ஞாயிறு, 3 ஜூன், 2018

மலேசிய அரசியலில் முத்திரை பதித்த முதல் பெண் (பாகுபாடுகளிலிருந்து மேலெழுந்த உத்வேகம் )

வான் அசிசா வான் இஸ்மாயில்
 


மலேசிய வரலாற்றிலேயே முதல் பெண் துணைப் பிரதமர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார், மருத்துவரான வான் அசிசா  வான் இஸ்மாயில். 66 வயதாகும் அவருக்கு துணைப் பிரதமர் ஆகக்கூடிய இந்த மாபெரும் அங்கீகாரம் எளிதாகக்  கிடைத்துவிடவில்லை. பெரும் சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்ததின் பலன்தான், மக்களால் அவருக்கு   வழங்கப்பட்டிருக்கும் இந்த வெற்றியும் துணைப் பிரதமர் பதவியும்.

1990-களில் டத்தோ ஸ்ரீ  அன்வர் இப்ராஹிம்  துணைப் பிரதமராக  இருந்தபோது அவரின் துணைவியான வான் அசிசா,  ஒரு சராசரி மனைவியாகக் குடும்பத்தை பராமரித்துக்கொண்டு, மருத்துவராக தன் பணியைச் செய்து கொண்டிருந்தார்.  தன்னை ஒரு பிரதமரின் மனைவியென அவர் காட்டிக் கொள்ளவில்லை. இருக்கும் இடம் எங்கு என மக்கள் தேடும்  அளவுக்குத்தான் அவரின் இருப்பு இருந்தது.வான் அசிசா அயர்லாந்தில் மருத்துவக்கல்வி பயின்று, மலேசியாவில்   சுமார் 14 ஆண்டுகள் மருத்துவராகப்  பணியாற்றினார். தனது கணவர் 1993 ஆம் ஆண்டு நாட்டின் துணைப்பிரதமர்  ஆனதும் அவர் தனது மருத்துவப் பணியை ராஜினாமா செய்தார்.

1998ல் அன்வர் இப்ராஹிம் கைது நடவடிக்கைக்குப் பிறகு மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1999  ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி மக்கள் நீதிக் கட்சியைத் தோற்றுவித்து, அதற்குத் தலைவர் பொறுப்பை ஏற்றுத் தேசிய  முன்னணிக் கட்சிக்கே சவாலாக மாறினார் வான் அசிசா. தன் கணவரின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை  எதிர்த்து மேல் முறையீட்டு வழக்குகளையும் தொடுத்தார்.

மலேசிய வரலாற்றில், 14-வது பொதுத் தேர்தல் வரை எப்படி எந்தப் பெண்ணும் பிரதமர் அந்தஸ்துக்கு  உயர்ந்ததில்லையோ அதுபோல 1999 ஆம் ஆண்டுவரை எந்தப் பெண்ணும் ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்ததில்லை.  அந்த வகையில், ஒரு பெண்ணாக அதுவும் ஓர் இஸ்லாமியப் பெண்ணாக தனக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை  உடைத்துக்கொண்டு, ஏளனமாகப் பேசியவர்களை புறம் தள்ளி ஆளுங்கட்சி அரசாங்கமே மிரளும் அளவுக்குத் தனது  கட்சியை மிக மிகச் சக்தி வாய்ந்த கட்சியாக உருமாற்றினார்.




அதுவரை ஆளும் அரசாங்கத்தைத் தனித்து எதிர்த்துவந்த (துணைக் கட்சிகளை) உறுப்புக் கட்சிகளை தனது கட்சியோடு கூட்டுச் சேர்த்தார் வான் அசிசா. அது நல்ல பலனை கொடுத்ததுடன், எதிர்க்கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு  கொண்டிருக்கும் அபாயத்தை, தேசிய முன்னணி கட்சிக்கும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கும் காட்டியது. 55  ஆண்டுகளாகத் தேசிய முன்னணி தக்க வைத்திருந்த அரசாங்க  விழுது ஆட்டம் கண்டது என்று தாராளமாகச்  சொல்லலாம். ஆட்சியை  இழந்து விடுவோமா என்ற ஐயம் தேசிய முன்னணியைப் பற்றிக்கொண்டதை 13-வது பொதுத்  தேர்தலின்போது  அவர்களின் பிரச்சாரத்திலிருந்தே அதை கவனிக்க முடிந்தது. என்றாலும் 2013 ஆம் ஆண்டு நடந்த  பொதுத்தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என மக்கள் அதிகம் நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் நீதிக் கட்சி  பெரும்பான்மை இடத்தைப் பிடிக்கத் தவறியது.

இருந்தபோதும் வான் அசிசா போட்டியிட்ட தொகுதியில் அவர் ெவற்றி பெற்றார் என்பதும் தொடர்ந்து அந்தத்  தொகுதியில் தேர்தலில் நிற்கும் யாராலும் அவரைத் தவிர  பெரும்பான்மை வாக்கு வாங்கக்கூட  முடியவில்லை  என்பதும் வரலாறாகும்.2014  ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்த தமது கணவர் அன்வரை நாடாளுமன்ற பதவிக்கு  அனுப்பும் நோக்கத்தில், தான் வெற்றிபெற்ற தொகுதியான பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்  பதவியை ராஜினாமா செய்தார் வான் அசிசா. பின்னர் அவர் காஜாங் சட்டமன்றத்தில் போட்டியிட்டார். அதில்  வெற்றிபெற்றால் மாநில முதல்வர் ஆகும் வாய்ப்பும் இருந்தது. எதிர்பார்த்தபடியே அந்த தொகுதியில் வெற்றியும்  பெற்றார்.

ஆனாலும் அவர் பெண் என்ற காரணத்தினாலும் மதம் சார்ந்த விவகாரத்தினாலும்  மாநில முதல்வர் (மந்திரி பெசார்)  பதவியை கொடுக்க முடியாது என சிலாங்கூர் மாநில சுல்தானும், உறுப்புக் கட்சி மற்றும் ஆளுங்கட்சி தலைவர்களும்  மறுத்தனர்.அம்னோவின் வழக்கறிஞரான டத்தோ முகமட் ஜஃபாரிஸாம் ஹாருன், நாட்டின் பிரபல நாளேடான News  Straits Times-சில் மாதவிடாய் வரும் பெண்ணான அவரால் மாநில முதல்வர் ஆக முடியாது என நாகரிகமற்ற  கருத்தை கூறினார்.  பாஸ் கட்சியின் தலைவரான  டத்தோஸ்ரீ  ஹாடி அவாங், வான் அசிசாவிற்கு மாநில முதல்வர்  பதவி வகிப்பதற்கான ஆற்றல் இல்லை  என்று பத்திரிகை சந்திப்பில் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் இஸ்லாமிய கொள்கைக்கு கீழ்,  பெண் ஒருவர் மாநில முதல்வர் ஆவதற்கான சாத்தியமில்லை  என்றும், எனவே வான் அசிசா மாநில முதல்வர் ஆகமுடியாது என சிலாங்கூர்  சுல்தான்  தெரிவித்தார்.  இப்படியாக  வான் அசிசாவை மந்திரி பெசாராக பரிந்துரைக்கும் முயற்சி தோற்கடிக்கப்பட்டது. ஒரு வேளை, அவர் மாநில  முதல்வராக ஆகியிருந்தால் நாட்டின் முதல் பெண் முதல்வர் என்ற சரித்திரப் பதிவும் வான் அசிசாவிற்கே    கிடைத்திருக்கும்.

தற்போது பிரதமராகியிருக்கும் மகாதீர்  ஒருவேளை மக்கள் நீதிக் கட்சியில் இணையாமல், அந்தக் கட்சிவெற்றி  பெற்றிருந்தால் இன்று துணைப் பிரதமராக அல்லாமல் பிரதமராகவே வான் அசிசா வலம் வந்திருப்பார். அப்படி அவர்  பிரதமராகியிருந்தாலும் நாட்டின் முதல் பெண் பிரதமர் என வரலாறு அவர் பெயரை பதிவு செய்திருக்கும்.  “1999ல் வான் அசிசாவின் கணவர் அன்வர் இப்ராகிம் சிறையிலிடப்பட்ட போது, அரசுக்கெதிரான எதிர்ப்பு இயக்கத்தை  வழிநடத்துதல், சமூக நீதிக்கான இயக்கத்தை (ADIL) ஒழுங்கமைத்தல், மக்கள் நீதிக் கட்சியை துவக்குதல்,  அக்கட்சியின் தலைவராக உறுப்பினர் களால் தேர்ந்தெடுக்கப்படுதல், சிறையில் இருக்கும் கணவருக்கு நம்பிக்கையூட்டும்  உதவியளித்தல் என அனைத்தும் அவர் தன் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதோடு சேர்ந்தே நடந்தது.அவரின் அரசியல்  முக்கியத்துவத்தைப் பார்க்கும் அனைவருமே இயல்பாக தவறவிடுவது, வான் அசிசா ஒரு தாய் (ஆறு குழந்தைகளின்)  மற்றும் பாட்டி (ஒன்பது பேரக்குழந்தைகளின்) என்பதைத்தான்.

அவரின் மூத்த மகள்  நூருல் இஸ்ஸா அன்வர் தனது தாயைப்பற்றி   குறிப்பிடுகையில்.. .“என்னதான் ஓய்வற்ற  அரசியல் வாழ்க்கையில் இருந்த போதும், குடும்பத்தை ஒருபோதும் புறக்கணித்தது கிடையாது. அவரின் பெற்றோர்  இன்னும் உயிரோடிருக்கிறார்கள். அவர்கள் மீது அதீத அன்புடைய மகள் தான் அவர். அவரின் பெற்றோர்களுக்கு  எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அவர் அங்கிருப்பார். எங்கள் தேவைக்கும் அவர்  அதே போலத்தான்  இருக்கிறார் ” என்றார்.மலேசியப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியவராகவும்  திகழ்கிறார் வான் அசிசா.

-யோகி

நன்றி : http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4791&id1=84&issue=20180601

-மகளிர் எழுச்சி

திங்கள், 28 மே, 2018

வாரணாசியிலிருந்து பம்பாய் வரை (ரயில் பயணத்தில்)

வாரணாசியிலிருந்து பம்பாய் வருவதற்காக ரயில் பயணம் முன்பதிவு செய்திருந்தேன். நல்ல வேளையாக என் நண்பர் சாகுல் ac coach முன்பதிவு செய்துகொடுத்திருந்தார். 1511 கிலோ மீட்டர் பயணம் அது. முதல்நாள்
காலை காசியில் 11  மணிக்கு ரயில் ஏறினால் மறுநாள் மதியம் 2 மணிக்கு மேல்தான் பம்பாயில்   இறங்க முடியும். நீண்ட ரயில் பயணங்களுக்கு மனம் தயாராகியிருந்த நிலை. மொழி உணவு என எதுவும் எனக்கு சரியாக அமையா விட்டாலும், மனம் மட்டும் பயணத்திற்கு தயாராக இருந்தது. இதற்கிடையில் மூன்று வெவ்வேறு அனுபவங்களை அந்த பயணம் எனக்கு கொடுத்தது.


சம்பவம் 1

நிறைய இளைஞர்கள் அந்த பிரயாணத்தில் இருந்தனர். நான் இருந்த ரயில் பெட்டியில் இளம் ஜோடியும், ஒரு திடகாத்திரமான இளைஞரும் இருந்தனர். சற்று நேரத்தில் பெரிய குடும்பம் ஒன்று அந்த பெட்டியில் ஏறியது. கணவன் மனைவி, அவர்களது நான்கு குழந்தைகள், கணவனது தங்கை ஒருத்தி. இத்தனை பேருக்கும் அவர்கள் மூன்று இருக்கைகளை மட்டுமே வாங்கியிருந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த பொருள்கள் நிற்பதற்கே போதாமல் இடத்தை அடைத்துக்கொண்டது.
நான் குறுகலாக அமர்ந்தவாறு கண்ணாடி ஜன்னல் வழியே பார்வையை செலுத்திக்கொண்டிருந்தேன். பெரிய குடும்பத்து ஆண், என்னிடம் நீங்கள் தனியாக தானே வந்திருக்கீங்க. வேறு இடத்திற்கு மாறிக்கொள்ள முடியுமா என்றார். நான் உறுதியாக முடியாது என்று கூறிவிட்டேன். அடுத்த நிலையத்தில் ஒரு இளைஞன் ஏறினான். விளையாட்டு வீரர் போல தோற்றம். உடையும் அவ்வாறே இருந்தது. அதற்குள் இளம் ஜோடிகள் சாப்பிட்டு கீழ் பெஞ்சில் கணவனும், இரண்டாவது பெஞ்சை பூட்டி மனைவியும் படுத்து விட்டார்கள். என்னுடைய எண் அவர்களுக்கு மேலே மூன்றாவது இடத்தில் இருந்தது.

நானோ இரவில்தானே படுக்க போகிறோம் என உட்கார்ந்து இருந்தேன். திடகாத்திரமான இளைஞரும் எதிர் திசையில் இருந்த மேல் இருக்கையில் படுத்துவிட்டார்.
புதிதாக வந்த இளைஞன் நான் இப்போ தூங்கணும், நீ உன் இடத்திற்கு போகிறாயா என்று கேட்க வில்லை, உடனே போய் விடு என்றான். ஆனால், எனக்கு தூக்கம் வரலையே இரவுதான் தூங்கணும் என்றேன். அது உன் பிரச்னை. நான் தூங்கணும் என்றான். பெரிய குடும்பத்து பெண்கள் அவனுக்கு இடம்விட்டு மௌனமாக எழுந்து சென்று விட்டனர். நானும் எழுந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 முதல் நாள் மதியம் இரண்டு மணிக்கு படுத்த அந்த வாலிபன் மறுநாள் இரண்டு மணிவரை படுக்கையை எடுக்கவும் இல்லை, விழித்திருந்தாலும் எழுந்து கொள்ளவும் இல்லை. நான் அந்த மூன்றாவது தளத்திலேயே அமர்ந்திருந்தேன் ஒன்றரை நாளும். எனக்கு எதிர்திசையில் படுத்திருந்த இளைஞனுக்கும் என் நிலைதானே. எங்கள் கண்கள் சந்தித்து கொண்டன. அவனே கேட்டான்,

*எங்கிருந்து வருகிறாய்?
-மலேசியா
*இங்கே இப்படித்தான்,
-இது தவறுதானே
*தவறுதான். ஆனால் என்ன செய்ய முடியும்?
அந்த இளம் ஜோடியும் அவ்வாறே நடந்துகொண்டனர் என்பது வேறுகதை.

 
சம்பவம் 2

ரயிலில் ஒவ்வொரு பெட்டிக்கும் இரண்டு கழிவறைகளை கொடுத்திருக்கிறார்கள். அதை ஆணுக்கு பெண்ணுக்கு தனி தனியாக பிரித்திருக்கலாம். அப்படி இல்லாததும் தவறு இல்லை. கழிவறை இருப்பதுவே பெரிய விஷயம்ஆனால், அங்கே இருக்கும் டாய்லட்களை பயன்படுத்த தேவை வரும்போது உடலே கூசுகிறது. மலஜலங்கள் தேங்கி இருக்க அதன் மேலேயே போக வேண்டியிருக்கிறது. ஆண்கள் பெண்கள் என அங்குமட்டும் பேதமில்லை.
பெண்களும் டாய்லட்களை பயன்படுத்துகிறார்கள்தான். ஆனால், சுத்தமாக அவர்களுக்கும் பயன்படுத்த தெரியவில்லை. இதுவே இப்படி என்றால் AC இல்லாத பெட்டிக்கு சென்று பார்த்தேன். எனக்கு அதுகுறித்து சொல்ல தெரியவில்லைஎனது அந்த பயணத்தில் மூன்று முறை மட்டுமே சிறுநீர் கழிக்கக் சென்றேன். தண்ணியே குடிக்கவில்லை. ஒரு முறைகூட சாப்பிடவே இல்லை. 130 கோடி மக்கள் வாழும் இந்தியா. எல்லாரையும் திருப்தி படுத்த முடியாதுதான்.

 

சம்பவம் 3
சரியாக நான் இறங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு என் தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்தது. THANE என்ற இடத்தில் இறங்க வேண்டும் நான். IGATPURI நிலையத்தை கடந்து போய்கொண்டிருந்த போதுதான் நான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்ததை உணர்ந்தேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை. கவலை அதிகமாகவே வந்தது.

 என் எதிர் தோழனிடம் கேட்டேன்.
*இங்கே ரயில்வே போலீசாரை எப்படி தொடர்பு கொள்ளவேண்டும்?
-என்ன பிரச்னை
*என் தங்கச் சங்கிலி காணவில்லை
-நல்லா தேடினாயா
*தேடிவிட்டேன்.
-நான் உனக்கு உதவுகிறேன். கவலை படாதே - என முயற்சியில் இறங்கினான். முதலில் நாங்கள் தங்கியிருந்த பெட்டியில் விசாரித்ததும் ஆளாளுக்கு கலவரமாக தொடங்கிவிட்டனர். விஷயம் அடுத்தடுத்த பெட்டிக்கு போகவே ஒருவர் என்னை தேடி வந்தார். ஒருவன் பாக்கெட்டிலிருந்து சங்கிலி கீழே விழுவதை பார்த்தோம். நாங்கள் பார்த்துவிட்டதை உணர்ந்ததும் இது உங்களுடையதா என அவன் கேட்டான். பிறகு எங்கே போனான் என தெரியல. அவனின் இருக்கை எண் இதுதான். டிடி மாஸ்டரிடம் புகார் கொடுக்கலாம் என்றார். நான் டிடி மாஸ்டரிடம் அழைத்து செல்ல பட்டேன். அவர் சில தகவல்களை கேட்டுக்கொண்டார். சம்பந்தப்படட நபரின் பெயர் இறங்க வேண்டிய இடம் அனைத்தும் ஆராயப்பட்டது. கல்யாண் ஸ்ட்டேஷனுக்கு வருவதற்கு முன்பே சங்கிலியை எடுத்திருந்த நபர் அகப்பட்டுக்கொண்டார். சங்கிலியை திருப்பி கொடுத்தார். சில பேர் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கல்யாண் ஸ்டேஷன் போலீஸ்க்காரர்கள் அந்த நபர்மீது புகார் கொடுக்கிறாயா என்றனர். வேண்டாம். அவர் திருப்பி கொடுத்துவிட்டார். என் பொருள் கிடைக்காது என நினைத்தேன். ஆனால், கிடைத்துவிட்டது என்றேன்.

 

திங்கள், 26 மார்ச், 2018

வாரணாசியில் கதவுகள் 16



கதவுகளை  ஊர்ந்து பார்க்கும்   பழக்கம் எனக்கு எப்படி வந்ததென்று தெரியவில்லை. மனதை, எப்போது கதவோடு  ஒப்பிடத் தொடங்கினேனோ அப்போதிலிருந்துதான் கதவுகளை உன்னிக்கத் தொடங்கினேன் என நினைக்கிறேன். எனக்கு 9 வயதிருக்கும். நாங்கள் மாற்றலாகிப்போன வாடகை வீட்டின் கதவுக்கு தாழ்ப்பாள் இல்லை. அதன் திறப்பே ரொம்ப வித்தியாசமானது. மரத்தாலான அந்தக் கதவுக்கு மரதுண்டாலயே  பூட்டு செய்திருந்தார்கள். குறுக்காலே ஒரு மரசட்டத்தை சொருகி கதவை சாத்தவேண்டும். எனக்குப் பெரிய பொழுதுபோக்காகவே  இருந்தது  அந்தக் கதவு. காலையில் திறப்பதற்கும் இரவில் மூடுவதற்கும் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருந்தது.  கிட்டதட்ட 10 ஆண்டுகள் அந்த வீட்டில் வசித்தோம். ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.    

நான் வயதுக்கு வந்து ஓலைமட்டையில் அமர்த்திய 21 நாட்களுக்கு மட்டும் அந்தக் கதவு என்னிடமிருந்து அந்நியமாகிவிட்டிருந்தது. என்னுடைய அறையில் இருந்துகொண்டே அந்தக் கதவை பார்ப்பேன்.  தீபாவளியின்போது வாசற்கதவுக்கு மாட்டிய அலங்கார மணி சிணுங்கும்போதெல்லாம் நான் வரேன் வரேன் எனக் கூறிக்கொண்டு கதவுக்குச் சமாதானம் சொல்லுவேன்.  வேறு வாடகை வீட்டுக்கு மாற்றலாகிப் போனபோது, நான் ரசிக்கும்படியான எந்தக் கதவும் புதிய வீட்டில்  அமையவே இல்லை. ஒரு கனவுபோல அந்த மரக்கதவு என் ஞாபகத்தில் வந்து வந்து போகிறது இப்போதும்.




விலையுயர்ந்த பிரமாண்ட ஆடம்பர கதவுகளை எந்நாட்டில் காணமுடிந்தாலும் பழம்பெரும் பாரம்பரிய கதவுகள் கொண்டிருக்கும் வாசத்தை அவை இழந்தவையாகவே இருக்கின்றன. ரசிக்கும்படி இதுவரை  எந்த நவீன கதவுகளையும் கண்டதே இல்லை நான். என் பல ஆண்டு ஏக்கத்தைத் தீர்த்து வைத்தது அண்மையில் சென்று வந்த இந்தியாவின் வடநாட்டுப் பயணம். ஆன்மிக நகரம் என்று சொல்வதற்கு பதில் கதவுகளின் நகரம் என்று சொல்லலாம். எத்தனை வகை கதவுகள்? மூப்பின் வாசம் காற்றோடு கலந்து அலைகிறது அங்கிருக்கும் கதவுகளுக்கு.  



குறிப்பாகக் காசி நகரில் கட்டிடங்களும் அதற்கு அமைந்திருக்கும் கதவுகளும் பெரிய கலை நுட்பங்களைக் கொண்டிருக்காவிட்டாலும் அதனிடம் பேசுவதற்கு நமது  கண்கள், வார்த்தைகள் கொண்டிருக்கின்றன. எலிப் பொந்தாக இருந்தாலும் அதனுள் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் அவற்றுக்கு நூற்றுக்கும் அதிகமான வாசற்கதவுகளும் ஜன்னல் கதவுகளும் வெவ்வேறு வடிவத்தில் அல்லது ஒரேமாதியான வடிவத்தில், வெவ்வேறு அளவுகளில் அமையப்பெற்றிருக்கிறது.  சில கதவுகள்  பூவும் பொட்டுமாகவும், மாலையும் கழுத்துமாகவும்  சாமி படங்கள் சாத்தி மங்களகரமாகவும் அலங்கரிப்பட்டிருந்தன. சில கதவுகள் மனித உயரத்திற்கு இல்லாமல் குனிந்து வீட்டிற்குள் நுழையக்கூடிய  குட்டையான வாசல்களும் கதவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. எங்கு காணினும் கதவுகளும் ஜன்னல்களும்தான். பழுதாகிய நிலையிலும் ஜன்னல் கதவுகள் உயிர்ப்புடன் இருப்பதைக் காண முடிந்தது. அங்கிருந்தும்  எட்டிப்பார்க்கும் கண்களும் கதவுகளாகவே மாறிவிடுகின்றன. 



பலருடைய பொதுவான கருத்து,  வீட்டின்  பாதுகாப்புக்குத்தான் கதவு என்று சொல்லப்படுகிறது. பொருளாதாரத்தைத் தேடி ஓடும் மனித இயந்திரங்கள் மத்தியில் கதவிடம் அழகியலைத் தேடுதல் என்பது நகைக்கக் கூடிய விஷயமாகவே தெரியும். ஆனாலும், இந்த வாழ்க்கையை உயிர்ப்புடன் நகர்த்திசெல்ல நம்மைச்  சுற்றியிருக்கும் சின்ன சின்ன காட்சிகளும் அடையாளங்களும்தானே  ஆதாரமாக இருக்கின்றன.





நான் நிருபர் பணியில் இருக்கும் போது ஹிண்ராப் தலைவர் உதயகுமாரை சிறையில் சென்று நேர்காணல் செய்வதற்கான வாய்ப்பு அமைந்தது. மிகச் சவாலான காரியம் அது. அந்தச் சிறை கதவுக்குப்பின்னால் ஏற்பட்ட பதட்ட  மனநிலை,  அதைவிட்டு வெளியே செல்லும் வரை அடங்கவே இல்லை. சிறைக்கதவு வெறும்  இரும்பு கதவு மட்டுமல்ல. அது பிசாசுகளின்  இரும்புக்கரங்கள். இருண்மையின் நிழல்.  கதவுக்குப்பின்னால் தொழில் ரீதியில்  விதி மீறலோடு சந்திப்பைப் பதிவு செய்திருக்கும் என்னை சிறைக்கதவுகள் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது இன்றும் நினைவில் உள்ளது. கதவு என்பது ஒரு மதில்சுவர்போல எழுந்துநின்று என்னை விழுங்கிக்கொண்டிருப்பதாக பிரமை ஏற்படவே மிகவிரைவாக  நேர்காணலை முடித்துவிட்டு சிறைக்கதவை தாண்டி ஓடினேன்.



நீண்ட நாட்களுக்குப்பிறகு காசியில் பார்த்த கதவுகள் என்  பழைய ஆர்வங்களைக் கிளறிவிட்டிருந்தன. காசியின் பல்லாண்டு வரலாற்றின் எச்சமாக நின்றுகொண்டிருக்கின்றன கதவுகள். மூடிய கதவுகளுக்கு முன்னாலும் பின்னாலும் , திறந்திருக்கும் கதவுகளுக்கு முன்னாலும் பின்னாலும் பலநூறு கதைகள் பேசிக்கொண்டிருக்கின்றன. கதவுகள் பார்த்திருக்கும் கண்ணீர் கங்கை நீரைவிட ஆழமானது. வீட்டின்  அமைப்பும் பொருள்களும் மாற்றினாலும்  கதவுகளை வாரணாசி மக்கள் மாற்றவில்லை.இரும்பாலும் மரப்பலகைகளாலும் ஆன பாரம்பரிய கதவுகள் நிரந்தரமான இருப்பைக் கொண்டிருக்கின்றன.


கொஞ்சம் கூர்ந்து சிந்தித்தால் கதவு கொண்டிருக்கும் உளவியலை உள்வாங்க முடியும். ஒருவர் கதவை தட்டும் விதத்தை வைத்தே ஓரளவு நம்மை அழைப்பதின் காரணத்தை யூகிக்க கதவு நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது.  அசம்பாவிதத்தின்போதும் மரணத்தின் போதும் சுபக்கரியத்தின்போதும் தட்டப்படும் கதவுகளின் ஓசை வேறுபடுவது ஒரு உதாரணம்.


கலை மற்றும் இலக்கியத்தில் ஒரு மாற்றத்திற்கான அடையாளமாகவும் கதவு  உருவகப்படுத்தப்படுகிறது. கதவை மையமாக எந்நெற்ற கவிதைகள் இருக்கின்றன. ஆனால், கி.ரா எழுதிய 'கதவு' சிறுகதை  தமிழ் இலக்கியத்தில் இன்றும் பேசப்படும் அளவுக்குத் தனித்த அடையாளத்தைக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. 



 

ஹென்ரிக் இப்சன்  பேய்கள் என்றொரு நாடகத்தை எழுதியிருக்கிறார். கணவனை விட்டு, குடும்பத்தை விட்டுவிட்டு வெளியேறுவாள் அதன் நாயகி. போகும்போது பின் காலால் கதவை எத்திவிட்டுப் போவாள். கதவு ஆடிக்கொண்டே இருக்கும். நாடகம் அப்படியே நிறைவடையும் அந்தக் கதவு ஐரோப்பாவில் இன்னும் நிற்கவில்லை என்று விமரிசகர்கள் சொல்வார்கள். நிற்கவில்லை என்று மட்டுமல்ல; நிற்கவே இல்லை என்று நம்புகிறார்கள்.  அதுதான் ஐரோப்பியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமையை வாங்கிக் கொடுத்தது என்பது வரலாறு.






காசி நகரில் பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின்னாளிருக்கும் கடவுள்களுக்குத்  தனித்த கதை உண்டு. பெருவாரியாக அந்தக் கதைகளும் கதவுகளும் காவி தேசத்தில்  பேசப்படுவதில்லை.