வியாழன், 4 ஜூன், 2020

என் பூமி! என் பொறுப்பு...




 என் பூமிக்கு யாரோ செய்யும் கேட்டுக்கு நானும் ஏதோ ஒரு வகையில் பொறுப்புதான். என் பூமி அழிவதற்கு எங்கோ ஒரு புள்ளியில் நானும் காரணம்.
என் அழகிய பூமி, மாசடைந்து
"என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்று தவிப்பதற்கு என் பங்கும் இருக்கிறது.
அதைபோலவே என் பூமியை காப்பாற்றும், தூய்மைப்படுத்தும், அதை நம் பூமிக்கு செய்யாதே என சொல்கிற கடமையும் கடப்பாடும்கூட எனக்கு இருக்கிறது.
நீ போடும் பிளாஸ்டிக் குப்பையை நான் சேகரிப்பேன். அதை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு எதிராக கோஷம் எழுப்புவேன். பதிவு எழுதுவேன்.
அதைவிடவும் என் அழகிய அன்பான பூமியை அடுத்த சந்ததியினருக்கு கொடுக்க பாடுபடுவேன்...
-யோகி
இந்த நாளில் செவெண்ட் சுசுயின் உரையை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஹலோ.
நான் செவேண்ட் சுசூகி. மாற்றத்தை உருவாக்க விரும்பும்,  சுற்றுச்சூழல் குழந்தைகள் அமைப்பு சேர்ந்தவர்கள். 12 மற்றும் 13 வயதுள்ளவர்கள். வாநிசா சூட்டீ, மார்கன் ஹெயுசர், மிச்செய்லி குய்க் மற்றும் நானும்றோம். நாங்கள் எங்கள் முயற்சியாலேயே பணம் திரட்டிக் கொண்டு 5,000 மைல்கள் கடந்து வந்துள்ளோம், பெரியவர்களே நீங்கள் உங்கள் வழிகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்ல.

இன்று இங்கே வந்துள்ள எனக்கு எந்த மறைமுக நோக்கமும் இல்லை. நான் எனது எதிர்காலத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன். எனது எதிர்காலத்தை இழப்பது என்பது தேர்தலில் தோற்பது போலவோ, பங்குச் சந்தையில் சில புள்ளிகளை இழப்பது போன்றோ இல்லை.

நான், இனி வரும் தலை முறைகளுக்காக பேச வந்துள்ளேன். நான் இங்கே பேசுவது, எவரின் காதுகளிலும் விழாமல் இருக்கும், உலகெங்கும் பட்டினியால் அழும் குழந்தைளுக்காக. நான் இங்கே பேசுவது, வேறெங்கும் போக வழியில்லாததால் காரணத்தால், இந்தப் பூமியில் அழிந்து கொண்டிருக்கும் எண்ணிக்கையில் அடங்கா விலங்குகளுக்காக. ஓசோனில் உள்ள ஒட்டையால் நான் சூரிய வெளியில் செல்வதற்கு பயப்படுகிறேன். உள்ளே இழுக்கும் காற்றில் என்னென்ன இரசாயனங்கள் இருக்கிறது என்பது தெரியாததால் சுவாசிக்கப் பயப்படுகிறேன்.

நான் வாழும் வான்கோவரில், தந்தையுடன் மீன் பிடிக்கச் செல்வதுண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மீன்கள் எல்லாம் புற்று நோயில் பாதிக்கப்பட்டு இருப்பதை காணும் வரை. அப்போது நாங்கள் கேள்விப்படுகிறோம் தாவரங்களும், விலங்குகளும் அனுதினமும் முற்றாக அழிந்து கொண்டிருப்பதை, முற்றாக பூடற்று மறைவதை. பெருங்கூட்டமாக வன விலங்குகளையும், பறவைகளும் பட்டாம் பூச்சிகளும் நிறைந்திருக்கும் மழைக் காடுகளையும் என் வாழ்நாளில் காணவேண்டும் என்று கனவு காண்கிறேன் ஆனால் இவைகள் எல்லாம் என் பிள்ளைகள் பார்ப்பதற்காகவாவது இருக்குமா எனத் தெரியவில்லை.

நீங்கள் என்னுடைய இந்த வயதில் இவைகளுக்கெல்லாம் கவலைப்பட்டதுண்டா? இவையத்தனையும் எம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. ஏதோ நமக்கு இன்னும் நிறைய காலம் இருப்பது போல, எல்லா தீர்வுகளும் கைவசம் வைத்திருப்பதைப் போல, நாம் ஏதும் செய்யாமல் இருக்கிறோம். நான் சிறுமி. என்னிடம் இதற்கானத் தீர்வுகளும் இல்லை. என்னிடம் இல்லை…. உங்களிடமும் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும் என விரும்புகிறேன். ஓசோனில் விழுந்த ஓட்டைகளை எப்படி அடைப்பது என்று உங்களுக்குத் தெரியாது. இறந்து போன ஓடையில் சால்மன் மீன்களை எப்படி மீண்டும் வர வைப்பது என்று உங்களுக்குத் தெரியாது. முற்றாக அழிந்துபட்ட (extinct) விலங்கினத்தை மீண்டும் எப்படி கொண்டு வருவது என்று உங்களுக்குத் தெரியாது. பாலைவனமாய் மாறிய காடுகளை மீண்டும் காடுகளாக்குவது எப்படி என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு சரி செய்வது எப்படி என்று தெரியாவிட்டால் தயவு செய்து சிதைக்காமல் இருங்கள்.

இங்கே நீங்கள், உங்களது அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருக்கலாம், வணிகராக இருக்கலாம், அமைப்பு சார்ந்தவராக இருக்கலாம், பத்திரிக்கையாளராகவோ அல்லது அரசியல் வாதியாகவோ இருக்கலாம். ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு தாயாக, தந்தையாகவும் இருக்கிறீர்கள், சகோதரியாக, சகோதரனாக, அத்தையாக, மாமாவாக, உறவாக இருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் இன்னொருவரின் குழந்தையாகவும் இருக்கிறீர்கள்.
நான் ஒரு குழந்தை தான். ஆனால் எனக்குத் தெரியும், நாமெல்லாம் ஒரே குடும்பம் தான் என்று, 500 கோடியினர் கொண்ட வலிவான குடும்பம், 3 கோடி உயிரினங்கள் கொண்ட வலிமையான குடும்பம். இந்த எல்லைக் கோடுகள், அரசாங்கங்கள் எல்லாம் அதை மாற்றிவிட முடியாது. நான் சிறுமி தான். ஆனால் எனக்குத் தெரியும் நாம் அத்தனை பேரும் ஒன்றாக இருக்கிறோம். ஒரே உலகாக ஒரே இலக்கிற்காக செயல்பட வேண்டும் என்று.

என்னுடைய….என்னுடைய கோபத்தில் நான் குருடாக இல்லை; என்னுடைய அச்சத்தில் நான் எப்படி உணர்கிறேன் என்பதை உலகிற்குச் சொல்ல பயப்படவில்லை. எனது நாட்டில் நாங்கள் மிக அதிகமாக வீணடிக்கிறோம். நாங்கள் வாங்குகிறோம்…. தூக்கி எறிகிறோம். வாங்குகிறோம்…. தூக்கி எறிகிறோம். வாங்குகிறோம்…. தூக்கி எறிகிறோம். ஆனாலும் இந்த வடக்குலக நாடுகள் தேவையானவர்களுக்காக தன்னிடமிருப்பதை பகிர்ந்து கொள்வதில்லை. நம்மிடம் அளவிற்கு அதிகமாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளப் பயப்படுகிறோம். நமது செல்வத்தில் ஒரு பகுதியை கொடுக்கப் பயப்படுகிறோம்.

கனடாவில் வசதி மிக்க வாழ்வை நாங்கள் வாழ்கிறோம். ஏராளமான உணவு இருக்கிறது. தண்ணீரும், இருப்பிடமும் இருக்கிறது. எங்களிடம் கைக் கடிகாரங்கள், சைக்கிள்கள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் ஏராளமாக உள்ளது. இந்தப் பட்டியல் இரண்டு நாட்கள் சொல்லுமளவு நீண்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு பிரேசிலில் தெருவோரக் குழந்தைளுடன் செலவளித்த கொஞ்ச நேரத்தில் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அப்போது இப்படித்தான் ஒரு குழந்தை சொன்னது; ”நான் பணக்காரியாக இருக்க வேண்டும். அப்படி பணக்காரியாக இருந்தால் எல்லா தெருவோரக் குழந்தைகளுக்கும் உணவையும் ஆடைகளையும். மருந்துகளையும். வீடுகளையும், அன்பையும் பாசத்தையும் கொடுப்பேன்,” என்று.
வீதியில் இருக்கும், கொடுக்க எதுவுமே இல்லாத ஒரு குழந்தை பகிர்ந்து கொள்ள ஆசை கொள்ளும் போது, எல்லாமும் கொண்டிருக்கும் நாம் ஏன் இன்னும் இவ்வளவு பேராசைக்காரர்களாக இருக்கிறோம்?

என் வயதில் இருக்கும் இந்தப் பிள்ளைகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. நாம் எந்த இடத்தில் பிறக்கிறோம் என்பது பெரிய வித்தியாசத்தை தருகிறது. ரியோ (ரியோ டி ஜெனிரா)வில் சேரியில் வாழும் ஒரு குழந்தையாக இருந்திருக்கலாம். சோமாலியாவில் பட்டினியில் வாடும் குழந்தையாக இருந்திருக்கலாம் அல்லது மத்திய கிழக்கில் போரால் பாதிக்கப்பட்டவளாக இருந்திருக்கலாம் அல்லது இந்தியாவில் பிச்சை எடுப்பவளாக இருந்திருக்கலாம். நான் சிறுமி தான். ஆனால் எனக்குத் தெரியும் போருக்காக செலவிடப்படும் அத்தனை பணத்தையும் வறுமையை ஒழிக்கும் சூழல் பிரச்சனைகளுக்கு செலவளித்தால், அதற்கான ஒப்பந்தங்களை செய்தால் இது எப்படிப்பட்ட அற்புதமான பூமியாக இருக்கும்.

பள்ளிகளில், ஏன் மழலையர் பள்ளிகளிலேயே கூட, நீங்கள் எங்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறீர்கள். பிறருடன் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாதென சொல்லிக் கொடுக்கிறீர்கள், பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளங்கள் என்று. மற்றவர்களுக்கு மதிப்பு கொடுங்கள் என்று. நம்முடைய குப்பைகளை சுத்தம் செய்யுங்கள் என்று. பிற உயிரினங்களை துன்புறுத்தாதீர்கள் என்று, பகிர்ந்து கொடுங்கள் என்று, பேராசை கொள்ளாதே என்று. அப்புறம் ஏன் நீங்கள் இப்படி செய்கிறீர்கள்நாங்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னீர்களோ அதையே செய்கிறீர்கள். இந்த மாநாடுகளை நீங்கள் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். யாருக்காக கலந்து கொள்கிறீர்கள் என்பதையும் தான். நாங்கள் உங்களின் பிள்ளைகள். நாங்கள் எந்த மாதிரியான உலகில் வளர வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்கிறீர்கள்.

எல்லாம் சரியாகிவிடும், இதுவே உலகில் முடிவு அல்ல. நாங்கள் இருக்கிறோம்ஆம் நாங்கள் இருக்கிறோம் எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவைச் செய்ய”, என்று சொல்லி பெற்றவர்கள் பிள்ளைகளை தேற்ற வேண்டும். நம்பிக்கை தரவேண்டும். ஆனால் நீங்கள் இதை ஒரு போதும் இதைச் சொல்வீர்கள் என்று நினைக்கவில்லை.
நாங்கள் உங்களின் முன்னுரிமைகளில் இல்லையா?

நீ யார் என்பது நீ செய்வதில் இருந்து தெரியும்நீ என்ன சொல்கிறாய் என்பதில் இருந்து அல்ல,” என்று என் தந்தை சொல்வார். ஆனால் நீங்கள் செய்வதெல்லாம் என்னை இரவில் அழ வைக்கிறது. பெரியவர்களான நீங்கள் எங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாகச் சொல்லுகிறீர்கள். ஆனால் நான் சவால் விடுகிறேன், தயவு செய்து உங்களின் வார்த்தைகளை செயலில் காட்டுங்கள் என்று.
நன்றி.
---------------------------------------------------------------------------------
சுசுகி இப்படிப் பேசி 28 ஆண்டுகளாகிவிட்டது. இவர் கனேடிய சூழலியலாளர் டேவிட் சுசுகியின் மகள் என்பது குறிப்பிடதக்கது. video link
https://www.youtube.com/watch?v=oJJGuIZVfLM 

நன்றி முக நூல் நண்பர் Ramasamy selvam




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக