புதன், 5 அக்டோபர், 2016

நான் கவிதைகளால் அறியப்பட்டவள்


தீவிர இலக்கிய உலகிற்கு யோகி என்பவளை கவிதைகள் தான் அறிமுகமாக்கின. கவிதைகள் அவளுக்கு இயல்பாக வந்துவிடவில்லை. உண்மையில் கவிதை யாரையும் இயல்பாக கண்டடைவதில்லை. அதற்காக ஒரு படைப்பாளன் தவம் கிடக்கிறான். அவனுக்கான நேரத்தை கவிதையே தெரிவு செய்கிறது. அது தனக்கான படைப்பாளனை தேர்ந்தெடுக்கிறது.
கவிதை என்னைத் தெரிவு செய்த ஒரு நாளில், என் மூலம் தன் குழந்தையை ஈன்றது. அதற்கு  ‘மகாத்மாவின் ஓவியம்’ என்று தலைப்பிட்டது. அந்த முதல் குழந்தை ‘காதல்’ என்ற மலேசிய சிற்றிதழில் பிரசுரமாகி என்னைக் கவிஞையாக அறிவித்தது.

அன்றிலிருந்து நான் மிக நிதானமாக கவிதைகளை எழுதத்தொடங்கினேன். எனது கவிதைகள் எதுவும் கற்பனையில் பிறந்த போலிகள் அல்ல. அவை அடுத்தவரின் அந்தரங்கத்தை, ரகசியத்தை, பொய்யை, பகட்டைப் பேசவில்லை.

எனக்கு நிகழ்ந்த அனுபவங்கள், என்னைப் பாதித்து பின் அவை கவிதை உருவம் பெறுகின்றன. அப்படிக் கவிதை, உருவம் பெறும்போது மற்றவரையும் சார்ந்தே அது பேசுகின்றன. அல்லது ஒரு வாசிப்பாளனுக்கு கவிதை ரசனைக்கொண்டவனுக்கு அக்கவிதையில் சிலாகிப்பதற்கு ஏதாவது விஷயம் இருக்கிறது. இதை எனது அனுபவத்தினுடே நான் கூறுகிறேன்.

கவிதையை எழுதுபவர்களுக்கும், ஏன் கவிதை எழுத வேண்டும் என்பவர்களுக்கும், பலகாரணங்கள் இருக்கலாம்.  நான் எதற்காகக் கவிதை எழுதுகிறேன் என்பது, இங்கு எனக்கு முக்கியமாக இருக்கிறது. இந்த உலகத்தில் கவிதையைத் தவிர வேறெதும் என்னை ஆசுவாசப்படுத்தியது இல்லை. அது கொடுக்கும் நிம்மதியை வேறெதிலும் நான் உணர்ந்ததில்லை. மனதில் சுமையென தேங்கும் அல்லது பறவையைப் போல குதூகலிக்கும் ஒவ்வொரு கணத்தையும் கடப்பதற்கு   எனக்குக் கவிதை ஒன்றே கை கொடுக்கிறது.

ஒரு கவிதையை எழுதி அதை செம்மை படுத்தி, புதுப்பித்து மீண்டும் படித்துப் பார்த்து பிறகு மீண்டும் செம்மைப்படுத்தி,  இப்படியான கூத்துகள்  எனக்கு அதிகம் நிகழ்ந்திருக்கின்றன. என்ன செய்ய  என்கவிதைகளோடு அலைந்து விளையாடுவதில் எனக்கு அலாதிப் பிரியம். தன் குழந்தையை அலங்கரித்து பார்க்க எந்தத் தாய்க்குதான் விருப்பம் இருக்காது?

இயற்கையின் தேடலோடு ஆர்வம் கொண்டதிலிருந்து இயற்கையை தவிர்த்து என்னால் எழுத முடியவில்லை. அப்படியாக உருவெடுத்தவள்தான் யட்சி. என் கவிதையில் வரும் யட்சியாக நானே இருக்கிறேன். மிக ரகசியமானவளாக வனங்களில் சுற்றிதிரியும் யட்சியாக நானே அலைகிறேன்.

யட்சியாக எனது சுதந்திரத்தை பேசுகிறேன். எனக்கு தேவையானதை நானே தேர்ந்தெடுக்கிறேன். பெற்றும் கொள்கிறேன். யட்சிகளின் வாழ்கையில் யாரும் அத்துமீறி நுழைவதில்லை.

இந்த தொகுப்பில் இருக்கும் கவிதைகளை அச்சில் ஏறும் முன்பே நானே படித்துப் பார்க்கிறேன். அது எழுதிய மனநிலையிலிருந்து கொஞ்சம் இறங்கி வாசிப்பு மனநிலைக்குப் போகும்போது கவிதைகளில் மாற்றம் தேவையாக இருந்தது. அந்த மாற்றங்களை செம்மை செய்துகொடுத்த கவிஞர்களுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் கவிதைகளால் அறியப்பட்டவள். நானே கவிதையானவள். நானே ரகசியமானவள். யட்சியும் நானே. இங்கு நான் என்பவள் சில வேளைகளில் நீங்களாகவும் இருக்கிறேன். எனது கவிதைகள் உங்களையும் பேசுகிறது.
நன்றி.

-யோகி  
(யட்சியின் என்னுரையிலிருந்து)


2 கருத்துகள்:

  1. கவிதை படைக்க கல்லூரி நாட்களிலிருந்தே எனக்கு ஆர்வம்.பின்னர் மாணவர் சங்க நிர்வாகியாக,அப்புறம் அரசு அலுவலராக,அ.ஊ.சங்க நிர்வாகியாக பணியாற்றிய போது அரசுப் பணிகளும்,தொழிற்சங்கப் பணிகளும் அதிகரித்தன.இதனால் கவிதை படைக்க அவகாசமும் முயற்சியும் அருகிப் போனது..ஆனால் தொழிற்சங்க மேடைகளில் ஒரு பேச்சாளராக மாறிப் போனேன்.மூத்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஆர்.நல்லகண்ணு ஒரே ஒரு நூல் எழுதியது இப்போது எனது நினைவுக்கு வருகிறது.கவிதை படைப்பவர்களை பெருமூச்சுடன் பார்க்கிறேன்.கவிஞருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு