ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஆஹார்யம் பூசிய கூத்து

என் தாத்தா பெண் வேடமிட்டு, மேடையில் கூத்து கட்டியவர். அவரின் ஒரே ஒரு புகைப்படத்தைக் காட்டி என் பெரியம்மா என்னிடம் கூறியபோது நான் அதை அத்தனை விருப்பமாக பார்த்தேன். அப்போது எனக்கு ஆறு வயது இருக்கும். தோட்டத்துக் கோயில் திருவிழாவில், ரதத்தின் ஊடே பொம்மலாட்டம் ஆடிக்கொண்டு போவார்கள். ஒரு மின்வெட்டுப்போல இன்றும் மனதில் உள்ள காட்சி அது. ஆட்கள்தான் உள்ளிருந்து ஆடுகிறார்கள் என்று குழந்தை மனதுக்குத் தெரிந்திருக்கவில்லை. பொம்மை ஒன்று ராட்ஷச உருவம் கொண்டு ஆடுவதாக நினைத்திருந்தேன். அதன் பிறகு அந்த ஆட்டத்தைத் தோட்டத்திலேகூட நான் காணவில்லை. 

பலவருடங்களுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் காமன் திருவிழாவை பார்க்ககூடிய வாய்ப்புக் கிட்டயது. கதையின் அடிப்படையில் அது 10 நாட்கள் கொண்ட திருவிழாவாக இருந்தது. காமனும் ரதியும் மணந்து, பின் சிவனின் சாபத்தால் காமன் வீழ்ந்து, பின் ரதி தாலியறுத்து வீடு வீடாக யாசகம் கேட்பதைப் போன்று கதையை அமைத்திருக்கிறார்கள். நான் ஒருநாள் மட்டுமே அதைக் கண்டு வந்தேன். தொடர்ந்து செல்வதற்கு என் நிருபர் பணி என்னை அனுமதிக்கவில்லை. வரும் பிப்ரவரி மாதத்திற்காக நான் திரும்பவும் காத்திருக்கும் வேளையில், கேரளத்து பாரம்பரிய இசையான செண்டை மேளத்துடன், வாய்ப்பாட்டுடன், தெருக்கூத்து அல்லது கட்டுக்கூத்து என்று அழைக்ககூடிய இந்திய பாரம்பரிய நடனத்தைக் காண்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. 

‘சிரியம்மா! சிரி’ என்று தலைப்புக்கொண்ட அந்தக் கூத்து நிகழ்சியை வழங்க 15 கலைஞர்களுடன் டாக்டர் வி.ஆர்.தேவிகா வந்திருந்தார். கர்நாடகா பேங்கலூரைச் சேர்ந்தவர். முதல் பார்வையிலேயே மனதை கவரும் புன்னகையை அவர் கொண்டிருந்தார். “இந்தத் தெருக்கூத்து” எனத் தொடங்கினேன்.. 
சிலர் தெருக்கூத்து எனவும் சிலர் கட்டைக்கூத்து எனவும் இந்தக் கலையை விழிக்கிறார்கள் எனத் தேவிகா தெரிவித்தார். தெருக்கூத்து எனும்போது ஆங்கிலத்தில் நேரடியாக Street Teatre என்று மொழிபெயற்க படுகிறது. இது உண்மையில் Street Teatre அல்ல. இந்தக்கூத்துக்கும் ஆன்மிகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மகாபாரதம் மற்றும் ராமாயணம் சம்பந்தப்பட்ட ஆன்மீக நெறிக்கூத்துகள் இறைவன் சந்நிதானத்திலும் அல்லது வெளியிலும் நடக்கிறது. இதன் காரணத்தினாலேயே இதைத் தெருக்கூத்து என்று அழைக்க வேண்டாம் என்பதுடன், கட்டைக்கூத்து என அழைக்கச் சொல்கிறார்கள் எனத் தேவிகா தெரிவித்தார். 

கூத்துக் கலைஞர்களுடன் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது 1975-ல். 56 கூத்துகளைகளுடம் பாரம்பரிய கலை குழுக்களை இவர் ஆய்வு செய்துள்ளார். பள்ளி ஆசிரியரான இவர், பட்டணத்து பள்ளி மாணவர்களிடத்தில் கூத்துக்கலையைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதையறிந்து, அதன் தேவைக்கருதி, அவர்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் கிராமங்களுக்குச் சென்று, கூத்துக் கலைஞர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதன் விளைவாக அவர் கூத்து பள்ளியை நடத்துவதற்குக் காரணமாக   அமைந்தது எனத் தேவிகா தெரிவித்தார். 

கலைகளில் கூத்துகட்டுக்கிறவர்கள் மட்டும்தான் எல்லாச் சுதந்திரத்தோடும் நடனத்தை வழங்க முடியும். அவர்கள் இலக்கன ரீதியாகவோ அல்லது ஒரு கட்டுக்குள் அடங்குயவாரோ கூத்துக்கட்டுவதில்லை. அவர்களின் ஸ்கிரிப்டில் இல்லாத வசனத்தைக்கூட அந்த நேரத்திற்கு ஏற்றமாதிரி வழங்கமுடியும். இந்தியாவில் தெருக்கூத்துக்கான களம் தோய்வு அடைந்திருந்தாலும், நடைபெறும் சில இடங்களில் மிக நிறைவாகத்தான் செய்கிறார்கள். காலத்திற்கு ஏற்ற மாதிரியான நக்கலும் கிண்டலும் நையாண்டியும் கலந்து பேசும் வசனங்கள், அவர்கள் கூத்துக் கட்டுவதற்கான முழுச் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது எனத் தேவிகா கூறும் போது, 
‘சிரியம்மா சிரி’-யில் கோணங்கி கூத்தில் பேசிய ஆங்கில வசனங்கள் ஒரு முறை நினைவுக்கு வந்து போனது. 

முகத்தில் ஆஹார்யம் பூசிய கதக்களி கூத்து, முகமூடிகள் அணிந்த கூத்து, காவடியாட்டம், பொய்கால் குதிரை, கொரத்தி, கோணங்கி, பரதம் எனக் கூத்துகளில் உள்ள பிரிவுகளை இரண்டு மணி நேரத்தில் கதைக்குத் தகுந்த மாதிரி எந்த வகைச் சிக்கலும், சொதப்பலும் இல்லாமல் வடிவமைத்திருந்தார்கள். அடவுகளற்ற அசைவுகள் என்றாலும், கண் இமைப்பதற்குகூட என்னை யோசிக்க வைத்தது. 

இந்த ‘சிரியம்மா சிரி’ என்ற தலைப்புக்கொண்ட இந்தக் கூத்து கூறிய கதை என்ன? இது எப்படிப் பெண்ணியத்தின் சாளரமாகும்? 
மகாபாரதமும், ராமாயணமும் காவியமாவதற்கு முதல் காரணமாக அங்குப் பெண்தான் இருக்கிறாள். எந்தக் கதாபாத்திரத்தில் என்ற கேள்வி அவசியமற்றது. எல்லாப் பெண்களுக்கும் அதில் சரி பங்கு உண்டு. மாபெரும் போர் சூழ்கிறது இருண்டு காவியத்திலும். வாலி வதம் தொடங்கி, ராவணன் வீழும் வரை, சகுனியின் வஞ்சம் தொடங்கித் துரியோதனன் மரணிக்கும் வரை எங்கும் பெண்தான் இருக்கிறாள். இதில் முக்கியமாகப் பேசப்படும் கதா பாத்திரமாகச் சீதாவும், திரௌபதியும் இருக்கிறார்கள். அவர்களைச் சராசரி பெண்களாகப் பார்ப்பதில்லை. அம்மனின் அவதாரமாகப் பூஜிக்கிறார்கள். கடவுளின் அம்சமாக இந்த இரு பெண்களுக்கும் ஓர் இடமுண்டும். அதன் காரணத்தினாலேயே தெருக்கூத்தில் மகாபாரதமும்-ராமாயணமும் திரும்பத் திரும்ப முன்னெடுக்கப்பட்டு இந்தப் பெண்களை முன்னிருத்துகிறார்கள். 

கற்பை சோதிக்க ‘தீ குளிக்க வேண்டும்’ என ராமன் கூறியபோது, சீதையின் மனதில் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிய தீ அணைந்திருக்குமா? சூதாட்ட சபைக்குத் துச்சாதனன் திரௌபதியை இழுந்துவந்து துகிலுரியும்போது அவள் மனதில் எரிந்த தீ துரியோதனன் வீழ்ச்சிக்குப் பிறகும் அணைந்திருக்குமா? இரண்டு பெண்களின் கண்ணீரும் காண சகிக்ககூடியதா? எத்தனை எத்தனை துயரங்களையும் சோதனைகளையும் கடந்து வந்த பெண்கள் இவர்கள்? இந்தக் காவிய நாயகிகளைச் சிரிக்க வைத்து அழகு பார்க்க முன்னெடுத்த போராட்டம்தான் ‘சிரியம்மா சிரி’ என்ற கூத்து. 
பாரம்பரிய கூத்தில் இருக்கும் சில வகை நடனக்களை (கூத்து) கொண்டு அம்மனை (திரௌபதி) சிரிக்கவைக்க நடனக்கலைஞர்கள் ஆடியது மட்டுமல்ல, அந்த வாய்ப்பாட்டையும், செண்டை மேளத்தின் இசையையும் சில நிமிடங்கள் தன்னை மறப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்தன. ஒரு கதைப்போல் கொண்டு செல்லாமல் ஒவ்வொருக்கூத்துக்குத் தனித்தனி அசைவுகள் கொண்டு, அம்மனை சிரிக்கவைக்கக் கலைஞர்கள் வழங்கிய நடனங்கள் மனதில் நின்று இன்னும் ஆடிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக ஒவ்வொரு நடனத்திற்கும் வழங்கப்பட்ட வாய்ப்பாட்டுகள், அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குரல்கள் நான் எங்கு இருக்கிறேன் என்பதை மறக்கச் செய்தது. கொரத்தி கூத்தில், பச்சைக் குத்தும் வரும் பெண்ணாக வந்து நடனத்தை வழங்கிய அந்தப் பெண் இன்னும் கண்ணில் நின்றுக்கொண்டிருக்கிறாள். தெருக்கூத்துக் கலைஞர்கள் கலைகளை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. 
அதிகமாகக் கேரளத்து நடன கூத்தை வழங்கியிருந்தாலும் மலேசியர்களுக்கு இது மிகப் புதுசுதான். இந்தக் கூத்தை மலாய்க்காரர்களும் சீனர்களும் எப்படிப் புரிந்துக்கொண்டார்கள் என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, இந்தியர்கள் எப்படி இதைப் புரிந்துக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை. மலேசியாவில், தெருக்கூத்துகள் நடப்பதில்லை. மேலும், வாய்ப்பாடுகள் புரியும் அளவுக்கு அவர்களிடத்தில் தெளிவும் இல்லை. 

இந்தக் கூத்தில் பயன்படுத்தபட்ட முகமூடிகளைப் பார்வையாளர்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிட்டார் தேவிகா. மேலும் பெரிய அளவிலான அம்மன் முகமூடியை ஒரு தமிழ்பள்ளிக்குக் கொடுக்கப்போவதாகக் கூறியவர் மலேசியாவிலும் இந்தக் கலையை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக