திங்கள், 1 மே, 2023

பெண்கள் மீதான அடக்குமுறைகள் பேசப்பட வேண்டும்-குழலி

மலேசிய பெண் கவிஞர்களில் பூங்குழலி வீரன் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருக்கிறார். பல முக்கியக் கவிதைகளை நமக்கு கொடுத்திருக்கும் இவர் இதுவரை 4 கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 10-ஆண்டுக்கும் மேலாக மின்னல் எஃ.எம்-மில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தற்போது புத்ராஜெயாவின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக  அமைச்சின் கீழ் சிறப்பு அதிகாரியாக பணிபுரிகிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல். நேர்கண்டவர் யோகி.

 

1. கவிதைக்குள் நீங்கள் வந்த தருணம் எப்படி நிகழ்ந்தது?

பெரிய திட்டமிடல்களுக்குப் பிறகெல்லாம் எனது இலக்கிய ஆர்வம்  அமையவில்லை. வாசிக்கத் தூண்டிய அப்பா கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும் என்பதையும் வழக்கமாக்கினார். எனக்கு சிறுவயதில் இருந்தே வாசிப்பதில் மிகவும் ஆர்வமிருந்தது. அதுவே, எழுதுவதற்கான முதல் புள்ளியை இட்டது எனலாம். தொடக்கப்பள்ளி படிக்கும் காலம் தொட்டே நிறைய கவிதைகள்; அதாவது கவிதைகள் மாதிரி எழுதியிருக்கின்றேன். ஆனால், இப்போது அவை எதையுமே கவிதைகள் என்று சொல்ல முடியாது என தோன்றுகிறது. நாளிதழ்கள், வார மாத இதழ்களில் அவை தொடர்ந்து வெளிவந்தன. ஓர் ஆர்வத்தின் அடிப்படையில், சிக்கலுக்கு வெளியே நின்று கொண்டு அறிவுரைக் கூறும் தொனியிலான பிரச்சார கவிதைகள் அவை. கலைத்தன்மையற்ற மிக முக்கியமாக அகவயப்பட்ட அல்லது தன்வயப்பட்ட கவிதைகளாக அல்லாமல் ஒரு மூன்றாவது மனநிலையில் நின்று நான் எழுதியவையாக இன்று அக்கவிதைகள் எனக்கு தெரிகிறது. சமூகம் - சமூகப் போராட்டம் - இனம் - மொழி - சுரண்டல் - ஈழ விடுதலைப் போராட்டம் - பெண் விடுதலை என அப்போதிருந்த வாழ்வு தந்திருந்த உள்ளடக்கமே அன்று நான் எழுதிய கவிதைகளின் கருவாகவும் இருந்தது. ஆனாலும், அந்த தொடக்கம் குறித்த ஒரு மகிழ்ச்சி இன்றளவும் இருக்கிறது. ஒரு படைப்பாளனுக்கு அந்த மகிழ்ச்சி மிக முக்கியமானது. அதோடு, கவிதைகள் குறித்த புரிதலும் மிகத் தெளிவாக இல்லாத ஒரு காலக்கட்டம் அது. பின், என் தாய்மண்ணை விட்டு தலைநகருக்கு வந்தது; புதிய நண்பர்களையும் வாழ்வு குறித்த புதியதொரு புரிதலையும், முற்றிலும் புதியதொரு வாசிப்பனுபவத்தையும் தந்தது. ம.நவீன், பா.அ. சிவம், மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகம்; காலச்சுவடு, கணையாழி, உயிர்மை இதழ்களை வாசிக்க தொடங்கிய வாசிப்பனுபவம் கவிதைக்கான புதிய தருணங்கள் எனக்குள்ளும் நிகழ சரியான காரணங்கள் ஆயின.

 

2.ஒரு வாசகனாக உங்களுக்குப் பிடித்தமான கவிதைகள் எப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

எழுதுபவருக்கே உரிய அசலான ஒரு மொழியில்; அவருக்கான சொற்களில் கவிதைகள் இருக்க வேண்டும். அவ்வாறான கவிதைகள் எனக்கு உவப்பானவை; அவையே மனதுக்கு நெருக்கமானவையாகவும் இருக்கின்றன. சில நேரங்களில், ஏன் இவர் இந்த கவிதையை எழுதினார், எச்சம்பவம் இவரை இதை எழுத தூண்டியிருக்கும் என்றெல்லாம் சில நாள்கள் வரை கூட யோசித்திருக்கிறேன். அதற்காகவே, அந்த கவிஞர் குறித்த தேடலையும் தொடங்குவேன். அவ்வாறான ஒருவர்தான் கவிஞர் கலாப்ரியா. அன்று தொடங்கி இன்று வரை அவரின் கவிதைகள் எனக்கு மிகப் பிடித்தவை. அவரின் பல கவிதைகளை வாசித்த முதல் அனுபவமும் அது நிகழ்த்திப் போன உணர்வுகளும் இன்னும் எனக்குள் பசுமையாக இருக்கிறது. வாழ்வின் சிறு சிறு தருணங்களை இவ்வளவு நுணுக்கமான பார்வையில் அணுக முடியுமா என வியக்க வைப்பவர்.

வாசிக்கத் தொடங்கிய காலம்தொட்டு கண்டு, பார்த்த, கேட்ட களித்த விடயங்கள் சொல்வதற்கு ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு மொழி இருக்கும். அதுவே, தனித்துவமானதும் கூட.

3. நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களின் மனத்திற்கு நெருக்கமானதாக எதைச் சொல்வீர்கள்?

நிறைய கவிதைகள்  அவ்வாறு இருக்கின்றன. குழந்தைகள் குறித்தும், அப்பா - என் வீடு குறித்தும் எழுதிய கவிதைகள் அந்த நெருக்கத்தைத் தொடர்ந்து உணர்த்துகின்றன.  எனது அண்மைய தொகுப்பான அகப்பறவையில் இருந்து இந்த இரு கவிதைகள்.

கூடென்பது எதற்கு என்றேன்

உண்டு உயிர்க்க பாதுகாக்க

பிறகு வாழ்வது எங்கே என்றேன்

வேட்டையாடுதலை நிகழ்த்திக் கொண்டிருந்தவன்

திரும்பிப் பார்த்தான்

வேட்டைக்குத் தப்பிய மான்

தன் வீடு திரும்பிக் கொண்டிருந்தது

நீண்ட நேரம் வெளியில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு வீடு திரும்புதல் என்பது சொற்களைக் கடந்த ஒரு பேறு; நானும் அவ்வாறான ஒரு சூழலில் வாழ்ந்தபோது எழுதிய கவிதை இது. இங்கு வேட்டையாடுதல் என்பது நமது பணிச் சார்ந்த சூழல். அங்கே வாழ்தலுக்கு இடமே இல்லை. அட்டவணை வாழ்க்கையின் உச்சகட்ட அவலம் என்றுதான் அந்த வாழ்க்கையை வகைப்படுத்த வேண்டும்.

இரவு பேசிக்கொண்டிருக்கிறது

இரவின் மொழியை

இரவுக்காக விழித்திருப்பவர்கள்

யாரேனும் மொழிப் பெயர்த்துக் கொள்ளலாம்

பாகுபாட்டின்றி எல்லோரோடும்

பேசிக் கொண்டிருக்கிறது

இரவு மட்டும்…

அதிகம் களைத்து வீடு திரும்புகிற பொழுது உடனே தூங்கிப் போகிற சூழல் பெரும்பாலும் வாய்க்காது. அப்போதெல்லாம் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு இரவைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமானது. இரவுக்கென்றிருக்கும் மொழியை உணர்ந்த தருணங்கள் அவை.

4.மலேசியத் தமிழ் கவிதை சூழல் பற்றி உங்கள் புரிதலைப் பகிருங்கள்?

எல்லாம் மிகச் சரியான தடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் நெருக்கடிகளின் பெரும் பட்டியல் அல்லவா நம்மிடம் இருக்கிறது.

தற்கால தமிழ்க்கவிதை சூழலை நன்குணர்ந்துள்ள ஒரு சாராரும் அவ்வாறு உணரவே மாட்டேன் என அடம்பிடிக்கும் ஒரு சாராரும் இயங்கும் கவிதை வெளி நமக்கானது. தொடக்கத்தையே உச்சம் என கொண்டாடுவதும் அந்த கொண்டாட்டத்தை நம்பி அதையே தொடர்ச்சியாக்கி கொள்ளும் ஆபத்துமே இங்கு அதிகம் காணக்கூடியதாக இருக்கிறது. கலை இலக்கியத்தில் தீவிரமாக இயங்குபவர்கள் அவ்வாறான படைப்புகள் குறித்து ஏதேனும் விமர்சனங்கள் வைத்து விட்டால் அவர்களை வசைபாடுகின்ற பட்டியல் மட்டும் நீள்கிறது. மற்றபடி, அவர்கள் முன்வைத்த படைப்பின் போதாமையை மேம்படுத்துகின்ற உழைப்பு என்பது மட்டும் இல்லை என்பதே வருத்தமளிக்கும் விடயம். இந்தப் போக்கு மிக ஆபத்தானது. இதனால் ஒரு தீவிர கலைப் படைப்பு சமூகம் உருவாகவே முடியாது. இவ்விரு சாராருக்கும் இடையே ஓர் காத்திரமான உரையாடலைத் தொடங்குவதற்கான முன்னெடுப்பு மிக அவசியம்.

5. அகம் மற்றும் புறம் சார்ந்து பிரயோகிக்கப்படும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள்... இலக்கியப் படைப்புகளில் இப்பிரச்னைகள் எவ்வாறு பேசப்படுகின்றன? நீங்கள் அதை எவ்வாறு காண்கிறீர்கள்?

எனக்கு ஆப்பிரிக்க கவிதைகளின் மேல் மிகுந்து ஈடுபாடு உள்ளது. அகம் மற்றும் புறம் சார்ந்து ஏவப்படும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள்; கொடுமைகள்; வசைகள்; வலிகள் என படைப்புகளில் மிக நேர்த்தியாக, உண்மையாக அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தமிழ்க்கவிதைகளிலும் அவ்வாறான சூழல் காணக்கிடைக்கிறது. ஆனால் பண்பாட்டிற்கு ஒவ்வாதது என அவை புறந்தள்ளப்படுகின்ற அவலம் இங்கு இன்றும் தொடர்கிறது. வாழ்வைப் பேசுவதுதான் படைப்பு. எல்லா பிரச்சனைகளும் பேசப்பட வேண்டும். பேசப்படுவதன் மூலமே கலகம் பிறக்கும். கலகம் பிறந்தால்தான் பலரின் கண்களும் திறக்கும். எனவே, பெண்கள் மீதான எல்லாவித அடக்குமுறைகளும் எல்லா வகையாக இலக்கிய வெளியிலும் மீண்டும்  மீண்டும் பேசப்பட வேண்டும்.

 

6. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுதுகிறீர்கள்? இந்த இடைவெளி உங்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் என்ன? உங்கள் எழுத்துக்கு இந்த இடைவெளி துணை புரிந்திருக்கிறதா?

 

மிக நீண்ட மௌனம்; முற்றிலும் வாழ்வின் வேறொரு தளத்தில் வாழ்ந்து மீண்டது போன்ற உணர்வு. என்னைப் பொறுத்தவரையில்  படைப்புகள் தொடர்பான ஓர் இடைவெளி ஏற்படுவது இயல்பானதும் தேவையானதும் கூட என நான் நம்புகிறேன்.  மேலும், இந்தக்கால கட்டங்களில் எனது வாசிப்பு மனநிலை படிப்படியாகக் குறைந்து இல்லாமலே போய்விட்டது. அது  மீண்டும் எழுதுவதில் பெரும் தடையை ஏற்படுத்தியிருந்தது.  வீடு முழுக்க நிறைந்திருந்த புத்தகங்கள் ஒரு பேயைப்போல எப்போதும் பயமுறுத்தியபடியே இருக்கும்.  இப்போது வழக்க மனநிலைக்கு திரும்பி மீண்டும் வாசிக்கவும் எழுதவும் தொடங்கியிருக்கிறேன்.


7. 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு எழுத வந்த பெண்களில் பலர் இன்று எழுதுவதிலிருந்து காணாமல் போய்விட்டார்கள். இந்த பின்னடைவு குறித்து உங்கள் பார்வை என்ன?

ஒரு படைப்பாளி எப்படி சுதந்திரமாக எழுத்தத் தொடங்குகிறானோ அதேபோல் அவன் எழுதாமல் விடுவதற்கும் அவனுக்குப் பூரண சுதந்திரம் உண்டு என  நான் நம்புகிறேன். அவர்களிடம் படைப்பு என்பது நிகழாமல் போயிருக்கலாம்; அதை அவர்கள் உணர்ந்துவிட்ட புள்ளியில் அதிலிருந்து அவர்கள் விலகியிருக்கலாம் ; ஒரு தீவிர வாசிப்பாளராக மாறியிருக்கலாம். இதை பின்னடைவு என்று சொல்லமுடியாது என்று நான் நினைக்கிறேன். எல்லா நேரத்திலும் இத்தனை பேர் எழுதியாக வேண்டும் என்று ஏதாவது விதியிருக்கிறதா என்ன?

 நன்றி தமிழ்மலர் நாளிதழ் 30/4/2023

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

தேடப்பட்ட குற்றவாளி குருதேவனும் விடுதலை திரைப்படமும்

                                       
அண்மையில் திரைக்கண்ட “விடுதலை” திரைப்படம் பலதரப்பட்ட விஷயங்களால் மக்களிடத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. தொடக்கமாக அதன் மூலக்கதை எழுத்தாளர் ஜெயமோகனின் ”துணைவன்  சிறுகதையை தழுவியது என்று கூறப்பட்டது. படத்தைப் பார்த்த பலர், அது எழுத்தாளர் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலை தழுவியதாக இருக்கிறது என்று விமர்சித்தனர்.  நவீன இலக்கிய வட்டாரத்தில் இது மிகப் பெரிய சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்திய வண்ணமே இருந்தது.

இதுபோக,  கடைநிலை மக்களுக்காக களத்தில் நிற்கும் தோழர்களோ,  கேராளாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், கர்நாடகாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், நக்சல்பாரி போராட்டங்களையும்  நினைவு கூர்ந்து பதிவிட்டனர். 

கடந்த வாரம் “விடுதலை படத்தைப் பார்த்த  எனக்கு, அதுகுறித்த  எண்ணங்களும்,  நம் நாட்டின் வரலாற்று பதிவோடு ஒத்துப்போகும் சில சம்பவங்களையும் பதிவிடுவதற்கு   ஒரு தருணமாக அமைந்தது. அதை தமிழ்மலர் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். 

கிளர்சிக்காரர்களால்   விபத்துக்குள்ளாக்கப்பட்ட ரயில்  காட்சியிலிருந்து “விடுதலை படம் தொடங்குகிறது. கிளர்ச்சிக்காரர்கள் என்று காட்டப்பட்டவர்கள்  “தொண்டர் படையை சேர்ந்தவர்கள் என்று அதிகார வர்கத்தினர் கூறுகின்றனர். பத்திரிக்கைகளிலும் செய்திகள் அவ்வாறே அச்சிடப்பட்டன.   அங்கிருந்தே அப்படம்  என்னை ஈர்க்க தொடங்கியது. காரணம் அந்த  “தொண்டர் படை தான். 

மலேசிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கும்  தொண்டர் படையைச் சேர்ந்தவர்களும்  கிளர்ச்சிகள் செய்வர்கள் என்றே பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தியிருந்தது.  நாட்டு விடுதலைக்காக பிரிட்டிஷாரையும், முதலாளித்துவத்தை எதிர்த்து நடந்த தொழிற்சங்க புரட்சிக்காகவும்  “தொண்டர் படையினர்  கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  குறிப்பாக 1940-களில் கெடாவில் நடந்த கள்ளுக்கடை போராட்டத்தில்  தொண்டர் படையின் பங்கு  முக்கியமாக பேசக்கூடியதாகும்.  1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொண்டர் படை இயக்கம் 1948-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. 

தொடந்து பிரிட்டிஷ்  அரசாங்கத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்து வந்த 'மலாயா தேசிய விடுதலைப் படை'யை சேர்ந்தவர்களை  ஒழித்துக்கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.  இவ்விஷயத்தில் பிரிட்டிஷார் சந்தேகம் கொண்ட ஒருவரையும்  தயவு  தாட்சண்யம்  பார்க்கவில்லை. 

'மலாயா தேசிய விடுதலைப் படை' யின் தேடப்பட்டு வந்து முக்கிய குற்றவாளியாக குருதேவன் என்பவர் இருந்தார். அவர் யார்? எப்படி இருப்பார் என்பது யாராலும் சொல்ல முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவர்க்கு சன்மானத்தை அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.  அவருடைய அடையாளம் தெரியாததால் அவர் மாயாஜாலங்கள் தெரிந்தவர் என்றெல்லாம்  கட்டுக்கதைகள் உலாவியது.  உண்மையில் போலீசின் கழுகுப்பார்வையிலிருந்த தப்பிப்பதற்காக அவர் மாறுவேடத்திலேயே இருந்திருக்கிறார். குருதேவன் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியப் பிரிவின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தார் என்றும் கூறப்பட்டாலும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

                                

அப்போது காவல் துறையின் சிறப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரியான  அகமது கான் என்பவரிடம்  சிங்கப்பூரில் வாய்வழி நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது.  அகமது கான்-தான் குருதேவனை தேடிப்பிடிப்பதற்காக  நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாவார்.  அந்த நேர்காணலில், இடது சாரி சித்தாந்தங்களை கற்ற  ஒரு  தேர்ந்த சித்தாந்தவாதி என்று குருதேவனை குறிப்பிடுகிறார். மிகவும் மூளைக்காரராக செயல்பட்ட குருதேவன் மாறுவேடத்திலேயே இருந்ததால் அவரை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருந்ததாக கூறியிருக்கிறார். அதோடு குருதேவன் என்று பெயர்கூட அவரின் இயற்பெயராக இருக்காது என்று தெரிவித்திருக்கிறார். 

குருதேவன்  போலீசிடம் மாட்டிகொண்டதும் ஒரு விபத்துபோலவே நடந்தது. ரிச்சர்ட் கொரிண்டன் எனும் பிரிட்டிஷ் அதிகாரிதான் சிரம்பானில்  குருவை கைது செய்தார். அவர் அது குறித்து பதிவும் செய்திருக்கிறார். சம்பவத்தன்று, அங்கு  கோவில் பூசாரி போல் இருந்த ஒருவரின் மீது சந்தேகம் ஏற்படவே அவர் யார் என்று தெரியாமல் விசாரணைக்காக  காவலில் வைத்திருக்கிறார் ரிச்சர்ட். பின், அகமது கான் அந்த இடத்திற்குத் திரும்பியபோதுகுரு கைவிலங்கிடப்பட்டு போலீஸ் வண்டியில் அமர்ந்திருப்பது குருதேவந்தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

இது அகமது கானுக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. காரணம் குரு எப்போதும் உன்னிப்பாகவும் இருக்ககூடியவர். இப்படி சாதாரணமாக சிக்கிகொண்டது அவருக்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.

முன்னதாக குருதேவன், சிங்கப்பூரில் தொலைபேசி நிறுவனத்தில் ஒரு சிறிய அறையில், தொலைபேசி நிறுவன ஊழியர் சங்கத்தில் அலுவலகப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். தான் கற்றுதெளிந்த சித்தாந்தக் கல்வியையும், மார்க்சிய வகுப்புகளையும் ஒத்த சிந்தனையுடைய தனது சகாக்களுக்கும் அறிவார்ந்த இடதுசாரி  குழுக்களுக்கும் போதித்தார். 

''அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் என்ற தொழிற்சங்கம் செய்த சாதனைக்குப் பின்னால் தொண்டர் படை, குருதேவன் ஆகியோர் மறைமுகமாக இருக்கின்றனர். இந்த சாதனையை வளரவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சதியால் கொல்லப்பட்ட,  தொழிற்சங்க போராட்டவாதிகளான  மலாயா கணபதி, வீரசேனன் உள்ளிட்ட தோழர்களுக்கு பின்னால்  ஓர் ஊக்கியாகவும்  குருதேவன் இருந்திருக்கிறார்.

பிரிட்டிஷுக்கு எதிரான பல போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். குருதேவன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மலாயா கணபதி புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் துப்பாக்கிச் சூட்டுக்கு இறையானார்.

திரையில் பெருமாள் என்பவர் தேடப்படும் முதன்மை குற்றவாளியாக இருக்கிறார். அவர் எப்படி இருப்பார் என்று தெரியாத பட்சத்தில் போலீஸ் அதை கண்டுபிடிக்க சிறப்பு பிரிவுகளை அமைத்து செயற்படுவதுடன், சந்தேகம் என்ற பெயரில் மக்களையும் சித்திரவதை செய்கிறது. இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். நமது நாட்டில் (மலேசியா) காட்டுப் பெருமாள் என்ற போராட்ட வீரரும் தேடப்பட்ட குற்றவாளியாக தலைமறைவாக இருந்து, பின் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டார் என்பதை ஒரு தகவலாக கூறிக்கொள்கிறேன்.

"விடுதலை" திரைக்கதையை   நான்  நமது நாட்டுக் கதை என்று சொல்லவில்லை.  மக்கள் போராட்டங்கள் எங்கு நடந்தாலும், வெவ்வேறு தனி இயக்கங்களாக செயற்பட்டாலும், முடிவில் அது ஒன்றுபோலவே இருப்பதை சொல்ல வருகிறேன்.

இரண்டாம் பாகம் வந்தால்தான் இன்னும் தெளிவாக பேச முடியும். தவிர நமது நாட்டில் நடந்த போராட்டங்களை பேசுவதற்கு இதுவும் ஒரு வாய்ப்புதானே.

நன்றி: மலாயா கணபதி இணையத்தளம் மற்றும் தோழர் சாமிநாதன்.  

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 23/4/2023

நிலத்தை மீட்டெடுக்க போராடும் பூர்வக்குடி மக்கள்

 மனிதர்கள் அல்லாத உயிரினங்கள் எல்லாமே, யாருடைய அனுமதியும் அதிகாரமும் இன்றி, தம் இருப்பிடத்தை தாமே அமைத்துகொள்கின்றன.  ஏகப்பட்டச் சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டிருக்கும் மனிதன் ஆதிக்கம் மற்றும்  முதலாளித்துவ சிறையில்  சுக்கிக்கொண்டு மீளமுடியாத சிறைவாசியாகவும், தமக்கான ஒரு கூடு அமைக்க முடியாமலும்  தவிக்கிறான்.

உலகம் முழுக்கவே இதுதான் நிலை என்றாலும், பூர்வக்குடிகளுக்கென்று ஒரு வரையரை உள்ளது. பன்நெடுங்காலமாக காடுகளையே தங்களின் வாழ்விடமாக அவர்கள் கொண்டிருக்கிறார்கள். எந்தச் சட்டத்திட்டத்திற்குள்ளும் அடங்காதவர்கள் என்றும், காட்டுவாசிகள் என்றும் அடையாளம் கொண்டிருக்கும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது, உலக சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உலக மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோளாக உள்ளது.

மலேசியாவைப் பொருத்தவரை காடுகள் அழிப்பு என்பது ஒவ்வொருநாளும் கண்மூடித்தனமாக நடைபெற்றுகொண்டிருக்கிறது. இதனால், வனவிலங்குகளும், இயற்கைசூழலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் வனவாசிகள் குறித்த பாதுகாப்பும் காடுகளோடு அவர்களுக்கிருக்கும் உயிரோட்டமான உறவையும் யாரும் புரிந்துகொள்வதாக இல்லை. பொறுப்பற்றவர்களால் வனத்தில் மேற்கொள்ளப்படும் இயற்கை சுரண்டல்களுக்கு, தடையாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பூர்வக்குடி மக்கள், தங்களின் வசிப்பிடம் வரைக்கும் வந்துவிட்ட வன அழிப்பை, பூர்வக்குடிகளின் பிரச்னையாக அல்லாமல், சூறையாடப்படும் வனம் எல்லாருடைய நல்வாழ்வுக்கானது என்பதை உணரும்படி நாட்டுமக்களை கேட்டுகொள்கின்றனர்.  

இதில் புளுகுமூட்டை என்னவென்றால், வசதியாக வாழவைக்கிறோம் என, காடுகளில் வசித்த மக்களை, மாநில அரசாங்கங்கள் சாலையோர குடியிருக்குக்கு மாற்றியமைத்ததுதான். காடு கொடுத்த கொடையில் செழித்து வாழ்ந்த பழங்குடிகள், தற்போது காடுகளை இழந்துவிட்டு, முதலாளிகளுக்கு கூலிகளாக வாழபழகிகொண்டிருக்கிறார்கள்.

இதிலிருக்கும் அரசியலை அறிந்துகொண்ட போராட்ட குணம் கொண்ட சிலர் மட்டும், காடுகளே எங்கள் வீடுகள்; அதை எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று மாநில அரசாங்கத்திடமும் மத்திய அரசாங்கத்திடமும் போராடிகொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பகாங் மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும், செமாய் சமூகத்தைச் சேர்ந்த போஸ் லானாய் கிராம மக்கள்,  அவர்களின் பாரம்பரிய  நிலத்தை மீட்டெடுக்க, நீதி கேட்டு சட்டத்தை கையில் எடுத்திருக்கின்றனர்.

சட்டத்தை நாடுவதற்கு என்னக் காரணம்?

நூறு ஆண்டுக்கும் பழைமையான இந்தக் கிராமம், பலவரலாற்றுப் பதிவுகளையும், வரலாற்று எச்சங்களையும் இன்னும்கூட கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தில், பிரிட்டிஷ்காரர்களோடு இவர்களுக்கிருந்த நட்புறவையும், பகாங் அரசக்குடும்பத்தோடு இம்மக்கள் கொண்டிருந்த நல்லினக்கத்தையும் சிலவற்றை வாய்மொழி பதிவுகளாகவும், புகைப்படங்கள் மற்றும் எழுத்துப்பூர்வ பதிவுகளாகவும் இவர்கள் கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரியான வரலாறுகளைக் கொண்டிருதாலும், இந்தக் கிராமமானது ஒரு பாதுகாப்பு இல்லாத சூழலையே இன்றுவரை எதிர்கொண்டுவருகிறது. நல்ல மண் வளமும், நீர் வளமும் கொண்டிருக்கும் பகாங் மாநிலத்தில் சட்டப்பூர்வமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் இயற்கையைச் சுரண்டும் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் தங்களின் பாரம்பரிய வனப்பகுதிக்கு பேராபத்து வரும்போதெல்லாம் அங்கிருக்கும் பூர்வக்குடி மக்கள் போராட்டத்தை கையில் எடுக்கின்றனர்.

அதற்கு சில சம்பவங்களை சொல்லலாம். உதாரணமாக 2011-ஆம் ஆண்டின் முற்பகுதியில் வனத்திலிருந்த எங்களை Sg Koyan நகருக்கு அருகில் உள்ள Pembangunan Bersepadu Desa Terpencil (PROSDET) கம்போங் பந்தோஸ் என்ற கிராமத்திற்குச் செல்லுமாறு JAKOA வலியுறுத்தியது. உண்மையில், இந்த இடமாற்றம் அரசு மற்றும் TNB நிறுவனத்தால், மின்சார தேவைக்காக ‘தெலோம் அணையை’ கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டது. இவ்விவரத்தை அவர்கள் 2013-ஆம் ஆண்டுதான் எங்களுக்கு தெரிவித்தார்கள். எங்கள் கிராமம் ஆபத்தில் இருப்பதை உணர்ந்து, பழங்குடி மக்கள் மேற்கொண்ட சட்டநடவடிக்கையில், 2019-ஆம் ஆண்டு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கிராமத்திற்கு எதிரான இந்த திட்டத்தை ரத்து செய்தது. அதை தொடர்ந்து, லந்தனைடு சுரங்க திட்டத்தை 2021-ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு நடக்ககூடிய இந்த சுரங்கதிட்டம், மாநிலத்திற்கு மட்டுமல்ல, தீபகற்பத்திற்கே மிகப்பெரிய இயற்கை மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடியதாகும். இதனால், ஒட்டுமொத்த கிராமமும் இந்தச் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததில், தற்போது அத்திட்டம் ஒத்திவைப்பட்டுள்ளது. இருந்தாலும், அங்கு சட்டவிரோத நடவடிக்கைகள் சில நடப்பதை நாங்கள் கவனிக்கவே செய்கிறோம் என போஸ் லானாய் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கார்ப்ரேட் நிறுவனங்களின் பல்வேறு இலாபம் ஈட்டும் திட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கும், பல ஆண்டுகளாக வசித்து வரும் அக்கிராமத்தை, தங்களுக்கே உரிமையாக்கும்படியும் நீதிமன்ற உதவியை பழங்குடிமக்கள் நாடியுள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2021,  பழங்குடிகள் மக்களின் சார்பில், வழக்கறிஞர் ஹர்னேஷ்பால் சிங் புல்லர்  இவ்வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து தொடந்து  4 நாட்கள் நீதித்துறை ஆணையர் ரோஸ்லான் மாட் நோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது. 147 பேரை பிரதிநிதித்து 8 பழங்குடிகள் முதல்முறையாக சொந்த நிலத்தை போராடி மீட்கும் வழக்கில் களமிறங்கியுள்ளனர்.

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் போராடி பெற்றதுதான். அதில் பூர்வக்குடிகளுக்கும் பங்கு இருக்கவே செய்கிறது. இன்று சொந்த நிலத்து சுதந்திரத்திற்காக அவர்கள் சொந்த நாட்டிலேயே போராடிகொண்டிருக்கின்றனர். நாம் அவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்.

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 16/4/2023

புதன், 8 பிப்ரவரி, 2023

'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ - புத்தக விமர்சனம்

2019-ஆம் ஆண்டிலிருந்து தேடிக்கொண்டிருந்த புத்தகம், பல பதிப்பகங்களிடமும் கேட்டுப்பார்த்தும் இல்லை என்ற பதில் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஈராண்டுகள் கொரானா காலமாக இருந்தாலும், வாசிப்புக்கு எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. ஆனாலும் அந்தப் புத்தகம் மட்டும் கைக்கு எட்டவே இல்லை.  இந்நிலையில்தான் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினை இப்புத்தக்திற்கு அறிவித்தார்கள். சரியான ஒரு புத்தகத்திற்காகத்தான் காத்திருக்கிறோம் என்று மனம் மீண்டும் புத்தகத்தை இன்னும் தீவிரமாக தேடத் தொடங்கியது. சென்னையிலிருந்து மலேசியாவுக்கு வந்த நண்பர் மூலமாக கடந்த ஆண்டு புத்தகம் கைக்கும் வந்தது.  அடுத்த சில நாட்களில் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன்.

வாசிக்கும் எல்லாப் புத்தகத்திற்கும் நான் குறிப்பு எழுதுவதில்லை. நான் குறிப்பு எழுதுவதற்காக வாசிப்பதும் இல்லை. பாதித்த புத்தகத்தின் பாத்திரங்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை,  எழுதினாலே தவிர அதை இறக்கி வைக்கமுடியாது. அந்தப் பாரத்தை அப்படியே சுமந்து திரிவதும் சுலபமல்ல. வேறு எந்தப் புத்தகத்தின் பாத்திரங்களையும் உள்வாங்க முடியாமல் வாசிப்பு  மட்டுப் படும் அபாயம் இருக்கிறது.

 சைரஸ் மிஸ்திரி எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்றப் புத்தகத்தில் கதைச் சொல்லியாக வரும் ஃபெரோஸ் எல்சிதானா; என்னுள் கிடத்திய பாரத்தை இப்போது இறக்கி வைக்கிறேன்.

எழுத்தாளர் மாலன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் இந்தப் புத்தகம், ஒரு தனிப்பட்ட சமூகத்தின், அடையாளத்தைப் பேசும் புத்தகம் என்றே சொல்லலாம். பாரசீக நாட்டில் தோன்றிய இம்மதத்தை,   பம்பாயில் பின்பற்றுபவர்களால் எப்படி வழிநடத்தப்படுகிறது என்பதை நேரடி சாட்சியாகவும் காட்சிகளாகவும்  நம் முன் விரிகிறது.

புத்தகத்தின் கதைக்குள் போகும் முன்பு, நாம் பார்சி மதத்தை சுறுக்கமாக  தெரிந்துக்கொள்ள வேண்டும். பார்சி மதத்தைக் குறித்து தெளிவு இருக்கும் பட்சத்தில் கதையை இன்னும் ஆழமாக உள்வாங்க வகை செய்யும்.  

பாரசீகத்தில் தோன்றிய மதம் என்பதால் ஒருசில விஷயங்கள் இஸ்லாமிய சமையத்தை ஒத்து இருக்கிறது. ஆனால், அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல.  ஈரான், அம்மக்களை முஸ்லிமாக மாற்ற முயற்சி செய்தததாகவும்,  அதனால்  அவர்கள் பல நாடுகளுக்கு தப்பித்து புலம் பெயர்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  பார்சிகள் இந்திய மேற்கு கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர் என்றும் சுமார்  6000 பேர் குஜராத் மாநிலத்தில் உள்ள உட்வாடா பகுதிக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும் இணையத் தகவல் சொல்கிறது.

இவர்கள் தங்கள் மதத்தை மிகவும் தீவிரமாக பின்பற்றுவர்களாக இருப்பதால், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மதத்தினரின் மக்கள் தொகை இருக்கிறது. உலகத்தில் சுமார் 70,000 பார்சி மக்கள் மட்டுமே  வாழ்கின்றனர் என்று ஒரு இணையத் தளம் செய்தி சொன்னாலும், இந்தியாவில் மட்டும் 1 50,000 பார்சிகள் இருக்கிறார்கள் என்று இன்னொரு இணையச்செய்தி சொல்கிறது.  

இவர்களின் ஆண்கள் பாராசீக உடையையே பாரம்பரிய உடையாக அணியும் அதே வேளையில் பெண்கள் புடவை அணிகிறார்கள்.  ஆண்கள் தலைக்கு குல்லா அணியும் வழக்கமும் இருக்கிறது.  1795-ல் பார்சிகள் தமிழ்நாட்டிற்குள் காலடி வைத்திருக்கின்றனர். ராயப்புரத்தில் தஞ்சமடைந்த அவர்கள் பின்னாளில் அவர்களின் பாரம்பரிய  நெருப்புக் கோயிலையும் ராயப்புரத்திலேயே கட்டிக்கொண்டனர்.  நூறாண்டுக்கும் மேலாக அங்கு நெருப்பு அணையாமல் எரிந்துக்கொண்டிருக்கிறது.  தவிர இந்தியா முழுவதும் சுமார் 100 நெருப்புக் கோயில்கள் இருக்கிறதாம்.  மிகவும் கட்டுப்பாடுகள் கொண்டிருக்கும் இந்த மதத்தில் அவர்கள் மட்டுமே அந்தக் கோயிலுக்குள் செல்ல முடியும். சென்னையில் 300 பார்சி மதத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் இருக்கின்றனராம்.

உலகின் பழமையான மதம் என்று சொல்லக்கூடிய இம்மதத்தைச் சேர்ந்தவர்களின் இறந்தவர்களுக்குரிய இறுதிச் சடங்கு வித்தியாசமானது. அது வேரு எந்த மதத்திலும் இல்லாத ஒன்று. இவர்கள் இறந்தவர்களின் உடலை உயரமான இடங்களில் வைத்து கழுகு மற்றும் பறவைகளுக்கு இரையாக்கி விடுகிறார்கள். அந்த உயரமான இடத்தைதான் அவர்கள் அமைதி கோபுரம் என்று அழைக்கிறார்கள்.  

இந்தியாவில்  தொழில்துறை மற்றும் வியாபார வர்த்தகத்தில் பார்சி மக்களே ஆதிக்கம் செலுத்துகின்றனராம். குறிப்பிடத்தக்க அவர்கள் யார் யார் என்று இணையத்தில் தகவல்கள் இருக்கின்றன.  தேவையானவர்கள் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

பார்சி  மதத்தின் புனித நூலுக்கு 'அவஸ்தா' என்றுப் பெயர்.  அவர்களுக்கான முக்கிய மதச் சடங்குகளும் உள்ளன. தனி நாள்காட்டியும் உள்ளது. இவர்கள் பண்டிகையை நவ்ரூஸ் பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. பாரசீக நாட்டில் தோன்றிய மற்றுமொரு மதமான பஹாய் சமையத்தின் பண்டிகையும் நவ்ரூஸ் என்றுதான் அழைக்கப்படுகிறது. அது மார்ச் மாதத்தில் வரும். பார்சிகளின் பண்டிகை ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது. நவ்' என்றால் புதியது, 'ரோஸ்' என்றால் நாள் என்று பொருள்படுகிறது.

இப்போது நாம் நாவலுக்குச் செல்லலாம்.

இதை ஒரு பிணந்தூக்கியின் வலியைப் பேசக்கூடிய புத்தகம் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. இது ஒரு காதல் கதை.  மிக முக்கியமான தகவல் என்ன வென்றால்,  இந்த நாவல் கர்பனையால் புனையப்பட்டக் கதை அல்ல. பம்பாயில் வாழும் பார்சி சமூகத்தினர் பற்றிய ஆவணப்படம் தயாரிப்புக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள், அந்நோக்கம் நிறைவேறாத காரணத்தினால்,  தன் நினைவில் நின்றுவிட்ட இந்தச்  சமூகத்தில் நடந்த சில முக்கியச் சம்பவங்கள்  நாவாலாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டன;  என்று இந்தப் புத்தகத்தின் அசல் எழுத்தாளரான சைரஸ் மிஸ்திரி குறிப்பு எழுதியிருக்கிறார்.

துறைமுகத் தொழிலாளியும், பிணம் தூக்கியின் மகளும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுக்கின்றனர். தன் மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிணம் தூக்கியாக மாற வேண்டும் பெண்ணின் தந்தை கட்டளை இடுகிறார்.  (துறைமுகத் தொழிலாளியின் குடும்பத்தை பழித்தீர்க்கும் காரணம் இதில் இருக்கிறது. ) துறைமுகத் தொழிலாளி காதலுக்காக கட்டளையை ஏற்று தன் வாழ்கையின் திசையை மாற்றிக்கொள்கிறார் என்பது நடந்த உண்மைச் சம்பவம்.

நாவலில்,  ஒரு ஆச்சாரமான கோயில் குருக்களின் பிரியமான இளைய மகன்,  பிணந்தூக்கியின் மகளை காதலித்து, அவள் தந்தையின் கட்டளையின் பேரில்  ஒரு  பிணந்தூக்கியாக மாறிவிடுகிறான்.  பார்சி சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரை அச்சமூகம் எப்படி நடத்துகிறது, தனது சொந்தக் குடும்பத்திலேயே அவன் எப்படி ஒதுக்கி வைக்கப்படுகிறான், எதெல்லாம் தீட்டாக பார்க்கப் படுகிறது, தீட்டிலிருந்து தூய்மைப் படுத்திக்கொள்வது எப்படி உள்ளிட்ட விஷயங்கள் கதையின் ஓட்டத்தில் கட்சிதமாக பேசப்பட்டிருக்கிறது.

மிகவும் கட்டுப்பாடுகொண்டவர்கள் என்று அரியப்படும் பார்சிகள், அவர்களுக்குள்ளாகவே சிறுசிறு குழுக்களாக பிரிந்து செயற்படுகின்றனர். அதில் ஒடுக்கப்பட்ட குழுவினர்தான் பிணம் தூக்குபவர்கள். தீண்டத்தகாதவர்களாக அக்குழுவினரை பார்சிசமூகம் பிரித்தும் வைக்கிறது.  

கதையின்படி பார்சி மதகுருவின் மகன் பிணம் தூக்கும் ஒருவரின் மகளை விரும்பி கல்யாணம் செய்வதிலிருந்து அச்சமூகத்தின் இருண்மையான பக்கங்கள் நமக்கு காட்டப்படுகிறது. தனக்கு பிறக்கும் குழந்தை, காதல் மனைவி மரணம், தொழில் சுரண்டல், போராட்டம் என தங்குதடையின்றி நாவல் நம்மை உள்ளே இழுத்து உட்கார வைத்து விடுகிறது.

பிணந்தின்னும் கழுகுகளுக்கு இறந்த உடலை அர்பணிப்பது, புனிதமான காரியமாக பார்க்கும் பார்சி சமூகத்தினர், சூழலியல் காரணத்தினால் அழிவை நோக்கிப்போய்கொண்டிருக்கும் கழுகுகளால் தனது சமூகமே எப்படி பாதிக்கிறது என்பதையும், இந்த நாவல் பேசிச் செல்கிறது.

ஃபெரோஸ், செப்பி, டெமூரு, மதகுரு, அவரின் மனைவி, ஃபெரோஸின் சகோதரன், ஃபெரோஸின் மகள், ஃபெரோஸின் நண்பர்கள் என முக்கிய கதாப் பாத்திரங்களோடு நாமும் ஒரு பாத்திரமாக எங்கோ ஒரு மூலையில் இவர்களோடு இந்த நாவலில் இருப்போம்.

நமக்கு அறிமுகமில்லாத ஒரு மதம், எங்கோ ஒரு தேசத்தில் தோன்றி இந்திய தேசத்திற்கு வந்து, மாறுபட்ட மண்ணில், அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு கலாச்சாம் என முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்வியலை  ஆவணமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  தேசிய விருதுக்கு தகுதியான நாவல்தான் என்று ஒரு வாசகனை திருப்தி படுத்திருக்கும் இந்த நாவலை மொழிபெயர்த்துகொடுத்த எழுத்தாளர் மாலன் அவர்களை பாராட்டத்தான் வேண்டும்..