செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

புத்தக பார்வை (ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்)

சிறிய தோட்டா
‘கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்த மிஞ்சிய சிறு துணியின் குட்டி கீழாடை அவளுக்கு
உள்நாட்டுப் போரின் போது
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென..’

கவிஞர் நரன் எனக்கு அறிமுகமானது இந்தக் கவிதையின் வழிதான். போரில் எது வேண்டுமானாலும் நடக்கும். நமக்கும் அது தெரியும்தானே. ஆனால், இந்தக் கவிதையின் கவிஞர்  கொடூரத்தை மிக அமைதியான மொழியில் தயார் படுத்தியிருக்கிறார். ‘நரனுடைய ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ கவிதை தொகுப்பில் இப்படியான கவிதைகள் அதிகம் உள்ளன.

நரன், 2004-ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் எழுதிவருபவர். இவர் சமீபத்திய எழுத்தாளர்களில் கவனிக்ககூடியவராக இருக்கிறார். இவருடைய முதல் கவிதை தொகுப்பு ‘உப்புநீர் முதலை’ 2010-ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. 60 கவிதைகள் கொண்ட அந்தத் தொகுப்பு நரனுக்கு நவீன எழுத்தாளர்கள் மத்தியில் நம்பிக்கையான அறிமுகத்தை ஏற்படுத்தி தந்தது. அதனைத்தொடர்ந்து  2014-ஆம் ஆண்டு ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ என்ற நரனுடைய இரண்டாவது கவிதை தொகுப்பை கொம்பு பதிப்பகம் வெளியிட்டது.
.
இரண்டு கவிதை தொகுப்புக்கும் பெரிய இடைவெளி இல்லாத பட்சத்தில்  ஏறக்குறைய ஒரே பாணியில் உள்ளது என்று கூறலாம். ஆனால், நரன் கவிதையில் பேசப்பட்டிருக்கும் விடயங்கள் மிக முக்கியமானதாகவும் விவாதத்திற்கு உட்பட்டதாகவும்தான் இருக்கிறது.
குறிப்பாக முதலாளித்துவம், அதிகார வர்கம், சமூகம் உள்ளிட்ட கேள்வியோடு  ஊடாடுகிற கேட்கும் விதத்தில்,  நரன் தன் கவிதை பார்வையை முன்வைத்திருக்கிறார்.
பேரமைதி என்ற கவிதை வரிகளை இப்படி முடித்திருப்பார்…

‘புத்தனிடமும் ஒரு குளமிருந்தது
அதற்குள் ஓராயிரம் மீன்கள்
ஓராயிரம் தாமரைகள்
ஓராயிரம் கொக்குகள்
நீரற்ற நீரால்
தசையற்ற மீன்களால்
இதழ்களற்ற தாமரைகளால்
பறந்துவிட்ட கொக்குகளால்
நிரம்பியிருக்கிறது அக்குளம்
எப்போதும் வற்றாக் குலமது
அதில் சலனிக்காத நீர்
அது அவன் பேரமைதியில் மட்டுமே சலனிக்கிறது
புத்தனின் முகத்தைப் பார்
எவ்வளவு சலனம்
எவ்வளவு பேரமைதி
இரண்டும் ஒன்றெனப் போல்’
(உப்புநீர் முதலை)

ஈழப்போராட்டத்தில் புலம் பெயர்ந்த மக்களின் வலியையும், அதனால், வெறுமையில் இருக்கும் அந்த ஊரையும் இதைவிட துள்ளியமாக எப்படி செல்வது?  வாழ்வின் சலனத்தும்… பேரமைதிக்கு ஒரே உவமையாக நரன் கையில் எடுத்திருப்பது புத்தனை. அதே வேளையில் திரு.பெலிக்ஸ் என்ற கவிதையில் வாழ்வின் அடுத்தடுத்த பரிமாண மாற்றங்களை மிக எதார்த்தமாக சொல்லி கடந்து போகிறார் நரன்.
‘உப்பு நீர் முதலை’  என்ற  கவிதை தொகுப்பில் ‘முதலை’  என்ற கவிதை மிக  முக்கியமானது .

‘உப்புநீர் முதலையொன்று துயில்கிறது
தலையை நீருக்குள்ளும்
உடலை வெண்மணலிலும்
கிடத்தியபடி
அப்போது அதனுடல்
கார்காலத்தில் தொடங்கி
கோடைகாலம்வரை நீண்டிருக்கிறது’
அந்தத் தொகுப்பில் உள்ள மற்ற கவிதைகளை எளிதில் புரிந்துகொள்ள  செய்யும் உபாயம் இந்தக் கவிதையை புரிந்துக்கொள்வதின் வழி பெற முடியும் என நினைக்கிறேன்.
‘பல்லுயிர் படிம ஆராய்ச்சியாளரான
63 வயது திரு.பெலிக்சுக்கு
177 ஆண்டுகள் பழமையான
மதுப்புட்டியொன்று கிடைத்தது
‘மிச்சம் இருந்த மதுவை
குவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம்
17 ஆண்டுகள் மீதமிருந்தன’

தலைமுறைச் சிக்கல்களை மட்டுமல்ல,  வாழ்க்கையின் எதார்த்தம் கையறுநிலையில் வெளிபடுவதாய்தான் நான் இவ்வரிகளைப் பார்க்கிறேன். நரன் தனது கவிதைகளில் எண்களோடு விளையாடியிருக்கிறார். ஆம், பல இடங்களில் கணிதம் வழியே அவரின் கவிதைகள் நம்மோடு கூட்டி கழித்து விளையாட்டு காட்டுபவையாக இருக்கின்றன.

47 முறை’ என்ற கவிதையில்
“நீண்ட கழுத்திற்கும் உடலுக்குமிடையே தொடர்பறுந்த ஆணுடல்”
இவ்வோவியத்தை வரைய 
கிட்டதட்ட 47 முறை துருவேறிய கத்தியால் கழுத்திற்கும்
உடலுக்குமிடையே
நேர்கோடிட வேண்டியிருந்தது என்னை
(ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்)

கணிதத்தோடு நரன் விளையாடும் கவிதை வரிகள் நம்மை நிலைக்கொள்ளாமல் செய்து விடுகின்றன.
நடை முறை வாழ்கையில் நாம் எண்களை நிறைய பயன்பாட்டிற்கு உட்படுத்துகிறோம். ஆனால் இலக்கிய வடிவில் அதை பக்க எண்களாக மட்டுமே புத்தகங்களில் பயன்படுத்துகிறோம்.
-10 மணிக்கு சந்திக்கலாம் , 
-17 பேர் வந்திருந்தார்கள் ,  
-1300 வருடங்கள் பழையது,  

இப்படியாக சொற்கள் வெளிப்பாட்டில்,  எண்கள்  மிக முக்கியமான பாத்திரமாக ஊடாடிக்கொண்டிருக்கிறன. காலபோக்கில் இலக்கிய வெளியில் நரனின் தனித்த அடையாளமாக  எண்கள் மாறி போயிருக்கலாம்.

‘வார்த்தையைச் சுரக்கும் கிணறு’
என்னும் ஒரு கவிதையும் இவ்வாறான கணித விளையாட்டோடு உளவியல் சிக்கள் சொல்லக்கூடியதாகத்தான் நான் பார்க்கிறேன். இன்னும் நரனின் இந்தக் கவிதைத் தொகுப்பில்

-5600 கந்தக இழுசக்தி திறன் புல்லட் ரயில்
-ஜோடி ரிஷபம்
-பசுவிற்கு ஆறு கால்கள்
-7 மார்புடைய பெண்
-ஏழாயிரத்து பதினொரு கிழந்தைகளின் எழும்புத் துண்டங்கள்
-கர்பவதிக்கு இரண்டு யோனி
-மூன்று ஆணிகள்

இன்னும் பதினான்காயிர கையுடையால், ஏழாயிரத்து நூற்று சொச்சம் குதிரைகள், 127 மன்னர்கள், என எங்கும் விரவிக்கிடக்கிறார்கள். ஒரு வாசிப்பாளனாக இத்தனை புனைவுகளையும் நாமும் சுமந்துக்கொண்டு கணம் கூடிய நத்தை என நகரவேண்டியுள்ளது.

வீட்டில் வழுங்கி விழுந்தாள். அம்மா
வீடாய் எழுப்பப்படும் 47 ஆண்டுகளுக்கு முன்
இவ்வீடு நீரென்ற வார்த்தையைச் சுரக்கும்
கிணறாயிருந்தது’

(ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்)

நரனின் கவிதைகளில் ஒளிந்துக்கொண்டு ரணங்கள் அக்கிணற்று நீரைப்போல் நம்மில் தங்கி விடுகின்றன.
முதலாளித்துவத்தை கேள்விக் கேட்கும்படியான பல கவிதைகளை நாம் படித்திருப்போம். ஆனால், நரனின் கவிதைகளை அதிலிருந்து கொஞ்சம் மாறுபடுத்தி பார்க்கலாம். அவர் முதலாளித்துவத்தோடு, மேற்கத்திய கலாச்சாரத்தையும் கேள்வி கேட்கிறார். இன்று சமூதாயம் அதன் பகட்டான மேற்கத்திய மோகங்களை பிரெண்ட்-டில்தானே வைத்திருக்கிறது. இதை வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் நரன்…

‘ஷூ’
காலையில் விடைப்பெறும் போது மனைவியின்
உதட்டைக் கவ்வி அவள் நாவை என் எச்சிலால்
ஈரப்படுத்துவேன்.
-பதிலீடாய் அவளும்-
தினமும் அலுவலகம் வந்ததும்
என் எஜமானனிடம் ‘லீ கூப்பர்’ கால் பதாகைகளை (ஷூ)
நாவால் நக்கி சுத்தப்படுத்துவேன்.
மனைவியின் நாவால் வலதுகால் ‘ஷூ’ சுத்தமாச்சு’

இப்படி அதிகார வர்கத்தை கேள்வி கேட்கும் சில கவிதைகளை நரன் சற்று காத்திரமாகவே வைத்திருக்கிறார்.
‘இங்கே’ என்ற கவிதையில் 

கண்கள் தோண்டப்பட்ட பெரும் பள்ளத்தை 
‘ரே-பான்’ கருங்கண்ணாடிகள் மறைக்கும் 
என்கிற கவிதையும் அதிகார வர்கத்தை கேள்வி கேட்கும் ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.
நரன் கிருஸ்துவ பின்புலத்திலிருந்து வந்தவர் என்ற காரணமோ அல்லது என்னவோ அவரின் கவிதைகளில் நிறைய கிருஸ்துவ மணம் வீசுகின்றன. பல இடங்களில் அதை அவதாணிக்க கூடியதாகவும் இருக்கிறது.  இருந்தபோதிலும், சலிப்பு தட்டாது, வாசகனின் மூளைக்கு நிறையவே வேலை கொடுக்கிறார் நரன். 

சில கவிதைகளில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது நேரடியாக தெரிந்துவிடுகிறது. சில கவிதைகள் ஓரளவுக்கு இதைத்தான் சொல்கிறார் என்று இரண்டாம்- மூன்றாம் வாசிப்பில் அவதானிக்க முடிகிறது. சில கவிதைகள் எதைத்தான் சொல்ல வருகிறார் என்ற கேள்வி எழவும் செய்கிறது.

காலுரைகள்; காலணிகள்; ஹிருதயங்கள் என்ற கவிதையை உதாரணம் கொள்ளலாம்.

பதினான்காயிரம் கையுடையாள்

அவளிடம் பதினான்காயிரம் வெள்ளை உடுப்புகள்;
காலுறைகள்; காலணிகள்; ஹிருதயங்கள்
பதினான்காயிரத்து ஒன்றாய் ரோகியொருவன் உருவாகும் பொழுது
அவளும் பதினான்காயிரத்தொன்றாகிறாள்
யாரேனும் ஒருவர் சொஸ்தப்பட்டோ;
அல்லது நோய் முற்றியோ
கருப்பு வண்டியில் இல்லம் திரும்பும் போதோ அவள் 13999 ஆகிறாள்
எல்லாருக்கும் ஊட்டுகிறாள். துடைக்தெடுக்கிறாள்
மருந்திட்டுக் கண்ணீரும் சிந்துகிறாள்
கழுத்து வரை போர்த்தி விளக்கை ஊதியணைக்கிறாள்
நேர்த்தியாக இரவு உருவாகவும் செய்கிறது
உபரியென  யெதுவுமில்லை அவளிடம்
சில ரொட்டித் துண்டுகள்; சில வெண் பஞ்சுகள்;
சில காடாத்துணிகள்’

நரன் இந்தக் கவிதையின் வழி சொல்ல வருவது என்ன? அவர் கூறும் பதினான்காயிரம் கையின் உவமைக்கு அர்த்தம் என்ன? பிறகு ஏன் அவள் 13999 ஆகிறாள். ஏன் அவளிடம் ரொட்டித் துண்டுகளும், வெண் பஞ்சுகளும், காடாத்துணிகளும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன? கையுடையாள் என்பவள் உண்மையில் பெண்தானா? அல்லது அதுவும் புனைவா? கருப்பு வண்டி என மரணம் பற்றியும் இந்தக் கவிதையில் நரன் பேசுகிறார். இப்படி நானே பல கேள்விகளை கேட்டு கேட்டு விடை காண்கிறேன். விடை கிடைக்காமலும் இருக்கிறேன். வேறு ஒரு சந்தப்பத்தில் விடை கிடைக்கும் எனவும் காத்திருக்கிறேன்.

நரனிம் இந்த (ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்) என்ற கவிதை தொகுப்பில் மிக முக்கியமான கவிதையாக நான் பார்ப்பது  

உணவு வு…ண…உ கவிதையாகும்.

அப்பா உணவு மேசையிலிருந்து
இரண்டு நாள் தொலைவில் வேட்டையாடிக்
கொண்டிருக்கிறார்
ஒரு காட்டு எலியை
நாங்கள் இங்கே காலி தட்டுகள் முன்.
இளையவன் பீங்கான் தட்டுகளை உடைத்து உடைத்து
சில்லுகளைக் காப்பிக் கோப்பைக்குள் முக்கி முக்கி
சுவைத்தான்
நான் எவர் சில்வர் தட்டுகளை முட்கரண்டியால்  குத்தி
குத்தி உண்டேன்
சுத்தியலால் உடைத்து பிட்டு பிட்டு உண்டாள் அம்மா
இவ் உணவு மேசையை
பசியை எங்களிடமிருந்து துரத்திக் கொண்டோடுகிறார்
எம் தந்தை
பழக்கங்களைப் புசிப்பதென்பதுதான் விசித்திரமும்
வாழ்வும்.

தொலைந்த வாழ்வின் எதார்த்தம், வறுமை, இயலாமை, முதலாலித்துவம், மேல் நாட்டு ஆதிக்கம் உள்ளிட்ட விடயங்களோடு நான் இந்தக் கவிதையை பொறுத்தி பார்க்கிறேன். இந்த ஒரு கவிதைக்குள் ஒரு சிறுகதையோ அல்லது ஒரு நாவலோகூட ஒளிந்துக்கொண்டிருப்பதாக நான் நினைத்துப் பார்த்துக்கொள்கிறேன்.
‘உப்பு நீர் முதலை’ கவிதை தொகுப்பில்  அமைதியை விரும்பும் மனநிலை , மற்றும் தோற்ற பிழையின்  மூலம் நாம் கண்டடையும் வாழ்வியல் தரிசனம்  போன்றவையே அந்த தொகுப்பு நெடுகிலும் மிஞ்சுவதாக இருக்கிறது.  ஆனால் ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ தொகுப்பில் சமுக அக்கறை , அதிகார மையத்தை கேள்வி எழுப்புதல், போன்ற செயல்பாடுகள்  நிறையவே இருக்கிறது.
நரன் அவரது கவிதைகளில் பல இடங்களில் சுயத்தைப் பற்றி கூறும் வேளையில், அது குறித்த கேள்வியையும் நம்மிடம் கேட்கிறார். அவரின் கவிதைகள் எரியாத நெருப்பாக புகைந்துக்கொண்டே இருக்கின்றன. அதன் வெட்பம் பூடகமாக நம்மை புழுங்கச் செய்கிறது.

ஒரு கவிதை புத்தகத்தை திறந்து வைத்தேன்
கவிதையில் வந்து ஒரு குருவி சற்று அமரட்டுமென
சிறுகதை ஏடென்றால் கூடு கட்டி, மஞ்சள் குஞ்சு பொறித்து
நடை பழக்கி பின் செல்லும்
நாவலென்றால்…

இப்படி வரியை முடித்து நம் முகத்தை விட்டென ஏறிட்டு பார்ப்பதைப்போல இருக்கிறது நரனின் கவிதைகள்.  நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் கவிதை தொகுப்பில் பயன்படுத்தியிருக்கும் ஓவியங்கள்  மிக நேர்த்தியானவை. இயற்கையாகவே ஓவியங்களில் ஆர்வம் கொண்டவரான நரனுக்கு, தமது தொகுப்பிற்கான ஓவியங்களைத் தேர்வு செய்வதில் பெரிய சிரமம் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. படங்களுக்கு ஏற்ற கவிதை அல்லது கவிதைக்கு ஏற்ற ஓவியம் என தனியே பிரித்து பேச முடியாத அளவுக்கு இந்த தொகுப்பில் ஓவியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரொபெட்டோவின் புகைப்படத்தோடு கூடிய ஓவிய பாணி படங்களும், வில்லியம் கான்ரீஜின் ஓவியங்களையும் கவிதை தொகுப்பிற்கு பயன்படுத்த அதற்கு ஏற்ற கவிதை முதலில் தேவைப்படுகிறது. மிக பொறுத்தமாக அமைந்திருக்கிறது நரனின் கவிதைகள்.
ஆனால், ‘உப்பு நீர் முதலை’ தொகுப்பில் இருக்கும் எல்லா ஓவியங்களையும் நரன் வரைந்திருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, நரனின் கவிதைகளில் ஏமாற்றமும், கோபமும்தான் எங்கும் இளையோடுகின்றன. அவரின் இரண்டு கவிதை தொகுப்புகளிலும் இதை காண முடிகிறது. வாழ்கை என்பது இன்பமும் துன்பமும் சேர்ந்தது என்றால் இன்பத்தையும் பதிவு செய்துதானே ஆக வேண்டும். கவிஞன் என்பவன் துன்பத்தின் பிரதிநிதியாக மட்டும் தம்மை உணர்த்த முயற்சிப்பது ஏன்? கவிதை என்பது திட்டமிட்டு எழுதப்படும் விடயமா என்ன? நம்மை பாதிக்கும் சம்பவம் அல்லது காட்சி கவிதையாக காகிதத்தில் இறக்கி வைக்கும் போது நம்மை பாதிக்கும் இன்பத்தையும் கவிஞர்கள் கவிதையில் ஏன் பதிவு செய்ய முனைவதில்லை. அதிலும், நரன் வார்த்தைகளை பிரயோகிப்பதிலும், கவிதையை நவீன பாணியில் சொல்வதிலும் அவருக்கென தனி பாணியை வைத்திருக்கும்போது, அவருக்கு இது சாத்தியமான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். அவரின் அடுத்தடுத்த படைப்புகள் அல்லது அவரோடு ஓர் இலக்கிய சந்திப்பு செய்தால்தான் நரன் விட்டுவைத்திருக்கும் இன்பம் என்ற அந்த வெற்றிடத்தின் காரணத்தை அறியமுடியும் என எனக்கு தோன்றுகிறது.

ஒரு கவிதையில்…
மிகப்பெரிய மலைப் பாம்பொன்றை வரைந்தேனா
அயர்ச்சியில் அதன் மேலேயே படுத்துறங்கி விட்டேன்… 

என்கிறார் நரன், அங்கே என் தூக்கம் பறிபோனதை அவர் அறிந்திருக்கமாட்டார்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

‘காட்டில் ஒரு மான்’ (புத்தக பார்வை)

ஒரு புத்தகம் அதன் வாசிப்பாளனுக்கு எம்மாதிரியான எதிர்வினையை ஏற்படுத்தும் என்பது அவரவர் வாசிப்பு புரிதலை பொறுத்து அமைகிறது. நான் வாசித்த பல புத்தகங்கள் அதன் பக்கங்களை மட்டும் புரட்டிக்கொள்ளவில்லை..  என்னையும் புரட்டி போட்டிருக்கிறது. நிலைகொள்ளாமல் செய்திருக்கிறது. சில வரிகள் என்னில் பாதிப்பு ஏற்படுத்த நான் அதை கடந்துச் செல்வதற்காக முகநூலில் பதிவேற்றம் செய்வேன்.  இவ்வாறு அதிகமாக கவிதைகள் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மற்ற வாசகரிடமிருந்து வரும் கருத்துகள் அல்லது அவர்களின் புரிதல்கள், அதனோடு கலந்து பேசுவது இன்னும் அந்த வரியோடு நீண்ட நேரம் பயணிக்கின்ற இரு வாய்ப்பு எனக்கு அமைகிறது.

ஆனால், சிறுகதைகள், நாவல் அவ்வாறு பதிவேற்றம் செய்ய முடியாது இல்லையா… குறைந்த பட்சம் அதில் பாதிக்கும் ஏதாவது வரியை பதிவேற்றம் செய்யலாம். ஆனால், நான் தற்போது வாசித்து முடித்த அம்பையின் சிறுகதைகள், எனக்கு வேறொரு உணர்வை ஊட்டுபவையாக இருக்கின்றன. நிச்சயமாக இவை அனைத்தும் அம்பையின் ஆரம்பகால கதைகள்தான். இருந்தால் என்ன? பெண்களின் பிரச்னைகளும் அம்பை தொட்டிருக்கும் கதைக்கருவும் இன்னும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன.
அம்பையின் கதைகள் குறிப்பாக  ‘காட்டில் ஒரு மான்’ என்ற தொகுப்பில் இருக்கும் கதைகள், இக்காலப் பெண்களுக்கும் அவர்களின் வாசிப்புக்கும் இன்னும், ஏற்றவையாக அதே வீரியத்துடன் இருக்கின்றன. அம்பை என்று சொன்னால் அதிகமானவர்கள் அடையாளப்படுத்தும் கதை ‘அம்மா கொலை செய்தார்’ என்ற கதையைத்தான். ஆனால், ‘காட்டில் ஒரு மான்’ தொகுப்பில் இருக்கும் பல கதைகள் அம்பையின் எழுத்தை அடையாளப்படுத்துபவையாக இருக்கின்றன.

இதற்குமுன் நான் அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ என்ற புத்தகத்தை வாசித்திருந்தாலும், அந்தப் புத்தகம் ஏற்படுத்தாத பாதிப்பை இந்த புத்தகம் என்னில் ஏற்படுத்தியது. அதற்கு காரணம், ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதைத்தொகுப்பில் இருக்கும் பல சிறுகதைகளில் அதன்  கதாப்பாத்திரங்களில் வாழ்ந்துக்கொண்டிருக்கும்  பெண்களாக, அந்த பெண்ணாக யோகி (நான்) வாழ்ந்திருக்கிறாள் என்று தோன்றியது. என் கதையை, யாரோ எழுதி அதை நானே படிக்க நேர்ந்தால் என் மனநிலை எப்படி இருக்கும்? அந்த நிலையை பல கதைகளில் அனுபவித்தேன்.

குறிப்பாக ‘அடவி’ என்ற கதையில் வரும் செந்திருக்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமைகள் அதிகம். செந்திரு ஒரு வனப்பிரியாக இருக்கிறாள். அவளின் தேடல்கள் வனத்தை நோக்கியே இருக்கின்றன. அவள் மனதிற்கு கிடைக்கும் அமைதி வனம்தான் கொடுக்கமுடியும் என அவள் நம்புகிறாள். அவளாகவே சமாதானம் ஆகும் வரை யாராளும் சமாதானம் ஆக மாட்டேன் என்கிறாள். தனக்கென அடையாளத்தை நிலைநிறுத்துவதிலும், தன் சுயத்தை மதிப்பதிலும் அவள் காட்டும் முனைப்பு அனைத்தும் யோகியுடைய குணாதிசயங்கள். இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்வது என்றால், செந்திரு நெடுந்தூரம் நடப்பவள். யோகியும் அப்படித்தான். நடை என்றால், உடற்பயிற்சிக்காகவும், பொழுது போவதற்காகவும் நடக்கும் நடையல்ல. அது ஒரு வேள்வி நடை. தேடலுக்காக நடப்பது. என்ன தேடல் என்பது அப்போதைய நிலவரம் குறித்து மேற்கொள்ளப்படும். இப்படியாக பல இடங்களில் நான் என்னையே கண்டு கட்டுண்டு கிடந்தேன்.

‘காட்டில் ஒரு மான்’ காலச்சுவடு பதிப்பகம் 2000-ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 17 கதைகள். வெவ்வேறு சிற்றிதழ்களில் வந்தக் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நான் வாசிப்புக்கு இந்தப் புத்தகத்தை கையில் எடுத்த போது வாசித்த முதல் கதை, ‘காட்டில் ஒரு மான்’ தான். அம்பையை அதிகம் சிலாகிக்க வைத்தக் கதை.
உண்மையில் இந்தக் கதையையே புத்தகத்தின்  தொடக்க கதையாகவும் வைத்திருக்கலாம். இந்த ஒருகதையே மற்ற கதைகளை வாசிக்க தூண்டிவிடும் கோளாக இருந்தது எனக்கு.

அந்தக் கதையை வாசித்து முடித்ததும்  தங்கம் அத்தையை பற்றி என்னுள் பலவாறான கற்பனைகள் எழுந்த வண்ணமே இருந்தன. என் பள்ளி தோழி ஒருத்தி 18 வயது கடந்தும் வயதுக்கு வராமல் இருந்த சம்பவம் என்னுள் நிழலாடத்தொடங்கியது. அவள் இப்போதும் வயதுக்கு வந்தாளா என்ற கேள்வி என்னுள் எழுவதுண்டு. இந்தக் கதையின் ஒர் இடத்தில் அத்தை மான் கதையை கூற தொடங்கும்போது நாமும் உச்சுகொட்ட தொடங்குகிறோம். ‘காட்டில் ஒரு மானுக்கு’ இப்போ வயது 21. சின்னக்கதைதான் என்றாலும் இத்தனைக்கால இடைவெளிக்கு அதில் பெறுவதற்கு இன்னும் விஷயம் உள்ளன.

இந்தத்தொகுப்பில் அம்பை ‘பயணம்’ என்ற தலைப்பில் 3 கதைகளை எழுதியுள்ளார். இரண்டு கதைகள் என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால், பயணம் 3 என்ற கதை ஒவ்வொரு பெண்ணுக்கும் நெருக்கமான கதையாக இருக்கும். அதில் மருதாயிக்கு நடக்கும் சில சம்பவங்கள் கிட்டதட்ட நமது எல்லாருடைய வாழ்விலும் நடக்கக்கூடியதுதான். நகைச்சுவை பாணியில்லை என்றாலும் நகைச்சுவையாகவே கதையை நான் கடந்துச்சென்றேன். அதில் ஒளிந்து கொண்டிக்கும் வலியையும் நான் உணராமல் இல்லை.  அம்பை சம்பவங்களை கதையாக்கிய விதம் அருமை என்று நானே கூறிக்கொண்டேன்.

என்னை கவராத கதையாக ‘ஒரு எலி, ஒரு குருவி’ இருந்தது. அதன் புனைவு நன்றாக இருந்தாலும், என் மனதில் அந்தக் கதை ஒட்டவில்லை. ஒரு சம்பவமாகவும், செய்தியை சொல்வது போலவும்தான் எனக்கு இருந்தது. ஒரு வேளை, அந்தக் கதையை புரிந்துக்கொள்ளும் மொழி வேறாகக்கூட இருக்கலாம். தெரிந்தவர்கள் அல்லது அம்பையேகூட இதற்கு விளக்கமளிக்கலாம். அல்லது இந்தக் கதை அப்படிதான் என்றால், சரி; அப்படிதான்.

இந்தக் தொகுப்பில் நான் ரசித்த மற்றும் பாதித்த மற்றுமொறு கதை ‘பிரசுரிக்கப்படாத கைப்பிரதி’. இந்தக் கதையில் வரும் நாயகி திருமகளைப்போல் எல்லா பெண்களுக்கும் மனவலிமையிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.  இந்தக் கதையில் வரும் சில வரிகள்
‘எதை மீறுகிறோமோ அது முதலில் கைவர வேண்டும்’ 
'ஒரு ஆண் செய்யும்போது சரியாகத் தோன்றும் ஒன்று, ஒரு பெண் அதைச் செய்தால் பைத்தியக்காரத்தனமாக ஏன் தோன்றுகிறது’ 
உள்ளிட்ட வரிகள் இந்தக் கதைக்குள் வேறொரு கதையை உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டவையாகதான் நான் பார்க்கிறேன். முத்துமாதிரியான ஆண்களை சமாளிப்பதற்கு தனி ஒரு வலிமை பெண்களுக்கு வேண்டும்.

‘திக்கு’ என்ற கதையில் ‘லஷ்மிக்கும் ஒரு ஆதிசேஷன்’ என்ற மற்றுமொறு கதையும் இருக்கிறது. மிக நாசுக்காக உள்ளே புகுத்தப்பட்டக் கதை. பாபர் மசூதி இடிப்பையும் இந்தக் கதையில் பதிவு செய்திருக்கிறார் அம்பை. இந்தக் கதையை வாசிப்பவர்கள் அறிவார்கள் அம்மை இந்தக் கதையில் என்ன சொல்ல வருகிறார் என்று.  குறிப்பாக ‘செல்ல உறுமலா, முரட்டு உறுமலா என்று கணிக்க முடியாதபடி மெல்ல உறுமியது, சற்றுத் தள்ளி நின்றுகொண்டு, நாய் அவளைப் பார்த்தது’ போன்ற வரிகள் மேலோட்டமாக பார்க்கக்கூடியது அல்ல.

இந்தச் சிறுகதை தொகுப்பு என்னை கவர்ந்ததற்கு மேலும் சில காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இந்த தொகுப்பில் வரும் கதைச் சொல்லிகள் அனைவரும் பெண்கள். சராசரி பெண்களின் வாழ்கையில் சந்திக்கும் பிரச்னைகளை அழகாக இலக்கியமாக்குவது அம்பை போன்ற பெண்ணியவாதிகளால் சாத்தியப்பெற்றிருப்பது என்னைப்போன்ற வாசகிகளுக்கு பெருமை என்றே சொல்ல தோன்றுகிறது.
அதிக இடங்களில் அம்பை ராமாயண சம்பவங்களை இந்தக் கதைத்தொகுப்பில் புகுத்தியிருக்கிறார். மிக அழகாக மிகையில்லாமல் பயன்படுத்தியிருக்கும் விதம் அருமை. எந்த இடத்திலும் அலுப்பு தட்டவில்லை. அம்பை விவரிக்கும் காடுகள் இந்த தொகுப்பு முழுவதும் பச்சை வாசம் வீசிக்கொண்டிருக்கின்றன.

நான் புத்தகங்களை வாசித்துவிட்டு, அது என்னை பாதிக்கும்போது  ஒரு விமர்சனம் எழுதிவிட்டு அடுத்த புத்தகத்தை நோக்கி போய்விடுவேன். ஆனால், அம்பையின் இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு, நானும் இப்படி ஒரு சிறுகதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதற்காக நான் அதிகம் உழைக்க தேவையில்லை. என்னிடம் இருக்கும் அனுபவங்கள் அதற்கு போதுமானவை. இருந்த போதும், கவிதை அல்லது கட்டுரை எழுத தெரிந்த எனக்கு சிறுகதை அமையவே மாட்டேன் என்கிறது.
ஆனால்,  நான் ஒரு கதையை எழுதிவிட்டால் அதில் அம்பையின் வாசம் வீசுவதை தவிர்க்க முடியாது என நினைக்கிறேன்.  நான் எழுதும் கதையில் அம்பையின் பாணி அல்லது அம்பையின் தாக்கம்  இருக்கிறது
என்று சிலர் சொல்லக்கூடும். சொன்னால் என்ன?

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

வீதிப் போராட்டமாச் சட்டமா...


சுதந்திரம் அடைந்த பல நாடுகள் போராட்டத்தை முன்னெடுத்த பிறகுதான் அதைப் பெற்றிருக்கின்றன. மலேசியாவைப் பொறுத்தவரை 1940-களில் நடந்த பல மக்கள் போராட்டங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றன. இருந்தாலும், என் தலைமுறையில் பெர்சே பேரணிதான் மலேசியாவில் நான் பார்த்த மாபெரும் போராட்டம் என்று சொல்லலாம். அதன் பிறகு இந்தியர்களுக்கு உரிமைக் கோரும் போராட்டமாக ஹிண்ராப் போராட்டத்தைச் சொல்லலாம். அதன் பிறகு மீண்டும் பெர்சே 2.0 போராட்டம், தொடர்ந்து இத்யாதி இத்யாதிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சாங் லே காங், தான் கார் ஹிங், பாக்ரி
முக்கியத்தலைவர்கள் ஆதரவுடன் அவர்களே களமிரங்கி நடத்தும் போராட்டங்கள் ஒரு புறமிருக்க, இளைஞர்கள் படைக்கொண்ட மாணவரப் போராட்டம் மிகப் பெரிய அளவில் மலேசிய மக்களையும், உலக மக்களையும் திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பலம்கூடியதாக இருக்கின்றன. அதுவும் மலாய்க்காரர்கள் அதிகம் பங்கெடுக்கும் அல்லது மூவினமும் சேர்ந்து முன்னெடுக்கும் போராட்டம் என்றால் நாட்டையே உலுக்கும் அளவுக்கும், அமைச்சரவையே தெரிக்கும் அளவுக்கும் (எப்படித் தெரிக்கும் என்று சட்டாம் பிள்ளைபோல் கேள்வி கேட்கக்கூடாது) ஒரு பயத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன.

ஆகஸ்ட் 1-ஆம் தேதித் தலைநகர் ராஜா லாவூட் சாலையில்
நடந்த 'தங்காப் நஜிப்' அமைதிப் போராட்டம் 400-பேருக்கும் குறைவான ஆட்கள் என்றாலும் பெரிய அளவில் மலேசிய மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அதற்கு முன்பே இந்தப் போராட்டம் குறித்துச் சமூக வலைத்தளங்களில் செய்திப் பரவியது ஒரு புறமிருந்தாலும், செய்தி ஊடகங்கள் இது குறித்துச் செய்திகளை வெளியிட்டிருந்தது பலரைப் புருவம் நெளியச் செய்தது. 'மலேசியாவிக்காக' என்ற பெயரில் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப்பைப் பதிவி விலக வேண்டும் என்று சமூக ஆர்வலரும் மாணவருமான அடாம் அட்லி அப்துக் ஹாலிம் தலைமையில் அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்போவதாகக் கூறப்பட்டன. அடாம் அட்லி, சில வருடங்களுக்கு முன்பு அரசுக்கு எதிராகக் கொள்கைப் பரப்பு வேலைகள் செய்கிறார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுத் தேச நிந்தனைச் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர். இதனால், இடதுசாரிகளிடத்தில் ஒரு விரோதத்துவத்தையும் வலதுசாரிகளிடத்தில் நாளைய போராட்ட நட்சத்திரமாகவும் அடாம் அட்லிப் பிரபலமானார். ) அவரின் தலைமையில் ‘டெமி மலேசியா’ (மலேசியாவுக்காக) எனும் இளைஞர் அமைப்பு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.

 போலீஸ் இந்தப் போராட்டத்தை நடத்துக்கூடாது என்று எச்சரித்தது. இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகக் கூறியிருந்த அடாம் அட்லியை விசாரிப்பதற்காக டாங் வாங்கிப் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அடாம் அலியுடன் லென்சாக் கம்முனிகேசன்ஸ் அதிகாரிச் சுக்ரியும் சென்றிருந்தார். முன்னதாக இந்த விசாரனையின்போது கைது செய்ய மாட்டார்கள் என்று கூறப்பட்டிருந்த வேளையில், விசாரனை முடிந்து வெளியில் வரும்போது இருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.

போலீசின் இந்தச் செய்கையானது மாணவர் சமூகத்தைக் கிளர்ச்சியடையச் செய்தது என்றுதான் கூற வேண்டும். அமைதிப் போராட்டத்தை நடத்தியே தீருவோம் என்று எழுந்த மாணவ சக்தி, சனிக்கிழமை ஒரு மணியளவில் சோகோ பேராங்காடி முன்பு ஒன்று கூடத் தொடங்கினர். அதே வேளையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களும், சாலைப் போக்குவரத்துப் போலீஸ்க்காரர்களும், ஊடகவியலாளர்களும் அந்தச் சாலையை முற்றுகையிட்டிருந்தனர்.

குறிப்பிட்ட நேரம் கடந்துக்கொண்டு இருந்ததே தவிர, இவ்விதப் போரட்டமும் நடக்கவில்லை. எவ்விதக் கோஷமும் அங்கு எழவில்லை. ஆனால், பெருமளவில் கூட்டம் மட்டும் கூடிக்கொண்டே இருந்தது. அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போலீஸ்க்காரர்கள் கூட்டத்தினரைப் பார்த்துக் கலைந்துபோகக் கட்டளையிட்டனர். குறிப்பாகத் தேஜா நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லே காங், சிம்பாங் புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தான் கார் ஹிங், பாக்ரி, ஆகியோரை நோக்கிப் போலீஸ்காரர்கள் அந்தக் கட்டளையைப் பிரப்பித்தனர். 5 நிமிடக் கெடுகொடுத்தப் போலீஸ்காரர்கள் அந்த நேரம் கடந்து போகவே தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அம்மூவறையும் தொடக்கமாகக் கைது செய்து இழுத்துச் சென்றனர்.

அதன் பிறகே அங்குச் சலசலப்பு மூண்டது. மக்கள் 'தங்காப் நஜிப்' என்ற கோஷத்தை எழுப்பினர். கோஷத்தை எழுப்பியவர்களும் கைதுச் செய்யப்பட்டனர். ஒருவர் ஆபத்தானப் பட்டாசைக் கொழுத்திப் போட நிலமை இன்னும் மோசமானது. கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் நடந்துக்கொண்ட அனைவரையும் போலீஸ், கைதுச் செய்தது. ஆனால், கூட்டம் கலைவதாகத் தெரியவில்லை. 100-க்கும் மேற்பட்ட போலீஸ் அந்த மக்களை அல்லது இளைஞர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லையோ என்னவோ தெரியவில்லை மேலும் இரண்டு பஸ்களில் போலீஸ்காரர்கள் வரவழைக்கப்பட்டுக் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த மக்களைக் கலைந்து போகச் செய்யும்படி இந்தப் போலீஸ்காரர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. அவர்கள் செயலில் இறங்கினர். மாலை 4 மணியளவில் அந்தச் சாலையில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, வாகன நடமாட்டத்திற்குத் திறந்துவிடப்பட்டது.

போராட்டமே நடக்காமல், ஒரு பயங்கரப் போராட்டம் போலீஸ்காரர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு சம்பவம் இது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மலேசிய பிரதமர் நஜிப் எதிர்கொண்டிருக்கும் 1எம்டிபி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பேற்று, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்று வழியுறுத்தும் பேரணிதான் இந்த ‘தங்காப் நஜிப்’ (நஜிப்பைக் கைதுசெய்யுங்கள்) பேரணி என அடையாளப்படுத்தப்படுகிறது. அதே வேளையில், இதன் தொடர்ச்சியாகப் பெர்சே அமைப்பு மற்றும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

பார்ப்போம்! வீதிப் போராட்டம் தோற்றதாக எந்தச் சரித்திரத்தையும் நாம் இன்னும் படிக்கவில்லை. போராட்டம் கலைக்கப்படலாம். கோரிக்கைகளின் குரல்கள் நசுக்கப்படலாம். ஆனால், மாணவப்போராட்டம் ஒரு தீக்குச்சியைப்போல… உரசும் வரைதான் அதன் பேரமைதி எங்கோ ஒளிந்துக்கொண்டிருக்கும். தீப் பற்றிகொண்டால் எரிந்து சாம்பலாகும், அல்லது சாம்பலாக்கும்.

-யோகி




புதன், 29 ஜூலை, 2015

அப்துல் கலாமிற்கு முன்பும் பின்பும்


ஏ.பி.ஜே டாக்டர் அப்துல் கலாமிற்க்கு அறிமுகம் தேவையில்லை. விஞ்ஞானி, குடியரசு தலைவர், எழுத்தாளர் என பலவகைகளில் அடையாளப்படுத்தப்படுபவர்.
2002- ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக ஜூலை 25-ஆம் தேதி 2002-ல் பதவியேற்றார். ஐந்து ஆண்டுகள் மட்டுமே அப்பதவியில் இருந்த அவர் 2007-ஆம் ஆண்டு அவர் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், அவர் 'மக்களின் ஜனாதிபதி' என்று அன்போடு அடையாளமாகியுள்ளார் மக்களின் மனதில்.
இந்தியாவில் இதற்கு முன்பு அப்துல்கலாம் உட்பட10 குடியரசு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். கலாம் ஓய்வு பெற்ற பிறகு பிரதீபா பாட்டில், அதன்பிறகு  குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி அப்பதவிக்கு வந்தார். ஆனால், அப்துல் கலாமை தவிர, அவர் அளவுக்கு யாரும் பிரபலமாகவில்லை? அதற்கு கலாமின் தனிப்பட்ட ஆளுமை ஒரு காரணமாக இருந்தாலும், என்னை பொறுத்தவரையில் சினிமாவும் ஒரு காரணம் என கூறுவேன்.

‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’
“கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க
பாடுபடுங்கள்”
 என்னும் வாக்கியத்தை அப்துல் கலாம் கூறியிருந்தாலும், சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நகைச்சுவை கலைஞர் விவேக் திரைப்படங்களில்தமது நகைச்சுவை காட்சிகளில் அதை பயன்படுத்தினார். அப்துல் கலாம் என்ற பெயர், கல்வியறிவு இல்லாத பாமர மக்களையும் சென்றடைந்தது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவைத் தாண்டி உலகமுழுதும் பரவிக்கிடக்கிற தமிழ் மக்களிடத்தில் கலாம் மிக இலகுவாக அறிமுகமானார். அதற்கு சினிமா எனும் ஊடகம் பெரிய அளவில் அவருக்கு விளம்பரம் கொடுத்தது என்பதையும் மறுக்க முடியாது.

கலாமின் தாரக மந்திரங்கள் இளைஞர்களின் மனதிலும், மாணவர்கள் மனதில் வலுவாக வேரூன்ற கலாமின் தோற்றமும் ஒரு காரணம் எனக்கூறலாம். மிக மிகஎளிமையான அவரின் உடையலங்காரம் மட்டுமல்ல அவரின் சிகையலங்காரமும் தனி பாணியிலானது.
இந்தியா எனும் ஜனநாயக நாட்டை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்று பல தலைவர்கள் முயற்சி எடுத்திருந்தாலும் அதற்கான செயல்களில் இறங்கியவர் அப்துல் கலாம் என இந்திய மக்களாம் வர்ணிக்கப்படுகிறார். அதை செயல்படுத்த தொலைநோக்கு பார்வையுடனும்,
திட்டங்களுடனும் 'இந்தியா-2020' என்ற புத்தகத்தை அப்துல் கலாம் எழுதினார். அவரின் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களை நோக்கிய இலக்கை கொண்டதாக இருந்ததற்கு இந்த தொலைநோக்கு சிந்தனையும் ஒரு காரணம் என்று தாராளமாக சொல்லலாம்.

இளைய சமூதாயம் மட்டுமே வளமான இந்தியாவை மீட்டுக்கொடுக்கும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையாக அவருக்கு இருந்தது. அதனால்தான்
என் கடைசி நிமிடம் மாணவர்களுடன்தான் என்று கூறியிருந்தார். அவரின் எண்ணம் போல்தான் அமைந்தது அவரின் கடைசி நிமிடமும்.

எனக்கு அப்துல் கலாம் மீது மிக பெரிய மரியாதை இருந்தாலும், அவரின் மீது விமர்சனமும் இருக்கிறது. டாக்டர் அப்துல் கலாம் மீது உலக மக்கள் அல்லது ஈழஆதரவாளர்கள் வைக்கும் முக்கிய விமர்சனம் மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கு அவர் ஆதரவாக ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான். ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்கள், அவர் பிறந்த சொந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடததக்கது. என்னைப் பொறுத்தவரையில், தமது சொந்த நாட்டில், சொந்த நாட்டு மக்களுக்கு நடந்த கூடங்குளம் அணுவுலை பிரச்னை வந்தபோது அவர் ஒரு விஞ்ஞானியாக மட்டுமே நடந்துக்கொண்டார். தம்மக்களின் கண்ணீரும் கோரிக்கையும் மனிதாபிமான ரீதியில் எந்த ஒரு இரக்கமும் அவருக்கு ஏற்படவே இல்லை. அதனால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பேராபத்துக் குறித்தும் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. மேலும், அது சார்ந்த குரலை கேட்கவும் கலாம் மறுத்துவிட்டார் என்று அங்கிருந்து கிடைப்பெற்ற பத்திரிகை செய்திகள் என் வரையில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. ராணுவ துறையின் மேம்பாட்டுக்கு மட்டுமே அவரின் முழு ஆராய்ச்சியும் உழைப்பும் இருந்தது. அவர் அக்னி பறவையாகவும், ஏவுகணைகளின் மன்னனாகவும் இருந்துவிட்டு போகட்டும். அதற்காக,காட்டை வேக விடுவதற்கும், வெந்து தனிப்பதற்கும் விளிம்பு நிலை மக்களின் உயிர் அத்தனை மலிவானதா? இந்த ஆதங்கம், பெரும் ஏமாற்றத்தை என்னில் ஏற்படுத்தியிருந்தது.

நான் அப்துல் கலாமின் சுயசரிதையை தனியாக படிக்கவே இல்லை. தும்பி எனும் சிறுவர் அறிவியல் இதழுக்காக சந்துரு அப்துல் கலாமின் ஓவியங்கள் வரைய வேண்டியிருந்தது. அதில் ராமேஸ்வரத்தில் கலாம் பிறந்தது முதல், அவர் அடைந்த சாதனை வரை சில படங்களை வரைய வேண்டும். வரைந்த ஓவியங்களை என்னிடம் காட்டியபோது அதில் கலாமுடைய மாணவர் பருவம்தான் என்னை மிகவும் ஈர்த்தது. காரணம், கலாமும் என்னைப் போல் மாணவர்ப் பருவத்தில் குழந்தைகளின் இயல்பு நிலையை தொலைத்தவராக இருந்திருக்கிறார். ஆனால், அவரின் விளையாட்டு மொத்தமும் கல்வியாகவே இருந்தது.
கலாமின் வாழ்க்கை மொத்தமும் சில ஓவியங்களில், மாணவர்களை கவரும் வகையில் சந்துரு வரைந்திருந்திருந்தது அவருக்கு மட்டுமல்ல எனக்கும் கலாமோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இன்று அப்துல் கலாம் என்ற சாதனையாளர் நம்மோடு இல்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.  இந்த நூற்றாண்டில் நாம் என்னென்ன இழக்கப்போகிறோம் என்பதுதெரியாது.
ஆனால், இந்த இழப்பை யார் கொண்டும் ஈடுச் செய்ய முடியாது.
டாக்டர் அப்துல் கலாம் 'எண்ணத்தில் நலமிருந்தால் கனவு தமிழகம் உருவாகும்' என்ற தலைப்பில் ஒரு படைப்பை எழுத்திக்கொண்டிருந்தார் என்றும் அந்தப் புத்தகத்தை முழுமையாக எழுதி நிறைவு செய்யாமலேயே இப்பூவுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்ற தகவல் உலக மக்களை வேதனையில்ஆழ்த்தியுள்ளது.

'ஒரு முறை வந்தால் அது கனவு,
இரு முறை வந்தால் அது ஆசை
பலமுறை வந்தால் அது லட்சியம்'

 -அப்துல் கலாம்

(நன்றி, 28.7.2015 தினக்குரல் மலேசியா)

புதன், 15 ஜூலை, 2015

சாவுகளால் பிரபலமான ஊர் (புத்தக விமர்சனம்)

சில புத்தகங்கள் முதல் வாசிப்பிலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து அந்தப்புத்தகம் நம்மை நிலைக்கொள்ளாமல் செய்யும்போது, அந்த தாக்கத்தையும்- மனதில் ஏற்படுத்தும் தாக்குதலையும் ஒரு வாசகம் பதிவாக எழுதியோ, நண்பர்களுடன் விவாதித்தோ, குறைந்த பட்சம் முகநூலில் பதிவேற்றம் செய்தோ அதன் தீவிரத்தை தனிக்க முயல்கிறான். அதே புத்தகம் இரண்டாவது முறையாக வாசிக்கப்படும்போது ஏற்படும் புரிதலும், மீண்டும் மீண்டும் அலைகளைந்து கவிஉருவம் கொடுக்கும் படைப்பாளனின் கவிநிலையையும் உணர்ந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அடுத்தடுத்த வாசிப்புகளில் கவனிக்க தவறிய மற்ற விஷயங்களும் நமக்கு கண்ணுக்கு தெரியலாம். 

மிக அண்மையில் நான் மேற்கொண்ட இலங்கைப்பயணத்தில் சில இலங்கை தமிழ் பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் சில கிடைக்கப்பெற்றேன். இலங்கை எழுத்துகளும் புத்தகங்களும் எனக்கு அப்போதுதான் பரிட்சயம் என்று இல்லை. அது என்ன இலங்கை எழுத்து? என்று கேட்கலாம். உண்மையில் அப்படி சொல்வது ஒரு தவறான கண்ணோட்டமும்கூட. அது தமிழ் எழுத்துதானே? இன்னும் சொன்னால், அது இன்னும் தீவிர எழுத்து இல்லையா? ஆனால், சொற்களை பிரயோகிக்கும் விதத்தில் அவர்களின் சொல்லாடல்கள் கொஞ்சம் மாறுபடத்தானே செய்கிறது?

ஓர் உதாரணம் சொல்கிறேன். “நீங்கள் இன்று இங்கு நிற்கவில்லையா?” என்றால் “நீங்கள் இன்று இங்கு தங்கவில்லையா?” என்று அர்த்தமாகிறது. இப்படியான சின்ன சின்ன மொழிபுரிதல் எனக்கு இலங்கை தமிழின் வித்தியாசத்தை உணர்த்தியதோடு புதிய அனுபவத்தையும் கொடுத்தது.
நான் முதல் முதலில் படித்த இலங்கை படைப்பு எது என்று கேட்டால், எனக்கு கொஞ்சமும் ஞாபகமில்லை. அதோடு இதுவரை எத்தனை படைப்புகள் படித்திருக்கிறீர்கள் என்று கேட்டாலும் என்னால் சட்டென பதில் சொல்ல முடியாது.

ஆனால், தர்மினியின் ‘சாவுகளால் பிரபலமான ஊர்’ என்ற புத்தகம்தான் நான் முதன் முதலில் படித்த இலங்கை அல்லது புலம்பெயர்ந்தவர்களின் கவிதை தொகுப்பாகும். அந்த கவிதை தொகுப்புக் குறித்து நான் சில வருடங்களுக்குமுன் வல்லினம் இணைய இதழில் எழுதியிருக்கிறேன்.
தற்போது, இலங்கை பெண் எழுத்தாளர்களின் கவிதை தொகுப்புகளை வாசித்து ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கையில், தர்மினியின் ‘சாவுகளால் பிரபலமான ஊர்’ கவிதை தொகுப்பை மீண்டும் மறு வாசிப்பு செய்தேன்.

போர் சூழல் இப்போது இலங்கையில் இல்லாவிட்டாலும்கூட, அதன் தீ அணைந்துவிட்டது என்று என்னால் முழுதாக நம்பமுடியவில்லை. அதன் தொடர் போராட்டம், நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை நோக்கி திரும்பியிருக்கிறது. தர்மினியின் இந்த கவிதை தொகுப்பு, போர் நிறுத்தத்திற்கு முந்தியவையாக இருந்தாலும், அவரின் எழுத்துகள் பல இடங்களில் போருக்கு சாட்சியம் கூறுவதைப் போன்றே உள்ளது. தொகுப்பிலுள்ள சில கவிதைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன.

2011-ஆம் ஆண்டில் தர்மினியின் புத்தகத்திற்கு நான் எழுதிய விமர்சனம்... 

‘சாவுகளால் பிரபலமான ஊர்’ பற்றி எழுதுவதே எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது. முதலில் தொகுப்பின் தலைப்பே என்னை அதனுள் நெருங்க விடாமல் பயமுறுத்தியது. ஒவ்வொரு முறையும் எப்படித் தொடங்கலாம் என்று தொடங்கி தொடங்கியே பல காகிதங்கள் கசக்கி எறியப்பட்டன. கவிதைப் பற்றிய விமர்சனத்தை எழுதுவது இது எனக்கு முதல் முறை இல்லை. எனினும் தர்மினியின் கவிதைகளை அத்தனை சுலபமாக என்னால் விமர்சித்து விட முடியவில்லை. அதை எழுதுவதற்கு சரியான சொற்கள் தேவைபடுகிறது. அவ்வாறான சொற்களை சரியான இடத்தில் பயன் படுத்திக்கொள்ள எனக்கு பொறுமை தேவைப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக அக்கவிதைகளை கிரகித்துக்கொள்ள எனக்கு வலிமை தேவைப்படுகிறது.

'சாவுகளால் பிரபலமான ஊர்', இதை விவரித்து சொல்வதென்றால் பிணங்களால், மரணங்களால் பிரசித்திப்பெற்ற நகரம். அல்லது மாநிலம் அல்லது நாடு. எவ்வாறான மரணங்கள்? நோயால் அல்லது விபத்தால் அல்லது இயற்கையால் ஆன மரணமா? இல்லை. எப்படியெல்லாம் நிகழக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்ந்த மரணங்கள். எப்படியெல்லாம் பிணமாகக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்த்திக்காட்டிய கொடூரங்கள். அதற்குப் பெயர் போன ஊர் அது. வன்கொடுமையையும், வக்கிரத்தையும் அப்பாவி பொதுமக்கள் மீதும் போராளிகள் மீதும் பிரயோகித்து,  பிணங்களை சம்பாதித்து பிரசித்திப்பெற்ற ஊர்.

அந்த ஊரில் பிறந்து வளர்ந்து போரின் கசப்பான அனுபவங்களோடு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் தர்மினி தன் இறந்த காலங்களுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில்,  கவிதை தொகுப்பின் வடிவில் நமக்கு உருவம் தந்திருக்கிறார். போரின் ஆறாத காயங்கள், நட்பு, காதல், ஆணாதிக்கம், அரசு திட்டங்கள் என அதனதனில் பட்ட காயங்களை கவிதையாக சமைத்து நமக்கு உண்ண கொடுத்திருக்கிறார். 50 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் பக்கத்துக்கு பக்கம் வெறுமையும், துயரமும் அவரின் கோபமும் போர் சூழலையே பேசிக் கொண்டிருக்கின்றன.

யுத்தத்தில் பாதிக்கப்படும் உடைமைகளையும் சொத்துக்களையும் உயிரைக்கொண்டு மதிப்பிட முடியாது. ஆனால்யுத்தங்கள் தின்று தீர்க்கும் வீடுகளைப் பற்றிய கவலையோடு ஓடுபவர்கள் நத்தையின் கூடு போன்ற வீடொன்று முதுகில் இருந்தால் எளிதாக இருக்கும்’ என்று வெம்புகிறார்கள்.

“குண்டுகள், துப்பாகிகள்,
வேவுக்கண்கள் சொல்லுகின்றன
வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்என்றும்
“நத்தையின் கூடு போன்ற
வீடொன்றை நினைத்து வெதும்பியபடியே
ஏதோ ஓரிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள்
 

என்று முடிவடையும் கவிதை கையறுநிலையாய் ஏற்படும் தவிப்பையும் நமக்கும் ஏற்படுத்துகிறது.

வீடுகளில் சுகமாக வாழ்ந்து பழகி விட்ட, சுகபோக நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நத்தை போன்றதொரு வீட்டையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது அல்லவா?  ஆனால் பாதுகாப்புக்கூட துணை நில்லாத வீடுகளைப் பற்றிய துயரத்தை என்றாவது நாம் நினைத்து பார்த்திருப்போமா?

அடக்கம் செய்ய முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பிணங்களை தூக்குவதற்கு ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பெரியவர்களின் குமுறல்களை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. ஆனால் கவிதையாய் சொல்கிறார் தர்மினி இப்படி. 

“சுடுகாற்றுத் தாழைகளிலிருந்து
நாகங்கள் தப்பித்தோடியிருக்க
கல்லறைப் பூவரசுகளின் நிழலில்
அடையாள அட்டைகளைக் கைகளிற் பொத்தியபடி

பிணந்தூக்க எவருமற்று
கிழவர்களும் கிழவிகளும் கால் நீட்டிக்காத்திருப்பர்.

சிதைவடைந்த ஊரில் செழித்துக்கிடைப்பவையே சுடுகாடும்
இடுகாடும்”

இந்த கவிதைத்தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த வரியே இதுதான். ஆனால், சுடுகாடும் இடுகாடும்கூட வீரத்தின் அடையாளம் என இடித்து, இல்லாமல் செய்த சிங்கள அரசின் தார்மீகத்தை, எப்போதும் வரலாறு தன்குறிப்பிலிருந்து அகற்றிக்கொள்ளாது.

பெண்ணியம் பேசும், பெண்கள் எழுதும் கவிதைகள் அவர்களின் உறுப்பைக் கொண்டாடியபடியே இருக்கிறன. அதைத்தாண்டி இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சிலர் வெவ்வேறு பாடுபொருள் கொண்டு கவிதை வரைந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தன் சுயத்தைதான் பாடுகிறார்கள் என்ற பொது கருத்து ஒன்று பெண் கவிகள் மீது உண்டு. தொகுப்பில் தர்மினியும் உறுப்பை பேசுகிறார் இப்படி...

“சொறி பிடித்த தொடைகள்
மலமாய் நாறும் வாய்கள்
அழுக்காக மடிந்த வயிறுகள்

நெளிந்த குறிகள்
உங்கள் நிர்வாணங்களை ஒரு தடவை பார்த்து வெட்கி
மற்றுமொருத்திக்குக் காட்டாது
பொத்தி வையுங்கள்...”


என்று முடிகிறது கவிதை. இராணுவச் சிப்பாய்கள் ஈழத்து சகோதரிகளுக்கு செய்த வன்கலவிக்கும், சித்திரவதைகளுக்கும் கொடூரக் கொலைகளுக்கும், அழிக்கமுடியாத சாபத்தைச் சுமந்துக்கொண்டுதான் வாழ நேர்ந்திருக்கிறது. செத்துப்போன கன்றைச் சுற்றி நின்று பிய்த்து தின்னும் ஓநாய்களாகவும் மரபு அற்றவர்களாகவும் அவர்களை கவிதையின் வழியாக சீறுகிறார் தர்மினி.
 சிங்கள சிப்பாய்களின் குடும்பத்துப் பெண்கள் தன் வீட்டு ஆண்களின் வருகையை எதிர்ப்பார்ப்பதை இப்படி விவரிக்கிறார்...

ஒருத்தி தன் சகோதரனின் நலம்விசாரித்து கடிதம் எழுதுகிறாள்.
பிரிவை தாங்க முடியாமல் காதலி கண்ணீர் வடிக்கிறாள்.
தன் காதலைச் சொல்வதற்காக மற்றொருத்தி சிப்பாயின் விடுமுறையை எண்ணி வாசலையே பார்த்துக்கொண்டிருகிறாள்.
அவனின் மகள் அப்பன் கொண்டு வரும் பரிசு பொருட்களையே நினைத்துக்கொண்டிருக்கிறாள்.
மனைவி நித்திரையற்ற தன் இரவுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறாள்.
அவனின் தாய் சாவுக்காவது வருவானா என்று கலங்கிய படி இருக்கிறாள்.

அந்தச் சமயத்தில் அவன் போரில் ஏதோ ஒரு பெண்ணை வன்கலவிச் செய்து, கொன்று மண்ணை போட்டு மூடிக்கொண்டிருக்கிறான். அல்லது அந்த நிர்வாண உடலை புகைப்படமெடுத்து வஞ்சம் தீர்த்துக்கொண்டிருப்பான். உண்மையில் சிங்களச் சகோதரிகளின் அன்புக்கும் நேர்மைக்கும் பாத்திரமற்றவர்கள் இந்தச் சிங்களச் சிப்பாய்கள். நம்பிக்கை துரோகிகள் என்றும் இவர்களை தாராளமாக சொல்லலாம்

ஈழப் போர் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு மற்றவர்களை விட அதில் பெரும் பாதிப்படைந்தவர்கள் குழந்தைகள்தான். அவர்களின் சிரிப்பும், குழந்தை தனமும், குழந்தை பருவமும் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விளையாட்டுகள் பலவந்தமாக களவாடப்பட்டிருக்கிறது. புத்தகம் ஏந்தும் கைகளில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. கருவறையில் வளரும் குழந்தைக்கும் போர் பற்றிய பயம் அல்லது எதிர்காலத்து போராளி நீ என ஆருடம் ஊட்டப்படுகிறது. இந்த விடயத்தை பேசுகிற கவிதை தர்மினியின் இந்தத் தொகுப்பில் மிக முக்கியமானதாகும்.

“ஐந்து மாதக் கருவும் போருக்குத் தேவையாம்
இனி எம் கர்ப்பங்கள் கண்காணிக்கப்படும்

சில மாதங்களான குழந்தைகளை நோக்கியும் 
சில வருடங்களான சிறுவர்களைக் குறிவைத்தும்
தாயின் கதறலை வென்ற 
துப்பாக்கிகளின் ஓசைகள்”


என்று தொடர்கிறது கவிதை. அதிகாரம் கொண்ட வெறி கொண்டவர்கள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் தீவின் திசை எங்கும் வெறி கொண்டவர்களாகவே அலைவதை கவிதையில் காணப்படுகிறது. “ஓடி விளையாடுப் பாப்பா” என்று பாரதி சொன்ன கவிதைக்கெல்லாம் அங்கே வேலை இல்லை. “செய்து முடி. அல்லது செத்து மடி” என்பதுதான் எழுதாத 
விதியாக உள்ளது

கடிதம் எழுதாத நண்பனுக்கு முகவரி கொடுக்கும் கவிதையும் (பக்கம் 26), தீர்ந்து போகாத காதலைப்பற்றி பேசும் பெண்ணின் மனநிலையிலான கவிதையும் (பக்கம்30) மீண்டும் மீண்டும் போரினால் மாறிப்போன பிம்பங்களையே நம் கண்முன் நிறுத்துகிறது. இவரது கவிதைகள் ஆதங்கங்களை மட்டும் அல்ல வரலாற்று பதிவுகளும் அவற்றுடனான அவரின் இருப்பையும் இணைத்திருக்கிறார்.

கணவனின் ஆணாதிக்கத்தை ஆற்றாமையுடன் தனக்குள்ளோ அல்லது பயந்து பயந்து மற்றவருடமோ கேள்விக்கேட்கும் பெண்கள் எங்கும் உண்டு. எல்லாரது பெண்கள் வாழ்க்கையிலும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் இது. மேலோட்டமாக இதை பார்க்கும் போது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அதனால் ஏற்படும் மனஉளைச்சலையும், மனஅழுத்தத்தையும் திரண் இல்லாத அல்லது பலவீனமான பெண்களால் எங்கு கொண்டுபோய் கழுவ முடியும்? 

“சுற்றியிருக்கின்ற நான்கு வீடுகளும்
சற்றுக் கதவு திறந்து பார்த்தன.
கணவன் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறான்
காதடைக்க வாயடைத்து நின்றேன்.

மறுநாள் மெதுவாக வந்தானவன்

இன்று உரத்துக் கத்திட முடியாதவன் போல
மெல்லச் சொன்னான்
"மன்னித்து விடு"
என் ஒரு காதுச்சவ்வும் அதிராத அவ்வசனம்
எட்டிப் பார்த்த அத்தனை வீடுகளுக்கும் எப்படி கேட்கும்?”


என்று முடியும் இந்த கவிதை தர்மினியின் துல்லியமான பெண்ணியப் பார்வையை காட்டுகிறது. இது ஆண்களிடத்தில் இன்றும் தொடரும் அதிகாரமல்லவா? இந்தக் கவிதையை எப்போது படித்தாலும் கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி ஏற்படுத்திவிடும்.  

இந்தத் தொகுப்பில் என்னை பாதித்த மற்றுமொரு கவிதையாக 'அகமும் புறமும்'  (பக்கம் 37) என்ற கவிதை உள்ளது. நான் எத்தனை பலவீனமானவள் என்று என்னை சுட்டிய கவிதை அது. மன்னித்தலும் மறத்தலும் மனித மாண்பு எனப் படும்போது, மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல், சதாக் கொல்லும் போரின் நினைவுகளை எப்படி உரித்துப்போடுவது? எங்கு போனாலும் எப்படி இருந்தாலும் சாவுகளால் பிரபலமான ஊரில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளம் பின்தொடர்வதை யாராலும் அறுத்துப்போட முடியாது இல்லையா?

“எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்

நீரால் நிலத்தால் பிரிந்த துயரில்
வேலை முடிந்து வெந்நீரிற் குளித்து
நேரம் ஒதுக்கிப் பேச
மதுவை ஊற்றி மேசை நிறைத்து
மசாலாவுடன் மாமிசங்கள் மற்றும் மலர்க்கொத்துக்களுடன்
அவ்வப்போது வாதங்களைக் குரோதங்களை வீசி
முடிவிற் சில பாடல்களாற் தீர்ந்திடும்

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்...” 


ஈழத்துப்போரின் அவலங்களை விதவிதமாக பேசியாகிவிட்டது. பக்கம் பக்கமாக எழுதியாகியும் விட்டது. நாளுக்கொரு காணொளியாக வந்த வண்ணமே உள்ளது. பாதிப்படைந்தவர்களை விட மற்றவர்க்கு அது ஒரு சேதிதான். “அச்சச்சோ” என்று வேதனையைத் துப்பிவிடும் சேதிகள். அதிக பட்சமாக பண உதவியோ அல்லது இலங்கை அரசுக்கு எதிராக இணையத்தில் வாக்குகளோ.... அல்லது.... இங்கிருந்தபடி விடுதலை போராளிக்கான நியாயங்களை கூட்டம் போட்டு பேசவோ மட்டும்தான் எங்களால் முடியும். சாவுகளால் ஓர் ஊர் பிரபலமாகிக்கொண்டிருக்கும் போது நாங்களும் திராணியற்று சுடச்சுடச் சேதிகளை எதிர்பார்த்துக்கொண்டு உயிரோடுதான் இருந்தோம்.

தர்மினியின் இந்தப் புத்தகம் 2010-ஆம் ஆண்டு, கருப்பு பிரதிகளால் பதிப்பிக்கப்பட்டது.