புதன், 7 ஜனவரி, 2015

மலேசியத் தமிழர்கள் இலக்கியம் வளர்க்கவில்லை


இந்திய இலக்கிய ஆளுமைகளில் நன்கு அறியக்கூடியவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. சினிமா விமர்சனம், மேல் நாட்டு இலக்கிய விமர்சனம், பதிவுகள் என்று பல முகங்களாக அறியப்பட்டவர். அண்மையில் குறுகிய கால மலேசிய வருகை புரிந்த அவரிடம்நம் நாடு' சிறப்பு நேர்காணலைச் செய்தது. தன் ஒளிவு மறைவற்ற கருத்துகளை முன் வைத்தார் சாரு.

*உங்களின் வாசகர் வட்டம் வழி நீங்கள் சக வாசிப்பாளர்களுக்கு சொல்வது என்ன?

சாரு: என்னுடைய படைப்புகள் இந்திய மக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்பதை நான் உணர்ந்தேன். ஆதலால் என் படைப்புகளை பரவலாக மற்றவர்களிடம் போய் சேரவும் இலக்கிய விவாதங்கள் செய்யவும் எனக்கு ஒரு தளம் தேவைப்பட்டது. அதோடு என் வாசகர் வட்டத்தோடு இணைந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வேன். அதற்கு இந்த வாசகர் வட்டம் அவசியம் என்றே நினைக்கிறேன்.

 *உங்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதலைக் குறித்து கூற முடியுமா?

சாரு: நாங்கள் இருவருமே வேறு வேறு திசையில் பயணிப்பவர்கள். வெவ்வேறு எதிர்நிலையில் இருப்பவர்கள். நான் வட துருவம் என்றால், ஜே, தென் துருவம். எங்களுக்குள் இருக்கும் விவாதங்கள் ஓர் அதிசயமில்லை. மற்றபடி அவரும் நானும் நண்பர்கள்.

* சம காலத்து இந்திய பெண் எழுத்தார்களில் நீங்கள் முக்கியமாக கருதக்கூடிய படைப்பாளர் யார்?

சாரு:என் பார்வையில் முக்கியமானவராய் யாரையும் நான் கருதவில்லை.காரணம் பாலியல் கவிதைகளை எழுதிவிட்டால் அவர்கள் முக்கியமானவர்களாக முடியாது. குட்டி ரேவதி ஏதோ கொஞ்சம் எழுதுகிறார். ஆனால், அவை அனைத்தையும்  நான் ஏற்றுக்கொள்வதில்லை.

 *அருந்ததி ராய் புக்கர் பரிசு வாங்கியிருப்பதுடன் அவரின் நாவல்கள் சர்வதேச அளவுக்கு பேசப்படுகிறதே?
சாரு:  அருந்ததி ராய் ஒரு சுயசரிதை எழுத்தாளர். ஒரு மனிதனுக்கு ஒரு சுய சரிதைதான் இருக்க முடியும். அவர் அதை தொடக்கத்திலேயே படைத்து விட்டதால் அது முழுமை பெறாமல் போய்விட்டது. இதற்கு மேல் அவர் வேறொரு சுயசரிதை எழுதினாலும் அது அசலாக இருக்குமா என்பது சந்தேகமே. காரணம் தன் சுயசரிதையை இரண்டாவது தடவையாக எழுதும்போது அது வேறொருவரின் வாழ்க்கையிலும் ஊடுருவும் தவறு நடந்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது.

 *உங்களுக்கு பிடித்த இலக்கியவாதி யார்?

-கிரிக் எழுத்தாளர் நிக்கோல் காஸாண்ட் தக்கி. அவரின் எழுத்துக்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்யக் கூடியன. அவர் எழுதியஸர்பா தி கிரிக்' என்ற நாவல் திரைப்படமாக்கப் பட்டிருப்பதுடன் அது ஒரு முக்கிய நாவலும் கூட.


 *'யுத்தம் செய்' திரையில்கன்னித்தீவு பொண்ணா' என்ற பாடலுக்கு நீங்கள் ஆர்மோனியப் பெட்டியுடன் வருகிறீர்களே?

சாரு:நானும் இயக்குனர் மிஸ்கினும் நல்ல நண்பர்கள். அவர் என்னிடம், நடிக்க வருகிறீர்களா?  என்று கேட்டபோது  ஒப்புக்கொண்டேன். என்னை வைத்து நிறைய காட்சிகள் எடுத்தார்.ஒரு லட்சம் வெள்ளி சம்பளமும் கொடுத்தார். பிறகு எனக்கும்  மிஸ்கினுக்கும் வேறு ஒரு சம்பவத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டபோது நான் இடம்பெற்ற காட்சிகளை நீக்கிவிட்டு, வெறும் விரலை மட்டுமே படத்தில் காட்டிவிட்டார்.

*நீங்கள் சுவாமி நித்தியானந்தா ஆதரவாளராக இருந்தீர்கள். அவரைப்பற்றி வெளியான பாலியில் சம்பவத்திற்கு பிறகு அதை மீட்டுக் கொண்டீர்கள். அந்த சம்பவம் எம்மாதிரியான எதிர்வினைகளை உங்களிடத்தில் ஏற்படுத்தியது?

சாரு: ‘ஜன்னலை திறங்கள் காற்று வீசட்டும்' என்று இருந்தபோது எல்லாம் சரியாக நடக்கிறது என்றுதான்  எண்ணியிருந்தேன். ஆனால், அங்கு வீசும் காற்று பரிசுத்தமானது இல்லை என்று தெரிந்துகொண்ட போது அதை மீட்டுக்கொண்டேன்.

*மலேசிய இலக்கியம் குறித்து ?

சாரு: மலேசிய இலக்கியத்தில் கொண்டாட வேண்டியவர் சிங்கை இளங்கோவன் மட்டுமே. அவர் இப்போது சிங்கப்பூரில் இருந்தாலும் சில உலக நாடுகள் அவர் படைப்பை பார்த்துக்கொண்டே இருக்கின்றன. சிங்கப்பூர் அரசாங்கமும் அவரின் ஆற்றல் சரியாக அங்கீகரிக்கவில்லை என்பது ஆச்சரியம். மற்றும் வேதனையளிக்கக்கூடிய விஷயம். மற்றபடி இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த மலேசியத் தமிழர்கள் சினிமா மற்றும் ஆன்மிகத்தை வளர்த்தனரே தவிர இலக்கியத்தை வளர்க்கவில்லை என்றே நினைக்கிறேன்.


'நம் நாடு '
டிசம்பர்  2012



செவ்வாய், 6 ஜனவரி, 2015

தமிழ்நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது !



ஆதவன் தீட்சண்யா புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் ஆசிரியர். தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். நவீன இலக்கியத்தில் மிக முக்கியமானா ஆளுமை. தந்துகி, புறத்திருந்து, பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம் எனும் கவிதை நூல்களையும், எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள், லிபரல்பாளையத்துக் கதைகள், இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை போன்ற சிறுகதைத் தொகுப்பையும், இன்னும் நாவல், கட்டுரைத் தொகுப்பு என தன் படைப்புகளை பதிவு செய்துள்ளார் ஆதவன் தீட்சண்யா. சாதீய ஒடுக்குமுறை, பெண் விடுதலை,  போன்ற போராட்டங்களிலும், பொதுக்கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் கலந்துக்கொள்ளும் இவரின் இலக்கியப்  பார்வை கடல் கடந்தும் கவனிக்கக்கூடியது.
அண்மையில் வல்லினம் இணைய இதழ் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய பயிற்சி வகுப்பை ஏற்று நடத்த வந்திருந்தவரை ‘நம் நாடு' நேர்காணல் செய்தது.

*இலக்கியப் படைப்புகளில் பிரிவினை இருக்கிறதே? அதாவது பெண்ணியம், தலித்தியம் என்று. இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

ஆதவன்: இலக்கியப் படைப்புகளை கட்டாயம் பிரித்துதான் ஆகவேண்டும். எழுதும்போது ஒருவர் தனக்கான அடையாளங்களை எழுதுகிறார் அல்லது பிறப்பின் அடிப்படையில் தன்மீது சுமத்தப்பட்டிருக்கிற அடையாளங்களைப் பற்றி அவருக்கு உள்ள மதிப்பீட்டை வெளிப்படுத்துகிறார். பொதுவெளியில் எல்லா வகை எழுத்துகளையும்  ஆண்கள் சமூகமே நிர்ணயம் செய்கின்றது. நடுநிலையான ஒரு பார்வை இலக்கியத்திற்கு வரவேண்டும் என்றால் படைப்புகளில் பிரிவுகள் வரவேண்டும். இல்லையேல் படிப்புகளின் தனித்துவ பார்வை அல்லது பிறரின் உளவியல் விஷயங்களை காணக் கிடைக்காமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளதோடு அவர்களின் வாழ்க்கையை அவர்களைத் தவிர வேறுயார் எழுதுவது?

*எழுத்தைப்போல் வாழாதது சரியா? அல்லது எழுத்துக்கும் வாழ்வுக்கும் தொடர்பு இருக்கிறதா?

ஆதவன்: நான் ஒரு தையல்காரனைப்பற்றிய கதையை எழுத நினைத்தேன். அதற்கு சில தகவல்கள் தேவைப்பட்டன. அதனால் நான் புத்தகங்களை தேடிப் படித்தேன். அதிலிருந்து எனக்கு வேறு சில புதிய தகவல்கள் கிடைத்தன.ஒரு கதையை எழுதப் போய் ஒரு வரலாற்றை நான் தெரிந்துக்கொண்டேன். நம்மைச் சேராத ஒரு சம்பவத்தையோ அல்லது சூழலையோ கதையில் கொண்டு வரும் போது அதைப்பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளுதல் அவசியமாகப்படுகிறது. ஓர் எழுத்தாளன்  தன் எழுத்தில் ஒன்றும் செயலில் ஒன்றும் செய்பவனாக இருப்பது நேர்மையற்ற தன்மையையே குறிக்கிறது.


*மலேசியாவிற்கு வரும் பிரபல எழுத்தாளர்கள் மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து பலவாறான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். உங்களைப் பொறுத்தவரை மலேசிய  இலக்கியம் குறித்த பார்வை என்ன?

ஆதவன்: முதலில் மலேசியத் தமிழ்  இலக்கியத்தை தமிழ்நாட்டு  இலக்கியத்தோடு ஒப்பிடுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் மலேசியாவிற்கு வந்த நம் மூத்தோர்கள் இலக்கியம் வளர்ப்பதற்காக இங்கு வரவில்லை. அவர்கள் வேலை செய்வதற்காக வந்தார்கள். அதுவும் சஞ்சிக்கூலிகளாக வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் அனைவரும்  பெரும் செல்வந்தர்களோ அல்லது கல்விமான்களோ அல்ல. அவர்கள் இங்கிருந்த மற்ற சமூகத்தினரோடு போராடி வாழ்ந்திருக்கிறார்கள். தங்களை முன்னிருத்திக்கொள்ளவும் தனக்கான உரிமைக்காகவும்  கல்விக்காகவும் போராடி இருக்கிறார்கள். தங்களுக்கான அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்ள பல ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள்.  இவற்றை எல்லாம் தாண்டி மலேசியாவில் இலக்கியம் என்ற ஒன்று மழுங்கடிக்கப்படாமல் மலேசிய இந்தியர்கள் இலக்கியம் படைப்பதே ஒரு சாதனையாகும். மேலும், நான் தற்போதுதான் மலேசிய இலக்கியத்தை வாசிக்க தொடங்கியிருக்கிறேன். தீவிர வாசிப்பு இல்லாமல் எவ்வகையான கருத்துகளையும் சொல்ல முடியாது. 

*மலேசியாவுக்கு நீங்கள் இரண்டாவது தடவையாக வருகிறீர்கள். உங்களுக்கு இங்கு பிடித்த விஷயம் எது?

ஆதவன்: மலேசியாவில் இரண்டு விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. ஒன்று மலேசியாவில் எந்த நேரத்திலும் எந்த சமயத்திலும் உணவகங்களில் ஆட்கள் இருந்துக்கொண்டே இருக்கிறார்கள். இங்கே உணவு அல்லது உணவு உட்கொள்ளும்  இடங்கள் வெறும் பசிக்காக வயிற்றை நிரப்பும் இடமாக இல்லாமல் மற்ற மற்ற விஷயங்களுக்கும் இயங்குகிறது.
இரண்டாவது, சில நண்பர்களுடன் நடுநிசியில்  மலேசியாவின் தலைநகரிலுள்ள ‘சவ்கிட்' ரோட்டுக்குச் சென்றிருந்தேன். சாலையின் ஒதுக்குப்புறத்தில் சிலர் ‘chess' விளையாடிக்கொண்டிருந்தனர். யாருடைய இடையூறும் இல்லாமல், யார் பார்க்கிறார் என்ற உணர்வுகள் எதுவும் இல்லாமல் தங்கள் விளையாட்டிலேயே  கவனம் செலுத்தி விளையாடிக்கொண்டிருந்தனர். இந்தச் சம்பவம் என்னுள் ஓர் எதிர்வினையை ஏற்படுத்தியது. காரணம் டில்லியும் கோலாலம்பூரைப் போன்ற ஒரு தலைநகரம்தான். ஜனநாயக நாடாக இருந்தாலும் இங்குபோல் யாரும் அங்கு இருக்க முடியாது. அதுபோல் இங்கும் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் நீங்கள் எல்லாம் சுதந்திரமாகத்தான் இருக்கிறீர்கள்... ஒரு சில விஷயங்களில்.    

-‘நம் நாடு' நாளிதழ்
பிப்ரவரி 2013


சனி, 3 ஜனவரி, 2015

எனக்கு எப்போதுமே கவலைப்பட வேறு விஷயங்கள் இருக்கின்றன

ள்ளியில் படிக்கும்போது, எனக்கு ஆண் நண்பர்கள் குறைவாகவே இருந்தனர். அவர்களை பள்ளியைத் தாண்டி வெளியில் எங்கு காண நேர்ந்தாலும் இவன் என் நண்பன் என்பதை மனது சொல்லிக் கொள்ளுமே தவிர கண்கள் பார்க்காதப் படிதான் போகவேண்டும். அப்பாவின் மேல் உள்ள பயமும் அவரின் இடைவாரும் அவ்வாறு எனக்குள் எப்போதும் அசைந்துகொண்டே இருந்தது.
அப்பாவின்  மரணத்துக்குப் பிறகு அவர் போட்டு வைத்த இறுக்கமான முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்தபடியே இருந்தன. அப்பா வரைய கற்றுக்கொடுத்த வாழ்க்கை சித்திரத்தை அவர் இறந்த பிறகு நாங்கள் எங்களுக்குப் பிடித்த மாதிரி கொஞ்சம் மாற்றி வரைந்துக்கொண்டோம். (நாங்கள் என்பது என் தம்பி, தங்கை மற்றும் நான்) அதற்காக எந்தக் குற்ற உணர்ச்சிக்கும் நாங்கள் ஆளாகவில்லை.
தலைநகரில் பாதுகாவலர் வேலைக்கு ஆப்பு வந்த பின், துணிமணிகளை தூக்கி கொண்டு மீண்டும் கம்பத்திலேயே சரணடைந்தேன். இந்த முறை வேலைத் தேடும் படலத்தில் அதிக சிரமப்படவில்லை. காரணம் என் பெரியம்மா வேலை செய்யும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்ததால் தற்காலிகமாக வேலைக்கு வருமாரு அழைத்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பெரியம்மா அந்த தொழிற்சாலையில்தான் வேலை செய்தார்.
தேங்காய் எண்ணை மற்றும் அரைத்த தேங்காய் பூவைப் பதப்படுத்தும் தொழிற்சாலை அது. 300 முதல் 400 ஆட்கள் வரை வேலை செய்த தொழிற்சாலையில் கால மாற்றத்துக்கும் நவீனமயத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் சுருங்கி சுருங்கி 20 முதல் 30 ஆட்கள் மட்டுமே வேலை செய்யக்கூடிய இடமாக மாறியிருந்தது. எண்ணை கிடங்குகள் அக்கு வேர் ஆணி வேராக பெயர்க்கப் பட்டு பழைய இரும்பு சாமான்களுக்குப் போடப்பட்டது. தேங்காய் பூவைப் பதப்படுத்தும் ஆலை மட்டும் தனித்து இயங்கிக்கொண்டிருந்தது.
பள்ளி விடுமுறையில் பெரியம்மாவை பார்ப்பதற்காக அந்தத் தொழிற்சாலைக்கு போய்வந்திருக்கிறேன். தேங்காயின் புளித்த நாற்றம் நாசியை எதிர்க்கொள்ளாமல் தாக்கும். மூக்கை மூடிக்கொண்டுதான் தொழிற்சாலையின் உள்ளேயும் வெளியேயும் பிறவேசிக்க முடியும். அவ்வப்போது நான் அந்த தொழிற்சாலைக்குப் போய் வந்துக் கொண்டிருந்ததால் நாற்றம் எனக்கு பழகி விட்டிருந்தது. அங்கு வேலை செய்முறைப்பற்றியும் ஒருவாராக நான் அறிந்து வைத்திருந்தேன்.
பெரியம்மா அங்கு விசுவாசமான தொழிலாளியாகவும் முதலாளியின் நம்பிக்கைக்குரிய ஊழியராகவும் இருந்தார். என் சிற்றன்னைகளும் மாமாவும்கூட அங்கே வேலை செய்துக்கொண்டிருந்ததால் அது எங்களின் குடும்ப கம்பனி என்று பலரின் நையாண்டிக்கு ஆளாகி இருந்தது.
நோன்பு பெருநாளுக்காக அரபு நாடுகளிலிருந்து கம்பனிக்கு ஆர்டர்கள் குவிந்திருந்தது. 24 மணிநேரமும் மனிதர்களும் இயந்திரங்களும் இயங்கினாலே ஒழிய ஆர்டர்களை முடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு நிறைய ஆர்டரும் ஓவர் டைமும் கிடைக்கப் போகிறது என்ற சந்தாஷத்தையும் மீறி 24 மணிநேரம் யாரால் வேலை செய்ய முடியும் என்ற கவலையே பலருக்கு இருந்தது.
குடும்பஸ்தர்களாக அல்லாமல் இளைஞர்களாக இருந்தால் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பார்கள் என்ற நம்பிக்கையை வைத்து தற்காலிக வேலைக்கு ஆட்களை தேடினார்கள். நான் உட்பட ஒன்பது பேர் வேலையில் சேர்ந்தோம். நாங்கள் அனைவரும் ஒரே வயது வரிசையில் இருந்த காரணத்தால் ஓரிரு நாட்களிலேயே சகஜமாக பேசி நண்பர்கள் ஆனோம். எங்களின் வேகமும் சுறுசுறுப்பும் இதற்கு முன்பு வேலை செய்தவர்களை அசர வைத்தது.
சிலமணி நேரம் மட்டுமே தூங்கி விட்டு 20 மணிநேரம் வரையிலும் அதே உற்சாகத்துடன் வேலை செய்தோம். எங்களில் சிலர் ஒரே தெருவில் குடியிருந்ததால் அவர் அவர் குடும்பத்தினர் அறிமுகமும் எங்களுக்கு இருந்தது. நடு இரவில் வேலை முடிந்தால் கூட நண்பர்களில் எவனாவது மோட்டார் சைக்கிளில் வீட்டில் விட்டு விடுவான். நான் உணவு வேளைக்கு வீட்டுக்கு போனால் கையோடு அவனவன் வீட்டில் உணவு அடுக்குகளை கேட்டு சேகரித்து வந்து கொடுப்பேன். இப்படி நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துக்கொண்டோம்.
“டேய் முரளி சாப்பாடு எடுத்து வந்திருக்கேன்டா”. “குமார் உன்னை பார்த்து ரெண்டுநாள் ஆச்சினு உங்க அம்மா கவலையா இருக்காங்கடா”. "டேய் ரவி இந்த வாரம் யார் ஓவர் டைம் அதிகமா செய்றதுனு போட்டி வச்சிக்கலமா?" குளிக்கையாவது வீட்டுக்கு போங்கடா” என்று அனைவரையும் சகட்டுமேனிக்கு ‘டா' போட்டுதான் பேசுவேன். எவனும் என்னிடம் கோபித்தது இல்லை.
எனக்கு பிரச்சனையே அங்கு வேலை செய்த பெண்களால்தான் வந்தது. “இவளுக்கு ஆம்பளைங்களைத்தான் பிடிக்கும் போலிருக்கு” “இவகிட்ட என்னாத்த பார்த்தானுங்களோ“ “இந்த வயசுலையே ஆம்பளை கேட்குது” என்று கண்டபடியாக அவதூறுகள் எனக்கு பின்னால் பேசப்பட்டது. என் பெரியம்மாவுக்குப் பயந்து வெளிப்படையாக பேசாமல் கிசுகிசுவை மூட்டி விட்டனர். என்னிடம் நல்ல விதமாகவும், எனக்கு பின்னால் அவதூறும் பேசியதற்கான காரணத்தை இன்றைக்கும் என்னாள் யூகிக்க முடியவில்லை.
இந்தச் சங்கதி எனக்கு தெரியும் முன்பே நண்பர்களின் காதுகளுக்கு எட்டியிருந்தது. அரசியல் சந்திப்பை நிகழ்த்தப்போகும் தோரணையில் ஒரு ஞாயிறுக்கிழமை ஒன்பது பேரும் வீட்டுக்கு வந்தனர். “யோகி இப்படி பேசிக்கொள்கிறார்கள். உனக்கு தெரியுமா?” என்றனர். முகம் வெளிரிப் போனது எனக்கு. 'ஏன் என்னை பற்றி அப்படிப் பேசனும். நான் என்ன செய்தேன்' என்று குழம்பினேன். பெரியம்மாவுக்கு மண்டை காய்ந்தது. ஆரம்பித்தார் வசையை. "நாளை அவளுங்களின் சிண்டை பிடித்துவிடுகிறேன் பார். என்னிடம் பேச தைரியமில்லாத காட்டுப்பூச்சிகள். அதான் உன்னிடம் மோதுகின்றன" என்று வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்தார். அவருக்கு ஆத்திரம் எல்லையை தாண்டும் போது கைகால்கள் உதறல் ஏற்பட்டு சொற்கள் உடைய ஆரம்பிக்கும். அவரை சமாதானப்படுத்தி உட்கார வைத்தேன்.

வானத்தில் நட்சத்திரங்கள் அழகாகப் பூத்துக்கிடந்தன. முழு நிலவு வரும்போதும் வானம் அழகாகக் காட்சிக்கொடுக்கும். அந்தச் சமயங்களில் மனதில் மகிழ்ச்சியும் இனம் புரியாத நிம்மதியும் ஏற்படும். அன்றும் அப்படிதான். என் ஒழுக்கத்தையும் நடத்தையையும் ஏலம் போடுகிறார்கள் என்று தெரிந்தும் கோபத்தையும் அழுகையையும் அடக்கிக் கொண்டேன். நண்பர்கள் முன்பு அழுது அவமானப்படவில்லை. மேலும் என் அழுகை அவர்களையும் சங்கடப்படுத்தலாம். வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். 'வானம் ஒரு போதிமரம்' என எங்கோ படித்த ஞாபகம்.
பாலர் பள்ளியில் பயிலும் என் கடைசி தங்கை பள்ளியில் ஏதோ கட்டணம் செலுத்த நாளை இறுதிநாள் பணம் வேண்டும் என்று என் மௌனம் கலைத்தாள். என்னையும் மீறி வந்து விழுந்த இரண்டு சொட்டுக் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளைப் பார்த்து சிரித்தேன். என் தங்கை தேவதைப் போல் அழகு. “பணம் தருகிறேன்” என்றதும் போய் விட்டாள்.
அரசியல் பேச்சு சூடு பிடித்திருந்தது. என்னை பழித்துப்பேசியவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார் பெரியம்மா. நண்பர்கள் அவரை உற்சாகப்படுத்தியபடியே இருந்தனர். பெரியம்மா என் மீது அதிக பாசமாக இருந்ததால் என் மீது விழுந்த கறையை அவரால் சகிக்க முடியவில்லை. கறையை துடைப்பதைக்காட்டிலும் கறை அப்பியவர்களைத் தூர்வாரவே நினைத்தார்.
நான் பேசத்தொடங்கினேன். "தற்காலிக வேலையில் இருக்கும் நம்மை நாளைக்கு வேலைக்கு வர வேண்டாம் என்று முதலாளி கூறி விட்டால் அவர் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போகப் போகிறோம். அப்போது நம்மைப்பற்றி பேசவும் நினைப்பதற்கும் அவர்களுக்கு நேரமும் சந்தர்ப்பமும் இருக்காது. தவிரவும் நாளை வேறொரு கதை கிடைத்தால் இந்தக் கதையை மறந்து விடுவார்கள். எனக்கு யோசிக்கவும் வருத்தப்படவும் வேறு காரணங்கள் இருக்கின்றன. இதை நெஞ்சில் ஏற்றிக்கொள்ள வழுவில்லை", என்று என்னால் முடிந்த அளவுக்கு நண்பர்களையும் பெரியம்மாவையும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். யாரும் சமாதானம் ஆவதாக இல்லை. இந்தப் பிரச்சனையால் வேலைக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமா என்ற கவலையே எனக்கு பெரிதாக இருந்தது.
பாவ புண்ணியங்களைப் பார்க்காமல் நாளை கச்சேரியை நடத்த வேண்டியதுதான் என்றார்கள் நண்பர்கள். "காலி டப்பாதான் அதிக சத்தம் போடும். அவர்கள் அறிவில்லாத காலி டப்பாக்கள். நமக்கும் அறிவில்லையா?" என்றேன். நண்பர்கள் அமைதியானார்கள். பெரியம்மாவின் கண்கள் கலங்கி இருந்தது. அவர் என்னை கட்டி அணைத்துக்கொண்டார். எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
நண்பர்களை அனுப்பிவிட்டு மீண்டும் வானத்தை பார்த்தேன். 'நான் போட்ட முடிச்சுகளைத் தளர்த்தியதற்கு நன்றாக அனுபவி' என்று அப்பா வானத்தை கிழித்துக்கொண்டு ஆதங்கம் பட்டுக்கொண்டிருந்தார். மனது முழுதும் ஏதோ தவிப்பு கௌவி இருந்தது. முதல் முறையாக குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி நின்றேன். கம்பனியில் பிரச்சனை வேண்டாம் என்று கூறினாலும், அடி தொண்டையில் வாய்விட்டு எல்லாத்தையும் பார்த்து கத்த வேண்டும் போல் இருந்தது.
வானம் என்னைச் சற்று நேரத்திற்கெல்லாம் அமைதியாக்கியது. என்னைப் பற்றி பேசிய பெண்களை ஒருதரம் நினைத்துப்பார்த்தேன். பாவமாக இருந்தது. அவர்களை அவ்வாறு பேச வைத்தது எது என்று யோசித்தேன். அடிமைப்படுத்தப் படுபவர்களுக்கு ஆறுதலுக்காவது சில அடிமைகள் தேவைப்படுகிறார்கள் என்று பட்டது. 'அடிமைகள்... அடிமைகள்...' என சொல்லிப்பார்த்தேன்.
"அக்கா நாளை பள்ளி பேருந்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்” என்று பெரிய தங்கை என்னை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்தாள். எனக்கு கவலைப்பட வேறு விஷயங்கள் இருப்பது நினைவுக்கு வந்தது.


- (வல்லினம், இணைய இதழ் )ஜூன் 2011