாரணை மார்ச் 9 ஆம் தேதி நடைபெறப்போகும் நிலையில், குடிநுழைவுத்துறை அதிகாரி கைருல் டிசைமி டாவுட்அகதிகள் யாரையும் கட்டாயப்படுத்தி  

அனுப்பவில்லை, இந்த நடவடிக்கைக்கு ஒப்புக் கொண்டதின் அடைப்படையில் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பியதாக கூறியிருக்கிறார். அதோடு ரோஹிங்கியா அகதிகள், யு.என்.எச்.சி.ஆர் அட்டைதாரர்கள் அரசியல் புகலிடம் கோரியவர்கள் ஆகியோரை அனுப்பவில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனாலும், திரும்ப அனுப்பபட்டவர்களில் அரசியல் புகலிடம் வேண்டியவர்கள் இருக்ககூடும் என நம்பப்படுகிறது



இதற்கிடையில், கொரானா அச்சம் காரணத்தினால் மலேசியா இன்னும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையில் இருப்பதால், வரையறுத்திருக்கும் நடைமுறை சட்டத்தை பயன்படுத்தி இந்தக் காலணி அறப்போராட்டம் செய்யப்பட்டிருக்கிறது. Challenger Malaysia, MISI Solidariti, மலேசிய சோசலிச கட்சி இளைஞர் அணி, மலேசிய சோசலிசக் கட்சி, சுவாராம் ஆகிய அமைப்புகள் இந்தப் அறப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டன.  


-யோகி மலேசியா

5/3/2021

வியாழன், 4 மார்ச், 2021

அவரும் ஓடினார், நானும் ஓடினேன்.. ஓடினேன்... ஓடிக்கொண்டே இருந்தேன்

நான் எப்போதும் இரண்டு கைப்பைகள் வைத்திருப்பதை பலர் கவனித்திருக்ககூடும். ஒன்று என் தேவைகள் கொண்ட கைப்பை. மற்றொன்று பழைய துணிகளோடு சில புத்தகங்கள் கொண்டது. புத்தகம் எனக்குதான். பழைய துணி சாலையோர வாசிகளுக்காக வைத்திருப்பது. உடுத்த துணியில்லாமல், கிழிந்த அல்லது சாலையோர குப்பைகளில் கிடைக்கும் ஏதாவது நெகிழியையோ சுற்றிக்கொண்டிருக்கும் அந்த ஜீவன்களுக்கு உடனே கையில் வைத்திருக்கும் பழைய துணியை கொடுத்துவிட ஏதுவாக அப்படி வைத்திருப்பேன். எல்லா நேரமும் வைத்திருப்பேன் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் துணிப்பை அலுவலகத்திலோ அல்லது காரிலோ வைத்திருப்பேன். ஜாலான் ஈப்போ சாலையிலிருந்து சௌகிட் சாலைவரை தினமும் 40-50 சாலையோர வாசிகளை கண்டு விடலாம். பெருவாரியாக அவர்கள் தஞ்சம் அடைவது பஸ் நிறுத்துமிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மூடப்பட்டிருக்கும் கடை வாசல்களில்தான். இவர்களில் கணிசமானவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். மனப்பிறழ்வு மாதிரியானவர்களும் இருக்கிறார்கள். 

இன்று (3/3/2021) காலையில் நான் பேருந்துக்கு காத்திருக்கும் நேரம் ஒரு பெரியவர் மேலடையில்லாமல், தேசியக் கொடியை மட்டும் இடுப்பில் சுற்றியபடி பேருந்து நிறுத்துமிடத்தில் உட்கார்ந்திருந்தார். நல்ல உயரமான ஆள், கனத்த சரீரம். தேசிய கொடி இருக்கி அவர் இடுப்பை சுற்றியிருந்தது. ஒருமுறை அவரின் கண்களும் என் கண்களும் சந்தித்துக்கொண்டன. அவர் பார்த்தபடியே இருந்தார்.  எனக்கு அவரைப் பார்ப்பதற்கு ஏதோ போல் இருந்தது. மேற்சட்டையில்லாமல் இந்த வெயிலிலும், உஷ்ணத்திலும், கொசு கடியிலும் எப்படி இருக்கிறார்? எங்கே படுத்துக்கொள்கிறார்? உடல் கழிவுகளையும் வெளியேற்றிதானே ஆகனும். இதற்கிடையில் உடனே எடுத்துகொடுக்க இன்றுப் பார்த்து, நான் துணிப்பையை கொண்டுவரவும் இல்லை. அருகில் இருந்த மங்களத்தீபம் பலசரக்குக் கடையில் கைலி இருக்கா என்று கேட்டேன். 

"ஆண் கட்டுவதா அல்லது பெண் கட்டுவதா" 
"ஆண் கட்டுவது" 
"இல்லை"
"பெண் கட்டுவதாவது கொடுங்க..".

கடையிலிருந்து கைலியை வாங்கி வருவதற்குள் பெரியவர் நடையை கட்ட தொடங்கினார். "அங்கிள் நில்லுங்க. இது உங்களுக்குதான்" என்றேன். அவர் இன்னும் வேகமாக நடையை கட்டினார். நான் அங்கிள்- அங்கிள் என அவர் பின்னாடியே ஓட, அவரும் ஓட சுமார் 100 மீட்டர் ஓட்டப்பந்தையம் நடந்தது.  ஓடி முடித்த கலைப்பில் அவர் சாலையைத் தாண்டி முருகன் கோயில் பஸ் நிலையத்திற்கு வந்து உட்கார்ந்தார். அப்போதுதான் கவனித்தேன். தெருவே எங்கள்  கூத்தை பார்த்துக்கொண்டிருந்ததை.  நான் கையில் கைலியோடு முருகன் கோயில் பூக்கடைக்காரரிடம் கைலியை கொடுத்து பெரியவரிடம் கொடுக்க சொன்னேன். 

"இவர் பெரிய ஆளுமா? யாரிடமும் எதையும் வாங்க மாட்டார்" என பெரியவரை ஒரு முறை முறைத்தார் பூக் கடைக்காரர். "ஐயோ! கொடுங்க அண்ணா" என்றேன். கைலியோடு பெரியவரை பார்த்த பூக்கடைகாரரை நோக்கி பெரியவர் வந்தார். நான் சாலையை தாண்டி வேலைக்கு பஸ் ஏற வந்துவிட்டேன். பஸ் ஏறியதும் அந்தப் பெரியவர் கைலியை கட்டியிருக்கிறாரா என்று தேடினேன். முருகன் கோயில் பஸ் நிறுத்தத்தின் அமர்வு இடத்தில் கைலியை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த மாதிரியானவர்களுக்காக அரசு பல சமூக நல இலாகாக்களை நடத்தி வந்தாலும், இவர்களை மாதிரி சிலரை அங்கு தங்க வைப்பது முடியாத காரியமாக இருக்கிறது. அவர்களால் ஒரு இடத்தில் நீண்ட நேரம் இருக்க முடியவில்லை. இம்மாதிரியானவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை அரசு யோசித்து பரிசீலிக்க  வேண்டும். குறிப்பாக இவர்களின் சுகாதாரத்திற்கு சரியான முறையில் ஏற்பாடுகள் செய்வது நலம். உணவுக்கு இவர்கள் பெரிய சிக்கலை பெருவாரியாக எதிர்நோக்குவதில்லை. காரணம் இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உணவு கிடைக்கவே செய்கிறது. 

நல்லுங்கள் பலர் உணவுகளை சாலையோரவாசிகளுக்கு வாங்கி தருவதைப் பார்க்க முடியும். இல்லை என்றாலும் இவர்கள் உணவு கடைகளின் முன் போய் நிற்கும்போது, நீண்ட நேரம் நிற்க வாய்ப்பு கொடுக்காமல் கடைக்காரர்களே உணவை பொட்டலம் கட்டி கொடுத்துவிடுவார்கள். அழுக்காக , துர் மணம் வீச இருக்கும் இவர்களை கடையின் முன் நிறுத்திப் பார்க்க கடைக்காரர்கள் விரும்புவதில்லை. 

இம்மாதிரியான ஆதரவற்றவர்கள் நாளுக்கு நாள் நாட்டில் பெருகி வருகிறார்கள்.  இந்தக் கோவிட் கால நெருக்கடியிலும்,  காலநிலை மாற்றத்தின் எதிர்வினையிலும் இவர்களின் நாட்களை யாரும் நினைத்துப்பார்க்கபோவதில்லை. அதனால், இவர்களை விட்டுவிட முடியுமா என்ன?  

செவ்வாய், 2 மார்ச், 2021

எங்களுக்கு எதுக்கு பெண்கள் தினம்?



பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்களுக்கு சுதந்திரம், பெண்களுக்கு கல்வி, பெண்களுக்கு மாநியம், பெண்களுக்காக சட்டம் என பல விஷயங்கள் பெண்களுக்காக செய்யப்படுகிறது; இயற்றப்படுகிறது. ஆனால், அதனால் ஏதேனும் பலன் இருக்கிறதா? உலகம் முழுக்கவே ஆராய்ந்தாலும், இந்த ஆணாதிக்க உலகத்தில் பெண்களுக்கான நிலை படுமோசமாகவே இருக்கிறது.  வெளிப்படையாக தனது கருத்தினை முன்வைக்கும் ஒரு பெண் கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் அவலத்தையும் பார்க்க முடிகிறது.  

கடந்த சில நாட்களாக என் பார்வைக்கு உட்பட்டு நடந்த சம்பவங்களின் அடிப்படையில் நான் எனது சில நிலைப்பாட்டினை பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். டெல்லியில் நடந்துக்கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்திலிருந்து நமது நாட்டில் காவல்நிலைய கழிப்பறையில் நடந்த பாலியல் பலாத்காரம் வரையில் பல சம்பவங்கள் பெண்களை சினம் கொள்ள செய்வதாக இருக்கிறது. குறிப்பாக பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மத்தியிலும், இடதுசாரி தோழர்கள் மத்தியிலும் கடும் விமர்சனக்களுக்கு இச்சம்பவங்கள் உள்ளாகியிருக்கின்றன.

டெல்லியில் நடந்துக்கொண்டிருக்கும் விவசாயப் போராட்டத்தில் கணிசமான பெண்கள் படையெடுத்து வந்தபோது, பெண்கள் ஏன் கஷ்டப்படனும் திருப்பி அனுப்பிவிடுங்கள், அல்லது திரும்பி போய்விடுங்கள் என்று மோடி அரசாங்கம் தெரிவித்தப்போது, அதற்கு பெண்கள் மிக தரமான சம்பவத்தை செய்து முடித்து,  ஏன் அவர்கள் திரும்பி போகமுடியாது என்பதை தெரிவித்தனர்.  பெண்கள்  ஈடுபட்ட  டிரெட்கர் பேரணி  விவசாயப் போராட்டத்தில் மிகப் முக்கியமான பேசக்கூடிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. காப்ரெட்டுக்கு ஆதரவாக தன் அதிகாரக் கைகளை கொடுக்கும் இந்திய அரசு, விவசாயிகளுக்கு எதிராக அவர்களின் கோரிக்கைகளை காலில் போட்டு மிதிக்கிறது.



விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களையும் பி.ஜெ.பி அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் சொந்த நாட்டுக்காரர்களாக இருந்தாலும், வெளிநாட்டுக்காரர்களாக இருந்தாலும்  மாஃபியாக்களைப் போல அவதூறுகளையும் மிரட்டல்களையும் விடுக்கிறது.

கெனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட தொடர்ந்து விவசாயப் போராட்டம் குறித்து பேசுவது செய்திகளாக மாறுகிறது.  இருப்பினும்,  பெண்களின் குரல்தான் கவனிக்ககூடியதாகவும் பலரும் திரும்பிப் பார்க்ககூடிய வகையிலும் இருந்தது; தொடர்ந்து இருந்தும் வருகிறது.  பெண்களின் குரலுக்கு, மோடி அரசாங்கத்தில் இருக்கும் ஆண்களின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்றால், மிக மோசமாகவும், கிட்டதட்ட தீவிரவாதிகளைப்போலவும் இருக்கிறது.

ஆபாச வீடியோவை வெளியிடுவோம், உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்; அவள் ஒழுங்கா? பத்தினியா? இறையாண்மையை கெடுக்கிறார்கள், இன்னும்… இன்னும்… இன்னும்.


இந்தியாவின் இயற்கை ஆர்வலர்,  திஷா ரவியின் கைது நடவடிக்கை, உலக அளவில் சினத்தை ஏற்படுத்துவதாக  மாறியிருக்கிறது.  இத்தனைக்கும்  திஷா செய்தது   குற்றமே அல்ல. டெல்லி விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பிய   சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க்-க்கு ஆதரவாக செயல்பட்டார் என்று டெல்லி போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.   கிரேட்டா துன்பர்க் கூலிக்கு வேலைசெய்யும் செயற்பாட்டாளர் அல்ல. அவரின் தந்தை முதற்கொண்டு இயற்கைக்காக போராடியவர்கள் என்பது இங்கு கவனிக்ககூடியது.

கிரேட்டா துன்பர்க்  வழியைப் பின்பற்றி திஷா ரவி முன்னெடுக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களை சம்பந்தப்படுத்தி இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள்.  இத்தனைக்கும் திஷா கடந்த சில மாதங்களாகவே பருவநிலை மாற்றம் தொடர்பாக தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதோடு செயற்பட்டும் வருகிறார். அப்போதெல்லாம் இந்த கூட்டத்திற்கு திஷா என்பவர் குற்றவாளையாக தெரியவில்லை.  எப்போது கிரேட்டா துன்பர்க்  என்பவர் விவசாயிகளுக்காக குரல்கொடுத்தாரோ மோப்பம் பிடிக்க தொடங்கிவிட்டனர் மோடி அரசு.   திஷாவை  தடுப்புக்காவலில் நிறுத்தியிருப்பது குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.  திஷாவின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் திஷா குற்றமற்றவர் என்று ஜாமின் வழங்கியிருக்கிறது.

கடந்த மாதத்தில் ஹரியான  மாநிலத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் மற்றுமொரு பெண் செயற்பாட்டாளர் நோதீப் கவுர்.  ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் இருக்கும் 25 வயதான இந்திய தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுரின் விடுதலைக்கு  உலகளாவிய அளவில் ஆதரவு குவிகிறது. ஆனால், எந்த ஆதரவு குரலும், இந்திய அதிகார வர்கத்தின் காதுகளுக்கு போகவே இல்லை. 



டெல்லியின்
புறநகரில் உள்ள குண்ட்லி தொழில்துறை பகுதியில் (கேஐஏ) ஒரு தொழிற்சாலைக்கு வெளியே நடந்த போராட்டத்தில் பங்கேற்றபோது ஜனவரி 12 ஆம் தேதி நோதீப் கைது செய்யப்பட்டார். போலீஸ் கஸ்டடியில் உள்ள அவர் கடும் சித்திரவதைக்கு ஆளாகி வருகிறார். பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு ஜாமீன் கொடுக்கப்படவில்லை. அவரின் புகைப்படம் எரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் கிராமப்புறத்தில் ஒரு ஏழை பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பத்திலிருந்து வந்த நோதீப், நிதி சிக்கல்களால் உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தனது படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. சீக்கியம் சமத்துவத்தைப் போதித்தாலும், சாதி பாகுபாடு பஞ்சாபில் நிலைத்திருக்கிறது. மாநில மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலினத்தவர்கள்தான்.  சம்பள உயர்வுக்காக போராடிய அவருக்கு அரசு கொடுத்திருக்கும் சன்மானம் சிறைவாசம்.


நமது நாட்டிலும் சில மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை வளாகத்தில் களப்பணி தொழிலாளர்களுக்காக முன்னெடுத்தப் போராட்டத்தில் பெண்கள் கைது செய்து அழைத்துப்போனது இன்னும் சிலருக்கு நினைவில் இருக்கலாம்.

பாலியல் சீண்டல் செய்வதும் பாலியல் அவதூறு பரப்புவதும்கூட நமது நாட்டில் மிக எளிமையான ஒன்றாக இருக்கிறது. மிக அண்மையில் அரசியலில் இருக்கும் பெண்ணான  மிகுந்த செல்வாக்கு கொண்ட அரசியல் பெண்ணான காமாச்சி மீது அவதூறு கூறியபோது , சம்பந்தப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவருடைய கதறல் வெறும் கூச்சலாகவே மறைந்துபோனது. ஆனால், அதே அரசியல் பெண் காமாட்சி, டிக் டோக்கில், வரும்  ஒரு பெண்ணைப் பற்றி பேசும் வாய்ப்பு கிடைக்கும்போது,  வகுப்பெடுக்கிறார். ஆண்களைப்போலவே.

எது பெண் சுதந்திரம், எது பெண் சுதந்திரமில்லை என்பதில் நம் பெண்களுக்கு எப்போதும்  குழப்பமிருக்கிறது.  அந்தக் குழப்பத்திற்கு யாரும் வகுப்பெடுக்க முடியாது.  இதற்குதான் பகுத்தறிவு  அவசியமாக இருக்கிறது. அதோடு, இதுவரை பெண்கள் மேற்கொண்ட போராட்டங்களையும் களப்பணிகளையும் பெண்கள்  தெரிந்துவைத்திருந்தார்கள் என்றால் அவர்களின்  சுதந்திரம்  எப்படி இருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்க வாய்ப்பு இருக்கும்.

நமது நாட்டில், பாலியல் துன்புறுத்தலுக்கு இன்னும் ஒரு சட்டம் இயற்றாதது வேதனையான விஷயம். இம்மாதிரியான அரசியல் மற்றும் சட்ட ஊனத்தோடுதான் பெண் உரிமையைக்குறித்து சொந்த நாட்டிலேயே கதறிக்கொண்டிருக்கிறோம்.

பெண்கள் தினம் என்பது, தன்னை பகட்டாக அலங்கரித்துக்கொண்டு கேக் வெட்டி  குதூகலிக்கும் கொண்டாட்டம் என பல பெண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  உண்மையில் இன்று நாம்  சுதந்திரமாக வாழ தன் உயிரை நீத்த பெண்களை நினைத்துப்பார்க்கும் ஒரு நாள் என்பதை மறந்தே போகிறார்கள்.  நாம் கொண்டாடும் அனைத்துலக பெண்கள்  தினத்திற்கு உண்மையில் என்னதான்  அர்த்தம் இருக்கிறது?   

நன்றி தமிழ்மலர் 7/3/2021

மலேசிய `பாடப் புத்தகத்தில் பெரியார் படம் இருக்கக் கூடாது` - இந்து சங்கத்தின் எதிர்ப்பால் சர்ச்சை!

முதல் பத்திரிக்கை செய்

தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிறிஸ்தவத் தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள்.

மலேசியா: மலேசிய இந்துச் சங்கம், அங்கிருக்கும் தமிழ்ப் பள்ளிகளில் திராவிடக் கொள்கையைப் பரப்புவதை நிறுத்திக் கொள்க என்று பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது தொடர்ந்து அங்கு வாழும் தமிழர்கிடையே சர்ச்சை வெடித்துள்ளது. கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி அது தொடர்பான அறிக்கையினை மலேசிய இந்துச் சங்கம் அதிகாரப்பூர்வமாக மலேசிய தமிழ் பத்திரிக்கைகளுக்கு அனுப்பியது.

குறிப்பிட்ட அறிக்கையில், மலேசிய இந்து சங்கம்  தமிழ்ப்பள்ளிகளில் இந்து சமய புறக்கணிப்பும் திராவிட கொள்கையைப் பரப்பும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி அமைச்சின் பாடத்திட்டப் பிரிவின் சில அதிகாரிகள் பள்ளியில் திராவிட கொள்கைகளைப் பரப்புவதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் கூறியிருந்தது. அதோடு, பள்ளி பாட நூலில் தை மாத முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்ற கருத்து திணிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மறைமுகமாக பள்ளிப்பாட புத்தகங்களில் பெரியாரின் கொள்கைகளும் அவரைப்பற்றிய செய்தி திணிப்பும் மேலோங்கி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அச்சங்கம் மிக கடுமையாக எச்சரித்திருந்தது.

அதிர்ச்சியும் கோபமும்...

இந்து சங்கத்தின் இந்த பத்திரிக்கை செய்தி மலேசிய தமிழர்களிடையே அதிர்ச்சியையும் சினத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான எதிர்வினைகளை   குறிப்பாக திராவிடக் கொள்கையை பின்பற்றுபவர்களும்  பெரியார் ஆதரவாளர்களும் தமிழ் பற்றாளர்களும் இந்து சங்கத்தின் இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்றி வருகிறார்கள்.  

மோகன் ஷான் கடந்த முறை பேசியது


மலேசிய இந்து சங்கத்தின் தலைவரான மோகன்
ஷான் வெளியிட்டிருக்கும் இந்தக் கருத்துக்கு, மலேசிய இந்தியர்களின் தாய் கட்சியான ம.இ.கா தனது எதிர்ப்பினை தெரிவித்திருக்கிறது. பொங்கல் என்பது பண்பாட்டு விழா என்றும் அதற்கு மதச் சாயம் பூச வேண்டாம் என்றும் அந்தக் கட்சி மலேசிய இந்து சங்கத்திடம் வழியுறுத்தியிருந்தியது. மேலும், இந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அந்த கட்சி கூறியிருந்தது. ஆனாலும், ம.இ.கா-வைத் தவிர, எந்த ஒரு மதம் சாரா இயக்கமோ அல்லது திராவிட இயக்கமோ இந்து சங்கத்திற்கு எழுத்துப்பூர்வமான எதிர்வினையை ஆற்றவில்லை என்றாலும் பல தனி மனிதர்கள் இந்து சங்கம் மீதான தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.

பாடப்புத்தகத்தில் உள்ளது

தமிழருக்கான புத்தாண்டு தை முதல்நாள்தான். தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிருஸ்துவ தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள். அதற்கு மதச் சாயத்தை பூச வேண்டாம் என சமூக ஊடகங்களில் அவர்கள் வழியுறுத்தி வருகிறார்கள். இந்து சங்க தலைவர் மோகன் ஷான் வழியுறுத்தும்   ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தினால் மலேசிய நாட்டில் தமிழையும் தமிழனையும் ஒருபோதும் வெல்ல முடியாது என்று வெளிப்படையான கோபத்தினையும் பலர் பதிவு செய்து வருகின்றனர். 

தமிழ்ப் புத்தாண்டு

இதனைத் தொடர்ந்து மோகன் ஷான் மற்றுமொரு அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார். அதில் ‘’சித்திரை முதல் தேதிதான் தமிழர் புத்தாண்டு. அதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. தமது இந்தக் கூற்றோடு இந்து மதம் சார்ந்த 13 இயங்கங்கள் உடன் பட்டிருப்பதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். தவிர தமது சங்கம் பொங்கலுக்கு மதத் சாயம் பூசுகிறது என்று சிலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

இரண்டாவது பத்திரிக்கை செய்தி

மோகன் ஷானின் இந்த மறு அறிக்கையால் இந்தச் சர்ச்சையானது இன்னும் அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், இந்த விவாதமானது மேலும் தீவிரமடைந்து வருகிறது.

 மலேசிய இந்து சங்கத்திற்கு நிலையான ஒரு கருத்து இல்லை என்று மோகன் ஷானின் கருத்தை எதிர்ப்பவர்கள் பதிவு செய்து வருகிறார்கள். சில வருடங்கள் வரையில் அரசு ஆதரவின் கீழ் ‘ஒரே மலேசியா’ எனும் கோட்பாட்டின் கீழ் பொங்கல் பண்டிகையை மதம்-இனம் சாராது மலாய்க்காரர்களும் தமிழர்களோடு சேர்ந்து கொண்டாடினர். 2018-ஆம் ஆண்டில் பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை. பள்ளிகளில் அதை செய்ய அனுமதிக்ககூடாது; மலாய் மாணவர்கள் பொங்கல் பண்டிகளில் ஈடுபடக்கூடாது என்ற மலாய் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு இதே இந்து சங்கத்தை சேர்ந்த மோகன் ஷான் பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை அல்ல, அது பண்பாட்டு விழா என்று அறிக்கைவிட்டிருந்தார். தான் கூறிய கூற்றுக்கு எதிராக இப்போது அவரே மாற்றிப் பேசுகிறார் என்று பலர் விமர்சிக்கின்றனர்.

பாடத்திட்டம்

மலேசிய அரசு பாடத்திட்ட வழக்கம்படி 6 ஆண்டுக்கு ஒரு முறை புதிய பாடப் புத்தகம் தயாரிக்கப்படும். அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு தயாரிப்பு பாடப்புத்தகத்தில் தமிழர்களுக்கு பங்காற்றிய 3 அறிஞர்கள் குறித்து சிறு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது. அதில்  10 வரிகளில் பெரியார் குறித்த அறிமுகம் எழுதப்பட்டிருக்கிறது. அடுத்தாண்டு இந்தப் பாடப்புத்தகம் காலாவதியாகும் நிலையில், பெரியார் குறித்த தகவல்கள் பாடப் புத்தகத்தில் இருப்பது சமயத்திற்கு எதிரானது என்று மலேசிய இந்து சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலைப்பாட்டு தொடர்பாக மலேசிய தமிழர்கள் இந்து சங்கத்திற்கு எதிரான கருத்தினை தெரிவித்து வருகிறார்கள். பொங்கல் தமிழர் திருநாள், அது தமிழர்களின் புத்தாண்டு என்று தொடர்ந்து பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த எதிர்ப்பு குரலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது குறிப்பிடதக்கது.

இந்து சங்கம் குற்றம் சுமத்தியிருப்பது போல எந்த எதிர்மறை கருத்தையும் கல்வி பாடத்தில் இல்லை என்றும், அது கூறியிருப்பதுபோல பள்ளிப்பாடப்புத்தகத்தில் பொங்கல் விழா தமிழர்களின் புத்தாண்டு என்ற கருத்தினை மாணவர்கள் மத்தியில் திணிப்பதுபோன்ற எந்த பதிவும் இல்லை என்று கல்வியாளர்களும் தங்கள் கருத்தினை தெரிவித்திருக்கின்றனர்.           


மோகன் ஷான் கூறுவது என்ன?

``இறையாண்மையைப் போற்றும் மலேசியத் திருநாட்டில் இந்து சமயத்துக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டவர்களின் சித்திரத்தையும், அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் பாடத்திட்டத்தில் இணைப்பது என்பது மிகக் கடுமையாகப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம். 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஈ.வெ.ராமசாமி, அன்னை தெரேசா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், காவி உடையில் காட்சியளிக்கும் சுவாமி விவேகானந்தர் வெள்ளை உடையில் இருப்பது போன்று காட்டப்பட்டதன் உள்நோக்கம்தான் என்ன?" என்று மோகன் ஷான் கேள்வி எழுப்புகிறார்.

யோகி சந்துரு, விகடன் இணையதளத்துக்காக மலேசியாவிலிருந்து..

1/3/2021

https://www.vikatan.com/news/general-news/hindu-sangam-opposes-periyar-picture-in-tamil-subjecs-in-malaysia-schools

 நன்றி ஆனந்த விகடன்