சனி, 27 செப்டம்பர், 2014

மாதத்தீட்டு பெண்களை விலக்கி வைத்தது


மாதத்தீட்டு பெண்களை  விலக்கி வைத்தது


-யோகி

பெண்ணாய் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும்  உடல் ரீதியாக முதலில்  சந்திக்கும் பிரச்னை மாதவிடாய் பிரச்னைதான்.  பல பெண்கள் மாதவிடாய் சமயத்தில்  சுகாதார முறையைக் கடைப்பிடித்தாலும், இன்னும் பலர் சுகாதாரமற்ற போக்குடன்தான் இருக்கின்றனர். குறிப்பாக இந்தியப்பெண்கள்  மாதவிடாய் குறித்த விழிப்புணர்வற்றுதான் இருக்கின்றனர்.
மாதவிலக்கு சமயத்தில் சுகாதாரமற்ற முறையை பெண்கள் பின்பற்றுவதால், அவர்களின் அந்தரங்க உறுப்பில் நோய் தொற்றுவதற்கு 70 சதவிகிதம் வாய்ப்பு உள்ளதாக கடந்த வருடத்தில் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மாதவிடாயின்போது பெண்களுக்கு வலி, டென்ஷன் போன்றவை இருந்தாலும், அதிகமான பெண்கள், சிறுமிகள் உட்பட சங்கடப்படுவது  தன்னை சுத்தப்படுத்துவதற்காகத்தான்.  அவ்வப்போது சுத்தம் செய்ய அவர்களுக்கு ‘நாப்கினோ' அல்லது துணியோ  இல்லாதது முதற்காரணமாகப் கருதப்படுகிறது.
குறிப்பாக கம்பத்தில் அல்லது தோட்டத்தில் வசிக்கும் சில பெண்கள்,  மாதவிடாய் சமயத்தில் நாப்கின் பயன்படுத்தாமல்  துண்டு துணியைப் பயன்படுத்துவார்கள். அதன் பயன்பாட்டின் சுத்தம் சந்தேகத்திற்குரியதே. பொதுவாக நாப்கினை பயன்படுத்துபவர்கள் 4 மணி நேரத்திலோ அல்லது அதற்கும் குறைவான நேரத்திலோ நாப்கினை  மாற்றிவிட்டு,  உபயோகித்ததைத் தூக்கி எறிந்துவிடுவதால்  சுகாதாரரீதியில்  பிரச்னை குறைவுதான்.
ஆனால், இங்கே எம்மாதிரியான நாப்கின்களைப்  பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதும்  ஆராயவேண்டியுள்ளது.  வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருள்களுக்கும் சந்தையில் மவுசு அதிகம். அவர்களின் உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை  பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருள்களுக்கும்  பிராண்ட், திராண்ட் என நாளுக்கு நாள் புதுமை செய்யப்படுகின்றன. இந்த ஆதிக்கவாதிகள்  நாப்கினை விட்டுவைப்பார்களா  என்ன? ஒரு பாக்கெட் நாப்கின், 3 வெள்ளியிலிருந்து  50 வெள்ளிக்கும் அதிகமாகவும் அதன் பிராண்டைப் பொறுத்து  சந்தையில் விற்கப்படுகிறது.   செல்வந்தர்களின் தயாள குணத்தைப் பற்றி இங்கு  பேசத்தேவையில்லை. ஆனால், 3 வெள்ளி கொடுத்து நாப்கினை வாங்க வசதி இல்லாதவர்களும் இன்னும் நம்மத்தியில் இருக்கத்தானே செய்கிறார்கள்.  விலை மலிவான  நாப்கின்களில் இருக்கும்  ரசாயனங்கள் பிறப்புறுப்பில் அலர்ஜி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், வெள்ளைபடுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் புற்று நோய் என்று பல பிரச்னைகளை ஏற்படுத்த  வாய்ப்பிருக்கிறது.
மாதவிடாய் சமயத்தில் உபயோகப்படுத்தும் நாப்கினை வாங்குபவர்கள் அதன் காலாவதி தேதியைப் பார்த்து வாங்குவதில்லை. சில நிறுவனங்கள் அதுகுறித்த விவரத்தை வெளியிடுவதில்லை.  மாதவிடாய் ஏற்படும் பெண்கள் இதுபோன்ற விசயங்களில் கண்டிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.
முன்பெல்லாம் பெண்கள் 13 வயதிலிருந்து பூப்படையத் தொடங்குவார்கள். தற்போது 9-10 வயதுச் சிறுமிகள்கூட பூப்படைந்துவிடுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் ‘மெனோபாஸ்' அதாவது முதிய வயதில் மாதவிடாய் இயற்கையாக நிற்கும்வரை  கிட்டத்தட்ட 30 ஆண்டிற்கும் அதிகமாக நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். ரசாயனக் கலவையால் தயாரிக்கப்பட்ட நாப்கின்களைத் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது, அதன் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது.
அதைவிடவும், மாதவிடாய் குறித்த புரிதல்கள் சமூகத்தில் எப்படிப் பார்க்கப்படுகின்றன என்பதைச் சற்றுப்பார்ப்போம்? எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் பூப்பெய்த நாளில் துண்டு துணியைத்தான் பயன்படுத்த  எனக்குக் கொடுத்தார்கள்.   பள்ளியில் தோழிகள் மூலம்தான் நாப்கின்கள் எனக்கு அறிமுகமாயின. குறைந்த வருமானம் கொண்
ட எங்கள் குடும்பத்தில் தயங்கித் தயங்கி அம்மாவிடம் சொன்னேன், எனக்கு நாப்கின்கள் வேண்டும் என்று. அம்மா, அப்பாவிடம் சொன்னார். அப்பா தயங்கித் தயங்கி கடைக்காரரிடம் நாப்கினைக் கேட்டார். கடைக்காரரோ, கள்ளப்பொருளை பதுக்கி வைத்திருப்பதுபோல, ஏதோ ஒரு மறைவிடத்திலிருந்து நாப்கின் பாக்கெட்டை எடுத்து காகிதத்தில் சுற்றி, கருப்புப் பையில் போட்டு மிகவும் பௌவியமாக  அப்பாவிடம் கொடுத்தார். வீட்டில் அம்மா, அதை யார் கண்ணிலும் படாதவாறு   பதுக்கிவைத்தார்.  தம்பியின் கண்ணில் பட்டுவிட்டால், அவனுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது என்ற கவலை வேறு.  நாப்கினை தாண்டி உதிரப்போக்கு ஆடையில் பட்டுவிட்டால் அந்தப் பெண்ணும், அவளைச் சுற்றி இருப்பவர்களும் படும் பாடும்,  படுத்தும் பாடும்  அதையே ஒரு சமூக நாவலாகவும், பெண்ணிய நாவலாகவும் எழுதலாம்.
வீட்டில்தான் இப்படி என்றால், பள்ளிக்கூடத்தில் வேறுமாதிரியான சம்பவங்கள் நடக்கும்.  பள்ளிப்பை சோதனையில் சில வேளைகளில் மாணவிகளின் நாப்கின்கள் மாணவர்களின் கையில் அகப்படுவதுண்டு. அப்போது அவர்களின் நமட்டுச் சிரிப்பும், இது என்ன? என்று அவர்கள் கேட்கும் அறியாமையும் மாணவிகளைச் சங்கடத்தில் ஆழ்த்தும். சற்று விசயம் தெரிந்த  மாணவர்கள், கிண்டல் அடிப்பதும், ஜாடை பேசுவதும் மாணவக்குறும்பையும் தாண்டி மாணவிகளின் மண்டையை சூடேற்றும். படித்த இளைஞர்களுக்குக் கூட இவ்விசயத்தில் விழிப்புணர்வு இல்லாதது  மிகவும் வருத்தமான விசயம்தான்.
மாதவிலக்கு ஏற்பட்ட பெண்களை இயல்பாக இருக்க விடுவதற்கு அந்தப் பெண்ணைச் சார்ந்த பெண்களே அனுமதிப்பதில்லை. மாதவிலக்கு வந்த பெண்கள், கோயிலுக்குப் போகக்கூடாது. செடிக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது. சோபாவில் உட்காரக்கூடாது.  குழந்தைகளைத் தூக்கக்கூடாது. நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது.... இப்படியான சமூக நெருக்கடிகள் பெண்களின் இயல்பு மனநிலையைக் கெடுத்து விடுகின்றன.  விழா நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால், வீட்டு வேலைகளை விலக்கி விலக்கிச் செய்கிறாய், அதனால்தான் தீட்டுவந்து உன்னை விலக்கிவைத்து விட்டது என்று என் அம்மாவும், பாட்டியும் என்னை விழா சம்பந்தப்பட்ட எந்த வேலையையும் கொடுக்காமல் திட்டித் தீர்ப்பார்கள். அப்போது எனக்கு அறிவியல் தெரியாது. 28 நாள்களுக்குப் பிறகு மாதவிலக்கு என்பது பெண்களின் சீரான ஆரோக்கிய நிலை கொண்ட மாதவிலக்கு சக்கரம் என்று அன்று எனக்கு அவர்களுக்குச் சொல்லத்தெரியவில்லை.
 இங்கே பெண்களுக்கு மாதவிடாய் வந்தாலும், வராவிட்டாலும் சங்கடங்கள்தான் மிஞ்சுகின்றன.  ஒரு பக்கம் தீட்டு என்று பெண்களை ஒதுக்கும் அதே இந்திய சமூகம்,  மறுபுறம்  பூப்படைந்த  பெண்ணுக்கு சடங்கை   செய்வதற்கான காரியம் மட்டும் ஏன் என்ற குழப்பம் இன்னும் எனக்குள் இருக்கிறது.  


2 கருத்துகள்:

  1. நிறைய இதுகுறித்து இன்னும் விழிப்புணர்வு வேண்டும். நவீன யுகத்திலும் நாப்கின் நாச பொருளாகவே எண்ணப்படுதல் வருத்தத்தையே அளிக்கிறது. அதையும் தாண்டி ஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு இது கூடுதல் சுமை என்பது மன ரீதியாக யாரும் உணர்ந்து பார்க்க விரும்புவதில்லை.

    பொதுவாகவே மாதவிடாய் நேரங்களில் உடல் வலியும், ரத்த போக்கும், மனச் சோர்வும் நெருக்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஊட்டச் சத்துக்கள் போதுமான அளவு அளிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

    பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் சிறு வயதிலிருந்தே எழ ஆரம்பித்துவிடுவது மிக மிக சோகமான ஒன்றுதான். பருவம் வருவது பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும் அந்த பூவிலிருந்து ரத்தம் கசிவதை எந்த வண்டுகளும் அறிவதில்லை.

    இது தான் தலைவிதி, பழக்கமாகிவிட்டது, இப்படித்தான் என்று ரத்தக் கறைகளோடுதான் தங்களது வாழ்க்கை கரையில் அன்றாடம் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள் எனும்போது அதை புரியாத கேலி செய்யும் அனைவருமே ஒரு வகையில் நாப்கின்தான்....

    அருமை தோழி, பாராட்டுக்கள்... தொடருங்கள்...

    பதிலளிநீக்கு