வியாழன், 4 ஜூன், 2020

போராட்டம் குற்றமாகுமா?


முதல்நிலை அல்லது முன்னிலை தொழிலாளர்கள் என்று வெறும் பேச்சளவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பெருமை பேசும்  அந்தஸ்தை வழங்கிவிட்டு, முன்னிலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்  சிறப்பு ஊக்குவிப்பு பணம் மட்டும் கொடுக்கமுடியாது அல்லது அவர்களுக்கு பாதியாக கிள்ளி கொடுப்பது ஏன் என எனக்கு புரியவில்லை. இதன் தார்ப்பரியம்தான் என்ன?மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்கள் எந்த வகையில் குறைந்தவர்கள் ஆகிறார்கள்? அரசு தரப்பிலிருந்து இதற்கு யாராவது சரியான விளக்கம் கொடுத்தால் நல்லது.

துப்புரவு தொழிலாளர்களின் தொடர் தொழில் மற்றும் சம்பளச் சுரண்டல்களை மிக அணுக்கமாக கவனித்த பின் அதற்கு தகுந்த நடவடிகை எடுக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் உயிர்பெற்றதுதான்  தீபகற்ப மலேசியா அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களின் தொழிற்சங்கம். அதன் தலைவியாக இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் சரஸ்வதி முத்து. இவர் மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரும் ஆவார்.

இந்தச் தொழிற்சங்கம் தொடங்கியதிலிருந்து துப்புரவு தொழிலாலர்கள் உரிமைகள் மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு கடுமையாக போராடி வருகிறது. இவர்களோடு மலேசிய சோசலிசக் கட்சியின் தொழிலாளர் பிரிவும் இணைந்து பல போராட்டங்களையும் ஏழை தொழிலாளர்கள் சுரண்டப்படுவதிலிருந்து பாதுகாக்க அவர்களுக்கு விழிப்புணர்வுகளையும் வழங்கி வருகிறது.


இந்த முயற்சிகள் வெற்றி பெற்றதா? என்றால் இல்லை. பிறகு தோல்வியடைந்ததா? என்றாலும் இல்லை. காரணம் எடுத்துக்கொண்ட எல்லா முயற்சியும் வெற்றி பெறாததற்கு பல்வேறுக்காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக தொழிலாளர்களுக்கு ஏற்படும் பயம். எதிர்காலம் குறித்த கேள்வி, பணவிரையம், தவிர நீதிமன்றம் விசாரனை ஆகியவற்றின் மீது இருக்கும் தெளிவின்மை, அச்சம்.  துணிந்து வரும் ஒரு சில தொழிளாலர்கள் வேலை பிரச்னைகள் தொடர்பாக சட்ட நடவடிகையை மேற்கொள்ளும்போது சில வழக்குகள் வெற்றியிலும் சிலது சமரசத்திலும் சிலது தோல்வியிலும் முடிவதுண்டு. ஆனால், அனைத்து தொழிலாளர் வழக்குகளிலும் கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் இருக்கின்றது.

அந்த தகவல்களே தொடர்ந்து ஏழை தொழிலாளர் மக்களுக்காகவும் வர்க பேதமின்றி களத்தில் நின்று அவர்களால் போராட முடிகிறது. 

இந்தக் கோவிட் காலக்கட்டத்தில், தொடக்கத்தில் மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களுக்கு முன்னணி சேவை பிரிவு அங்கிகாரம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக எழுந்த அதிப்தியில் தீபகற்ப மலேசியா அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தினர் அரசுக்கு ஒரு மெமோராண்டம் அனுப்பினர்.

அதில், முன்னணி சேவை பிரிவை சார்ந்தவர்கள் கோவிட் 19 நோய் தொற்றுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.  அவர்கள் மக்களின் நலனை காக்கவும் அத்தொற்று தொடர்ந்து பரவாமல் இருக்கவும்  சிறந்த பாதுகாப்பினை உறுதி செய்து வருகின்றனர். இந்த முன்னணி சேவை பிரிவு தொழிலாளர்களில் மருத்துவர்கள், மருத்துவ தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் மருத்துவமனை  சார்ந்த இதர தொழிலாளர்கள் இதில் தங்களின் ஆபத்தை உணர்ந்திருந்தும் அதனை பொருட்படுத்தாமல் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணிக்க துணிந்துள்ளனர்.


இருப்பினும்,  உண்மையில், துப்புரவுத் தொழிலாளர்களும் மற்றும் அது சார்ந்து இயங்கும் தொழிலாளர்களும்,  முன்னணி சேவை பிரிவை சார்ந்தவர்கள் பிரிவிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மட்டுமே முன்னணி சேவை பிரிவை சார்ந்தவர்களாக  ஏன் கருதப்படுகிறார்கள்? மருத்துவமனையை சுத்தம் செய்யும் தொழிலாளர்களும் இந்த கடினமான காலங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள்.  ஆனால் ஏன் இத்தகைய பாகுபாடு? அதோடு துப்புரவுத் தொழிலாளர்களுக்கு  ஊக்குவிப்பு பணமும் அறிவிக்கப்படவில்லை.
என்று மிக தெளிவாக அச்சங்கம் எழுதியிருந்தது.

ஈப்போ ராஜா பெர்மாய்சுரி பைனுன் பொது மருத்துவமனையின் துப்புரவு தொழிலாளர்களின் குத்தகை நிறுவனம்தான் 'எட்ஜெண்டா யுஇஎம்எஸ் செண்டரியான் பெர்ஹாட்'. அந்நிறுவனம் வரையறுக்கப்பட்ட சுகாதார உபகரணங்களை அவர்களின் பணியாளர்களுக்கு வழங்கவில்லை என்றும் நிர்ணயித்த தராதரங்களின்படி  பாதுகாப்பு நெறிமுறைகளை  அமல்படுத்த தவறுகிறது என்றும் தொழிலாளர்கள் புகார் செய்தனர். ஆனாலும், பெரிய மாற்றங்கள் எதுவும் இந்தத் தொழிலாளர்களுக்கு வரவில்லை. ஒரே ஒருமுறை மட்டும் 300 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும் இல்லாததால் தொழிற்சங்கம் நடவடிக்கையில் இறங்கியது. மிக தீவிரமாக யோசித்து இனி போராட்டம் ஒன்றே சரியான தேர்வு என்ற முடிவோடு களத்தில் இறங்கினார் தோழர் சரஸ்வதி. மருத்துவமனை தொழிலாளர்கள் உரிமைக்காக ஈப்போ பொது மருத்துவமனை முன்பு அமைதி ஆர்ப்பாட்டத்தை அவர் முன்னெடுத்தார். அவரோடு  தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நால்வர் கைகோர்த்தனர். அரசு அனுமதித்த வரையரைக்கு உட்பட்டுதான் இந்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கையில் பதாகை ஏந்திய அவர்கள் துப்புரவு தொழிலாளர்களுக்கு சரியான மரியாதை மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று  எட்ஜெண்டா யுஇஎம்எஸ் செண்டரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குற்றவியல் சட்டம் பிரிவு 186 பிரிவு 269 மற்றும் அபாயகரமான தொற்று நோய்ச் சட்டம் ஆகியவற்றின் கீழ் போராட்டத்தை முன்னெடுத்த மற்றும் அதற்கு ஆதரவு தெரிவித்தவர் உட்பட ஐவரை போலீஸ் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது. மேலும் அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை. மறுநாள் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர் என்ற தகவல் மட்டும் நம்பத் தகுந்த இடத்திலிருந்து கிடைத்தது. இதற்கிடையில் சமூக செயற்பாட்டாளர் மரியா சின், சுவாராம், ஜனநாயக மக்கள் இயக்கம், அலிரான், மலேசிய சோசலிசக் கட்சி உட்பட பல அமைப்புகள் இந்த கைது நடவடிகையை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்திருந்தன.


மேலும், அடிப்படை உரிமைக்காக போராடிய இவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் தன்னார்வளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
 ஐந்து தொழிற்சங்கவாதிகள் தொடர்ந்து மறுநாள் மதியம்வரை  காவலில் இருக்க, அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்களா அல்லது குற்றஞ்சாட்டப்படுவார்களா என்பது குறித்து காவல் துறையினரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கபெறவில்லை. நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் அனைவரும் ஒரு தீவிரவாதிகளைப் போல கையில் விலங்கிட்டு, குற்றவாளிகள் அணியும் ஊதா நிற உடையணிந்து கொண்டு வரப்பட்டனர். தீவிரவாதிகளை நடத்துவதுப்போன்ற இந்த அணுகுமுறை, மக்களின் உரிமைக்காக போராடும் போராளிகளிடமும் காட்டுவது நிச்சயமாக சகிக்கிகூடியதாக இல்லை. 

ஈப்போ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர்கள்  ஐவரும் ஆயிரம் ரிங்கிட் பிணைப்பணத்தில் விடுவிக்கப்பட்டனர். சில செய்தி ஊடகங்கள் இந்த விவகாரத்தை மிகவும் குறுகிய பார்வையில் பார்க்கிறதோ என்று தோன்றுகிறது. காரணம் கடந்த மூன்று நாட்களாக நாட்டின் பலரின் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இந்த போராட்டத்தை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதால் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று செய்தியை வெளியிடுவதெல்லாம் எந்த வரையரையில் சேர்ப்பது?

தொழிற்சங்க போராட்டவாதிகளுக்கு ஆதரவாகவும் அவர்களுக்காக வாதாடவும்  ஈப்போ பிஎஸ்எம் மத்திய செயலவை உறுப்பினர்களும், வழக்கறிஞர்களுமான குணசேகர் மற்றும் பவானி ஆகியோர் செயல்படுகின்றனர். முன்னதாக நீதிமன்ற விசாரனையில் அவர்கள்மேல் சுமத்தப்பட்ட குற்றவியல் சட்டம் பிரிவு 186 பிரிவு 269 க்கு எதிரான குற்றங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டுவிட்டன. அபாயகரமான தொற்று நோய்ச் சட்டம் த்திற்கு கீழ் கொண்டு வரப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய குற்றத்தின் அடிப்படையில்  அவர்கள் மீது வழக்கு இன்னும் இருக்கிறது. நீதி மன்றத்தில் இந்தக் குற்றத்தை அவர்கள் மறுத்துக்கூறியதால் இதன் அடுத்தக் கட்ட விசாரணை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் கோவிட் 19 நோய்த்தொற்று மிக மோசமாக இருக்கும் வேளையில், அங்குள்ள காவல்துறை அதிகாரியால் கருப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து மக்கள் போராட்டம் வெடித்து அதன் எதிரொலி உலக நாடுகளுக்கும் பரவி இன்னும் அது தொடர்ந்துக்கொன்டிருக்கிறது. இந்த போராட்டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் உலக நாடுகளில் உள்ள மனிதாபிமானிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் ஆதரித்து வருகின்றனர்.

சொந்த நாட்டில் துப்புரவு தொழிலாலர்களுக்கு ஆதரவாக, தொழிற்சங்கவாதியினர் பதாகையை ஏந்தி அமைதி மறியல் செய்தது ஒரு  குற்றமாகுமா என்ற கேள்வி நாட்டின் பல ஆர்வலர்களின் இதயத்தை தட்டியுள்ளது. அரசின் மனசாட்சிக்கும் நீதியின் மனசாட்சிக்கும் அது தெரியாமலா இருக்கும்.

யோகி
சமூக செயற்பாட்டாளர்
நன்றி மலேசியாகினி (7/6/2020)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக