புதன், 30 செப்டம்பர், 2020

எங்கள் வீடு நாங்கள் அறியாமலே இல்லாமல் ஆகிவிட்டது by YOGI PERASAMY

மலேசிய பழங்குடி மக்களின் தலையாய ஒரு பிரச்னைக்காக அவர்களிடம் கலந்தாலோசிக்க ஒரு குழுவாகச் சென்றிருந்தோம். சுவாராமின் தோழர் சுரேஷ், சமூக செயற்பாட்டாளர்  அமினா, பழங்குடிகள் செயற்பாட்டாளர் ஜெனிதா, பிஎஸ் எம் கட்சியின் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் மற்றும் நான் ஆகியோர் அந்தக் குழுவில் இருந்தோம்.


கிளந்தான் மற்றும் பஹாங் எல்லையில் இருக்கிறது லோஜிங் எனும் இடம். எந்த ஒரு வரவேற்பு பலகையும் இல்லாமல் மௌனமாக தன் அழுத்தங்களை சுமந்தபடி இருக்கிறது செண்ரோட்  எனும் ஓர் அழகிய பூர்வக்குடி கிராமம். மழை பெய்து விட்டிருந்தது.  கேமரன்மலை தொடர் என்பதாலும் மழையின் காரணத்தினாலும்  குளிர் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது

எங்களின் வருகையை முன்கூட்டியே தெரிய படுத்தியிருந்தபடியால் எங்களின் வருகைக்காக காத்திருந்தனர் கிராமத்தைச் சேர்ந்த பூர்வக்குடி மக்கள். தெமியாங் இனக்குழுவைச் சேர்ந்த அவர்கள்,  புன்னகை குறையாத முகத்துடன்  எங்களை வரவேற்றனர்.  தங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை தாங்களாகவே தீர்த்துக்கொள்பவர்கள்தான் பழங்குடிகள். ஆனால், தற்போது பழங்குடிகளின் இந்த தனித்தன்மையை சோதித்தபடியே இருக்கின்றனர் சில காப்ரேட் முதலாளிகள் என்றுதான் தோன்றுகிறது.மிகச் சாதாரணமாக அவர்களின் வசிப்பிடத்திற்குள் அத்துமீறி நுழைவது மட்டுமல்லாமல் அவர்களின் அனுமதியின்றியே  அவர்களின் நிலத்தை அபகரித்து அல்லது அபகரிப்பதற்கான வேலையை தொடங்குகின்றனர் இந்தப் பண முதலைகள்.

தற்போது இந்தப் பூர்வக்குடி கிராமத்து மக்களின் குடிநீர் தடாகத்தில் கையை வைத்திருக்கின்றனர் இவர்கள். கிட்டதட்ட 9 நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக அவர்கள் குறிவைத்திருக்கும் இடம் துப்புரவு செய்தாகிவிட்டது.  அந்நேரத்தில் பூர்வக்குடி மக்கள் கொடுத்த நெருக்கடியில்  வந்த வேலையை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பிவிட்டதாக  தெரிவிக்கப்பட்டது.இதன் பிறகு, பெரும் அச்சத்தில் இருக்கும் அவர்கள் இவ்விவகாரத்தை  சட்டப்பூர்வமாகவும் அதே வேலையில் ஆதாரப்பூர்வமாகவும் போராடி, குடிநீர் தடாகத்தை மீட்க தயாராகிவிட்ட அவர்கள்  அதற்கான அடுத்தக் கட்ட நகர்வுக்காக இந்தச் சந்திப்பை மேற்கொண்டனர்.

முன்னதாக கோத்தா பாருவைச் சேர்ந்த டான்ஶ்ரீ அவரின் பிரதிநிதி  என்று கூறிக்கொண்ட ஒருவர், (அவர் எந்த டான்ஶ்ரீ அவரின் பெயர் ஆகிய விவரங்களை பூவக்குடிகளிடம் தெரியப்படுத்தப்படவில்லை)  பூர்வக்குடிகளின் குடிநீர் தடாகம் அமைந்திருக்கும்  இடத்தை மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்போவதாக கூறியிருக்கிறார். தொடர்ந்து  நிறுவனத்தின் பெயர் அட்டைமட்டும் அவர்களிடம் கொடுகப்பட்டது. இந்த விவரத்தோடு எந்த ஒரு விவரமும் கொடுக்கப்படவில்லை.பழங்குடிகள் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்திருக்கின்றனர். ஆனாலும் அது தொடர்பான  எந்த வகையான எதிர்வினையும் அவர்களுக்கு கிடைகவில்லை.  சுமார் 100 குடுங்கள் கொண்டிருக்கும் அந்தக் கிராமத்தில் 549 பேர் வசிக்கின்றனர். 

எங்களின் அடிப்படையான பல தேவைகளை நாங்கள் இழந்துவிட்டோம்.  எங்களுக்கு இந்தக் கிராமத்தில் கிடைக்கும் குடிநீர்கூட சுகாதாரமானது என்று கூற முடியாது. சேற்று நிறத்தில்தான் எங்களுக்கான நீர் வருகிறது.  அதையும் பறிக்க நினைப்பது எந்த வகையில் ஞாயம்என அவர்கள் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிபடுத்தினர்.  கடந்த நாட்களில் அவர்களைச் சுற்றியிருந்த 2000 ஏக்கர் வன நிலங்கள்  அழிக்கப்பட்டுவிட்டது. அதன்காரணமாகவும் அவர்களின் குடிநீர் மிக மோசமாக பாதிபடைந்திருக்கிறது. இந்நிலையில் அவர்களின் குடிநீர் தடாகத்தில் நிரந்தரமாக கைவைக்க துணிந்திருக்கும் காப்ரேட் நிறுவனங்களை எதிர்கொள்ள இந்தப் பூர்வக்குடி மக்கள் தயாராகிவிட்ட நிலையில், அவர்களின் இந்தப் போராட்டத்திற்கு கைகொடுக்க மேற்கூறிய அமைப்புகள் முன் வந்திருக்கின்றன.

தங்களுக்கான தேவையை வனத்தில் பெற்றுவந்த அவர்கள், சாதாரண மக்களைப்போல சம்பளத்திற்கு வேலைக்கு சென்று வருகின்றனர். நாங்கள் புறப்படும் நேரத்தில் காலையில் வேலைக்குச் சென்ற பெண்கள் சிலர் வேலை முடிந்து அப்போதுதான் திரும்பினர். தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று திரும்பும் நம் அம்மாக்களை அவர்கள் ஞாபகப்படுத்தினர்.  இன்று பல தோட்டங்களில் நம்மவர்களே இல்லாமல் போய்விட்ட  நிலையில் அந்த இடத்தைப் பூர்வக்குடிகள் நிரப்புகிறார்களா என்ற கேள்வி நிச்சயமாக என்னை  அச்சம் கொள்ள வைக்கிறது.

பூர்வக்குடிகள் மிக உன்னதனானவர்கள்.  வேற்றுமைகள் அற்றவர்கள்.   ஒருவரை சார்ந்திருக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. பணத்தின் அவசியம் அவர்களுக்கு இல்லவே இல்லை.  ஆனால், இன்று அவர்கள் ஒரு சராசரி மனிதர்களாக ஆக்கப்பட்டுவிட்டு அவர்களின் உன்னதத்தை கெடுத்த பாவத்தை யார் சுமக்கப் போவது? இவர்களுக்கு மட்டுமல்ல இவர்களைப் போல நாட்டில் இருக்கும் மற்ற இன பூர்வக்குடிகளும் ஏதாவது பிரச்னையோடுதான் போராடிகொண்டிருக்கின்றனர்.  நாம் அதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நமக்கு என்ன நஷ்டம் என்று


 

அந்தக் கிராமத்தைவிட்டு நாங்கள் கிளம்பும்போது தேங்கிக்கிடந்த  மழைநீரில் சில பூர்வக்குடி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு வேளை எந்தக் கவலையும் இல்லாத தங்களை நோக்கியிருக்கும் பிரச்னைகள்  என்னவென்று தெரியாத இறுதி தலைமுறை  பூர்வகுடி குழந்தைகள் இவர்களாகக்கூட இருக்கலாம்.

அந்தக் கிராமத்தைவிட்டு நாங்கள் கிளம்பும்போது தேங்கிக்கிடந்த  மழைநீரில் சில பூர்வக்குடி குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.  எந்தக் கவலையும் இல்லாத, தங்களை நோக்கியிருக்கும் பிரச்னைகள்  என்னவென்று தெரியாத இறுதி தலைமுறை  பூர்வகுடிக் குழந்தைகள் இவர்கள்தான் போல. 


 

     


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக