வெள்ளி, 6 டிசம்பர், 2019

புதிய மலேசியாவும் உண்மையான சுதந்திரமும்




ஆகஸ்ட் 31, 2018 மலேசியா தனது- 61 வது ஆண்டு சுதந்திர நிறைவு நாளை அடைந்திருக்கிறது. இதே தேதியில்தான் சபா மாநிலமும் தனது மாநில சுயஆட்சி தினத்தைக் கொண்டாடுகிறது. 1963-ஆம் ஆண்டுக்கு முன்புவரை தீபகற்ப மலேசியாவோடு  இணையாமல் இருந்த சபா, அதன்பிறகு ஒன்றிணைந்தது.  சரவாக் மற்றும் சிங்கப்பூர்,  1963-ஆம் ஆண்டு ஜூலை 22- ஆம் தேதியோடு தீபகற்ப மலாயாவோடு கைகோர்த்து  மலேசிய  நாட்டினை வடிவமைத்தன.  அதற்குமுன் வரை இந்த மூன்று மாநிலங்களும் சுய ஆட்சி பிரதேசங்களாக  செயல்பட்டு வந்தன. ஆனாலும், சில காரணங்களுக்காக 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை, மலேசியாவின் மாநிலமாக செயல்பட்ட சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகச் செயல்பட அனுமதி பெற்றது . மலேசியா ஆகஸ்ட் 31-ஆம் தேதியை சுதந்திர தினமாகவும் செப்டம்பர் 16-ஆம் தேதியை மலேசிய தினமாகவும் கொண்டாடி வருகிறது.  

மலேசியாவில் இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட தேசிய தினம் முற்றிலும் வேறுபட்டது. மலேசிய வரலாற்றில் முதல்முறையாக புதிய அரசாங்கத்தின் நிர்வாக சித்தாந்தத்தில் இந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. (இப்போதிருக்கும் பிரதமர் இதற்கு முன்பும்கூட பிரதமராக இருந்திருந்தாலும் இது மாறுபட்ட சுதந்திர தினம்தான்.)

மலேசியா சுதந்திரம் அடைந்த 61 ஆண்டுகளில், கடந்த மே மாதம் 14-ம் தேதி நடைபெற்ற 14- வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு முதல் தடவையாக, புதிய ஆட்சி மாற்றத்தை நமது நாடு சந்தித்திருக்கிறது.  அம்னோ -பாரிசன் நேஷனல் அரசாங்கம் , வாக்குகளை  எண்ணும்போது முன்னணியில் இருப்பதாக அறிவிப்பு வந்துகொண்டிருந்தது. (அதுதான் கூட்டணி அமைக்கப்போகிறது என்று நம்பப்பட்டது)     இறுதியில் தேர்தல் நடைமுறை விதியின்படி பாரிசன் நேஷனல் அரசாங்கம் தோல்வியை தழுவியது.  பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த தேசிய முன்னணி அரசாங்க அதிகாரத்திற்கு எதிராக மலேசியர்கள் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றனர்.    

14- வது பொதுத்தேர்தலுக்குப் பிறகு, மலேசிய மக்கள் புதிய அரசாங்கத்தை வரவேற்றிருந்தாலும் இதில் முரண்பாடாக அமைந்தவர் பிரதமர்தான். துன் மகாதீர் முகமது மலேசிய வரலாற்றில் மிக நீண்டகாலமாகத் தேசிய முன்னணி சாம்ராஜ்ய  பிரதமராக இருந்தவர். தனது சொந்த கட்சியில் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குடனான முரண்பாடுகள்  காரணமாக அவர் அம்னோவிலிருந்து வெளியேறினார். அதன்பிறகு,  கட்சியின் மீதும் அரசின்  மீதும் கடுமையான விமர்சனத்தை மகாதீர்  வைத்ததின்  விளைவு  தேசிய முன்னணி அரசாங்கம் வீழ்த்தற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.  

எதிர்க்கட்சியாக இருந்த பக்கத்தான் மற்றும் அதன் உறுப்பு கட்சிகள்  மகாதிர் ஒரு "தேசிய மீட்பாளர்" என்று கொண்டாட தொடங்கினர். பின் பக்கத்தான் கட்சி பக்கத்தான் ஹரப்பானாக  கூட்டு சேர்ந்து இறுதியாக நடந்த பொது தேர்தலில் எதிர்க்கட்சியினர் வெற்றியடைந்தனர். ஆயினும், பக்கத்தான் ஹரப்பான் கட்சி வெற்றி பெற்றதற்கு மகாதீரின் தலைமைத்துவம்  மட்டுமே காரணம் எனக் கூறிவிட முடியாது. நஜிப்பின் தலைமையின் கீழ் செயல்பட்ட அம்னோ -பாரிசன் நேஷனல் நிர்வாகம் அதன் நம்பகத்தன்மையை இழந்து, ஆட்சியாளர்களிடையே பிளவை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அரசின்மீது மக்கள் நடத்திய  தொடர்  போராட்டங்களினால் உருவாக்கப்பட்ட   அரசியல் உத்வேகம், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த அரசாங்கம் சரிவடைய காரணமாக அமைந்தது.
 
''அம்னோ''-''பரிசான் நேஷனல்'' வீழ்ச்சியும் ''பக்கத்தான் ஹாரப்பான்'' வெற்றி பெற்று மீண்டும் மகாதீர் பிரதமராக வந்ததும் விசித்திரமான ஒரு நிகழ்வுதான் என்றாலும் சமூக சீர்திருத்தத்திற்கான அரசியல் போராட்ட செயல்பாட்டில் அது முக்கியமான மாற்றமாகும்.    நஜிப்பின்  வீழ்ச்சி மற்றும் மகாதீரின் மறுமலர்ச்சி,  அரசாங்க பிரமுகர்கள் வர்க்கத்தை மறுசீரமைப்பதாகக் கருதலாம்.  அரசின்மீது  கிட்டதட்ட   நம்பிக்கையை  இழந்துவிட்ட  பெரும்பான்மையான மக்கள், புதிய  அரசினர் அவர்களுக்கான சொந்த வரையறை திட்டங்களை வைத்திருந்தாலும்,  புதிய மாற்றத்தின் மீது  பெரிய அளவில் நம்பிக்கை வைத்தார்கள். அரசியல் மறுகட்டமைப்பிற்கு பிறகு அரசாங்க பிரமுகர்களின் மாற்றமானது கொக்கோ கோலாவும்பெப்ஸி கோலா போன்றுதான் இருக்கிறது.  அதாவது போத்தலின் வெளியே இருக்கும் விவரங்கள்தான்  வெவ்வேறே தவிர அதன் சாராம்சத்தில் எந்த மாற்றமும் இல்லை.  

இருப்பினும், அரசியல் மறுசீரமைப்புக்கான ஜனநாயகமாக்கல் மற்றும் சமூக சீர்திருத்தச் செயல்முறையை சரிசெய்யச்  சிறிய  வெளியை மட்டுமே  புதிய அரசாங்கம் திறந்திருக்கிறது.  மீண்டும்  ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் அரசியலில் நீண்ட காலம் அனுபவம் பெற்றிருந்த மகாதீர் மற்றும் டாயிம் சைனுதீன் போன்றவர்கள் முற்போக்கானதாக இருக்கும் சில  புதிய கூறுகளை முன்னாள்  ராஜ்யத்தின் போது ஆட்சியில் நுழைந்தவர்கள்தான். நெடு  நீண்ட  காலமாக  எதிர்க்கட்சியாக  இருந்து  அரசியல் மாற்றப் பார்வைகளும் புரட்சிகர இயங்கங்களுக்கு வித்திட்ட தற்போதைய ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலேசியாவின் புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்க வழிசெய்ய முடியும். அதன்பொருட்டு அவர்களுடைய மாற்றுச் சிந்தனை முந்தைய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கை ஒத்தியிருக்குமெனில் அது சரிவை ஏற்படுத்தும்.   

ஆட்சி மாற்றத்திற்குப்  பின்னர் சமூக சீர்திருத்தங்களுக்கான வாய்ப்புகள்  இருக்கவே  செய்தாலும் ,  எவ்வளவு தூரம் விரிவாக்கக்கூடிய அளவிற்கு அதை நிலைநிறுத்த முடியும் என்பது கேள்விக்குறியானது மட்டுமல்ல நம் அனைவருக்குமே அது சவால் நிறைந்ததும் கூட.
எங்கே மக்களுக்கு அதிகம் சுதந்திரம் வழங்கப்படுகிறதோ அவர்களால் அங்கு அரசியல் செயல்பா டுகளில் அதிகமாகப்   பங்கேற்க முடியும். இதனால் நம்பிக்கை கூட்டணி கட்சியின் அரசியல் நிறுவனங்களால் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும், மேலும்   வலுவான   ஜனநாயக முறையை உருவாக்க முடியும்.

ஆயினும்மக்களின் ஆதரவைச் சுலபமாக பெற சில கண்மூடித்தனமான பிரபலமான கொள்கைகளைக் கொண்டுவரும் அரசாங்கத்தால் மக்களிடையே ஜனநாயகத்தை வலுப்படுத்த இயலாது.  மக்களுடைய அரசியல் உள்ளுணர்வை உருவாக்குவதற்கு சிவில் சமுதாயத்திற்கும் ஜனநாயகம் சார்புக்கும் ஓர் சவாலாக இருக்கிறது. இந்த  முரண்பாடுகள்  எதை  உணர்த்துகின்றது என்றால் நாட்டு மக்கள் உண்மையையும் பொய்களையும் பகுத்தாராய்வதுடன் திட்டமிட்டு தைரியமுடன் அரசிடம்  கேள்விகளை  எழுப்பத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை .

முந்தைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளவாத பொருளாதார திட்டத்தை  தற்போதைய அரசாங்கம் இன்னும் வைத்திருந்தால், சமூக-பொருளாதார அடிப்படையில், கீழ்நிலை  மக்கள் தொடர்ந்து வாழ்க்கையில்  அழுத்தத்தை எதிர்கொள்வதுடன் வாழ்க்கைத் தரத்திலும் பின்னடைவைச் சந்திப்பர். தாராளமயப் பொருளாதாரம்- சந்தை முறை மற்றும் தனியார் துறையும்  திறமையான அனைத்தையும் வழங்குவதாக புரிந்துகொள்ளப்  பட்டிருக்கிறது. அதனால் அடிப்படை சேவைகள் மற்றும் மனித உழைப்பு அப்பாற்பட்டு  தொழிலார்களை தனியார் மயமாக்குதலுக்குச் சாத்தியமாகிறது. கார்ப்ரேட் நிறுவனங்களின் லாபம் பார்க்கும் பந்தயத்தில் பொருளாதாரம்  கடுமையான பொருளாதார சீர்நிலையற்ற நிலையை  உருவாக்குவதுடன் தாராளமய பொருளாதாரக் கொள்கை நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.   

ஆகையால், சமூக நீதி மற்றும் சாதாரண மக்களுக்கு நல்வாழ்வளிக்கும் சமுதாயத்தைப் புதுப்பிக்க  வேண்டும் என விரும்பினால்  மக்களின் நல்வாழ்வை நசுக்கும் வகையில் இயங்கும்  பெருநிறுவன இலாபங்களைப் பற்றி அக்கறை கொண்டிருக்கும் புதிய தாராளவாத கொள்கையை   உடைக்க வேண்டும்.

தேசிய தினம் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் இந்த நேரத்தில் வெறுமனே தேசபக்தி உணர்வு ஏற்படுத்தக்கூடிய வரிகளான 'நாட்டின்மீது அன்பு செலுத்துவோம்' அல்லது மலேசியாவை நேசிப்போம் போன்ற வரிகள் ஓர் சமூகத்தை கட்டியெழுப்பாது.

நாட்டைக் காப்பாற்ற இரு தலைவர்களின்  அதிகாரத்தை  மக்கள் சார்ந்தே இருப்பார்களேயானால், உண்மையில், நமது மக்கள் சுதந்திரமடைந்தவர்களாக இருக்கமாட்டார்கள். நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதித்திக்கும் பிரச்சனையுடன் நம் சமுதாயம் இன்னமும் பாதிக்கப்படுமேயானால் நமது மக்கள் சுதந்திரமடைந்தவர்களாக இருக்கமாட்டார்கள். நமது அரசாங்கமானது, பொது மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் வர்த்தக உடன்படிக்கைக்கு இணங்குமாயின், நமது மக்கள் சுதந்திரமடைந்தவர்களாக இருக்கமாட்டார்கள்

உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கு, நமக்குத் தேவையானது

-மனித உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், மனித உரிமைகளை வென்றெடுப்பதற்கும், அரசியல் கல்வியை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்

-சமூக அமைப்புகள் உதாரணத்திற்கு (தொழிற்சங்கங்கள்,  முற்போக்கு அரசியல் கட்சிகள், வெகுஜன இயக்கங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் போன்றவை) மூலம் மக்களது அதிகாரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஜனநாயகத்துடனும் தொடர்புப்படுத்த வேண்டும்

-அரசாங்கம் பொது மக்களுக்கு உண்மையிலேயே பொறுப்பாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை  நடைமுறைப்படுத்தவும் அனைத்து அரசாங்கக் கொள்கைகளையும் எப்போதும் கண்காணிக்கவும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


-எழுத்து - சூ சூன் காய் (2019)
தமிழ் மொழிபெயர்ப்பு - யோகி

(சமத்துவத்தை நோக்கி புத்தகத்திற்காக)   

புதன், 4 டிசம்பர், 2019

தோட்டப் பாட்டாளிகளின் சொந்த வீடு கனவு அடுத்த நூற்றாண்டிலாவது நிறைவேறுமா


மலேசிய தோட்ட தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? அப்படியான சமூதாயம் இன்னும் நாட்டில் இருக்கிறார்களா? இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள்?  அவர்களுக்கான அங்கிகாரம் என்ன? மதிப்பு என்ன? மரியாதை என்ன?

இந்தியர்கள் என்றாலே இஸ்டேட்–காரர்கள் என்று கிண்டல் செய்யும் குரல்கள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அவ்வார்த்தையானது பகடிக்கு உட்படுத்தப்பட்டு தன் சுயத்தை சீண்டும் ஒரு சொல்லாக மாற்றப்பட்டபோது மூன்றாம் தலைமுறையினர் தோட்டங்களில் குடியிருக்க விருப்பப் படாமலாயினர். 1800-களிலிருந்து தொடங்கும் தோட்டப் பாட்டாளிகளின் சரித்திரம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்துக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கான அடைப்படைத்தேவைக்காக  இன்னும் போராடிக்கொண்டிருப்பதற்கு என்ன அர்த்தத்தை கற்பித்துக்கொள்ள முடியும்?  வரலாற்றில் இடம் பிடித்த பல தோட்டங்கள்  இன்று அடையாளமே இல்லாமல் போய்விட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து இருக்கிறோமா?

இத்தனை கேள்விகளுக்கு நம்மில் பலருக்கு மங்கலான சில காரணங்கள்  தெரிந்தாலும், இத்தனை ஆண்களுக்கான போராட்டத்தின் தாட்பரீயத்தை உணராமலே இருக்கிறோம்.



வஞ்சிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களின்  வாழ்க்கை வரலாறு, இன்னும் மலேசிய வரலாற்றில் அழுத்தமாக  எழுதப்படவே இல்லை என்பது மறுக்கப்படாத உண்மையாகும்.  அவர்களின் முதன்மை பிரச்சனையாக இருப்பது சொந்தவீடு பிரச்சனை. 1973-ஆண்டு  அப்போதைய பிரதமர் துன் ரசாக் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட சொந்த வீட்டுப் பிரச்சனை,  துள்ளியமாக ஆராயப்பட்டு சுமூகமான ஒரு தீர்வை மக்களுக்காக அவர் கொண்டு வந்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த வீடு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பிரதமர்.  ஆனால், அத்திட்டமானது பரவலாக வெற்றியடையவே இல்லை. (6 தோட்டங்கள் மட்டுமே அதில் பலனடைந்தன) மாறாக பல்வேறு காரணங்களுக்காக  தோட்ட தோழிலாளிகள் தங்கள் தோட்டங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கிறனர்.  பாட்டாளிகளுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் வெறும் திட்டமாக இல்லாமல் அது சட்டமாக்கப்பட்டிருந்தால், இன்று தோட்ட பாட்டாளிகள் வீட்டுப் பிரச்சனைக்காகவும் , சம்பளப் பிரச்சனைக்காகவும்  இன்றுவரை போராடிக்கொண்டிருக்க தேவையிருந்திருக்காது.

எஞ்சி இருக்கும் தோட்டங்களில் வாழும் பாட்டாளி மக்கள், முன்பொரு சமயம் பெறப்பட்ட  பல வசதிகளையும் சந்தோஷங்களையும் தொலைத்துவிட்டிருந்தாலும்,  அடிப்படை உரிமைக்காக இன்றும்வரை போராடி வருகிறார்கள்.  அவர்களின் போராட்டத்தில் உள்ள ஞாயத்தை ஓர் அறிக்கையாக வரைந்து, அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கொடுக்கும் ஒவ்வொரு சமயமும், அந்தக் கோரிக்கைகள் அடுத்த கட்டத்திற்கு நகராமல்  ஸ்தம்பித்து நிற்பதற்கான காரணத்தை எப்படி புரிந்துக்கொள்வது என்றே தெரியவில்லை.


மூன்று தலைமுறைகளாக தோட்டத்தை நம்பி வாழ்ந்த பாட்டாளி மக்கள், நாட்டிற்காக உழைத்தவர்கள்தானே? அவர்களின் வழி பெறுநிறுவனங்கள் கொள்ளை லாபத்தை அனுபவித்தார்கள் தானே..? அப்படி இருக்க பாட்டாளிகளுக்காக ஒரு வீடு கட்டி தருவதில் என்ன பிரச்சினை வந்திடப்போகிறது? 30 ஆயிரம் வெள்ளிக்கு குறைவாக இருந்த மலிவு வீடு திட்டங்கள் இன்று லட்சங்களை எட்டி பிடித்திருக்கும் வேளையில் தனக்கென ஒரு வீடு வேண்டும் என்ற நம்பிகையிலும் ஆசையிலும் தொடந்து அவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது அதிகாரத்தில் உள்ளவர்களின் மனசாட்சியை எட்டாமலிருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே பிரச்சனைக்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் தோட்ட பாட்டாளிகள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். இதோ மீண்டும் இரு போராட்டம். இம்முறை பாராளுமன்றம் சென்றனர் நமது தோட்ட பாட்டாளிகள்.

தோட்டத்தில் வேலை செய்த அல்லது தோட்டத்தை நம்பி போன ஒரே காரணத்திற்காக இன்று ஏமாளிகளாகவும் ஏமாற்றப்பட்டவர்களாகவும் இருக்கும் இவர்களுக்கு ஒரு ஞாயம் வேண்டும். 2020- தூர நோக்கு சிந்தனையை எட்டிப் பிடிக்கும் புதிய நூற்றாண்டில் புதிய அரசாங்கம் இவர்களுக்கு கொடுக்கப்போகும் உறுதி மொழி என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

4/12/2019 அன்று தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்து உரிமைக்கு குரலை எழுப்பினர்.   4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடந்தது.



அவை என்ன

1. தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுடைமைத் திட்டத்தை கட்டாயம் நிறைவேற்றுவதை வலியுறுத்தும் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்.

2. அடிப்படை உரிமைகளை மேம்படுத்த வேண்டும். (சுகாதாரமான குடிநீர், ஆயாக் கோட்டகை உள்ளிட்ட வசதிகள்  )

3.நிரந்தர சம்பளம் (இப்போதைய சூழலுக்கு 1800 வெள்ளி )

4. சுகாதாரம்,  கல்வி , பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த புதிய செயல் திட்டம்.

இந்த 4 அம்ச கோரிக்கைகளை பதாதைகள் மூலமாகவும், அறிக்கைகள் வழியும் , புரட்சி பாடல் மூலமாகவும் , ஒரு காட்சியாகவும்  செயற்பட்டு அமைச்சர்களிடம் மகஜரை கொடுத்தனர்.

ஐந்து தோட்டங்களை விழுங்கி ஏப்பமிட்டு கம்பிரமாக எழுந்து நின்றுக்கொண்டிருக்கிறது   புத்ராஜெயா. அந்த ஐந்து  தோட்டங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றிய தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னுமும் வீட்டை கட்டிக்கொண்டிருக்கிறது நமது அரசு.

இதுவரையிலான வாக்குறுதிகளும் நம்பிக்கை சொற்களும்

1.முன்னாள் பிரதமர் துன் ரசாக்  1973 ஆம் ஆண்டு தோட்ட தொழிலாளர்கள் வீட்டுத்திட்ட கொள்கைக்கு  உறுதியளித்தார். இந்தத் திட்டத்தின் கீழ்,  தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டுவதற்கு விவசாய நிலத்தின் ஒரு பகுதியை முதலாளிகள் அல்லது நில உரிமையாளர்கள் ஒதுக்க வேண்டும், மேலும் அந்த வீட்டிற்கான மாதத் தவணை பணத்தை தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும். இருப்பினும், இந்த திட்டம் பரவலாக செயல்படுத்தப்படவில்லை.  மேலும், அத்திட்டமானது   அரசாங்கச் செயலாகவோ அல்லது சட்டமாகவோ இன்றுவரை  ஆக்கப்படவில்லை

2. 1990 -  ஆம் ஆண்டு  முன்னாள் மனிதவள துணை அமைச்சர் கே.பத்மநாபன் தோட்டத்  தொழிலாளர்களுக்கு வீட்டு உடைமை குறித்த பிரச்சனைக்காக சிறப்பு குழுவை அமைத்தார். அந்தச் சிறப்பு குழு என்ன ஆனது?

3. ஆகஸ்ட் 27, 1991: தோட்டத் தொழிலாளர்களுகு வீடு கட்டுவதில் முதலாளிஅல்லது நில உரிமையாளர் தவறினால் நிலங்களை பறிமுதல் செய்ய அப்போதிருந்த சிலாங்கூர் மாநிலஅரசு முடிவு செய்தது. (இந்த முடிவுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை)

4. அக்டோபர் 7, 1992: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம்.

5. நவம்பர் 23, 1994: அப்போது சிலாங்கூர் அரசாங்கத்தின் ஆட்சி குழுஉறுப்பினராக இருந்த ராஜகோபால் தோட்டத் தொழிலாளர் மற்றும் சுரங்கத் தொழிலாளர்ளுக்கானவீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்த அறிவித்தார். (அதன் வளர்ச்சி இப்போது என்ன?)

6. ஏப்ரல் 1995- ஆம்ஆண்டு , அப்போதைய சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் தாயிப், கடைசி முயற்சியாக, தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகளை கட்டி கொடுப்பதில்  பிடிவாதமாக இருக்கும் ஏஜென்சிகளின் நிலங்கள் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்துவோம்  என்று கூறினார். (அதன்பிறகு என்ன நடந்தது?)

7. 1997: சிலாங்கூர் மந்திரி பெசார் அபு ஹசன் ஓமார்,  "இதுபோன்ற இதயமற்ற சேவை இனி அனுமதிக்கப்படாது"என்று கூறினார்.

8. 29.04.1999இல் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதி குறித்தமசோதாவை மனிதவள அமைச்சு சமர்ப்பிக்கவிருப்பதாக அப்போதைய மனிதவள அமைச்சர் லிம்ஹா லெக் தெரிவித்திருந்தார்.அதன் பின்னர் அந்த மசோதா சமர்ப்பிப்பு என்னவானது?  மனிதவள அமைச்சர்கள் மாறியிருக்கும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னமும் அந்த மசோதா அல்லது வரைவு, தொடர்ந்து தயார் செய்யப்பட்டு வருகிறதா?

9. 10.06.1999-இல் தோட்டத் தொழிலாளர்களுக்கான கொள்கைகளை அமல்படுத்தவும்அதனை வரையறுத்து கண்காணிப்பதற்கும் தோட்டத்தொழிலாளர்கள் சொந்த வீடுகளை கொண்டிருப்பதை உறுதி செய்யவும் மனிதவள அமைச்சின் தலைமையில் குழுவொன்றுஅமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
(அமைக்கப்பட்ட அந்த கண்காணிப்புகுழு எங்கே?)

10. 2001: தோட்டத் தொழிலாளர் வீட்டுப் பிரச்னைக்கு தீர்வு காண மாநிலநிலையில் சிலாங்கூர் மாநிலம் இதுவரை எவ்வித கொள்கையையோ சட்டத்தையோ வரையறுக்கவில்லை.

11. 2012-தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மலிவுவிலை வீட்டு நிதிதிட்டம்(SPPKR-PPE) நாட்டின் 10வது மலேசிய திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.இது தோட்டத் தொழிலாளர்கள் சொந்த வீடுகளை கொண்டிருப்பதை உறுதி செய்ய தேசிய முன்னணியின் மத்திய அரசின் திட்டம். இதற்காக நாட்டின் பொருளாதார திட்டமிடல் பிரிவு வாயிலாக வெ.50 மில்லியனை பிரதமர் துறை சுழற்சி நிதியாக பேங் சிம்பானான் நேசனல் வங்கிக்கு வழங்கிய வேளையில் தீபகற்ப மலேசியாவின் தொழிலாளர் இலாகா அதனை பராமரிக்கும் இலாகாவாக அறிவிக்கப்பட்டது.நடப்பின் அதன் முயற்சியும் செயல்பாடும் என்னவானது?

12. பாக்காத்தான் ஹராப்பான் அதன் தேர்தல் கொள்கையில் பி 40,  இந்தியர்களுக்கும்,  முன்னாள் தோட்டத்தொழிலாளர்களுக்கும் வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நாட்டின்ன்வீடமைப்பு நிறுவனங்களிடம் வலியுறுத்தப்படும் எனவும் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், முன்னாள் தோட்டத்தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க மேம்பாட்டு நிறுவனங்களை கேட்டுக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதா?)

13. 26.02.2019:சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ்1990 முதல் சொல்லப்பட்டு வரும் நாடாளுமன்றம் அளவிலோ அல்லது கொள்கை ரீதியில் இதுவரை எந்தவொரு திட்டவரையும் மாநில ரீதியில் பதிவு செய்யப்படவில்லை என்பதை தனது அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளார்.

என்ன நடக்கும் ? 

பக்காத்தான் ஹராப்பான் அதன் தேர்தல் கொள்கையில், பி 40 இந்தியர்களுக்கும், முன்னாள் தோடட தொழிலாளர்களுக்கும் வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நாட்டின் வீடமைப்பு நிறுவனங்களிடம் வலியுறுத்தப்படும் எனவும் வாக்குறுதி கொடுக்கப்படத்தை இங்கே சொல்லியாக வேண்டும். 

தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் மகஜர் மூலம் ஏழை பாட்டாளி மக்களின் கோரிக்கைகளும் வீட்டுடைமை கனவும் வெற்றியடைகிறதா அல்லது இதுவும் ஒரு அரசியல் நாடகமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



(நன்றி தென்றல் வராத இதழ்  22.12.2019)


செவ்வாய், 3 டிசம்பர், 2019

தோட்டத் தொழிலாளர்கள் நாடாளுமன்றம் சென்றனர் (வீடியோ பதிவு)










      
   






அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மறியல்...



நியாயம் கேட்டு எங்குச் சென்றாலும் நீதி என்பது ஏழைகளுக்கு, கடவுள் போலத்தான் போல..
இருக்கா? இல்லையா? என்றே தெரிவதில்லை. இருப்பதுபோல காட்டிவிட்டு பின்பு புலம்ப விடுகிறது அரசு எனும் பெருங்கடவுள். 

மலேசியாவில் அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்களின் வேலை ஒப்பந்த பிரச்சனை 2.12.2019 அன்று புத்ராஜெயா சுகாதார அமைச்சகத்தின் முன்பு கொண்டு செல்லப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் வேலை செய்துக்கொண்டிருக்கும் இவர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒருமுறை குத்தகை முறையில் மாற்றப்படும் குத்தகை  நிறுவனங்களால் வேலையில் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதாவது, ஒவ்வொரு முறையும் அரசினரால் குத்தகைக்கு எடுக்கப்படும்  புதிய நிறுவனங்கள்  பல ஆண்டுகளாக வேலை செய்துவரும் தொழிலாளர்களை புதிய தொழிலாளர்களாக, வேலைக்கு பாரம் பூர்த்தி செய்ய வைத்து, நேர்காணல் செய்து வேலைக்கு எடுப்பதாகவும், இதனால் சம்பள உயர்வு, போனாஸ், வருடாந்திர விடுமுறைகள் அனைத்தையும் தொழிலாளர்கள் இழப்பதாகவும் தெரிவித்தனர்.  


அதோடு மட்டுமின்றி தற்போது அரசு சார்பில் குத்தகைக்கு வந்திருக்கும் நிறுவனமான UEMS தொழிலார்களுக்கான ''யூனியன்'' வேண்டாம் என்று  கூறி வருவதோடு தொழிலாளர்களை மிரட்டுவது உள்ளிட்ட குண்டர் கும்பல் வேலையையும் செய்கிறது. இதனால், கலக்கம் அடைந்த தொழிலாளர்கள் இப்பிரச்சனையை வீதி போராட்டமாக தற்போது கொண்டு 
வந்திருக்கின்றனர்.
UEMS என்பது முழுமையான அரசாங்கத்திற்கு சொந்தமான 'கசானா 
நாஸினல் (Khazanah Nasional) நிறுவனமாகும். அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனமே தொழிற்சங்கத்தை முடக்குவது சரியா?  என மறியலில் மக்கள் கேள்வி எழுப்பினர்.

காலை 11 மணியளவில் 100-க்கும் அதிகமான அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் சுகாதார அமைச்சரான 
டத்தோ ஸ்ரீ டாக்டர்  ஜுல்கிப்ளியை சந்தித்து இப்பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க சென்றனர். 
அமைச்சரை இன்று சந்திக்க முடியாதுஅவருக்கு உடல் சுகமில்லை என அமைசர் தரப்பிலிருந்து தொடர்ந்து பதில் வந்துகொண்டிருந்தது. துப்புரவு பணியாளர்கள் அமைச்சர் ஒருவரிடம் மட்டுமே எங்களின்   
கோரிக்கையை நாங்கள் சமர்பிப்போம் என்று  உறுதியாக இருந்தனர். 


ஓட்டு கேட்டு எங்களிடம் வந்தவர்,  இன்று நாங்கள் தேடி வந்திருக்கிறோம் எங்களை அமைச்சர் புறக்கணிப்பாரா? என பதாதைகளை ஏந்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து சுகாதார அமைசர்  
டத்தோ ஸ்ரீடாக்டர்  ஜுல்கிப்ளி, சில மணி நேரத்தில் மக்களை சந்தித்தது மகஜரை  பெற்றுக்கொண்டதுடன், இதன் தொடர்பாக விரைவில் ஒருபேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினார்.
(இப்போது எப்படி அமைச்சர் வந்தார் :) )  

இந்தப் பிரச்னை எப்போது தொடங்கியது ??
 
1990-ஆம் ஆண்டுக்கு முன்னர், பல தொழில்கள் குறிப்பாக, குப்பை எடுப்பவர்கள், மாநகர மன்றத்தில் வேலை செய்ப்பவர்கள், துப்புரவு பணியாளர்கள் என அதிகம் படிக்காதவர்கள் கூட அரசு வேலைகளில் இருந்தனர். இப்போதைய பிரதமர் துன் மகாதிர்தான் அப்போதும் பிரதமராக இருந்தார். . அரசு ஊழியர்களாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களை, குத்தகை முறையிலான வேலையாகவும் பணியாளர்களாகவும் மாற்றினார். அதன்பிறகு அப்பணி தனியார் மயமாக்கப்பட்டது. அன்றிலிருந்து பல பிரச்சனைகளை இந்த தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். இப்போராட்த்தினை ‘’அரசாங்க மருத்துவமனை துப்புரவு பணி  தொழிலாளர்களின் தொழிற்சங்கம்’’  முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.



இது தொடர்பான காணொளிகள்





   

                                                                     




வியாழன், 28 நவம்பர், 2019

சோசலிசம் 2019 : ‘புதிய மலேசியாவில் என்னதான் புதிது?’

2005-ஆம் ஆண்டு ஈராக்கில் போர் நடந்து கொண்டிருந்தது. உலக மயமாக்கலின் நவதாராளவாத போக்கானது, பெருநிறுவன டிஜிட்டல் பொருளாதாரத்தின் மத்தியில் திடீர் மாற்றம் நிகழ்த்தியது.  முதலாளித்துவத்தின் சித்தாந்தந்தை உலக தராசில் வைக்கும்போது, சோசலிச சித்தாந்தம் ஒரு மூலையில் தள்ளப்பட்டு கவனிக்கப்படாத, மதிக்கப்படாத நிலைக்கு ஆளானதாக தெரிந்தது. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில்தான் மலேசியாவில் முதல் முறையாக சோசலிசக் கருத்துக்களம் ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
 
மலேசியாவைப் பொறுத்தவரை, சோசலிசம் வெறும் கற்பனாவாதம் எனும் வலை பின்னலுக்குள் தள்ளப்பட்டாலும், அதிலிருந்து தன்னை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து, நாட்டின் பிரதான நீரோட்டத்திற்கு எதிராக போராடி, மாய அரசியலையும் எதார்தத்தையும் மக்களுக்குக் காட்டி வருகிறது மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்). மலேசியாவில் நடந்த முதல் கருத்துக்களத்திற்கு ‘ஜீவன்’’ என அது பெயரிட்டிருந்தது.
அன்று தொடக்கம், ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கருத்துக்களத்தினை மலேசிய சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்துவருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, 15-வது சோசலிசக் கருத்துக்களத்தினை நடத்தி முடித்திருக்கும் அக்கட்சி, ‘புதிய மலேசியாவில் புதியது என்ன?’ என்றக் கருப்பொருளோடு அதை தொடங்கியது.
2020- தூர நோக்கு இலக்கு குறித்து, பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயித்த கனவின் உண்மை தோற்றம், இன்னும் சில நாட்களில் வரவேற்க இருக்கும் 2020-தோடு ஒத்து போகிறதா?
புதிய மலேசியாவில் புதியது என்ன? இது யோசிக்க வேண்டிய விஷயம் மட்டுமல்ல, தற்போது விவாதிக்கக்கூடிய விஷயமாகவும் இருக்கிறது. புதிய மலேசியா ஆட்சிக்கு வந்து, 500 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், 100 நாட்களில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் எனப் பக்காத்தான் ஹராப்பான் கொடுத்த வாக்குறுதியில் நடந்தது என்ன? இனி நடக்கப்போவது என்ன? என்பது குறித்த விவாதமானது மிக அவசியம் என்றேத் தோன்றுகிறது.
கருத்துக்களத்தில் புதிய மலேசியாவில் புதியது என்ன? என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு 4 பிரிவுகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று தலைப்புக்கள் கொடுக்கப்பட்டன. மொத்தம் 12 தலைப்புக்களில் 12 பேச்சாளர்களை இந்தக் கருத்துக்களத்திற்கு பி.எஸ்.எம். ஏற்பாடு செய்திருந்ததோடு மிக சூடான விவாதத்திற்கும் அது வழி வகுத்திருந்தது.
முதல் அங்கத்தில், 2018 தேர்தலுக்குப் பிறகு மலேசியாவில் புதியது என்ன?’ என்றத் தலைப்பில் கருத்துரையாடப்பட்டது.
“100 நாட்களில் நிறைவேற்றுவோம் எனப் பக்கத்தான் ஹராப்பான் கொடுத்த வாக்குறுதிகளில் இதுவரை 6 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மக்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த நினைக்கிறேன்; அதாவது கொடுத்திருக்கும் ஒவ்வொரு வாக்குறுதிகளின் கீழ் 44 கிளை வாக்குறுதிகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. தூய மலேசியாவுக்காக முன்னெடுத்த பெர்சே போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், புதிய மலேசியா வந்த பிறகு, அதில் திருப்தி அடைந்ததோடு, எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில் கணிசமாக குறைந்தனர். தற்போது யார் பிரதமர் பதவியை நிர்ணயிக்க வேண்டும் என்ற அரசியல் உட்பூசலில் மக்கள் அதிருப்தியும் குழப்பமும் அடைந்துள்ளனர்,” எனப் பெர்சே 2.0 தலைவர், தாமஸ் ஃபாண் தெரிவித்தார்.
‘’புதிய மலேசியாவுக்கானப் போராட்டத்தில் ஊடகத்துறையின் பங்கு மிகப்பெரியது ஆகும். தற்போது ஊடகத்துறையில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் பெரிதாக கவனிக்கப்படுகிறதா? ‘’உத்துசான் மலேசியா’’ போன்ற பத்திரிகைகள் மூடப்படும்போது பக்கத்தான் ஹரப்பான் (பி.எச்.) என்ன நடவடிக்கையை எடுத்தது? ஆட்சி கை மாறினாலும் ஊடகம் என்பது இன்னும்கூட அரசாங்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட கருவியாகவே உள்ளது,” என்றார் மலேசிய நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் மலேசியகினி வலைப்பதிவாளருமான காயத்திரி வெங்கேடேஸ்வரன்.
இதே தலைப்பை ஒட்டி பேசிய, பி.எஸ்.எம். துணைத் தலைவர் அருட்செல்வன், “பாரிசான் அரசாங்கம் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்குக் கொடுத்து வந்த உதவி பணத்தின் சிலவற்றை நிறுத்திவிட்டது; சிலவற்றைக் குறைத்துவிட்டது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தன் காலையே சுட்டுக்கொண்ட நிகழ்வுகளாக ஐசெர்ட், ரோம் சட்டம், பறக்கும் வாகனம், சீபில்ட், சொஸ்மா மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய சம்பவங்கள் இருக்கின்றன. இந்த 6 விவகாரங்களும் நாட்டு மக்களிடையேப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, நடப்பு அரசாங்கத்தின் மீது ஒரு அதிருப்த்தியையும் ஏற்படுத்திவிட்டது,’’ என்றார்.
இரண்டாவது அரங்கம், ‘சமூகப்-பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகள் குறித்து பக்காத்தான் ஹராப்பான் தெரிந்து வைத்திருக்கிறதா? எனும் தலைப்பில் பேசப்பட்டது.
“டாக்டர் துன் மகாதீர் திரும்பி வந்துள்ளாரேத் தவிர, திருந்தி வரவில்லை. அதே இன அடிப்படையிலான கொள்கைகளையே மீண்டும் மீண்டும் ஆதரித்து வருகிறார்,” தேரென்ஸ் கொமெஸ், பொருளாதார துறை விரிவுரையாளர் கூறினார்.
மேலும், இதனால் பலனடைவது பணக்காரர்கள் என்றும், தேவை அடிப்படையிலான பொருளாதார கொள்கைகளே தற்போது நாட்டிற்குத் தேவை, இதன் மூலமே ஏழை மக்கள் பயனடைய முடியும், அதிலும் அதிகபட்ச மலாய்க்கார ஏழைகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
“பி.எச். எதிர்க்கட்சியாக இருந்தபோது, அவர்கள் பல விஷயங்களுக்குக் குரல் கொடுத்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு, முன்னாள் அரசாங்கம் செய்த தவற்றையே இவர்களும் செய்கின்றனர்,” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“சுற்றுச் சூழலை நடுநிலையாக வைத்து, நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வரையறுக்க வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் மேம்பட்டு திட்டங்களை தடுக்க முடியும். இப்போது உள்ள அரசாங்கம் இதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை,” என ‘மூன்றாம் உலக வலையமைப்பு’ (Third World Network) மீனா சொன்னார்.
இவர்களோடு, இரண்டாம் அரங்கில் இணைந்திருந்த, பி.எஸ்.எம். தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி நாட்டில் ஏழ்மையின் விகிதம் 0.4 விழுக்காடு எனக் கூறியது நம்ப முடியாத, அதிர்ச்சி தகவல் என்றார்.
“ஆனால், அது 15 விழுக்காடாக இருப்பது பின்னர் நிரூபணமாக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டு பேங்க் நெகாரா அறிக்கையின் படி, ஒருவரின் சராசரி ஊதியம் 2,700 ரிங்கிட்டுக்கும் குறைவானதாக இருக்கக்கூடாது, கிடைக்கும் வருமானத்தில், தான் மற்றும் தனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களை ஏழை அல்லது வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர் எனக் கூறப்படும் வேளையில், சமுதாயப் பார்வையில் தோல்வியடைந்த ஒருவராகத்தான் அவரைக் காண முடியும்,” என அவர் மேலும் விவரித்தார்.
கருத்துகளத்தின் மூன்றாம் அரங்கில், ‘இனம் மதம் – புதிய மலேசியாவில் இதன் நிலைப்பாடு என்ன?’ என்ற தலைப்பில் பேசப்பட்டது.
இந்த அரங்கில் கலந்துகொண்டு பேசிய, மலேசிய தேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஷெரீபா முனிரா அலதாஸ், ‘ஜாகீம்’ போன்ற மத அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து, வெளிப்படையான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் இஸ்லாத்தின் முற்போக்கான தன்மையை ஊக்குவிப்பதில் எத்தனை அமைப்புகள் பங்களிக்கின்றன?” என்ற கேள்வியை முன்வைத்தார்.
“இனங்கள் ஒற்றுமையாக இருப்பதை எந்த அரசும் விரும்புவதில்லை. தொடக்கத்தில் இஸ்லாமியர் பொருள்களை வாங்கி ஆதரவு கொடுங்கள் என்ற பிரச்சாரம் தற்போது எந்த அளவுக்குத் தீவிரமடைந்துள்ளது என்பதை நாம் அறிவோம்,” என பி.எஸ்.எம். இளைஞர் பிரிவு தலைவர், நிக் அசிஸ் தெரிவித்தார்.
‘சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம்’ இயக்கத்தைச் சேர்ந்த மஜிடா ஹாசிம், “சத்தமில்லாமல் புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளில் ஒன்று சிறார் திருமணம். 2020 நோக்கி நாடு போய்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். இன்னும்கூட மின் வசதியில்லாத கிராமம் நமது நாட்டில் இருக்கிறது,” என்றார்.
மேலும், “பெண் பிள்ளைகளுக்கு மாதப் பிரச்சனை வந்தால், அதன்போது பயன்படுத்தக்கூடிய அடிப்படை பொருள்களை வாங்கி கொடுக்க வசதி இல்லாத குடும்பங்கள் இன்னமும் நம் நாட்டில் இருக்கிறார்கள். இதற்கு ஒரு தீர்வாக சிறார் திருமணத்தை ஆதரிக்கும் பெற்றோர்களும் நம்மிடையே உண்டு,” என்றார்.
‘அடுத்தது என்ன? – எப்படி முன்னோக்கி செல்லப்போகிறோம்?’ என்ற தலைப்பில் நான்காம் அரங்கம் அரங்கேறியது.
மக்களுக்காகப் புதிய அரசாங்கம் என நினைத்தால், நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கும் வேடிக்கை நடக்கிறது என விரிவுரையாளர் டாக்டர் தாஜூடீன் வருத்தம் தெரிவித்தார்.
“ஒரு சராசரி வாழ்க்கையை வாழும் இளைஞனின் பிரதிநிதியாக நான் பேசுகிறேன்,” என்ற மாணவர் உரிமை போராட்டவாதி, நிக் அஸுரா, “இந்த வாழ்க்கை எனக்குத் திருப்தியளிக்கவில்லை,” என்றார்.
“கல்வி முதற்கொண்டு, அடிப்படையாக கிடைக்க வேண்டிய அனைத்தும் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்து இருக்கிறது. நாங்கள் குரல் மட்டும்தான் கொடுக்க முடியும். அதிகாரம் எங்களிடம் இல்லை,” என தனது தரப்பு கருத்தை முன்வைத்தார்.
“பழைய அச்சியில் வார்த்த புதிய அரசாங்கத்தைத்தான் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு முழுமையான மாற்றம் வர, மூன்றாவதாக ஒரு சக்தி தேவைப்படுகிறது. அது எது?” எனற கேள்வியோடு தனது பேச்சை தொடங்கிய பி.எஸ்.எம். பொருளாளர் சோ சொக் வா, “அது அரசியல் கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை,” என்றார்.
“முழுமையான மாற்றத்தோடு, ஓர் அரசாங்கம் அமைய, பி.எஸ்.எம். எனும் ஒரு கட்சியால் மட்டும் முடியாது, அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் தேவை. மக்கள் பலத்தைக் கொண்டே அரசியல் மாற்றம் வர வேண்டும்; மேல்மட்டத்திலிருந்து (அதிகாரம் உள்ளிவர்களிடமிருந்து) கீழ் நோக்கி (அதிகாரமற்றவர்களுக்கு) வரக்கூடாது, அப்படி வந்தால் அது நிலைக்காது,” என அவர் மேலும் சொன்னார்.
கோலாலம்பூர் – சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் நடந்த இந்த கருத்துக்களம்  தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களைக் கொண்டு வழிநடத்தப்பட்டது. நாடு தழுவிய நிலையில் பல பார்வையாளர்களும் இடதுசாரி சிந்தனையாளர்களும் இதில் கலந்துகொண்டு, விவாதங்களில் ஈடுபட்டனர். 
 நன்றி செம்பருத்தி 29/11/2019