சனி, 25 ஆகஸ்ட், 2018

'நயனம்' உறங்கியது


நீங்கள் தோழியா யோகியா? ராஜகுமாரன் சார் இப்படித்தான் என்னைப் பார்க்கும்போதெல்லாம் உரையாடலைத் தொடங்குவார். அதற்குக் காரணம் ஒன்றுதான். சந்துருவுடைய மனைவி யார் என்ற குழம்பம் மட்டுமே. சந்துருவுடைய உயிர்த் தோழியான தோழியும் -மனைவியான யோகியும் அவருக்குப் பிரித்து பார்க்கத் தெரியவில்லை. இந்தக் குழப்பம் நான் இறுதியாக அவரைச் சந்திக்கும் வரைக்கும் இருந்தது.
தனது சகோதரரான ஆதிகுமணன் (சார்) இறந்த பிறகுதான் அதுவரை ராஜகுமாரன் என்று இருந்த தனது பத்திரிகைகான பெயரை ஆதிராஜகுமாரன் என மாற்றிக்கொண்டார். மேலும், அதன்பிறகே அவர் தனது இருப்பைப் பல இடங்களில் காட்டவும் தொடங்கினார்.

25.8.2018 உண்மையில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை ன்றைய நாள் கருப்பு தினம்தான். சந்துருவுக்கு நான் அறிமுகமாகியிருந்த நாளிலிருந்து இன்றுவரை ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சந்துருவுடைய கடந்த காலத்தைப் பேசும்போது அதில் ராஜகுமாரன் சார், வித்தியாசாகர் சார், என்று இன்னும் சிலர் தவிர்க்க முடியாமல் எங்கள் உரையாடலில் பங்காற்றிக்கொண்டே இருக்கிறார்கள். சந்துரு தன் இளவயதில் இழந்த அனுபவித்த அனைத்தையும் நகைச்சுவையாகச் சொல்லி அவரும் சிரித்து எங்களையும் சிரிக்கவைத்து கடந்து போவார். அதுதான் அவருடைய பாணி. பதின்ம வயதில் 8 ஆண்டுகள் தான் தங்கியிருந்த ராஜகுமாரன் சாருடைய வீட்டுக்கு இன்று என்னை அழைத்துபோனார். முதல்முறையாக நான் அங்குப் போகிறேன். சாருடைய ஒரே மகள் சாரதாவை மட்டும்தான் எனக்கு அங்குத் தெரியும். தன் தந்தை மறைந்துவிட்டதை முகநூலில் அப்போதுதான் அவர் பதிவேற்றம் செய்திருந்தார். என்னை 'அண்ணி' என எங்குப் பார்த்தாலும் அழைக்கும் அந்த அன்பானவளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் எனத் தடுமாற்றம் எனக்கு இருந்தது. சந்துருவுக்கும் அப்படியான தடுமாற்றம் இருந்திருக்கலாம்.

சகோதரி சற்குணம்

நான்கைந்து பேர் முன்வாசலில் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மலர் கொத்துகள் வாசலில் இருந்தன. இரங்கல் தெரிவிக்கும் குறிப்பு புத்தகம் ஒன்றும் அங்கும் இருந்தது. வாசலைக் கடந்து உள்ளே சென்றோம். அங்குதான் அவர் மீளா உறக்கத்தில் இருந்தார். வாழைப்பழத்தில் குத்தியிருந்த ஊதுவத்தி புகை ஏதேதோ வடிவத்தைக் காட்டி காற்றில் கலந்துகொண்டிருந்தது. துயரமான பழைய பாடல்கள் மெல்ல ஒலித்துக்கொண்டிருந்தது. சாரதா உறங்கும் தனது தந்தையைப் பார்த்தபடி இருந்தார். எங்களைப் பார்த்ததும் கைநீட்டி வரவேற்றார். சந்துரு சாரதாவை ஆறுதலாகப் பற்றிக்கொண்டார். இவர்தான் அண்ணனின் மனைவி எனத் தனது அம்மாவுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார் சாரதா. எனக்குத் துக்க நிகழ்வுகளில் எப்படி ஆறுதல் சொல்வதென இப்போதுவரையிலும் தெரியவில்லை. தந்தையை இழந்த வலி யாரைவிடவும் நான் அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன். எந்த ஆறுதலும் அதற்கு மருந்து போடாது. அதைக்காட்டிலும் அமைதியாக இருந்துவிடுவவே நல்லது. சாரதாவைக் கையை பற்றி  ஆறுதலாக முத்தம் கொடுத்தேன். எனக்குத் தெரிந்தது அது மட்டும்தான்.

ஆதி ராஜகுமாரன் சார், தூக்கத்திலேயே இறந்துவிட்டார் என்று சொன்னார்கள். அவருக்கு உடல்நல குறைபாடும் இருந்திருக்கிறது. அதற்காக அவர் அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருக்கிறார். மலேசியர்களுக்கு ஆதிகுமணன் சார், இவருடைய சகோதரர் என்று மட்டுமே தெரியுமே தவிர அதைத்தாண்டி இவரின் பின்னணி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதைச் சொல்வதற்கு அவர் விரும்பியதும் இல்லை. எப்போதும் ராஜகுமாரன் சார் பின் இருக்கையிலேயே இருந்து ரசிக்க விரும்புபவர். இலக்கியத்திற்காக அவர் ஆற்றும் பணிக்கு தனது பெயரை குறிப்பிடுவதற்குக் கூட கூச்சப்படும் மனிதராகத்தான் நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.


8 பேர் கொண்ட உடன்பிறப்புகளில் ஆதிராஜகுமாரன் சார் மூன்றாவது குழந்தை. ஆதிகுமணன் சார் நான்காவது. இவர்கள் இருவருக்கும் மூத்தவரான சகோதரி சற்குணத்தை அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர்கள் மூவருக்கும் மூத்தவர் காலமாகிவிட்டார். இவர்கள் நால்வருக்கும் கீழே இருக்கும் இருக்கும் இளையவர்கள் நால்வரும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சகோதரி சற்குணம் அசைவற்றிற்கும் தன் சகோதரரின் முகத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருக்கிறார். யாரும் கேட்கும்வரை தான் யார் என யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. மனமுடைந்திருக்கும் ராஜகுமாரன் சாருடைய மனைவி "இந்த வீட்டில் பிள்ளைபோல இருந்தான்" என சந்துருவை காட்டி சகோதரி சற்குணத்திடம் கூறினார்
"8 ஆண்டுகள் இங்கே இருந்திங்கன்னு சொன்னிங்களே, சாரின் சகோதரியைத் தெரியாதா?" என்று கேட்டேன்
. 
ஆதிகுமணன் சார்

"இல்லை, இவரைப் பார்த்ததில்லை" என்று சந்துரு சொன்னார்.

நயனம் வார இதழ் மலேசியாவில் 1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  90-களிலிருந்து ஆதிகுமணன் சார் இறக்கும்வரை விற்பனையிலும் அதன் தரத்திலும் உயர்ந்தே இருந்தது. ஸ்மார்ட் தொலைப்பேசி இல்லாத காலக்கடத்தில் வாசிப்பு மட்டுமே முக்கிய பொழுதுபோக்காக இருந்ததில் பஸ்சில் பயணம் செய்பவர்கள் நிச்சயமாக வாங்குவது இரண்டு பத்திரிகைகள். ஒன்று வானம்பாடி மற்றது நயனம். ஆதிகுமணன்  சார் மறைவிற்குப் பிறகு மலேசிய தமிழ் பத்திரிகை உலகமே ஆட்டம்கண்டது. எதிர்பாராத திருப்பங்கள் அதிர்ச்சிகள்  நாளுக்கு நாள் பத்திரிகை சார்ந்தவர் எதிர்கொண்டார்கள். பல பிளவுகள்  நடந்தன. நம்ப முடியாத பல திருப்பங்கள் நடந்தது. நிறைய ஏமாற்றங்கள் வெளிப்படத்தொடங்கின. அதில் சில பத்திரிகைகள் நிரந்தரமாக மூடப்பட்டன. ஆதிகுமணன் சார் ஆதரவில் எம்.துரைராஜ் சார் ஆசிரியராகக் கொண்டு நடந்துகொண்டிருந்த 'இதயம்' மாத இதழ் நிரந்தரமாக மூடப்பட்டது. 'நயனம்' வார இதழ் அதன் வடிவமைப்பு மாற்றப்பட்டது. என்ன காரணம் அதற்கு எனத் தெரியவில்லை. ஆனால் அந்த மாற்றத்திற்குப் பிறகு 'நயனம்' அதன் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்தது. கடைகளில் 'நயனம்' கிடைக்காமல் போனது அதன் வாசகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பின் நயனமும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. ராஜகுமாரன் சார் ஒரு சிறுகதை தொகுப்பையும் வெளியீடு செய்திருக்கிறார். "பத்திரிகையாளராக அவர் மாறிய பிறகு மலேசிய படைப்புலகம் ஓர் எழுத்தாளனை இழந்திருந்தது" என சந்துரு சொன்னதை நான் இங்கு நினைவு கூற விரும்புகிறேன். பத்திரிகையில் யார் யாரோ எப்படியெல்லாமோ பணம் சேர்த்திருக்கிறார்கள். கதைகள் பல உண்டு. ராஜகுமாரன் சார் அதில் விதிவிலக்காக இருந்திருக்கிறார் என்பது அவரைத் தெரிந்தவர்களுக்கும் தெரியும். நான் அங்கிருந்து கிளம்பும்போது 'சல்த்தே! சல்த்தே' எனப் பழைய இந்தி பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. சந்துருவை பார்த்தேன். அவருக்குப் பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். கேசட், சிடி என புதிய விஷயங்கள் வர வர அதைக் காலத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டு அவர் பாடல்களை ரசிப்பார் என்றார். சந்துருவை அழைத்து அவர் மனைவி காதோரம் மெல்லச் சொன்னார் அவர் பாடலையும் பாடுவார் உனக்கு நினைவிருக்கிறதா என.

ராஜகுமாரன் சார் நினைவுகளை சந்துரு தவிர வேறு யாரால் சேமித்துவைத்திருக்க முடியும்..

செவ்வாய், 24 ஜூலை, 2018

டுரியான் பாலியலுக்கான பழம் அல்ல.. அது பழங்களில் ராஜா

மலேசியாவில் விற்கப்படும் மிகப் பிரபலமான டுரியான் வகைகளில் மூசாங் கிங் முதல் தரமாகும். 1 கிலோ 35 ரிங்கிட்டிலிருந்து (முள்ளோடுதான் எடை போடுவார்கள்) சந்தையில் விற்கப்படுகிறது. அதனையடுத்த GOLDEN PHOENIX, XO, D24, D13, D1, D101, RED PROWN, GREEN BAMBOO, BLACK PEARL உள்ளிட்ட ரகங்கள் அடுத்தடுத்த நிலையில் விற்கப்படுகின்றன. இதைத் தவிர்த்து மலேசியாவில் 100-க்கும் அதிகமான அனுமதிக்கப்பட்ட க்ளோன் செய்யப்படும் டுரியான்கள் இருக்கின...்றன.

க்ளோன் செய்யப்படும் டுரியான்களில் மிகவும் பிரபலமாக விற்கப்படும் 10 வகைகளைப் படத்தில் இணைத்துள்ளேன்.  டுரியான் என்றால் உயிரைவிடும் அளவுக்கு நான் அதன் பிரியை அல்ல. கொஞ்சம் ஆசைக்குச் சாப்பிடும் ரகம்தான். பழமாக மட்டுமே எனக்குச் சாப்பிட பிடிக்குமே தவிர அதில் வேறு என்ன செய்தாலும் சாப்பிட பிடிக்காது . டுரியான் சுவையை பயன்படுத்தி ஐஸ் கிரீம், கஞ்சி,மிட்டாய்கூடச் செய்யலாம்.

தமிழ் நாட்டிலிருந்து வருபவர்கள் அதைக் குழந்தை வரம் கொடுக்கும் பழமாகச் சொல்லி கேட்பதுதான் எனக்கு ஆச்சரியமாகவும் சில சமயம் அருவருப்பாகவும் இருக்கிறது. டுரியான் பழம் உடம்புக்கு சூட்டை கொடுக்கும் எனச் சொல்வார்கள். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும் அல்லது வேறு அதாவது ஒவ்வாத சாப்பாடை அதனோடு சாப்பிட்டாலும் மரணம் கூட நிகழ்ந்துவிடும். இதையெல்லாம் பேசாமல் அதுவே குழந்தையை வரமாகக் கொடுத்துவிடுவதுபோல நம்ம ஆளுங்க பேசும் பேச்சு இருக்கே?







கொடுக்கும் மனம் இருக்குமா ?

ரசாயனமில்லாத பழங்கள் எத்தனைச் சுவையானதாக இருக்கிறது? வீட்டுச் சூழலில் வளர்க்கப்பட மரங்களின் பழங்கள் வேறு எங்கும் கிடைக்காது என்ற சூழலில் யாரிடமாவது கேட்கலாம் எனத் தேடினோம். ஒரு மலாய்கார அம்மாவிடம் கேட்டோம். தனது தோட்டத்தை திறந்து விட்டு, அவர் அமர்ந்துகொண்டார். உள்நாட்டுப் பழங்களாக இருந்தாலும் சில பழங்களின் மரங்கள் எப்படி இருக்கும் என்றுகூடப் புறநகர் வாசிகளுக்குத் தெரியாது. அங்கே 10-க்கும் மேற்பட்ட பழமரங்கள் இருந்தன. அந்த அம்மா எங்களுக்கு எந்த நிபந்தனையும் கூறவில்லை. "எவ்வளவு... வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு காசு கூட வேணாம், எவ்வளவு தொலைவிலிருந்து வந்திருக்கீங்க? என்னுடைய அன்பளிப்பு" என்கிறார்.

மனித நேயம் செத்துக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கடத்தில் இன்னும் இந்த மாதிரியான மனசு இருக்குமா? அதுவும் வேற்று இனத்தவருக்கு அவரால் எப்படி முழு மனசோடு தனது தோட்டத்தை நம்பிக்கையுடன் திறந்து விட முடிந்தது? நேற்று அவர் தோட்டத்தில் நாங்கள் பறித்த பழங்களைப் பட்டணத்தில் வாங்கினால் 100 வெள்ளிக்கு மேலேயே ஆகியிருக்கும். அந்த அம்மாவோ நாங்கள் கொடுத்த கொஞ்சோண்டு பணத்தையும் வேண்டாம் என்பதுடன் அம்மா இதை அன்பாகக் கொடுக்கிறேன். இதற்கு பணம் கொடுக்கலாமா என்றார்.
மனம் நெகிழ்ந்து போனேன் நான். அவரிடம், பிள்ளைகளும் உங்களுக்கு அன்பாகத்தானே தருகிறோம் அம்மா எனக் கூறி விடைபெற்றோம்.

இந்த நல்ல மனதை இன்னொரு இடத்தில் சோதித்தால் என்ன ?
டுரியான் பழங்கள் தொங்கிக்கொண்டிருந்த அந்த வீட்டிலிருந்த அம்மாவிடம் பழங்களை பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறோம் என்றோம். இல்லை இந்த மரத்தில் இருக்கும் அனைத்து பழங்களையும் என் பிள்ளைகளுக்குதான் கொடுப்பேன். எனக்கு நிறையப் பிள்ளைகள். மேலும் அதுவே விழும்வரை காத்திருக்கனும். எனவே உங்களுக்குக் கொடுக்க முடியாது. மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார். பரவாயில்லை. நல்ல காய்கள் மரத்தில் பார்த்தோம். அதற்காகத்தான். கோலம்பூரில் அதிகவிலைக்கு விற்கிறார்கள். இங்கு மலிவாகக் கிடைக்கும் என நினைத்தோம். அதான் கேட்டு பார்த்தோம்.

 நீங்க அவ்வளவு தொலைவில் இருந்து வறீங்களா..? நான் என்ன செய்வது. கொஞ்சம் இருங்கள். இது என் மகளுக்காக வைத்திருக்கும் டுரியான் பழம். நீங்க இதைக் கொண்டு போங்க என்றார். பணம் எவ்வளவு என்றோம்.. என் பிள்ளைகளிடம் நான் பணம் வாங்க மாட்டேன். கவனமாகப் பட்டணம் போய்ச் சேருங்கள் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார் அந்தத் தாய்.
என் நாட்டில் இத்தனை நல்லவர்கள் இருக்கிறார்களா? எனக்கு இங்கு ஒரு கேள்வி எழுந்தது. இன்றைய தலைமுறையினருக்கு அடுத்தவருக்குப் பிரதிபலனில்லாமல் கொடுக்கும் மனம் இருக்குமா ?