புதன், 23 மார்ச், 2022

ஆக்ராவில் ஒரு பொழுது

 

‘LAND OF CELESTIAL BEAUTY’ என்று அந்தப் மாநிலத்திற்கு ஒரு சிறப்பு பெயர் உண்டு. தெய்வீக அழகை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். கம்போடியா, இந்தோனேசியா, தைலாந்து, என் சொந்த நாடான மலேசியாவில்கூட தெய்வீக அழகுடைய பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் தெய்வங்களே வாழ்ந்துவிட்டுப் போனதாக சொல்லப்படும் ஒரு நிலபரப்பு எப்படி இருக்கும்? கற்பனைதிறன் என்பது நமக்கு எதுவரை போகும் என ஒரு முறை அந்த நிலபரப்பை கற்பனை செய்துவிட்டு பார்த்தோமானால், கற்பனைக்கு ஏன் இத்தனை கஞ்சத்தனம் வைத்திருக்கிறோம் என தோன்றும்.


கேதர்நாத்-பத்ரிநாத்-கங்கோத்ரி-யமுனோத்ரி என்கிற அந்த பூமியின் நிலப்பரப்பு பாண்டவர்கள் வாசம் செய்த பூமியாகவும், சிவன் பல அவதாரங்களை எடுத்த புண்ணிய பூமியாகவும் போற்றப்படுகிறது. மகாபாரதமும் ராமாயணமும் கற்பனை கதைகள் என சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில், பாண்டவர்கள்  வந்தார்கள், பாவத்திலிருந்து முக்தியடைய இந்தக் கோயிலை கட்டினார்கள், சிவனும் பார்வதியும் இந்தக் கோயிலில்தான் திருமணம் செய்துகொண்டார்கள், இப்படியான தெய்வக்கதைகளும், அதற்கான சாட்சி இதோ இந்தக் கோயில்கள்தான் என்றும் குறிப்புகளை காட்டி ஆச்சரியமூட்டுகிறது மத்திய ஹிமாசல உத்தரப் பிரதேசம்.

‘தமிழ்நாடு’ விரைவு ரயிலில் சென்னையிலிருந்து 40 பேர் கொண்ட குழு டெல்லியையை நோக்கி பயணித்தோம். இரண்டு இரவுகளுக்குப் பிறகு 12-ஆம் தேதி காலை 8 மணிக்கு நாங்கள் டெல்லியில் இறங்க வேண்டும்.  டெல்லியில் ஓய்வெடுத்துவிட்டு மாலை 7 மணிக்குதான் ஹரித்துவார் செல்வதாய் பயணத் திட்டம்.

 டெல்லி ரயில் நிலைத்திற்கு முந்திய நிறுத்தம் ஆக்ரா. ஆக்ரா என்றால் மனதில் மோதித்தள்ளும் அடுத்த விஷயம் தாஜ்மகால். அந்தப்  பெயரைச் சொல்லும்போதே மனதின் ஆழத்திலிருந்து ஒரு புன்னகை எட்டிப்பார்க்கிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் அந்தப் பளிங்கு மாளிகை கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. எனது சுற்றுப்பயண அட்டவணையில் ஆக்ரா செல்வதற்கான திட்டம் இல்லை என்பதால் அந்த வாய்ப்பை இழக்க வேண்டுமா என்ன? எல்லா வாய்ப்பும் ஏற்படுத்திக்கொள்வதுதானே..

நாங்கள் பயணித்திக்கொண்டிருக்கும் இரயில் காலை 4 மணிக்கு ஆக்ராவை சென்றடையும். அங்கு இறங்கி தாஜ்மகாலை பார்த்துவிட்டு பின்னர் டெல்லிக்கு ரயிலேறி, பயணக் குழுவுடன் இணைந்து கொள்ள சிக்கல் இருக்காது.   இந்தத் திட்டம் கொஞ்சம் விவேகமானதாகவும் இருந்தது. அன்றைய நாள் பக்ரீத் பண்டிகை வேறு. இந்தப் பயணத்தில் எங்களோடு பங்கெடுத்த நண்பர் சாகுல், சிறப்பு தொழுகையை மேற்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும். இதை பரீசீலித்துக்கொண்டிருக்கும்போதே இணையத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்தது.


தாஜ்மகாலை சுற்றிப்பார்ப்பதற்காக இந்தியர்களுக்கு 250 ரூபாயும்,வெளிநாட்டவருக்கு 1300 ரூபாயும் கட்டணம் விதிக்கிறார்கள். ஆனால் பக்ரீத் தினம் என்பதால் அன்று மட்டும் நுழைவு கட்டணம் இலவசம்.

நாங்கள் அதிகாலையில், ஆக்ரா இரயில் நிலையத்தில் இறங்கினோம். காலை 7 மணியளவில் தாஜ்மகால் இருக்கும் அந்த நடையை நோக்கிப் பயணித்தோம். வாகன போக்குவரத்திற்கு அங்கு அனுமதியில்லை. பக்ரீத் தொழுகைக்காக முஸ்லீம் மக்களின் நடமாட்டமும் அதிகமாகவே காண முடிந்தது. உத்தர பிரதேசத்தில், அம்மாநில அரசு முஸ்லிம் சமூகத்தினரை நடத்தும் விதம் உலக மக்கள் அறிந்ததே. அதே வேளை, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை உலக நாடுகள் கொண்டாடும் வேளையில, அந்தக் கூற்றை இந்துத்துவா சமூகத்தினர் மறுத்து பேசியதும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியதும் உலக மக்கள் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்மாநிலத்தில் அவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பத்ரீத் பெருநாளின்போது இயல்பாகவே ஒரு கவனக் குவியல் இஸ்லாமிய சமூகத்தின் மேல் எனக்கு இருந்தது.


வெந்நிற ஆடையில் இஸ்லாமிய மக்கள் தாஜ்மகாலை நோக்கி போய்கொண்டிருந்தனர். ஒரு சமாதியை நோக்கி மக்கள் ஏன் இவ்வளவுக் காலையில் போக வேண்டும்? அவர்கள் சென்ற பாதை தாஜ்மகாலை நோக்கியதாக இருக்கலாம், ஆனால், அவர்கள் சுற்றுப்பயணத்திற்குச் செல்ல வில்லை, காலை சிறப்பு தொழுகைக்காக மசூதியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். அந்த மசூதி தாஜ்மகால் வளாகத்திலேயே இருந்தது.      

தூரப் பார்வையில் மசூதியின் முன்வாசலின் வடிவம் மொத்தமும் கண்களுக்குள் அடங்குகிறது. இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலும் மிகப் பெரிய மசூதி இது என இணையத் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. அதாவது ஒரே நேரத்தில் 25,000 பேர் தொழக்கூடிய அளவு பிரமாண்டமான மசூதி அது. அதன் பெயர் ஜாமா மசூதி.  

 

முகலாயப் பேரரசின் 5-வது அரசனான சாஜகான், முன்னெடுத்த  தாஜ்மஹால் கட்டுமானப்பணி 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் ஜாமா மசூதி 1650 – 1656 ஆண்டுக்கிடையில் ஒரு மில்லியன் ரூபாய் செலவில் மூன்று பிரதான வாசல்கள், 4 கோபுரங்கள் வைத்து கிட்டதட்ட 5000 கட்டுமானத் தொழிலாளர்களைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது இந்த மசூதி. தாஜ்மஹாலின் மேற்தளத்தில் நின்று பள்ளிவாசலை நோக்கி பார்த்தால் அதன் பிரதான நுழைவாயிலை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பார்க்கலாம். நுழைவாயிலின் முன்புறத்தில் இருக்கும் சிறிய குளத்தில் புலன்களை சுத்தம் செய்துக்கொண்டு இஸ்லாமியர்கள் தொழுகைக்கு செல்கின்றனர். சில பறவைகள் அதில் நீர் அருந்தியும் செல்கின்றன. தாஜ்மஹாலின் பின்புறத்தில், கண்ணுக்கு எட்டாமல் சத்தமில்லாமல் யமுனா நதி ஓடிக்கொண்டிருக்க, பக்கவாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் ஜாமா மசூதியில் தொழுகையை மேற்கொள்ளும் அற்புதக் காட்சியை கண்டது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த நேரங்களில் ஒன்றென மனம் பரவசமடைந்தது. இப்போதும்கூட அக்காட்சியை மனக்கண்ணில் கொண்டு வரும்போது, அதை எழுத்துகளால் விவரிக்க என்னால் முடியவில்லை.

மலேசிய பள்ளிவாசல்களில் ஆண்-பெண் இருபாலரும் தொழுகச் செல்லலாம். ஆனால், இந்தப் பள்ளிவாசலில் பெண்களை என்னால் காண முடியவில்லை. ஒரு வேளை சிறப்பு நாள் என்பதால் பெண்கள் வரவில்லையோ என்னவோ. ஆனால் தந்தையின் கைப்பற்றிக்கொண்டு தொழுகைக்கு வந்த சிறுமிகளைக் கண்டேன். எனக்கு ஆச்சரியமாகவும் அதைப் காண ஆசையாகவும் இருந்தது. அவற்றை புகைப்படம் எடுக்க மனம் ஆர்வப்பட்டாளும், அவர்களுக்கு அதை சங்கடத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற எண்ணத்தில் தவிர்த்துவிட்டேன்.

செந்நிறம் கொண்ட இந்த மசூதி இஸ்லாமிய, இந்திய, பாரசீகம் மற்றும் முகலாய பாணி  கட்டிடக்கலை தாக்கங்களுடன் கூடியதாக பிரதிபலிக்கிறது. அதோடு குர்ஆனின் ஒரு பழைய பதிப்பு இந்த மசூதியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். செங்கோட்டை என்றும் இந்த மசூதிக்கு மற்றுமொரு பெயர் உண்டு.


1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிளர்ச்சிக்குப் பிறகு ஜமா மசூதியை அவர்கள் அழிக்க நினைத்தார்கள் என்றும் மக்களின் பலமான எதிர்ப்பை சந்தித்ததால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை என்றும் பதிவுகள் சொல்கின்றன. அனைத்தையும் கடந்து தாஜ்மஹாலுக்கு இணையாக மக்கள் அதிகம் பார்த்து வியக்கும் நினைவுச்சின்னமாக விளங்குகிறது ஜாமா மசூதி..

காதல் சின்னம் என்று கொண்டாடக்கூடிய தாஜ்மகால், என் முதல் பார்வையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அதை  அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.

 

 

 

 

திங்கள், 14 பிப்ரவரி, 2022

சரித்திரம் படைத்த துப்புரவு தொழிலாளர்கள்…

சொல்லைவிட செயலுக்கு சக்தி அதிகம்...
சரித்திரம் படைத்த துப்புரவு தொழிலாளர்கள்…








“துப்புரவு பணியாளர்களும் முன்களப்பணியாளர்களே” என்று சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறும்போது, 530 கிலோ மீட்டர் பினாங்கிலிருந்து புத்ராஜெயாவரை, மோட்டார் சைக்கிளில் கடந்துவந்த பயணத்திற்கு ஓர் அர்த்தம் பிறந்திருக்கு என்று அந்தத் துப்புரவு தொழிலாளர்கள் பெருமைக்கொண்டனர்.

அன்றைய தினம் (8/2/2022) முன்னெடுத்தப் போராட்டம் வெற்றியடைந்த நாள் மட்டுமல்ல, அது ஒரு சரித்திர நாள். சரித்திரம் படைத்த தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள் என மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் துணைத்தலைவர் அருள்செல்வன் தெரிவித்தார்.

நமது நாட்டில் துப்புரவு தொழிலாளர்கள் படைத்த அந்த வரலாற்றினை காண்போம்…

158 அரசு மருத்துவமனைகள் 50 ஆயிரம் மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களைக் கொண்டது தீபகற்ப மலேசியா. தீபகற்ப அரசு மருத்துவமனைகளின் தனியார்துறை துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம் (NUWHSAS), கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் துப்புரவு தொழிலாளர்களின் குத்தகை முறையிலான வேலை ஒப்பந்த முறையை அகற்றக் கோரி போராடி வருகிறது. நிலையில்லாத அரசியலில் கடந்த 7 ஆண்டுகளில் மாறிக்கொண்டிருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர்களினால் துப்புரவு தொழிலாளர்களின் பிரச்னை என்பது கிணற்றில் போட்ட கல் மாதிரி அசையாமலே நிற்கிறது.

கல் வேண்டுமென்றால் அசையாமல் இருக்கலாம்; ஆனால், ஏழை தொழிலாளர்கள் அப்படியிருந்தால் அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல அவர்களின் குடும்பமே கூட வருமையில் மூழ்கிபோய்விடும். வளர்ச்சியடைந்த நாடு, தொழில்நுட்ப நாடு என்று நம் நாட்டைப் பற்றி நாம் பெருமை பேசிக்கொண்டிருக்கும் வேளையில், பெரிய பொருளாதார வசதியில்லாத ஏழைக் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எவ்வாறு சுரண்டப்படுகிறது ? அதுவும் இந்தக் கோவிட் காலக்கட்டத்தில் அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்? அவர்களுக்கான சலுகைகள் அதன் மரியாதையோடு வழங்கப்படுகிறதா? தற்போது தொழிலாளர்களுக்காக செயற்படும் தொழிற்சங்கத்தை, துப்புரவு பணிக்கான குத்தகை முதலாளிகள் எதிர்க்கிறார்கள்; அதன் காரணம் என்ன? தொழிற்சங்களில் உறுப்பினர்களாக இணைந்துக்கொள்ளும் தொழிலாளர்களை முதலாளிகள் வெறுப்பது எதனால்? இவ்வாறான பல கேள்விகளுக்கு பதில் தேடுவது அவசியம் மட்டுமல்ல அது வளர்ச்சியடைந்த நமது நாட்டை அளையாளப்படுத்தவும் அவசியமாக இருக்கிறது.

கோவிட் காலம் தொடங்கியதிலிருந்து மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்களின் பணி அதிகரித்திருப்பதும் அவர்களின் தலைமேல் சுமை ஏறியிருப்பதும் எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் தெரியவில்லை. கோவிட் தொற்றுக்கண்டவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் அவர்களின் உயிரையும் பணையம் வைத்துதான் போராடுகிறார்கள். அதேபோல்தான் மருத்துவமனை கோவிட் அறையில் துப்புரவு பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளியும் உயிரை பணையம் வைத்தே அங்கே துப்புரவு வேலையினை மேற்கொள்கிறார்கள். ஒருமுறை கோவிட் நோயாளிகள் அறையை சுத்தம் செய்து வெளியேறியப் பிறகு அத்தொழிலாளி குளித்துவிட வேண்டும். ஒருநாளில் 4 முறை அவர் கோவிட் நோயாளிகளின் அறையை சுத்தம் செய்தால் அவர் 4 முறையும் குளித்து உடை மாற்ற வேண்டும். இதற்கான முன்னேற்பாடோடுதான் அவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். கோவிட் தொற்று பரவிவிடுமே என்று அவர்கள் தன் கடமையிலிருந்து விலகவில்லை.

இத்தனை சவால்களோடு தினமும் வேலைக்குச் சென்று வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு முன்களப்பணியாளர்களுக்கு கொடுக்கும் சிறப்பு நிதி வழங்கப்படுவதில்லை என்பது எத்தனை பெரிய ஏமாற்றுவேலை. பெயரளவில் முன்களப்பணியாளர்கள் என்றுக் கூறிக்கொள்வதால் அதிலிருக்கும் உழைப்புச் சுரண்டல் கண்ணுக்கு தெரியாமல் போய்விடாது அல்லவா?

இது தொடர்பாகவும், ஒவ்வொரு மூன்று ஆண்டுக்குப் பிறகு மாற்றப்படும் குத்தகை நிர்வாக முறையை அகற்றக் கோரியும்,  தொடர்ந்து 5 முறை தொழிலாளர்களின் தொழிற்சங்கம் சுகாதாரத்துறையிடம் வழங்கப்பட்ட அறிக்கைகளுக்கு எந்த பதிலும் இதுவரை இல்லாத பட்சத்தில் இதை ஒரு தேசியப் பிரச்னையாக கொண்டுச் செல்ல தீபகற்ப அரசு மருத்துவமனைகளின் தனியார்துறை துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம் ஒருசமயோகித முடிவை எடுத்தது.

பினாங்கு முதல் புத்ராஜெயா வரை தொழிற்சங்கவாதிகள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து இப்போதைய சுகாதாரத்துறை அமைச்சரான ஜைரி ஜமாலுடினை நேரில் சந்தித்து தங்கள் பிரச்னைகளை நேரில் தெரிவிக்கும் பொருட்டு, அறிக்கையை  கையளிக்க அவர்கள் முடிவெடுத்தனர். இந்தப் பயணத்தில் அவர்கள் கடந்துவரும் சில அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று இப்போராட்டத்தின் நோக்கத்தை தெரியப்படுத்துவதுடன், அங்கே இருக்கும் தொழிற்சங்க உறுப்பினர்களையும் சந்திக்க அவர்கள் திட்டம் வகுத்திருந்தனர்.

அதன்படி அவர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதி நாடே பொதுவிடுமுறையில் களித்திருக்க இவர்கள் பினாங்கிலிருந்து மோட்டார் சைக்கிளில் புத்ராஜெயா நோக்கியப் பயணத்தை தொடங்கினர். இதில் முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது, போராட்டத்தில் களம் இறங்கிய ஒருசிலரைத் தவிர பலர் 50-60 வயதைக் கடந்த பெண்கள். அவர்கள் இன்னும் உழைக்கிறார்கள்; என்பதைவிடவும் அடுத்த தலைமுறை ஞாயமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். இன்று இவர்கள் மேற்கொள்ளு இவ்வாறான போராட்டம் வெற்றியடைந்தால் அதன் பலனை அனைத்து தொழிலாளர்களும் அனுபவிக்கப்போகிறார்கள்.        

அமைச்சரை சந்திக்க திட்டமிட்டபடியே அவர்கள் செயலாற்றினாலும், பல அரசு மருத்துவமனைகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மருத்துவமனை காவலர்கள் அவர்களை மருத்துவமனை வளாகத்திலேயே தடுத்து நிறுத்தினர். போலீஸ்க்காரர்களை வரவழைத்து, விசாரணை நடத்தி கிளர்ச்சிக்காரர்களாகவே இந்த ஏழைத் தொழிலாளிகள் அச்சுறுத்தப்பட்டார்கள். ஆனாலும், துணிந்தக் காரியத்தை செய்துமுடிக்காமல் அவர்கள் பின்வாங்கவும் தயாராக இல்லை.

முதல் நாள் பினாங்கு, இரண்டாம் நாள், பேராக், மூன்றாம் நாள் சிலாங்கூர், இறுதியாக நாளாவது நாளில் புத்ராஜெயாவை வந்தடைந்த துப்புரவு தொழிலாளகள் “வாழ்க பாட்டாளி” “வாழ்க வர்க போராட்டம்” என்று புத்ராஜெயாவில் கோசம் எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடலை அவர்கள் எழுச்சியோடு பாடினர்.  

5 பிரதிநிதிகள் அமைச்சர் கைரியோடு பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்பட்டனர். துப்புரவு தொழிலாளர்களை அடிமட்டத்திலேயே வைத்திருக்கும் குத்தகைமுறைக் குறித்தும், முன்களப்பணியாளர்கள் என்றால் துப்புரவுப் பணியாளர்களுக்கான சிறப்பு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதுக் குறித்தும், ஒடுக்கப்படும் தொழிற்சங்கங்கள் குறித்தும் சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் அமைச்சருடன் கலந்துரையாடினர்.



அமைச்சரிடம் வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகள் இதுதான்..

-குத்தகை முறையிலான வேலை திட்டத்தை ஒழித்து மீண்டும் அவர்களை அரசு தொழிலாளர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

-துப்புரவு தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அங்கிரித்து அவர்களுக்கு சிறப்பு மாநியம் வழங்க வேண்டும்.

-தொழிலாளர்கள் சங்கம் அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்டதாகும். முதலாளி வர்கம் அதை தடை செய்யக்கூடாது.  

உங்களுக்கு நினைவிருக்கலாம், மாநகர மன்ற வேலை, பள்ளி துப்புரவு வேலை, அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவருமே அரசாங்கத்தின் கீழ் இருந்தார்கள். அவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்துவகை சலுகைகளுமே இருந்தன. 20-25 ஆண்டுகளுக்கு முன்பு துன் மஹாதீர் பிரதமராக இருந்த காலத்தில்தான் மேற்குறிப்பிட்ட தொழிலாளர்களெல்லாம் தனியார் துறைக்கு கீழ் மாற்றப்பட்டனர். (இந்தத் தனியார் துறைக்கு பின்னாடியும் பல அரசியல் இருக்கிறது. அதுவும் பேசக்கூடிய விஷயம்தான். பின்னாளில் அதை பார்ப்போம்.) அன்று தொடங்கி இந்தத் ஏழைத் தொழிலாளர்கள் குரலற்றவர்களாகவே இருந்தனர். 

-யோகி

நன்றி தமிழ்மலர் 13/2/2022

 

 

புதன், 26 ஜனவரி, 2022

அடுத்த தலைமுறை வாழ தகுதியுள்ளதாக எம் நாடு இருக்குமா?

இந்தப் பூவுலகில், நமது அடுத்த சந்ததியினர் சராசரியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று சூழலியலாளர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள். மிக முக்கியமாக காடுகளை பாதுகாக்க வேண்டும், காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டும்; இந்தச் சங்கிலி தொடர் சரியாக சுழன்றால்தான், தூய்மையான காற்று, தண்ணீர், ரசாயனமில்லாத உணவு, கால பருவநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுத்து  இயற்கையோடு வாழ்தல் சாத்தியப்படும். இல்லையேல் நாம் நமது அடுத்த தலைமுறையினருக்கு பாவத்தைதான் கொடுத்துவிட்டுப் போவோம்.

சூழலியலாளர்கள் இப்படி அச்சத்தோடும் அக்கரையோடும், இப்பூவுலகிற்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசிற்கும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் இயற்கைக் குறித்தான புரிதல் எப்படி இருக்கிறது என்று அறியும்போது பகீர் என இருக்கிறது. “உண்மையான நண்பனை ஆபத்தில் அறி” என்று சொல்வார்கள். இயற்கை மீது உண்மையான நேசம் கொண்ட அரசியல்வாதிகளை பேசவிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும், அவர்கள் அரசியல்வாதிகளா அல்லது அரசியல் வியாதிகளா என்று. 

                


காடுகள்
குறித்தும் காட்டுயிர்கள் குறித்தும் ஒரு மண்ணும் தெரியாதவர்களை அமைச்சர்களாக அமரக் கொடுத்தால் எப்படி பேசுவார்கள் என்பதற்கு  நமது நாட்டில் சிறந்த உதாரணம் இருக்கிறது.

குறிப்பாக கடந்த டிசம்பரில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின்போது, பஹாங் மாநிலத்தில் சில இடங்களில் காடுகளில் வெட்டப்பட்ட மரங்கள், வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துக்கொண்டுவந்து சிலரின் வீடுகளை பதம் பார்த்தன. சாலைகளிலும் புற நகரங்களிலும் வெட்டப்பட்ட மரங்கள், வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வந்து, பஹாங்கில் சட்டவிரோதமாக மரமே வெட்டுப்படுவதில்லை என்று நகைச்சுவைக்கு முற்று புள்ளி வைத்தன.


வெள்ள நிவாரணம் கொடுக்க பூர்வுக்குடி கிராமத்திற்கு நான் சென்ற போதும் வெள்ளத்தால் அடித்துக்கொண்டுவரப்பட்ட மரங்களை ஆங்காங்கே காண முடிந்தது.  தலையில் அடித்துக்கொண்டு வருத்தப்பட்டுக்கொண்டேனே தவிர அப்போது அதன் தீவிரமான பின்னணியை நான் உணரவில்லை.

குடியிருப்பாளர்களின் வீடுகளை பதம் பார்த்த காட்டுமரங்கள் எங்கிருந்து வந்தன என பாதிக்கப்பட்டவர்களும் இயற்கை ஆர்வளர்களும் கேள்விகேட்கும்போது, வனத்துறையினர் இதுவரை உலக மக்கள் கேட்டிடாத பதிலை சொல்லினர்

கண்டெடுக்கப்பட்ட மரங்கள் மரம் வெட்டும் நடவடிக்கையின் விளைவாக இல்லை, என்றும் அவை வெள்ளத்தின் காரணமாக அறுபட்டு சாய்ந்தவை என்று கூறினர். இதன் அர்த்தம் வெள்ளத்தால் அவை வெட்டப்பட்டு கிராமங்களுக்குள் நுழைந்தன என்று பொருள் படுகிறது இல்லையா?

கற்பனைக்கு எட்டாத இந்த பொறுப்பில்லாத பதிலால், மனம் கொதிப்படைகிறதே தவிர அதைத் தாண்டி இந்த இக்கட்டான வேளையில் ஏதும் செய்ய முடியவில்லை. வனத்தை பாதுகாத்து, சட்ட விரோதமாக மரம் வெட்டுவதை தடுக்கவும்தானே வனத்துறை இருக்கிறது? அதுவே இப்படியான பதிலை சொல்லும்போது யாரிடம் நாம் இயற்கைக்காக அடைக்கலம் நாடுவது?

நாட்டில் இன்னொரு சூழலியல் நகைச்சுவையை பேசியிருப்பவர் Plantation Industries and Commodities Minister ஜுரைடா கமாருடின்.  Malaysian Palm Oil Council’s 2022 மாநாட்டில் அவர் என்ன சொல்கிறார் என்றால், செம்பனை எண்ணெய் தொழில் உற்பத்தியினால், விலங்கினங்கள் (ஓராங் ஊத்தான்கள்) கொல்லப்படுகிறது என்ற கருத்தை மறுத்து, மலேசியாவில் இன்னும் பல ஒராங் ஊத்தான்கள் இருக்கின்றன. ஓராங் ஊத்தான்-னும் மனிதர்களும் சந்திக்க நேர்ந்தால் அங்குரங்குகளே முதலில் மனிதர்களைக் கொல்லும், மனிதர்கள் அதை கொல்ல மாட்டார்கள்.

வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (வனவிலங்குதுறை) , ஒராங் ஊத்தான்கள், புலிகள் மற்றும் சிங்கங்களை வெறுமனே கொல்லவில்லை என்றும், மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு "விலங்குகளை மயக்கமடையச் செய்யும்" கொள்கையைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.





 முக்கியமான அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் இவர், எந்தக் காட்டில்  சிங்கத்தைப் பார்த்தார் என்று தெரியவில்லை. தவிர காடுகள் குறித்த கொஞ்சம் கூட இவருக்கு தெளிவு இல்லை என்று தெரிகிறது. செம்பனை உற்பத்திக்காக, அதன் நடவுக்காக, மலேசிய மண் தின்று ஏப்பம்விட்ட நிலங்கள்தான் எத்தனை ஆயிரம் ஏக்கர்? அத்தனை ஏக்கரிலும் தங்க முட்டையிடும் வாத்துகளால செம்பனை மரங்கள்  வளர்ந்து நிற்கும்போது, பணம் சம்பாதிக்கும் தரப்பினருக்கும் அதன் வழி லாபம் அடையும் தரப்பினர்க்கும் இயற்கை குறித்த அக்கரை வருமா? அல்லது அடுத்த தலைமுறையினர் வாழ்க்கைக் குறித்துதான் யோசனை வருமா? 

1973-களில் போர்னியோவில் 288,500 ஒராங் ஊத்தான்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது, 2025 ஆம் ஆண்டில், அது 47,000 ஆக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. வேட்டையாடப்படவில்லை என்றால் எப்படி அவை அழியக்கூடிய மிருகங்கள் பட்டியலில் வந்தன என்பதின் விளக்கத்தையும்  ஜுரைடா கமாருடின்தான் சொல்ல வேண்டும்.  

சூழலியலாளர்கள் மனதைக் காயப்படுத்திய மற்றுமொரு பதிவு, கிளந்தான் மாநில துணை முதல்வர் அமார் நிக் கூறியிருப்பதாகும்.

“காட்டில் மரங்கள் வெட்டப்படுவதால் புலிகள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறி ஓராங் அஸ்லி கிராமங்களுக்குள் நுழைகின்றன. வனத்துறையின் கூற்றுப்படி, புலிகள் முதுமையடையும்போது அவைகளால் மிருகங்களை வேட்டையாட முடியாது. அவைகளின் சுலபமான இலக்கு மனிதர்கள்தான்; காரணம் மனிதர்களால் மிருகங்களை போல வேகமாக ஓட முடியாது”

உணவுச் சங்கிலி சுழற்ச்சியின் தொடக்கம் புலியில் இருந்துதான் தொடங்குகிறது. புலி அழிந்துபோனால், மனித இனமேக்கூட அழிவை நோக்கிப் போகும் அபாயம் உண்டு.

ஆனால், உலகளவில் மிக கொடூரமாக வேட்டையாடப்பட்ட இன்னும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் மிருகம் எது என்றால் அது புலிதான்.

மலேசியாவின் மலாயா புலிக்கு என்றே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதைப் பற்றி பேசினால் தனி ஒரு கட்டுரையே எழுத வேண்டும். தனித்துவமான மலாயா புலி தற்போது அழிந்தே போகும் அபாயத்தின் பட்டியலில் இருக்கிறது.  புலியின் தோல், எழும்பு, இறைச்சி வரை கள்ளச்சந்தையில் பெருவிலைக்கு விற்கப்படுவதை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் சிறப்பு செய்தி அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்தச் செய்தியை உங்களோடு பகிர்ந்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இணையத்தில் மனதை வேதனைப்படுத்தும் மற்றுமொரு செய்தி வருகிறது. கிளந்தான் வனத்துறை இயக்குனர் அப்துல் கலீம் அபு சாமா, மரம் வெட்டும் நடவடிக்கைகள், புலிகள் மற்றும் அதன் வாழ்விடங்களுக்கு நல்லது என கண்டறியப்பட்டுள்ளது என்ற மாபெரும் கருத்தினை கூறியிருக்கிறார். அதாவது புலியின் பெருக்கத்திற்கு காட்டு மரங்களை வெட்ட வேண்டும் என்கிறார். அதாவது காட்டுமரங்களை வெட்டினால் இதனால் புதிய மரங்கள் உற்பத்தி ஆகும் என்றும், அந்த மரங்களை நாடி மற்ற மிருகங்கள் வரும் என்றும் அந்த மிருகங்களை நாடி புலிகள் வரும் என்றும் இப்படியாக புலிகளின் எண்ணிக்கை பெருகும் என அம்புலி மாமா கதையை நமக்குச் சொல்லியிருக்கிறார்.

எப்பேர்பட்ட வன ஆர்வளர்களை நமது நாடு கொண்டிருக்கிறது பாருங்கள். வனம் தொடர்பான அறிக்கை, வனத்தை பாதுகாக்ககூடிய நடவடிக்கைகள் என இவர்கள்தான் சில முடிவுகளுக்கு சூத்திரதாரிகளாக இருக்கப்போகிறார்கள் அல்லது இருந்திருக்கிறார்கள். அழகிய இயற்கை வளங்களை கொண்டிருந்த நமது நாட்டின் தற்போதையை நிலையை உங்களில் யாராவது திரும்பி பார்த்திருக்கிறீர்களா?  

காடுகள், மலைகள், பூர்வக்குடிகள் என அழிக்கப்பட்டு, கரைக்கப்பட்டு, விரட்டப்பட்டு எல்லாம் பட்டு போய்கொண்டிருக்கும் நாடு; எம் அடுத்த தலைமுறைக்கு வாழ தகுதியுள்ளதாக இருக்குமா?

நன்றி : தமிழ்மலர் 31/1/2022

வியாழன், 9 டிசம்பர், 2021

'ஜெய்பீம்' படம் அல்ல பாடம்


கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்மையில் மனதை வெகுவாக பாதித்த சிலத் திரைப்படங்கள் குறித்து உரையாடப்பட்டது. அந்த உரையாடலுக்கான நோக்கம் என்ன? ஏன் ஜெய்பீம், அசூரன், கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் மாதிரியான திரைப்படங்களை படமாக மட்டும் அல்லாமல் ஒரு பாடமாக பார்க்க வேண்டும்? என்றக் கேள்விகளுக்கு விடைக்காணும் நோக்கத்தில் அந்த உரையாடல் கூகை பதிப்பக நிறுவனம் மேற்கொண்டது. 

ஜாதிக் குறித்த உரையாடலை தொடங்கினாலே “நமது நாட்டில் யாருங்க ஜாதி பார்க்குரா?” என்ற  இந்த வார்த்தை ஒரு முறையாவது நமது வாழ்க்கையில் சந்தித்து கடந்திருப்போம். ஆனால், ஜாதியை ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் சந்தித்துக்கொண்டே இருப்போம். சிலருக்கு அது ஜாதி பெருமையாகவும் சிலருக்கு அது சங்கடம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் யாருங்க நம்ம நாட்டில் ஜாதியை பார்க்கிறா என்பவர்களுக்கான பதில் ஊமையாக இருக்கும் இம்மாதிரியான நேரடி சாட்சிகள் தான்.

பரியேறும் பெருமாள் திரைப்படம் நேரடியாக ஜாதி அடுக்குமுறையை பேசும்போது ஜெய்பீம் பூர்வக்குடிகளின் நிரந்தரமற்ற வாழ்க்கையை பேசுகிறது. எனக்கு இந்த இரண்டு விஷயங்களிலும் நேரடியாகவே பல அனுபவங்கள் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நிறைய பூர்வக்குடிகளின் பிரச்னைகளை நான் நேரடியாகவும் தகவல்கள் சேகரித்தும் எழுதியிருக்கிறேன், பாதிக்கப்பட்டிருக்கும் பூர்வக்குடிகளை நேரடியாகவும் சந்தித்து பேசியிருக்கிறேன். பெருவாரியாக மலேசிய பூர்வக்குடிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை அவர்களின் வனத்தை ஆக்ரமிப்பதுதான். போலீஸ் கஸ்டடியில் பூர்வக்குடிகள் இறந்த பதிவுகள் குறித்து பெரியதாக அறிய முடியவில்லை என்றாலும்  துஷ்பிரயோகம், துன்புறுத்தல் நடந்ததற்கான பதிவுகள் இருக்கிறது. அதுவும் தீபகற்பத்தைவிட சபா-சரவாக் மாநிலங்களில் அது மிகுதியாகவே இருக்கிறது.


பூர்வக்குடிகள் விவகாரத்தை மட்டும் தனியே எடுத்து பார்க்கும்போது மாநில அரசாங்கமோ, அல்லது மத்திய அரசாங்கமோ அவர்களை அவர்களின் சுயத்தை இழப்பதற்கான வேலையைத்தான் செய்கின்றன. அவர்களின் காடுகளை பிடுங்குவதிலிருந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதிலிருந்து, அவர்கள் பூர்வக்குடிகள் என்ற அடையாளத்தை மறக்கடித்து மதச்சாயத்தை பூசி அவர்களுக்கு பண ஆசையை ஏற்படுத்தி அரசாங்கம் எஜமானர்களாகவும் சில சமையம் கடவுகளாகவும் நடந்துக்கொள்ளும்போது ஒவ்வொரு பூர்வக்குடியின் நிலை சொல்லில் விவரிக்க முடியவில்லை.

உயிரை பறிப்பதும், அடித்து காயத்தை ஏற்படுத்துவதும் மட்டும் கிரைம் அல்ல என்பது பலருக்கு புரிவதும் இல்லை. காடுகளை அழைப்பது, ஓராங் அஸ்லியின் (பூர்வக்குடியின்) வாழ்வாதாரத்தை பறிப்பது, அவர்களின் அசல் வாழ்க்கையை பிடிங்குவது இதெல்லாம் கிரைம் இல்லையா? 

பரியேறும் பெருமாள், அசூரன் உள்ளிட்ட திரைப்படங்களில் வைக்கப்படும் மிக வலிமையான செய்தி கல்வியாகும். ஒடுக்கப்படும் சமூகத்திற்கான ஒரே வலூவான ஆயிதமாக இருப்பது கல்விதான். அந்தக் கல்வி பூர்வக்குடிகளுக்கும் அவசியமானது. மலேசிய பள்ளிக்கூடங்களில் பகடிவதைக்கு ஆளாகும் பூர்வக்குடி குழந்தைகளை மலேசிய சமூகம் கண்டுக் கொள்வதே இல்லை. அதன் காரணத்தினால், கல்விக்கு முடிவு கட்டிவிட்டு கூலி வேலைக்குச் செல்லும் மாணவர்கள் ஏராளம் உண்டு. மூடப்படும் பூர்வக்குடி மாணவர்கள் கற்கும் பள்ளிக்கூடங்கள் அதற்கு சாட்சியாகும்.


நாடோடிகளாக வாழவேண்டிய பூர்வக்குடி சமூகம், பின்னாளில் ஒரே இடத்தில் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு தங்களின் இனக் குழுவினரோடு பல ஆண்டுகள் வாழ்ந்த நிலப்பரப்பை பூர்வீக நிலமாக வரையறுக்கிறார்கள். முன்னோர்களின் ஆவி மற்றும் ஆவி வழிபாடுகளில் நம்பிக்கைக்கொண்டிருக்கும் பூர்வக்குடி மக்கள், அந்த நிலப்பரப்பை கைவிடுதல் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு விஷயம். ஆனால், நமது நாட்டில் அது சர்வசாதாரண ஒரு விஷயம்.

2020 முதல் மிகக் கடுமையாக இருந்த கோவிட் பெருந்தொற்று நெருக்கடியிலும் காப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் தன் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்ட பூர்வக்குடிகள்

கதைகள் வெறும் கதைகள் அல்ல. தன் பூர்வீக நிலத்தை விட்டுத்தர முடியாமலும், காப்ரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்கவும் முடியாமலும், போராட்டம் நடத்தி இறுதியில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்ட ஓராங் அஸ்லியின் சோகக் கதைகள் ஏராளம். மலேசிய மக்கள் ஒரு செய்தியாகக்கூட அவற்றை அறிந்திருக்கவில்லை.

ஜெய்பீம் திரைப்படத்தில் சந்துரு என்கிற ஒரு வக்கீல் சட்டரீதியாக நீதிக்காக போராடுவதைப் பார்த்தோம். ஆனால், சந்துரு ஒருவரால் மட்டுமே நீதிக் கிடைத்ததா என்றால் இல்லை. கம்யூனிஸ் தோழர்கள் போராட்டம், வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், பண ஆசைக்கு மயங்காத செங்கேனி, ராஜக்கண்ணுவை கொன்று புதைத்த இடத்தில் தேனீர்கடை வைத்திருந்தவர் என சில முக்கியசாட்சிகளால்தான் இந்த வழக்கை வெற்றிக்கொள்ள முடிந்தது. நீதிகிடைப்பதற்கும் துணையாக இருந்தது.

மலேசிய சூழலில் இம்மாதிரியான களப்பணியை பி.எஸ்.எம் கட்சி மட்டுமே முன்னெடுக்கிறது. வாதியிடம் அவர்கள் பணத்தை கேட்பதில்லை. பரிசாக கொடுக்கிறேன் என்றாலும் அதை அவர்கள் ஏற்பதில்லை. வழக்குக்கு அல்லது அந்தக் களப்பணிக்கு தேவையான செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். வாதிக்கு வசதியில்லாத பட்சத்தில் அவர்களின் செலவையும் கழகமே ஏற்கிறது. தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் வழக்குகளை முன்னெடுக்கும்போதும் இதே நிலையைத்தான் கட்சி/கழகம் கையாள்கிறது. வழக்குகளில் வெற்றி பெற்றால், தொழிலாளர்களே அன்பளிப்பாக ஒரு சிறுதொகையை அளிக்கிறேன் என முன்வந்தாலும் கழகம் அதை ஏற்பதில்லை, இன்னும் சொல்லப்போனால் தேனீர் செலவைக்கூட வாதியை ஏற்கவிடுவதில்லை. என்றால் இடதுச்சாரி தோழர்களின் நிலைப்பாட்டை நீங்களே அறிந்துக்கொள்ளுங்கள்.

உலகம் முழுக்க செங்கொடியை ஏற்றுக்கொண்டவர்களின் நிலைப்பாடு ஒரேநேர்கோட்டில் பயணிப்பதும், அதன் தார்மீகக் கடமை மற்றும் பொறுப்பிலிருந்து அவர்கள் மீளாததும் செங்கொடியின் பலத்தை நமக்கு உணர்த்துகிறது.

எழுத்தில் ஒருசிலருக்கு புரியவைக்க முடியாத சத்தியத்தை, அறத்தை, தத்துவத்தை, படிப்பினையை, காட்சிகளால் புரியவைக்க முடியும் என்பதற்கும் பேசுபொருளாக ஆக்க முடியும் என்பதற்கும் இம்மாதிரியான திரைப்படங்கள் உதாரணமாக இருக்கின்றன. மலேசிய மண்ணிலும் இம்மாதிரியான திரைப்படங்கள் வரவேண்டும் என்பது நமது ஆவலும் கூட.

கலந்துரையாடலில் அனைவரும் அவர் அவர் அனுபவத்தோடு கலந்துரையாடியது மிகச் சிறப்பாக இருந்தது. கிட்டத்தட்ட அனைவருமே ஒத்த சிந்தனையோடு இருப்பதும் மாற்றுச் சிந்தனைக் குறித்த கருத்துப் பகிர்வுகளை வெளிப்படுத்தியதும் சிறப்பாக அமைந்ததோடு ஒடுக்குமுறையை அவரவர் எப்படி எதிர்கொள்கின்றனர் மற்றும் அதில் அவர்களின் புரிதலையும் விவாதிக்க முடிந்தது. மொத்ததில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட திரைப்படங்கள் மலேசிய சூழலோடு எப்படி பொருந்தி போகிறது என்பதையும் அவதானிக்க முடிந்தது.  

-யோகி    

நன்றி: மலேசியாகினி இணையசெய்தி   

 

புதன், 24 நவம்பர், 2021

நாகேந்திரனுக்கு தூக்குக்கயிறிலிருந்து கருணை கிடைக்காதா?

 

கருணை மன்னிப்பு கோரி தூக்குக்கயிறுலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும் என நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வரும் ஒரு வழக்கு நாகேந்திரன் என்ற இளைஞர் சம்பந்தப்பட்ட போதைபொருள் கடத்தல் வழக்காகும். போதை பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை கொடுக்கும் ஒரு நாடாக சிங்கப்பூர் இருந்து வருகிறது. தவிர அதிகமாக தூக்கு தண்டனை வழங்கும் நாடுகளில் சிங்கப்பூரும் மலேசியாவும் முன்னணியில் இருப்பது கவலையளிக்கும் ஒரு விஷயமும்கூட. 

 நாகேந்திரன் தூக்குக்கயிற்றில் எப்படி சிக்கினார்?

2009 ஆம் ஆண்டில், அப்போது நாகேந்திரன்  தர்மலிங்கத்திற்கு  21 வயது. எல்லா இளைஞர்களையும் போல இவர் இயல்பானவர் அல்ல. அவருடைய யோசிக்கும் திறன் (IQ)  இயல்பைவிட  69  குறைவாக இருப்பதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  இப்படி இருக்கும் பட்சத்தில் இது சர்வதேச அளவில் அறிவுசார் குறைபாடு என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவராக இருந்தாலும் நாகேந்திரன்  ஜோகூர் பாருவில் பணிபுரிந்துவந்திருக்கிறார்.       

இந்தச் சூழலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரின்  தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காரணத்தினால், பணத் தேவை இருந்திருக்கிறது.   இதனால் அவர்  “மிஸ்டர்  கே"  என்பவரிடமிருந்து  RM500 கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாகேன் சிங்கப்பூருக்கு "ஏதாவது" கொண்டுவர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கடனை வழங்க   “மிஸ்டர்  கே"   ஒப்புக்கொண்டார். ஆனால், இந்த நிபந்தனையை  நாகேன் மறுத்துவிட்டார். இதனால் அவர் தாக்கப்பட்டதோடு அவரது காதலிக்கும் கொலை மிரட்டல் போயிருக்கிறது. மிகவும் நெருக்கடியில் சிக்கிய அவர் இறுதியாக மிஸ்டர் கே-யின் நிபந்தனையை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

நாகேன் இறுதியில் சிங்கப்பூருக்குள் நுழைந்தார். அவரது காலில் 42.72 கிராம் (3 டீஸ்பூன்களுக்கும் குறைவான)  'Diamorphine' 'டயாமார்ஃபைன்' (இதிலிருந்து ஹெராயின் தயாரிக்க முடியும்) என்ற தடை செய்யப்பட்ட  

 போதைப்பொருள்  கட்டி  இருந்ததை சிங்கப்பூர் அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்து நாகேனை  கைது செய்தனர்.  இதன் விளைவாக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் போது

தனியார் மருத்துவ மனநல மருத்துவரான டாக்டர்  உங் எங் கேன், நாகேந்திரன் கைது செய்யப்படும் போது பகுத்தறிவுத் தீர்வுகள் மற்றும் முடிவுகளை எடுக்க இயலாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்று மருத்துவ அறிக்கையை கொடுத்திருந்தார். 69 புள்ளிகள் மட்டுமே அவருக்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. இந்தப் 10 ஆண்டுகள் சிறை தண்டனையில் அது இன்னும் மோசமான நிலைக்கு போய்விட்டிருக்கிறது.  சிங்கப்பூர் சட்டத்தின்படி, இந்த அறிக்கை அவரை தூக்கு கயிற்றிலிருந்து விடுவிக்க போதுமானதாக  இருந்திருக்க வேண்டும்.  ஆனால், அப்படி நடக்கவில்லை. உண்மையில் அவர் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் அல்லது விடுவித்திருக்க வேண்டும்.  ஆனாலும் சிங்கப்பூரின் பிடிவாதக் குணமானது 10 ஆண்டுகள் கடந்தபின்னும் நாகேந்திரன் மீது எந்த இரக்கத்தையும் கொண்டுவரவில்லை. அவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தூக்குதண்டனை உறுதிசெய்யப்பட்டது.  

அக்டோபர் 2021-ல் தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதியை குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 10-ஆம் தேதி நாகேனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்ற இருந்த வேளையில், அவருக்கு ‘கோவிட் 19’ பெருந்தொற்று கண்டிருந்த காரணத்தினால் அத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைக்க சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மலேசிய பிரதமர் உட்பட பல சமூக அமைப்புகளும் கருணையின் அடிப்படியின் நாகேந்திரனை தூக்குக்கயிறிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கேட்டுவருகிறார்கள். இதற்கிடையில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி மலேசிய சோசலிசக் கட்சியின் ‘வெட்டிப்பேச்சு’ என்ற இணைய கலந்துரையாடலில் “போதை பொருள் கடத்தலுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்வா?” என்ற தலைப்பில் பேசப்பட்டது. அந்தக் கலந்துரையாடலில் தூக்குதண்டனை மற்றும் போதைபொருள் கடத்தலில் சிக்கிக்கொள்பவர்கள் தொடர்பாக பல தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூர் சாங்கிச் சிறைச்சாலையில் இருக்கும் நாகேந்திரனுக்காக சட்ட உதவி மேற்கொள்ளும் மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் மற்றும் சிங்கப்பூர் சமூக ஆர்வளரான வி.ராஜாராம் அந்தச் சந்திப்பில் பேசினர்.

சிங்கப்பூர் சட்டப்படி 15 கிராம் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்தது நிறுபிக்கப்பட்டால் கட்டாய மரணதண்டனையை விதிக்க சட்டம் வகை செய்கிறது. தற்போதுதான் அதில் சிறுதிருத்தம் செய்திருக்கிறார்கள். என்றாலும் போதைப்பொருள் கடத்தும் கழுதைகளாக  ஏழைகளையும், பணத் தேவை உள்ளவர்களையும், அப்பாவிகளையும் ஒரு கும்பல் குறிவைத்து, மிக சாமர்த்தியமாக அவர்களின் உயிரை பணையம் வைப்பதுடன், இதில் சிக்ககொண்டால் அக்கும்பல் தப்பிகொள்வதுடன், மாட்டிகொண்டவர் தூக்குகயிறுக்கு இரையாகிடுகிறார். இந்தப் பிரச்னையை ஆராய வேண்டும் என சிங்கப்பூர் ஆர்வளரான வி.ராஜாராம் பேசியது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தூக்குதண்டனையை நிறைவேற்றும் நாடுகள்..


போதைப் பொருள் கடத்தலுக்கு 32 நாடுகள் மரணதண்டனையை நிறைவேற்றுகின்றன. என்றாலுகூட அமெரிக்கா, கியூபா உள்ளிட்ட 14 நாடுகளில் அத்தண்டனை அமலில் இருந்தாலும் நடைமுறைபடுத்தவில்லை. சீனா, ஈரான், சவூதி, அரேபியா, வியட்நாம், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் மிக அதிகமாக போதைபொருள் கடத்தல் குற்றவாளிகளை வழக்கமாக தூக்கில்போடுகிறார்கள். 2020-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஆக அதிகமாக தூக்குதண்டனை கொடுத்த நாடாக வியட்நாம் இருக்கிறது. சுமார் 79 பேருக்கு இரக்கமே இல்லாமல் தூக்குதண்டனையை அந்த நாடு விதித்திருக்கிறது. அடுத்த நிலையில் இந்தோனேசியா 77 பேருக்கும் அதற்கு அடுத்த நிலையில் மலேசியா 25 பேருக்கும், லாவுஸ் 13 பேருக்கும் தாய்லாந்து 8 பேருக்கும் தூக்குதண்டனையை விதித்திருக்கிறார்கள்.

ஆனால்,ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியர்கள் அதிகமானோர் கைதுசெய்யப்படுகின்றனர். சிலரின் கவனக்குறைவை பயன்படுத்தி அவர்கள் அறியாமலேயே போதைபொருளை அவர்களின் கைப்பையிலோ அல்லது வாகனத்திலோ வைத்துவிட்டு, அதிர்ஷ்டத்தின் அடைப்படையில் பொருளை கடத்துவது. சிலரின் குடும்ப சூழல் வறுமையை பயன்படுத்தி சூழ்நிலை கையாக்குவது. இவ்வகைக் கடத்தல்காரர்களைதான் போதைபொருள் கழுதை என்று உவமை சொல்கிறார்கள். துரதுஷ்டவசமாக இவ்வாறுறான குற்றவாளிகளில் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாக இந்தியர்களே சிக்கிகொள்கிறார்கள்.

அதேவேளையில் உலகம் முழுவதுமே ஆயிரங்கணக்கான மக்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கின்றனர். போதைப்பொருளை பயன்படுத்துபவர்களோ மிக அதிகமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கும் வேளையில் 2030- ஆம் ஆண்டை எட்டும்போது உலக மக்களிடையே போதைப்பொருளை பயன்படுத்துவது 11 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டிருக்கும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. போதைப்பொருள் பயன்பாட்டினால் அதிகமாக பரவும் நோயாக எச்.ஐ.வி-யும், ஹெபடைடிஷ் சி-யும் இருக்கிறது.  

நாகேந்திரன் வழக்கை பொறுத்தவரை அவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது ஞாயம் இல்லாத ஒன்று என்றும் சட்டத்திற்கு புறம்பானது என்றும் சிங்கப்பூர் - மலேசிய மனிதாபிமானிகள் குரல் எழுப்பிவருகிறார்கள். சுயநினைவோடு இல்லாத ஒருவரை தனக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளாத ஒருவரை தூக்கிலிடக்கூடாது என்று  மலேசியர்கள் மட்டுமல்ல சிங்கப்பூர் மக்களும் நாகேந்திரனுக்காக  குரல் எழுப்பிகொண்டிருக்கின்றனர். அவருக்காக பணம் வசூல் செய்து அதை இந்த வழக்குக்காக பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனாலும், தூக்கில் ஏற்றியே தீருவோம் என பிடிவாதத்தை கடைப்பிடிக்கும் சிங்கப்பூர் அரசாங்கம், மனிதாபிமான அடிப்படையில் கொஞ்சம் மனது இறங்க வேண்டும் என இருநாடுகளின் மனித உரிமை ஆர்வளர்கள் காத்திருக்கிறார்கள். நாமும் அதையே வேண்டுகிறோம்…

நன்றி தமிழ்மலர் 28/11/2021

செவ்வாய், 16 நவம்பர், 2021

இளம் தேசிய போராட்டவாதி ரோஸ்லி டோபி (Rosli Dhoby)

 

ரத்தம் சிந்தாமல் பெறப்பட்ட சுதந்திரம் என்று மலேசிய சுதந்திரம் குறித்து நான் படித்ததுண்டு. உண்மை அப்படியல்ல என்பது நான் சில கேள்விகளுக்கு விடைகண்டதின் மூலமாக அறிந்துகொண்டேன். சில சரித்திரங்களை நம்மால் வெளிப்படையாக பேசமுடிகிறது. சில சரித்திரங்களுக்கு பேச்சு சுதந்திரங்கள் மறுக்கப்படுகிறது. ஊடக சுதந்திரமும் சில வேளை மறுக்கப்படும் பட்சத்தில் நான் என் எழுத்து சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திகொள்ள நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரையை கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்ளலாம். பில்லா அரண்மனை குறித்தக் கட்டுரையில் 2009-ஆம் ஆண்டு அந்த அரண்மனையில் தொடராக எடுக்கப்பட்ட “வர்க்கா தெராகிர்தொலைக்காட்சி நாடகம் குறித்து கூறியிருப்பேன். அந்த தொடர் நாடகம் சரவாக் மாநிலத்தின் தேசிய போராட்டவாதியான ரோஸ்லி டோபியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவமாகும். 

யார் அந்த ரோஸ்லி டோபி?

18 மார்ச் 1932-ஆம் ஆண்டு சிபுவில் உள்ள கம்போங் பூலோ எனும் இடத்தில் ரோஸ்லி டோபி பிறந்தார். உடன்பிறப்புகள் 4 பேரில் இவர் இரண்டாவது குழந்தை. இவரின் தந்தை டோபி இந்தோனேசியாவின் ரேடன் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் இவரின் தாயார் ஹபிபா முகா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ரோஸ்லி டோபிக்கு ஃபாத்திமா என்ற தமக்கையும், ஐனி என்ற தம்பியும் இருந்தனர்.

யாரையும் எளிதில் அனுகக்கூடியர் என்று ரோஸ்லி டோபியின் குணாதிசயம் குறித்து அவர்கள் நண்பர்கள் கூறினாலும், அதிகம் பேசாதவர்; அமைதியானவர் என்றும் அவரைக் குறித்து கூறுகிறார்கள்.


ரோஸ்லி டோபியின் தொடக்க காலம்

ரோஸ்லி சுயமாக இயங்ககூடியவர். பெற்றோரை மதித்து நடப்பவர்.  யாரையும் கஷ்டப்படுத்தமாட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட. அவரின் கவிதைகள் சரவாக் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பவரான ரோஸ்லி ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முன்னதாக அவர் சரவாக் பொதுப்பணிதுறையிலும் உத்துசான் சரவாக் பத்திரிக்கை துறையிலும் பணிபுரிந்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான் அவர் ஒரு தேசியவாதியாகவும் கவிஞராகவும் தன்னை உயர்த்திக்கொண்டார். லிட்ரோஸ் எனும் புனைப்பெயரில் சில புரட்சிமிகு கவிதைகளை எழுதியவாரன ரோஸ்லி 28/2/1948 அன்று உத்துசான் சரவாக் இதழில் வெளியிடப்பட்ட ‘panggilan mu yang suci' ' என்ற தலைப்பில் எழுதிய கவிதை அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதோடு அக்காலக்கட்டத்தில் புனைப்பெயர்களின் பயன்பாடு பரவலாக இருந்தது, ஏனெனில் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக வார்த்தைகளை பரப்புவதற்கான எந்தவொரு முயற்சியையும் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் சிரத் ஹாஜி யமன் என்பவரின் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்த சிபு மலாய் இளைஞர் இயக்கத்தில் ரோஸ்லி சேர்ந்தார். 1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி ‘ருக்கூன் 13’ இயக்கத்தில் தன்னையும் ரோஸ்லி இணைத்துக்கொண்டார். ‘ருக்கூன் 13’ இயக்கம் ஒரு ரகசிய இயக்கமாகும். ரோஸ்லியின் நீண்ட நாள் நண்பரான ஆவாங் ரம்லி மூலம் அவ்வியக்க செயல்பாடுகள் குறித்து ரோஸ்லி அறிந்துக்கொண்டார். அன்றிலிருந்துதான் பிரிட்டிஷ்-க்கு எதிரான அவரின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.


‘ருக்கூன் 13’ ரகசிய இயக்கம் உருவானது எப்படி?

ப்ரூக்ஸ் அரச குடும்பம் 1841 முதல் சரவாக்கை கைப்பற்றி நீண்ட நாள் ஆட்சி செய்து வந்தது. இந்த குடும்பம்தான் 1941-ல் சரவாக் அரசியலமைப்பின் மூலம் சரவாக்கிற்கு சுதந்திரமும் அளித்தது. இருப்பினும், சார்லஸ் வைனர் ப்ரூக்ஸ் 1946 பிப்ரவரி 8 அன்று ஆங்கிலேயரிடம் சரவாக்கை காலனியாக ஒப்படைக்க அரசியலமைப்பை மீறி செயல்பட்டார்.

ப்ரூக்ஸ் குடும்பத்தால் சரவாக்கை மேம்படுத்த முடியவில்லை, அதே வேளையில் சரவாக்கும் சுயராஜ்யத்திற்கு தன்னை தயார்படுத்தியது; இந்நிலையில் சரவாக்கை கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர்களின் அழுத்தம் ப்ரூக்ஸ் குடும்பத்தினருக்கு அதனை அவர்கள் கையில் ஒப்படைக்க ஒரு காரணமாக இருந்தது.

இந்த நடவடிக்கையானது சரவாக் சரணடைதலை கடுமையாக எதிர்க்கும்  எதிர்வினைக்கு வழிவகுத்தது. இந்த நடவடிக்கையை எதிர்க்கவே உள்ளூர்வாசிகளால் ‘சரவாக் சரணடைதல் எதிர்ப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரர்களின் நடவடிக்கையாலும் ஆதிக்கத்தாலும் கொதிப்படைந்திருந்த ரோஸ்லி டோபி, ‘சிபு மலாய் இளைஞர் இயக்கம்’ எனப்படும் சரணடைதலுக்கு எதிரான குழுவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

இந்த இயக்கத்தில் இருந்து, 13 உறுப்பினர்கள்தான் இறுதியில் ‘ருக்கூன் 13’ என அழைக்கப்படும் ஒரு இரகசிய குழுவை உருவாக்கினர். ஆரம்பத்தில் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னரான Charles arden-chake-கை படுகொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர், ஆனால் இந்தத் திட்டம் செயலாக்குவதற்கு முன்பே அவர் கானாவுக்கு மாற்றப்பட்டார்.


Duncan Stewart படுகொலை

Charles arden-chake-கை அடுத்து சரவாக்கின் இரண்டாவது கவர்னராக Sir Duncan Stewart 3.12.1949 அன்று பதவிக்கு வந்தார். அவர் பதவி ஏற்று முதல்முறையாக சரவாக் மக்களை பார்வையிட அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டார். அன்றைய தினம் ருக்கூன் 13 இயக்கத்தின் தோழர்களான ரோஸ்லி டோபி, மோர்ஷிடி சிடேக், அவாங் ரம்லி மற்றும் புஜாங் சொத்தோங் ஆகியோர் களத்தில் நின்றனர். பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிரான அவர்களின் திட்டம் தொடங்கியிருந்தது.

பதிவின் படி, புகைப்படம் எடுப்பதற்காக ரோஸ்லி கவர்னரோடு நிற்க மோர்ஷிடி சிடேக் புகைப்படம் எடுப்பது மாதிரி கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் தருணத்தில், சந்தர்ப்பம் பார்த்து, விஷம் தடவிய கத்தியை ரோஸ்லி கவர்னரின் வயிற்றில் குத்திவிடுகிறார். இரண்டாவதாக கத்தியால் குத்துவதற்கு முயற்சிக்கும்போது அருகில் இருந்த போலீஸ் அதிகாரி அம்முயற்சியை தடுத்துவிடுவதோடு களத்திலேயே கொலை முயற்சயில் ஈடுபட்ட இருவரையும் போலீஸ் களத்திலேயே கைது செய்கின்றனர். மோசமான நிலையில் Sir Duncan Stewart கூச்சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். பின்பு தீவிர சிகிச்சைக்கு அவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாளும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மரணமடைந்துவிடுகிறார்.


சம்பவத்திற்கு பிறகு…

ரோஸ்லி டோபி, மோர்ஷிடி சிடேக் ஆகியோரின் கைதுக்குப் பிறகு ‘ருக்கூன் 13’ இயக்கம் குறித்து பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரனையை தொடங்கினர். அதன்பிறகு அவாங் ரம்லி மற்றும் புஜாங் சொத்தோங் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். Sir Duncan Stewart படுகொலையை மிகவும் கடுமையாக பார்த்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ‘ருக்கூன் 13’ இயக்கத்தினர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தத் திட்டத்தில் ஈடுபடும்போது ரோஸ்லிக்கு வயது 17-தான் என்றாலும் அவரை வயது குறைந்தோர் குற்றவாளியாக பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரிக்கவில்லை. விசாரணைக்குப் பிறகு Sir Duncan Stewart கொலையில் தொடர்பு இருக்கும் அனைவருக்கும் தூக்கு தண்டனையை கொடுத்தது. கூச்சிங் சிறைச்சாலையில் சில மாதங்கள் தண்டனையை அனுபவித்து மார்ச் 2, 1950 இல் ரோஸ்லி தூக்கிலிடப்பட்டார்.


அவர் சிறைவாசம் அனுபவித்த காலத்தில்தான் தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய ஒரு வரிதான் ‘வர்க்கா தெராக்ஹிர்’ (கடைசி கடிதம்). இந்த வார்த்தையைத்தான் 2009-ஆம் ஆண்டு போராட்டவாதி ரோஸ்லி டோபி குறித்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடருக்கும் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட தொடரில் 60 சதவிகிதம் மட்டுமே துல்லியமானது என்றும் கவர்னரின் வயிற்றில் குத்திவிட்டு  ரோஸ்லி தப்பி ஓடுவதைக் காட்டும் காட்சி உள்ளிட்டது வரை கிட்டதட்ட  40% உண்மைக்கு புறம்பாக காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்று இன்றும் உயிரோடு இருக்கும் ரோஸ்லியின் சகாக்கள் கூறியிருக்கின்றனர். அவர்களின் கூற்றுக்கு ஆதாரங்களையும் அவர்கள் கையில் வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.


ரோஸ்லி டோபி தூக்கில்போடுவதற்கு முன்பு, தூக்கிலிடுவதற்கான தேவையான பொருட்கள் அனைத்தும் சிங்கப்பூரிலிருந்து வரவைக்கப்பட்டிருந்தன. அப்போது கூச்சிங் சிறைச்சாலையில்  தூக்கிடுவதற்கான வசதியில்லை. மேலும் தூக்கில் போடுபவரும் சிங்கப்பூர் Changi சிறைச்சாலையிலிருந்துதான்  அழைத்துவரப்பட்டார். தூக்கிலிடப்பட்ட போராட்டவாதியான ரோஸ்லியின் உடல் அவரின் குடும்பத்தாரிடம் கொடுப்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது. அவரின் உடல் கூச்சிங் சிறைச்சாலை வளாகத்திலே புதைக்கப்பட்டது.

புதைக்கப்பட்டு 46 ஆண்டுகளுக்கு பிறகு, சிறை வளாகத்திலிருந்து  ரோஸ்லி டோபியின் உடல்  மார்ச் 2, 1996 அன்று தோண்டி எடுக்கப்பட்டு அவரது சொந்த ஊரான சிபுவில் உள்ள கம்போங் சிபு மசூதிக்கு அருகில் உள்ள சரவாக் மாவீரர்களின் கல்லறையில் சரவாக் அரசாங்கத்தால் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஓர் இளம் போராட்டவாதியாகவும் தனது நாடு மற்றும் நாட்டு மக்களின் விடுதலைக்காகவும் தன் உயிரையே பணையம் வைத்ததோடு உயிரையே கொடுத்த போராட்டவாதி ரோஸ்லி  டோபியின் பெயரில் சிபுவில்  ஒரு தேசிய  உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.  

நன்றி தமிழ்மலர் : 21/11/2021  

பில்லா அரண்மைனையைக் குறித்து தெரிந்துக்கொள்ள