புதன், 4 ஜனவரி, 2023

ஜனவரி 3, ரோஹிங்கியா தேசிய தினம்


ரோஹிங்யா அகதிகள் அவர்களின் தேசிய தினத்தை ஜனவரி 3 கொண்டாடுகிறார்கள்; அந்நிகழ்ச்சிக்கு போய் வரலாம் என்று தோழர் சிவரஞ்சனி என்னை அழைத்தபோது, ஒரு கேள்விக்குறியோடு எனது நெற்றி கொஞ்சம்  சுறுக்கவே செய்தது. 

அவர்களின் சொந்த நாடான மியன்மார், இராணுவ ஆட்சியில்  மனிதாபிமானமற்று இவர்களின் உயிரை காவு எடுத்தது. இன்னும்கூட  இவர்களின் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இப்போதும்கூட  உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டை நாடுகளில் அடைக்களம் தேடுகிறார்கள்  ரோஹிங்கியா மக்கள்.  தேசிய தினம் என்று  நமக்கு தெரிந்ததெல்லாம் அந்நாட்டினுடைய சுதந்திரநாள்தான். மியன்மார் சுதந்திரநாடுதான் என்றாலும் ரோஹிங்கியா மக்களின் சுதந்திரத்தை அந்நாடு பறித்துவிட்டது என்பதுதான் நிதர்சனம். மலேசியாவில் இவர்கள் நல்வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் நமது நாடே கூட சிரிக்கும். 

மியன்மார்  நாட்டின் சிறுபான்மை மக்களான இந்த ரோஹிங்யா மக்களுக்கு சொந்த நாட்டில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த நாட்டிலும் அவர்களுக்கு  இழைக்கப்படும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியிருக்க இவர்களின் தேசிய தினம் எதை மையமாக கொண்டிருக்கிறது என்ற தகவலை தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் நான் அந்த விழாவிற்கு செல்ல முடிவெடுத்தேன். 

மியான்மாரில் 1990-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ரோஹிங்கியா மக்களுக்காக  பதிவு செய்யப்பட்ட முதல் அரசியல் கட்சியை நினைவுகூரும் வகையில், உலகம் முழுவதும் உள்ள ரோஹிங்கியா புலம்பெயர் சமூகங்கள் ரோஹிங்கியா தேசிய தினத்தை கொண்டாடுகின்றன.  

இவ்விவகாரத்தை, அவர்கள் சம்பந்தமான மற்ற விவகாரத்தை மறுப்பது போலவே, பர்மிய அரசாங்கம் இந்த வரலாற்றையும் மறுக்கிறது. 

இந்த காரணத்திற்காகவே, நாங்கள் இந்த நாளை ரோஹிங்கியா தேசிய தினமாக கொண்டாடி வருகிறோம் என்று அதன் வரலாற்றை விளக்கினார் ரோஹிங்யா சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான தோழர் Sujauddin. 

மியான்மாரில் 1989-1990 நாடாளுமன்றத் தேர்தலில் ரோஹிங்கியா மக்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது.  உலகம் முழுவதும் உள்ள ரோஹிங்கியா புலம்பெயர் சமூகங்கள் ரோஹிங்கியா தேசிய தினத்தை இன்றைய நாளில் கொண்டாடுகின்றனர்.  

மலேசியாவைப் பொருத்தவரை 200,000 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் கோலாலம்பூர் வட்டாரத்தில் மட்டும் 40,000 அகதிகள் வசிக்கிறார்கள் என்று மேற்கொண்ட கணக்கெடுப்பு சொல்கிறது. 

நான் வசிக்கும் செலாயாங் பாரு பகுதியில் ரோஹிங்கியா மக்கள் மிக அதிகமாக அடைக்களம் கொண்டிருக்கின்றனர். சுமார் 763 குடும்பங்களில் மொத்தமாக 2,092 அகதிகள் இங்கே வசிக்கின்றனர். இவர்களில் 700-க்கும் அதிகமானோர் குழந்தைகளாவர். இந்த சமூகத்திற்கு ஆதரவாக இயங்குகிறது  ELOM INITIATIVES  என்ற அமைப்பு. மலேசியாவில் உள்ள அகதிகள், முறையான சட்ட ஆவணங்கள் இல்லாததால், தங்கள் சமூகத்தை தாங்களே ஆதரிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சட்டப்பூர்வ அகதி அந்தஸ்து பெற்றவர்களும்,   முறையான கல்வி, தொழில் பயிற்சிகள் மற்றும் சுகாதார சேவைகளுக்கு மிகக் குறைந்த வாய்ப்புகளையே பெருகின்றனர்.

மனிதாபிமானம் கொண்ட  சில தன்னார்வ அமைப்புகளும் இவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். மலேசிய சமூகம் பாராமுகம் காட்டும் இந்த சமூக மக்களுக்கு,  உதவும் பொருட்டு ELOM  அமைப்பு பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ரோஹிங்கியா அகதிகளில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் என்றாலும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கவே செய்கின்றனர்.  அனைவருக்குமாக இந்த அமைப்பு செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதோடு அகதி மக்களுக்கு ஆதரவு அளிக்க விரும்பும்  தொண்டூழிய அமைப்புகளின் ஆதரவு இவர்களுக்கு தேவையாக இருக்கிறது.  

நாங்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டதில் இப்படியான பல தகவல்களை தெரிந்துகொண்டோம்.  புலம்பெயர்ந்த சமூகமாக இருந்தாலும், ரோஹிங்கியா  பெண்களுக்கு குடும்ப வன்முறை நிகழாமல் இல்லை. அப்பெண்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்குள்ளே Rohingya women development network என்ற பெண்கள் அமைப்பும் செயற்பட்டு கொண்டிருக்கிறது. 

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை மீட்டெடுக்கவும், குழந்தை திருமணங்களுக்காக குரல் கொடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொருளாதார ரீதியில் பெண்களை பலப்படுத்தவும் அந்த அமைப்பு வேலை செய்துக்கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் ரோஹிங்கியா பாரம்பரிய உணவு சுவைப்பதற்கான ஒரு வாய்ப்பு எங்களுக்கு அமைந்தது. நிறைய மஞ்சளையும் கூடவே அதிகக் காரத்தையும் இவர்கள் உணவில் சேர்த்துகொள்கிறார்கள். ருசியாகவே இருக்கிறது இவர்களின் உணவு.   

ஜனவரி மூன்று ரோஹிங்கியா தேசிய தினம் கொண்டாடும் அதே வேளை, ஜனவரி 4, 1948 -ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மியான்மர் சுதந்திரம் பெற்றது குறிப்பிடதக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக