புதன், 1 நவம்பர், 2017

இந்தியா செல்வதற்கான விசா எடுப்பது எப்படி? (india) Online Visa Application )

இது என்ன? யோகிக்கு என்ன ஆகிவிட்டது என நினைக்க வேண்டாம். இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்குச் செல்லும் மக்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். விமான டிக்கெட் எடுக்க தெரிந்த அளவுக்கு அவர்களுக்கு  விசா எடுக்க தெரியவில்லை. தெரியவில்லை என்பது பெரிய குற்றம் என்பதெல்லாம் இல்லை. தெரிந்துகொள்ளலாம். காரணம் விசாவிற்கான பாரத்தை இணையத்திலேயே பூர்த்தி செய்ய முடியும்.

5 காசு செலவு இல்லை. நேரடியாக விசா எடுக்கும்  இடத்திற்குச் சென்று எடுத்தால் பாரத்திற்கு 20 ரிங்கிட்டும் புகைப்படம் எடுக்க 20 ரிங்கிட்டும் வசூலித்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் 5 பேர் செல்வதாக இருந்தால் பாரத்திற்கு மட்டும் 100.00 ரிங்கிட் கொடுக்கணும்.

இருக்கப்பட்டவர்களே யோசிப்பார்கள். பட்ஜெட் முறையில் பயணிப்பவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
விசா எடுக்கப்போன இடத்தில் ஒரு குடும்பத்தின் ஆதங்கத்தை கேட்டப்பிறகே,  இணையத்தில் ஒரு பதிவு எழுதித்தான் வைப்போமே என தோன்றியது. சிலருக்கு  உதவியாக இருக்கட்டுமே...

முன்னதாக மலேசியர்களான நமக்கு சிவப்பு வர்ணத்தில் நமது பாஸ்போர்ட் இருக்கும். அதை கையில் வைத்திருக்கும் நாம் எத்தனை அதிர்ஷ்டசாலிகள் தெரியுமா?  2017-ஆம் ஆண்டிலிருந்து மலேசியர்கள் 164 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். நினைவில் கொள்க. விசா இல்லாமல் அனுமதிக்கப் பட்ட நாடுகளில் பயணிக்கலாம். ஆனால், கடைப்பிதழ் அதாவது பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்க முடியாது. எந்தெந்த நாடுகளுக்கு விசா இல்லாமல் மலேசியர்கள் பயணிக்கலாம் என்பதை விக்கிப்பீடியா தகவல் கூறுகிறது. சொடுக்கிப் பார்க்கவும். 

https://en.wikipedia.org/wiki/Visa_requirements_for_Malaysian_citizens

முதலில் இந்தியாவிற்கு  விசா எடுக்கபோவதற்கு முன்பு சில விஷயங்களை தயார் செய்துக்கொள்ள வேண்டும்.

1. பயணத்திற்கான விமான டிக்கெட் கையில் இருக்க வேண்டும்.
2. நம்முடைய வீட்டு முகவரி- நிரந்தர முகவரி ( இது இரண்டிற்கும் ஒரே முகவரி எழுதலாம்), நமக்கு தெரிந்தவர் ஒருவரின் பெயர் முகவரி தொலைப்பேசி எண் மற்றும் இந்தியாவில் நமக்கு தெரிந்தவர் ஒருவரின் பெயர் முகவரி தொலைப்பேசி எண் ஆகியவை தயார் செய்துக்கொள்ள வேண்டும்.


surname என தொடங்கும் பாரத்தில் அப்பாவின் பெயரை  எழுத தொடங்கிவிட்டு அடுத்தடுத்த கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதிக்கொண்டு வந்தாலே போதும். எதற்கும் ஆதாரம் தேவையில்லை. அதே வேளையில் பொய்யாக நாம் எதையும் எழுத வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் பாரத்தை பூர்த்தி செய்யும் பொது  application Id என சிவப்பு வர்ணத்தில் சில எண்களும் எழுத்துக்களும் இருக்கும். அதை தனியாக ஒரு தாளில் குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் விசா பாரத்தை எழுதிமுடித்த பிறகு மேனுவலாக குறித்த எண்களை டைப் செய்து பாரத்தை நகல் எடுக்க வேண்டும். நீங்கள் எங்களை குறிக்கவில்லை என்றால் மீண்டும் பாரத்தை செய்யணுமே தவிர பழைய பாரத்தை மீட்க முடியாது.

இணையத்தில் விசா பாரத்தைப் பெற
https://indianvisaonline.gov.in/visa/Registration  சொடுக்கவும்.

விசாவிற்கு இரண்டு புகைப்படங்கள் தேவை. அதை எடுக்கும்போது இந்தியாவுக்கான விசா புகைப்படம் என்று சொல்லி எடுக்க வேண்டும். அதன் அகலமும் நீளமும் 5-க்கு 5 ஆகும். background வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். இதில் ஒரு குறைபாடு இருந்தாலும் reject செய்துவிடுவார்கள். இந்த சிக்கலே வேண்டாம் என நினைப்பவர்கள் 20 ரிங்கிட் கட்டி அங்கேயே புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

பாரத்தை பூர்த்தி செய்த பிறகு 199 ரிங்கிட் கட்டி ரசீதை பெற்றுக்கொண்டு மூன்றாவது நாளில் 4 மணியிலிருந்து 5.30 மணி இடைவெளியில் நமது விசாவை பெற்றுக்கொள்ளலாம். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக