செவ்வாய், 23 செப்டம்பர், 2014

தற்கொலைக்கு தூண்டும் தற்கொலைகள்

தற்கொலைக்கு தூண்டும் தற்கொலைகள்
     

      தற்கொலை செய்துகொள்வது உலக அளவில் அதிகரித்து வருவது வருத்தத்தைத் தருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  உலக அளவில் மாரடைப்புக்குப் பிறகு மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைவது தற்கொலைதான்  என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு  தற்போது நமக்குக் கொடுக்கிறது. உலகமுழுவதும் ஏறக்குறைய 10 லட்சம் பேர் தற்கொலையால் மரணமடைகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலையும் அது சொல்கிறது. நமது நாட்டை பொறுத்தவரை  2011-ஆம் ஆண்டு சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி ஒரு வருடத்தில்  300-க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
     அதேவேளையில்,  தற்கொலை செய்துக்கொள்ள  1.7 விழுக்காட்டினர் எண்ணம் கொள்கிறார்கள் என்றும், தற்கொலைக்கு  0.9 விழுக்காட்டினர்  திட்டமிடுகிறார்கள் என்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் 0.5 விழுக்காட்டினர் என்றும்   மலேசிய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. 
இந்தியர்களைப் பொறுத்தவரை தற்கொலைக்கென்று ஒரு வரலாற்று பதிவே இருக்கிறது என்று இணையத்தள செய்திகளும் பதிவுகளும் நமக்கு உணர்த்துகின்றன. உண்மைதான்.  கணவன் இறந்துவிட்டால் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம் பெருமைக்குரிய விஷயமாக நமக்கு இருந்திருக்கிறது அல்லவா?  என்னைப் பொறுத்தவரையில் அதற்குப் பெயர் கொலை என்பேன். ஆனால், அதை  தற்கொலை என்றுகூட ஏற்றுக்கொள்ளாத விதண்டாவாதிகள் நம்மத்தியில் இருக்கவே செய்கிறார்கள். உடன்கட்டை ஏறிய தர்ம பத்தினிகள் தெய்வங்களுக்கு நிகரானவர்களாம்.  பெண்களும் தனது மூடிய வாயைத் திறக்காமல்  நெருப்பிற்கு சாம்பலாகிப் போனார்கள். உண்மையில் இவர்கள்தான் மகா மகாக்கோழைகள் என்பேன் நான்.
அதோடு, மன்னருக்காக உயிரைவிடுவது  இந்தியக் கலாச்சாரத்தில் தியாகமாகவே  கருதப்பட்டு வந்திருக்கிறது.
    அதற்குப் பழந்தமிழ் இலக்கியங்களே நமக்கு சாட்சியாக இருக்கின்றன. வீரர்கள் தங்களின் ராஜ விசுவாசத்தைக் காட்ட ஆறு விதமான தற்கொலை முயற்சிகளை  வரையறுத்து வைத்துள்ளார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகளும் நமக்கு இருக்கின்றன. தொல்காப்பியத்தில்கூட அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. போர்களில் தோற்றுப்போகும் போது, அந்த அவமானத்தை போக்கிக்கொள்ள அல்லது அதற்குத் தண்டனையாக தங்கள் தலைமுடியாலேயே கழுத்தை இறுக்கித் தற்கொலை செய்துகொள்வது தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்திருக்கிறது என்று இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, தங்கள் தளபதியின் வெற்றிக்காகவும் பலவீரர்கள், நேர்ந்துகொண்டு  உயிரை மாய்த்துக்கொள்வார்களாம். தற்கொலைகள் அல்லது கொலைகளை மிக சாதூர்யமாக புனிதப்படுத்தப்பட்ட  சில உதாரணங்கள் இவை. இந்தியாவில், இன்னும் தொடர்ந்துவரும் தொண்டர்கள் தீக்குளியல் அதன் தொடர்ச்சிதான் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 
     இன்று உலகளவில் தற்கொலைகள் ஒரு டிரெண்ட் அளவுக்கு பெருகிவருவது  அதிர்ச்சி மட்டுமல்ல, வருத்தமான செய்தியாகவும் இருக்கிறது. உலகில் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்ற செய்தியும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.  உலகப் புகழ்பெற்ற பிரபலங்களின் தற்கொலைகளில் ஆகக் கடைசியாக  ஹாலிவுட் நடிகர் ரோபின் வில்லியம்ஸின் தற்கொலை நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் தகவல் செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  இதுகுறித்துப்  பேசிய இந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மார்கரேட் சான், தற்கொலை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் அதிகமாக வெளியிடுவதால், அதைப்பார்த்து பலருக்குத் தற்கொலைக்கு முயற்சிக்கும் எண்ணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உண்மையில் தற்கொலைகளைத் தடுக்க முடியும். இதற்குச் சம்பந்தப்பட்ட நாடுகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும். சமுதாயத்தின் பெரும் பிரச்னையாக தற்கொலை உள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்று சான் கூறியுள்ளார்.
மொத்தம் 172 நாடுகளிடம் தற்கொலைப் பற்றிய விவரங்களைத் திரட்டி இந்த ஆய்வறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    பூச்சி மருந்து அருந்தியும், தூக்கில் தொங்கியும் உயிரை மாய்த்துக்கொள்வது உலகளவில் அதிகமாக நடக்கிறது. ஆசிய நாடுகளின் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் அடுக்குமாடி கட்டடங்களின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை  அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. உலகளவில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்வதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 
இந்நிலையில்  தற்கொலைகள் வேகமாக பெருகிவருவதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்குண்டு என்று பரவலாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, பிரபலங்களின் தற்கொலைகளை ஊடகங்கள் கொண்டாட்ட மனநிலையிலேயே பிரசுரிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதாவது  பிரபலம் மரணத்தை தழுவியபிறகு அச்சு ஊடகங்களும், ஒளி ஊடகங்களும் ஒரு கவர்சிகரமான நிகழ்வை சித்தரிப்பதுபோல் அரங்கேற்றுகிறார்கள். அவர்களின் அந்தரங்கத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.  இன்னும் அழுத்தமாகச் சொன்னால் அவர் எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்பதை, காட்சிக்கு காட்சி வரைப்படத்தை வரைந்து ஒரு கையேடு அளவுக்கு காட்சிப்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மனசாட்சியுள்ள  ஊடகங்களாலும் மறுக்க முடியாது.  தற்கொலை மனநிலையிலிருந்து  மனதை அலையவிட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் இந்த செய்திகளைப்  பார்க்கும்போது, அவர் மனம் நேரடியாக தற்கொலையை நோக்கிச் செல்லும் என உலவியலாளர்களால் கூறப்படுகிறது.

   தற்கொலைகளைத் தடுப்பதில் ஈடுபடும் அனைத்துலக சங்கம், தற்கொலைப் பற்றி செய்தி வெளியிடும்போது,  தோல்வி என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்கிறது. மேலும் தற்கொலைப் பற்றிய செய்திகளை எழுதும்போது வெற்றிகரமான தற்கொலை என்றும் தற்கொலை முயற்சி தோல்வியடைந்தது  என்றும் படிக்கும் வாசகர்களுக்கு  எதிர்மறையான எண்ணத்தை வெளிப்படுத்தும் என்று அந்தச் சங்கம் கோடிகாட்டியுள்ளது. மனநல வல்லுநர்களோ தற்கொலைப் பற்றிய செய்திக்கே ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்று  சொல்கிறார்கள். 
நமது நாட்டைப் பொறுத்தவரை  2013-ஆம் ஆண்டு 13-வது தேர்தலுக்கு முன் எடுக்கப்பட்ட தற்கொலை கணக்கெடுப்பில் மூன்று ஆண்டுகளில் 1,156 பேர் தற்கொலை செய்துகொண்டது பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதில் அதிகமானவர்கள் 24 வயதிலிருந்து 44 வயதுக்குட்பட்டவர்களாவர். உலகக் கணக்கெடுப்பில்  தற்கொலை செய்துகொள்வது  அதிகமாக ஆண்களாக இருந்தாலும், நமது நாட்டில் பெண்கள்தான் அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்களாம். இனரீதியாக பார்க்கும்போது சீனர்கள் 48 சதவிகிதமும், இந்தியர்கள் 21 சதவிகிதமும், மலாய்க்காரர்கள் 16 சதவிகிதமும், பிற இனத்தவர்கள் 13 சதவிகிதமும்  உயிரை மாய்த்துக்கொள்வதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. 
தற்கொலை நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் சட்டரீதியில் குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர். அவர்களுக்கு எவ்வாறான  தண்டனை கிடைக்கிறது என்றும் அவர்களுடனான விசாரணை எவ்வாறு வகை செய்கிறது என்றும்   பிரபல வழக்கறிஞர் மனோகரன் மலையாளத்தை சந்தித்தபோது...
வழக்கறிஞர் மனோகரன்

    பீனல் கோர்ட் 309 சட்டத்தின்படி, தற்கொலைக்கு முயற்சிப்பவர் மீது அதிகபட்சம் ஒரு வருட சிறைத் தண்டனையும், அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்க சட்டம்  வகை செய்கிறது. உண்மையில் தற்கொலைக்கு  முயல்பவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதால் அவர்களுக்குத் தேவை தண்டனை அல்ல;  மனநல ஆலோசனைதான். அந்த வகையில் நமது அரசாங்கம்  தற்கொலைக்கு முயற்சிப்பவரின் நிலையறிந்து  உதவிகளைச்  செய்துவருவது வரவேற்கக்கூடியது.
  
    தற்கொலைக்கு முயற்சித்தவர்களும்  போலீஸ் பிரச்னையிலிருந்து தப்புவதற்காகக் கவனக்குறைவால் நடந்துவிட்டதைப் போலவும், விபத்தைப்போலவும் கூறிதப்பிக்கொள்கின்றனர்.  என்னைப் பொறுத்தவரையில் தற்கொலை சிந்தனையில் இருப்பவர்களுக்குத் தேவை மனநல ஆலோசனைதான்” என்றார்.
  
   கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி  உலக தற்கொலைத் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.  தற்கொலை என்பது இறப்புகளுக்கான காரணத்தில் 13-வது  இடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்திருந்தது.  சிலரின் தற்கொலைக்குக் காரணம் தெரியும் வேளையில், பலரின் தற்கொலைகள்  மர்ம முடிச்சாகவே புதைகுழியில் அடக்கம் செய்யப்படுகின்றன. 

1 கருத்து:

  1. Economic/Social/family/racial/religious or physical/psycological problems were reasons for Suicides! Govts & NGOs shd find out & help yo prevent this! Info/guide/advice/communication Canals shd be established!

    பதிலளிநீக்கு