வியாழன், 11 ஏப்ரல், 2019

பெண் வலி சொல்லும் கவிதை மொழி-ஏ.தேவராஜன்

இந்தப் பத்தாண்டு கால மலேசியப் புனைவிலக்கியத் துறையில் பெண்களின் இருத்தலும் ஈடுபாடும் எனும் பேச்சை முடுக்கிவிட்டால் பத்துக்கும் குறைவானவர்களே ஞாபகத்திற்கு வரலாம்.அவர்களுள் புனைவிலக்கியத்துறையின் நுட்பத்தை உணர்ந்து அதற்கேற்ற மொழியோடு எழுதக்கூடியவர்கள் வெகுச் சிலரேயாவர். இந்தச் சிலர்கூட தொடர் இலக்கிய முயற்சிகளில் இயங்குகிறவர்கள் என்றெல்லாம் வகைப்படுத்திவிட முடியாது. வாழ்வியல் அழுத்தங்களுக்கிடையே மூழ்கிப் போகாமல் அவ்வப்போது தங்கள் பாடுகளையும் உணர்வுகளையும் எழுத்தில் கொண்டுவரும் கவனிக்கத்தக்க புனைவிலக்கியவாதிகளும் உளர். அவர்களுள் யோகியும் ஒருவர்.அணமையக் காலமாக வெளிவராதது போலிருந்தாலும் அல்லது வேறோர் இலக்கிய வெளியில் இயங்கிக்கொண்டிருந்தாலும், யோகியின் படைப்புலகம் என்றுமே கவனிக்கத்தக்கனவாகத்தான் உள்ளன. ஆனால்,நம்முடைய துர்பாக்கியம் அவரது படைப்பாளுமை பற்றி அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் இருப்பதுதான். இது நமது குற்றந்தான். இப்பொழுது நூலுருவாக்கம் பெறும் சூழலில் யோகியின் படைப்புலகம் வாசகப்பரப்பில் குறிப்பாகத் தரமான இலக்கியச் சுவைஞர்கள் மத்தியில் விவாதிக்கப்படும் என்பது சர்வநிச்சயம்.

யோகியை இருபது ஆண்டுகளாகத் தெரியும். தொடக்க காலத்தில் கருத்துக் கடிதங்களையும் துணுக்குகளையும் அவ்வப்போது எழுதி வந்தார்.இதழியல் துறையின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாகப் பத்திரிகை நிருபராகப் பணியைத் தொடர்ந்தார்.திடீரென ஈராயிரத்தாவது ஆண்டின் மத்தியில் அவரது எழுத்தில் புது வீச்சைக் காண முடிந்தது. அதுவரை நான் பார்த்திருந்த யோகி வேறொரு பரிணாமத்தில் வெளிப்பட்டபோது அவர் மீது இருந்த இலக்கிய நம்பிக்கை மேலும் கூடியது. அதற்குப் பிறகு அவரது ஒவ்வோர் எழுத்தையும் தவறாது வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் அநேகமாக மலேசியாவின் அனைத்துப் புத்திலக்கியப் பிரியர்களுக்கும் தோன்றியிருக்கலாம். ஒரு கட்டத்தில் இவற்றை எழுதுவது யோகிதானா என்கின்ற ஐயங்கூட எழுந்தது. 

மெளனம் இதழின் பெரும்பான்மையான வெளியீடுகளில் அவரது கவிதைகள் தவறாது இடம்பெற்று வந்ததோடு தமிழகத்தின் பிரபல படைப்பாளர் காலஞ்சென்ற எம்.ஜி.சுரேஷ் போன்றோர் மத்தியிலும் உரக்கப் பேசப்பட்டதை இவ்விடம் சொல்லியாக வேண்டும். மலேசியப் பெண் கவிஞர்களில் தனித்துவமான மொழி நடைக்கு மட்டுமல்லாது பாடுபொருளிலும் அதனைத் துணிந்து சொல்லிவிடும் முறையிலும் யோகி தனித்துவமாய் நின்றதைப் பல கவிதைகள் கட்டியம் கூறுகின்றன. 'என் நள்ளிரவு காலையில் ஒரு நாள்' எனும் தலைப்பில் அமைந்த அவரது கவிதையின் ஓரிடத்தில்,

மலட்டுச் சிசுவால் ஆவதற்கு
ஒன்றுமில்லை என்பதால்
என் மலட்டுக் கருவறையைக் கொளுத்திவிட்டுப்
புலரவிடுகிறேன்

என வெளிப்படும் வரிகளுக்குள் வன்மமாய்ப் புதைந்திருக்கும் பெண்ணின் தாய்மைக்கான ஏக்கத்தை வலியோடு சொல்லும்போது யோகியின் நவீன மொழி மிக எளிதாய் மனத்துக்குள் நுழைந்துவிடுகிறது. இன்னோர் இடத்தில் தாய்மைப் பேற்றிற்காக ஏங்கி ஏமாற்றமடையும் தருணங்களை வலியுடன் சொல்லுகிறார் யோகி இப்படி

என் கருவறை
அறுவதும்
பின் இயங்குவதுமாகவே
இருக்கிறது.

என் கருவறையில்
நுழைய விரும்பாத விந்தைப்பற்றிக்
கேள்வி கேட்கப்படுகிறது

விந்துகள் கருவரையில்
மரமாவதைப் பற்றியும்
ஆணிவேர்கள் வேரூன்றியதைப் பற்றியும்
திரும்பத் திரும்பக்
கூறி வருகிறேன்

இந்த வரிகளின் சூழல் அநேகமாகப் பெண்களில் பலரும் கடந்து வந்த ஒன்றுதான் என்றாலும் அதைக் கவிதையாகத் தருவதில் நமது இலக்கிய வெளியில் யாரும் இருந்ததான பிரக்ஞை எனக்குத் தோன்றவில்லை.நவீன வாழ்வும் அது தரும் நெருக்கடிகளும் பெண் சமூகத்தை ஆட்கொள்ளும்போது அதே நவீன வாழ்வுக்கான மொழியில் சொல்லும்போதுதான் காலத்தின் கண்ணாடியாகக் கவிதை வெளிப்படுகிறது. ஒரு வலியை வாசகனிடத்தில் ஊடாடச் செய்ய முயலும் யோகியின் பெண் மொழியை உற்ற வாசகன் உணர்ந்தால்தான் வரிகளுக்குள் நுழைந்து அவர் அழுகின்ற வலியில் நம்மாலும் அழ முடியும். இங்குப் புனித இலக்கியமென்ற வர்க்கத்தில் நிற்பவர்களுக்கு முரண்பட வாய்ப்புண்டு.ஆனால்,கை நீட்டிக் கண்ணீரைத் துடைக்கின்ற மனம் புத்திலக்கியத்துக்கு மட்டுமே உண்டு.  இப்படியெல்லாம் வெளிப்பட்டு நிற்பதில் யோகி வெற்றி பெற்றிருக்கிறார்.

மேலே பார்த்தவை சில கவிதைகள் மாத்திரமே. ஒவ்வொரு கவிதையாக உருவி எடுக்கும்போது இத்தகைய இரசவாத எழுத்துகளையெல்லாம் யோகி தந்திருக்கிறாரே என்ற வியப்பு நிச்சயம் மேலிடும்.இப்படியாக அநேகக் கவிதைகளில் யோகி தமது முத்திரையைப் பதித்துள்ளார். அவர் தீவிரமாய் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தின்போது பிறருடைய சாயல் தமது படைப்பு வெளியிலும் கவிந்திருப்பதைப் பலவற்றை வாசிக்கும் எங்களுக்குத் தட்டுப்பட்டாலும்,மலேசியாவைப் பொறுத்தமட்டில் யோகியின் வருகை கவிதை வெளிக்குப் புதுநீரைப் பாய்ச்சியதாகவே வகைப்படுத்த முடிகிறது.  உலகமாயதல் போராட்டத்தையும் நவீன வாழ்வு சார்ந்த உறவு நிலை மயக்கத்தையும் தனி மனித கேவுதல்களையும் இன்னும் அதிகமாகத் தர யோகியால் நிச்சயம் முடியும். அதற்கேற்ற நவீன மொழி மட்டுமல்ல,திராணியமும் நிறையவே இருக்கிறது.

நன்றி: தென்றல் வார இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக