சனி, 30 செப்டம்பர், 2017

சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை (புத்தக விமர்சனம் )

காயத்தை புன்னகையில் பொதி வைத்திருக்கிறது
வாழ்க்கை
உல்லாசம் என் வாழ்வை நினைவுறுத்துகிறது
புயல்காற்றின் பலத்த அடிகளில் மலரும் அழகின்
உல்லாசத்துடன் பாடிச் செல்கிறது என் வாழ்வு
தோழர்களின் நட்பையும் எதிரிகளின் விரோதத்தையும்
என யாவற்றையும் தீர்த்துச் செல்கிறது என் வாழ்வு
மார்புத் துடிப்பு என்பது வெறும் கடனே என இருக்கும்
சுவாசம் ஒவ்வொன்றும் ஒரு யுத்தமே 
தனித்தே போராடிச் செல்கிறது என் வாழ்க்கை 
மைல்கற்கள் நடப்படாத பாதையில் 
கண் பதித்திருந்தது என் வாழ்க்கை

-ஆர்த்தி (திகார்)

சீன தேசத்து பெண்ணான சின்ரன் எழுதிய 'சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை' அனுபவ தொகுப்பை  தமிழில் ஜி.விஜயபத்மா மொழிபெயர்த்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் தமிழ் புத்தகங்களில் என் வரையில் இதுவும் முக்கியமான புத்தகம் என்பேன். முக்கியமான புத்தகம் என்று சொல்வதற்கு அறிவுஜீவிகள் வலுவான காரணத்தை முன்வைக்க சொல்கிறார்கள். காரணங்கள் சில நேரம் ஏற்று கொள்ளப்படுகின்றன. சில நேரம் நிராகரிக்கப்டுகின்றன. சில நேரம் காரணங்களுக்கு சாட்சியங்கள் தேவைப்படுகின்றன. காரணங்கள் சில நேரம் கேலிக்கூத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றன. எனினும் காரணங்கள், சொல்லப்பட வேண்டியதாகவே இருக்கின்றன.
ஊடகப் பெண்ணாகவும் ஒடுக்கப்பட்ட தேசத்தின் மாற்று சிந்தனை கொண்ட பெண்ணாகவும் தன் கருத்தினை முன் வைக்கும் சின்ரனை தொடந்து வாசித்து கொண்டு வருகையில் ஒரு கட்டத்தில் நான் சின்ரனாகவே பாவிக்கத் தொடங்கி மொத்த புத்தகத்தையும் வாசித்து முடித்தேன். சின்ரனின் பல செயற்பாடுகளில் ஊடகப்பெண்ணாக இருந்த யோகியும் ஈடுபட்டிருக்கிறாள். பல போராட்டங்கள், கண்ணீர்க் கதைகள்,கொண்டாட்டங்கள், பாராட்டுக்கள் ஏமாற்றங்கள் எனப்  பலவற்றையும் சின்ரன் கடந்து வந்தது போலவே யோகியும் கடந்து வந்திருக்கிறாள்.

ஒடுக்கப்பட்ட பெண்கள்,  வறிய நிலையில் உள்ள பெண்கள், ஏகாதிபத்திய திமிருக்கு பலியான பெண்கள், இன்னும் K.பாலச்சந்தர் காட்டிய பெண்கள்  பாலுமகேந்திரா காட்டிய பெண்கள் எனத் தமிழ்ப்பெண்களுக்கு ஏற்பட்ட இன்னல், ஒடுக்குமுறை. அதிகார மறுப்பு, பாலியல் தொல்லைகள், பாலியல் அத்துமீறல்கள், அடிமைத்தனம் என காலம் காலமாக  பாவப்பட்ட கதைகளை கேட்டு கேட்டு உலகத்தில் இந்திய பெண்களை காட்டிலும் பாவப்பட்ட ஜென்மங்கள் இல்லை என்ற முடிவுக்கு பலர் வந்து விடுகின்றனர். மலேசிய வாழ்க்கை முறையில் சீன மற்றும் மலாய் சமூகத்திடம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய  பெண்கள், மிக மிக சுதந்திரமாக செயற்படுபவர்கள் சீன பெண்கள்தான் என முடிவோடு இருக்கிறார்கள். உண்மையில் அப்படித்தானா என எந்த ஆய்வையும் அவர்கள் செய்வதில்லை. சீன பெண்கள்  குட்டி குட்டியாக உடையணிக்கிறார்கள், பொதுவெளியில் சுதந்திரமாக இருக்கிறார்கள், மது மற்றும் புகை பிடிக்கிறார்கள், வணிகம் செய்கிறார்கள். இதனால் அவர்கள் சுதந்திரமானவர்கள் என்ற குறுகிய பார்வைதான் இருக்கிறது.  உண்மையில் சீன பெண்களின் கதை மிகவும்  சோகம் நிறைந்தது. மூடநம்பிக்கை எனும் இருண்மையில் வெளிச்சத்தை தேடுபவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். சீனர்கள் பண பலத்தை கொண்டு அதிகாரத்துடன் இருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் மலேசிய இந்தியர்களுக்கு அதிகமாக நாட்டில் தற்கொலை செய்துகொள்ளும் சமூகமும் சீன சமூகம்தான் என்பது தெரியாது.

சின்ரன், சீனாவின் மிகப் பிரபலமான வானொலி தொகுப்பாளினியாக 1989 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.  ஊடக அனுபவத்தில் தான் சந்தித்த பெண்களின் உண்மை வாக்கு மூலங்களை ஆதாரத்துடன் மிகத் துணிச்சலாக சின்ரன் எழுதிய புத்தகம்தான்  THE GOOD WOMEN OFCHINA: HIDDEN VOICE. சீனாவின் அனைத்து தரப்பு பெண்களையும் நேரிடையாக சந்தித்து நேர்காணல்  கண்டு, உண்மை சம்பவங்களின் தொகுப்பாக இந்தப் புத்தகத்தை கொண்டு வந்துள்ளார்.
 
சீனாவின் அரசியல் மாற்றமும் அதனால் பெண்கள் மேல் ஏவப்பட்ட பாலியல் வன்முறைகள்,  பெண்குழந்தைகள் தொடர்பான பாலியல் வன்முறைகள், ஆண் குழந்தைகளுக்கு சீனாவில் கொடுக்கப்படும் முன்னுரிமைகள், சீனாவில் பேசவே தடை செய்யப்பட்ட லெஸ்பியன், ஹோமோ செக்ஸ் குறித்தும், சீனா சமூகத்திலும் கலாச்சாரத்திலும் பாலியலின் பங்கு  குறித்தும் கருத்துக்களை முன்வைத்த முதல் புத்தகம் இதுதான் என இப்புத்தகம் அடையாளப்படுத்தப்படுகிறது. சீன நாட்டைப் பொறுத்தவரை சின்ரன் செய்தது  மிகப் பெரிய அத்துமீறல்.  இதனால் சின்ரனுக்கு,  சமூகத்திலிருந்தும் சீன அரசாங்கத்திடமிருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது என்று கூறப்படுகிறது. தொடர் அச்சுறுத்தல் காரணமாக அவர் சீனாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறிவிட்டார் என்றும் இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் எந்த அளவில் சீனாவில் அனுமதிக்கப்படுகிறது  என்பதை நாமே கணக்கிட்டு கொள்ளமுடிகிறது. அடுத்ததாக  அத்துமீறல்களையும் கொடூரங்களையும் எதார்தத்தையும் பேசினால், அது யாராக இருந்தாலும்  நாடுகடத்தப்படுவதுடன் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்படும் என்பதை பல நாடுகள் உணர்த்துவதைக் காண முடிகிறது.  சிரியாவின் பத்திரிகையாளினி சமர் யாஸ்பெக்-க்கு நேர்ந்த அனுபவங்கள் அதற்கு நல்ல உதாரணம்.

ஒரு கம்யூனிச நாட்டில் பெண்களுக்கென என்ன  சலுகை இருக்கிறது. பெண் என்பவள் சீனாவில் என்னவாக இருக்கிறாள். ஒரு தங்கையாக, மகளாக, தாயாக, போராளியாக பரிமாணம் எடுக்கும் பெண்களை ஆண் சமூகம் எப்படி பாவிக்கிறது என்பதை பத்திக்கு பத்தி இந்த புத்தகம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. உயிரை மாய்த்துக்கொள்ளாமல் மேற்சொன்ன ஒவ்வொன்றையும் எப்படி இந்தப் பெண்கள் கடந்தார்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது. 

சில உதாரணங்கள்

1. 60 வயது கிழவர் 12 வயது  பெண்ணை அழைத்துவந்து, திருமணம் செய்து, அவள் ஓடிவிடாதபடி  இரும்பு சங்கிலியால் பிணைத்து வைத்திருந்திருக்கிறார். அந்த சிறுமியின் கையில் ரத்தம் வழிந்து கொண்டே இருக்கிறது. காவல் அதிகாரிகளும் போக மறுக்கும் அந்த ஊருக்குள் சின்ரன் சிறுமியை காப்பாற்ற ஒரு காவல் அதிகாரியுடன்  உள்ளே நுழைகிறார்.  கிராமங்களில் அரசர்கள்கூட தொடுவானம் போல நெருங்க இயலாத தொலைவில் இருப்பார்கள் என்று கூறப்படும் இடத்தில் எப்படி அந்தப் பெண்ணை மீட்டு வந்திருப்பார்கள்?
 
2. இராணுவத்தில் வேலை செய்யும் அப்பா தன் 11 வயது மகளை தொடந்து மிரட்டியும் அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் பாலியல் வல்லுறவு  கொண்டதை விவரிக்கும் போது,  மிக மோசமான மனநிலைக்கு நம்மை அந்தப்பக்கங்கள்  தள்ளிவிடுகின்றன. "சாவு வராதா என நான் கதறியிருக்கிறேன்" என்று அந்த சிறுமி சொல்லும்போதும்,  "நீ இனி பிய்ந்த செருப்பு போல் எதற்கும் உதவாதவள்" என அந்த அப்பன் சொல்லும்போதும்,  யாரொருவராகினும் அந்த வரிகளைக் கடந்து போக முடியுமா?

3.பூகம்பத்தில் சிக்கிய 14 வயது பெண்ணை கடத்திக்கொண்டு போய் பலர் சேர்ந்து கூட்டு வன்புணர்வு செய்துவிட்டு புதருக்குள் தூக்கி போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள் . அந்த பெண்ணைக் கண்டு பிடிக்கும்போது அரைகுறை நினைவோடு, மனம் பிறழ்ந்து யார் அவளை தொட்டாலும் தன்னை புணரத்தான் வந்திருக்கிறார்கள் என தனது காற் சட்டையை தானே கழட்டிவிடும் நிலையில் இருப்பார். அந்த பக்கங்களை வாசிக்கும்போது சாதத் ஹசன் மண்ட்டோவின் 'திற' கதை நினைவுக்கு வந்து போனது. புனைவும்-நிஜமும் ஒரு வாசகனைப் புரட்டிப்போடும் நிலை அது.  
அந்தச் சின்னப்பெண்ணின் அம்மா ஒரு இராணுவ அதிகாரி. வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணின் தம்பி  பூகம்பத்தில் இரு கால்களை இழந்திருப்பார். இரண்டு ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு மனப்பிறழ்விலிருந்து வெளிவரும் பெண்,  நேர்ந்துவிட்ட துயரிலிருந்து தப்ப முடியாமல் தற்கொலை செய்துகொள்வாள். பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம் தாங்கமுடியாமல் அப்பா மாரடைப்பில் போய்ச் சேர்ந்துவிடுவார். இராணுவ அதிகாரியான அந்த அம்மா சின்ரனிடம் இதைச் சொல்லும்போது 20 ஆண்டுகள் கடந்திருந்தது. ஆனால், அவரின் வலிமட்டும் அப்படியே தேங்கியிருந்தது.
 
4. புரட்சிப் படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய மிகுந்த நம்பிக்கையுடன் சென்ற ஓர் இளம்  பெண்ணை அந்த புரட்சிப் படை எப்படியெல்லாம்  அவளின் கனவை சிதைக்கிறது. புரட்சி என்ற வார்த்தை பெண்களுக்கு கொடுத்த இடம் என்ன என்று அறியும்போது இதயம் வெடிக்கிறது.
 
5. தன் காதலுக்காக 45 ஆண்டுகள் காத்திருந்த ஒரு பெண்ணைப் பற்றிய வாழ்க்கை ஒரு காவியக் கதைபோல சொல்லப்பட்டிக்கும் விதம் வலி மிகுந்த வனப்பு . அதை சின்ரன் மிக அழகாகக் கூறியிருக்கிறார். கதைக்குள் ஒரு கதை போல சீன வரலாற்றுக்கதை ஒன்று இந்த வாழ்க்கைக்குள் வருகிறது.
தைக்கு ஏரியை ஒட்டி பிலோ வசந்த தேயிலை காடு இருக்கிறது. பிலோ என்ற பெண் தன காதலன் கொடிய நோயால் அவதிப்படுவதைக் கண்டு அவனை காப்பாற்ற தன்னுடைய ரத்தத்தை ஊற்றி அந்த தேயிலை காட்டை வளர்த்தாளாம். அந்த தேயிலை துளிர்களை வைத்து அவனுக்கு சிகிசசை அளிக்க அவன் குணமடைய இவள் பலவீனமடைந்து இறந்து போனாளாம். அந்த ஏரியை காணக்கூடிய அளவில் தன் வசிப்பிடத்தை அமைத்துக்கொண்ட அந்த பெண், 45 ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்த காதலனை சந்திக்க நேர்கிறது. 
எந்த அமரக்காதல் கதையைவிடவும் சற்றும் குறைந்ததில்லை முகம் தெரியாத இந்த பெண்ணின் கதை.
இப்படிப் பல கதைகள் நம்மை  உலுக்கி விடுகின்றன.

இந்த புத்தகத்தில் இருக்கும்  15 துயர்மிகு சம்பவங்களில் இரு சம்பவங்கள் எனக்கு நெருக்கமாக பாதித்த சம்பவமாக  இருந்தது. வாசிக்கும்போது சில விஷயங்களை என்னில் அசைபோட்டுக்கொண்டேன்.

மலேசியாவை அதிரச் செய்த நிலச்சரிவு சம்பவம் ஒன்று இருக்கிறது. கிட்டதட்ட 24 ஆண்டுகள் ஆகிவிட்டது.  பல உயிர்களை காவு வாங்கிய அந்த சம்பவத்தை பல பேரினால் இன்றும்கூட மறக்க முடியவில்லை. அப்போது எனக்கு  11 வயதிருக்கும்.  என்ன என்றே தெரியாமல் முழுநேரமாக தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளை கண்டுகொண்டிருந்தேன். ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது. ஆடம்பரக் கட்டடம் என தலைநகரில் அடையாளம் கூறப்பட்ட ஹைலேண்ட் டவர் சரிந்து விழுந்தது  மலேசிய கட்டுமானத் துறை வரலாற்றில் கரும்புள்ளியானது. அப்போது மலேசியாவில் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் ஆட்களை அடையாளம் காணும் அதிநவீனக் கருவிகள் கூட இல்லை.
மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருந்தது. ஒரு பெண்ணின் ஓலமும், குழந்தையின் குரலும் கேட்டு அனைவரும் மும்முரமாகத் தேடி அந்தப் பெண்ணை மீட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண் ஒரு மரக்கட்டை இருந்த இடத்தை அடையாளம் காட்டினார். அங்கிருந்த இடிபாடுகளை அகற்றி 14 மாத குழந்தையை உயிரோடு காப்பாற்றினர். ஆனால் பல பேரை மீட்கவே முடியவில்லை.  நான்கு நாட்களுக்கு பிறகு, சேலையணிந்த  பெண்ணொருவர் தன் குழந்தையை  கட்டியணைத்தவாறும், குரானைக் கையில் வைத்திருந்தவாறும் இறந்துகிடந்த இன்னொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட போது காண்பவர்களை கலங்கச் செய்தது.
 
இந்த அசம்பாவிதம் குறித்து என் கிராமத்திலும் என் வீட்டிலும்கூட யாரும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், என் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் இதுதொடர்பாக வகுப்பறையில் விசாரிக்கையில் என்னைத்தவிர யாருக்குமே இந்த அசம்பாவிதம் குறித்த விவரம் தெரியவில்லை. யோகி, உனக்குத் தெரியுமா? ஆங்கிலப் பத்திரிகையில் இதுதொடர்பாக நிறைய செய்திகள் வருகின்றன. அதில் ஒரு தமிழ் பெண் நிருபரும் செய்தி தருகிறார். நீயும் நிருபர் ஆகலாம். உனக்கு அந்த தகுதி நிறையவே இருக்கு என்றார். நான் அப்போது ஒரு வழக்கறிஞர் ஆகும் கனவோடு இருந்தவள்.
 
மற்றோரு சம்பவம் சக பாலின தொடர்பானது. அவள் நல்ல அழகி. காப்பி நிறக் கேசம். நல்ல உயரம். சொந்த பிஸ்னஸ் செய்கிறாள். வயது 40 இருக்கும். அவளை ஒரு நேர்காணலுக்காக முதல் முதலில்  சந்தித்தேன். நான் எதிர்பார்த்தைவிடவும் மிகவும் அன்பாக இருந்தாள். பின் இருமுறை அலைபேசியில் பேசியவள் நேர்காணலுக்கு நன்றி சொல்லும் முகமாக என்னை ஒரு விருந்துக்கு அழைத்தாள். முதலில் தோள்மீது கையை போட்டு உரிமையாக பேச தொடங்கியவள் பின் என் தொடையை மெல்ல அழுத்தினாள். எனக்கு அந்த ஸ்பரிசத்தின் நோக்கம் விளங்கியது. நான் அவள் பெயரை சொல்லி அழைத்தேன். உனக்கு புரிகிறதா என்றாள். புரிகிறது ஆனால், நான் இன்னும் அதற்குத் தயாராக இல்லை. மன்னித்துக்கொள்ளுங்கள் விருப்பம் இல்லை என்றேன். அதன்பிறகு அத்தனை நாகரிகமாக என்னிடம் நடந்துகொண்டாள். பரவாயில்லை. தோழிகளாக இருப்போமே என்றாள். 
சின்ரனுக்கும் இதுபோல ஒரு அனுபவம் நிகழ்ந்திருக்கிறது. ஓரின பாலியல் மறுக்கப்படும் இஸ்லாமிய மற்றும் சீன   நாடுகளைச் சேர்ந்த நிருபர்களுக்கு இது எத்தகைய அனுபவம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.   
 
சீனாவின் புரட்சி பற்றி உலகமே வியந்து பேசுகிறது. ஆனால், அதன் புரட்சிக்குள் வக்கிரமும் இராணுவ இச்சைகளும் ஒளிந்திருக்கிறது என்று தெரியவரும்போது பேரதிர்ச்சியாகவே  இருக்கிறது. போரில் எல்லாம் சாத்தியம் எனப் பேசுபவர்களை நான் கண்டிருக்கிறேன்.  நம் இனத்தை அழித்தவர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று  நான் அவர்களை பார்த்து கேட்கும்போது அதை முற்றிலுமாக மறுப்பவர்களிடம் இ பற்று மட்டுமே என்னால் காண முடிந்தது. மனிதாபிமானத்தை என்றைக்கோ காவு கொடுத்தாகிவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது. முசோலினி யூதர்களின் அழிக்க உதவியதை விமர்சிக்கிறோம். அதே முசோலினியிடம் சுபாஷ் சந்திரபோஸ் கைகோர்த்து நின்றதை பேசத் தவறிவிடுகிறோம்.  
 
மிக நீண்ட வரலாற்றை சீனா கொண்டிருந்தாலும்,  1930-களில் வெளிநாடுகளில் பெண்கள் பாலியல் சுதந்திரம்கேட்டு போராடிய காலக்கட்டங்களில்தான் சீனப் பெண்கள் ஆண்களின் உலகத்தை எதிர்கொள்ளவே ஆரம்பித்தனர்  என்றும் இன்று  மட்டுமல்ல காலகாலமாகவே சீனப் பெண்களின் நிலை தாழ்ந்துதான் இருக்கிறது என்றும் சீனப் பெண்கள் உயிருள்ள மனிதர்களாக மதிக்கப்படாமல் அசையா சொத்துக்களை போல பகிர்ந்து சாப்பிடும் உணவு, கருவிகள்,  ஆயுதங்களைப்போலவே பயன்படுத்தப்பட்டார்கள் என்றும் சின்ரன் வாக்குமூலம் தருகிறார்.
 
நீண்ட காலங்களுக்கு பின்தான் ஆண்கள் உலகில் இடம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அனாலும் அவர்கள் ஆணின் காலடியில்தான் விழுந்துகிடக்க வேண்டியிருந்தது.  எதுவானாலும் இன்று வரை சீனப் பெண்களுக்கு அவர்களது சமூகப் பொறுப்பு என்னவென்றோ? உரிமை என்னவென்றோ? தெரியாது. இவ்வாறு கூறும் சின்ரன் பேசாமல் இருந்திருந்தால் அது யாருக்கும் தெரியாத கதையாகவே இருந்திருக்கும்.
 
ஜி.விஜயபத்மா  அவர்களின் மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு தங்கு தடையில்லாமல்  சின்ரன் பிரதிபலிக்கும் உணர்வுகளைப்  பேசுகிறது. எதிர் பதிப்பகத்தினர் இந்த புத்தகத்தை செவ்விய முறையில் வெளியீடு செய்திருக்கிறார்கள்'.
 
நன்றி
அம்ரிதா  அக்டோபர் இதழ்

3 கருத்துகள்: