புதன், 9 செப்டம்பர், 2015

நல்ல மாற்றங்களுக்காக போராட வேண்டும்
-நடிகர் விஷால்

(யோகி)

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஷாலுக்கு அறிமுகம் தேவையில்லை. சினிமா பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தனது கடுமையான உழைப்பினால் முதல் படத்திலேயே தனி முத்திரையை பதித்து, தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியவர். தற்போது அவரின் 'பாயும் புலி' திரைக்கு வந்திருப்பதையொட்டி, நடிகர் விஷால் மலேசியாவிற்கு குறுகிய கால பயணத்தை மேற்கொண்டிருந்தார். தீபாவளி கொண்டாட்டம் மற்றும் இந்திய வர்த்தகக் கண்காட்சியை நடத்தவுள்ளதாக ஆஸ்ட்ரோ நிறுவனம் அறிவித்திருக்கும் வேளையில், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும், தனது படத்திற்கு ஆதரவு அளிக்கும் மலேசிய ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் நோக்கிலும் அவர் வருகையளித்திருந்தார். அவருடனான பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது...

-பாயும் புலி திரைப்படத்தில் உங்கள் கதா பாத்திரம் குறித்து சொல்லுங்கள்

*இது எனக்கு மிக மிக்கியமான படமாக அமைந்திருக்கிறது. மேலும் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மூன்றாவது படம் இது. குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒருவனை தாக்கும்போது அங்கு என்ன நடக்கும் என்பது நம்மால் யூகிக்க முடியும். ஆனால், ஒரு போலீஸ் அதிகாரியை குண்டர் கும்பல் குறிவைக்கும் போதோ அல்லது தாக்கும் போதோ அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை வலியுறுத்துவதுதான் இந்தப்படம். காரணம் போலீஸ் என்றாலே ஓரு வகை அச்சம் இருக்கும். அதையும் தாண்டி குறிவைத்து ஒரு அதிகாரியை குற்றவாளிகள் தாக்கும்போது ஒட்டுமொத்த போலீஸ் துறை அதை எப்படி பார்க்கிறது? இந்தப் பிரச்னையை எப்படி கையாளப்போகிறது? இதை அடிப்படியாக கொண்டுதான் 'பாயும் புலி' அமைந்திருக்கிறது.

-இந்தப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டதா?

*உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்று கூறிவிட முடியாது. ஆனால், உண்மைச் சம்பவத்திலிருந்த ஒரு விஷயத்தில் தோன்றியதுதான் பாயும் புலி. உண்மையில் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்தியாவில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அந்தப் பாதிப்பிலிருந்துதான் கதையாசிரியர் இந்தக்கதையை எழுதினார். அதை அடிப்படையாக கொண்டு சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' தயாரானது.

-தொடர்ந்து ஹீரோயிசம் கொண்ட கதாப்பாத்திரங்களையே ஏற்று நடிக்கிறீர்கள். விஷால் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும் என்று உணர்த்திய படம் இயக்குநர் பாலாவின் அவன் இவன் திரைப்படம்தான். நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான திரைப்படத்தில் எப்போது உங்களைப் பார்க்கலாம்? 

*அதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. அவன் இவன் படத்தில் என் திறமையை வெளிப்படுத்தியதால்தான் 'பாண்டியநாடு' என்ற பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் மாறுப்பட்ட நடிப்பை வெளிக்காட்ட வைக்கும் பொறுப்பு இயக்குநர்களிடம்தான் இருக்கிறது.

-தற்போது தென்னிந்தியாவின் நடிகர் சங்க தேர்தல் சர்ச்சையில் சிக்கியுள்ளீர்கள். உங்களுக்கு ஆதரவாக சிலரும் எதிர்ப்பாக சிலரும் இருக்கிறார்கள். அது குறித்த விவரங்களை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*நல்ல ஒரு விஷயத்திற்காக முன்னெடுத்திருக்கும் ஒரு விஷயம்தான் இது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, நல்ல மாற்றங்களுக்காக போராட வேண்டும், என்னால் போராட முடியும் என்ற அடிப்படையில்தான் நான் இதில் ஈடுபடுகிறேன். இதில் இரண்டு அணியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். யார் யார் எனக்கு ஆதரவு தருகிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள் என்று நான் பேச விரும்பவில்லை. காரணம் நடிகர்கள் எப்போது ஒன்றுமையாகத்தான் இருக்க வேண்டும். மேலும் நடிகர் சங்கம் நல்ல நிலையில் வரவேண்டும் என்பதுதான் என் இலக்கு.

-நீங்கள் ஒரே இயக்குநர்களிடமே தொடர்ந்து வேலை (சில படங்கள்) செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்? 

-அது எனக்கு சௌகரியத்தை கொடுப்பதால்கூட இருக்கலாம். காரணம் ஒரு இயக்குநரின் இயக்கத்தில் வெற்றிப்படத்தை கொடுத்த பிறகு, மீண்டும் இந்தக் கூட்டணி எப்போது சேரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருக்கிறது. ஆனால், அடுத்தடுத்து அப்படி நடிக்க கூடாது. கொஞ்சமாவது இடைவெளி வேண்டும். அம்மாதிரியான இடைவெளிக்கு பிறகுதான் நானும் படங்களை ஏற்று நடிக்கிறேன். காரணம் சில இயக்குநர்கள் திரைப்படங்களை தமிழ்நாட்டின் கடைசி கிராமம் வரை கொண்டுச் செல்லும் திறமை படைத்தவர்கள்.

-பிரபலம் ஆனாலே, வதந்தியிலிருந்து தப்ப முடியாது. உங்களுக்கு ஏற்படும் வதந்திகள் உங்களுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?

-சில வருடங்களுக்கு முன், நான் உண்மையிலேயே ஒரு நடிகையோடு காதலில் இருந்தேன். அப்போது அது எந்த நடிகை என்று தெரியாமல், தினம் தினம் ஆரூடங்கள் செய்யப்பட்டு பத்திரிகையில் செய்தி வரும். ஒரு முறை நடிகை பிரியாமணிக்கும் விஷாலுக்கும் காதல் என்று தலைப்பு செய்தியில் வந்தது.
எனக்கு வீட்டிற்கு போவதற்கே பயமாக இருந்தது. அப்பாவிடம் என்ன பதில் சொல்லப்போகிறேன் என்ற தயக்கத்தோடு இருக்கையில், பத்திரிகையில் வந்த செய்தியை அப்பா வெட்டி சேகரித்துக்கொண்டிருந்தார். உங்களுக்கு என் மீது கோபம் இல்லையா என்று அப்பாவிடம் கேட்டேன். பத்திரிகையில் உனது பெயர் வந்திருக்கு, நான் அதை பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். ஒரு சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். வதந்தி என்றால் அது வதந்திதான். எனக்கு உண்டாகும் சர்ச்சைகளை எனக்கு ஏற்படுத்தும் அல்லது கொடுக்கும் விளம்பரங்களாகத்தான் எடுத்துக்கொள்கிறேன்.

-மலேசிய ரசிகர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?

*மலேசிய ரசிகர்கள் எனக்கு பிரமிப்பை கொடுப்பவர்கள். நான் மலேசியாவில் இப்போது வந்ததற்கான காரணமே அவர்களுக்கு நன்றியை கூறிக்கொள்ளத்தான். நான் 2008-ஆம் ஆண்டு 'சத்தியம்' திரைப்படத்திற்காக இங்கு வந்தேன். மீண்டும் இப்போது வந்திருக்கிறேன். நிறைய நடிகர்களுக்கு இம்மாதிரியான ஓர் ஆசிர்வாதம் கிடைக்காது. திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பவர்கள் என்னை பொறுத்தவரையில் கடவுளாக பார்க்கிறேன். அவர்கள்தான் ஒரு நடிகனை வாழ வைக்கிறார்கள்.

-சினிமா துறையில் மட்டுமில்லாமல் பொதுச் சேவையிலும் அதிகம் ஈடுபடுகிறீர்கள். உங்களுக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் உண்டா?

-தற்போது நாட்டின் நிலையை நான் கூர்ந்து கவனித்து வருகிறேன். ஆனால், அது அரசியலை நோக்கியது அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக கவனிக்கப்படும் கதாநாயகனாக நான் மக்கள் மத்தியில் இருக்கிறேன். என்னை கதாநாயகனாக அங்கீகரித்து அழகு பார்த்த என் சமுதாயத்திற்கு நான் நல்லதை செய்ய நினைக்கிறேன். மேலும், இளைஞர்கள் சுயநலமாக இருக்காமல் இந்த சமூதாயத்திற்காக தனது பங்களிப்பை கொடுக்க வெளிவரவேண்டும். நான் செய்யும் சில காரியங்களை நான் விளம்பரத்திற்காக செய்கிறேன் என்று விமர்சிக்கப்படுகிறது. இதுபோல விஷயங்களிலும் ஒரு நடிகனால் ஈடுபட முடியும், ஒரு தீர்வை கொண்டு வரமுடியும் என்று காட்டுவதற்காகவே நான் அதை செய்கிறேன்.

* 21 படங்களை கொடுத்திருக்கும் நீங்கள், உங்கள் கதாநாயகிகளில் யார் சிறந்த நடிப்பை வழங்கியதாக நினைக்கிறீர்கள்? அதோடு எந்த நடிகையோடு இணைந்து நடிக்க உங்களுக்கு விருப்பம்? 

-எல்லா நடிகையும் திறமையானவர்கள்தான். தங்கள் திறமையை வெளிப்படுத்தத்தான் நடிகைகள் நினைக்கிறார்கள். சில நடிகைகளுக்குதான் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. என்னிடம் நடித்த நடிகைகளில் பல திறமைகள் கொண்ட நடிகை என சுருதி ஹாசனை சொல்வேன். நான் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட நடிகை என்றால், நந்திதா தாஸ் மற்றும் சுஸ்மிதா சென் ஆகும். எனக்கு கதாநாயகிகளாக அல்ல, ஏதாவது ஒரு பாத்திரத்தில் அவர்களோடு நடிக்க ஆசைப்படுகிறேன். அது இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது.

-தீபாவளி கொண்டாட்டத்திற்கான திறப்பு விழா நிகழ்வுக்கு வந்திருக்கிறீர்கள். உங்களால் மறக்க முடியாத தீபாவளி அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள முடியுமா?

* தீபங்களின் திருவிழா என்று தீபாவளியை சொல்வார்கள். நாங்கள் வறுமையில் இருந்தக் காலக்கட்டம். அப்பா-அம்மா இருவரிடமே தீபாவளியை கொண்டாடுவதற்கு பணம் இல்லை. அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அப்பா எனக்கு 50 ரூபாய் பணத்தைக் கொடுத்தார். என்னால், அந்த தீபாவளியை சுலபத்தில் மறந்துவிட முடியாது. அன்று முடிவு எடுத்தேன். இனி இந்த மாதிரியான ஒரு தீபாவளியை சந்திக்ககூடாது என்று. மேலும், ஒவ்வொரு தீபாவளிக்கும் எதாவது ஒரு வகையில் பிரகாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று. அதன் பிறகுதான், ஒவ்வொரு தீபாவளி சமயத்திலும் எனது ஒரு படம் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்துக் கொண்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக