வியாழன், 7 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 3

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை


(தொடர் 3 )



மாலை 7 மணிக்கெல்லாம் இரவு 9 மணிபோல் இருட்டிவிடுவதால் மலையக பயணத்திற்கான சுற்றுவட்டார அழகை ரசிக்கமுடியவில்லை. பனி மெல்ல வாகனத்தின் உள் படரத் தொடங்கியது.

மலேசியாவில் இருப்பதைப் போன்ற தெருவிளக்குகள் மலையகத்தில் அவ்வளவாக இல்லை. வளைவுகள் அதிகம் உள்ள அந்தச் சாலையில் தெருவிளக்குகள் இல்லையே என்ற ஐயம் மனதுக்குள் இருந்தது. இருட்டில் எதையும் சரியாக பார்க்க முடியவில்லை. நாங்கள் வந்த வேன் ஒரு மாபெரும் தேயிலை தோட்டத்திற்கு மத்தியில் அமைந்திருக்கும் தங்கும் விடுதியில் நிறுத்தப்பட்டது. தொலைவில் அருவி தண்ணீரைக் கொட்டிக்கொண்டிருக்கும் சத்தம் சன்னமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
எங்களை சந்திரலேகா மற்றும் கிங்ஸ் லியும் வரவேற்றார்கள். சந்திர லேகா, கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்ச்சி கலாசாலை மையத்தின் இயக்குநர். ஆனால், பார்ப்பதற்க்கு அத்தனை எளிமையான மனுஷி. தோற்றத்தை மட்டும் வைத்து அவரின் ஆளுமையை எடைபோட்டுவிட முடியாது. ஒரு முறை பேசி பார்க்க வேண்டும். அவரின் இயக்கத்தின் கீழ் இருக்கும் பயிற்சி மாணவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். ஏன் கொடுத்து வைத்தவர்கள் என்ற காரணத்தை பிறகு சொல்கிறேன். எங்களுக்காக நாள்முழுவதும் காத்திருந்த பரிதவிப்பு சந்திரலேகா மற்றும் கிங்ஸ்லியிடம் பார்க்க முடிந்ததுவேடந்தாங்கல்  பறவைகள் தனது சொந்தக்கூட்டை அடைந்ததும், அங்கே ஒரு தாய்க்குருவி இருந்தால் அதன் கொண்டாட்டநிலை எப்படி இருக்கும் என்று நம்மால் விவரிக்க முடியுமா? அந்தக் கொண்டாட்ட நிலையைத்தான் நான் சந்திரலேகாவிடம் பார்த்தேன்.


 நாளை (25 ஏப்ரல்) பெண்கள் சந்திப்பில் பங்கெடுக்கும் பெண்கள் தங்குவதற்கான இடவசதிகள் குறித்தும், நிகழ்வைக் குறித்தும் சந்திரலேகா உடனே கதைக்க தொடங்கினார். இந்த நாளுக்காகத்தானே இத்தனை மாதம் காத்திருந்தேன் என்பதைப் போல அவர் தாய்மை நிலையிலிருந்து இறங்கி குழந்தையாக மாறி ஓடி ஓடி ஒவ்வொரு அறையையும் காட்டினார். றஞ்சி தனது பொறுப்பிலிருந்து விவரங்களை சந்திரலேகாவிடம் பரிமாறிக்கொண்டிருந்தார். நான் வெறும் பார்வையாளினியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனோ எனக்கு கொண்டாட்ட நிலையிலிருந்து மனம் விடுபடவில்லை. என்னுடன் வந்த ஓவியா, ரஜனி, நர்மதா, புதிய மாதவி ஓய்வு எடுத்துக்கொள்ள தங்களுக்கான அறைக்குப் போய்விட்டார்கள்

நானும் விஜயலெட்சுமியும் றஞ்சி-சந்திரலேகாவுடன் இருந்தோம். யாழி தனது கல்லூரித் தோழியுடன் கூடடைந்தாள். தேயிலை தோட்டத்தில் பனி மிதப்பதை பார்க்க முடிந்தது. ஜில்லென காற்று எனக்கு மலேசியாவின் பிரேசர் ஹீலை ஞாபகப்படுத்தியது. சுற்றியிருந்த வனம், என்னை யட்சியாக சொல்லி தூண்டிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் சந்திரலேகா நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு போய் பார்க்கலாமா என்றார். அப்போது இரவு 12 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. றஞ்சி சரி என்றார். நானும் விஜியம்மாவும் உடனே தயார் ஆனோம். நாங்கள் தங்கவிருக்கும் விடுதிக்கு மிக அருகில்தான் அந்த கலாச்சாலை உள்ளபடியால் அவ்வேளையில் போவது எந்த சிரமத்தையும் எங்களுக்கு கொடுக்கவில்லை.

நாங்கள் மலையகம் வந்த மாமாவின் வேனிலேயே அந்த ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்குப் போனாம். சாலையை ஒட்டி ஒரு குட்டி மேட்டின் மேல் வேன் ஏறியது. நெடுக்க நடப்பட்டிருந்த மரங்களை சமீபத்தில்தான் நட்டதாக சந்திரலேகா சொன்னார். ஆமாம், இதற்கு முன் வந்த போது இந்த மரங்கள் இல்லையே என்று றஞ்சி சொன்னார். எனக்கு இரு நிஜமும் நிழலுமாக இரு காட்சிகளும் வந்து போயின. வேன் நின்றது. நின்ற இடம் ஓர் அரசு ஆசிரியர் பயிற்சி கலாச்சாலையாக எனக்குத் தோன்றவில்லை. மலேசியாவில் நான் படித்த ஆரம்ப பள்ளியை எனக்கு அது நினைவுப்படுத்தியது. சாதாரண கட்டிட அமைப்பு. பெரிய வசதிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், கட்டடம் அமைந்திருக்கும் இடம் தனித்துவமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

சந்திரலேகா நிகழ்வு நடக்கும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். 200 பேர் தாராளமாக அடங்கக்கூடிய மண்டபம். மேடையில் பெண்கள் சந்திப்புகானபேனர்தொங்கவிடப்பட்டிருந்தது. பெண்கள் அமர்ந்து பேசுவதற்கு நாற்காலிகளும் மேஜையும் போடப்பட்டிருந்தன. அருகில் மைக் செட் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் எந்தச் சிரமமும் இல்லாமல் பார்ப்பதற்குக் கீழே நாற்காலிகள் வரிசையாக போடப்பட்டிருந்தன. 'எல்லாம் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கா' என்று சந்திரலேகா கேட்டார். றஞ்சி சொன்னார், 'மேலே போடப்பட்டிருக்கும் மேஜை நாற்காலிகளை கீழே இருக்குங்கள், எந்தப் பிரிவினையும் இருக்கக்கூடாது. நாம் நம் பெண்களோடு கலந்தே இந்த நிகழ்ச்சியை செய்து முடிப்போம். எந்த வேற்றுமையும் இதில் இல்லை' என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், இந்தச் சிந்தனை எல்லாருக்கும் வந்துவிடாது இல்லையா? சந்திரலேகா 'சமையல் நடக்கும் இடத்தைப் பார்க்கிறீர்களா' என்றார். சரி என அங்கே போனோம்

ஒரு வகுப்பறையை ஒதுக்கி வைத்து சில வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சமைக்க வந்த
சகோதரரிடம் எங்களை அறிமுகப்படுத்தினார் சந்திரலேகா. டீ வேண்டுமா என்றார் அவர்
  நான் முதல் ஆளாகபால் போட்ட டீஎன்றேன். (விஜயா அம்மா, சிரிக்காதிங்க) நிமிஷம் பெறவில்லை, அந்த நேரத்திற்கு அவ்வளவு சுவையான சுகமான டீ கிடைத்தது பாக்கியம். இங்கே எனக்கு டீ போடுவதைத் தவிர சலிப்பான விஷயம் இல்லை. தேயிலை வெந்து, அதை வடிகட்டி, பிறகு பால்கலந்து என பெரிய வரலாற்றை எழுதுகிறோமோ என்று தோன்றும். இவர்கள் நாட்குறிப்பு போன்று படாரென்று டீ கொடுத்துவிடுகிறார்கள். அது இன்னும் எனக்கு ஆச்சரியம்தான் பிரமிப்புதான். சமையல் செய்ய வந்த சகோதரர் நல்ல உயரமான மனிதர். கனிவான முகம் அவரது. நாளை ஒரு 200 பேருக்கு 5 வேளை உணவை சமைக்க போகிறோம் என்ற எந்த களைப்பும் சோர்வும் அவரிடத்தில் இல்லை. இயல்பாக பேசிக்கொண்டிருந்தார். நான் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்றதும் கிட்டதட்ட அனைவருக்குமே என்னிடம் பேசுவதற்கு ஆர்வம் இருந்தது. அதற்குமேல் என்னிடம் கேட்பதற்கு அவர்களிடத்தில் கேள்விகள் இருந்தன. சமையல் செய்யும் சகோதரர் சொன்னார், 'எப்போ டீ வேண்டுமோ, என்னிடத்தில் கேளுங்கள்' என்று. இந்த ஜென்மத்தை எவ்வளவு மகிழ்ச்சிகரமாக கடந்துக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த தருணம் அது. நேரம் இரண்டாம் ஜாமத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது

 (தொடரும்)


புதன், 6 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 2


சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை
(தொடர் 2​ )
றஞ்சி ஒரு குழந்தையைபோல்  குதூகலித்து நின்றுகொண்டிருந்தார். எனக்குள் எங்கிருந்துதான் அத்தனை உற்சாகம் வந்ததோ தெரியவில்லை. பூர்வ ஜென்மத்துச் சொந்தங்களைக் கண்டதுபோல ஓடிப் போய் வாரி அணைத்துக்கொண்டேன்.
இப்படித்தான் இலங்கை மண் என்னை வரவேற்று என் முதல் நாளைத் தொடக்கிவைத்தது

யாழினியும்றஞ்சியும் சொன்னார்கள், புதிய மாதவி காலையில்தான் வந்தார்; இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று. எனக்குப் புதிய மாதவி (மா) மீது அதிக ஈடுபாடு உண்டு. அவரின் திறந்திருக்கும் முதுகுகள்' என்ற கதையின் மூலம் என்னை வெகுவாக ஈர்த்தவர். ( அந்தக் கதையை படித்து பல ஆண்டுகள் ஆனாலும், அதன்பிறகு அவர் பல கதைகள் எழுதிவிட்டாலும்  திறந்திருக்கும் முதுகுகள்' என்ற கதையே இன்னும் என் நினைவில் நிற்கிறது.)

றஞ்சி என் கையைப் பிடித்தவாறே வாகனத்திற்கு அழைத்துச் சென்றார். எங்கள்  மூவரின் முகத்திலும் புன்னகை குறையவே இல்லை. நீங்கள் வந்து சேர்ந்ததை வீட்டாருக்குச் சொல்லிவிடுங்கள் என தனது அலைபேசியைக் கொடுத்து  றஞ்சி கூறினார். நான் அழைத்துக்கூறுகிறேன் என்றேன். முதல் சந்திப்பு, பலநாள்  பிரிந்திருந்த உயிர் நண்பர்கள் இணைந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. எனக்கு 100 சதவிகித நம்பிக்கை வந்தது.
நான் போய் இறங்கியது கொழும்பில் உள்ள றஞ்சியின் மாமாவின் வீடு. அது அழகான 80-களின் சாயல் மாறாமல் இருந்தது. வீட்டுப் பொருள்கள், அவை வைக்கப்பட்டிருந்த டிசைன் எல்லாம் மேல்தட்டு சாயல் கொண்டது. பிறகுதான் றஞ்சி சொன்னார், அவரின் மாமா வெளிநாடுகளில் வேலை செய்தவர் என்று. எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் புதிய மாதவி உறங்கிக்கொண்டிருந்தார். நான் வந்த பிறகு அவர் எழுந்துகொண்டார். நான் அவரை முதல்முறையாகப் பார்த்தேன். மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி. அதை அவர் உணர்ந்திருக்க மாட்டார். என்னை அணைத்து வரவேற்றார். மேலும் (அண்ணன்) ஆதவன் தீட்சண்யா, உங்களை பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் என்றார், எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அன்றே நாங்கள் மலையகத்திற்குக் கிளம்ப வேண்டியிருந்தது. மேலும் வழக்கறிஞர் ரஜனி, ஓவியா, ச.விசயலட்சுமி, நர்மதா ஆகியோர் ஏர்போட்டில் வந்திறங்கியவுடன் அனைவரையும் அப்படியே அழைத்துக்கொண்டு மலையகத்திற்குப் புறப்படலாம் என்பது திட்டம். இதில் ரஜனி தனியே வர, மற்ற மூவரும் ஒரே விமானத்தில் வருவதாகச்  சொன்னார்கள். நான், யாழி, புதிய மாதவி, றஞ்சி  ஆகியோர் குளித்து கிளம்பி மதிய உணவு உண்ணச் சென்றோம்.
எனக்கு அங்குதான் சிக்கலே தொடங்கியது. நான் உணவை வெளுத்துக்கட்ட, சற்றும் பொருத்தம் இல்லாத ஆள். ரொம்பவும் தேர்ந்தெடுத்து உண்பேன். இலங்கையின் உணவு குறித்த பிரக்ஞை எனக்கு நிறையவே இருந்தது. அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து படிக்கும்போதும் பேசும்போது, எனக்கு அது உவப்பில்லாத விஷயமாகவே இருந்தது. ஒரு வாரத்திற்கு பழங்கள் கிடைத்தாலே போதும், வண்டியை ஓட்டி விடலாம் என்று நினைத்தேன். அதோடு அங்குள்ள உணவு  பழக்க வழக்கம் ஒத்துவராது; பேதி மாத்திரைகளை கூட இங்கேயே வாங்கிச் செல்லுங்கள்; காரணம் அங்குள்ள மாத்திரைகளும் நமக்கு ஒத்துவராது என்று நண்பர்கள் எச்சரித்திருந்தனர். எனக்கு அதற்கெல்லாம் நேரம் கிடைக்கவில்லை. எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் வந்துவிட்டேன்.

அந்தச் சமயத்தில்தான் புதிய மாதவி றஞ்சியிடம் சொன்னார், றஞ்சி சாதாரணமாக நாங்கள் சாப்பிடும் உணவுகள் எங்களுக்கு வேண்டாம். இங்கே பாரம்பரிய உணவு என்ன? அதைக்கொடுங்கள். அதைத்தான் நாங்கள் சுவைக்க வேண்டும் என்றார். என் மனநிலை இன்னும் மோசமானது. ஆனால், முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு மேல்தான் றஞ்சியின் இன்னொரு மாமா வீடு இருந்தது. அவர்தான் எங்களை ஏர்போட்டிற்கும் வீட்டிற்கும் சிரமம் பார்க்காமல் அழைத்துப் போய் வந்துகொண்டிருந்தார். அந்த மாமா வீட்டில்தான் எங்களுக்கான மதிய உணவு தயாரிக்கப்பட்டிருந்தது.

உணவுகுறித்துக் கூறுவதற்கு முன், மாமாவைப் பற்றியும் அவரின் துணைவியார் பற்றியும் கூறியே ஆகவேண்டும். மாமா மிகவும் சுவாரஸ்யமானவர். செம்ம ஜாலியானவர். "என்ன மலேசியா" என்று என்னையும், "என்ன சுவிஸ்" என்று றஞ்சியையும், "என்ன பம்பாய்" என்று புதிய மாதவியையும் கலாய்த்துக்கொண்டிருந்தார். நாட்டின் நிலவரம் முதல் எங்களின் அறிமுகம்வரை அவரின் பாணியில் மிகச் சாதாரணமாக உரையாடினார். அவர் வயதானவர் என்றாலும், அதைக் கொஞ்சமும் தன் முகத்திலும், உடலிலும் காட்டவில்லை. வீட்டிற்கு வந்திருக்கும் எங்களை அவரின் முக்கிய விருந்தாளிகளாக அத்தனை மரியாதையாக நடத்தினார். இந்தப் பண்பு என்னை வியக்கவைத்தது. நானும் அவரை மாமா என்றே அழைத்தேன்.

அவரின் துணைவியார் செய்திருந்த உணவு கமகம வாசத்தை கொடுத்தது. குத்தரிசி என்ற சிவப்பு நிற அரிசி சாதம், சம்பா அரிசியில் சாதம், பருப்பு, பீட்ரூட் பிரட்டல், மாங்காவில் கெட்டி குழம்புபோல் ஒன்று, உருளைக்கிழங்கு பிரட்டல், முருங்கைக் கீரை பிரட்டல், அப்பளம் என பார்ப்பதற்கே எனக்கு எச்சில் ஊற ஆரம்பித்தது. எனக்கு பழக்கம் இல்லாத உணவில் துணிந்து கையை வைக்க மாட்டேன். ஆனால், அந்த உணவைப் பார்த்ததும் பழக்கம் இல்லை என்றாலும் சாப்பிட மனம் விரும்பியது. அந்த உணவில் இருக்கும் சத்துக்கள் குறித்து அந்த வீட்டு அம்மா கூறினார்.

உணவின் ருசியைவிட அந்த அம்மாவின் அன்பு இன்னும் சுவை கூடியதாக இருந்தது . என் பெரியம்மா எனக்கு எப்படி உணவு பரிமாறுவாறோ அப்படி இருந்தது அவரின் கவனிப்பு. ஆனால், சாதத்தைத் தவிர எல்லா பதார்த்தமும்  அவ்வளவு காரம். பிறகுதான் தெரிந்தது இலங்கையில் காரம் அதிகம் சேர்ப்பார்கள் என்று. ஆனால், நான் அந்த உணவுகளை விரும்பிச் சாப்பிட்டேன்.  உணவுக்குப்பிறகு அங்கிருந்த கிளம்பினோம். மாமா அவரின் நண்பர் ஒருவரோடு எங்களை மலையகத்திற்கு அழைத்துச் செல்வதாக திட்டம். முதலில் ஏர்போர்ட் சென்று, அங்கே ரஜனி, ஓவியா, நர்மதா மற்றும் ச.விஜயலட்சுமி ஆகியோரை கூட்டிக்கொள்ள வேண்டும்.

ரஜனி வந்து இறங்கும் நேரம் நெருங்கவே அவரை வரவேற்க்க நாங்கள் அங்கு இருக்க வேண்டும் இல்லையா? மாமா விரைவாக போய்க்கொண்டிருந்தார். ஆனால், சாலையில் அதிக வாகன நெரிசல் இருந்தது. றஞ்சி பதற்றமாகக் காணப்பட்டார். அதே வேளையில் ரஜனியின் துணிகரமான செயற்பாட்டையும் கூறிக்கொண்டே வந்தார். எனக்கு அவரைக் குறித்தான பிம்பம் எழத்தொடங்கியது. நாங்கள் ஏர்போர்ட்டை அடைந்த நேரம், பயணிகளை வரவேற்க வாயிலின் ஓரத்தில் இருக்கும் புத்தத் திருத்தலத்தில் காக்கைகள் பறந்த வண்ணம் இருந்தன. எனக்கு அந்த புத்தர் சிலை ஒரு வகையான நிம்மதியை கொடுத்தது. றஞ்சி ரஜனியை கூட்டிவந்தார். அவ்வளவு எளிமையான ஒரு மனிஷயை நான் எதிர்பார்க்கவேயில்லை.

என்னைப்போன்றே உயரம் கொண்ட, ஓர் ஆளுமை. இதுதான் யோகி என அறிமுகப்படுத்தினார் றஞ்சி. ரஜனி கட்டி அணைத்து அறிமுகமாகிக்கொண்டார். நான் ஆச்சரியத்திலிருந்து மீளவில்லை. யாழினிக்கு எல்லாரிடத்திலும் முன்பே ஓர் அறிமுகம் இருந்ததால் அவள் உரிமையோடு பேசிக்கொண்டிருந்தாள். நாங்கள் ரஜினிக்கு உண்பதற்கு உணவு வாங்க ஏர்போர்ட் அருகில் இருக்கும் ஒரு சிங்கள உணவுக்கடைக்கு போனோம். றஞ்சி அழகாக சிங்களம் கதைத்தாள். அவர் பேசும்போது நான் அவரின் முகத்தையேப் பார்த்தேன். அது வசீகர முகம். அங்கே இருந்த பலகாரங்களில் ஒன்றுகூட மலேசியாவில் பார்த்ததில்லை. உனக்கு ஏதாவது வேண்டுமா என்று ரஞ்சி கேட்டார். வேண்டாம் என்றேன்.  பிறகு ஓவியா, நர்மதா மற்றும் ச.விஜயலட்சுமி ஆகியோரும் வந்து சேர்ந்தனர். நாங்கள் மலையகத்திற்கு பயணத்தை தொடங்கியபோது மாலையாகியிருந்தது.

இடையில், ஓரிடத்தில் (சிங்கள உணவகத்தில்) தேனீர் அருந்தினோம். சும்மா சொல்லக்கூடாது எல்லா இடங்களிலும் தேனீர் அருமையாக இருந்தது. நான் ஒரு தேனீர் பிரியை என்பதால், தேனீர் என்னை ஏமாற்றவில்லை. அப்போதுதான் ஒன்று விளங்கியது, உலகின் உயர்ரக டீ என்று ஏன் இலங்கையை சொல்கிறார்கள் என்று. மாலை 7 மணிக்கெல்லாம் இரவு 9 மணிபோல் இருட்டிவிடுவதால் மலையக பயணத்திற்கான சுற்றுவட்டார அழகை ரசிக்கமுடியவில்லை. பனி மெல்ல வாகனத்தின் உள் படர தொடங்கியது.

(தொடரும்..)








செவ்வாய், 5 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 1

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

(தொடர் 1​ )


பயணங்கள் என்னில் ஏற்படுத்தும் குதூகலத்தை நான் பலமுறை கூறியிருக்கிறேன். தேடல்களற்ற வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை  என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன். அதன் பொருட்டே பயணங்களைக்  கண்ணுக்கு விருந்தாக மட்டுமல்லாமல் என் தேடலுக்கும் உட்படுத்திவிடுவேன். அது ஒரு கள ஆராய்ச்சியாக இருக்கவேண்டும் என்பதில்லை. அதிலிருந்து கிடைக்கும் ஒரு விடயமும் எங்கோ இருக்கும் யாருக்கோ எப்போவாவது பயன்படட்டும் என்று நம்பிக்கை கொள்பவள் நான்.
இம்முறை நான் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டதற்கு முக்கிய காரணம் ஊடறுதான். ஊடறு பெண்களுக்காக பெண்களின் குரலுக்காக இயங்கும் ஒரு இணையத்தளம். அந்த இணையத்தளத்தில் ஒரு முறையாவது தங்களின் எழுத்து வெளிவராதா என்று பெண்ணியவாதிகள் காத்திருப்பது உண்டு. நானும் அவ்வாறு காத்திருந்தவள்தான். அப்படி இருக்கையில் பிப்ரவரி மாதம் இலங்கையில்  நடைபெறவிருக்கும் பெண்கள் சந்திப்பில் பங்கு பெறமுடியுமா என்ற செய்தி  என் முகநூலின் உள்பெட்டியில் ஊடறு மூலம் வந்தது.
எனக்கு அச்செய்தி அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், என்னால் வருவதற்கு சாத்தியம் குறைவு என்று கூறிவிட்டேன். அதற்குச் சில காரணங்களும் உண்டு.
என்னதான் இலங்கையில் போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் அது மகிழ்ச்சியானதாக அமையவில்லை என்பது உலகம் அறியும். அதே மகிழ்ச்சியின்மை மலேசியத் தமிழர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்குப் போவதும், அங்கிருக்கும் சுற்றுலாத் தளத்திற்கு ஆதரவு அளிப்பதும், பொருட்களை வாங்கி அந்நாட்டு பொருளாதாரத்திற்கு வளம் சேர்ப்பதும் கூடாத விஷயமாக பலர் கூறுவதையும் இன்றும் நான் பார்க்கிறேன். ( சிலர் ஈழமக்களுக்கு உதவுவதற்காகவே அங்கு போகிறார்கள். பல அரசு சாரா இயக்கங்கள் அதற்கு உதவுகின்றன. அது வேறுவிஷயம்)

இன்னும் ஒரு பதற்றமான சூழல் அங்கு இருப்பதால் நான் இலங்கை போவதை என் துணைவரும், என் குடும்பத்தாரும் விரும்பவே இல்லை. ஆனால், ஊடறுவிடமிருந்து “நீங்கள் வருவதற்கு முயற்சி செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம் என்ற ஒற்றை வரியில்  கிளம்புவதற்கு முடிவு செய்தேன்.
நான் இலங்கை செல்வதை  எனக்கு நெருக்கமானவர்களைத்தவிர பொதுவில் பகிரவில்லை.  ‘இலங்கையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்தும் பெண்கள் சந்திப்பில் நான் கட்டுரை படைக்க உள்ளேன்' என்ற விடயம் என்னைப் பொறுத்தவரையில் முக்கிய நிகழ்வாக இருந்தாலும்,  அதோடு அதுவே எனது முதல் வெளிநாட்டு உரையாக  இருப்பதில் என்னை பொறுத்தவரையில் வரலாறாகும். ஆனால், அதைப்  பொதுவில்  சொல்லாமல் இருப்பதே நல்லது என எனக்குப் பட்டது.
இதற்கிடையில்  ஊடறுவின் இயக்குநர் அன்புத் தோழி றஞ்சி, நிகழ்வின் ஏற்பாட்டு (குழு) தோழிகளோடு  சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து அவ்வப்போது தகவல்களை மின்னஞ்சல் வழி தெரியப்படுத்திக்கொண்டே இருந்தார். இது எனக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.

எனது பயண நாள் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கி,  மே 1- வரை திட்டமிடப்பட்டிருந்தது. சரியாக 8 நாட்கள். இது நான் தனியாகச் செல்லும் முதல் பயணம். முன்பு இருமுறை நான் தோழர்களுடன்  இந்தோனேசிய போன அனுபவம் இருந்தாலும்,  ஏர்போர்ட், அங்கு மேற்கொள்ளும்  நடைமுறை, போர்டிங் என அனைத்தும் எனக்குப் புதிய விஷயமாக இருந்தன.
இவைகளைக் கடந்து நான் இலங்கையில் இறங்கும் போது , ஒரு தெரிந்த முகமும்  அங்கு இருக்கப்போவதில்லை. முகநூல் நண்பர்கள் இருந்தாலும் யாரையும் நான் நெருக்கமாக உணரவில்லை. றஞ்சி (அவர் முகம்கூட எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. எல்லாம் மின்னஞ்சல்தான். ஒருமுறைகூட அலைபேசியிலும் பேசவில்லை)  அவரை நம்பியே

போய்க்கொண்டு இருந்தேன். 10 பெண்கள் சேர்ந்தால் கலவரம்தான் நடக்கும் என்ற பேச்சு வழக்கில் உண்டு. என் நிலைகுறித்த சரியான வரைவை, வரையவே முடியவில்லை. நான் விமானம் ஏறுவதற்கு முன்பு ஒரு படத்தை எடுத்து முகநூலில் போட்டேன். அதுவே எனது முதல் அதிகாரப்பூர்வ பயணத் தகவல்.  அதற்கு ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான யாழினி welcome to sriLanka .we waiting for u . ranji #yarlini <https://www.facebook.com/hashtag/yarlini?hc_location=ufi> என்று தகவல் போட்டார்.

எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் இல்லாமல் போனது. நான் இலங்கையின்  தலைநகர் கொழும்பில் இறங்கியதும் எந்தப்  பதற்றமும் எனக்கு இருக்கவில்லை. அதுவே எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது ஒரு அந்நிய மண்ணென எனக்குத் தோன்றவில்லை. அங்கு இருப்பவர்கள் தமிழர்களா சிங்களவர்களா என்ற ஆராய்ச்சியை நான் மேற்கொள்ளவில்லை. எல்லாருமே தமிழர்கள் மாதிரியே இருந்தார்கள். போர்டிங் விட்டு வெளியே வந்து ஒரு முறை சுற்றிப்பார்த்தேன். உள்ளே காத்திருப்பார்கள் என்பது என் எண்ணம். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

யாழினிக்குப் போன் செய்தேன். வந்து இறங்கிவிட்டேன் என்று. வெளியில் வாங்க என்றார் யாழினி. ஏர்போட்டில் தமிழ் எழுத்துகளில் குறிப்புகள் இருந்ததால் எந்தச் சிரமமும் இல்லாமல் வெளியில் போனேன். அங்கு றஞ்சியும், யாழினியும் ஆர்ப்பரிப்போடு நின்றுகொண்டிருந்தார்கள். றஞ்சி ஒரு குழந்தையைபோல்  குதூகலித்து நின்றுகொண்டிருந்தார். எனக்குள் எங்கிருந்துதான் அத்தனை உற்சாகம் வந்ததோ தெரியவில்லை. பூர்வ ஜென்மத்துச் சொந்தங்களைக் கண்டதுபோல ஓடிப் போய் வாரி அணைத்துக்கொண்டேன்.
இப்படித்தான் இலங்கை மண் என்னை வரவேற்று என் முதல் நாளைத் தொடக்கிவைத்தது.
(தொடரும்)