சனி, 4 ஜூலை, 2020

அன்புள்ள ஊடறுவுக்கு என் அன்பும் -16-வது வயது வாழ்த்துகளும்


2015 ஆம் ஆண்டு முதல் முறையாக ஊடறு பெண்கள் சந்திப்புக்கு அழைக்கப்பட்டபோது, எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம், முன்னணி பெண் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அனைத்துப் பெண்களுக்கான தளமாக இருந்த ஊடறுவை நான் கவனித்து வந்தது பெரிதில்லை. பெண் சுதந்திரம் பேசும் எந்தப் பெண்ணுக்கும் ஊடறுவை தெரியாமல் இருக்காது

ஆனால், பல பெண்களின் குரலாக ஒலிக்கும் ஊடறு கவனிக்ககூடியவளாக நான் இருந்தது என் நகர்வுகளின் மீது எனக்கே நம்பிக்கை கொடுத்தது என்று தாராளமாக சொல்லலாம். ஊடறுவிடனான எனது தொடக்கமும் அப்போது தான் தொடங்கியது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஊடறுவோடும் அதன் இயக்குனர் (அம்மா) றஞ்சியோடும் இணைந்து செயலாற்றக்கூடிய சந்தர்ப்பங்களில் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, பெண் மொழியும் பெண் எழுத்தும் வெறும் வாசிப்பால் மற்றும் வந்துவிடுவதில்லை. அது ஒரு சிந்தனை திறப்பு. அதன் திறவியானது செயற்பாடுகளில்தான் உண்டு என எனக்கு தோன்றுகிறது. அவ்வாறான பெண்களுடனான சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் அதைவிடவும் அவர்களோடு இணைந்திருக்கும் சில நாட்களில் உண்மையில் அவர்கள் யார் என்ற அடையாளப்படுத்துதலும் என்னை பலவாறாக கலைத்துப் போட்டு சிந்திக்க வைத்திருக்கின்றன. இன்று என்னுடைய பெண்கள் சுதந்திரம் தொடர்பான புரிதலுக்கு ஊடறுவின் பங்கு கணிசமாக உள்ளது என்பது மறுப்பதற்கு இல்லை.


பெண்களின் செயற்பாடுகள், பெண் மொழி, பெண் எழுத்துக்கள் உள்ளிட்ட விடயங்களுக்கு பெண்களிடத்தில் ஆதரவு எப்படி இருக்கிறது என்று என்னிடம் கேட்டால், அதற்கான பதில் எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழ்ப்பெண்கள் அதாவது தமிழ்நாட்டுப் பெண்கள் மீது புனிதம் கட்டமைத்தும், மலாயா பெண்களுக்கு ஏன் அந்தப் புனிதம் வசப்படவில்லை என்பது மாதிரியான ஒருவரின் கேள்வி மற்றும் அதற்கான பதில் குறித்தும் எழுதியிருந்தேன். அதில் வந்து எழுதிய அத்தனை பேரும் ஆண்கள்தான். சில மணி நேரத்திற்கு அந்தப் பதிவில் ஒருப்பெண்கள்கூட விருப்பக் குறியும் இடவில்லை. பின் ஆதரவாக சில விருப்பக்குறிகள் விட்டிருந்தனர். (8பேர்)

பதிவின் இறுதியில் நான் எழுதியது இதுதான்.

தமிழ்ப்பெண்கள் என அவர்கள்மீது புனிதத்தை கட்டமைப்பதும் அவர்களை ஒடுக்குவதற்கு சமமானது என்பது என் கருத்து. தயவு செய்து அது யாராக இருந்தாலும் நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழ்நாடோ எந்நாடோ எங்களுக்கு எப்படி வாழ்வதென்பது தெரியும்.

நான் தவறாக எழுதியிருக்கேனா அல்லது அதில் ஆணாதிக்க சிந்தனை ஏதும் இருக்கிறதா என்று என் எழுத்தில் நானே தேடிப்பார்கிறேன். ஒரு வேளை பெண்களின் புனிதத்தை எழுதியிருந்தால் பெண்கள் ஆதரித்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. என் பெண்ணிய சிந்தனை மீது கல்லெரியப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

16 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஊடறு, பெண்களுக்கான தளம் என்ற நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்திருக்கிறது. கொடுத்தும் வருகிறது. பேதம், வர்கம், இனம், மொழி, அந்தஸ்து என்று அனைத்தையும் ஊடறுத்து பெண் என்ற ரீதியில் அனைவரும் சமமே என்று செயலில் காட்டுவதற்கு ஊடறுவினால்தான் முடிகிறது. தனக்கான தனித்துவத்தை அது அமைத்துக்கொள்ளவில்லை. சுயம் அதற்கு இன்னொரு பெயர்தான் ஊடறு. நன்றி

 ஜூன் 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக