திங்கள், 4 மார்ச், 2019

பார்வை அரசியலில் ஆணும் பெண்ணும்..



பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா? என்கிறார் கண்ணதாசன். 


ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் நடக்கும்  பார்வையரசியலில்  அப்பெண்ணே அந்த அரசியலின் முடிவினையும் ஓட்டத்தையும் நிர்ணயிக்கிறாள். பெருவாறியாக அனைவருமே இந்த இடத்தை கடந்துதான் வந்திருப்போம்.  அறிமிகம் இல்லாத ஒருவரின் முதல் பார்வை இன்னொருவர் மீது விழும்போது அவரின் உள்மனதில் நமக்கும் உரையாடல் பல கேள்விகளால் நிரம்பிக்கொண்டிருக்கும்.  அதிலும் அறிமுகமில்லாத ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் முதல் பார்வை சம்பாஷனையில் ...

பார்வையை உள்வாங்குதல்,
பார்வையை நிராகரித்தல்,
பார்வையை தவிர்த்தல்,
பார்வையில் கேள்வி எழுப்புதல், 
பார்வையில் ஆச்சரியத்தை வெளிபடுத்துதல்,
பார்வையில் எச்சரித்தல், 
பார்வையில் குழப்பம் வெளிபடுத்துதல், 
பார்வையில் சம்மதம் தெரிவித்தல், 
பார்வையில் மறுத்தல் ..

என அத்தனையும் நடக்கும். மேலும், 
 அந்த இருபாலரும் வெவ்வேறு இடத்திற்கு நகர்ந்துச் சென்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு 
பார்வை அரசியல் நடத்துவார்கள். இருவரில் யார்  முதலில் பார்த்தார்களோ அதற்கான காரணம் தெளிவாகும்வரை பார்வை தொடர்ந்துக்கொண்டே இருக்கும். கண்ணதாசன் சொன்னதுபோல பல்லாயிரம் சொல் வாய் பேசாமல் கண்களே பேசிக்கொண்டிருக்கும். 

ஆனால், இந்த பார்வை அரசியலின் முடிவு எப்போதும் பெண்ணிடமே மண்டியிட்டு கிடக்கிறது. ஆண் பெண்ணின் பார்வை அரசியலில் பல முறை தோல்வியைத்தழுவி சில நேரம் வெற்றியும் கொள்கிறான்.

அறிமிகமில்லாத ஓர் ஆணும் ஆணும் பார்த்துக்கொள்ளும்போதும், பெண்ணும் பெண்ணும் பார்த்துக்கொள்ளும்போதும் இரு வெவ்வேறு சம்பவங்கள் நடப்பதை அவதானிக்கலாம். ஆண்-ஆண் பார்வை அரசியலில் வன்முறையும் அல்லது சிடுசிடு என்ற கோபமும், பெண்ணும் பெண்ணும் சந்திக்கும்போது எங்கேயாவது இதற்கு முன்பு பார்த்திருக்கிறோமா என்ற கேள்விக்கான பார்வையும், அல்லது சிறிய புன்னகையோடு அந்த பார்வையை கடந்துவிடுவதை அவதானிக்கலாம். 

எல்லாருக்கும் பிடித்த, எப்போதும் மனதில் வெண்ணுரையைபோல பொங்கி வழிகிற  காதலை வெளிபடுத்தும் பார்வைக்கு தனி அழகும் மொழியும் உண்டு. இளம் காதலர்களுக்கும், பேரிளம் காதலர்களுக்கும் அந்த மொழி வேறுபட்டாலும் பார்வையில் ஏற்படும் பிரகாசமும், அது காட்டும் வெட்கமும் கூச்சமும் அலாதியனது. பார்வையால் உயிர்வாழ்ந்த பல காதல் கதைகள் பேசப்படாமலே இருக்கிறது நம்மத்தியில். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக