செவ்வாய், 6 ஜனவரி, 2015

தமிழ்நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது !ஆதவன் தீட்சண்யா புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் ஆசிரியர். தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். நவீன இலக்கியத்தில் மிக முக்கியமானா ஆளுமை. தந்துகி, புறத்திருந்து, பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம் எனும் கவிதை நூல்களையும், எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள், லிபரல்பாளையத்துக் கதைகள், இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை போன்ற சிறுகதைத் தொகுப்பையும், இன்னும் நாவல், கட்டுரைத் தொகுப்பு என தன் படைப்புகளை பதிவு செய்துள்ளார் ஆதவன் தீட்சண்யா. சாதீய ஒடுக்குமுறை, பெண் விடுதலை,  போன்ற போராட்டங்களிலும், பொதுக்கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் கலந்துக்கொள்ளும் இவரின் இலக்கியப்  பார்வை கடல் கடந்தும் கவனிக்கக்கூடியது.
அண்மையில் வல்லினம் இணைய இதழ் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய பயிற்சி வகுப்பை ஏற்று நடத்த வந்திருந்தவரை ‘நம் நாடு' நேர்காணல் செய்தது.

*இலக்கியப் படைப்புகளில் பிரிவினை இருக்கிறதே? அதாவது பெண்ணியம், தலித்தியம் என்று. இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

ஆதவன்: இலக்கியப் படைப்புகளை கட்டாயம் பிரித்துதான் ஆகவேண்டும். எழுதும்போது ஒருவர் தனக்கான அடையாளங்களை எழுதுகிறார் அல்லது பிறப்பின் அடிப்படையில் தன்மீது சுமத்தப்பட்டிருக்கிற அடையாளங்களைப் பற்றி அவருக்கு உள்ள மதிப்பீட்டை வெளிப்படுத்துகிறார். பொதுவெளியில் எல்லா வகை எழுத்துகளையும்  ஆண்கள் சமூகமே நிர்ணயம் செய்கின்றது. நடுநிலையான ஒரு பார்வை இலக்கியத்திற்கு வரவேண்டும் என்றால் படைப்புகளில் பிரிவுகள் வரவேண்டும். இல்லையேல் படிப்புகளின் தனித்துவ பார்வை அல்லது பிறரின் உளவியல் விஷயங்களை காணக் கிடைக்காமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளதோடு அவர்களின் வாழ்க்கையை அவர்களைத் தவிர வேறுயார் எழுதுவது?

*எழுத்தைப்போல் வாழாதது சரியா? அல்லது எழுத்துக்கும் வாழ்வுக்கும் தொடர்பு இருக்கிறதா?

ஆதவன்: நான் ஒரு தையல்காரனைப்பற்றிய கதையை எழுத நினைத்தேன். அதற்கு சில தகவல்கள் தேவைப்பட்டன. அதனால் நான் புத்தகங்களை தேடிப் படித்தேன். அதிலிருந்து எனக்கு வேறு சில புதிய தகவல்கள் கிடைத்தன.ஒரு கதையை எழுதப் போய் ஒரு வரலாற்றை நான் தெரிந்துக்கொண்டேன். நம்மைச் சேராத ஒரு சம்பவத்தையோ அல்லது சூழலையோ கதையில் கொண்டு வரும் போது அதைப்பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளுதல் அவசியமாகப்படுகிறது. ஓர் எழுத்தாளன்  தன் எழுத்தில் ஒன்றும் செயலில் ஒன்றும் செய்பவனாக இருப்பது நேர்மையற்ற தன்மையையே குறிக்கிறது.


*மலேசியாவிற்கு வரும் பிரபல எழுத்தாளர்கள் மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து பலவாறான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். உங்களைப் பொறுத்தவரை மலேசிய  இலக்கியம் குறித்த பார்வை என்ன?

ஆதவன்: முதலில் மலேசியத் தமிழ்  இலக்கியத்தை தமிழ்நாட்டு  இலக்கியத்தோடு ஒப்பிடுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் மலேசியாவிற்கு வந்த நம் மூத்தோர்கள் இலக்கியம் வளர்ப்பதற்காக இங்கு வரவில்லை. அவர்கள் வேலை செய்வதற்காக வந்தார்கள். அதுவும் சஞ்சிக்கூலிகளாக வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் அனைவரும்  பெரும் செல்வந்தர்களோ அல்லது கல்விமான்களோ அல்ல. அவர்கள் இங்கிருந்த மற்ற சமூகத்தினரோடு போராடி வாழ்ந்திருக்கிறார்கள். தங்களை முன்னிருத்திக்கொள்ளவும் தனக்கான உரிமைக்காகவும்  கல்விக்காகவும் போராடி இருக்கிறார்கள். தங்களுக்கான அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்ள பல ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள்.  இவற்றை எல்லாம் தாண்டி மலேசியாவில் இலக்கியம் என்ற ஒன்று மழுங்கடிக்கப்படாமல் மலேசிய இந்தியர்கள் இலக்கியம் படைப்பதே ஒரு சாதனையாகும். மேலும், நான் தற்போதுதான் மலேசிய இலக்கியத்தை வாசிக்க தொடங்கியிருக்கிறேன். தீவிர வாசிப்பு இல்லாமல் எவ்வகையான கருத்துகளையும் சொல்ல முடியாது. 

*மலேசியாவுக்கு நீங்கள் இரண்டாவது தடவையாக வருகிறீர்கள். உங்களுக்கு இங்கு பிடித்த விஷயம் எது?

ஆதவன்: மலேசியாவில் இரண்டு விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. ஒன்று மலேசியாவில் எந்த நேரத்திலும் எந்த சமயத்திலும் உணவகங்களில் ஆட்கள் இருந்துக்கொண்டே இருக்கிறார்கள். இங்கே உணவு அல்லது உணவு உட்கொள்ளும்  இடங்கள் வெறும் பசிக்காக வயிற்றை நிரப்பும் இடமாக இல்லாமல் மற்ற மற்ற விஷயங்களுக்கும் இயங்குகிறது.
இரண்டாவது, சில நண்பர்களுடன் நடுநிசியில்  மலேசியாவின் தலைநகரிலுள்ள ‘சவ்கிட்' ரோட்டுக்குச் சென்றிருந்தேன். சாலையின் ஒதுக்குப்புறத்தில் சிலர் ‘chess' விளையாடிக்கொண்டிருந்தனர். யாருடைய இடையூறும் இல்லாமல், யார் பார்க்கிறார் என்ற உணர்வுகள் எதுவும் இல்லாமல் தங்கள் விளையாட்டிலேயே  கவனம் செலுத்தி விளையாடிக்கொண்டிருந்தனர். இந்தச் சம்பவம் என்னுள் ஓர் எதிர்வினையை ஏற்படுத்தியது. காரணம் டில்லியும் கோலாலம்பூரைப் போன்ற ஒரு தலைநகரம்தான். ஜனநாயக நாடாக இருந்தாலும் இங்குபோல் யாரும் அங்கு இருக்க முடியாது. அதுபோல் இங்கும் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் நீங்கள் எல்லாம் சுதந்திரமாகத்தான் இருக்கிறீர்கள்... ஒரு சில விஷயங்களில்.    

-‘நம் நாடு' நாளிதழ்
பிப்ரவரி 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக