திங்கள், 7 நவம்பர், 2016

சாதியமே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது..!
















ஆதவன் தீட்சண்யாஒரு சராசரி மனித நிலையில் இருந்துகொண்டு, அதையும் தாண்டி சிந்திக்ககூடியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழ் ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஒன்றி இயங்கி வருகிறார். சாதி மறுப்பு இலக்கியம் என்கிற வகைமையை முன்னெடுக்க விரும்பும் இவரது கணக்கில் இருப்பவை கதை, கவிதை, கட்டுரை நேர்காணல் மற்றும் நாவல் என 14 நூல்கள்.  
நம் முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன, கடுகளவேனும் செய்து கொண்டிருக்கிறோமா எனும் ஆதவன் தீட்சண்யா(அண்ணா)விடம் நான் செய்யும் இரண்டாவது நேர்காணல் இது என்பது குறிப்பிடதக்கது.

மலேசியாவுக்கு இது உங்களின் நான்காவது பயணம்இந்த நாட்டைப் பற்றிய உங்களது பார்வை என்ன?

நான்கு முறை வந்திருக்கிறேன் என்றாலும் ஒரு நாட்டைப் பற்றி அபிப்ராயம் சொல்லுமளவுக்கு இங்கு எதையும் உற்று கவனித்திருக்கிறேனா என்கிற சந்தேகம் எனக்குள்ளதுஅழைத்துவந்த நண்பர்கள் கூட்டிப்போகும் இடங்களையும் மனிதர்களையும் பார்த்தேன் என்பதன்றி சுயேச்சையாக நான் எதையும் யாரையும் பார்க்கவில்லை என்கிற உண்மையை கணக்கில் கொண்டால் இந்த சந்தேகம் சரியெனவேப்படுகிறது. ஆனால் எடுத்தயெடுப்பில் சொல்வதானால், மிக அழகான இயற்கையமைப்பைக் கொண்டதாக தெரிகிறது மலேசியா. எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும் சாப்பாட்டுக்கடைகள், அவற்றில் நிரம்பி வழியும் கூட்டம், வகைவகையான உணவுவகைகளையும் பானங்களையும் கொண்டாடி உண்ணும் ரசனை, ஒருவரை பார்த்ததும் பசியாறியாச்சா?’ என்று விசாரிக்கும் உபசரணை என்று எனக்கு பிடித்த விசயங்கள் அநேகம் உள்ளன.

தலைநகரத்திலும் நாடு நெடுகிலும் அகன்று நீண்டிருக்கும் நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், தொடர்வண்டிப்பாதைகள், கார் உள்ளிட்ட வாகனங்கள், விண்ணை முட்டும் கட்டிடங்கள், பிரமிப்பூட்டும் வணிகப் பெருவளாகங்கள் ஆகியவையெல்லாம் ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டால் உங்கள் நாடு வளர்ந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஆனால் இந்த வளங்கள், சொத்துகள், கட்டமைப்புகள், வசதிகள், அதிகாரங்கள் போன்றவற்றை நீதியாக பகிர்ந்து கொள்வதை நோக்கி உங்கள் சமூகம் இன்னமும் முன்னேறவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அதற்கான கருத்துருவாக்கம் மற்றும் செயலாக்கத்தில் அக்கறையோடு ஈடுபடும் அமைப்புகளைக் காண்பதும் அரிதாகவே இருக்கிறது

பொதுவெளியில் பெண்களின் நடமாட்டத்தை பெருமளவில் காணமுடிகிறது. இது பெண்கள் சுயேச்சையாக தேர்ந்துகொண்டதா அல்லது பெருகிவரும் வாழ்க்கைச் செலவினங்களை ஈடுகட்டும் வகையில் குடும்ப வருமானத்தைப் பெருக்குவதற்கான கட்டாயத்தில் ஏற்றுக்கொண்டதா என்பதை நீங்கள்தான் சொல்லமுடியும்.

பல்லினங்கள் வாழும் மலேசியச் சமூகத்தில் அவ்வவற்றுக்குள்ளும் அவற்றுக்கிடையிலுமான இணக்கமும் பிணக்கும் எவற்றின் அடிப்படையிலானது,   அவற்றினூடாக உங்கள் சமூகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் சொல்வதற்கு எனது விருந்தாளிப் பயண அனுபவங்கள் போதுமானவையல்ல.

சிறுகதை, கட்டுரை, கவிதைகள்புதுவிசை ஆசிரியர் குழுவில் அங்கம் என  தொடரும் உங்கள் பணிகளில் பேச்சாளராகவும் களப்போராளியாகவும் இருக்கீங்க. எழுதுவதற்கும் களத்தில் இயங்குவதற்குமான செயற்பாட்டை குறித்து சொல்லுங்க.

பேச்சாளர் என்ற வகைமைக்குள் நான் வரமாட்டேன். எனது அனுபவங்களையும் படித்து உள்வாங்கியவற்றையும் பகிர்ந்துகொள்வதிலும் அது சார்ந்து உரையாடுவதிலுமே நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். களப்போராளி என்று குறிப்பிடும்படியாகவும் நான் எதையும் செய்து கொண்டிருக்கவில்லை என்கிற அப்பட்டமான உண்மையை உங்கள் வழியாகவாவது சொல்லிவிட வேண்டுமென நினைக்கிறேன். அதிகாரம், அடக்குமுறை, மனிதவுரிமை மீறல் எங்கெங்கு நடந்தாலும் தலையிலே தீப்பிடித்துக் கொண்டாற்போன்ற பதற்றத்துடன் களத்திற்கு செல்கிற போராளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம், அவர்களுக்கு தாங்கள்தான் போராளிகள் என்று சொல்லிக்கொள்ள தெரிவதில்லை அல்லது உரிமை கோர அவர்கள் விரும்புவதில்லை. அவர்களது நேரடிப் போராட்டங்களைப் பற்றி எப்போதாவது எழுதுவதாலோ என்னவோ என்னைப் போன்றவர்களுக்கு களப்போராளி  என்கிற பட்டம் சிரமமின்றி இலவசமாக கிடைத்துவிடுகிறது.   

வருடத்தில் 52 ஞாயிற்றுக்கிழமைகள், 12 நாட்கள் தற்செயல் விடுப்பு, 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 15 நாட்களுக்கு அரைச்சம்பள விடுப்பு, 17 நாட்கள் பொதுவிடுமுறை என்று  எவ்வித வருமான இழப்புமின்றி ஊர் சுற்ற கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாக நான் பயன்படுத்திக் கொள்கிறேன். வார ஓய்வுநாள் அல்லது விடுமுறை நாட்களில் மிக அரிதாகவே வீட்டில் இருப்பேன். (மற்ற நாட்களில் வீட்டில்தானே இருக்கிறேன்?). இலக்கிய அமைப்புகள் அல்லது மக்கள் இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குறைந்தபட்சம் வாரத்தில் ஒருநாளாவது வெளியூர்களுக்கு சென்றுவருகிறேன். அவ்வளவுதான். தமிழ்நாட்டின் போக்குவரத்து நிலைமைகளை அனுசரித்துப் போய் நிகழ்வுகளில் பங்கெடுத்துவிட்டு திரும்புவதில் ஏற்படும் அற்பச்சிரமங்களை சிலர் களப்போராட்டம் என்று மிகைப்படுத்தி அலட்டிக்கொள்கிறார்கள். பயணம் போவதையும் நிகழ்வுகளில் பங்கெடுப்பதையுமே போராட்டம் என்பதாக புரிந்துகொண்டிருப்பவர்கள், அதில் ஏற்படும் சில அசௌகரியங்களைப் பொறுத்துக்கொள்வதையே தியாகம் போல கற்பிதம் செய்துகொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, புதிய நிலப்பரப்புகளையும் மனிதர்களையும் அனுபவங்களையும் தருகிற பயணங்களும் சந்திப்புகளும் உவப்பானவை. இப்படி ஊர் சுற்றகிற நேரத்தில் உட்கார்ந்து உருப்படியாக எழுதலாம்தானே என்று கேட்கலாம். உருப்படியாக எழுத வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் நான் எழுதவதற்கே முன்னுரிமை கொடுத்துவருகிறேன். தவிரவும், உருப்படியில்லாத வேலைகளுக்கென்று நான் ஊர் சுற்றுகிறவனுமில்லை.

இதற்கு முன்பு மலேசிய  இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த நீங்கள் இம்முறை சாதியம் அறிவோம்-துறப்பதற்குஎன்று உரை நிகழ்த்த வந்தீர்கள். மலேசியாவில் இம்மாதிரியான உரை நிகழ்த்துவதற்கான காரணம் என்ன?

தமிழ்நாட்டிலிருந்து காலனியர்களால் கப்பலிலும் பன்றிப்படகுகளிலும் அள்ளிப்போட்டு ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உலகின் பல நாடுகளுக்கும் தமிழர்கள்  கொண்டு செல்லப்பட்டு கொடியச் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டதற்கு பின்புலமாக இருப்பது சாதியமே. சொந்தபந்தங்களையும் பிறந்த மண்ணையும் விட்டுவிட்டு வரமுடிந்த இவர்களில் தாயகத்தோடு இன்னமும் தொடர்பினை பேணி வருகிறவர்களால் நூற்றாண்டுகளைக் கடந்தும் சாதியை விட்டுவிட முடியவில்லை என்பது பேரவலம்தான். பெருந்தோட்டங்கள், பணப்பயிர் சாகுபடி, சுரங்கங்கள், கட்டுமானம் ஆகியவற்றுக்காக கொண்டுவரப்பட்ட விதம், பணியிடச்சூழல், வாழ்விடம், வருமானம், சுரண்டல், ஒடுக்குமுறை, இனப்பாகுபாடு உள்ளிட்டவை இவர்கள் அனைவருக்கும் பொதுவானவை தான் என்றாலும் அவற்றுக்கூடாக இவர்கள் சாதியுணர்வை கைவிடாமல் பேணிவருகிறார்கள். தாயகத்தில் சொந்த ஊர் எதுவெனத் தெரியாதவர்கள்கூட தமது சாதியை சந்தேகத்திற்கிடமற்ற வகையில் அறிந்துவைத்திருக்கிறார்கள். இவர்கள் தமக்கென உருவாக்கிக்கொண்ட கட்சிகள், தொழிற்சங்கங்கள், கோயில்கள் உள்ளிட்டவற்றில் சாதியமே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதை இங்கள்ள நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டிலும் இந்தியாவெங்கிலும் கடைபிடிக்கப்படுவதைப் போன்ற தீண்டாமைகளையோ வன்கொடுமைகளையோ இவர்கள் கைக்கொள்வதில்லை என்றாலும் பெரும்பாலும் சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதன் மூலம் சாதியை மறுவுற்பத்தி செய்துவிடுகிறார்கள். மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது குறைவான விகிதத்திலேயே நடக்கின்றன என்றாலும், புலம்பெயர் நாடுகளின் பூர்வகுடியினர்/ வேறு இனத்தவர் / நாட்டவர் அல்லது ஒருவேளை சாதிக்கு வெளியே திருமண உறவு ஏற்படுமாயின் அதை கலவரம் அல்லது கௌரவக்கொலையாக மாற்றாமல் கடந்துபோகிற ஒரு பக்குவத்தை எட்டியிருக்கிறார்கள். அடிப்படையில் தொழிலாளிகளாகிய இவர்களைத் தொடர்ந்து இன்னுமொரு தொகையான தமிழர்கள் வியாபாரம் அல்லது பெருநகரம் சார்ந்த நவீனத்தொழில்களுக்கான வேலைகளுக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களனைவரும் புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை சிறுபான்மைச் சமூகத்தவர்தான். சிறுபான்மைச் சமூகமாக இருக்கக்கூடிய தமிழர்கள் புலம்பெயர் நாட்டின் குடிமக்கள் என்கிற வகையிலான உரிமைகளுக்காகவும் வாழ்வியல் நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் தமக்குள்ளும், பிற இந்தியர்களோடும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் தொடர்ந்து இருத்தப்பட்டுள்ளனர் என்பதை என்னைவிடவும் நீங்கள் நேரடி அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள்

இவ்வளவுக்கிடையிலும் தாயகத்தொடர்பை பேணும் விதமாகவும் தமது சுயேச்சையான வளர்ச்சியை தாயகத்திற்கு தெரிவிக்கத் தோதாகவும் தமிழகத்திலிருந்து கலை இலக்கியவாதிகளையும் சமூக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்றும் ஆளுமைகளையும் தங்களிடத்திற்கு அழைத்து உபசரித்து உரையாடி வருவதை தொடர்கின்றனர். ஆனால் சமீப காலமாக, தமிழகத்தில் மிகக்கொடிய சாதிய வன்கொடுமைகளை நிகழ்த்தி சமூகத்தை பதற்றத்தில் மூழ்கடித்து வருகிற அமைப்புகளின் தலைவர்களை மலேசியாவுக்கு அழைத்துவந்து தங்கள் சாதியினரை அணிதிரட்டி உசுப்பேற்றும் சீர்குலைவு வேலைகளில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சமூக நல்லிணக்கத்திலும் ஒற்றுமையிலும் அக்கறையுள்ள பல நண்பர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்த ஆபத்தை தடுப்பதற்கான தொடக்கநிலை முயற்சிகளில் ஒன்றாக மணிமொழி ஏற்பாடு செய்த சாதியம் குறித்த விவாதத்தில் பங்கெடுக்க வந்தேன். நான் நினைத்துக்கொண்டு வந்ததைவிடவும் கேடான விதங்களில் இங்கு சாதியவாதிகளின் கைங்கர்யம் இருப்பதை உரையாடல்களினூடாக உணர்ந்துகொண்டேன்.

மலேசிய திராவிட கழக ஏற்பாட்டில் நடந்த கருத்துகளத்திலும் கலந்துகொண்டீர்கள். மலேசிய திராவிட கழகத்தினரின் திராவிட கொள்கைகள்  அல்லது அவர்களின் திராவிட புரிதல்கள் ஏற்புடையதாக இருக்கிறதா?

அவர்களோடு இதுகுறித்து நான் அவ்வளவாக எதையும் உரையாடவில்லை. திராவிடம் என்கிற சொல் ஆரியர்களுக்கும் முன்பே இந்தியாவிற்குள் வந்த ஓர் இனம், பூர்வகுடிகளாகிய நாகர்களோடு கலந்து உருவாக்கிய ஒரு பண்பாட்டைக் குறிக்கிறது. பெரியார் ஒரு புகைப்படமோ சிலையோ டிரஸ்டோ அல்ல, ஆரிய வழிப்பட்ட வேதங்கள், யாகங்கள், பூஜைபுனஸ்காரங்கள், பார்ப்பனீயக் கருத்தியலை உள்ளுறையாகக் கொண்ட சாதியம், சாதியத்தின் தொகுப்பாக இருக்கிற இந்துமதம் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு கருத்தியல்

தமிழர் என்பதற்கு மறுசொல்லாகவோ அல்லது இணையாகவோ இந்து என்கிற சொல் மலேசியத் தமிழர்களால் பாவிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு வந்துள்ள முஸ்லிம்களை இந்து முஸ்லிம் என்றே சுட்டுமளவுக்கு அதன் பயன்பாடு விரிகிறது. மேலும் இந்து என்பது வெறும் சொல்லாக சுருங்கிவிடாமல் சாதி, சடங்குகள், பரிகாரப் பூஜைகள், மூடநம்பிக்கைகள், அவற்றை முன்னிட்ட பணவிரயம் நேரவிரயம் என்பனவாக தமிழர்களின் மனங்களில் தங்கி அவர்களது அன்றாட வாழ்வை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. ஒருவர் கோவிலுக்குள் நுழையும் போதே ஒரு வழிபாட்டிடம் என்கிற வகையில் அங்கு நிலவும் பாகுபாடுகள், புறக்கணிப்புகள், ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றுவேலைகள் அனைத்தையும் ஒப்புக்கொள்வதாக மாறிவிடுகிறது. அதன் நீட்சியாக சமூகத்தில் நிலவும் பாரபட்சங்களையும் இயல்பானதாக ஏற்றுக்கொள்வதற்குரிய மழுங்கல்தான்மை புத்தியில் படிந்துவிடுகிறது. திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் குறுக்கீடு செய்யவேண்டிய இடம் இதுதான் என்பதை சொன்னேன். கலந்துரையாடலின் போது மிகுந்த அக்கறையோடு  எழுப்பப்பட்ட கேள்விகள், நாத்திகம் என்பது பகுத்தறிவின் ஒரு பகுதிதானேயன்றி அதுவே முழுமையானதல்ல  என்று விவாதத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தின.   

இலக்கியத்திற்காக கொடுக்கப்பட்ட  அல்லது கொடுக்கப்படும் விருதுகள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதும் விருதுகளை  மறுதளிப்பதும் அதை நகைப்பு  ஆக்குவதும்  தொடர்கிறதேவிருதுகளின் தாட்பரியம் என்ன?

விருதுகளை இலக்கிய ஆர்வமுள்ள சில நிறுவனங்கள்/ பத்திரிகைகள்/ அரசின் கீழுள்ள கலை பண்பாட்டுத்துறையால் நிர்வகிக்கப்படும் அமைப்புகள் வழங்குகின்றன. இதற்கான தேர்வுக்குழுக்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, அவற்றில் இடம்பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள் எவை என்பதெல்லாம் மூடுமந்திரம்தான். பலநேரங்களில் தேர்வுக்குழு நியமனத்திலேயே ஊழல் தொடங்கிவிடுகிற போது, அந்தக்குழுவின் பரிந்துரை எந்தளவுக்கு நடுநிலையானதாக இருக்கமுடியும்?


பொதுவாக மூத்த / பிரபல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள்/ விருது வழங்கும் நிறுவனத்திற்கு வேண்டியவர்களைக் கொண்டே விருது தேர்வுக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறான எந்தவொரு குழுவும், குறிப்பிட்ட துறையில் வெளியான அத்தனை நூல்களையும் நுணுகிப் பரிசீலித்து விருதுக்கு பரிந்துரைப்பதில்லை. விருதுக்கென அனுப்பிவைக்கப்படுகிறவற்றில் இந்த தேர்வுக்குழுவினர் தமது அப்போதைய மனச்சாய்வுகளுக்கு இயைபான நூலுக்கு அல்லது எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. மனச்சாய்வை பால், சாதி, மதம், பிரதேசம், அரசியல் போன்ற காரணிகள் உருவாக்குகின்றன. எனவே எழுத்தை விடவும் பலநேரங்களில் எழுத்தாளரே பரிசீலிக்கப்படுகிறார்.   ஆகவே, இன்னாரிடம் நைச்சியமாக இளித்துக்கிடந்தால் எதிர்காலத்தில் ஏதாவதொரு விருதுக்கு பரிந்துரைக்கப்படுவோம் என்று தனிப்பட்ட தொடர்புகளைப் பேணுவது, போலியாக விசுவாசம் காட்டுவதுஇந்த மூத்த / பிரபல எழுத்தாளர்களின் அபத்தக் கிறுக்கல்களைக்கூட ஆஹாஓஹோவென பாராட்டித்தள்ளுவது, பேராசிரியர்களின் சாரமற்ற ஆய்வுகளை நுண்மான் நுழைபுலம் மிக்கது எனப் புகழ்வது போன்ற கொல்லைப்புற வழிகளை சில எழுத்தாளர்கள் கையாள்வதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தேர்வுக்குழுவினரை கண்ணி வைத்துப் பிடித்தோ குழுவிலிருப்பவரே சக உறுப்பினர்களை தமக்கு சாதகமாக வளைத்தோ தான் ஒருவருக்கு விருது தரப்படும் என்றால் அதன் மதிப்பு அந்தளவுக்கானதுதான் என்று ஒதுக்கிவிட்டுப் போகவேண்டியதுதான்விருதுகளால் சம்பந்தப்பட்ட எழுத்தாளர் அல்லது நூல் மீது வாசகர்களின் கவனம் குவிவது போல தோன்றினாலும் உண்மையில் அவர்கள் சொந்த வாசிப்பின் மூலமே அதன் இலக்கியப் பெறுமதியை தீர்மானிக்கிறார்கள்.

நன்றி : தென்றல் வார இதழ் (மலேசியா) (6.11.2016)
நன்றி: ஆசிரியர் வித்தியாசாகர்
நன்றி : ஆதவன் அண்ணா

சனி, 5 நவம்பர், 2016

சிபில் கார்த்திகேசு


சிபில் கார்த்திகேசு  மலேசியாவில் சீனர்கள் மத்தியில்  மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரபெண்ணாவார்.  இந்தோனேசியா,  சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899-ஆம் ஆண்டு  பிறந்தார்.  5 உடன் பிறப்புகளில் இவர் ஒருவரே பெண்.  சிபிலின் வாழ்க்கை வரலாறு மலேசியாவில் தொடங்கி  இங்கிலாந்தில் முடிந்ததாகும். அவர் மலேசியராகவே கருதப்படுகிறார்.

பல நூறு சீனர்களின் உயிர்களை ஜப்பானியர்களிடமிருந்து காப்பாற்றியவர். அவரை ஒரு வீர மங்கையாக மலேசிய சீன சமுதாயம் கருதுகிறது.  சிபில் கார்த்திகேசுவின் இயற்பெயர் சிபில் டெலி.  இவருடைய தந்தை ஓர் ஆங்கிலேயர். மலேசியாவில் தோட்ட நிர்வாகியாக இருந்தவர்.  சிபில் கார்த்திகேசு தேர்ச்சி பெற்ற ஒரு தாதியாக இருந்தார்.  மேலும் சீன மொழியில் சரளமாக பேசக்கூடியவராகவும் சிபில் இருந்தார்.

1919-ஆம் ஆண்டு டாக்டர் ஏ.சி.கார்த்திகேசு என்பவரைக் காதலித்துத் ஜனவரி 7-ஆம் தேதி 1919 ஆண்டு  திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் கோலாலம்பூர், புக்கிட் நானாஸ், செயின் ஜோன் தேவாலயத்தில் நடந்தது.  பிறகு இருவரும் இணைந்து ஈப்போவில்  ஒரு சிறிய மருத்துவ விடுதியை  தொடங்கி நடத்தி வந்தனர். 

இவர்களுக்கு முதல் ஆண் குழந்தை 26 ஆகஸ்ட் 1919 பிறந்த  மிகக் கடுமையான  ஆரோக்கிய பிரச்னையால் 19 மணி நேரத்தில்  இறந்துவிட்டது. அந்தக் குழந்தைக்கு மைக்கல் என பெயர் வைத்தனர்.  12 நவம்பர் 1892 –இல் தைப்பிங்கில்  பிறந்த சிபில் கார்த்திகேசுவின் சகோதரருடைய பெயரும் மைக்கல்தான். அவர் பிரிட்டிஸ் ராணுவத்தில் இருந்த சமயத்தில் 1915-ஆம் ஆண்டு கபிப்பொலியில் கொல்லப்பட்டார். 

1941- ஆம் ஆண்டில்  மலாயாவில் ஜப்பான்  ஆட்சி நடந்துகொண்டிருந்தது.  லட்சக் கணக்கான மக்கள் ஜப்பானியர்களின் சித்திரவதைக்கு  ஆளானார்கள்.  இதனால், ஜப்பானிய ஆதிக்க  எதிர்ப்புப் போராளிகள்  மறைந்திருந்து  ஜப்பானியர்களை  தாக்கினர்.

அத்தாக்குதலில்  போராளிகளும் காயமடைந்தனர். அவர்களுக்கு ரகசியமான முறையில்  டாக்டர் கார்த்திகேசுவும், சிபில் கார்த்திகேசுவும் மருத்துவம் பார்த்தனர். ஜப்பானியர்களுக்கு இவ்விவகாரம் தெரிய வந்தால், இருவரையும் கைது செய்து சித்ரவதை செய்யத் தொடங்கினர்.  மேலும் விசாரணை என்ற பெரில் சிபில் கார்த்திகேசுவை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு  துளைத்து எடுத்தனர்.  “போராளிகள் பெயரைச் சொன்னால்  போதும்” என்றும்  விட்டு விடுகிறோம் என்றும்  மன்னித்து விடுகிறோம் என்றும் ஜப்பானியர்கள் ஆசை காட்டினர். 

ஆனால், அஞ்சா நெஞ்சம் கொண்ட  அப்பெண்ணின் முன் எதுவும் எடுபடவில்லை.  உண்மையைச் சொன்னால் அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எத்தனை எத்தனை என்று  அந்த சரித்திர நாயகி உணராமல் இல்லை.  தனக்கு தெரிந்த உண்மையைச் சொல்லாமல் எல்லா வகை சித்ரவதைகளையும்  தாங்கிக் கொண்டார்.  அவர் இருந்த ஈப்போ பத்துகாஜா சிறையில் நடந்த சித்ரவதைகளை குறித்து சிபில் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஜப்பானியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.  1945-ஆம் ஆண்டு ஜப்பானியர்கள்  மலாயாவில் இருந்து வெளியேறினர். ஆங்கிலேயர்கள் மலாயாவில் ஆட்சி அமைத்தனர்.  கேப்டன்  டேவிட் மெக்பர்லேன் என்பவர்  சிபில் கார்த்திகேசுவை  தேடும் முயற்சியில் இறங்கினார்.  பத்துகாஜா சிறையில் கண்டுபிடிக்கப்பட்ட  சிபில் கார்த்திகேசுவின்  நிலை  மிகவும் மோசமாக இருந்தது.  அவரை உடனடியாக  இங்கிலாந்திற்கு  விமானம் வழியாக கொண்டு சென்று வாழ்நாள் மருத்துவம் வழங்கப்பட்டது.

அந்தச் சமயத்தில்தான்  சிபில் கார்த்திகேசு  ‘No Dram Of Mercy’ எனும் தனது சுயசரிதை புத்தகத்தை  உதவியாளர் ஒருவரின் துணைகொண்டு எழுதினார். அந்த சமயத்தில்தான் இந்த வீர பெண்மணியை ஆறாம் ஜார்ஜ் மன்னன் சந்திக்க ஆசைப்பட்டார்.  சிபில் கார்த்திகேசுவின் புத்தகம் 1954-ஆம் ஆண்டு  வெளியிடப்பட்டது.  அதன் மறுபதிப்பு 1983-ஆம் ஆண்டு  Oxford University  கொண்டு வந்தது.

சிபில் கார்த்திகேசுவின் வீரத்தையும் தியாகத்தையும் மதிப்பளிக்கும் வகையில்  பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்தின் ஆக உயரிய விருதான ‘கிங் ஜார்ஜ்’ என்ற வீர விருது ஜார்ஜ் மன்னரால்  சிபிலுக்கு வழங்கப்பட்டது.  மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் இந்த  விருதைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் உயர்ரக  மருத்துவம் சிபிலுக்கு வழங்கப்பட்டாலும், ஜப்பானியர்களின் சித்ரவதையால் ஏற்பட்ட உள்காயத்தை  சரி செய்ய முடியவில்லை.  இதன் காரணமாக 1948-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி தனது 49-வது வயதில் அவர் காலமானார்.

அவருடைய நல்லுடல் ஸ்காட்லாந்தில்  புதைக்கப்பட்டது. பின்னர் அவரின் பூதவுடல் சமாதியிலிருந்து 20.3.1949-ல் தோண்டி எடுக்கப்பட்டு, கப்பல் வழியாக பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு ஈப்போவில் அடக்கம் செய்யப்பட்டது. வரலாற்றில் அழுத்தமான கால் பதித்த இந்தத் தாரகையை குறித்த தொலைக்காட்சித் தொடர்நாடகத்தை 1997-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொலைக்காட்சி  நிறுவனம் தயாரித்தது.  தொடர்ந்து மலேசியாவில் ஆஸ்ட்ரோ நிறுவனம் ‘Apa Dosaku?’  எனும்  தலைப்பில்10 வாரங்களுக்கு அவர் தொடர்பான தொடர் நாடகத்தை தயாரித்து ஒளிபரப்புச் செய்தது. ஈப்போவில் அவர் வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியமாக உள்ளது.

சிபிலின் மீது நான் கொண்டிருக்கும் ஈடுபாட்டை தெரிந்துகொண்ட தோழர் நாகேந்திரன், சிபில் கார்த்திகேசு துயில் கொள்ளும் கல்லரைக்கு அழைத்து செல்வதாக கூறினார். ஈப்போவில் , சீனர்கள் தேவாலயத்தில் அவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. காய்ந்த ஒரு மலர் வளையம் அவரின் கல்லரை மீது இருந்தது. அது மிக அண்மையில் நினைவுகூறப்பட்ட அவரின் நினைவுநாளுக்காக வைத்திருக்கலாம்.

சிபிலை பார்த்து வந்துவிட்டேன். மனதினில் ஏதோ ஒரு நிம்மதி இருக்கிறது. நான் முதன்முதலாக சிபிலை அடையாளம் கண்டபோது தமிழில் ஒரு செய்திகூட எங்கும் பெற முடியவில்லை. சீனர்கள் ஆங்கிலத்தில் நிறைய பதிவு செய்து வைத்திருந்தார்கள். அதில் சில குறிப்புகளை எடுத்து மொழிபெயர்த்து பத்திரிகையில் வெளியிட்டேன். தற்போது மீண்டும் ஒரு கட்டுரை இணையத்தில் இடம்பெற போகிறது. இனி சிபிலை தேடுபவர்களுக்கு அவர் எளிதாக அடையாளம் காணப்படுவார்.  

நன்றி: மலேசிய சோசலிஸ்ட் நவம்பர் மாத இதழ்


வெள்ளி, 4 நவம்பர், 2016

சமூகத்தைப் பேசும் எழுத்து

நேர்காணல்: ச.விஜயலட்சுமி
நேர்கண்டவர் : யோகி

ச.விஜயலட்சுமி  தமிழ் இலக்கிவாதிகள் மத்தியில் மிகவும் பரீட்சயமான பெயர் இது.  பெண்களின் எழுத்துக்கள் சுதந்திரமாக கையாள வேண்டும் என்று கூறுபவர்.  பக்குவப்படாமலிருக்கும் மனதை பக்குவப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவே கவிதையை அறிகிறேன் எனும் இந்த ஆளுமை ‘எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை’, லண்டாய், பெண்ணெழுத்து களமும் அரசியலும்  உள்ளிட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்கு கொடுத்துள்ளார்.

எனக்கு அவருடைய அறிமுகம் 2015-ஆம் ஆண்டுதான் ஏற்பட்டது. இலங்கையில் ‘ஊடறு’ இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் சந்திப்பில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டோம். அதன்பிறகு சென்னையில் அவர் வீட்டில் தங்கி போகும் அளவுக்கு எங்கள் உறவு இன்று நட்பு விருட்சத்தில்  கிளைவிட்டு  வேர்கள் நீண்டு போய்கொண்டிருக்கிறது.  
இம்முறை ஊடறு  பினாங்கில் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் சந்திப்புக்காக்க மலேசியாவுக்கு முதல் முறையாக வந்தவரிடம் ‘புத்தகம் பேசுது’ இதழுக்காக  ஒரு நேர்காணல் செய்தேன்.. இனி நேர்காணலிலிருந்து…

தமிழ் படைப்புலகத்தில் உங்களுக்கு கிடைத்த அங்கிகாரம் என எதை சொல்வீர்கள்?

விஜய: தமிழ்ப் படைப்புலகத்தில் என் கல்லூரிப் பருவம் முதல் இயங்கி வருகிறேன்.எனக்கு கிடைத்த பேராசிரியர்கள் எனக்கான கொடை. இள்வரசு ஐயா, மறைமலை இலக்குவனார், மு.மேத்தா, அப்துல் ரகுமான், சுதந்திர முத்து, பொன்.செல்வகண்பதி, மின்னூர் சீனிவாசன் முதலாக இன்னும் பல முக்கியமான கருத்து ரீதியான கொள்கை மிக்க வழிகாட்டிகளை இங்கே நினைத்துக் கொள்கிறேன்.
அண்மையில் மரபுக் கவிதையில் காதல் அலைகள் எனும்  நூலினை வெளியிட்டார் கவிஞர் பொன்.செல்வகணபதி அவரின் இந்நூல் இளவரசன், கோகுல்ராஜ் உள்ளிட்டோரின் ஆணவக் கொலைகளைப் பேசுகிறது. இந்நூலின் மேற்கோளாக எனது லண்டாய் நூலினைப் பயன்படுத்தியுள்ளார். முதுகலை படிக்கும் போது எனக்குப் பேராசிரியராக ஆற்றுப் படுத்திய ப.மகாலிங்கம் ஐயா பேராசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பெண்ணெழுத்து குறித்தான ஆற்றுகையில் ச.விசயலட்சுமியின் படைப்புல்கம் குறித்து உரையாற்றியதோடு எம் படைப்பில் தாம் தயாரித்த தரவுகளைக் கொண்ட சிறு நூலினை வீட்டிற்கு வந்து கொடுத்து வாழ்த்திச் சென்றார்.

கல்லூரியைத்தாண்டி என் சிறகை விரித்தபோது அண்ணன் அறிவுமதி, தாயும் தந்தையுமாக என்றும் தாயுமானவனாக அப்பா நாஞ்சில் நாடன், அப்பாக்கள் சுதீர்செந்தில், சமயவேல், ஓவியர் மருது என அப்பாக்களும் அண்ணன்களும் தோழர்களும் தோழிகளும் நண்பர்களும் தம்பி தங்கைகளும் மகள்களுமாக பயணிக்கிற இந்த சூழல் எனக்கு வாய்த்திருக்கிறது. இலக்கியவாதிகள் என்றாலே குழுக்களும் குழு அரசியலும் சண்டை சச்சரவுகளும் மட்டும் தான் என்கிற பொதுப் போக்கிலிருந்து இலக்கியம் படைக்கும் உறவுகளைக் கொண்ட பெரிய குடும்பம் எம்முடையது. இத்தகு அன்பார்ந்த சூழல் எனக்கான அங்கீகாரமென கருதுகிறேன்.

உங்களுக்கு அண்மையில் கிடைத்த விருது குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்?

விஜயா:  இந்த கேள்வியும் தங்கள் முந்தைய கேள்வியோடு தொடர்புடைய கேள்விதான். அங்கீகாரம் என்பதை விருதாகவும் பார்க்கலாம். அண்மையில்  கிடைத்த விருது ஜெயந்தன் விருது. தமிழிலக்கிய சூழலில் ஜெயந்தன் மிக முக்கியமான முன்னோடி படைப்பாளர். அவர் பெயரால் லண்டாய் நூலுக்கு சிறப்பு விருது அளிக்கப் பட்டது. எனது எழுத்துகள் பொதுவாக விருதுக்காக வரையறுக்கப்பட்ட அளவீடுகளுக்குப் பொருந்தாதது. எந்த ஒரு விருதையும் எதிர்பார்த்து என் எழுத்துகள் எழுதப் படுவதில்லை. லண்டாய் நூலினை விருதுக்கு தெரிவு செய்தவர்கள் அண்ணன் சௌமா, சீராளன் அண்ணன், முனைவர் கவிஞர் தமிழ்மணவாளன் குழுவினர். இந்நூல் ஆப்கன் பெண்களின் வாய்மொழிப் பாடல்களையும் கவிதைகளையும் மொழிபெயர்ப்பாக்க் கொண்டது. இவ்விருதினை ச.விசயலட்சுமிக்கான விருதாக நான் கருதவில்லை. சொல்ல இயலாத வலிகளுக்குள் தன்னை புதைத்துக் கொண்டிருந்தாலும் மீண்டெழுதலின் ஆசை மிகுந்த (அரசியல் தெளிவான கவிதைகளை சொந்தப் பெயரில் எழுதவியலாமல் புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருக்கிற) ஆப்கன் பெண்களுக்கு அளித்திருக்கிற விருதாகவே நினைக்கிறேன்.

இலக்கிய படைப்பாளர்களுக்கு கிடைக்கும் விருதுகள் இப்போது அரசியலாக்கப்படுகிறதே?

விருதுகளை கவனிப்பதில்லை. அதன் அரசியல் எனக்கு தெரியாது. விருதுகள் தற்காலிகமானவை. மக்கள் மனங்களில் அமர்ந்த படைப்புகளே காலம் கடந்து படைப்பாளியை கொண்டு செல்லும்.

ஓர் ஆசிரியருமான உங்களுக்கு எழுத்து என்பது என்னவாக இருக்கிறது?

விஜயா:  எழுதத்துவங்கிய காலத்தில் காற்றுக்கு வழிவிடும் சாளரமாக தோன்றிய எழுத்து இன்று எனக்கான பெரிய வானமாக , அண்டமாக விரிகிறது. நான் தமிழாசிரியப் பணியில் இருக்கிறேன். என் எழுத்து, போதனை இரண்டிலும் தமிழே மையம். ஆகவே என் பணியை சிறப்பாக செய்யும் உந்துதலை மொழியின் மூலமாகப் பெறுகிறேன். ஆயினும் தமிழகத்தில் கல்வி என்பது அண்டை மாநிலங்களோடு ஒப்பிட இயலாத பின்னடைவில் இருக்கிறது. 

தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு வந்த மாணாக்கரில் பெரும் பகுதியினர் தமிழைப் பிழையற எழுத இயலாதவராக இருக்கின்றனர். கல்வி தன்னம்பிக்கையைத் தரவேண்டும். மாறாக தேர்ச்சி விகிதம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதால் மதிப்பெண் தவிர பிற யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. ஆங்கிலத்தில் பிரியாரிட்டி என சொல்வோம் எதற்கு முதன்மைத்துவம் தரவேண்டும் என்கிற தெளிவு மாணவர்களுக்கு ஊட்டப்படாததாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ளார்கள் என்கிற அடிப்படையில் அரசு வழங்கும் இலவசங்களை  எதிர்பார்க்கிற மனநிலை மாணாக்கர் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

தாய்மொழியே எழுதப்படிக்க அறியாத முதல்வகுப்பு மாணவர்கள் ஆங்கில மொழிவழி கல்வியைத் தொடர்வதை அரசே ஊக்குவிக்கிற நடைமுறையில் இன்றைய அரசுப் பள்ளியின் நிலை உள்ளது.எப்போதும் எழுத்து என்பது நான் சந்திக்கிற சிக்கல்களை முன்வைத்த்தாக , எதிர்கொள்ளும் பலவற்றையும் உள்ளடக்கியது. ஆசிரியராக இருக்கிற நான் எழுத்தாளராகவும் இருப்பதால் சமகால இளந்தலைமுறையும் அத்தலைமுறையிடமிருந்து அறிவார்த்தமானவை நீண்ட சுவரெழுப்பி பிரிக்கப் படுவதுமான ஒரு தலைமுறை மாணவர்களின் பின்னடைவை அவதானிக்கிறேன். அறியாமையின் மாணவர்களின் கண் கொண்டு உலகத்தைப் பார்க்கிறேன். 

மலேசியாவில் நடந்த பெண்ணிய உரையாடல் பற்றிச் சொல்லுங்கள்? எதற்காக இப்படியான சந்திப்புகள் அவசியம்?

விஜயா:  மலேசியாவில் நடந்த பெண்ணிய உரையாடல் பலதலைப்புகளில் பேசவும் விவாதிக்கவுமாக அமைந்தது.  எப்பொழுதும் செயற்பாட்டாளர்களின் வாழ்க்கைக்கும் சாமானியரின் வாழ்க்கைக்கும் இடையே காணப்படும் வித்தியாசம் போல மக்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான வித்தியாசமும் உண்டு. நடைமுறையில் இருப்பவற்றை விவாதித்து சீர்தூக்கி இனிவரும் காலங்களில் காணப்படும் சிக்கல்களை எப்படி நீக்கலாம் என விவாதிப்பதோடு அதை அழுத்தமாக எழுதவும் எழுதுவதற்கு இணையான மாற்றத்தை துரிதப் படுத்தவும் இத்தகு சந்திப்புகள் தேவை. 
உதாரணமாக ஒரே இடத்தில் வேறு வேறு பூகோளப் பகுதிகளில் வசிப்பவர்கள் சந்திக்கிறோம். இந்தியா, இலங்கை, ஆஸ்ரேலியா, மலேசியா, ஐரோப்பிய கண்டம் என பல தரப்பினரும் கூடுகையில் அவரவர்கள் வெளிப்படையாக பலகோணங்களில் கலந்துரையாடுகிறோம். எல்லைக்கோடுகளைக் கடந்து ஒன்று கலந்து விவாதிக்கையில் புதிய பார்வைகளும் கோணன்களும் வெடிப்புரும். இவை சந்தித்த உடன் நிகழ்ந்துவிடாது.  உள் அடுக்குகளில் சுழன்று புதிய ஆக்கமாக அவை வெடிப்புறும்.

‘எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் என்ற தலைப்பில் உங்கள் உரை அமைந்தது. அது குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் எப்படி இருப்பாள்?

விஜயா:  எதிர்காலத்தை நோக்கிய  பயணத்தில் பெண் என்பதில் பெண்ணின் வாழ்க்கையில் ஊடுறுவிய கலாச்சாரத்தின் தாக்கம் குறித்து உறையாற்றினேன். இரும்பு எப்படி மின் கடத்தியாக செயல்படுகிறதோ அதுபோலவே பெண் மூத்த தலைமுறையின் உணவு, உடை, பழக்கவழக்கம், சடங்குகள், வழிபாடு உள்ளடக்கிய அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதோடு அவற்றைப் பயிற்றுவிக்கவும் செய்கிறாள். ஆணாதிக்கத்தின் கூறுகளை இன்னது என அறியாமலேயே பின்பற்றுகிறாள். கட்டுடைப்பு செய்யவேண்டிய மிக முக்கியமான இடம் இது. இவ்வகையில் பெண் தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டால் ஆணாதிக்கத்தின் வேர்களை அறுப்பது எளிது.

இது கட்டுடைப்பின் காலம். ஆகையால் இனிவரும் காலங்களில் பெண் மிகுந்த வீச்சுடன் இருப்பாள். கட்டுடைகிற சூழலை தாங்க இயலா ஆணாதிக்க நிலை ஆணவக் கொலைகளை நிகழ்த்துகிறது. பெண்களின் உறுதியை உடைக்க இயலாமல் உயிரைப் பறிக்க முடிவெடுக்கிறார்கள். காவல்துறையின் திடமான பணி ஆளுமை விஷ்ணுப்பிரியாவின் மரணமாக முடிவு கட்டப் பட்டிருக்கிறது. அடுத்த பாய்ச்சலுக்கிடைப்பட்ட நேரமிது.

நடந்த சந்திப்பில் உங்கள் மகள் பாரதியும் கலந்துகொண்டு பேசினார்.  உங்கள் இருவருக்கும் இருக்கும் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கலந்து பேசுகிறீர்கள்? அல்லது விவாதிக்கிறீர்கள்? உங்களின் இலக்கிய வாரிசாக பாரதியை எடுத்து கொள்ளலாமா?

விஜயா:  பாரதி கலந்து கொண்டார். அழைப்பிதழில் அவர் பேசுவதாக பெயரிடப்படாதநிலையில் ஊடகம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள திடீரென கேட்டுக்கொள்ளப்பட்டார்.

பாரதி என் இலக்கிய வாரிசு இல்லை. எம் முற்போக்கு      கொள்கையை மதிப்பதோடு அவளாக புரிந்துகொண்டு தானும் கடைபிடிக்க ஆர்வம் செலுத்துபவள். சமூகப் பிரக்ஞை நிரம்பியவள். ஊடகவியலாளர். இளங்கலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறார். மகளும் நானும் ஒருபோதும் அம்மா மகள் என்ற நிலையில் மட்டுமே இல்லை. இருவரும் தோழிகள். மகளோடு நேரம் கொடுக்க முடியாத சூழலை புரிந்து கொள்வார். என் சமையல் நேரத்தில் எங்களுக்கான உரையாடல்  அதிகமிருக்கும். முரண்பாடுகள் என பெரிதாக வந்ததில்லை. விவாதங்கள் எமக்குள் நடக்கும்.

கடந்த ஜனவரியில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின்போது நீங்கள்  களத்தில் இறங்கி வேலைகளை செய்தீர்கள். அந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ள முடியுமா?  பெரும் இழப்பு ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி விட்டார்களா?

விஜயா:  ‘சென்னை எழும்’ வாட்ஸ் அப் குழுவை ஆரம்பிக்கலாம் என மகள் பாரதியிடம் சொன்னதும் உடனடியாக உருவாக்கினார். கடலூர் வெள்ளத்தில் சிக்கிக் கிடந்தது. கடலூருக்காக களத்தில் இறங்க ஆயத்தம் நடந்துகொண்டிருந்தது. ‘கடலூர் எழும்’  நட்புக் குழுவிற்குள் செயல்பட்டு வந்ததால் ‘சென்னை எழும்’ குழுவை ஆரம்பித்தவுடன் துரிதமாக செயல்பட்டோம். என் குழுவினருக்கு தொடர்பு சாதங்களை பயன்படுத்த அத்தியாவசியமாக மின்சாரம் தேவைப்பட்டது. குழுவினருக்கு ‘டாப் அப்’ செய்ய அரபுநாட்டில் பணிபுரியும் தம்பி திவான் உதவினார். 

வடசென்னையில் செயல்பட முடிவெடுத்தவுடன் தோழி ஹேமாவதியை தொடர்புகொண்டோம். அவர் இடுப்புவரை கழிவுநீரில் சென்று மக்களுக்கான உணவு மற்றும் தேவையான பணிகளை மிக வேகமாக செய்யத்தொடங்கினார். தங்கை சாரா செயற்பாட்டாளர். கூவம் ஆற்றில் நடை பயணம் மேற்கொண்டபோது அறிமுகமானவர். இவரின் அயராத உழைப்பால் முதல் சந்திப்பிலேயே மனசுக்குள் அமர்ந்தவள். தாம்பரம் பகுதியில் வீடுகளுக்குள் இறங்கி நீந்தி மீட்க சென்றவர் பிணங்களையும் எடுத்து வெளியேற்றினார். இவரும் வடசென்னைக்கு வந்து சேர்ந்தார். தகவல் தொடர்பு மிக முக்கியமான தேவையாக இருந்தது. அதனால் நான் பிஏஸ் என் எல் தொலைபேசி, முகநூல்,வாட்ஸ் அப்  இவற்றின் துணையோடு தகவல்களை உடனுக்குடன் பறிமாறினோம். 

சாராவும் ஹேமாவும் களத்தில் நின்றார்கள். இவர்களோடு விலாசினி, உமாதேவி முதலான நட்புகள் கரம்கோர்த்தனர். தம்பி ப்ளோரன் களத்திலேயே நின்றார். பசியும் உறக்கமும் பார்க்காத உழைப்பு அது. நுழைந்து வாங்க இயன்ற இடங்களில் எல்லாம் ஓடோடி பெற்று மக்களிடம் சேர்த்தோம். ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக எம் குழு மக்களுக்கு உதவியது. நடிகை ரோகினி எம் குழுவினரைப் பாராட்டினார். சங்கம் விருது ‘சென்னை எழும்’ குழுவிற்கு அளிக்கப்பட்டது. கோவையில் இருந்து ஓசை அண்ணன் காளிதாஸ் ஓசை வண்டியையும் ஓசை சையதையும் ஒரு நாள் முழுக்க எமக்கு உதவியாகக் கொடுத்தார். 

மலேசியாவுக்கு இது உங்களின் முதல் பயணம்.  அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?

விஜயா:  மலேசியா மிக அழகான நாடு.  ஊடறு நடத்திய பெண்கள் சந்திப்பிற்காக பினாங்கு சென்றோம். விமானத்திலிருந்து தரையிறங்க போகையில் கடல் நீர் நகருக்குள் பின்வாங்கி ஓடுகிற பேக் வாட்டர் ஸ்பேஸ் அத்தனை அழகு. இந்தப் பயணம் மலேசிய கிராமங்களை , அடித்தட்டு மக்களை சந்திப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் படியாக இல்லை. நான் சந்திப்பு முடிந்த பின் மூன்று நாட்கள் மட்டுமே தங்கியிருந்தேன். நகர்ப்புற வாழ்க்கை முறையை அங்கு சீன, மலாய், தமிழர்களின் வாழ்க்கையை நகரம் சார்ந்து பார்க்க முடிந்தது. சீனர்களின் கோவில்கள் , இந்துகளின்  முருகன் கோவில்,  புத்தர் கோவில்கள் பார்த்தேன்.

வழிபாட்டின் விருப்பத்தினால் அல்ல. மக்களின் நம்பிக்கை சார்ந்த பயணம் மதன்களின் அடிப்படையில் எப்படி இருக்கிறது என அறிய உதவும் என்பதால். மேலும் மலேசிய ,சீன உணவுகளை ருசித்தோம். மீகோன், நாசி லெமாக் , தேனில் ஊறவைத்த சுட்ட கோழி இரைச்சியான ‘சாத்தே’  சீனர்களின் சாமந்தி பூ சேர்த்து கொதிக்கவைக்கப்பட்ட குடிநீர் இப்படி பல வகை.
தங்கை மணிமொழி எம் பயணதிட்டத்தை வகுத்ததோடு இறுதிவரை தன் நேரத்தை ஒதுக்கி சுற்றிக்காட்டினாள். இரவு நேரப் பயணத்தை விரும்புகிற எனக்கு பினாங்கிலிருந்து கோலாலம்பூர் வரையான மகிழுந்து பயணம் மறக்க இயலாதது.  மலேசிய சாலைகள் பயண விதிமுறைகளை துள்ளியமாக கடைபிப்பவை. சாலைகள் தூய்மையானவையாக சீராக இருந்தன. நானூறு  மீட்டர் பயணம் அங்கே சிறுகளைப்பையும் ஏற்படுத்தவில்லை,சென்னையில் நாற்பது மீட்டர் பயணமே முதுகெலும்பை பதம்பார்த்து வலிக்க வைத்துவிடும். 

மலேசிய படைப்பாளர் வழி  மலேசிய பெண் எழுத்தை எப்படிஉணர்கிறிர்கள் ?

மலேசியாவில் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே  எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.  சிலரின் கவிதைகளைப் படித்திருக்கிறேன். ஆரம்பகால  தமிழகப் பெண் எழுத்தாளர்களைப் போலவே பெண்ணியப் படைப்பாக இல்லாமல் சமரசம் செய்து கொள்ளும் எழுத்தாக ஆண் எழுத்தாளர்களின் எழுத்தைப்போல எழுதப்பட்டதாக உணர்கிறேன். முத்தம்மா பழனிச்சாமியின் ‘நாடுவிட்டு நாடு’  நூல் அவரது 60 வயதுக்கு மேலாக எழுதப்பட்டாலும் மிக முக்கியமான எழுத்து. யோகி சந்துரு, பூங்குழலி, மணிமொழி முதலான பெண் கவிஞர்களை அவ்வப்போது நெருங்கி வாசிக்கையில் இவர்களது எழுத்து முந்தைய தலைமுறையின் எழுத்திலிருந்து மாறி  உரிமை பேசும் எழுத்துகளாக இருக்கின்றன.   

மலேசிய தமிழ் படைப்புலகம் எப்படி இருக்கிறது?

முந்திய தலைமுறையினரின் எழுத்துகள் மாறத் தொடங்கியுள்ளன. வல்லினம் போன்ற நவீன  எழுத்துகளைத்தாங்கிய இதழ்கள் வருவதையும் பார்க்கிறோம்.  நவீன இதழ்களிலும் மலேசி

ய படைப்புலகம் குறித்த விரிவான கட்டுரை வாசிக்கக் கிடைக்கிறது. மலேசிய தமிழ் எழுத்துக்கென தனித்த இலக்கிய வரலாறு இருக்கிறது.  மலேசிய தமிழ் எழுத்துகளில் தமிழக, ஈழப் படைப்பாளர்களின் பங்களிப்புகளும் உள்ளன.  சீனர்களும் மலாய்க்காரர்களும் பெருமளவு வாழுகிற  மலேசியாவில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் தமிழை அவர்கள் மிக நேர்த்தியாக வாசிக்கிறார்கள்.  அறுபடாத தொடர்ச்சியை விதைக்கிறார்கள்.  முற்போக்கு எழுத்தாளர் அமைப்புகள் அங்கே செயல்படுகின்றன.  திராவிட அமைப்பினராக பெரியாரை பின்பற்றுபவர்கள் இருந்து வருகிறார்கள்.
 
நன்றி: புத்தகம் பேசுது நவம்பர் மாத இதழ்
நன்றி : ஊடறு றஞ்சி (மா)

நன்றி: முத்து தோழர்  மற்றும் விஜயலட்சுமி (மா)

செவ்வாய், 1 நவம்பர், 2016

எங்கெங்கு காணினும்...

மலேசியா என்றொரு நாடு உள்ளது
தனியே அதற்கொரு குணம் உள்ளது..

இப்படி சொல்வதற்கு என்ன காரணம் இருக்கும் என யோசிக்கிறீர்களா? “மலேசியா எனும் சொர்க்க புரியில் எல்லாரும் ரிங்கிட்டில் சம்பாதிக்கிறார்கள்; இந்திய ரூபாயைவிட அதற்கு மதிப்பு அதிகம்; அங்கிருக்கும் தமிழர்கள் எல்லாம் பணக்காரர்கள்; பெண்கள் எல்லாம் ரொம்ப சோஷியலாக இருப்பார்கள்; இஷ்டம்போல ஆடையணிந்து பாருக்குப் போய் மது அருந்திவிட்டு கேளிக்கையில் ஈடுபடுவார்கள். இரவு, பகல் என அங்கு கொண்டாட்டம்தான்.  கருத்து சுதந்திரம் உள்ள நாடு. இந்தியாவிலிருந்து வேலைக்காக அங்குப் போனால் சீக்கிரம் பணக்காரர் ஆகிவிடலாம். நமது வாழ்க்கையும் பளிச்சென்று பிரகாசமாகிவிடும்.”

உங்களுக்குள் பதிந்திருக்கும் மலேசியாவின் பிம்பம் இதுதான் என்றால் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து மூன்றாம் தலைமுறையை சேர்ந்த நான் இன்னும் என் தாய் நாட்டை அப்படிப் பார்க்கவில்லை என்ற உண்மையை நீங்கள் நிச்சயமாக அறிய வேண்டும்.  மாயையிலிருந்து கண்களைக் கழுவி கொள்ளுங்கள். நான் உங்களோடு சில உண்மைகளை பகிந்து கொள்கிறேன்.
மலேசிய இந்தியப் பெண்களுக்கும் தமிழ்நாட்டு இந்தியப் பெண்களுக்கும் இங்கு பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. உடையிலும் அலங்காரத்திலும் வேண்டுமென்றால் சில வித்தியாசங்களை கூறலாம். ஆனால், சராசரி வாழ்க்கையில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை.

வீட்டுப் பொறுப்பை கவனிப்பதிலிருந்து வேலைக்கு போய் சம்பாதிப்பது வரை பெண்கள் தங்கள் உடல் உழைப்பை வழங்கினாலும் அவள் இரண்டாம் இடத்தில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறாள். பூ பொட்டு தாலி சமாச்சாரங்கள் பெண்ணின் அடையாளம் எனவும் அதை அணியாதவள் ஒழுக்கம் கெட்டவள் என்றும் பேசுபவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

எது ஒழுக்கம் என்று இந்த சமுதாயத்திற்கும் எது சுதந்திரம் என்று பெண்களுக்கும்,  நடக்கும் சில விஷயங்களைப்  பார்த்தால் ஏன் எனக்கும் கூட  ஒழுக்கம் மற்றும் பெண் சுதந்திரம் மீது குழப்பங்கள் ஏற்படவே செய்கிறது. நாம் நினைப்பவை எல்லாம் சுதந்திரமும் இல்லை, சமுதாயம் கட்டமைத்து வைத்திருக்கும் அனைத்தும் ஒழுக்கமும் இல்லை என்பதே முடிவான உண்மை.

இந்நிலையில் அண்மையில் இடைநிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திடீர் சோதனையில் அந்தப் பள்ளி ஆசிரியை ஒருவர் சொன்ன தகவல் பயங்கரமாக இருந்தது. இடைநிலைப் பள்ளி என்பது 13 வயதிலிருந்து 17-18 வயதுக்குட்பட்டவர்கள் பயிலும் கல்விச்சாலையாகும். 

மாணவி ஒருவரின் கையில் பெலேட் கத்தியால் கீறிய காயங்களை ஆசிரியர் பார்வையில் பட்டிருக்கிறது. அவர் சம்பந்தப்பட்ட மாணவியை விசாரிக்க, வீட்டில் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அந்த மாணவி மன உளைச்சலில் தனக்கு தானே காயம் ஏற்படுத்திக் கொண்டதாகவும், அப்படி கீறும்போது வலிக்கவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

அந்த மாணவிக்கு கவுன்சிலிங் கொடுப்பது மிக அவசியம் என தோன்றிய ஆசிரியை மனதில் வேறொரு எண்ணமும் தோன்றியது. தனது வகுப்பறையில் இருக்கும் 32 மாணவிகளின் கைகளையும் சோதனையிட்டிருக்கிறார். பயங்கரம் என்ன வென்றால் 30 மாணவியர்கள் கையில் தன்னை தானே கத்தியால் கீறி காயம் விளைவித்துக் கொண்ட அடையாளங்கள் இருந்திருக்கின்றன.

இது ஒரு வகுப்பறைக்குள் நடந்த சம்பவம்.  ஒட்டு மொத்தமாக எல்லா பள்ளிகளையும் சோதனையிட்டால் கிடைக்கும் பதிவை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தன்னைத்தானே காயம் விளைவித்துக் கொண்டு, ஒரு பிரச்சனையை ரத்த வாடையோடு பார்ப்பது எம்மாதிரியான மனப்பிறழ்வின் அறிகுறி என தெரியவில்லை. மலேசிய பெண்கள் குறிப்பாக தமிழ்ப் பெண்கள் அதுவும் அடுத்த தலைமுறை பெண்களின் இந்த மனநிலை எம்மாதிரியான எதிர்வினையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்ற கேள்வியை வைக்கும்போது அதற்கான பதிலையும் யூகிக்கவே முடியவில்லை.

சம்பந்தப்பட்ட மாணவிகளை விசாரிப்பதை காட்டிலும் அவர்களின் குடும்ப பின்னணியை ஆராய வேண்டியதுதான் மிக முக்கியமான விஷயமாகத் தோன்றுகிறது. காரணம் ஒட்டு மொத்த உளவியல் சிக்கலும் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதைக் கருத்தில் கொண்டுதான் குழந்தைகளின் உலகத்தை பார்க்க வேண்டிய தேவையும் இருக்கிறது.  
அவசர உலகத்தில் பணம் மட்டும் பிரதான ஒன்றாக ஆனப்பிறகு, இதுபோல பிரச்னைகள் பெற்றோர்களின் கண்களுக்கு தெரிவதில்லை என்பதோடு அதற்கான நேரமும் இங்கில்லை. காரணம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். உணர்ச்சிவசப்படுதல், சட்டென கோப்படுதல் என மாறிவரும் வேளையில், மலேசியாவில் தமிழ்ப் பெண்களிடத்தில் அதிகரித்துவரும் இந்த மனநலப் பிரச்னைக்கு இன்னும் சரியான அணுகுமுறை கண்டறியப்படவில்லை என்றே தோன்றுகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் கிரைம் மற்றும் போதைப் பொருளுக்கு இலக்கான பெண்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்திருக்கிறது.

சம்பவம் 1

2015-ஆம் ஆண்டு மலேசியாவில் தாப்பா எனுமிடத்தில் நடந்த  கொடூரமான தொடர் கொலைச் சம்பவங்களில்  அந்த வீட்டுத் தலைவி இரக்கமே இல்லாமல் தன் கணவருக்கு துணை புரிந்துள்ளார்.  6 பேர் கொலை செய்யப்பட்டதில் ஒருவர் பெண் ஆவார்.  ஆட்களை கொன்று எரித்து, மனித இறைச்சியை நாய்களுக்கு கொடுத்து (இந்த விவரம் குறித்து உறுதியான தகவல் ஆயாயப்படுகிறது)  சாம்பலை ஓடும் ஆற்றில் கொட்டி ஓர் அமானுஷ்யம்போல அந்தக் கொலை வழக்கு ஆனாது. இத்தகைய கொடூரச் செயல்களில் பெண் ஈடுபட்டது அதிர்ச்சியான ஒன்று.
 அதில் அந்த வீட்டுப் பெண் ஈடுபட்டது ஒரு காரணமாகும்.

சம்பவம் 2

2015 ஆம் ஆண்டு, 16 வயது பள்ளி மாணவி, செந்தூல் எனுமிடத்தில் போதை பொருள் வைத்திருந்தபோது அகப்பட்டார். ஒரு குண்டர் கும்பலில் இணைந்திருந்த அந்தப் பெண் அவர்களின் கட்டளையின் பேரில் அதை செய்ததாக அறியப்படுகிறது.

சம்பவம் 3
-பள்ளி மாணவிகள் சேர்ந்து ஒருவரை அடித்து கொன்றனர்
- பதின்ம வயதே கொண்ட பெண் ஒருவர், வயதான பெண் ஒருவரை பகடி வதை செய்கிறார்.
-சிங்கப்பூருக்கு போதை பொருளைக் கொண்டு போகும்போது போலீசில் சிக்கினார் 30 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் .

மேற்குறிப்பிட்ட இந்த சில சம்பவங்கள் அனைத்தும் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்ட குற்றவியல் சம்பவங்கள். தமிழ்நாட்டு சினிமாவில் காட்டும்போது சில விஷயங்களை நம்ப முடியாது. ஆனால், இச்சம்பவங்களை காணும்போது அவற்றை நம்பத்தோன்றுகிறது. பணத்தேவைக்காக  கொலை செய்வதும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதும், இன்னும் பல அறமில்லாத செயல்களை குற்றமெனத் தெரிந்தும்  செய்கிறார்கள் என்றால் இந்த வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றே தோன்றுகிறது.

நம்பிக்கையில்லாத வாழ்க்கையை எதிர்கொள்வதைவிட  வேறு என்ன மனஉளைச்சல் பெண்களுக்கு பெரிதாக  இருந்திட முடியும்?
மலேசிய அரசியலில் முக்கிய பதவிகளில் இருக்கும் பெண்களே கத்தி முனையில் நின்றுகொண்டு தனக்கும் மற்றவருக்கும் காயம் ஏற்படாமல் நடந்து கொள்ள  வேண்டியிருக்கிறது. காயம் படுவதாக இருந்தாலும் அது பெண்ணே ஏற்றுக்கொள்ள வேண்டிய எழுதப் படாத கட்டாயமும் இருக்கிறது.
வெறும் இரக்கத்திற்குரிய பிராணியாக பெண்களை பார்க்கும் கலாச்சாரம் இந்தியர்களிடத்தில் மட்டுமல்ல  சீன - மலாய் சமூகத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாத விலக்கு வரும் பெண்ணால் அரசியலில் ஈடுபட முடியாது என அரசியல் தளத்திலேயே நக்கலடித்து கிண்டல் செய்த நாடு இது.  ஒரு மெழுகுவர்த்தி எரிந்து அணைவது போல அத்தனை விரைவில் இந்த விவகாரம் அணைந்துபோனது.

பெண் உரிமை என்றெல்லாம் பேசுவதற்கு மலேசியா ஒரு சரியான நாடா என்று தோன்றவில்லை. மலாய்க்காரர்கள் மத்தியில், மாப்பிளை வீட்டாரிடம்  வரதட்சனையை கேட்டுப் பெறும் உரிமை பெண் வீட்டாருக்கு இருந்தாலும்கூட பெண் அடுப்படிக்குரியவள் என்ற அடைமொழியை இன்னும் அச்சமூகத்தால் மாற்ற முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

இந்நிலையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படும் அகம், புறம் சார்ந்த உளவியல் சிக்கல்களை சரியான முறையில் கையாளுதல் என்பது முடியாத ஒன்றாகவே இருக்கிறது. பெண்களுக்காக அலோசனை வழங்க தனியார் இயக்கங்களும் அரசு சார்ந்த அமைப்புகளும் இருந்தாலும்கூட இந்த விவகாரத்தை சரியாக கையாள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
பெண் சுதந்திரம் என்பதை தவறாக புரிந்துகொள்ளுதல், குடும்பச் சிக்கல், காதல் விவகாரம், பொருளாதாரப் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களில் பெண்கள் சரியான முடிவு எடுக்க முடியாமல் அல்லது முடிவு எடுப்பதற்கு போதிய அவகாசம் இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் பாதிப்படைகின்றனர். மலேசியாவில் இது தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவர்களை கொண்டு நிறுத்துகிறது என்பது கசப்பான உண்மை.

நன்றி குங்குமம் 'தோழி'  நவம்பர் மாத இதழ் 2016