திங்கள், 27 ஜூலை, 2020

வட்டி முதலைகள் இடத்தை, இணைய மோசடிகும்பல் பிடித்திருக்கின்றனரா? (கட்டுரை)



 ஒரு காலக்கட்டத்தில் மலேசியாவில் பெரிய பிரச்னையாக இருந்தது வட்டி முதலைகள் பிரச்னையாகும். இந்த வட்டி முதலைகளின் பண மோசடியில் விழுந்து வீழ்ந்த பலப்பேரை மலேசிய மண் சத்தமில்லாமல் தனக்கு இரையாக்கியிருக்கிறது. ஆனால், சிலரின் மரணங்கள் நாட்டையே சலசலப்பு அடையவைத்து இந்த வட்டி முதலைகளின் கொட்டத்தை அடக்கியும் இருக்கிறது.

வட்டி முதலைகளின் பிரச்னைகள் தீர்ந்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. ஆனாலும் அதன் தொடக்ககால வீரியம் குறைந்திருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால், தற்போது இணைய வழி நடைபெறும் பண  மோசடியானது வட்டி முதலைகளின் பண மோசடியைக் காட்டிலும் பல மடங்கு தீவிரமாக இருக்கிறது மிகவும் அதிர்ச்சியாக மட்டுமல்ல நாட்டு மக்களிடத்தில் பெரிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இணைய தொழில்நுட்ப வளர்ச்சியானது மனித குல மேம்பாட்டுக்கு உதவுகிறதோ இல்லையோ, ஆனால் ஏழைகளின் வாழ்கைக்கு அது ஒரு கொல்லிகட்டையாக மாறிவிடுவதில் தயங்குவதில்லை.

'ஸ்கேம்' என்று சொல்லக்கூடிய இந்தப் பண மோசடிக் கும்பல் குறித்து பெரிதாக யாரும் வெளிபடையாக புகார் அளிப்பதில்லை. தவிரவும் அதற்கான சந்தர்ப்பங்களும் சாதகங்களும் சரியாக அவர்களுக்கு அமைகிறதா என்பது மற்றுமொரு பிரச்னையாகும்.

கடந்த வாரத்தில் மலேசிய சோசலிசக் கட்சி அலுவலகத்தில் இது தொடர்பாக நடத்தபட்ட ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நாட்டு மக்களிடத்தில் பல கேள்விகளையும் அதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தமது கஷ்டத்திற்காக முகநூலில் பதிவிட்டிருந்த கடன் கொடுக்கும் விளம்பரத்தைப் பார்த்து, தமக்கு உதவிக் கிடைக்கும் என்ற நம்பிகையில் கடனுக்கு விண்ணப்பித்த ஒரு குடும்பத்தின் பரிதாபக்கதையை பிஎஸ்எம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.  

எத்தனையோ சம்பவங்கள் இருக்க இந்தக் கதையை பிஎஸ்எம் வெளிகொண்டுவந்ததற்கான காரணம் என்ன? என்ன நடந்தது?

வள்ளி மற்றும் ஆறுமுகம். இந்த ஜோடி கண்ணில் காணாத ஒரு பண மோசடி கும்பலின் வலையில், தன்னையும் அறியாமல் சிக்கி பின் அதிலிருந்து இனி மீள முடியாது என்று கடைசி நம்பிகை எனும் கயிரும் அறுந்துவிட அவர்கள் நாடியது தற்கொலை எனும் முடிவை. தமக்குப் பிறகு இந்தக் கடன் தன் வாரிசுகளையும் பின் தொடர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்களையும் தன்னுடனேயே இந்த உலகத்தை விட்டு வந்துவிடுமாறு கூறியிருக்கிறார்கள். அவர்களின் மூத்த மகள் இந்த மரணத்தில் உடன்படாமல் தன் தாத்தா-பாட்டியிடம் நடக்கவிருப்பதை கூறவிட அவர்கள் வந்து அந்த அசம்பாவித்தை தடுத்து, தற்போது இப்பிரச்னைக்கு ஒரு முடிவு ஏற்பட பிஎஸ்எம் உதவியை நாடியிருக்கின்றனர்.



முன்னதாக அவர்கள் முகனூல் வழி, காணப்பட்ட ஒரு நிறுவனத்திடம் கடனுக்கு விண்ணப்பித்தபோது, வங்கியில் செயல்படுவதைப் போன்றே அவர்களின், சம்பள ஆதாரம், வங்கி ஆதாரம் உள்பட எல்லாத்தையும் அந்த மோசடிக் கும்பல் வாங்கியிருக்கிறது. தொடக்கத்தில் ஆறுமுகம் விண்ணப்பம் செய்தார். அவர் கோரியது 15 ஆயிரம் வெள்ளிக்கான கடனுதவி. அந்த விண்ணப்பம் தாமதம் ஆகவே, வள்ளியின் பெயரில் கடனுதவி பெறலாமா என்று முகநூல் வழியாக மீண்டும் முயற்சிக்கும்போது, முகம் காட்டாத, டோமி எனும் பெயர்கொண்ட ஒரு நபர், கடன் கொடுப்பதாக முன்வந்திருக்கிறார். மாதச் சம்பளம் குறைவாக இருந்தாலும், சேம நிதி போதுமானதாக இருப்பதால் விண்ணப்பிக்க முடியும் என்று நம்பிக்கை கூறி வேலையில் இறங்கிறார்.  

இந்த விண்ணப்பம் செய்து காத்திருந்தக் காலக்கட்டத்தில் சந்தேகம் ஏற்படும் வகையில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட கடன் நிறுவனத்திடம் கேள்விகள் கேட்டபோது, கடனைப் பெற்ற மற்றவர்களின் புகைப்படங்களை ஆதாரமாக காண்பித்து, ஆறுமுகம்-வள்ளிக்கு நம்பிகையை வழுக்க செய்திருக்கின்றனர். பின் இவர்களின் வங்கி கணக்கை தரமாக மாற்ற வேண்டும் என்று கூறி, அதற்கு கடன் நிறுவனமே உதவுவதாக சொல்லி, அவர்களை புதியதாக  வங்கி கணக்கை ஆரம்பிக்கச் சொல்லி, அதன் ஏ.டி.எம் கார்ட்டை அவர்களுக்கு தபாலில் அனுப்ப சொல்லியிருக்கின்றனர். கூடவே புதியதாக ஓர் அலைபேசி எண்ணையும், இவர்களின் பெயரிலேயே பதிவு செய்யச் சொல்லி அதையும் சேர்த்து அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். கடனுதவி அவசியமாக தேவைப்படும் பட்சத்தில் இவர்கள் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்திருக்கின்றனர் இந்த ஏழை ஏமாளிகள்.

கடனுதவி கிடைக்கும் என்ற நம்பிகையில் இருந்தவர்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு பேரிடியாய் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அழைத்தது காவல் நிலையத்திடமிருந்து. அவர்களை நேரில் வர சொன்னதும், என்ன ஏது என்று விவரம் அறிய போனவர்களின் வாழ்கையே இன்று புரட்டிப்போடப் பட்டிருக்கிறது. பேராக், ஜொகூர், பினாங்கு,கோலாலம்பூர் என வள்ளி-ஆறுமுகம் இருவரின் பெயரிலும் தற்போது 27 இணைய பண மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.


ஒவ்வொரு வழக்கிற்கும் ஜாமின் கட்டுவதற்காக தன்னிடம் மிச்சமிருந்த கார், மோட்டார் சைக்கிள், இன்னும் இதர பொருட்கள் என அனைத்தையும் விற்று தீர்த்துவிட்டதாகவும், கொடுப்பதற்கு இனி உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதால் இந்த மன உளைச்சலிலிருந்து விடுபட மரணத்தை நாட முடிவெடுத்தோம் என வள்ளி சொல்லும்போது, அந்த வலியை, ஏழ்மை நிலையில் இருக்கும் யாராலும் புரிந்துக்கொள்ள முடியும்.

பிஎஸ்எம் என்ன சொல்கிறது? 

இந்த பண மோசடி அல்லது ஊழல் தொடர்பாக ஆறுமுகம் மற்றும் வள்ளி இருவருமே போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிகையும் எடுத்ததாக அறியமுடியவில்லை. காரணம் அவர்கள் கணக்கில் போடப்பட்டதாக சொல்லப்படும் பணத்தை எங்கு யாரால் எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை, அங்கிருக்கும் ரகசிய கெமராக்களில் சோதித்தால் போலீசுக்கு இந்தக் மோசடி கும்பல் குறித்து அறிய முடியும். ஆனால், புகார் கொடுத்தவர்களையே குற்றவாளிகள் என கூறி அவர்களை கைது செய்கின்றனர். அதைவிடவும், இந்தத் தவறை அவர்கள்தான் செய்தார்கள் என்று ஒப்புக்கொண்டால் அவர்கள் செலுத்தக்கூடிய  அபராதப் பணம் குறைவாகவும், குற்றத்தை மறுக்கும் பட்சத்தில் ஜாமின் தொகை மூன்று மடங்கு அதிகமாகவும் விதிக்கப்படுகிறது. பணம் இல்லாதவர்கள் எப்படி பணத்தை செலுத்த முடியும்? எனவே அவர்கள் இந்த சிக்கலிலிருந்து விடுபட குற்றத்தை ஒப்புக்கொள்ள போலீஸ் தரப்பு ஊக்கப்படுத்துவதாக  தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிட்டு பிஎஸ்எம் நாட்டின் தலைமை நீதிபதிக்கும், சட்டமன்றத்தலைவர் காவற்படையின் தலைவர், வழக்கறிஞர் மன்றத்தலைவர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதியுள்ளது.  

இன்று நாம் இந்த விவகாரத்தை பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் டெங்கிலைச் சேர்ந்த 34 வயது கொண்ட இந்தியப் பெண்மணி ஒருவர் இதேமாதிரியான பண மோசடி வழக்கில் சிக்கி, வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாநிலம் மாநிலமாக ஓடிக்கொண்டிருக்கிறார். ஜாமின் பணம் செலுத்த தவறினால் சிறையில் தள்ளுப்படுவதைத் தவிர்க்க 4 பிள்ளைக்குத் தாயான அவர் தற்போது பிஎஸ்எம் உதவியை நாடியிருக்கிறார்.

இந்த இணைய பண மோசடியால் மலேசியாவில் எல்லா இன மக்களுமே பாதிக்கப்படுகின்றனர். காஜாங்கில் மலாய்க்கார பெண்மணி ஒருவர் மீது 70 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவரால் ஜாமின் பணம் செலுத்த முடியாததால் தவறே செய்யவில்லை என்றாலும் வேறு வழியில்லை என்று சிறையில் இருக்கிறார். இந்த மாதிரி எத்தனை வழக்குகள் இருக்கிறது என்பது நமக்கு ஒட்டுமொத்தமாக தெரியவில்லை. ஆனால், இந்த விவகாரத்தை இப்படியே விட முடியாது. வறுமை, ஏழ்மை, அவசியப் பணத்தேவை உள்ளிட்டக் காரணங்களினால் பணம் கடன் பெறலாம் என்று முடிவெடுக்கும் ஒருவரின் உயிரே அபாயத்தில் சிக்கவைக்க சில கும்பல் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் செயல்படுகின்றனர். யாரோ செய்யும் குற்றம் அப்பாவிகள் பலியாவது கவலையை தருகிறது. 15 வெள்ளி கடனுதவி விண்னப்பம் செய்து இன்று 2 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி பண மோசடி வழக்கில் சிக்கியிருக்கும் ஆறுமுகம்-வள்ளி தம்பதிகளின் கதை எல்லாருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். ஸ்கேமர்களுக்கு ஓர் உயிர் என்பது தூசுமாதிரியாக தெரியலாம். அந்த உயிரின் மதிப்பு அவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால், குடும்ப பொறுப்பை சுமக்கும் ஒவ்வொருவரும் அறிவார்கள் அதன் எல்லையில்லாத மதிப்பை.


நீதிக்காக போராடுவோம். 

யோகி
நன்றி 26/7/2020 தமிழ்மலர் நாளேடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக