புதன், 9 செப்டம்பர், 2020

 


 

கே.பாலமுருகன் அறிமுகம்

அருமை நண்பர் கே.பாலமுருகன் முதலில் எனக்கு ஒரு எழுத்தாளராகத்தான் அறிமுகம் ஆனார். அவரின் துடிப்பான எழுத்துதான் இன்று எனக்கிருக்கும் மிகச் சொற்ப நண்பர்களில் மிக முக்கியமான நண்பராக அவரை நிலைநிறுத்தியிருக்கிறது.  நண்பர் பாலமுருகன் எழுத்தாளர் மட்டுமல்ல அவர் தமிழ்பள்ளியின் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

 

கடமை, கௌரவம் சம்பளம் மற்றும் சலுகைளுக்காகவும் சிலர் இந்தப் பணியில் ஈடுபடுவதுண்டு. ஆனால், பாலமுருகனை இந்த வட்டத்திற்குள் சுறுக்கிடமுடியாது. அவர் மாணவர்களுக்காக அதிலும் இந்திய மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுத் துறை மற்றும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் நடவடிகைகள் திட்டங்களை நான் அறிவேன்.  எந்த ஒரு பிரதிப்பலனும் எதிர்ப்பார்க்காமல் இலவசமாக அவர் அதை செய்கிறார். கல்வி, இன்றையச் சூழலில் சந்தை அல்லது வணிகமாகிவிட்ட  காலக்கட்டத்தில் அவரைப் போலச் சேவையாற்றும்  ஆசிரியர்களை தேடித்தான் எடுக்க வேண்டியிருக்கிறது.

 

அவருடைய ஆசிரியர் தொழிலுக்கு அப்பால் அவர் மலேசியாவில் முன்னணி எழுத்தாளராகவும் இருக்கிறார். உள்ளூரிலும் வெளியூரிலும் விருது பெற்ற எழுத்தாளர் என்பது எங்களுக்கு பெருமையாகும். 15 சர்வதேச, தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.  இவருடைய சிறுவர் இலக்கியப் பணியைப் பாராட்டி,  2018 இல் நாமக்கல் கவியரசர் தமிழ்ச் சங்கம் “மகாகவி பாரதி 2018“ எனும் விருதை வழங்கியது. தஞ்சை அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி  “தனிநாயகர் தமிழ் நாயகர் “ விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.  அத்துடன் ‘நகர்ந்துக்கொன்டிருக்கும் வாசல்’ என்ற நாவலுக்காக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் இவர் எழுத்தை  அங்கீகரித்து கரிகாற்சோழன் விருதை 2010ஆம் ஆண்டு வழங்கியது.

 

இதுவரை 36 நூல்கள் எழுதியுள்ளார்.  சில குறும்படங்களையும் எடுத்துள்ளார். பறை-களம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியராகவும் நண்பர் பாலமுருகன் இருந்துள்ளார்.

 

 

இப்போது நாம் இந்நாவலுக்குள் செல்வதற்கு முன்பு இன்னொரு வரலாற்று பதிவினையும் நான் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
அது மலேசிய குண்டர் கும்பல்கள் குறித்த ஒரு பகிர்வு.


2013-ஆம் ஆண்டு நாட்டில், அதாவது மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அதிரடி நடவடிகையில் 49 குண்டர் கும்பல்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. அந்த நடவடிக்கையின் ( ஓப்பராசியின்) பெயர் ஓப்ஸ் சந்தாஸ்.
அது மிகவும் ஆபத்தானவர்கள் என்ற ரீதியில் அடையாளப்படுத்தப்பட்ட குண்டர் கும்பல்களாகும். உண்மையில் 49 என்ற இந்த எண்ணிகையில் குண்டர் கும்பலின் பட்டியில் அடங்கி விடவில்லை. அது இன்னும் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சு வெளியிட்ட அந்தத் தகவலின் அடிப்படையில், மேலும் அவர்கள் வழங்கிய தகவலில்


40,313 பேர் இந்தக் குண்டர் கும்பல் செயலில் ஈடுபடுவதாகவும்
28,926 பேர் இந்தியர்கள் என்றும்,
 8,214 பேர் சீனர்கள் என்றும்
1,923 பேர் மலாய்க்காரர்கள் என்றும்
சபாவில் 32 பேர் மற்றும்
சரவாக்கில் 921 பேர்
இந்தக் குண்டர் கும்பல் நாச வேளைகளில் ஈடுபடுகிறார்கள் என்று அறிவித்தார்கள். 


உள்துறை அமைச்சு வெளியிட்டிருந்த அந்தக் குண்டர் கும்பல்களின் பெயர் பட்டியலைப் பார்த்தால் ஒன்றுகூட தமிழ் பெயர் இருக்காது. ஆனால்நேரடியான 24 சீனப் பெயர்கள் கொண்ட பட்டியல் அதில் இருந்தது.  எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் 13-14 வயதில் இருந்தபோது கேங் அமரன், கேங் தளபதி எல்லாம் இருந்தது. நான் அந்த கேங்கை எல்லாம் பார்த்ததில்லை என்றாலும் இடைநிலைப் பள்ளி மாணவர்களோடு சம்பாஷிக்க நேரும்போது இதுபோல சில தகவல்கள் நமக்கு கிடைக்கும்.  உள்துறை அமைச்சு வழங்கிய பட்டியலில் அந்த மாதிரி பெயர்கள் ஏதும் இல்லை. ஆனால் 04, 08, 36, 38 என பயங்கரவாத குண்டர் கும்பல்கள் என பட்டியலில் முன்னணி இருக்கின்றன.  இப்படி எண்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் நமக்கு என்ன என்று தெரியாது. 

இந்தக் குண்டர் கும்பலில் ஈடுபடுபவர்கள் இரவில் ரௌடியிசம் செய்துக்கொண்டிருப்பார்கள். பகல்களிலும் இவர்கள் ஏதாவது வேலைச் செய்துக் கொண்டிருப்பார்கள். பார்த்ததும் இவர்கள் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணக்கூடிய வேலையாக  அது இருக்கும். குறிப்பாக கார் நிறுத்துமிடம், பார்க்கிங் ‘பாவ்’ செய்வது, பணத்தை வட்டிக்கு விடுவது, வங்கியில் கார்களை பறிமுதல் செய்வது, கிளப்புகளில் வேலை செய்வது, போன்ஸ்தர்களாக  இருப்பது. இதெல்லாம் குண்டர் கும்பலைச் சேந்தவர்களுக்காகவே நிர்ணயிக்கப்பட்ட பகல் வேலைகள். இரவு வேலைகள் குறித்து நான் விளக்கம் சொல்ல தேவையில்லை.

இவர்களிடம் சாமானிய மக்கள் நட்பு வைத்துக்கொள்ள தயங்குவார்கள். பயப்படுவார்கள். குண்டர் கும்பலில் உள்ளவர்களுக்கென்றே சில உடை, நடை, மொழி இருக்கிறது. அவர்கள் ‘சைட் பேக்’ போட்டிருப்பார்கள், உடல் முழுதும் பச்சைக் குத்தியிருப்பார்கள், பெரிய பெரிய வெள்ளியிலான கைச் சங்கிலி போட்டிருப்பார்கள். கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து  ‘பிஸ்கட் கட்டிங்’ என்று சொல்லக்கூடிய தங்க மோதிரம் அணிவதும் வழக்கமாகியிருக்கிறது. 

நெஞ்சை நிமித்திக்கொண்டு நடப்பதும், மோட்டார் வண்டி அல்லது மோட்டார்  சைக்கிள்  ஓட்டும்போது நிச்சயமாக யாராவது வாயிலிலிருந்து சாபம் பெறக்கூடிய அளவுக்குதான் அவர்கள் வாகனத்தைச் செலுத்துவதும் உடல்மொழியும் இருக்கும்.  பேச்சில்  ஒரு மாதிரியான  அலட்சிய ஸ்லேங்க் இருக்கும்.  பல குண்டர் கும்பல் ரௌடிகளுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு இருக்கிறது. செல்வாக்கும் இருக்கும். அதே வேளையில் குண்டர் கும்பலின் தயவு அரசியல்வாதிகளுக்கும் ரொம்பவும் அவசியமானதாக இருக்கிறது. ஆனால், போலீஸ் வேட்டை என்று வந்தால், யாராக  இருந்தாலும்  Mati Katak தான். அதாவது தவளைச் சாவுதான். யார் யாரையும் காப்பாற்ற முடியாது.

2010- ஆம் ஆண்டிலிருந்து  மே 2019-ஆம் ஆண்டுவரை புகார் அளிக்கப்பட்டவரையில் 831 சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதுடையவர்கள் மலேசியாவில் காணாமல் போயிருக்கிறார்கள். இதில் புகார் செய்யாதவர்கள் எத்தனை பேர் என்று தெரியாது. இதற்கும் குண்டர் கும்பலுக்கும் தொடர்பு இருக்குமா என்று நீங்கள் என்னைக் கேட்ககூடாது. நான் பத்திரிக்கை துறையில் கொஞ்ச நாள் கிரைம் நிருபராக செய்திகளை செய்துக்கொன்டிருந்த அடிப்படையில் இத்தகவல்களை பேசுவது எனக்கான வாய்ப்பாக நான் கருதுகிறேன். 
கூடுதலாக இன்னும் ஒரு தகவலோடு நான் பாலமுருகனின் நாவலுக்குள் செல்கிறேன். மலேசிய நாட்டின் முதல் 10 பயங்கரவாத கைதிகளின் பட்டியல் நமக்கு இணையத்தில் கிடைக்கும்.

அதில் முதல் நிலையில் இருப்பவர் போத்தா சின்.
இரண்டாம் நிலையில் இருப்பவர் பெந்தோங் காளி.
இவ்விருவரையும் இந்த குறுநாவலில் பதிவு செய்திருக்கிறார் பாலமுருகன்.

‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’. 
என்ன உரையாடல் அது?
எப்போது நடக்கிறது?
ஏன் அது ஆப்பேக் கடையில் நடக்கிறது?
ஆப்பேக் கடை என்றால் என்ன?

மலேசிய சூழலில் இல்லாத யார் இந்த நாவலை வாசித்தாலும் மிக தெளிவாக புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் விவரமாக எழுதியிருக்கிறார் பாலமுருகன். கிட்டதட்ட எல்லா தோட்டங்களிலும் கிராமங்களிலும், மலிவு விலை வீடமைப்புப் பகுதிகளிலும் நிச்சயமாக ஒரு சீனக்கடை இருக்கும். அதற்கு ‘ஆப்பே’ எல்லது ‘அம்மோய்’ என்றும் இயற்கையாகவே ஒரு பெயரை சீனர் அல்லாத சமூகம் அவர்களுக்கு  கொடுத்து விடுவதுண்டு.

மலாய் மற்றும் சீனர்கள் தமிழர்களை பொதுவான ஒரு வார்த்தைச் சொல்லி அழைப்பார்கள். பெண்கள் என்றால் அவர்களை ஆச்சி என்றும் ஆண்கள் என்றால் அவர்களை அண்ணே அல்லது தம்பி என்றும் சொல்வார்கள். எல்லா ஆப்பேக் கடைக்கும் நேர்மையான வாடிகையாளராக தமிழ்சமூகம் இருந்திருக்கிறது. பல ஆப்பேக் கடைகள் வாழ்ந்ததே இந்தியர்களின் பணத்தில்தான்.

தோட்டத்  துண்டாடலுக்குப் பிறகு, தோட்டத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்திருந்த இந்திய சமூகம், அதைவிட்டு வெளியேறி பெடோங் என்ற புறநகர் பகுதியில் இவர்களுக்காகவே நிர்மாணித்திருந்த மலிவு விலை அடுக்குமாடி வீட்டில் குடியேறுகிறார்கள். அங்கு இரு குண்டர் குழுக்களுக்கு இடையில் நடக்கும் வாழ்வா-சாவா கதைதான் இந்த நாவல். அதை லீனியர் முறையில் மிக நுணுக்கமாக பேசுகிறார் நாவல் ஆசிரியர் பாலமுருகன். நாவலை வாசிக்கிற மாதிரியான உணர்வு எனக்கு தெரியவில்லை. அந்தக் கதையை நம்மிடம் யாரோ சொல்வது போன்றுதான்  இருக்கிறது.

அதிலும் மலேசிய இந்தியர்களின் நாவுகளில் தமிழாகவே மாறிவிட்ட சில மலாய் வார்த்தைகள் இருக்கின்றன. அதேபோல குண்டர் கும்பல்களில் உள்ளவர்கள் பேசுவதற்கே சில வார்த்தைகளும் உள்ளன.  கொச்சைமொழி தமிழ் வார்த்தைகளும் அதில் அடங்கும்.  நான் குறிப்பிடுவது ஆபாச வார்த்தைகளை அல்ல.  மலாய் மொழியில் BAHASA BAKU  என்று சொல்வாங்கள்.   அதையெல்லாம் சரியாக பயன்படுத்தியிருக்கிறார். உதாரணத்திற்கு  குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களின் பெயர்கள்.
முத்து ஆபாங், பான்ஜாங் சுரேஸ், காராட் சிவபாலன்.
(சமூகத்தால் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் பெயர்கள் இன்றும் இப்படிதான் இருக்கின்றன.) 

கட்டி (போதை பொருள்),
கட்டை (துப்பாக்கி),
பாப்பா (குண்டர் கும்பல் தலைவர்).
கோழி (பாலியல் தொழில் செய்பவர்கள்)

(‘கடையை ஓட்டிக்கொண்டிருந்தார்’  அப்படியென்றால் கடையை நடத்திக்கொண்டிருந்தார் என்று அர்த்தம். அதே போல ‘கைகள்’ என்று சொல்வார்கள். அப்படி என்றால் நம் குழுவைச் சேர்ந்தவர் என்று அர்த்தம்.

குண்டர் கும்பலுக்கென்றே சில protocol இருக்கு. தமிழ் சினிமாவில் நாம் பார்ப்பதுபோலதான். உதாரணத்திற்கு.  சில நல்ல ரௌடிகள் மது குடிக்க மாட்டார்கள். ஆனால், கொலை செய்வார்கள். தன் கும்பலைச் சேர்தவர்கள்
இறந்துவிட்டால், அதுவும் அவர்கள் எதிரியுடைய  சண்டையில் இறந்துவிட்டால் தியாகிகள் இறந்துவிட்ட மாதிரி, பிண பெட்டியின்மீது கொடியெல்லாம் சாத்துவார்கள். பீர் உடைத்து வாயில் ஊற்றுவார்கள். அவர்களின் சொந்த குடும்பத்தார்கூட  எதுவும் பேச முடியாது. அதே போல ஒரு கேங்கில் சேர்வதற்கான விதி முறையை பாலா பதிவுச் செய்திருக்கிறார். நாவலை வாசித்தவர்களுக்கு அது தெரியும். இன்னும் வாசிக்காதவர்கள் புத்தகத்தை வாங்கி வாசிக்கவும்.

இந்தக் கதையில் வரும் தப்பு அடிக்கிற நொண்டிக்குமார், கோயில் நிர்வாக செயலாளராக இருக்கும் முருகேசனிடம் அவர் தப்பு அடிப்பவர் என்று சொல்லாமல், குத்துச்சண்டை கற்றுக்கொள்கிறார். முருகேசனின் மகள்தான் சரசு. தப்பு அடிக்கும் குமாரின் ஸ்டைலில் மயங்கி சரஸ் நொண்டிகுமாரை காதலிக்கிறாங்க. மகள் நொண்டிக்குமாரை காதலிப்பது தெரிவதற்கு முன்பே அவர் தப்பு அடிப்பவர் என்று  தெரிய வருகிறது. இதனால், நொண்டிகுமார் குத்துச்சண்டை வகுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். தாழ்ந்த ஜாதியில் இருப்பவர் குத்துச்சண்டையை கற்றுக்கொள்ளகூடாது மற்றும் அவருக்கு சொல்லிகொடுக்கவும் முடியாது என்ற ஜாதி அரசியலையும் அங்கு கோடிகாட்டியிருக்கிறார் பாலமுருகன்.

ஆனால், சரஸ் தன் காதலனோடு ஓடி போகிறார். ஓடி போகும் சம்பவங்கள் தோட்டங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மிக சாதரணமாக கேட்க கூடிய செய்திகளாகத்தான் அந்தக் காலக்கட்டம் இருந்திருக்கிறது. சரஸ் தன் காதலுக்கும் காதலனுக்கும் நேர்மையானவளாக இருக்கிறாள். அவளின் தந்தையால் அவமானப்படுத்தப்பட்டு, தாக்குதலுக்கும் ஆளான நொண்டிக்குமார் அவளை சிறுக சிறுக சிதைக்கிறான். ஒரு நாள் ஆப்பே கடையில் அவனும் வாய்கொழுப்பில் வீணாக சாகிறான்.

நாவலில் வரும் பிரதான ஆப்பேக்கடை.  குடியிருக்கும் வீட்டின் முன் வாசலை கடையாக மாற்றி, டீ காப்பி, பட்டை சாராயம், பீர் முதலானவற்றை வினியோகிக்கும் ஒரு கடை. எந்த நேரமும் ஆட்கள் நடமாட்டம் கொண்டிருக்கும் அந்த மாதிரியான கடைகளில்தான் பெரிய பெரிய விவாதங்கள் நடக்கும். காரணம் வேறு ஒரு வசதியான தளம் அவர்களுக்கு இல்லை. அந்தக் காலத்து ‘மால்’ கள் என்றால் அது ஆப்பே கடைகள்தான்.  பணம் இல்லாத பாட்டாளிகள் கல்லுக்கடையிலும்,  கொஞ்சம் பணம் புழங்குபவர்கள் சீனக்கடையிலும், கறுப்பு சந்தை மாதிரியான விஷயங்கள் அதே சீனக்கடையின் நடு தடுப்பிற்கு பின்னால் குண்டர் கும்பலைச் சேந்தவர்களும் உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

இந்த நாவலில் பாலமுருகன் அதிக புனைவை நமக்கு வைக்கவில்லை. ஒரு நேரடி ஸ்டேட்மெண்ட் நமக்கு தருகிறார். திருவிழா என்றால் அங்கு நிச்சயம் சம்பவம் இருக்கும். அது ஒட்டுமொத்த ஜனத்திற்கும் தெரியும். யாரால் எப்போது அது நடக்கும், என்ன ஆகும் என்பது மட்டும் நடக்கும்வரை யாருக்கும் தெரியாது.
கீதையின்  வாசகம்போல, குண்டர் கும்பலைச் சேர்ந்தவனுக்கு நிச்சயமாக நல்ல சாவு வரும்ன்னு உத்தரவாதம் இல்லை என்பதும் மக்களால்  எழுதப்படாத ஒரு வாசகம்தான்.

மலேசிய தமிழ் நாவல்கள் தொடர்ந்து தோட்டப்புறத்தைச் சார்ந்து எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் அதை அடுத்த நிலைக்கு கொண்டுபோன முதல் நாவல் இது என்றால் அது மிகையில்லை. இன்னும் விரிவாக நாவலை எழுதியிருக்கலாம் என்ற விமர்சனத்தை யாரும் வைக்கலாம். ஆனால், இது முதல் நாவல் என்பதை மாற்ற முடியாது. தோட்டத்தை விட்டு மறுகுடியேற்ற வாசிகளாக மலிவு விலை அடுக்குமாடி வீடுகளுக்கும், கம்பத்து வீடுகளுக்கும் மாறி வந்த அவர்களுக்கு ஏற்பட்ட பண்பாட்டு தடுமாற்றங்கள் மற்றும் வாழ்வியல் தடுமாற்றங்களை எதிர்கொள்ள முடியாத சிக்களை இந்த நாவல் பேசுகிறது.

நாவலின் இறுதியில் பெயர் மறைக்கப்பட்ட 20 வயது இளைஞனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் படிப்பு ஏறாமல்,  தான் அவமானப்படுத்தப்படுவது  குறித்து அவர் சொல்லியிருக்கிறார்.  குடிகார அப்பா, அவரிடம் அடிவாங்கும் அம்மா இந்தக் குடும்பத்தில் வளரும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் எப்படி கையாளப்பட்டது? அவர்கள் சமூகத்தில் எப்படி வளர்ந்தார்கள்? என்னிலையை எட்டினார்கள்? இவர்களுடைய மரணத்தை யார் முடிவு செய்தார்கள்?  இப்போது  இந்த பிரச்னையின் நீட்சி எப்படி இருக்கிறது? இதெல்லாம் தேடலுக்கு உட்பட்ட ஒன்றாகும்.

நன்றி.
யோகி மலேசியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக