புதன், 17 ஜூலை, 2019

'மா மேரி' பழங்குடியினர் ஒரு நோக்கு-கட்டுரை



கோலாலம்பூரிலிருந்து நெடுங்சாலை வழியாகப் பயணித்தால் சரியாக ஒரு மணி நேரத்தில் சென்றடைகிறது கேரி தீவு. நம்மவர்கள் பெரிதும் கவனிக்காத இடங்களில் கேரி தீவும் ஒன்று. கேரி தீவில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். செயற்கைக்கு இருக்கும் வெகுமதி, இயற்கைக்கு இருப்பதில்லை என்பதற்குக் கேரி தீவு நல்ல உதாரணம். மிக அருகிலேயே இருந்தும், நான்கூடக் கடந்த மாதம் வரையில் அந்தத் தீவுக்குப் போனதில்லை.
பூர்வக்குடிகளின் கிராமங்கள் அங்கிருக்கிறது என்ற தகவல் தெரிந்திருந்தும்கூட அங்குச் செல்வதற்கான வாய்ப்பு எனக்கு ஏற்படவுமில்லை; வாய்ப்பை நான் ஏற்படுதிக்கொள்ளவுமில்லை. ஏதோ ஓர் ஆர்வம் உந்தித்தள்ள திடீரெனக் கேரி தீவுக்குக் கிளம்பிச் சென்றேன்.


நாடே நோன்பு நோற்றிருந்த அந்த நேரத்தில், சாலை நெரிசல் எதுவுமில்லாத காலை வேளையில் தலைநகரிலிருந்து சரியாக ஒரு மணி நேரத்தில் கேரி தீவை சென்றடைந்தது எங்களின் வாகனம். பேர்ட் கிள்ளான் சாலை மற்றும் பந்திங் போவதற்கு முன்பாகவே இருக்கிறது அழகிய கேரி தீவு. 32 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பளவு கொண்டது இந்தத் தீவாகும். சிங்கப்பூரின் மொத்த பரப்பளவில் ஐந்தின் ஒரு பகுதி இது எனக் கணிக்கப்படுகிறது. 1990-களில் குட்டி குட்டி கிராமங்களும் பட்டணங்களும் எப்படி இருந்தது என நினைவு படுத்திக்கொள்ள விரும்பினால், கேரி தீவுக்குப் போய்வரலாம்.
காட்டில் தன் சொந்த வரையரையில் வசிக்க வேண்டிய பூர்வகுடி மக்கள் தற்போது சராசரி மலேசிய மனிதர்கள் வாழ்ந்து முடித்த 90-கள் வாழ்கையைக் காட்டிலிருந்து வெளிவந்து வாழ தொடங்கியிருக்கிறார்களோ என்ற எண்ணம் பார்ப்பவர்களுக்கு எழாமல் இருக்காது.



மிகப் பெரிய அளவில் செம்பனை உற்பதி செய்யப்படும் இடங்களில் அந்தத் தீவும் ஒன்று என்பதை நாம் பயணத்தின் போதே அனுமானிக்க முடியும். அழிக்கப்பட்ட கன்னிக்காடுகள் ‘சைம் டர்பி’ நிருவனத்தின் செம்பனை தோட்டங்களாக உருமாறி, நீர் நிலைகளுக்குப் பஞ்சமில்லாத அங்குச் செழித்து வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கூடவே லஙாட் ஆறும், கேரி தீவின் கடற்கரையும் இந்தச் செம்பனை தோட்டங்களுக்கு வழு சேர்த்துக்கொண்டிருக்கின்றன.
நான் அங்குச் சென்றதற்கான முதன்மை காரணமே அங்கிருக்கும் பூர்வக்குடிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்குதான். தற்போது ‘சைம் டர்பி’ நிறுவனதின் செம்பனை தோட்டங்களுக்குப் பெயர்போன இடமாக இந்தக் கேரி தீவு மாறியிருந்தாலும், அங்கு வசிக்கும் ‘மா மேரி’ இனத்தைச் சேர்ந்த பூர்வகுடிகளைத் தவிர்த்துவிட்டு கேரி தீவின் வரலாற்றை எழுதவே முடியாது.
மலேசியாவில் மூன்று பிரிவுகளில் வசிக்கும் 18 இன பூர்வக்குடிகளில் செனோய் பிரிவைச் சேர்ந்த இந்த இனத்தவர்கள் கடற்சார்ந்த வாழ்க்கை வாழும் பூர்வகுடிகளாவர். முதலாம் உலகப்போரின் தொடக்கத்திலிருந்து இவர்கள் கடல் மற்றும் கடற்சார்ந்த நிலத்திலிருந்து (காட்டிலிருந்து) வெளிவர நேர்ந்தது என்று தெரிவித்தார் நான்அங்கு சந்தித்த பூர்வக்குடிகளில் ஒருவரும், முகமூடிகள் செய்யும் கலைஞர்களில் ஒருவரான ஏலியாஸ் என்பவர்.


காலணிய அதிகாரியான Edward Valentine John Carey நினைவாக அவரின் பெயரையே இந்தத் தீவுக்குச் சூட்டப்பட்டுள்ளது. ரப்பர் மற்றும் காப்பி உற்பத்தியை அங்கு வேலாண்மை செய்து, அதை 100 ஆண்டு வெற்றிக்கு வழிவகுத்த அவரின் பெயரை அந்தத் தீவுக்கு வைத்ததில் ஆச்சரியமில்லைதான். ஒரு காலத்தில் ரப்பர் உற்பத்திக்காக நிறைய இந்தியர்கள் அங்குக் கூலி தொழிலாளியாக இருந்துள்ளனர். கேரி தீவு தற்போது ‘சைம் டர்பி தீவு’ எனப் புதிய பெயருக்கு மெல்ல மெல்ல மாறி வருவது வெளி உலகிற்கு இன்னும் தெரியவில்லை.


‘மா மெரி’
பூர்வக்குடிகளின் மொழியில் Mah என்றால் மக்கள், Meri என்றால் வனம் என்று பொருளாகிறது. மலேசியாவில் மூன்று பிரிவுகளில் இருக்கும் 18 இன பூர்வக்குடிகளில் இவர்களுக்குத் தனிச் சிறப்புகள் உண்டு.
கடல் சார்ந்த வாழ்க்கையைக் கொண்டிருந்த இந்தப் பூர்வக்குடிகளுக்கு ஒரு சமயத்தில் கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதல்களால் பிரச்சனை எழுந்தது. பாதுகாப்பை நாடிய அவர்கள், தீவின் உள்பகுதியில் குடியேறினார்கள். அவர்கள் தடம்பெயர்ந்த சுவடுகளைப் பிறர் அறியாவண்ணம் சிலந்தி வலைக்களங்களை அமைத்ததுடன், இவர்களின் தொல் உறைவிடம் என அடையாளம் காண்பிப்பதற்குச் சில அடையாளைங்களை வைத்து, பாதுகாத்தனர் அம்மக்களின் மூதாதைகள்.
அதே முன்னோர்கள் ஆரம்பத்தில் தாயகம் திரும்புபவர்க்கான வாழிடம் எனவும் பின்னர் அதற்கு அருகாமையில் வசிப்பதற்குரிய வீடுகளாகவும் கட்டமைத்தனர். பூர்வக்குடிகள் புனித மலையான Sok Gre மலையிலிருந்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் சடங்கு நிகழ்வுகளுக்கான கச்சாப் பொருட்கள், வைத்திய சிகிச்சை மற்றும் உணவுக்கான மூலிகைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்கின்றனர். இம்மலையானது அத்தீவின் அட்சய பாத்திரமாகவே இருக்கிறது.
மூதாதையர்களை வழிபடும் இவர்கள் அவர்களின் உத்தரவின்றி எதையும் செய்வதில்லை. ஆவிகள் வழிபாடு என்பது உலகப் பூர்வக்குடிகளில் முதன்மையானது என்றாலும் அது இனத்திற்கு இனம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது என்பதை ஆராய்ந்தால் நம்மால் கண்டு கொள்ள முடியும். அந்த வகையில் மா மெரி இனத்தில் முன்னோர்கள் வழிபாட்டுத் தளத்திற்குத் தனியிடம் உண்டு.


மூதாதையர்களை வழிபடும் இடத்தில் ஓலையினால் வேய்த இரண்டு தொட்டிகளைத் தொங்க விட்டிருக்கின்றனர். வழிபாட்டுக்குப் பிறகு வைக்கப்படும் கோரிக்கை அல்லது அவர்கள் தேவை எதுவாக இருந்தாலும் வேண்டிக்கொண்டு பின் அது நிறைவேறிய பின், மூதாதையர் கேட்பது எதுவாக இருந்தாலும் அந்தத் தொட்டிலில் காணிகையாக வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் மிகுந்த பயபக்தியுடன் இருக்கிறார்கள். இந்த வழிபாட்டின் போது மூதாதையர்களின் ஆவி, யார் மீதாவது இறங்கி பேசுகிறது. எதுவாக இருந்தாலும் அவர்கள் முன்னோர்களின் உத்தரவை பெற்ற பின்பே எதையும் செய்யத் துணிகிறார்கள். தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்தது ஒப்புக்கொண்டது உட்பட அந்த உத்தரவின் பேரில்தான்.
அங்கு வரும் விருந்தினர்களை வரவேற்க அவர்கள் கொட்டாங்கட்சியினால் ஆன கரண்டியால் , மண் தொட்டியில் மந்திரித்து வைத்திருக்கும் புனித தண்ணீரை அள்ளி நமது காலில் ஊற்றி, சுத்த படுத்துகிறார்கள்.(தூய்மையாக்கிக்கொள்வது நமது அகத்தையா புறத்தையா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.) பின், ஓலையில் செய்த தலை கவசத்தை மரியாதை நிமித்தமாக வருகையாளர்களுக்குச் சூட்டி கௌரவப்படுத்துகிறார்கள்.
அவர்களுடைய திருமணச் சடங்குகள் குறித்துப் பேசும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அவர்களின் பாரம்பரிய உடை, நகை ஆபரணங்கள் அனைத்துமே பெருவாரியாகப் பனை ஓலையில் செய்யப்பட்டதாக இருக்கிறது. ஆனால், அவை மிகுந்த வேலைப்பாடுகளுடன் மிக நேர்த்தியான முறையில் அழகாகச் செய்யப்பட்டுள்ளன. அதற்கான பயிற்சிகளை அவர்கள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொண்டே இருப்பதுடன் அடுத்தத் தலைமுறையினர் இந்தக் கலாச்சாரத்திலிருந்து விடுபடாமல் இருக்கக் குழந்தைப் பிராயம் முதலே ஆண்-பெண் பேதமில்லாமல் கற்பிக்கப்படுகிறது.
திருமண நாளில், திருமணம் நடைபெற்று முடியும் வரை மணப்பெண்ணும் மாப்பிளையும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாது. திருமணச் சடங்குகளில் தனக்காக நிச்சயித்திருக்கும் ஜோடியை, மணமகன் சரியாக அடையாளம் கண்டு பிடித்துச் சொல்லுதல் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. உதாரணமாக மணப்பெண்ணானவள் தனது தோழிகளுடன் குடிசையில் இருக்க அவர்கள் ஒரே நேரத்தில் கைகளை மட்டும் வெளியில் நீட்டுவார்கள். மண மகன் அந்தச் சிறிய குடிசையை நான்காவது சுற்று முடிவதற்குள், மணமகளைச் சரியாக அடையாளம் கண்டு சொல்லிவிட வேண்டும். இல்லையேல் இதே சடங்கு சற்று கடினமாக்கப்பட்டும் திரும்பவும் நடத்தப்படும். இது சடங்கு என்றாலும் விளையாட்டாகவும் கிண்டலும் கேலியுடனும் நடத்துகிறார்கள்.
கடல் பூஜை :
மா மெரி இனத்தவர்களின் பெரிய திருவிழாவானது பிப்ரவரி மாதத்தில் வருகிறது. கடல் மாதாவிற்கு அவர்கள் விழா எடுத்து பூஜை செய்கிறார்கள். மூதாதையர்கள் ஆத்மாக்கள் அவர்கள் வசிக்கும் கிராமத்தின் காப்பாளராக விளங்குவதால், ‘மூதாதையர்கள்’ விழாவை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுப்பதுடன் அதற்கான விழாவை கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். சூரிய உதயத்தில் சிறு குழுவினராகப் படகில் சென்று ஆற்றில் அரிசியைத் தூவி நெய்வேத்தியம் சமர்பிக்கின்றனர். பின் சில சடங்கு சம்பிரதாயங்களுக்குப் பிறகு, அவர்களின் பாரம்பரிய முகமூடி நடனம் ஆடப்படும். முகத்தில், மர முகமூடிகள் அணிந்து பனை ஓலை உடையணிந்து, அவர்கள் கலாச்சார நடனமானது காண்பவரை வியப்பிலாற்றக்கூடியதாக இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த மாபெரும் விழாவைக்காண்பதற்கு வெளியிலிருந்து வரும் பூர்வக்குடி அல்லாதவர்களும் சுற்றுப்பயணிகளும் முன்பதிவு செய்து கட்டணமும் செலுத்த வேண்டும்.


மா மெரியின் முகமூடிகள் :
சுமார் 700 வடிவ முகமூடிகளை இந்தப் பூர்வக்குடிகள் ஒரு காலத்தில் செய்துக்கொண்டிருந்தனர். கிட்டதட்ட 100 கலைஞர்கள் இந்த முகமூடிகளைச் செய்வதில் வல்லுனர்களாக இருந்திருக்கின்றனர். ஒவ்வொரு முகமூடியும் ஒரு முன்னோரை குறிப்பதாக அவர்களின் நம்பிக்கை இருந்தது. தற்போது 100 வடிவங்களில் முகமூடிகள் செய்யப்படுவதாகவும் அதைச் செய்ய முப்பதுக்கும் குறைவான தேர்ச்சி பெற்றவர்களே இருக்கிறார்கள் என்றும் இப்பழங்குடி இனத்தின் நடன கலைஞரும் முகமூடி செய்யும் கலைஞர்களில் ஒருவரான ஆலியாஸ் மற்றும் ஷாருல் தெரிவித்தனர். இந்த முகமூடிகளைச் செய்வதற்குச் சிவப்பு மண் கொண்ட சதுப்பு நிலக்காட்டில், mahogany மர இனத்தைச் சேர்ந்த Nyireh Batu மற்றும் Nyireh Bunga மரங்களை வெட்டி எடுத்துவந்து, அதில் முகமூடிகளைச் செய்கிறார்கள்.
நம்மவர்கள் பெருமை பேசும் கற்சிற்பங்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை இவர்களின் மரச்சிற்பங்கள் என்பதை நாம் பார்க்கும்போதே தெரிந்துக்கொள்ள முடியும். ஒரே மரத்தில் செய்து முடிக்ககூடியதாக இருக்கிறது இவர்களின் மரச்சிற்பங்களும் முகமூடிகளும். சில சிற்பங்கள் வேலைப்பாடுகளுடன் செய்துமுடிக்க 20 நாட்கள்கூட ஆகுமாம். விருப்பத்திற்கு உட்பட்ட மிருகங்கள் அல்லது பிராணிகளின் உருவங்களையும் சிற்பத்தோடு சேர்த்தே செதுக்குகிறார்கள். இந்தச் சிற்பங்களும் முகமூடிகளும் நல்ல கனமாகவே இருக்கிறன.
நடனத்திற்காகச் செய்யபட்டும் முகமூடிகளை சில சமயம் தேவைக்கருதி கனம் குறைந்த வேறு சில மரங்களைத் தேர்ந்தெடுத்து செய்கின்றனர். அதை அணிந்து ஓலையினால் பின்னப்பட்ட உடை மற்றும் ஆபரணங்களை அணிந்து பிரமாண்ட நடனத்தை அரங்கேற்றுகின்றனர்.
குறைந்த நேரத்தில் நான் கேட்ட பல கேள்விகளுக்கு அவர்கள் எனக்குச் சிரித்த முகம் மாறாமல் பதில் கொடுத்துக்கொண்டே இருந்தனர். இறுதியாக அவர்களிடம் நான் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.
எங்களின் உரையாடல் இப்படி அமைந்தது…
யோகி: தற்போது மலேசிய பூர்வக்குடிகளுக்கு நிறையப் பிரச்சனைகள் வருவதைக் காண முடிகிறது. கிளாந்தான், பஹாங், பேராக் மாநிலங்களில் வசிக்கும் பூர்வக்குடிகளின் வனங்கள் அதன் எல்லைகள் கடந்து போராட்டம் நடத்தும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கிறது. இதை அப் பிரிவு பழங்குடி இனத்தைச் சேராத பூர்வக்குடிகளான நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”
அவர்: “நீ இதைக் கேட்பாய் என நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இந்த விஷயங்களை அறிந்துக்கொள்ளும்போது சங்கடமாகவே உணர்கிறோம். எங்கள் வனங்கள், எங்களிடமிருந்து பறிக்கப்பட்டதும் பறிக்கப்படுவதும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. எங்களால் பெரிய போராட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை என்பது நிதர்சன உண்மைதான். ஆனால், நாங்கள் ஆதிமனிதர்கள். ஆதிமனிதர்களுக்கு இருக்கும் சக்தியை குறித்து யாரும் அறிவதில்லை. அதை நாங்கள் விளம்பரப்படுத்தவோ வியாபாரமாக்குவதோ இல்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பதால் நாங்கள் சக்தியற்றவர்கள் என்ற பொருளும் இல்லை. எங்களில் நன்றாகப் படித்த சமூகமும் இப்போது வந்துவிட்டது. நாங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அந்தப் பார்வைக்கான அர்த்ததை நாங்கள் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.
நான் அவர்களிடம் நன்றியுடன் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும்போது “இந்தப் பறவைக்கு எங்களின் ‘மா மெரி’ இனத்தின் ஓர் அன்பளிப்பு” எனக் கையில் ஏதோ கொடுத்தனர். பனை ஓலையிலான ஒரு பட்சி அது. நான் அவர்களைக் கேள்வியுடன் பார்த்தேன், “எங்கள் மோயாங் சொன்னார்கள் நீ பறவையாய் திரிந்தவளாம்…”
நன்றி:
நடு ஜூன் மாத இணைய இதழ்


நடு இணையத்தளத்தில் என் புகைப்படங்கள்...

நான் ஒரு  புகைப்படக்கலைஞரா என்ற கேள்வி தேர்ந்த புகைப்படக் கலைஞர்களுக்கு வரலாம்..? அவர்களுக்கு எனது பதில் நான் ஒரு பதிவாளர்; எனது பதிவானது கவிதையாகவும், பத்தியாகவும், கட்டுரையாகவும் வருவதுபோல, புகைப்படங்களாகவும் வெளிவருகிறது என்பதுதான்.

இயற்கையையும் மனிதத்தையும் நான் நேசிப்பதுப்போல், என் புகைப்படக் கருவியின் கண்களும் அதையே நேசிக்கின்றன. குழுகுழுவாக மக்கள் செல்பி எடுத்துக்கொண்டு ஆட்பறிக்கும்போது நானும் என் புகைப்படக்கருவியும் ஆகயத்தில் மிதந்துச் செல்லும் மேகங்களை ரசித்தபடி  எங்களின் கண்களால் கிளிக்கிக்கொண்டு இருப்போம்..

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் என் ரசனைகள் மாறுபடுகின்றன. மாறுதல்களை என் புகைப்படங்கள் வழி நன்கு உணரலாம். சிலப்புகைப்படங்களை என் ரசனைக்கு தகுந்தபடி எடிட் செய்ய நேர்வதுண்டு. தனது குழந்தைக்கு அலங்கரிப்பதுபோலத்தான் அதுவும்.

எனது சில புகைப்படங்களை நடு இணைய பொறுப்பாளர்களே தேர்வு செய்து அவர்களின் அகப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார்கள்...

உங்கள் பார்வைக்கு இந்த அகப்பக்கத்தை சொடுக்கிப் பார்க்கவும்...

https://naduweb.net/?p=3858

செவ்வாய், 25 ஜூன், 2019

பேசப்படாத தடங்கள் 1




பேராக் மாநிலத்திற்கு அழகு சேர்க்கும் பைசா கோபுரம்…

இரண்டாம் உலகப்போர், காலணிய ஆட்சி உள்ளிட்ட வரலாறு சார்ந்த விஷயங்களை இங்கு (மலேசியாவில்)  பேசத்தொடங்கினால் பேராக் மாநிலத்தை தவிர்த்து பேசவே முடியாது.  மலேசிய சுதந்திரத்திற்குப் பிறகு ஒருசில இயற்கை அழகு கொண்ட இடங்கள் வெறும்  சுற்றுலா தளங்களாக மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டதே யன்றி அதன் வரலாறு பின்னுக்கு தள்ளப்பட்டு தேய்ந்தே போனது. அதுவும் தெலுக் இந்தான் மாதிரியான சிறிய பட்டணங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் என்றால் அவர்கள் பார்ப்பதற்கு அங்கு என்ன இருக்கிறது என்று உள்ளூர்வாசிகளே நகைப்பார்கள். 

கருத்த வர்ணத்தில் பிரிடிஷ் ராணுவன்போல் நிமிர்ந்து நிற்கிற மலேசிய அதிசயங்களில் ஒன்றான 'மெனாரா சொன்டோங்' என அழைக்கப்படும் சாய்ந்த கோபுரமாகும்.  அதன் வரலாறு தெரியாதவர்களுக்கும், முதன்முறையாக அந்தக் கட்டிடத்தை பார்ப்பவர்களுக்கும் அது கோபுரமா அல்லது சீனர்களின் கோயிலா என சந்தேகம் எழலாம். சீனக் கட்டடக்கலையை பிரதிபலித்துக் கட்டப்பட்டிருக்கும் அந்தக் கோபுரம்  1885-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  இதுகுறித்த பல விவரங்களை எஸ்.துரைராஜா சிங்கம் என்பவர் 1892-ஆம் ஆண்டு எழுதிய ‘A Hundred Years Of Ceylonese In Malaya And Singapore எனும் புதினத்தில் 172-வது பக்கத்தில் விரிவாக பதிவு செய்திருக்கிறார்.

கடிகாரம் அல்லது ஊருக்கு நேரம் அறிவிக்கும் கோபுரமாக மட்டுமின்றி தண்ணீர் தேக்கி வைக்கும் கொள்கலனாக (வறட்சி மட்டும் தீ போன்ற இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் வகையில்) மக்களுக்கு உதவும் வகையில் அப்போதே திட்டமிட்டு  வடிவமைத்தது இதன் சிறப்பம்சமாகும். ஜப்பானியர்கள் 1941-ல் மலேசியாவை ஆக்ரமித்திருந்த சமயத்தில் கண்காணிப்பு கோபுரமாகவும் இதை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த கோபுரம் கட்டப்பட்ட நிலமானது சுமையை அதிகம் தாங்கவியலாத மிருதுவான\மென் நிலம் கொண்டதாகும். அதை வடிவமைத்தவர்களுக்கு  அப்போது இவ்விவரங்கள் தெரிந்திருக்கவும், அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. பின்னாளில் அந்த கோபுரத்தின் தண்ணீர் தொட்டியில் அதிகம் நிரப்பப்படும் நீர் அளவு அதிகரிக்கையில் நிலம் மெதுவாக உள்ளிறங்க அந்தக் கட்டிட அமைப்பு ஒரு பக்கமாக கோணிக்கொண்டது. அன்றிலிருந்து அது சாயும் மற்றும் சாய்ந்த கோபுரம் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கலாம்.  


பல ஆண்டுகள் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் அதன் கடிகார நிலையோடு இந்த கோபுரம் புகழ்பெற்று இன்றும் இருப்பதுதான் அதிசயமும் அற்புதமும். கோபுரத்தில்  பொருத்தப்பட்டிருக்கும் கடிகாரம் பொதுமக்கள் கொடுத்த கொடையில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டது.  J.w. Benson ரக கடிகாரமாகும் அது. நாடு சுதந்திரமடைந்த பிறகு, இந்த கோபுரம் நாட்டிற்கு சொந்தமானது.  அதுவரை ஒரு சிலர் இந்தக் கட்டிடத்திற்கு உரிமை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

கோபுரத்தின் மூன்றாம் நிலையில் அமைக்கப்பட்டிருக்கும்  நீர் தொட்டி  இரும்பினால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.15 அடி உயரமும் 18.36 கன மீட்டர்களும் கொண்ட இந்த கொள்கலனானது  206 கன மீட்டர் நீரை தாங்கும் தன்மை கொண்டது, அதாவது இரண்டு லட்சத்து ஆறாயிரம் லிட்டர்கள். இது மிகப்பெரிய எண்ணிகையாகும். 

உங்களுக்கு நினைவிருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோபுரம் சாய்ந்து விழுந்துவிடுமா என்ற ஐயம் ஏற்பட்டது. பொதுமக்களை அதனுள் செல்ல அனுமதிக்கவில்லை. பின் அரசு அதை புனரமைப்பு செய்தார்கள்.  இந்த கோபுரத்தின் கான்ரெக்டர்கள் இருவரில் ஒருவர் சீனர் ;  Leong choon Cheng என்பது அவர் பெயர். மற்றவர் சிலோனைச் சேர்ந்தவர். சீனரின் பெயர் கோபுரத்தின் நான்கு முச்சந்தி சாலைகளின் ஒன்றுக்கு பெயராகவும் சூட்டப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தக் கட்டிடத்திற்கு பிரிட்டிஷார் ஒருவரும் உரிமை கோரினார். 


1977 லிருந்து 1992 வரை தேசிய குடும்ப கட்டுப்பாடு வாரிய அலுவலகமாக  இந்த சாய்ந்த கோபுரம் செயற்பட்டது. வெளிதோற்றத்திற்கு 8 மாடிகள் கொண்டதாக காட்சி தரும் இந்த கோபுரமானது உண்மையில் மூன்று மாடிகள் மட்டுமே கொண்டதாகும். அதன் முதல் மாடி இன்னும் அலுவலகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. 110 படிகளை கொண்டிருக்கும் இந்த கோபுரம் மரக்கட்டைகளாலும்  கற்களாலும் கட்டப்பட்டது. இதை கட்டுவதற்கு உண்டான பண மதிப்பு அறியப்படவில்லை.

இரவு நேரங்களில் பல வண்ண விளக்குகளுடன் ஜொலித்துக்கொண்டிருக்கிறது எங்கள்  சாய்ந்த கோபுரம்.   




ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

அந்தக் கைங்கரியம் எனக்கு வசப்படாமலே போகட்டும்! நேர்காணல் சிவா லெனின்


யோகி தென்றல் வாசகர்களுக்கு இந்தப் பெயர் புதியதில்லை. 2005-ஆம் ஆண்டு 'தென்றல்' வார இதழுக்கு வாசகர் கடிதம் மூலமாக அறிமுகமானவர். விருட்சமாலை, தென்றல் தொடர் பயணம், ஆண்டு விழா என யோகி மெல்ல மெல்ல தன் நகர்வை மேற்கொண்டார். அந்தக் காலக்கட்டங்களில் எல்லா வாரமாத இதழ்களிலும் யோகியின் பெயரை பார்த்துவிடலாம். பின்
‘மன்னன்’ மாத இதழில் நிருபராகவும் யோகி இருந்திருக்கிறார். அடுத்தடுத்த அவரின் வாசிப்பு, தேடல், பெண்கள் சந்திப்பு, இலக்கியவாதிகளின் சந்திப்பு என அனுபவங்கள் பெற்று இன்று யோகி ஒரு தேர்ந்த எழுத்தாளினியாகவும் செயற்பாட்டாளராகவும் நிற்கிறார்.  அவரிடம் இந்த நேர்காணல் செய்யப்பட்டது..

*யோகி என்பவர் யார்?

-இந்தக் கேள்விக்கான விடையை என்னால் கூறிவிட முடியுமா என தெரியவில்லை. காரணம் யோகி என்பவள் யாரென யோகியாலையே அடையாளம் காண முடியாத போது அவள் யார் என எப்படித் தன்னை குறிப்பிடுவாள்? தந்தையின் ஆதிக்கதில் பயந்தவளாய், பின் பட்டண
வாசியாய், கூலி தொழிலாளியாய், எழுத்தாளராய், ஊடகவியலாளராய், புகைபடக்கலைஞராய் வாழ்ந்திருக்கிறேன். என் பரிணாமம் என்பது இதோடு முடங்கி விடுமா அல்லது யோகியின ஆற்றல்தான் என்ன என்பது அறிய முடியாத ஒரு கேள்வியாக நிற்கிறது. ஆனாலும், யோகியின் தேடல் முடியாத ஒன்றாக மானுடதை தேடி பயணித்துக்கொண்டே இருக்கும்
என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

*யோகிக்கு யோகியிடம் பிடித்தது எது? கவிதையா? கட்டுரையா எழுத்தாளரா?  ஊடகவியலாளரா?

-யோகி பயணியாக இருப்பதையே விரும்புகிறாள். ஒரு பயணதில் ஏற்படும் அனுபவங்களும் சந்திக்கும் மனிதர்களும் மேற் குறிப்பிட்ட அனைத்தையும் சமன் செய்து விடுகிறது. சில ஞாபகங்கள் கவிதையாகவும், சில பதிவுகள் அதன் தேவையை கருதி கட்டுரையாகவும், எழுத்தை நான் பிரயோகிக்கிறேன். அதே வேளையில் 24 மணி நேரமும் ஊடகவியலாளருக்கான குணம் விழித்துக்கொண்டுதான் இருக்கிறது.

*யோகியின் எழுத்து தேடலும்,பயணமும், விளிம்புநிலை மனிதர்கள் குறித்தும் அடங்கியுள்ளது.யோகியின் எழுத்துகளுக்கு வரையறை உண்டா?

-என் எழுத்துக்கு எந்த வரையரையையும் நான் வைத்துக்கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. இடி மின்னலில் திடீரென முளைக்கும் காளானைப்போல என் எழுத்தை நான் கையாண்டதே இல்லை. அந்த கைங்கரியம் எனக்கு வசப்படாமலே போகட்டும். ஒரு சாதாரண விவசாய குடும்பத்து பெண் நான். தோட்டம்-பட்டணம் இரண்டு நிலையிலும் எனக்கு அனுபவங்கள் உண்டு. என்றாலும் எளிமையில் இருக்கும் திருப்தியும்
எளியவர்களிடமிருந்து கிடைக்கும் அனுபவமும் வரையறையற்றது என்பேன்.

*மலேசியா மற்றும் உலகளாவிய நிலையில் பெண்களின் பங்களிப்பு, அவர்களின் படைப்புலகம்,அரசியல்,சமூக பிரச்னை மற்றும் பெண்களுக்கான வன்கொடுமைகள் ஆகியவற்றில் தங்களின் பார்வை என்ன?
-உலகளாவிய நிலையில் எல்லா பெண்களுக்கும் பிரச்சனை என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி இந்தியாவரை அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு பெண்ணாவது பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறாள் என்றால் அமெரிக்காவிலும் இது நடக்கிறது மலேசியாவிலும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. படைப்பிலக்கியம் பொருத்தவரை 90-களுக்குப் பிறகு குறிப்பிடும் பெண் படைப்பாளர்களின் பெயர்களோடு 2000-ஆண்டுக்குப் பிறகு சில இளம் படைப்பாளிகளின் பெயர்கள் கூடின. அதன் பிறகு இந்தப் பட்டியல் நீளவே இல்லை அல்லது யாரும் அந்த அளவுக்கு ஒரு வீச்சியை
ஏற்படுத்தவில்லை என்று சொல்லலாம். மேலும் எழுதிக் கொண்டிருந்தவர்களின் மத்தியிலும் ஒரு தோய்வு ஏற்பட்டு விட்டதை மறுப்பதற்கில்லை. அரசியலில் பெண்கள் கூறிக்கொள்ளும்படி எந்த சாதனையையும் இன்னும் செய்ய வில்லை என்பது வருத்தமே. குறிப்பாக மலேசியாவில் அரசியலில் இருக்கும் பெண்களின் செயற்பாடுகள் சில சமையம் கேலிக்குறியதுவாகவே இருக்கிறது. வான் அசிசா மலேசிய
வரலாற்றில் முதல் துணை பிரதமராவார். இருந்தாலும் ஒரு துணைப் பிரதமருக்கான அதிகாரத்தோடு அவர் செயற்படுகிறாரா? அல்லது அந்த அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறதா என்றால் அதற்கு பதில் அளிப்பார் இல்லை. கருத்தை சொல்லிவிட்டு நழுவிச் செல்வது வாடிகையாகிவிட்ட வேளையில் ஊடகத்துறைக்கும் அந்நேர சலசலப்புக்கு
மட்டுமே இது தீனி போடுவதாக அமைகிறது.


*பார்க்கும் எல்லாவற்றையும் எழுத்தாக்குவதும் அஃது தேவையானது என்றும் அவசியமானது என்றும் மக்களிடையே கொண்டு செல்லும் சிந்தனை எவ்வாறு யோகியை பற்றிக் கொண்டது?
-அனுபவங்கள்தான். இலவசம் என்றால் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். அரசாங்கம் சில இடங்களில் இலவச பேருந்துகளை கொடுத்திருக்கிறது. சில இலவச சலுகைகளையும் அறிமுகம் செய்திருக்கிறது. இது குறித்து சாமானிய மக்களிடம் கேட்டால் எதுவுமே தெரியாது என்பார்கள். தகவல் அறியா சமூதாயமாக இருக்கிறோம். இதற்காக யாரை குறை சொல்ல
முடியும்? வறுமை சிலரை ஊமையாக்குகிறது சிலரை குற்றவாளியாக்குகிறது. இதற்காகவே சாமாணியர்களும் புரிந்துக்கொள்ளகூடிய வகையில் எனது எழுத்தை ஒரு கருவியாகவும்
பயன்படுத்த நினைக்கிறேன். எளிய மக்களை சந்திக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர்களை நேரில் கண்டு உரையாட வேண்டும் அல்லது எழுத்தின் மூலமாகத்தான் அவர்களை அனுக முடியும். நான் இரண்டுமே செய்ய முயல்கிறேன்.

*யோகியின் எழுத்து திறன் மற்றும் ஆற்றலை சந்தேகத்தோடு பார்ப்பவரை குறித்து ?

முதலில் அவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது? இத்தகைய சந்தேகம் ஏற்படுவட்தற்கான காரணம் என்ன? பொறாமையா? அல்லது அவர்களின் இயலாமையா? போகிற போக்கில் கல்லெறிந்துவிட்டுப் போகும் இவர்களையெல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை. அதைத் தாண்டி சிந்திப்பதற்கும் செயலாற்றுவதற்கும் எனக்கு நிறைய இருக்கின்றன.


*புத்தகம் போடுவதும்,எழுத்துவதும் பணம் சம்பாரிக்கும் நோக்கத்திற்காக எனும் நிலையில் செயல்படும் எழுத்தாளர்கள் குறித்து யோகியின் சிந்தனை என்ன?
-சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எழுத்தை வியாபாரமாக்குவதும் ஒரு கலைதான். எல்லாருக்கும் அது வாய்த்திடாது. ஆனால், அந்த எழுத்தாளர் அதன் பிறகு எழுத்து வியாபாரியாக முத்திரைக் குத்தப்படலாம். தரமான எழுத்து என்றால் அதற்கு தானாகவே வாசகர்கள் வருவார்கள். ஒரு கொள்கையோடு வாழும் எழுத்தாளர்களும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம் அல்ல. வற்றாத
எழுத்து மட்டும்தான். அவர்களால் சுயத்தை இழக்க முடியாது.



*இறுதியாக உங்களின் இரு புத்தகங்கள் வெளியீடு குறித்து விவரங்களை
பகிர்ந்துக்கொள்ளுங்க…
-என்னுடைய கவிதை தொகுப்பு ‘யட்சி’. உயிர்மை வெளியீடாக 2016-ஆம் ஆண்டு வந்தது. மலேசிய மற்றும் வெளிநாட்டு சிற்றிதழ்களில் வந்த சில தேர்ந்தெடுத்த கவிதைகளை அதில்
தொகுத்திருக்கிறேன். மலேசியாவில் அதை வெளியீடு செய்வதற்கான முயற்சிகள் எடுத்தும் பல்வேறு காரணங்களால் அது தடை பட்டுப் போனது. பின் அந்த முயற்சியை கை விட்டேன்.
கடந்த ஜனவரி மாதத்தில் சென்னை புத்தக கண்காட்சியில் ‘பெண்களுக்கு சொற்கள் அவசியமா?' எனும் கட்டுரை தொகுப்பு டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் வெளியீடு செய்தது.

இவ்விரு புத்தகங்களையும்தான் தற்போது தென்றல் ஆசிரியர் வித்தியாசாகர் தலைமையில் தலைநகரில் வெளியீடு செய்யப்பட்டது.




வியாழன், 11 ஏப்ரல், 2019

பெண் வலி சொல்லும் கவிதை மொழி-ஏ.தேவராஜன்

இந்தப் பத்தாண்டு கால மலேசியப் புனைவிலக்கியத் துறையில் பெண்களின் இருத்தலும் ஈடுபாடும் எனும் பேச்சை முடுக்கிவிட்டால் பத்துக்கும் குறைவானவர்களே ஞாபகத்திற்கு வரலாம்.அவர்களுள் புனைவிலக்கியத்துறையின் நுட்பத்தை உணர்ந்து அதற்கேற்ற மொழியோடு எழுதக்கூடியவர்கள் வெகுச் சிலரேயாவர். இந்தச் சிலர்கூட தொடர் இலக்கிய முயற்சிகளில் இயங்குகிறவர்கள் என்றெல்லாம் வகைப்படுத்திவிட முடியாது. வாழ்வியல் அழுத்தங்களுக்கிடையே மூழ்கிப் போகாமல் அவ்வப்போது தங்கள் பாடுகளையும் உணர்வுகளையும் எழுத்தில் கொண்டுவரும் கவனிக்கத்தக்க புனைவிலக்கியவாதிகளும் உளர். அவர்களுள் யோகியும் ஒருவர்.அணமையக் காலமாக வெளிவராதது போலிருந்தாலும் அல்லது வேறோர் இலக்கிய வெளியில் இயங்கிக்கொண்டிருந்தாலும், யோகியின் படைப்புலகம் என்றுமே கவனிக்கத்தக்கனவாகத்தான் உள்ளன. ஆனால்,நம்முடைய துர்பாக்கியம் அவரது படைப்பாளுமை பற்றி அவ்வளவாகப் பொருட்படுத்தாமல் இருப்பதுதான். இது நமது குற்றந்தான். இப்பொழுது நூலுருவாக்கம் பெறும் சூழலில் யோகியின் படைப்புலகம் வாசகப்பரப்பில் குறிப்பாகத் தரமான இலக்கியச் சுவைஞர்கள் மத்தியில் விவாதிக்கப்படும் என்பது சர்வநிச்சயம்.

யோகியை இருபது ஆண்டுகளாகத் தெரியும். தொடக்க காலத்தில் கருத்துக் கடிதங்களையும் துணுக்குகளையும் அவ்வப்போது எழுதி வந்தார்.இதழியல் துறையின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாகப் பத்திரிகை நிருபராகப் பணியைத் தொடர்ந்தார்.திடீரென ஈராயிரத்தாவது ஆண்டின் மத்தியில் அவரது எழுத்தில் புது வீச்சைக் காண முடிந்தது. அதுவரை நான் பார்த்திருந்த யோகி வேறொரு பரிணாமத்தில் வெளிப்பட்டபோது அவர் மீது இருந்த இலக்கிய நம்பிக்கை மேலும் கூடியது. அதற்குப் பிறகு அவரது ஒவ்வோர் எழுத்தையும் தவறாது வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் அநேகமாக மலேசியாவின் அனைத்துப் புத்திலக்கியப் பிரியர்களுக்கும் தோன்றியிருக்கலாம். ஒரு கட்டத்தில் இவற்றை எழுதுவது யோகிதானா என்கின்ற ஐயங்கூட எழுந்தது. 

மெளனம் இதழின் பெரும்பான்மையான வெளியீடுகளில் அவரது கவிதைகள் தவறாது இடம்பெற்று வந்ததோடு தமிழகத்தின் பிரபல படைப்பாளர் காலஞ்சென்ற எம்.ஜி.சுரேஷ் போன்றோர் மத்தியிலும் உரக்கப் பேசப்பட்டதை இவ்விடம் சொல்லியாக வேண்டும். மலேசியப் பெண் கவிஞர்களில் தனித்துவமான மொழி நடைக்கு மட்டுமல்லாது பாடுபொருளிலும் அதனைத் துணிந்து சொல்லிவிடும் முறையிலும் யோகி தனித்துவமாய் நின்றதைப் பல கவிதைகள் கட்டியம் கூறுகின்றன. 'என் நள்ளிரவு காலையில் ஒரு நாள்' எனும் தலைப்பில் அமைந்த அவரது கவிதையின் ஓரிடத்தில்,

மலட்டுச் சிசுவால் ஆவதற்கு
ஒன்றுமில்லை என்பதால்
என் மலட்டுக் கருவறையைக் கொளுத்திவிட்டுப்
புலரவிடுகிறேன்

என வெளிப்படும் வரிகளுக்குள் வன்மமாய்ப் புதைந்திருக்கும் பெண்ணின் தாய்மைக்கான ஏக்கத்தை வலியோடு சொல்லும்போது யோகியின் நவீன மொழி மிக எளிதாய் மனத்துக்குள் நுழைந்துவிடுகிறது. இன்னோர் இடத்தில் தாய்மைப் பேற்றிற்காக ஏங்கி ஏமாற்றமடையும் தருணங்களை வலியுடன் சொல்லுகிறார் யோகி இப்படி

என் கருவறை
அறுவதும்
பின் இயங்குவதுமாகவே
இருக்கிறது.

என் கருவறையில்
நுழைய விரும்பாத விந்தைப்பற்றிக்
கேள்வி கேட்கப்படுகிறது

விந்துகள் கருவரையில்
மரமாவதைப் பற்றியும்
ஆணிவேர்கள் வேரூன்றியதைப் பற்றியும்
திரும்பத் திரும்பக்
கூறி வருகிறேன்

இந்த வரிகளின் சூழல் அநேகமாகப் பெண்களில் பலரும் கடந்து வந்த ஒன்றுதான் என்றாலும் அதைக் கவிதையாகத் தருவதில் நமது இலக்கிய வெளியில் யாரும் இருந்ததான பிரக்ஞை எனக்குத் தோன்றவில்லை.நவீன வாழ்வும் அது தரும் நெருக்கடிகளும் பெண் சமூகத்தை ஆட்கொள்ளும்போது அதே நவீன வாழ்வுக்கான மொழியில் சொல்லும்போதுதான் காலத்தின் கண்ணாடியாகக் கவிதை வெளிப்படுகிறது. ஒரு வலியை வாசகனிடத்தில் ஊடாடச் செய்ய முயலும் யோகியின் பெண் மொழியை உற்ற வாசகன் உணர்ந்தால்தான் வரிகளுக்குள் நுழைந்து அவர் அழுகின்ற வலியில் நம்மாலும் அழ முடியும். இங்குப் புனித இலக்கியமென்ற வர்க்கத்தில் நிற்பவர்களுக்கு முரண்பட வாய்ப்புண்டு.ஆனால்,கை நீட்டிக் கண்ணீரைத் துடைக்கின்ற மனம் புத்திலக்கியத்துக்கு மட்டுமே உண்டு.  இப்படியெல்லாம் வெளிப்பட்டு நிற்பதில் யோகி வெற்றி பெற்றிருக்கிறார்.

மேலே பார்த்தவை சில கவிதைகள் மாத்திரமே. ஒவ்வொரு கவிதையாக உருவி எடுக்கும்போது இத்தகைய இரசவாத எழுத்துகளையெல்லாம் யோகி தந்திருக்கிறாரே என்ற வியப்பு நிச்சயம் மேலிடும்.இப்படியாக அநேகக் கவிதைகளில் யோகி தமது முத்திரையைப் பதித்துள்ளார். அவர் தீவிரமாய் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தின்போது பிறருடைய சாயல் தமது படைப்பு வெளியிலும் கவிந்திருப்பதைப் பலவற்றை வாசிக்கும் எங்களுக்குத் தட்டுப்பட்டாலும்,மலேசியாவைப் பொறுத்தமட்டில் யோகியின் வருகை கவிதை வெளிக்குப் புதுநீரைப் பாய்ச்சியதாகவே வகைப்படுத்த முடிகிறது.  உலகமாயதல் போராட்டத்தையும் நவீன வாழ்வு சார்ந்த உறவு நிலை மயக்கத்தையும் தனி மனித கேவுதல்களையும் இன்னும் அதிகமாகத் தர யோகியால் நிச்சயம் முடியும். அதற்கேற்ற நவீன மொழி மட்டுமல்ல,திராணியமும் நிறையவே இருக்கிறது.

நன்றி: தென்றல் வார இதழ்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

‘எழுத்தில் ஒரு நியதியும், செயலில் வேறொருவாளாகவும் வாழ இந்த வாழ்க்கை எனக்கு கற்றுத்தரவில்லை’ – யோகி

நேர்காணல் : யோகி
நேர்கண்டவர்: எழுத்தாளர் கே.பாலமுருகன்




யோகி மலேசியாவில் வாழும் ஒரு சுதந்திரப் பெண் படைப்பாளி. கவிதைகள், பத்தி, நேர்காணல்கள், பயணக் கட்டுரை என்று விரிந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறார். மலேசிய நவீனத் தமிழியக்கத்தில் எப்பொழுதுமே மறுக்க முடியாத ஒரு காலச்சுவடு யோகி. இவருடைய துடைக்கப்படாத இரத்தக் கறைகள் எனும் தனது பத்திகளை நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும், உயிர்மை பதிப்பகம் இவருடைய கவிதைகளை யட்சி என்கிற தலைப்பில் தொகுத்துச் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அயராமல் பயணங்கள் செய்து பூர்வக் குடி மக்களைச் சந்தித்து உரையாடி தகவல்களை மட்டுமல்லாது வாழ்க்கையையும் சேகரிக்கும் ஒரு பரந்த அனுபவத்தோடு இருக்கும் யோகியை அவருடைய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழாவை முன்னிட்டு நேர்காணல் செய்யப்பட்டது.
*யோகியைக் கவிதை எனலாமா அல்லது கவிஞர் என்று சொல்லலாமா?
இதற்கான பதிலை, என் எழுத்தை வாசிக்கும் வாசகர்தான் சொல்ல வேண்டும். கவிதையிலிருந்துதான் என் தீவிர எழுத்தானது தொடங்கப்பட்டது. இருந்த போதும் தொடர்ந்து என்னால் கவிதைகளைப் படைக்க முடிவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், கவிதை எழுதும் மனநிலையோடு இல்லாதிருப்பதுதான் என் முதற் பிரச்சினையாகும்.  நம்மைச் சுற்றி நடக்கும் பல அசம்பாவிதங்களால் ஏற்படும் அழுத்தத்தைக் கவிதை எழுதிக் கடப்பதைவிடக் கட்டுரைகளாக எழுதிப் பதிவு செய்து வைப்பதுதான் சரியாக இருக்குமென நான் நம்புவதாலும் இருக்கலாம்.

*வாழ்க்கை முழுவதும் சுற்றித் திரிபவள் நீங்கள். அதுவொரு வரம் என்றுதான் நினைக்கிறேன். அப்படிப் பயணங்கள் உங்களுக்கு கற்றுக் கொடுத்தது யாவை?
வாழ்க்கை முழுக்க சுற்றித் திரிய இந்தக் காலம் என்னை அனுமதிக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், மேற்கொண்ட பல பயணங்கள் பொழுது போக்கென  இலகுவாகக் கடந்து போகக்கூடியதில்லை. ஒவ்வொரு பயணத்திலும் என் மானுடத்திற்குத் தேவையான ஏதோ ஒரு தகவல் ஒளிந்திருப்பதாக நான் நம்புகிறேன். திரை மறைவில் மறைந்திருக்கும் அதை நான் தேடுகிறேன். சில நேரம் கண்டடைகிறேன். சில நேரம் தோல்வியடைகிறேன். காசி நகரில் சுற்றித் திரிந்த நாட்களும், கம்போடியாவில் அரசு உதவி கிடைக்காத மீனவ கிராமங்களைப் பார்வையிட்ட பொழுதுகளும் ஒரு பெண்ணாக என்னால் வார்த்தையில் விவரிக்க முடியாது. என் எழுத்தைக் கொண்டுதான் அதன் தாகம் தீர்க்க முடியும். நமக்கு என்ன வேண்டும் என்றும் எதைப் பெறுகிறோம் என்றும் நமது பார்வையில்தான் இருக்கின்றன.

கேள்விகள்: உங்களின் பெரும்பாலான கவிதைகள் பெண் விடுதலையைப் பற்றியது என்கிற ஒரு பொது புரிதல் இருப்பதாக முகநூல் கருத்துகளின் வழியாக அறிய முடிகிறது. நான் வாசித்த வரை தமிழ்ச்சமூகத்தில் தொடர்ந்து கேள்விக்குள்ளாகும் அடையாள சிக்கலும் பெண் இருப்பும் பற்றி கவித்துவமான தருணங்களே உங்கள் கவிதைகள். இதனை விமர்சனப்பூர்வமாக எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
என்னுடைய ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் கவிதையை பிரசவிக்கும் வரை ஏற்படும் வலியை நான் என்றும் இறக்கி வைத்ததில்லை. மேலோட்டமாக ஒரு கவிதை வாசித்த பிறகு அல்லது ஒரு கவிதையின் மாறுபட்ட வேறொரு புரிதலோடு விமர்சனம் செய்பவரை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஆனால், விதண்டாவாதம் செய்பவரை நான் கடந்து போகிறேன். யார் யாரையும் திருப்திப்படுத்த முடியாது. கவிதை மட்டுமல்ல ஒரு படைப்பு  குறித்த பார்வையோடு விவாதிப்பவருக்குப் பதிலளிக்கக் கூடிய கடப்பாடு அதை எழுதும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இதுவரை உங்கள் கவிதைகள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் பற்றி? அதில் ஏதேனும் உங்கள் கவிதை புனைவைத் திசை மாற்றியதுண்டா?
நான் இதுவரை ஒரு கவிதைத் தொகுப்பை மட்டுமே வெளியீடு செய்திருக்கிறேன். சில கவிதைகள் தமிழ்நாட்டுச் சிற்றிதழ்களில் பிரசுரமாகியிருந்தாலும் விமர்சனம் என்று நான் பெரிதாக எதிர்கொண்டதில்லை. மேலும், புனைவைத் திசை மாற்றும் அளவுக்கு எதுவும் நடந்ததுமில்லை. தற்போது கவிதை எழுதலில் ஏற்பட்டிருக்கும் தொய்வு, இனி இப்படியான விமர்சனங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகளை இல்லாமல் கூடச் செய்யலாம். காலம்தான் அதற்குப் பதில் சொல்லும்.  

தமிழ்நாட்டில் உருவாகிப் பெருகி வந்த பெண்ணியம் தொடர்பான தாக்கம் உங்கள் கவிதைகளிலும் யோனி, ஆண்குறி போன்ற வார்த்தை பயன்பாடுகளின் வழியாகக் கவனிக்க முடிகிறதே? இதுவொரு தாக்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
நிச்சயமாக சொல்லலாம். இதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், அவ்வார்த்தைகளை எப்பொழுதுமே என் கவிதைகளில் நான் வழிந்து திணித்ததில்லை. நான் எப்படியோ என் எழுத்தும் அப்படியே. எழுத்தில் ஒரு நியதியும், செயலில் வேறொருவாளாகவும் வாழ இந்த வாழ்க்கை எனக்கு கற்றுத்தரவில்லை. அடி நிலையிலிருந்து வந்தவள் நான். ஒரு சராசரிப் பெண் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் சந்தித்து வந்திருக்கிறேன். புனைவு எனக்கு அவசியமற்றது. தேவையில்லாமல் நான் புனைவுகளைச் சேர்ப்பதில்லை.

இதுபோன்ற வார்த்தையாடல் ஒரு மௌனத்தைக் கிழித்து பண்பாட்டு மனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குமே தவிர வேறென்ன செய்யும்?
மலேசிய சூழலில் இதுபோன்ற வார்த்தைகள் மனங்களை அதிர்ச்சியாக்குமே தவிர வேறெதையும் செய்யாதுதான். சமூக சீர்கேடு, ஒழுக்கமில்லாதவள், நம் நாட்டுக்குத் ஒவ்வாத வார்த்தைகளை பேசக்கூடியவள், புறக்கணிக்கக்கூடிய கவிதை, கழிவரை இலக்கியமென அள்ளி வீசும் ஒவ்வொரு விமர்சனத்தையும் மௌனமாகப் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தவிர வேரென்ன செய்திட முடியும். ஆனால், பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் நமது நாட்டில் நடக்காமலா இருக்கிறது? பாலியல் சீண்டல்கள் இல்லாமலா இருக்கிறது? தனியாக ஒரு பெண் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழல் நமது நாட்டில் இருக்கிறதா? உடை குறித்த சுதந்திரம் இருக்கிறதா? குறிப்பாக தமிழ்ச் சூழலில் ஒழுக்கம் என்ற பெயரில் கிட்டதட்ட குட்டி இந்தியாவைப் போன்றுதானே நடந்துகொள்கிறார்கள். அவர்கள் மனங்களை என்  கவிதைகளால் அதிர்ச்சியாக்க முடிந்தால், அது ஒரு தொடக்கமாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

பண்பாட்டை மீறுதல், பண்பாட்டை மறுகட்டமைப்பு செய்தல். பண்பாட்டில் திளைத்தல். இவை மூன்றில் உங்கள் எழுத்தின் ஊடாடல் எது? ஏன்?
-பண்பாட்டை மீறுதல் மற்றும் பண்பாட்டை மறுகட்டமைப்பு செய்தல் இந்த இரண்டுமே பண்பாட்டில் திளைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு 
ஒன்று தான்.  என் எழுத்து பண்பாட்டைப் பதிவு செய்வதில் முனைப்பாக உள்ளதுகாலப்போக்கில் பண்பாடு மாற்றம் அடையும்அதைத் தடுக்கமுடியாதுஆனால் சமகால பண்பாட்டைப் பதிவு செய்ய முடியும்ஒரு எழுத்தாளனின் கடமையும்கூட அது.

உலகில் பல எழுத்தாளர்கள் பத்தியை விரும்பக்கூடியவர்கள்தான். அனுபவமும் ஆய்வும் கலந்து ஒரு வாசிப்பு ருசியை அளிக்கும் பத்தி எழுத்து சுவாரிஸ்யமிக்கவையாகும். உங்கள் பத்தி எழுத்து எப்பொழுது தொடங்கியது? எதைப் பற்றி எழுதினீர்கள்?
எப்பொழுது தொடங்கினேன் எனவும் எதைக் குறித்து முதலில் எழுதினேன் எனவும் என்னால் நினைவுகூர முடியவில்லை. ஆனால், நான் எழுதிய என்னுடைய துடைக்கப்படாத ரத்தக் கறைகள்என்ற பத்திகள் பேசப்பட்டதாக இருக்கிறது. மேலும், ஏதோ ஒன்றை உதாரணம் காட்டுவதைவிட, என் அனுபவங்களிலிருந்தும் என்னிலிருந்தும் ஆதாரப்பூர்வமாகப் பேசுவது எனக்கு உவப்பானதாக இருக்கிறது. அந்த எழுத்துக்காகவே நான் அனுபவங்களை தேடி ஓடுகிறேன். அல்லது அனுபவம் என்னைத் தேடி வருகிறது.

நீங்க தொடங்கியிருக்கும் கூகை பதிப்பகம் குறித்த விவரத்தையும் அதன் செயற்பாடு குறித்தும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
கூகை பதிப்பகம் என்பது பணம் சம்பாதிப்பதற்காக தொடங்கப்பட்டதில்லை. அதை ஒரு செயற்பாட்டுக்காக பதிப்பகமாக பதிவு செய்திருக்கிறோம். கூகையை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு  விளிம்பு நிலை மக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் சந்தித்து அரசியல் கலந்துரையாடல், விழிப்புணர்வு கூடவே இலக்கியத்தை பேசவும் கூகை பதிப்பகம் செயற்படும். மேலும்,  புத்தகங்களை பதிப்பதற்கு   பெண்களுக்கு முதன்மை சலுகையை வழங்கும் அதே வேளையில் புத்தகங்களை வெளியீடு செய்யும் தெளிவு இல்லாதவர்களுக்கு உதவவும் கூகை செயலாற்றும்.

இப்பொழுது வெளியிடப்படும் நூல்கள் உங்களின் கடந்தகாலப் படைப்புகளா? அவை யோகியின் எத்தனை ஆண்டுகளின் தெறிப்பு?
தற்போது வெளியீடு காணவிருப்பது 2016-ஆம் ஆண்டு சென்னையில் உயிர்மை பதிப்பகத்தால் பதிக்கப்பட்ட யட்சி கவிதைத் தொகுப்பு மற்றும் இந்த ஆண்டு (2019) டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் அச்சடிக்கப்பட்ட ‘பெண்களுக்குச் சொற்கள் அவசியமா?’ என்ற கட்டுரை தொகுப்பும் ஆகும். இதுவரை நான் எழுதிய படைப்புகளில் முக்கியமான எழுத்துகளையே தேர்ந்தெடுத்துப் புத்தகமாக்கியிருக்கிறேன். சில படைப்புகள் எந்தக் காலத்திலும் பேசக்கூடியதாகவும், சில எழுத்துகள் அந்தக் காலகட்டத்தின் பதிவுகளாகவும் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.

சில சமயங்களில் உருவாகும் சோர்வு அல்லது மனத்தடைகள் உங்கள் எழுத்தோட்டத்தைப் பாதித்துண்டா? அவற்றை எப்படிக் கடந்து சென்றீர்கள்?
சோர்வு நிச்சயமாக வரத்தான் செய்யும். அது உடலுக்கல்ல. என் எழுத்துக்குத்தான். எழுதுவதற்கான மனத்தடை வரும்போது என் வேறு ஆர்வங்களில் சிறகடித்துப் பறக்கப் போய்விடுவேன். பயணங்கள் செய்வது, புகைப்படங்கள் எடுப்பது, ஆளுமைகளைச் சந்திப்பது, எளிய சாமானிய மக்களிடம் கலந்துரையாடுவதென என என் பிற விருப்பங்களில் செயற்படுவேன். என்னை நானே எப்படிப் புதுப்பிப்பதென அறிந்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு கலைவடிவமும் இலக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாகவே கருதுகிறேன். என் விருப்பங்கள் தேடல்கள் அனைத்தும் எழுத்து என்ற ஒரு புள்ளியில் இணைகிறது. சோர்வும் அதற்கான மருந்தும் எல்லாமே எனக்கு எழுத்துதான்.

நூல் வெளியீடு எப்பொழுது என்னென்ன சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது என்று சொல்ல முடியுமா?
என்னுடைய இரு புத்தகங்கள் வெளியீடு காணவிருக்கிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி, சனிக்கிழமைபிரிக் பீல்ஸ்ட் நேத்தா ஜி மண்டபத்தில் இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறோம். மாலை மரியாதைகள், பொன்னாடை சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத படைப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த விழா செய்யப்படவுள்ளது. மற்றவை நேரில் வந்து பாருங்களேன். இதையே வாசகர்கள் அழைப்பாக ஏற்றுக்கொண்டு புத்தக வெளியீட்டில் கலந்துகொள்ள அழைக்கிறேன். நன்றி 

நன்றி: தமிழ்மலர் பத்திரிகை. 7.4.2019