செவ்வாய், 15 செப்டம்பர், 2020

வரலாற்றில் இன்று (ஓவியக் கண்காட்சி)

 

 


இன்று மலேசிய தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அத்தினத்தை இன்னும் அர்த்தம் உள்ளதாகவும், மலேசிய தினம் என்பது வெறும் வார்த்தையில் இல்லாமல் ஏதாவது பயனுள்ளதாக செய்தால் என்ன என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டதுதான் வரலாற்றில் இன்று அதாவது HARI INI DALAM SEJARAH எனும் ஓவியக் கண்காட்சி.

தலைநகரில்  கேல் சிட்டி ஆர்ட்ஸ் காட்சியிடத்தில் செய்யப்பட்ட இந்த ஓவியக் கண்காட்சியில் நாட்டின் மிக பிரபலமான பல ஓவியர்கள் பங்கெடுத்தனர். அதிலும் நமது இந்திய ஓவியர்கள் 6 பேர் கலந்துக்கொண்டு பெருமை சேர்த்தனர். குறிப்பாக ஓவியர் சைட் தாஜுடினின் ஓவியம் வந்திருந்த பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த ஓவியக் கண்காட்சியில் பங்கெடுத்த சில ஓவியர்களை சந்தித்தபோது அவர்கள் தங்கள் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துக்கொண்டனர்.

ஓவியர் சங்கர் கணேஷ்

நாட்டுப் பற்று மனதில் எப்போதும் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஏதாவது ஒரு தருணம் தேவைப்படுகிறது. எனக்கு இப்போது கிடைத்த அந்தத் தருணத்தை நான் இப்போது சரியாக பயன்படுத்தியிருக்கிறேன் என நம்புகிறேன். நிறைய இந்திய ஓவியர்கள் ஆர்வமாக இந்தக் கலையை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அது ஒரு ஆரோக்கியமான விஷயம். மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

 

ஓவியை ரேக்கா மேனன்

நான் ஒரு முழு நேர ஓவியராவேன். ஒரு பெண்ணாக இந்த முடிவை எடுப்பது சாதாரணம் இல்லை. ஆனால், நான் ஒரு ஓவியராக உணரும் தருணத்தில் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் யாருக்காகவும் வரைவதைவிட எனக்காகவும் என் உணர்வுகளை வெளிப்படுத்தவும் வரைகிறேன். இந்தக் கண்காட்சியில் நான் கலந்துக்கொண்டதை பெருமையாகவும் கருதுகிறேன்.

 

ஓவியை சிமித்தா

நான் சிறுவயதிலிருந்து வரைந்துக்கொண்டிருந்தாலும், எனக்கான ஒரு அடையாளத்தை அடைய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிலும் நான் ஒரு ஓவியையாக வெளிவருவதற்கு ஏகப்பட்ட சவால்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு பெண் சுதந்திரமாக எதையும் செய்யமுடியாது என்ற இந்த சமூகத்தின் சிந்தனையை என்னால் எதையுமே செய்ய முடியவில்லை. ஆனாலும் விடாமுயற்சி நிச்சயம் அதர்கான பலனை கொடுக்காமல் இருக்காது இல்லையா? நான் அந்த வெற்றி படியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறேன். வரையும் கலைமீது ஆர்வம் இருந்தாலும் பொருளாதார சிக்கலை கொண்டிருக்கும் மாணவர்களுக்கு நான் இலவசமாக வகுப்புகளையும் நடத்துகிறேன். வரலாற்றில் இன்று என்ற இந்தக் கண்காட்சி எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

 

 

ஓவியர் சந்துரு (ஏற்பாட்டு குழுவில் ஒருவர்)

மலேசியாவில் பல இந்திய ஓவியர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். ஒரு களம் கிடைக்கவில்லையே என்று தேடும் இளைஞர்களுக்கு நாங்கள் தொடர்ந்து வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறோம். ஆனால், பார்வையாளர்களின் வருகை என்பது ரொம்பவும் குறைவாகவே இருக்கிறது. மற்ற இனத்தவர்கள் நம் இந்திய ஓவியங்கள் மீது காட்டும் ஆர்வம்கூட நம் இனத்தவர்கள் காட்டுவதில்லை. பொதுமக்களின் ஆதரவு இல்லாமல் எந்தக் கலைஞனும் வெற்றி பெற்றுவிட முடியாது. இங்கு அடையாளப்படுத்த முடியாமல் கூட போய்விடலாம். அது ஒரு ஓவியனாக என்னை வருத்தப்பட வைக்கிறது. மற்றக் கலையைப் போல ஓவியமும் ஒரு உன்னதக் கலையாகும். மற்ற இடங்களுக்கு போவதுமாதிரி இந்தமாதிரியான ஓவியக் கண்காட்சிக்கும் மக்கள் வர வேண்டும்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக