செவ்வாய், 16 ஜூன், 2020

யானையைக் கொன்றால் 1000 ஆண்டுகளை அழித்ததற்கு சமம் இல்லையா? (கட்டுரை )கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து  யானை ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேசநிலையில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. கிட்டதட்ட மேலைத்தேய நாடுகளின் இணையதளங்களில் இச்செய்தியினை மொழிபெயர்த்து வெளியிட்டனர். உண்மையில் இம்மாதிரியான செய்தியினை வெளியிடுவதற்கான நோக்கம்தான் என்ன? அந்நாட்டின் நற்பெயரைக் சீர்குழைக்கவா? நிச்சயமாக இல்லை. இம்மாதிரியான கொடுமைகள் இனி நடக்காமல் இருக்கவும்,  வெளிநாடுகளில் நடக்கும் இம்மாதிரியான வெளிவராத சம்பவங்களை எச்சரிக்கவும்தான். இது ஒரு நாட்டின் பிரச்னையாக பார்க்காமல் சர்வதேச பிரச்னையாக பார்க்க வேண்டும் என்பது மற்றுமொரு மறுக்கமுடியாத காரணமாகும்.

பசியால் உணவைத் தேடிகொண்டு வந்த யானை, மேலும் அது கர்பம் கொண்டிருக்கிறது. (பிரேத பரிசோதனையில்தான் இவ்விஷயம் தெரியவருகிறது.) கிடைத்த அன்னாசிப்பழத்தை உண்கிறது யானை. பன்றியைக் கொல்வதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகை வெடி அந்தப் அன்னாசிப்பழத்தில் இருந்திருக்கிறது. யானையின் வாயில் வெடி வெடித்திருக்கிறது. ரத்தமாக கொட்ட வலி தாங்காமல் யானை அங்கும் இங்கும் அலைகிறது. அதனால் எதுவுமே உண்ணமுடியாத நிலையில் வலிக்கு நிவாரணமாக தண்ணீரின் போய் நின்றுவிடுகிறது. ஓரிரு நாட்களில் அப்படியே மரணமும் அடைகிறது.  
இதற்கு முன்பும் யானைகள் இந்தியாவில் கொல்லப்பட்டிருக்கின்றன. என்றாலும் இம்முறை கேரளாவில் கொல்லப்பட்ட யானைக்காக உலக மக்கள் பலரின் மனதையும் உலுக்கி எடுத்ததற்கு காரணம் அதன் கர்பம் ஒரு காரணம் என தாராளமாக சொல்ல முடியும். வயிற்றுக் கருவோடு யானை மரணிக்கும்படியான நிறைய பிரச்சார ஓவியங்கள் வரையப்பட்டு, சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரவும்பட்டன. யானை இறந்ததுகாட்டிலும் வயிற்றில் குழந்தையோடு அது இறந்தது பலருக்கு கண்ணீரை வரவழைத்தும் விட்டது. மேலும், அது இதயத்தை வேதனைப்படுத்துவதாகவும் இருந்தது.

அதன் தாக்கம் 7 கடல்கள் கடந்திருக்கும் மலேசியாவையும் விட்டு வைக்கவில்லை. மலாய் மற்றும் ஆங்கிலச் செய்திகளில் வெளிவந்த செய்திக்கு மூவின மக்களிடத்தில் வந்த பின்னூட்டங்கள் அதை உறுதி செய்தன. பலர் இம்மாதிரி மிருகங்களை வதைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கடுமையான தண்டனையை கொடுப்பதற்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் கருத்து கூறியிருந்தனர்.  

ஆனால், அதே நாளில் கேராளாவில் யானைக்கு நடந்த அந்தப் படுகொலை சம்பவம் ஊடகங்களில் வெளிவந்த அதே நாளில் அம்மாதிரியான ஒரு படுகொலை மலேசியாவிலும் மூன்று யானைகளுக்கு நடந்திருக்கிறது. அதில் ஒரு  யானை கர்பம் தரித்திருந்த யானைதான் என்றாலும் அது மலேசிய மக்களின் கண்களில் விட்டு விலகிய ஒரு செய்தியாகவே இன்றுவரை இருக்கிறது. மலேசிய மிருகங்கள் அமைப்பு இந்தத் துயரச் சம்பவத்தை இணைய தளத்தில் மற்றும் அதன் முகநூலில் பதிவிட்டது. இருந்தபோதும் அச்செய்தியானது எதிரொலிக்கவே இல்லை. எதிரொலிக்கவில்லை என்பதை என்வரையில் சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளமுடியவில்லை. மேலும், 32 பில்லியன் மக்கள் வாழும் மலேசியாவில் வெறும் ஆயிரம் பேர் மட்டுமே அந்தச் செய்திக்கு பின்னூட்டம் கொடுத்திருந்தனர். அதைத் தாண்டிய ஒரு நடவடிக்கை இதுவரை நடக்காதது பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்திலுள்ள காஹாங் எனுமிடத்தில் இருக்கும் வாழை தோப்பில் விஷம் கொடுக்கப்பட்டதால் அந்த யானைகள் இறந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தக் குற்றம் புரிந்தவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். எனவே வழங்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் வழியாக மிருக அமைப்புக்கு மின்னஞ்சல் செய்யவும். உங்களுடைய விவரங்கள் அனைத்தும் ரகசியமாக இருக்கும். இந்தத் தகவலை மலேசிய மக்கள் மற்றும் ஜொகூர் வாசிகள் பரவலாக்குங்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கும் அவர் கொடும்பத்திற்கும் இத்தகவல் போய் சேரட்டும். என்று மலேசிய மிருகங்கள் அமைப்பு கேட்டுக்கொண்டது.

விஷம் வைத்தவர் செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என அவர் உணர வைப்பதற்காகவும் மலேசியாவில் யானைகள் கொல்லப்படுவதை தடுக்கும் முயற்சியிலும் மிருகங்கள் அமைப்பு எடுக்கும் முயற்சிகள் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், அந்த முயற்சிகள் உண்மையில் வேலை செய்கிறதா? பலன் அளிக்கிறதா? குற்றங்கள் தடுக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

மிருகங்கள் அமைப்பு இறந்த கர்பினி யானையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. விஷம் கொடுக்கப்பட்ட அதன் தாய்மை பொருந்திய வயிறு தெரியும் படி அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மலேசியர்களின் கண்களில் அந்தப் புகைப்படம் படவே இல்லையே.

பழகிவிட்டால் யானையைப் போல ஒரு அன்பான மிருகத்தைப் பார்க்க முடியாது என்பார்கள். யானை ஒரு ஆபத்தான மிருகமே இல்லை. உண்மையில் அது சாதுவான மிருகம். பல்லுயிர் பெருக்கத்தின் விந்து. அழகு. ஓர் ஆனையின் இழப்பானது ஆயிரம் ஆண்டுகளை இழப்பதற்கு சமம். எத்தனை ஆண்டுகளை நாம் வாழ்த்துக்கொண்டும் இயற்கையை அழிந்துக்கொண்டும், நம்முடைய சந்ததிகள் வாழ வேண்டிய வாழ்கையை சேர்த்தே அழித்துக்கொண்டிருக்கிறோம்?

அனைத்திற்கும் பொதுவான இந்த பூமியையும் மிருகங்களுக்கும் உரிமையுள்ள இந்த நிலத்தையும் எந்த சொரனையும் இல்லாமல் பிடுங்கிக்கொள்ளும் அதிகாரத்தை நமக்கு யார் கொடுத்தது? வாழ்கையின் மீதான ஏமாற்றத்தை இன்னும் நான் எப்படி சொல்ல என்று எனக்கு தெரியவில்லை?  

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக