செவ்வாய், 24 ஜூலை, 2018

கொடுக்கும் மனம் இருக்குமா ?

ரசாயனமில்லாத பழங்கள் எத்தனைச் சுவையானதாக இருக்கிறது? வீட்டுச் சூழலில் வளர்க்கப்பட மரங்களின் பழங்கள் வேறு எங்கும் கிடைக்காது என்ற சூழலில் யாரிடமாவது கேட்கலாம் எனத் தேடினோம். ஒரு மலாய்கார அம்மாவிடம் கேட்டோம். தனது தோட்டத்தை திறந்து விட்டு, அவர் அமர்ந்துகொண்டார். உள்நாட்டுப் பழங்களாக இருந்தாலும் சில பழங்களின் மரங்கள் எப்படி இருக்கும் என்றுகூடப் புறநகர் வாசிகளுக்குத் தெரியாது. அங்கே 10-க்கும் மேற்பட்ட பழமரங்கள் இருந்தன. அந்த அம்மா எங்களுக்கு எந்த நிபந்தனையும் கூறவில்லை. "எவ்வளவு... வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு காசு கூட வேணாம், எவ்வளவு தொலைவிலிருந்து வந்திருக்கீங்க? என்னுடைய அன்பளிப்பு" என்கிறார்.

மனித நேயம் செத்துக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கடத்தில் இன்னும் இந்த மாதிரியான மனசு இருக்குமா? அதுவும் வேற்று இனத்தவருக்கு அவரால் எப்படி முழு மனசோடு தனது தோட்டத்தை நம்பிக்கையுடன் திறந்து விட முடிந்தது? நேற்று அவர் தோட்டத்தில் நாங்கள் பறித்த பழங்களைப் பட்டணத்தில் வாங்கினால் 100 வெள்ளிக்கு மேலேயே ஆகியிருக்கும். அந்த அம்மாவோ நாங்கள் கொடுத்த கொஞ்சோண்டு பணத்தையும் வேண்டாம் என்பதுடன் அம்மா இதை அன்பாகக் கொடுக்கிறேன். இதற்கு பணம் கொடுக்கலாமா என்றார்.
மனம் நெகிழ்ந்து போனேன் நான். அவரிடம், பிள்ளைகளும் உங்களுக்கு அன்பாகத்தானே தருகிறோம் அம்மா எனக் கூறி விடைபெற்றோம்.

இந்த நல்ல மனதை இன்னொரு இடத்தில் சோதித்தால் என்ன ?
டுரியான் பழங்கள் தொங்கிக்கொண்டிருந்த அந்த வீட்டிலிருந்த அம்மாவிடம் பழங்களை பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறோம் என்றோம். இல்லை இந்த மரத்தில் இருக்கும் அனைத்து பழங்களையும் என் பிள்ளைகளுக்குதான் கொடுப்பேன். எனக்கு நிறையப் பிள்ளைகள். மேலும் அதுவே விழும்வரை காத்திருக்கனும். எனவே உங்களுக்குக் கொடுக்க முடியாது. மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார். பரவாயில்லை. நல்ல காய்கள் மரத்தில் பார்த்தோம். அதற்காகத்தான். கோலம்பூரில் அதிகவிலைக்கு விற்கிறார்கள். இங்கு மலிவாகக் கிடைக்கும் என நினைத்தோம். அதான் கேட்டு பார்த்தோம்.

 நீங்க அவ்வளவு தொலைவில் இருந்து வறீங்களா..? நான் என்ன செய்வது. கொஞ்சம் இருங்கள். இது என் மகளுக்காக வைத்திருக்கும் டுரியான் பழம். நீங்க இதைக் கொண்டு போங்க என்றார். பணம் எவ்வளவு என்றோம்.. என் பிள்ளைகளிடம் நான் பணம் வாங்க மாட்டேன். கவனமாகப் பட்டணம் போய்ச் சேருங்கள் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார் அந்தத் தாய்.
என் நாட்டில் இத்தனை நல்லவர்கள் இருக்கிறார்களா? எனக்கு இங்கு ஒரு கேள்வி எழுந்தது. இன்றைய தலைமுறையினருக்கு அடுத்தவருக்குப் பிரதிபலனில்லாமல் கொடுக்கும் மனம் இருக்குமா ?
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக