செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

இந்நாட்டிற்கு பெண்ணியம் அவசியமே


மிக அண்மையில் மலேசிய சிங்கப்பூர் இலக்கிய பெண்கள் கலந்துரையாடல் ஒன்று இணையத்தில் நடத்தப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த அச்சந்திப்பின் நெரியாளர், மலேசியாவில் பெண்ணிய எழுத்து என்பது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்ற கேள்வியை முன் வைத்தார். அதற்கு பத்திரிகை நிருபர் மற்றும் இந்திந்த விருதுகள் வாங்கியிருக்கிறார் என்று அறிமுகம் செய்துவைத்த அந்தப் பெண் சொன்னார், 

“என் பார்வையில் நான் கேட்கிறேன். மலேசிய பெண்கள், சுதந்திரமுடன் இல்லையா? அவர்கள் இரவு 12 மணிவரை வாட்சாப்பில் இருக்கிறார்கள். முகநூலில் இருக்கிறார்கள். அவர்கள் இவ்வளவு சுதந்திரமுடன் இருக்கும்போது இன்னும் என்ன பெண்ணியம் பேசனும், எனக்கு புரியவில்லை/ ஆனால், இந்த பெண்ணிய சுதந்திரம் நாட்டுக்கு நாடு மாறுபடலாம்” என்றார். 

 இதன் வழி ஒரு பார்வையாளராக நான் புரிந்துக்கொண்டது ஒரு விஷயம்தான். “எனது பார்வையில்” என்ற பாதுகாப்பான ஒரு வரியை கூறி, அந்த ஊடகவியலாளரின் பார்வை எத்தனை குறுகியதாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 

 மலேசியாவில் கடந்த மாதம் நடந்த சில சம்பவங்கள் குறித்து நான் இங்கு பேச நினைக்கிறேன். உண்மையில் இந்த எழுத்துக்கான நோக்கமும் அதுதான். மலேசியாவிலிருக்கும் பெண் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு எனக்கு இந்தக் காலக்கட்டம் மிகச் சரியான காலக்கட்டம் என தோணுகிறது. முற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத மூன்றுப் பெண்களுக்கு நேர்ந்திருக்கும் இந்தச் சம்பவங்களிலிருந்து பெண் சுதந்திரத்தை மலேசியாவில் எப்படி வரையறுத்துக்கொள்ளலாம் என்பதை வாசகர்களோ அல்லது மலேசியர்களோ முடிவெடுத்துக்கொள்வீர்களாக. 

 அதற்கு முன்னதாக நள்ளிரவு 12 மணிவரையிலோ அல்லது அதையும்தாண்டியோ முகநூலில் இருக்கும் பெண் சுதந்திரமானவள் என்ற கற்பனை உலகை விட்டு வரமுடியாதவராக நீங்கள் இருந்தால் இந்த இடத்தில் என் கட்டுரையை வாசிப்பதை நிறுத்திவிட்டு, நீங்கள் உங்கள் கனவுலகத்திற்கே செல்லலாம். காரணம் நான் பேசப்போகும் நிகழ்காலம் உங்கள் கனவுலகைவிட மோசமானதாகவும் கவலையை ஏற்படுத்தக்கூடியதாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கலாம். 

உங்கள் கனவுலகம் மிக அழகானது, அர்புதமானது. பெண்கள் அங்கு சுதந்திரமாக இருக்கிறார்கள். நான் பேசப்போகும் நிகழ்கால உலகில் பெண்கள் தங்களுக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள். தங்களுக்காக பேச யாருமில்லையே என்று தவிக்கிறார்கள். அவர்களின் குரல்களோடு அவர்களின் கண்ணீரும் பேசுகிறது. விம்முகிறது. ஆனால், அந்தக் கேவலைக் கேட்ககூடிய செவிகளைக்காட்டிலும் ஏளனம் செய்யும் நாவுகளே அதிகமாக இருக்கிறது.



 முதலாவதாக பேராக் மாநிலத்தின் ஒரு வட்டாரத்தில் 16 வயது பெண், வீட்டிலேயே பிரசவித்து, அந்தக் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டின் கூரையின் மீது தூக்கி எறிந்திருக்கிறாள். சத்தம் கேட்டு ஓடிவந்த சுற்றத்தார் ஆபத்தான நிலையில் இருந்த அந்தக் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த 16 வயது பெண்ணை போலீஸ் விசாரனைக்காக கூட்டிச் சென்றார்கள். இந்தச் சம்பவத்தை பொது ஜனங்கள் எப்படி பார்க்கிறார்கள்? அந்தப் பெண், நெறி தவறிவிட்டாள் என்றும், கற்பு இழந்துவிட்டாள் என்றும், தாய்மையை அறியாதவள் என்றும் இன்னும் ஒட்டுமொத்த வசவுகளையும் அவள் மீது வைக்கின்றனர். இந்தக் குற்றத்திற்கு காரணமான ஆணைக்குறித்து கேள்வி கேட்க எந்த தரப்பினருக்கும் தோணவே இல்லை. அப்படியே கேட்டாளும் அது பொதுவில் வருவதே இல்லை. இதன் தார்ப்பரியம் என்ன என்பதும் எனக்கு விளங்குவதும் இல்லை. 

மேலும், அவள் வயது குறைந்தவள் என்ற ரீதியில் குழந்தையாக பாவித்துச் சட்டச் சிக்கலுக்குள் கொண்டுச் செல்லாமல் சிறார் சீர் திருத்ததிற்கு கொண்டுச் செல்லப்படுவாள். ஒரு தாய் பிரசவிக்கும்போது உடம்பிலிருக்கும் 100 எழும்புகள் உடைபடும் வலியை அவள் எதிர்கொள்கிறாள் என்கிறார்கள். அதற்கு முன்பான அத்தனை வலியையும் தாங்கிக்கொண்டு, தன் கற்பத்தை மறைத்து அந்தப் பெண் உடல் ரீதியாகவும் உளைவியல் ரீதியாகவும் தன்னை எதிர்கொண்டு பயந்து பயந்து வாழ்ந்திருக்கிற அந்தக் காலக்கட்டம் மிக நீண்டதாக இருக்கிறது. அவள் திருமணம் ஆகாமல் பிள்ளை பெற்றது தப்பு என்றால் அந்தத் தவறுக்கு காரணமான ஆணும் குற்றவாளிதானே. 

அந்தக் குற்றத்திற்கு அவனுக்கு தண்டனை கிடைக்கலாம். ஆனால், அந்தக் குழந்தைக்கு அவன் பொறுப்பேற்கிறானா? இயற்கையின் நியதியில் பெண் உயிரியே குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவள் என்றக்கூற்று பெண்ணுக்கு சாபமாக மாறிவிடக்கூடாது அல்லவா? அதோடு அந்த நியதியை பல நேரங்களில் ஆண்கள் சந்தப்பமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்ற ஐயமும் வருகிறது. உடல் வலியோடு, பெற்ற குழந்தையை வைத்திருக்கவும் மன தைரியம் இல்லாமல், தனக்கு என்ன நடக்கிறது அல்லது என்ன செய்வதென்று அறியாமல் அந்தப் பெண் எடுக்கும் முடிவு சரியான முடிவு அல்லதான். ஆனால், இப்படியான தவறுகள் நடந்துவிடும் பட்சத்தில் அவள் என்ன செய்ய வேண்டும் என்றும், அவளைச் சார்ந்தவர்கள் அவளிடம் எவ்வகையில் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதலும் நம்மிடையே இருக்கிறதா? அவள் மேல் வசப்பாடுவதைத் தவிர நமது பங்கு ஏன்ன? இந்தப் பிரச்னைக்கு இன்னும் நம்மிடையே சரியான கண்ணோட்டமில்லை. 

தவிர, ஆண்கள் தொடர்ந்து இவ்விவகாரத்தில் தப்பித்துக்கொள்வதும் ஞாயமே இல்லாத ஒன்று. அதையும் தாண்டி இம்மாதிரியான பிரச்னைகளை பெண்ணினம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்க, அதற்காக பேச வேண்டிய தேவை பெண்ணியத்திற்கு இல்லையா? 


 
இரண்டாவது சம்பவம், நாடாளுமன்ற கூட்டத்தில் நடந்தது. நாடாளுமன்றத்தில் சொற்ப எண்ணிகையே கொண்டிருக்கும் பெண்களில் ஒருவரான கஸ்தூரிராணி பட்டுவை, அவையில் இருந்த இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் நிறத்தை கேலி செய்த விவகாரம் தொடர்பானது. இருட்டாக இருக்கிறது என்றும் கண் தெரியவில்லை என்றும், பௌடர் பூசிக்கொள்ளுங்கள் என்றும் சக பேச்சாளர் பேசியது அருவருப்பின் உச்சம். அதற்காக மன்னிப்புக்கேளுங்கள் என்று எழுத்த கண்டனத்திற்கு எந்த மதிப்பும் அப்போது இல்லை. சம்பந்தப்பட்ட நபர் அந்த பேச்சை மீட்டுக்கொள்கிறேன் என்று மட்டும் சொன்னாரே தவிர, தான் பேசிய அந்த திமிர்தனத்திற்கு வருத்ததையோ, மன்னிப்போ கேட்கவில்லை. தொடர்ந்து அவர் அவையில் அமர்ந்திருந்ததுதான் வேடிகையாக இருக்கிறது. (பிறகு, பல கண்டனங்கள் எழுந்ததிற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அப்துல் அசிஸ் என்ற அந்த நபர் மன்னிப்புக் கேட்டார் என்று சொல்லப்படுகிறது.) கஸ்தூரி பட்டுமாதிரியான அரசியல் சக்தி வாய்ந்த பெண்களே இவ்வாறான நக்கலையும் நையாண்டிகளையும் சந்திக்கிறார்கள் என்றால், கடநிலையில் நிற்கும் பெண்கள் நிலை என்ன? இந்த இடத்தில் பெண்ணியம் பேசாமல் என்ன பேசுவது? 



 மூன்றாவது சம்பவமாக நாட்டு மக்களை குறிப்பாக மலேசிய பெண்களிடத்தில் மிகவும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றமடைய வைத்திருக்கும் விவகாரம். அது சுகுபவித்ரா பற்றியது. மிக குறுகிய காலத்தில் அதாவது இந்த ஊரடங்கு காலத்தில் வலைதலத்தில் நாடுதழுவிய ரீதியில் புகழ்பெற்ற ஒரு சாதாரண ஏழைக் குடும்பப் பெண். தனது மலாய்மொழி ஆற்றல் மற்றும் சமையல் நுணுக்கங்களை கொண்டு ஒட்டுமொத்த மலேசியாவையும் திரும்பி பார்க்க வைத்தவள். கூரையை பிய்துக்கொண்டு வந்தக் கொட்டிய மாதிரியே தன் புகழையும் ஒரே நாளில் தொலைத்தவள். பவித்ராவின் இந்த நிலைக்குக் காரணம் என்ன? முன்னதாக பவித்ராவுடன் இணைந்து சமையலில் உதவிப் புரியும் பவித்ராவின் கணவர் சுகுவைக் குறித்து பலர் புகழ்ந்து கருத்துகளை தெரிவித்தனர். அவர்களின் ஏழ்மை வாழ்கையிலிருந்து, பற்பல படிக்கு உயற்தியதற்கு அவர்களின் இருவரின் முயற்சிதான் காரணம். ஆனால், இதே காலக்கட்டத்தில் சுகு தன் மனைவியை பொது இடத்தில் தாக்குகிறார் என்றால், மதுவினால் அவர் மதி இழந்திருந்தார் என்பது மட்டும் அல்ல. இது முதல்முறையாக நடப்பதாகவும் தெரியவில்லை. இது அவர்களின் குடும்ப விவகாரம் என்றாலும் தனது புகழுக்கு காரணமாக இருந்த அத்தனை வீடியோவும் பவித்ரா அழித்தது அவரின் மன உளைச்சலை தெளிவாகவே காட்டுகிறது. ஒரு பெண்ணாக அவரின் மனதை என்னால் நன்கு உணர முடிகிறது. 

இந்தப் பெயர் புகழ் பாராட்டு அனைத்தையும் தன்னோடு பகிர்ந்துக்கொள்ளும் கணவனுக்கு அதுக்குறித்த மதிப்பு தெரியவில்லை எனில் நான் கடந்த காலத்திற்கே போகிறேன் என அவர் திரும்பிச் செல்வது சாதாரண ஒரு முடிவு அல்ல. இதற்கு பின்னால் இருக்கும் ஆதிகமானது மிக கொடிய நஞ்சுப் போன்றது. தனது வளர்ச்சியை துணைவரால் தாங்க முடியாமல் போகும் என்று எந்தப் பெண் நினைப்பாள்? அது நிகழ்ந்துவிடும்போது அவளின் முடக்கம் ஒன்றே அவளின் ஆறுதலாக இருக்கும். ஆனால், இந்தப் பிணக்கம் தீரும்போதுதான் தான் எடுத்த முடிவு தவறு என்று அந்தப் பெண் உணர்கிறாள். அதற்குள் காலம் அவளின் கதைகளை மென்று துப்பிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போயிருக்கும். (தற்போது சுபத்ரா மீண்டும் தனது வலைப்பக்கத்தை தொடங்கியிருப்பதாக அறிகிறேன். ) 

கணவன் தன் வலிமையைக்கொண்டு மனைவியை அடக்க நினைப்பதும் , முடக்க நினைப்பதும் மலையேறிவிட்டது என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு எல்.ஆர்.டி நிலையத்தில் தன் கர்ப்பனி மனைவியை தாக்கிய அவள் கணவனிடமிருந்து விடுதலை பெற்றுத்தாங்கள். தினம் தினம் அடி வாங்கிக்கொண்டிருக்கிறேன் என அந்தத் தாய் கதறுவதை பார்த்தேன். மஸ்ஜிட் இந்தியாவில் சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று பாராமல் யாரிடமோ தொலைபேசியில் கண்ணீர் வடிய வடிய பேசி கதறுகிறாள் ஒரு பெண். இணைய பண மோசடியில் சிக்கி காப்பாற்ற யாருமில்லாமல் சிறையில் தவிக்கிறாள் ஒரு பெண். இவர்களுக்காகவும் இவர்களைப்போல வெளியில் சொல்லமுடியாத பிரச்னைகளை சுமந்து வாழ்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் பெண்களுக்காக பேசப்படுவதும் பெண்ணியம்தான். 

இதெல்லாம் பெண்ணிய வரையரைக்குள் வராது என நீங்கள் கூறினால் தயவு செய்து உங்கள் கனவுலகத்தை இடித்துவிட்டு வந்து பேசவும். நன்றி. 



2 கருத்துகள்:

  1. சிறப்பான தெளிவான பார்வை தோழர் யோகி!

    இரவு 12 மணிக்கு மேலும் முகநூலில் பெண்கள் இருப்பதைப் பெண்ணியமாகப் பார்க்கும் அந்தப் பெண்ணின் அறிவுப்போதாமையை அழகாக எடுத்துக்காட்டி விட்டீர்கள் யோகி

    பதிலளிநீக்கு