வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

ஹென்ரிக் இப்சன், பெண்ணியத்தின் ஆரம்பம்











நான் வேலை செய்யும் பத்திரிகையில் 
வரலாற்றில் இன்று பகுதியை வெளியிடும் வழக்கம் உள்ளது.  அப்படியான ஒரு நாளில்தான் அந்த வரலாற்று நாயகனின் பெயரை முதன் முதலாகப் படித்தேன்.  அன்றைய நாளின் அவரின் பிறந்தநாளைத் தவிர வேறொன்றும் முக்கியமானதாகத் தெரியாதபடியால்எனக்கு அறிமுகமில்லாதவரின் பிறந்தநாளையே வரலாற்று இன்றின்  முக்கிய செய்தியாக அன்றைய பத்திரிகையில் வெளியிட்டேன். 
இந்த அந்நியமானவன் என்னை தேடி மீண்டும் வருவான் என்றும் அவனைக் குறித்து,  நான் இன்னும் விவரமாக எழுதப் போகிறேன் என்றும் என் இரவுகளை இவன் களவாடுவான் என்றும்  அப்போது  எனக்கு தெரியவில்லை.   இன்னும் துள்ளியமாக சொன்னால்  2013-ஆம் ஆண்டு முதன் முதலில் படித்த அவன் பெயரை 2014-ஆம் ஆண்டு ஒரு பேராசிரியர் மூலமாக மீண்டும்  கேட்டேன்.
அவனின் பெயர் ஹென்ரிக் இப்சன். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிக முக்கியமான மேடைநாடகக் கலைஞன். அத்துறையில் பல முகங்கள் கொண்டவர்.  சவால்களைச் சந்தித்தவர். மேலை நாடுகளில் ஷேக்ஸ்பியருக்கு நிகராக பேசப்பட்டவர்.  தமிழில் அவரின் வரலாறு குறித்தும் சுயசரிதை குறித்தும் எதுவும் தெளிவாகவோ அல்லது  விரிவாகவோ   இணையத்தில் கூட எழுதப்படவில்லை. தேடிய வரையில் தமிழில் இப்சனைக் குறித்து நூல்களும் இல்லை. அந்த ஒப்பற்ற கலைஞனின் ஆலுமையை நான் தெரிந்துகொள்ள அல்லது  அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகக் காலம் நான் பேய் வேஷம் போடுவதற்கு வகை செய்திருந்தது.
 
ஆம், 2014-ஆம் ஆண்டு  மெலாவத்தி தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டு பணிக்குநிதிதிரட்டும் நிகழ்வில்  ‘வல்லினம்’ இலக்கியக் குழுவின் சார்ப்பில் பேய் வீடுசெய்யலாம் என முடிவுச் செய்யப்பட்டது. வல்லினம் நண்பர்கள் பேய்வேஷம் தரிப்பதற்கு மிகுந்த ஆவல் கொண்டிருந்தோம். பின் வெவ்வேரு காரணங்களால் நண்பர்கள் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடைசியில், ‘வல்லினம்ஆசிரியர் ம.நவீன் இயக்கத்திலும் முயற்ச்சியிலும் பயங்கரமான பேய்வீடு அமைக்கப்பட்டது.   அதில் நான் பிரதான பேயாகவும் மற்ற பேய்களுக்கு நடுவிலும் நிறுத்தப்பட்டேன். இதற்கு முன் நான் பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் மேடை நாடகங்களில்  கொஞ்சம் நடித்த பழக்கம் இருந்தாலும் வேஷம் தரித்து இதுநாள்வரை நடித்ததில்லை.  ஒரு கோரமான பேய் முகமூடி அணிந்தபடிதுண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு காலைக் கையில் பிடித்தபடிசன்னமான ஒரு அலுகைச் சத்தம் பின்னணியில் ஒலித்தப்படிபிணப்பெட்டியின் பக்கவாட்டில் நான் அமர்ந்து  கத்தினேன்மிரட்டினேன்பயமுறுத்தினேன். உள்ளே வரும் சிறுவர்களும்- பெரியவர்களும் பேய் வேஷம் தரித்தவர்களின் உடல் மொழியாலும்ஆக்ரோஷ  செய்கையினாலும் பயமுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய 8 மணி நேரம் அந்த இருண்ட அறையில்  பேயாகவே  இருந்ததன் பாதிப்பு எனக்குள் வந்தது. வீட்டிற்கு போன பிறகும் அந்த பாதிப்பிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை.
ஒருவரை ஏமாற்றுவதுமனரீதியில் பலவீனமடையச்செய்வது பேய்களின் வெற்றியெனில் அது எனக்குப் பிடித்திருந்தது. என்னால் யாரிடமும் பேச முடியவில்லை. கவிதையை எழுதுவதை தவிர அதிலிருந்து மீளமுடியாது என நினைத்தேன். கவிதை தானாக அதன் வரிகளை வரைந்துக்கொண்டது இப்படி...
 
பேய் வேஷம் போட்டவள்

நேற்று நான் பேய் வேஷம் தறித்திருந்தேன்
ஒரு கால் இழந்து...
இழந்த காலை
கையில் ஏந்திக்கொண்டு
கோரமான அருவருப்பான  பேயாக
நான் இருந்தேன்

தொண்டை கிழிய
பேயாகி கத்தியதில்
 பலர் பயந்தனர்,
பலர் நகைத்தனர்
பலர் பயப்படாதைப்போல் நடித்தனர்

தொடர்ந்து சில மணி நேரத்திற்கு
பேயாக  இருந்ததில்
எனக்கு பேயின் தன்மைகள்
இயல்பாகப் புரியத்தொடங்கின

பேய் காரணமில்லாமல்
ஒருவரை பயமுறுத்துகிறது
பேய் இருட்டையே விரும்புகிறது
பேய் சிறுவர்களையே
அதிகம் கலக்கமடையச் செய்கிறது
முக்கியமாக பேய் வேஷம் தறித்து
பேயாட்டம் ஆடுகிறது

-யோகி
 
இந்த கவிதையை எழுதிய பிறகுதான் என்னில் பாரம் குறைந்தது.  முகநூலில் பதிவேற்றம் செய்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன்.
அப்போ ஒரு குறுஞ்செய்தி எனக்கு வந்தது...
 
நேற்று நான் பேய் வேஷம் தரித்திருந்தேன்.
பொம்மை வீட்டுப் பேய் வேஷம் அல்ல;
அவள் அழகிபேரழகுப் பெண் பேய்.
 என் வேஷம் எதிர்மாறானது.
ஒரு கால் இழந்து... இழந்த காலை கையில் ஏந்திக்கொண்டு
நீண்டு அலையும் கருங்கூந்தலுடன்
கோரமான அருவருப்பான பேயாக
கால் தரையில் பாவ நான் இருந்தேன்
தொண்டை கிழிய பேயாகி கத்தியதில்
பலர் பயந்தனர்;
பலர் பயப்படாதைப்போல் நடித்தனர்
பலர் நகைத்தனர். பலர் நகர்ந்து தப்பித்தனர்.
சில மணி நேரம் பேயாக இருந்ததில்
பேயின் தன்மைகள் புரியத்தொடங்கின
இயல்பான பேயாகிக் கொண்டேன் .
பேய் காரணமில்லாமல் ஒருவரை பயமுறுத்துகிறது
பேய் இருட்டையே விரும்புகிறது
பேய் சிறுவர்களையே அதிகம் கலக்கமடையச் செய்கிறது;
பல நேரங்களில் பெண்களையும் பிடித்துக் கொள்கிறது
முக்கியமாகப் பேய் வேஷம் தறித்து பேயாட்டம் ஆடுகிறது'
 
நல்ல கவிதைஇப்படி எடிட் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
குறுஞ்செய்தி அனுப்பியவர் நான் முக்கிய எழுத்தாளராக மதிக்கும் ஒரு பேராசிரியர். அப்போது அவருடனான நட்புக்கு வயது 1 மாதம்தான் இருக்கும். அவர் கவிதையை எடிட் செய்து அனுப்பியதும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எனது கேள்வி எல்லாம் பொம்மை வீட்டுப் பேய் வேஷம் அல்லஎன்று மாற்றியிருந்த வரிகளிலே தொங்கிக்கொண்டிருந்தது. அவருக்கு இவ்வித பதிலும் அனுப்பாமல் உறங்கிபோனேன்.
விடிந்ததும் அவருக்கு ஒரு குறுங்செய்தி அனுப்பினேன். நீங்கள் எடிட் செய்த கவிதை சிறப்பாக இருக்கிறது. ஆனால்அது யோகியின் கவிதையாக இருக்கவில்லை. ஆனால்பொம்மை வீட்டுப் பேய் வேஷம் அல்ல என்ற வரியை ஏன் சேர்த்தீர்கள் என்பதற்கு விளக்கம் வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
அங்குதான் எனக்கும் ஹென்ரிக் இப்சனுக்குமான உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
பேராசிரியர் சொன்னார், “பொம்மை வீடு - இப்சன் எழுதிய முக்கியமான நாடகம். அதுதான் பெண்ணியத்தின் ஆரம்பம் என்றுகூடச் சொல்வார்கள். அவரே பேய்கள் என்றொரு நாடகத்தையும் எழுதியிருக்கிறார். கணவனை விட்டுகுடும்பத்தை விட்டுவிட்டு வெளியேறுவாள் அதன் நாயகி. போகும்போது பின் காலால் கதவை எத்திவிட்டுப் போவாள். கதவு ஆடிக்கொண்டே இருக்கும். நாடகம் அப்படியே நிறைவடையும்
அந்தக் கதவு ஐரோப்பாவில் இன்னும் நிற்கவில்லை என்று விமரிசகர்கள் சொல்வார்கள். நிற்கவில்லை என்று மட்டுமல்லநிற்கவே இல்லை என்று நம்புகிறார்கள்.  அதுதான் ஐரோப்பியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமையை வாங்கிக் கொடுத்தது என்பது வரலாறு,உணர்த்தும் கலையின் சாத்தியமும்”  என்றார். (கலந்துரையாடல், 24 நவம்பர் 2014)
 
எனக்குள்  இப்சன்மெல்ல இம்சிக்க தொடங்கினான். அவனின் அந்தப் ‘பேய்’ நாடகம் எப்படி இருக்கும்?  ‘பொம்மை வீடு’  என்ற நாடகம்தான் பெண்ணியத்தின் ஆரம்பம் என்று சொல்லப்பட்டால் அந்த நாடகத்தின் வீரியம் எப்படி இருக்கும்?  இப்சன் என்ற கலைஞன் எப்படி விமர்சிக்கப்பட்டிருப்பான்?  போன்ற கேள்விகள் என்னில் எழுந்துகொண்டே இருந்தன. ஒரு வாரம் கழித்து மீண்டும் பேராசிரியரைத் தொடர்புக்கொண்டேன். “இப்சன் குறித்து இணையத்தில் தேடிக் கலைத்து விட்டேன். அவரின் பிறந்தநாள் குறிப்பு தவிர தமிழ் மொழியில் விக்கிபீடியாவில்கூட ஒன்றும் இல்லையே. அவரைத்  தமிழில் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்காதா?” என்றேன். தமிழில் படிப்பதற்கு இணையத்தில் தேடுதல் கஷ்டம்தான் என்றார். ஆனால்ஆங்கிலத்தில் பதிவுகள் குவிந்து கிடக்குமே என்றார். என் ஆங்கிலப் புலமையை நினைத்துச் சிரித்துக்கொண்டேன். இருந்த போதிலும் சில ஆங்கிலப் பதிவுகளை எடுத்து படிக்கவும் செய்தேன். அந்த ஆங்கிலம் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக எனக்கு இல்லை. இப்சன் குறித்த புத்தகங்களைத் தேடினேன். தோல்விதான் கிட்டியது. மீண்டும் பேராசிரியரை நாடினேன்.
நீங்கள்தான் நாடகங்கள் மீது ஆர்வம் கொண்டவராச்சே;   நாடகங்கள் குறித்து நிறைய எழுதியும் உள்ளீர்கள். இப்சன் குறித்து எழுதியுள்ளீர்களா?”
கட்டுரையின் ஊடாக சிறு குறிப்பு மட்டுமே எழுதியுள்ளேன்” என்றார் சுறுக்கமாக. 
எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவரைப் பற்றி நான்தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. மேடை நாடகக் கலைஞர்களைச் சந்திக்கும் போதெல்லாம் இப்சனைத் தெரியுமா என்பதே எனது முதல் கேள்வியாக இருந்தது. 90 சதவிகித்தினர் ஷேக்ஸ்பியர் காலகட்டத்திலிருந்து நாடகக் கலையை விவரித்தாலும்அவருக்கு பின் வந்தவரான இப்சனைத் தெரிந்திருக்கவில்லை.  நான் முன்பை விட தீவிரமாக ஹென்றிக் இப்சனைக் குறித்து விவரங்களை தேடத் தொடங்கினேன்.
 
 
ஹென்ரிக் இப்சன் 

ஹென்ரிக் இப்சன்  18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நார்வே நாட்டு நாடகாசிரியர் என அறியப்படுகிறார். மார்ச் 20, 1828-ஆம் ஆண்டு பிறந்த இவர் மே 23 1906-ல் தனது 78-ஆம் வயதில் மறைந்தார்.
ஸ்கெயின் நகர பெருவணிக குடும்பத்தின் உயர் குடியைச் சார்ந்தவருக்கு பிறந்தமையால் அவருடைய குடும்பம் நாடகத்தின் வடிவமைப்புக்குள் உருப்பெற்றது. 19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மிகச்சிறந்த நாடக ஆசிரியர்நாடக இயக்குனர் மற்றும் கவிஞர் என்ற பன்முகத்தோடு உலக நாடகவியல் தார்தத்தின் தந்தை என்றும் போற்றுதலுக்குரியவராக இப்சன் வர்ணிக்கப்படுகிறார். அவருடைய மிகச்சிறந்த படைப்பு பொம்மை வீடுஎன கூறப்படுகிறது. இப்சனின் 15-வது வயதில்பள்ளிப்படிப்பிலிருந்து நீக்கப்பட்டார். நெருக்கடிக்குள்ளாகிய சூழலில் கிரிம்ஸ்டாட் என்னும் சிறு நகரத்திற்கு இடம்பெயர்ந்து மருந்தாளுராகப் பயிற்சி எடுத்துக்கொண்டே நாடங்களை எழுதத் தொடங்கினார் இப்சன். தன்னுடைய முதல் துன்பியல் நாடகமா கேட்டிலினா' (1850)  ப்ரைன்ஜோப் ப்ஜார்மே எனும் புனைப்பெயரில் 22 வயதில் எழுதி வெளியிட்டார். ஆனால் அது அரங்கேற்றப்படவில்லை. 1850-‘ல் தி ப்ரியல் மொண்ட்என்னும் நாடகமே முதலில் அரங்கேற்றப்பட்டதுஅது சிறிய அளவிலான கவனத்தை ஈர்த்தது. எனினும் பின்தொடர்ந்த ஆண்டுகளில் அவர் பல நாடகங்களை எழுதினாலும் அவரால் வெற்றிகொள்ள முடியவில்லை.
எனினும் பிற்காலத்தில்,  நவீனத்துவ நாடகவியல் நிறுவனர்களுள் ஒருவராக தன்னை உயர்த்திக்கொண்டார் ஹென்ரிக் இப்சன். இவருடைய முக்கியப் படைப்புகள் என , ‘பிராண்ட்', ‘பீர்கெய்ன்ட்', ‘ஆன் எனிமி ஆப் தி பீப்பிள்', ‘எம்பரர் அன்டு கலிலியன்', ‘எ டால்ஸ் ஹவுஸ்ஹெட்டா கேப்ளர்', ‘கோஸ்ட்ஸ்', ‘தி வைலட் டக்', ‘ரோஸமெர்ஷோல்ம்மற்றும் மாஸ்டர் பில்டர்ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.   ஷேக்ஸ்பியரின் நாடங்களுக்குப் பிறகு 20-ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இவருடைய பொம்மை வீடுஎனும் நாடகமே உலகிலேயே மிகவும் அதிகமாக அரங்கேற்றப்பட்டதாக இணைய தகவல்கள் கூறுகின்றன. 

ஐரோப்பிய நாடகங்கள் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கை மற்றும் கடுமையான ஒழுக்க நெறிகள் சார்ந்து எதிர்பார்க்கப்படுகிறபோது இப்சன் நாடகங்கள் பலஅவரது காலத்தில் அவைகளுக்கு எதிராக அமைத்ததன் மூலம் சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகக் கருதப்பட்டன.
அவரின் நாடங்கள் சமகாலத்திய நாடகங்களாக அமைத்துபுறத்தோற்றங்களுக்குள் மறைந்துள்ள உண்மைத் தோற்றங்களை வெளிப்படுத்தும் முறையில் புனைந்தார். அது வாழ்க்கை நிலைகள் மற்றும் அறநெறிகளைக் கேள்விக்குட்படுத்தியது. கவித்துவம் மற்றும் சினிமாத்தனமாக உறுவாக்கப்பட்ட பீர் கெய்ன்ட்எனும் நாடகத்திலும் கூட வலுவான கனவுக்கூறுகளை உள்ளடக்கியதாக இயக்கியிருந்தார் என்பது பரவலாக மேடை நாடக விமசகர்கள் முன்வைக்கும் கருத்தாகும்.
 
ஜார்ஜ் பெர்னாட்ஷாஆஸ்கர் வைல்டுஆர்தர் மில்லர்ஜேம்ஸ் ஜாய்ஸ்யூஜின் ஓநீல், செக்காவ் மற்றும் மிராஸ்லாவ் கிர்லெசா போன்ற நாடகாசிரியர்களும்நாவலாசிரியர்களும் அவர்களின் சொந்த பாணியில் வெற்றி பெற்றாலும்இவர்களிடத்தில் இப்சனின் தாக்கம் கொண்டுள்ளதாக மேலை நாட்டு இலக்கிய வட்டங்கள் கூறுகின்றன. 

1902, 1903 மற்றும் 1904-ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டபவர் இப்சன். ஆனால்அவர் நோபல் பரிசை பெறவில்லை என்பது இவரின் ரசிகர்களின் குறையாக இருக்கிறது.
டென்மார்க் மற்றும் நார்வே நாட்டின் எழுத்து மொழியான டேனிஷ் மொழியில்தான் இப்சன் தன்னுடைய நாடகங்களை எழுதியுள்ளார். அப்படைப்புகளை கெய்ல்டென்னல் என்பவர் வெளியிட்டார். இந்த இடத்தில் முக்கியமான ஒன்றைக் குறிப்பிட வேண்டியுள்ளது. அதாவது இப்சன் 27 ஆண்டுகள் இத்தாலி மற்றும் ஜெர்மனியில் தங்கியிருந்த காலங்களிலேயே அவருடைய பெரும்பாலான நாடங்கள் எழுதப்பட்டன.
அவர் மிக அரிதாகவே நார்வே சென்றிருந்தார். இருந்த போதிலும் ஆரம்ப காலங்களில் வாழ்ந்த நார்வேயைச் சார்ந்த துறைமுக நகரமான ஸ்கெயினை நினைவுறுத்தும் வகையில்அங்கு நடந்த சம்பவங்களை பின்புலமாகக்கொண்டு பெரும்பாலான நாடகங்கள் எழுதினார்.

1882-ல் விமர்சகரும்கல்வியாளருமான ஜார்ஜ் பிரான்டிஸ்க்கு எழுதி கொடுத்த பிரதியில் இப்சன்தன்னுடைய பெற்றோர்கள் இருவரும் ஸ்கெய்ன் நகரத்தின் மிகவும் மரியாதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்  தம்மைச் சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு மேன்மைக்குடியனராகவே அவர்கள் இருந்தனர் என்று சொல்கிறார்.
18-ஆம் நூற்றாண்டின் எழுத்தாளரான தியோடர் ஜார்ஜென்சன்ஹென்ரிக் இப்சனை குறிப்பிடுகையில்தாய்வழியிலும்தந்தை வழியிலும் குறிப்பிடத்தக்க  குடும்ப பின்னணியைக் கொண்டவர் என்கிறார். இம்சனின் சகோதரியான ஹெட்விக் பாஸ்,   குறிப்பிடும்போது ஹென்ரிக் இப்சன் தமது பெற்றோர்களால் ஈர்க்கப்பட்டார் என்றும்  மேலும் முறைதகா திருமணம் குறித்தும்உறவுகளாலும் அமைந்த நிகழ்வுகள் அவரை பாதிப்புக்குள்ளாக்கியது என்றும் கூறுகிறார். இந்தச் சம்பவங்களே அவருடைய பல நாடங்களில் வெளிப்படுகின்றது என்று கூறியிருக்கும் அவர்இப்சனின் மிகச்சிறந்த நாடகமான ரோஸமெர்ஷோல்ம்'-ல் அவ்வெளிப்பாடு மிகுதியாக உள்ளதையும் சுட்டிகாட்டியுள்ளார்.

ஹெட்வின் தன்னுடைய தாயாரைப் பற்றி எழுதுகின்ற போதுகணவருக்கும்குழந்தைகளுக்கும் அமைதியானஅன்பானஇல்லத்தின் ஆத்மாவானவள் எங்கள் தாய். மீண்டும்மீண்டும் தன்னை குடும்பத்திற்கே தியாகம் செய்தவர்.  என்றும்கசப்புணர்வோநிந்தனையோ அவரிடம் காணப்படாது என்று குறிப்பிடுகிறார்.
ஹென்ரிக் இப்சனின் தந்தையினுடைய பொருளாதார இழப்புகளின் தாக்கத்தை அவருடைய பின்னாளைய எழுத்துக்களில் காணமுடிகிறதுஅவருடைய கதை மாந்தர்களின் பிம்பங்களாகவும்கருத்தியலாகவும்பொருளாதார குறைபாடுகளை ஒப்பிட்டு சமூகத்தின் இருள் மூலைகளில் பொதிந்துள்ள ஒழுக்க முரண்களை மேற்கோல் காட்டி நாடகங்களை அமைத்துள்ளார். இப்சன் தன்னுடைய சொந்த குடும்பத்தையே உருவகமாகவும் கதைமாந்தர்களின் பெயர்களாகவும் கையாண்டுள்ளார். (http://ibsen.nb.no/id/11180567.0), என்ற இணையதளம் இவ்விவரங்களை சொல்கிறது) 
 
இப்சனின் நாடகங்களில் பொம்மை வீடுஎன்ற நாடகம் குறிப்பிடும் அளவு பேசுவதற்கு பெண்களின் துன்பங்களை மையக்கருவாக காட்சி படுத்தியது மட்டுமல்ல தன்னுடைய தாய் மாரிச்சென் ஆல்டன்பர்க்கை உருவகப்படுத்தியே அக்கதையை புனைந்ததுதான் காரணம் எனக்கூறப்படுகிறது. இதே அனுபவத்தை அவரின் ரோஸமெர்ஷோல்என்ற  நாடகத்திலும் காணலாம். 

உத்வேகமளிக்கக்கூடிய எழுத்தாளர் ஹென்ரிக் வெர்ஜிலேண்ட், நார்வேயின் கிராமிய பாடல் தொகுப்பாளரான பீட்டர் கிறிஸ்டின் அப்ஜார்ன்சென் மற்றும் ஜார்ஜென் மோ ஆகியோருடைய எழுத்துக்களின் உத்வேகத்துடன் (பீர் ஜெய்ன்ட்நாடகம் வரையில்) ஆரம்ப காலங்களில் இணைந்து செயல்பட்டார் இப்சன்.  இப்சனின் இளமைப் பருவத்தில்நார்வேயின் கவிஞரும்நாடக ஆசிரியருமான வெர்ஜிலேன்ட் மிகவும் ஈர்த்தார்.

இப்சனின் எழுத்தும் வாழ்க்கையும்

இப்சன் நாடகத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அடுத்த பல ஆண்டுகளில் டெட்நார்ஸ்கி அரங்கத்தில் (பேர்கன்) 145 நாடகங்களை தயாரித்தார். அவர் எழுத்தாளராகவும்இயக்குநராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் எந்த நாடகத்தையும் சொல்லமுடியாது.  ஒரு நாடக ஆசிரியராக வெற்றிய அடைய முடியாமல் இப்சன் தோல்வி அடைந்தாலும்நார்வேயின் நாடக அரங்கம் அவருக்கு களப்பயிற்சி அனுபவமாக அமைந்தது எனக்கூறலாம்.

மிக மோசமான பொருளதார சூழலில் 1864-ல் கிறிஸ்டியானியாவை விட்டு வெளியேறி இத்தாலியின் ஸப்ரண்டோ நகருக்கு தன்னைத்தானே நாடுகடத்திக் கொண்டார் இப்சன். அடுத்த 27 ஆண்டுகளுக்கு தன்னுடைய சொந்த நிலத்திற்குத் திரும்பவேயில்லைதிரும்பும்போது அவர் சர்ச்சைக்குரிய நாடக ஆசிரியராக இருந்தார்.
1864-ஆம் ஆண்டு வரையில் வாழ்விலும்தான் மேற்கொண்ட துறையிலும் பின்னடைவைச் சந்தித்து வந்த இப்சனுக்கு 1865-ஆம் ஆண்டு  அரங்கேற்றப்பட்ட ப்ராண்ட்என்ற நாடகம் விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்று தந்ததோடு வணிக ரீதிலும் வெற்றி பெற்றது.  தொடர்ந்து 1867-ல் பீர்ஜெய்ன்நாடகத்திற்கு புகழ்வாய்ந்த பாடல்களையும்இசையினையும் எட்வார்டு க்ரீக் வடிவமைத்தார்.
தொடர் வெற்றிகளுடன்இப்சன் அதிகத் தன்னம்பிக்கையோடு சொந்த கருத்தியல்களையும்தீர்மானங்களையும் மேலும் மேலும் தன்னுடைய நாடகங்களில் அறிமுகப்படுத்தி அவற்றிற்கு நாடகச் சிந்தனைகள் என ஆய்வுப் பெயரிட்டு வெளிக்கொணர்ந்தார். அவருடைய நாடகங்கள் தொடர் வெற்றியடைந்து அவருடைய பொற்காலமாக அமைந்த அதே வேளையில் ஐரோப்பாவின் நாடக சர்ச்சையையும் உருவாகியிருந்தார்.

 1868-ல் இத்தாலியிலிருந்து ஜெர்மனியின் ட்ரெஸ்டன்நகருக்கு இடம்பெயர்ந்து தி அபோஸ்டேட் ஆப் ரோமானிய’ பேரரசன் ஜல்லியன் என்பவரின் வாழ்க்கையைக் கருவாகக் கொண்டு ‘எம்பரர் அண்டு கலிலியன்’ என்னும் தன்னுடைய முக்கியமான நாடகத்தை பல ஆண்டுகள் அங்கே தங்கியிருந்து எழுதினார். இருப்பினும்ஒரு சிலரே அந்நாடகம் குறித்து தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்தனர். அது தோல்வியடைந்த ஒரு நாடகம் என்றும் கூறலாம்.

1875-ல் முனிச் (Munich) நகரத்திற்கு இடம்பெயர்ந்து அங்கிருந்து முதன் முதலாக சமகால யதார்த்த நாடகமாக தி பில்லர்ஸ் ஆப் சொசைட்டிஎன்ற நாடகம் 1877-ல் அரங்கேற்றப்பட்டது. அதன் பிறகுதான் 1879-ல் பொம்மை வீடுநாடகத்தை வெளியீடு செய்தார். இந்த நாடகம் அவருடைய சமூகத்தில் ஆண்கள் பெண்கள் ஏற்றுக்கொண்ட திருமண அறநெறியை காட்டமாக விமர்சனம் செய்தது.

 1881-ல் வெளிட்ட கோஸ்ட்நாடகமும் மற்றொரு காட்டமான விமர்சன வர்ணனையாகக் கருதப்படுகிறது. இந்த நாடகம் குறித்து மேடை நாடக விமர்சகரான Michael Billington கூறும் கருத்து மிக முக்கியமானது.
இந்த கதையின் நாயகி, ஒரு விதவை பாதிரியாரிடம் தன்னுடைய திருமணத்தில் மறைந்துள்ள தீமைகளை வெளிப்படுத்துவாள். அவளுடைய வருங்கால கணவன் ஒரு பெண் பித்தனாக இருந்தபோதிலும் அவளை மணமுடிக்குமாறு அறிவுரை கூறுவார் பாதிரியார். அவளும் திருமணம் செய்துக்கொள்வாள். கணவனின் பெண் பித்துமோகம் அவளுடைய அன்பின் நம்பிக்கையால் அவனை மாற்றம் அடைய செய்யும். ஆனால் அவனுடைய காமாந்தக எண்ணம் அவனுடைய வாழ்நாளின் இறப்பு வரை தொடர்ந்து அவர்களுடைய மகனுக்கு அந்த நோய் உருமாற்றம் அடைந்திருக்கும். அதை ஒரு மேகநோயாக மட்டும் குறிப்பிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்காமல் அதுவே ஒரு மரியாதைக்குரிய குடும்பத்திற்கு சகிப்பற்ற நிலைமையை விளைவிப்பதை இப்சன் காட்டியிருப்பார். இந்த நாடகம் இப்சனின் ரசிகர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனக்கூறலாம்.

1882-ல்இப்சன் ஆன் எனிமி ஆப் தி பீப்பிள்என்ற நாடகத்தின் மூலம் இன்னும் சர்ச்சையை சற்று முன்னோக்கி நகர்த்திருப்பார். இந்தக் கதை மேடை நாடகமாக அரங்கேற்றுகையில் ‘The Globe and Mail’ பத்திரிகையின் எழுத்தாளர் J.Kelly Nestruck அவரது விமர்சனத்தில் கூறியிருக்கும் விடயம் முக்கியமானதாகும். ஆரம்ப கால நாடகங்களில் முக்கியத்துவமிக்க சர்ச்சைக்குரிய கூறுகள் மற்றும் பிரதான கூறுகளின் காட்சிகளாக இருந்தாலும் அவை,  எளிமையான தனிப்பட்ட குடும்பங்களைச் சார்ந்திருக்கும். ஆனால், ‘ஆன் எனிமிநாடகத்தில் சர்ச்சையையே பிரதான கவனமாக்கிமொத்த சமூகத்தையும் எதிரியாக்கியிருப்பார். நாடகத்தின் முக்கிய செய்தியாகத் தனிமனிதன் தனித்தே நிற்பதாகவும்மொத்த மக்கள் கூட்டத்தைவிட தனிமனித உரிமையே முக்கியம் எனவும் கொண்டுவருவார். அதோடு தனித்துவிடப்பட்டவனைசெம்மறி ஆட்டுக் கூட்டத்தோடும் ஒப்பீடு செய்திருப்பார். தற்கால சமூகத்தின் நம்பிக்கையானது சமூகமே உயர்வான அமைப்பு மற்றும் நம்பிக்கைக்குரியது என்ற கூற்றுக்கு இப்சனின் கருத்துகள் சவாலாக அமைந்தனஆன் எனிமி ஆப் தி பீப்பிள்நாடத்தில் இப்சன் சமூகத்தின் பழமைவாதிகளை மட்டும் தண்டித்திருக்க மாட்டார்தாராளவாதத்தையும் சாடியிருப்பார். இந்த நாடகத்தில் இப்சன் ஒரு தந்திரத்தையும் கையாண்டிருப்பார்.  அதாவது கோஸ்ட்என்ற  நாடகத்தில் மறுப்புக்குள்ளாக்கிய விஷயங்களை ஆன் எனிமி ஆப் தி பீப்பிள்நாடகத்திலும் உட்புகுத்தியிருப்பார்.  உள்ளூர் தோல் பதனீடு தொழிற்சாலையால் பொது குளியல் நீர் அசுத்தமாகியுள்ளதை மருத்துவரான கதாநாயகன் கண்டுபிடிப்பான். அதை கண்டுபிடித்ததால் நோயால் பாதிக்கப்பட்ட பார்வையாளர்கள் அவனை கற்பனை வீரனாக பாவித்து பாராட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பார்ப்பான். ஆனால்அதற்கு மாறாக உள்ளூர் மக்களால் மக்களின் எதிரி என்று அறிவிக்கப்பட்டுஅவனுக்கு எதிராக இசை முழக்கி  சன்னல்களினூடாக கற்களை வீசியெறிவார்கள். அவனுடைய முழுமையான வெறுப்போடு நாடகம் முடியும். இதைக் கண்ணுறும் பார்வையாளனுக்கு மருத்துவரை விட நகரமே மிகப்பெரிய பேராபத்தாக தெரியும். எழுத்தாளர் J.Kelly Nestruck இவ்வாறு குறிப்பிட்டுள்ளதோடு தனது நாட்டுச் சூழலோடு இந்த நாடகம் எப்படி தொடர்பு கொண்டுள்ளது என்பதையும் ஒப்பிட்டுள்ளார். 
பார்வையாளர்களின் ஆழமாய் வேரூன்றிய நம்பிக்கைகள் மற்றும் ஊகங்களைத்தான் இப்சன் தாக்குவார் என்று எதிர்பார்க்கையில்அவர் சீர்திருத்தவாதிகளையும் அவர்களுடைய கருத்தியலையும் கடுமையாகத் தாக்கினார் என்பதையும் விமசகர்களின் கருத்துகள் மூலம் காண முடிகிறது. உவப்பற்ற எதையும் கிழித்து கீழிறக்கியிருப்பதையும் தனது நாடகங்களில் முரண்பாட்டை மிகக்கவனமாகப் பயன்படுத்தியிருப்பதையும் விமசகர்கள் தொடர்ந்து குறிப்பிடுகிறார்கள்.

(‘எனிமி ஆப்த பீப்பிள்’ நாடகத்தைதான் சத்யஜித்ரே-‘ஜனசத்ரு’ என்ற சினிமாவாக எடுத்தார். தேவாலயத்தை கோயிலாக மாற்றினார் சத்யஜித்ரே. அடிப்படைவாதிகளுக்கெதிரான சினிமாவாக அது பாராட்டப்பட்டது. எழுத்தாளர் ஜமுனா ராஜேந்திரன் சத்யஜித்ரே குறித்து எழுதிய ஒரு கட்டுரையில் இது குறித்த விவரம் இருக்கிறது. (<http://pesaamoli.com/mag_26_yamuna.php>,)

ஹெட்டா கேப்ளர்என்ற நாடகம்தான் இப்சனின் நாடகங்களிலேயே அதிகமாக அரங்கேற்றப்பட்டதாகும். ஒருவேளை இன்றைக்கு உள்ள ஒரு நடிகைக்கு மிகவும் சவாலான பாத்திரமாக ஹெட்டா கேப்ளர் கதா பாத்திரம் அமையும் என்றால் அது மறுப்பதற்கில்லை.  ஹெட்டா கேப்ளர்மற்றும் பொம்மை வீட்டின்முக்கிய பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி பேய் ஆற்றல் நிரூபிக்கப்பட்டிருக்கும். இணையத்தில் இருக்கும் ஹெட்டா கேப்ளர்நாடகத்தை குறித்த விமர்சனங்களில் பரவலாக இந்தக் கருத்தை பலர் முன்வைத்துள்ளனர்.  ஹெட்டா கேப்ளர்கதா பாத்திரத்தில் வரும் ஹெட்டாவைப் போன்றே சில ஒற்றுமைகள் பொம்மை வீட்டின் கதாநாயகி நோராவிற்கும் இருப்பதாக மேடை நாடக விமர்சகர்களும் நாடக ஆசிரியர்களும் சொல்லும் கருத்தாகும்.   

இப்சென் முன்னெடுத்தசவாலானகற்பிதங்களுக்கு எதிராக முக்கியப் பிரச்சனைகள் குறித்த நாடகங்கள் நம்மிடையே நேரடியாகவே பேசுவதன் மூலம் ஒரு பொழுதுபோக்கு நாடகம் என்பதையும் மீறி நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமைகிறது. கவிதைக்குள் இருக்கும் அரூபமான பாத்திரங்களை நடிகர்களின் வழியாகப் பேச வைப்பதோடுநாடகமாகவே எழுத வேண்டியனவற்றைக் குறீயீட்டுக் கவிதைகளாக்கியிருப்பார் இப்சன்.
இப்சன் 1891-ல் நார்வே திரும்பினார். ஆனால்அவரால் பல வழிகளில் நார்வேயை விட்டு வெளியேற முடியவில்லை. உண்மையில் அவர் கமூகத்தின் முழுமாற்றங்களுக்கான முக்கியப்பாத்திரமாகவே இயங்கினார். அவர் நவீனம் வளர்ந்தது, நாடக அரங்குகளில் மட்டுமல்ல பொது வாழ்க்கையிலும்தான்.

நான் பேய் வேஷம் போட்டுவிட்ட பிறகுதான்இப்சனின் ‘ghosts' நாடகத்தை YouTube-ப்பில் பார்த்தேன். பல முறை படமாக்கப்பட்டுள்ளது என்பது அதிலிருக்கும் பல வடிவங்களே நமக்கு சாட்சி. அந்தப் படத்தை பார்த்த பிறகுதான்இப்சன் போட்டுவிட்ட பேய்கள் இன்னும் அலைகின்றன உறக்கமின்றி என்பதை உணர தொடங்கினேன். மேடை நாடகங்கள் தற்போதைய மரபுகளை உடைத்து,  ஒரு எளிய நிராகரிப்பையும்  கடந்து உளவியல் சார்ந்து அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.  ஒரு வேளைநான்  வேஷம் தரிக்கும் முன்னமே அந்த நாடகத்தை பார்த்திருந்தால் இன்னும்எனது பாத்திரத்தை வழுவாக்கியிருப்பேன் என்றே தோன்றுகிறது. நான் பார்த்தது கிளாசிக் வடிவிளான அந்த மேடை நாடக பாணி. எனக்கு புரிவதற்கு மிக சிரமமாக இருந்தது. அதோடு சலிப்பாகவும் இருந்தது. ஆனால், அதையும் தாண்டி அந்த நாடகத்தில் ஏதோ ஒன்று ஒளிந்துக்கொண்டுதான் இருக்கிறது. பேராசிரியர் திருத்தி கொடுத்த கவிதை வடிவத்தை மீண்டும் வாசித்தேன். மிகச் சரியாக இருப்பதாகவே தெரிந்தது.

 நன்றி
*எனக்கு இப்சன், ‘பொம்மை வீடுமற்றும் கவிதையை திருத்தி கொடுத்த அந்த பேராசிரியர்பேராசிரியர் அ.ராமசாமி

* <http://en.wikipedia.org/wiki/Henrik_Ibsen>
*http://www.mnc.net/norway/Ibsen.htm 
*https://www.youtube.com/watch?v=VSb3IFpwLvs
*<http://ibsen.nb.no/id/11180567.0>,
*http://www.theguardian.com/stage/2013/oct/04/ghosts-henrik-ibsen-almeida-review-billington
* http://www.theglobeandmail.com/arts/theatre-and-performance/theatre-reviews/an-enemy-of-the-people-this-take-on-ibsen-is-the-next-best-thing-to-a-classic/article20800275/)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக