புதன், 8 ஜூன், 2022

நீலம் தொடும் நிலங்கள் (லாங் தெஙா) ( பாகம் 2 ) Lang Tengah Terengganu

 எங்கள் கடற்பயணத்தின் படகோட்டியும் வழிகாட்டியுமான தேவா, ஓய்வு எடுக்க எங்களை இறக்கிவிட்ட தீவின் பெயர் புலாவ் பீடோங். இதை வாசிக்கும் உங்களுக்கு எப்போதோ எங்கேயோ இந்தத் தீவு குறித்து அறிந்துக்கொண்ட விஷயங்கள் ஞாபகத்திற்கு வரலாம். இன்றுதான் அப்படி ஒரு தீவின் பெயரையே கேள்விப்படுகிறோம் என பலர் முனுமுனுக்கலாம். பல ஆயிரம் பேர் வாழ்ந்து தற்போது அதன் நினைவுகளை மட்டுமே சுமக்கும் கைவிடப்பட்ட ஒரு தீவுதான் அது.

1975-ல் வியட்நாமிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போரின் போது, வியட்நாமியர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தார்கள். மலேசியாவில் அவ்வாறு தஞ்சம் அடைந்த ஆயிரங்கணக்கான அகதிகளை குடியேற்றிய இடம்தான் பீடாங் தீவு.


கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம்.

சைகோன் வீழ்ந்த சில நாட்களுக்குள், முதல் படகு 1975 மே மாதம் 47 அகதிகளை ஏற்றிக்கொண்டு மலேசியக் கரையை வந்தடைந்தது.

1978-ஆம் ஆண்டு, 2,400 வியட்நாமிய அகதிகளோடு ஹை ஹாங் என்ற கப்பல் சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் கரை ஒதுங்கியது. இதேவே நாட்டில் மிக பெரிய அளவில் தஞ்சம் அடைந்த  அகதிகள் குழுவாகும். நாளுக்கு நாள் அகதிகளின் வருகை அதிகரிக்கவே, ஆகஸ்ட் 8, 1978 அன்று புலாவ் பிடோங்கில் அவர்களுக்காக மலேசிய அரசாங்கம் ஒரு தற்காலிக முகாமை அமைத்தது.  4,500 அகதிகளுக்கு தங்குமிடமாக அத்தீவு வடிவமைக்கப்பட்டது, ஆனால் ஜனவரி 1979 க்குள் மொத்தம் 18,000 அகதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்; ஜூன் மாதத்திற்குள் அவ்வெண்ணிக்கை 40,000 ஆக உயர்ந்தது. பிடோங் தீவு மிக அதிகமான அகதிகள் கொண்ட இடமாக மாறியது.


உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தஞ்சம் அடைந்த அம்மக்களுக்கு Orang Vietnam Hanyut (OVH) அதாவது வியட்நாம் படகு மக்கள் என்று புதிய பெயர் கொடுக்கப்பட்டது.     

12 ஆண்டுகளில் சுமார் 252,390 அகதிகளுக்கு மலேசியா தஞ்சம் வழங்கியதோடு, சுமார் 4,535 குழந்தைகள் இந்த முகாமில் பிறந்திருக்கிறார்கள். தீவைச் சுற்றி ​​பள்ளிக்கூடம், நீண்ட வீடுகள், தேவாலயம், பௌத்த கோயில், வைத்தியசாலை, தபால் நிலையம், காப்பிக்கடை, இறந்தவர்களுக்கான நினைவிடங்கள் என பல கட்டிடங்கள் தற்காலிகமாக கட்டப்பட்டு செயல்பட்டிருக்கிறது.

சுற்றிலும் கடலால் சூழப்பட்டு மத்தியில் இருக்கும் இந்தச் சின்னத் தீவில் தஞ்சம் அடைந்திருந்த அகதிகளின் திடீர் குடியேற்றம் உள்ளூர் மீனவர்களின் மீன் பிடிக்கும் தொழிலுக்கு பிரச்னையாக இருந்ததால் அவர்கள் மாநில அரசாங்கத்திற்கு தொடர்ந்து நெருக்குதல் கொடுத்துக்கொண்டிருந்தனர். மீனவர் சங்கம் எழுத்துப்பூர்வமான அறிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுக்கு கொடுத்து தங்கள் பிரச்னையை நாளுக்கு நாள் தீவிரமாக முன்னெடுத்தனர்.


மலேசியாவும் அகதிகளை பராமரிக்கும் எண்ணத்தை நீண்ட நாள் கொண்டிருக்கவில்லை. 1979-ஆம் ஆண்டு, துணைப் பிரதமராக இருந்த துன் மகாதீர், மலேசியா 70,000 அகதிகளை முகாமில் இருந்து வெளியேற்றி மீண்டும் கடலுக்கே அனுப்பும் என்றும், தரையிறங்க முயலும் அகதிப் படகுகளைக் கண்டால் துப்பாக்கிச் சூடு நடத்தும் என்றும் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார்.

‘’Being humane has not paid off for us at all… All we are getting is a further inflow of Vietnamese illegal immigrants, and we have every right to expel them.” – Tun Mahathir, in 1979, as reported by the New York Times.

உண்மையில் அகதிகளை சுட மாட்டோம் என்று அரசாங்கம் பின்னர் தெளிவுபடுத்தியிருந்தாலும் (துன் அகதிகளை '‘shoo’ செய்வோம் என்று கூறினார், ' shoot’ ' இல்லை), அந்த ஆண்டு ஜனவரியில் இருந்து 40,000 க்கும் மேற்பட்ட அகதிகளை வெளியேற்றியதாக ஒப்புக்கொண்டனர். தஞ்சம் அடைந்தவர்கள் நிரந்தரமாக நாட்டிலேயே தங்கக்கூடிய அச்சம் இருப்பதால் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக அக்டோபர் 1991-ல் புலாவ் பீடாங் அகதிகள் முகாம் மூடப்பட்டது, அகதிகள் கோலாலம்பூரில் உள்ள சுங்கை பெசி அகதிகள் மையத்திற்கு மாற்றப்பட்டனர், அங்கிருந்து அவர்கள் கட்டங்கட்டமாக வியட்நாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடைசி வியட்நாமிய அகதி ஆகஸ்ட் 30, 2005 அன்று மலேசியாவிலிருந்து வெளியேறினார்.

புலாவ் பீடோங் அகதிகள் முகாம் அருங்காட்சியமாக செயல்படுகிறது என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆதலால் அதுக்குறித்த என் கற்பனை வேறாக இருந்தது. இந்தப் பயணத்தில் எதிர்பாராத விதமாக புலாவ் பீடோங்கை காணக்கூடிய சந்தர்ப்பம் ஒரு விபத்துபோல நடந்தது. ஆனால், அந்த விபத்தில் என் கற்பனைகள் முழுதும் தவிடுபொடியாகும் அளவிற்கு அடி விழுந்தது.

பல அகதிகளின் ஞாபகங்களாக மாறியிருக்கும் அந்தத் தீவில் மிச்சம் இருப்பது பாழடைந்த ஒரு சில நினைவுச்சின்னங்கள்தான். மிக நீண்டகாலம் கைவிடப்பட்ட நிலையில் அவை மெல்ல மெல்ல அழிந்துக்கொண்டிருக்கின்றன. மிச்சமிருக்கும் புத்த விக்ரகங்களும், இறந்தவர்களின் பெயர் சுமந்த பதாகைகளும், திறந்தவெளியாக மாறிவிட்ட தேவாலயமும், அகதிகள் முகாம் என்ற நினைவு தூபியும் இன்னும் சில நாட்களில் காணாமல் போய்விடலாம். அப்படி வரலாற்றை அதுவாகவே அழிந்துபோகட்டும் என கைவிடுவது எந்த அளவுக்கு சரியாகும் எனத் தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த நினைவிடத்தை நோக்கி நம் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகளும், அகதிகளுடன் தொடர்புடையவர்களும், பயணிகளும் பார்வையாளர்களும் அங்கு வருகிறார்கள். கடல்வழியே நாம் பயணம் செய்யும்போது மலை உச்சியில் ஏசுவின் சிலை கையை நீட்டி ரட்சிப்பதுபோல காட்சி கிடைக்கும். அருகில் வந்தப் பிறகுதான் தெரிகிறது அவரின் இருப்பை நினைவுப்படுத்தவே அவர் அழைக்கிறார் என்று.   

இந்தத் தீவை ஒரு சுற்றுலாத் தளமாகவே மாற்றியிருக்கலாம். இன்னும் சில நாட்களில் அல்லது ஆண்டுகளில் பார்வையிடுவதற்கு பாதுகாப்பு இல்லாத ஒரு இடம் என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு சிதிலடைந்துவருகிறது.

அங்கு எங்களை மிகவும் பாதிக்க இன்னொரு விஷயம் வியட்நாமிய அகதிகள் நினைவாக நிறுத்தியிருக்கும் தூபியில் எழுதியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் (pendatang-pendatang haram) என்ற வார்த்தை. சட்டவிரோத குடியேறிகளுக்கும், உயிரை பாதுகாத்துக்கொள்ள சொந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டில் தஞ்சம் அடைவதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா? சட்டவிரோதிகள் ஏதிளிகள் இவர்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை கணக்கில் எடுக்காமல் ஒட்டுமொத்தமாக சட்டவிரோத குடியேறிகள் என்று நிற்கிறது அந்த தூபி. பின் மலேசியாவின் சரணாலயம் என ஏன் அந்த முகாமை குறிப்பிட வேண்டும்?

ஒரு மணிநேர ஓய்வுக்குப் பின் நாங்கள் படகிற்கு திரும்பினோம். எங்களிடம் ஒரு நீண்ட மௌனம் இருந்தது. தனிமை வேண்டி சில நிமிடங்கள் கடற்கரையை என் கண்கள் ஆழமாக ஊடுருவிருந்தது. வண்ண மீன்கள் துள்ளி விளையாடியபடி இருந்தன. கண்ணாடிபோல பளிச்சென்று இருந்தது கடல். இன்னும் உற்று நோக்கினேன். கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்த நீல தோட்டமாக மாறி அதன் உடலிலிருந்து நீல ஒளியை வெளியிட்டுக்கொண்டிருந்தது கடல்.

(தொடரும்)

( பாகம் 1 ) 

https://yogiperiyasamy.blogspot.com/2022/06/1-lang-tengah-terengganu.html 

நன்றி: வானம்பாடி 17/7/2022


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக