திங்கள், 2 ஜனவரி, 2023

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போர்… யார்தான் தீர்ப்பது?

சாலையோரங்களால் அல்லாத சற்று உட்புறமாக அமைந்திருக்கிறது செமாய் இன பூர்வக்குடிகள் கிராமமான சிமோய் குடியிருப்பு. பூர்வக்குடிகளின் பாரம்பரிய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள்; கடுமையான மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக இருந்தாலும், நடப்பதற்கு சிரமம் ஒன்றும் இல்லை; கிராம மக்களுக்கோ அது ஒரு விஷயமே இல்லை. ஆனால், தம் வாழ்நாளில் இதுவரை சந்தித்திடாத ஒரு துயரத்தை அந்த அழகிய கிராமம் சமீபத்தில் சந்தித்திருக்கிறது.

கடந்த 6/12/2022 அன்று விடியற்காலை 3 மணியளவில், வீட்டில் தனது கணவர் மற்றும் 7 குழந்தைகளுடன் உறக்கத்தில் இருந்த வாக் எனும் பூர்வக்குடி பெண்மணியை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவமானது அங்கிருக்கும் மக்களுக்கு துயரத்தை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், காட்டுயானைகள் இதுவரை அக்கிராமத்திற்குள் நுழைந்ததே இல்லை. அவை மலைமேடுகளில் சுற்றிதிரிந்துவிட்டு போய்விடுவதுண்டு. எனவே இப்படியான ஓர் அசம்பாவிதத்தை அம்மக்கள் நினைத்துப் பார்த்ததும் இல்லை.

யானையின் இந்தத் தாக்குதலுக்கு என்னக் காரணம் என்பதை கொஞ்சம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. யானைகளுக்கு இதுவரை இல்லாத இந்த ஆவேசமும், என்றும் இல்லாத வகையில் மனிதர்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும் என்னக் காரணமாக இருக்கும் என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்களாகும்.

அதற்கு முன், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போர் குறித்து நாம் அறிந்துக்கொள்ளுதல் அவசியம். இப்போரானது தொடந்து உலகில் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. வாழ்நாளில் என்றாவது ஒருநாள் மிருகக் காட்சி சாலையில் டிக்கெட் வாங்கி கூண்டில் இருக்கும் மிருகங்களை பார்த்து ரசிக்கும்  மலேசியர்களான நமக்கு அதுகுறித்து எந்த தெளிவும் இருப்பதில்லை.

முழுமையாக நமது (மனிதர்களின்) ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரத் துடிக்கும் இந்த பூமியானது, மரங்களுக்கும் மிருகங்களுக்கும்கூட சொந்தமானது என்பதை மனிதர் மறந்துவிடுகிறான். அந்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் சேவையையும் வழங்கும் அரசாங்கம்தான் அந்நாட்டு மிருகங்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் பாதுகாப்புகொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறான்.

சகமனிதர்களையும் மிருகங்களையும் மரங்களையும் ஈடு இணையில்லாத இயற்கையையும் நேசிக்கும் ஒரு மனிதாபிமானமுல்ல மனிதன் மரித்துக்கொண்டே வருகிறான். போட்டியும் பொறாமையும் பேராசையும் இயற்கையை சுரண்டி பணம் பார்க்கும் வன்முறையாளர்களுமே பெருகி வருகிறார்கள்.

இந்நிலையில், தமக்கான இருப்பிடத்தை அழிக்கும்போதும், தம்மை தாக்கும்போதும், உறவுகள் கொல்லப்படும்போதும் மனிதனைப் போலவே மிருகங்களும் எதிர்வினை காட்டுகின்றன. மறைந்திருந்து தாக்குகின்றன.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் போர் இவ்வாறே தொடங்குகிறது. ஒரு போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதைப் போலத்தான், தற்போது இந்தப் பூர்வக்குடி மக்கள் பலியாகத் தொடங்கியிருக்கிறார்கள். வெறும் பார்வைக்கு கொஞ்சம் மரங்களை விட்டுவிட்டு, உட்பகுதிகளெல்லாம் மரங்களும் வளங்களும் பணத்திற்காக அழைக்கப்பட்டு வருவதின் விளைவு, யானைகள் உணவுக்காகவும் உரிமைக்காகவும் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு இறங்க தொடங்கி விட்டன.

அதிகாலையில், வீடு உடைப்படுவதுபோல நடுக்கம் காணவே கண்விழித்த ‘வாக்’கின் கணவர், யானைதான் வீட்டை உடைக்கிறது என்பதை அனுமானித்து, மையிருட்டில் அனைவரையும் காப்பற்ற முயற்சி செய்திருக்கிறார். அனைவரையும் அழைத்துக்கொண்டு கிராம மக்களின் உதவியை நாடியவர், பின்புதான் தனது துணைவி இல்லாததை கவனித்திருக்கிறார். கிராம மக்களின் உதவியோடு யானையை காட்டிற்குள் விரட்டிவிட்டு, மனைவியை தேடியவர் வீட்டிற்கு அருகில் பிணமாகத்தான்  அவரை கண்டெடுத்திருக்கிறார். அவர்களின் வீடும் முழுமையாக பழுதடைந்துவிட்டது. தற்போது அவர்கள் அருகில் இருக்கும் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.


கடந்த வாரம் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தையும், கிராம மக்களையும் சந்திப்பதற்காக பி.எஸ்.எம் தோழர்களோடு சென்றிருந்தேன். இன்னும் துயரில் இருந்து அவர்கள் யாரும் மீளவில்லை. இந்த இழப்புக்குப் பிறகு அவர்களை JAKOA (ஓராங் அஸ்லி மேம்பாட்டுத்துறை) மட்டுமே விசாரித்துவிட்டு சென்றிருக்கிறது. ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. வனத்துறையோ அவர்களைக் கண்டுக்கொள்ளவும் இல்லை. இந்நிலையில், அங்கிருக்கும் மக்கள் யானைகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும், வனத்தில் நடமாடவும் ஒரு பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியிருக்கின்றனர்.

உடனே பூர்வக்குடிகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், யானைகளை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் யாரும் கேட்கவில்லை. வனம் மிருகங்களுக்கும் பூர்வக்குடிகளுக்கும் பொதுவானது. மனிதர்களின் பேராசையின் காரணங்களால் நடந்த இந்தக் மாற்றத்தை சரி செய்ய வேண்டும். அதை சட்டப்பூர்வமாக செய்வது அவசியமாகும். பூர்வக்குடிகளுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்துவதோடு,  யானைகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதா? அவைகளின் கோபத்திற்கும் இந்த சீற்றத்திற்கும் என்னக் காரணம் என்பதை தேசிய வனவிலங்குத் துறை ஆராய்ந்து தீர்வுக்கான வேண்டும். மேலும், காப்ரேட் நிறுவனங்கள் சுயலாபத்திற்காக மரங்கள் மற்றும் வளங்களை சுரண்டும் போக்கை மாநில அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.

அங்கிருந்து நாங்கள் கிளம்பும்போது, பூர்வக்குடி குழந்தைகள் மழையில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். பெருமழை அந்தக் கிராமத்தையே கழுவிக்கொண்டிருந்தது. அவர்களின் துயரமும் பயமும் அதோடு கரைந்து ஓடிவிடக்கூடாதா என்று எனக்கு தோன்றாமல் இல்லை.


                                                                                சிமோய் வனகிராமத்தில் நடமாடும் யானை

நமது நாட்டில் ஓராங் அஸ்லிக்கான தேசிய சட்டங்கள்  

1) தேசிய வனவியல் சட்டம் 1984. அது 1993 இல் திருத்தம் செய்யப்பட்டது.  சமீபத்தில் மீண்டும், தேசிய வனவியல் சட்டம் 2022 திருத்தம் செய்யப்பட்டு மாற்றப்பட்டது. இது 20 செப்டம்பர் 2022 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது, ஆனால் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதனால், மாற்றங்கள் குறித்து நமக்கு சரியாக தெரியவில்லை.

2) Aboriginal Peoples Act 1954. இது 1974-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.

நன்றி மலேசியாகினி 3/1/2023


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக