செவ்வாய், 5 மார்ச், 2019

பள்ளி கொண்ட புரம்




 சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்!” (ஆண்டாள், திருப்பாவை)

இந்த வரிகளைத்தான் கூறிக்கொண்டேன், நண்பர் சாகுல், ”திருவனந்தபுரம் ஸ்ரீபத்மனாபசுவாமி கோயிலுக்குப் போகலாம்” எனச்சொன்னதும். திருவனந்தபுரத்திற்கு இதற்கு முன்பே ஒரு முறை சென்றிருந்த போதும் பல அதிசயங்களைக் கொண்டிருக்கும் அந்தக் கோயிலுக்குப் போகலாம் என்ற எண்ணம் எனக்கு வரவே இல்லை. கோயில்களைக் காட்டிலும் மனிதர்களைச் சந்திப்பதிலேயே எனக்கு ஆர்வம் அதிகம் இருந்ததும் மற்றுமொரு காரணம்.

ஓக்கி புயல் (Cyclone Ockhi ) கன்னியாகுமரியைத் தாக்கிய சுவடுகள் திருவனந்தபுத்திலும் எதிரொலித்திருந்தது. என்னை விமானநிலையத்திலிருந்து அழைத்துக்கொள்வதாகச் சொன்ன நண்பர் புயலில் சிக்கிக்கொள்ளவே,  நானே ஓர்  ஆட்டோவைப் பிடித்து ஓட்டுநர் உதவியுடன் ஒரு தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கி விட்டேன். விமானநிலையத்தில் வரவேற்றதிலிருந்து என்னை வழியனுப்பும் எல்லா கடமைகளையும் மழையே ஏற்றுக்கொண்டிருந்தது. எங்காவது நடந்து போய்வரலாம் என்றாலும் மழை அதற்கு இடமே தரவில்லை. நான் தங்கியிருந்த விடுதியிலேயே உணவு மற்றும் டீக்கடை இருந்தாலும் எனக்கு அதைத் தாண்டி வெளியில் செல்லவேண்டும் எனத்தோன்றியது. நனைந்தபடியே எதிர்புறமிருந்த பழச்சாறு விற்கும் கடைக்குச் சென்றேன்.

மழையில் நனைவிதைவிட வேறுசுகம் எதிலிருக்கிறதுஎன் மேல் வழிந்தோடியபடி பூமியில் மழைப்பூக்களை உதிர்த்தபடிகூரைகளில் வழிந்தோடியபடிஇலைகளில் சொட்டியபடிகண்ணாடிகளில் கோடுகளைப் போட்டபடி நான் விதவிதமாக மழையை பார்த்துக்கொண்டிருந்தேன். காலை, மாலை, இரவு முழுவதும், எங்கும் மழையின் ஈரம் ஈரம் ஈரம் மட்டுமே. பெண் ஒருவர்  டீ போட்டுக்கொண்டிருந்தார். டீ குடித்துவிட்டு சில்லறை இல்லை என்று கூறிக் கடன் கேட்கும் அளவுக்கு எங்களின்  இருவரின் நட்பும் மேம்பட்டிருந்தது. இப்படியே அன்றைய நாள் முடிந்துவிடிந்தது எனக்கு.

அன்றைய நாள்  கொல்லம் செல்லும் திட்டத்திற்கு முன்பாக அந்த கோயிலை பார்த்துவிட்டு சென்றுவிடலாமே என கன்னியாகுமரியிலிருந்து வந்திருந்த நண்பர் சாகுல் கூறுகையில் அதை நான் மறுக்க விரும்பவில்லை. என் பால்யத்தில் கண்ணன் மீது இருந்த மயக்கமும், அதன் காரணமாகச் சிலஆண்டுகள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த விஷயங்களும் கணப்பொழுதில் மின்னலடித்துச் சென்றன.

ஈரம் காயாதவிடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் நான் உன்னை வந்து எழுப்பி,  பிரகாசிக்கும் உன்னுடைய திருவடிகளை…  என்று எண்ணி முடிப்பதற்குள் எனக்கு சின்னதாகச் சிரிப்பு வந்தது. வார்த்தைகளை விழுங்கிவிட்டு கிளம்புவதற்கு தயாரானேன். கேரள மண்ணில் நான் காணப்போகும் முதல் கோயில் அது. சேலையை உடுத்திக்கொண்டு கிளம்பினேன். வெள்ளை கதர் சேலை. அது ஒன்றுதான் என்னிடம் உடுத்தத் தகுந்ததாக இருந்தது. பார்ப்பதற்கு கேரளப்பெண்கள் உடுத்தும் சேலையை போலவே  இருந்ததும் எதிர்பாராத ஒன்றுதான். கோயிலின் கிழக்கு நடைப் பக்கமாக நுழைந்தோம். மழையும் எங்களுடன் வந்தது. கோயிலின் பெரிய தெப்பக்குளத்தில் மழைத்துளிகள் தெறித்தபடி இருந்தன. பார்த்தவுடனே கவரக்கூடிய குளம் அது. பார்த்தவுடன் மனதை கவரும் பல விஷயங்கள் கேரளாவில் இருப்பது அதிசயமாகவே இருந்தது எனக்கு. வேலி போடப்பட்டிருந்த குளத்தை எட்டிப்பார்த்துவிட்டு திரும்பினால் எதிர்புற கட்டிடத்தின் மேற்புறத்தில் பெரிய ஆங்கிலேயப் பாணியிலான கடிகாரம். இரண்டு ஆடுகள் மணி கூட்டின் பக்கவாட்டில்,  எத்தனை மணி நேரமோ அத்தனை முறை அவை முட்டிக்கொள்ளுவதில் ஒலியெழுப்புமாறும்  அமைக்கப்பட்டிருந்த அக்கடிகாரம் இன்னும் இயங்கிக்கொண்டிருந்தது. அதை புகைப்படம் எடுக்கமுடியாத சூழலுக்கு தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது  மழை.



மழையை பொருட்படுத்தாதபடி பத்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. ஜீன்ஸ் அணிந்திருந்த நண்பர் சாகுலை கோயிலினுள் அனுமதிக்க முடியாது என கோயில் நிர்வாகத்தினர் சொல்லவேஒரு வேட்டியை வாங்கிக்கொள்ள வேண்டியதாகிப்போனது அவருக்கு. சுடிதார் அணிந்துவந்த பெண்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. வேட்டியை வாங்கி சுடிதார் காற்சட்டையின்  மேலேயே கட்டிக்கொண்டனர். பண பையைத்தவிர வேறு எதுவும் கோயிலினுள் அனுமதியில்லை. அனைத்தையும் வாங்கி லாக்கரில் வைத்தார்கள். கோயிலின் வாசல் பகுதியிலேயே மெட்டர்  டிடெக்டர்கண்காணிப்பு கேமராஸ்கேனர் இது தவிர ஆயுதம் வைத்திருக்கும் போலீஸ் இத்தனை பாதுகாப்பு கவசங்களையும் தாண்டி நாங்கள் கோயிலின் உட்பகுதியில் நுழைந்தோம். வெளிச்சம் குறைவாகவே இருந்தது. கர்ப்பக்கிரகத்திற்கு போவதற்கு முன்பாக இருக்கும் கோயில் கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. எண்ணெய்ப் பசையாக இருந்த மண்டபக்காலை தொட்டுப் பார்த்தேன். சிற்பத்தின் கோடுகளை உணர முடிந்தது. கருவறை நடையை சாத்துவதற்கு இன்னும் நேரமிருந்தபடியால் கோயிலின் மற்ற பிரகாரங்களை முதலில் சுற்றிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம் என முடிவெடுத்தோம்.

கேரளக் கட்டிடக்கலையின் வடிவமைப்பில் அங்கங்கே பொறிக்கப்பட்டிருந்த மீன் சின்னங்கள் உட்பட அழகிய வேலைப்பாடுகளும்மனதைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது ஸ்ரீ பத்மனாபசுவாமி திருத்தலம். மேலும் சுவர் ஓவியங்களை குறித்து சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளில்லை. அதற்காக ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம். எங்களுக்கிருந்த சொற்ப நேரத்தில் ஆசைதீரக் காண முடியவில்லையே என்ற கவலை மட்டுமே இருந்தது. சில ஸ்தலங்களை காண்பதற்கு தனிக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. சங்கீதத்தூண்கள் என்ற குறிப்பு இருந்த ஒரு மண்டபத்தில் நானும் சாகுலும் நுழைந்தோம். ஓர் ஆளுக்கு 20 ரூபாய் வாங்கிக்கொண்டு அதற்கான ரசீதும் கொடுத்து உள்ளே அனுமதித்தார்கள். இரண்டு வரிசையில் எதிரெதிரே இருந்த தூண்களில் வெவ்வேறான சிற்பங்கள் அதன்  பெயருடன் இருந்தன. 'பார்வதி சுயம்வரம்', 'சிவன் திருக்கல்யாணம்உள்ளிட்ட சிற்பங்கள் (ஞாபகத்தில் உள்ளது அவைதான்) மிக நேர்த்தியாக ஒரேகல்லில் செதுக்கப்பட்டிருந்தன. காதைவைத்து சிலையின் தூணை தட்டிப்பார்த்தோம். சங்கீத சுவரங்களா அவைஎன்று எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றாலும் அது இசைதான் என்பதில் சந்தேகமில்லை. ஒரு புறத்தில் தட்டினால் மறுபுறத்திலும், சில கற்தூண்களிலும் எதிரொலித்தது. வெவ்வேறு ஒலிவெவ்வேறு ஸ்வரம்வெவ்வேறு அனுபவம்.
நிதானமாகவே ஒவ்வொரு சிலையாக தட்டிப்பார்த்து இருபது ரூபாய்க்கு ஒரு பைசாகூட மிச்சம்வைக்காமல் பார்வையாலேயே செலவு செய்தோம். புகைப்படக் கருவியை அனுமதிக்கவில்லையே என்ற கவலை எனக்குத் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. ருவறையில் பூஜை நடைபெறுவதற்கான நேரம் நெருங்குகிறது என யாரோ சொல்லிக்கொண்டிருந்தது எங்கள் காதில்விழவே கர்ப்பக்கிரகம் நோக்கி விரைந்தோம். பெண்கள் சிலர் பாசுரம் பாடுவதற்குத் தயார் நிலையில் இருந்தனர். பூஜை தொடங்கியது. பாசுரங்களை பெண்களே கீர்த்தனை இசைத்துப்பாடினர். தீபாராதனை காட்டப்பட்டது. சின்ன குடில் போல, அதற்கு நன்கு  இழைக்கப்பட் மரக்கதவு. அதன் வழியே அர்ச்சகர் பிரசாதம் கொண்டு வந்தார். மா வடுஇரண்டு அதிர்ஷ்டசாலி பத்தர்களுக்கு மாத்திரமே கிடைத்தது. அதில் நானும் ஒருத்தி. என் அருகில் ஏமாற்றத்துடன் கையேந்தி பின் அதிர்ஷ்டத்தை  நழுவவிட்ட தோரணையில் என்னை நோக்கிய பெண்ணுக்கு அதை நான் கொடுத்துவிட்டேன்.


துவர்த்தியிலிருந்து மெல்ல வெளிப்படும் நறுமணம் போல அவரிடமிருந்து பக்தி பரவசம் கிளர்ந்தெழுவதாக எனக்குத் தோன்றியது. கருவறையைப் பார்த்தேன். தீப ஒளியில் கருங்கல் விக்ரகம் மின்னுவதாகத் தெரிந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே திரையை இழுத்து மூடினார்கள். ஆணியடித்தாற்போல அங்கேயே நின்று கொண்டிருந்த என்னை ”யோகி”யென சாகுல் சிந்தனையை கலைத்தார்.  நேரமாகிறது மூலவரைப் போய்ப் பார்க்க வேண்டாமா?  இன்னும் சிறிதுநேரம் தான் இருக்கிறது, வாங்க என்றார். மூலவராஎன்ற ஆச்சரியத்துடன் நான் சாகுலின் பின்னால் ஓடினேன். மழையின் தீவிரம் அதிகரித்திருந்தது. வேட்டியணிந்த துப்பாக்கியேந்திய சேட்டன் போலீஸ்க்காரர்கள் பலஇடங்களில் நோட்டமிட்டபடியே இருந்தனர். வழியில் ஓரிடத்தில் ”இதுதான் திறக்கப்படாத அந்த ஆறாவது வாயிலுக்கு செல்லும் வழி”யென சாகுல் சொன்னார். அதை நின்று பார்க்கவும் பயமாக இருந்தது. ஆகம விதிப்படி 9 அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் எனவும்; இவற்றில் 6 அறைகள் கோவிலுக்குள்ளும் மற்றவை கோவில் குளத்து கிணற்றில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு கோயிலுக்குள் இருந்த அந்த அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு தங்கப் புதையல்கள் மீட்கப்பட்டதும், நாகச்சின்னம் பொறிக்கப்பட்டிருந்த ஓர் அறையை எச்சரிக்கை நிமித்தமாக திறக்காமல்விட்டதும் உலக மக்கள் அறிந்த செய்திதான். திறக்கப்படாத அந்த அறை இருந்த திசையை கண்டும் காணாத மாதிரி சேட்டன்களைப்பார்த்தபடியே கடந்துவிட்டோம். (எதற்கு வந்த இடத்தில் வம்பு.)





மாடம் மாதிரி இருந்த மேற்தளத்திற்கு மரப்படியில் ஏறிச்செல்ல வசதி செய்திருந்தார்கள். திறந்திருந்த மூன்று நிலைகளை பார்த்தபடி ஆட்கள் நகர்ந்துகொண்டே இருந்தார்கள். நானும் அந்தக் காட்சிகளைக் கண்டேன். முதல் வாயில் வழியாக, ஆதிசேஷன் அல்லது அனந்தன் என்ற நாகம் குடை விரித்திருக்க தங்கக்கிரீடம் அணிந்த நிலையில் திருமுகமும், வலக்கையும்;  நடு வாயில் வழியாக,வயிற்றுப்பகுதியின்  நாபியில் இருந்து கிளம்பும் கமலத்தில் உறையும் பிரம்மனைகடைசி வாயில் வழியாக,  திருவடிகள் தரிசனம் என அனந்த பத்மநாபரின் 18 அடி விக்ரகம் என்னைக் கொள்ளையடித்து நகர விடாமலும், வைத்த கண்ணை எடுக்கவிடாமலும் செய்திருந்தது. இத்தனை அழகாஇத்தனை தேஜஸ் ஒரு விக்ரகத்திற்கு இருக்குமா?  ஏன் கண்களிலிருந்து நீர் சுரந்து வழிகிறதுநான் இறைவன் என்ற ஒருவன் இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் என் இப்போதைய மயக்கத்திற்கு பெயர் பக்தியில்லை எனில் இதன் பெயர் என்னஆண்டாள் காதலில் விழுந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறதுஐயோ எனக்குள் என்னதான் நடக்கிறது?  ஓர் ஆமையின் நகர்வில், நத்தையின் நிதானத்தில்   திரும்பத் திரும்ப வரிசையில் நின்றுமீண்டும் மீண்டும் என் உடல் முழுதும் கண்ணாக பத்மநாபனை விட்டுப்பிரியா மனதுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தியானம் போல, ஒரு விரதம் போல முதன்முதலாக காதலில் விழும் பரவசத்துடன் என் நுனி முதல் அடி வரை எங்கும் நிறைந்திருந்தது அந்த காட்சி.

அதைக் கலைக்கும் விதத்தில் நண்பர் சாகுல் "நடை அடைக்கப்போகிறார்கள்வாங்க யோகி என்றார். என் நிலை மறந்த நிலையில் "நான் எங்கு போவதுசாகுல்,” என்றேன். கால் நகரும்மனம் நகர மறுக்கிறதே என்றேன். என்ன இப்படி ஆகிட்டிங்க என்றார். ஒரு கட்டாய நிலையிலேயே என்னை அங்கிருந்து அகற்றிச் சென்ற சாகுல்மெல்லியதாக சிரிக்கத் தொடங்கினார். நிச்சயமாக ஏதோ இருக்கிறது சாகுல்சரணாகதிதான் என்றேன் சிரித்தபடி நானும். நடையை விட்டு வெளியே செல்லும்போது பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும்படி கற்தூண்களின் மேற்கூரைகளில் மீன் சின்னங்கள் அதிகமாகவே தென்பட்டன. நாங்கள் வெளியேறிய பாதை மேற்கு நடையில் முடிவடைந்தது. இரண்டு அடுக்கு மாடிவீடுகள் நடைவாயிலுக்கு அப்புறத்தில் காணமுடிந்தது. அதில் பழங்காலமாக ஐயர்மார்கள் வாழ்த்துவருவதாகவும், குட்டி அக்ரகாரமே அங்கு இருக்கிறது எனவும்,அவர்கள் கோயில் சேவகர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது.  

கோயில் வரலாறு சுருக்கமாக,

திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில், இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது என்று பல்வேறு பதிவுகளில் குறிப்பிட்டிருந்தாலும் ஸ்ரீ பத்மனாபசுவாமியின் அசலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது எப்போது என்பது பதிவுசெய்யப்பட்ட எந்த ஒரு வரலாற்று ஆவணங்களிலும் அல்லது எந்த ஒரு ஆதாரங்களிலிருந்தும் துல்லியமாக தீர்மானிக்க முடியவில்லை என்று இத்திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்தவரும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார்  எழுதிய “திருவாய்மொழி”யின் பத்தாவது பத்து, இரண்டாம் திருமொழி (பாடல்:3902 முதல், பாடல்:3912 வரை) அனந்தபுர நகர் குறித்தும், அனந்தபுர அண்ணலார் என பத்மநாபரின் புகழையும் பேசுகிறது.

இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட இக்கோயிலின் மூல விக்ரகம் கி.பி. 1686-ல் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருபாதி சேதமடைந்தது. அதன் பின்னர்அதன் கட்டுமானப்பணி 1724-இல் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில்தான் 1729-ஆம் ஆண்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் மன்னராக நியமிக்கப்படுகிறார். அதன் பிறகு கோயிலைப் புதுப்பிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. பன்னிரண்டாயிரம் சாளக்கிராமக் கற்களை நேப்பாளின் புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து யானைகள் மூலமாகக் கொண்டு வரப்பட்டு 4000 சிற்பிகள் 6000 தொழிலாளர்கள் மற்றும் 100 யானைகளின் உதவியோடு 6 மாதகாலம் வேலைசெய்து கோயிலைப் புதுப்பித்திருக்கிறார்கள். மேலும் கட்டுமானப்பணிக்காக தேவையான அளவு தேக்கு மரங்கள் காடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது.

1750-ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம்செல்வம் அனைத்தையும் தானமாக பட்டயம் எழுதித்தந்துதன் உடைவாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துபரிபூரண சரணாகதியடைந்தார்108 திவ்யதேசங்களுள் ஒன்றாகப்  போற்றப்படும் இக்கோயிலின், இம் மூலவரிடம் சரணாகதி அடைந்ததில் வியப்பொன்றுமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கினர்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

– பேயாழ்வார்

2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக